கடிதம் 2
யாஸ்னையா போல்யானா
அக்டோபர் 7, 1909
திரு.காந்தி அவர்களுக்கு,

சுவாரசியமிக்க உங்களது கடிதமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளித்தது. உங்களது அக்கடிதத்தினை நான் இப்பொழுது தான் பெற்றுக் கொண்டேன். டிரான்ஸ்வாலில் இருக்கின்ற நமது அருமை சகோதரர்களுக்கும் சகதொழிலாளர்களுக்கும் இறைவன் உதவி புரிவாராக! மென்மைத்தன்மைக்கும் மிருகத்தனத்திற்கும் இடையிலும், பணிவான அன்பிற்கும் ஆணவமான வன்முறைக்கும் இடையிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சண்டையானது, இப்பொழுது நம்முடைய மத்தியிலும் அதன் இருப்பை வலுவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றது. அதுவும் குறிப்பாக ஆன்மீகக் கடமைகளுக்கும் அரசாங்கச் சட்டங்களுக்கும் இடையில் இருக்கின்ற அந்த மோதல்களில் நாம் அந்த யுத்தத்தினை தெளிவாக அறிந்து கொள்ளுகின்றோம். இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கு மறுப்பதிலிருந்தே அது தெளிவாக வெளிப்படுகின்றது. அத்தகைய மறுப்புகள் இப்பொழுது அதிகமாக அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

'இந்துக்கு ஒரு கடிதத்'தினை நான் தான் எழுதினேன். மேலும் அந்த படைப்பானது மொழிபெயர்க்கப்படுவதனைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியும் அடைகின்றேன். கிருஷ்ணரைக் குறித்த அந்த நூலினது தலைப்பினை மாஸ்கோவில் இருக்கின்ற மக்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள். 'மறுபிறவி' கோட்பாட்டை குறித்துக் கூறவேண்டும் என்றால், என்னுடைய பக்கம் இருந்து என்னால் எதனையும் நீக்க முடியாது. ஏனென்றால் ஆன்மாவின் இறவாத்தன்மையில் இருக்கின்ற நம்பிக்கையினைப் போன்றோ அல்லது தெய்வீகமான உண்மை மற்றும் அன்பு ஆகியவற்றின் மீதிருக்கும் நம்பிக்கையினைப் போன்றோ, மறுபிறவியினில் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் மனித இனத்தை கட்டுப்படுத்த முடியாது என்றே நான் எண்ணுகின்றேன். ஆனால் நீங்கள் அதனை நீக்க வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் நீங்கள் அதனை நீக்கிக் கொள்ளலாம். அதனை நான் உங்களிடமே விட்டு விட்டேன். உங்களுடைய அந்த மொழிபெயர்ப்பு பதிப்பிற்கு என்னால் இயன்ற உதவியினை செய்வதற்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். இந்திய மொழிகளில் என்னுடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவதும், அவை அங்கே பரவுவதும் எனக்கு நிச்சயமாக மகிழ்ச்சியினை அளிக்கக் கூடிய செயல்களாகத்தான் இருக்கும்.

மேலும், சமயத்தினை அடிப்படையாக வைத்து செய்யப்படும் எந்தொரு செயலிலும் பணத்தினைப் பற்றிய கேள்விகளே எழக்கூடாது என்றே நான் எண்ணுகின்றேன்.

உங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்ததை எண்ணி நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு சகோதரனாய் உங்களை நான் வாழ்த்துகின்றேன்.
லியோ டால்ஸ்டாய்

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு