இன்று இணையத்தளத்தில் பரவலாக ஒரு விவாதத்தைக் காண முடிகின்றது. தடுப்பூசிகளைக் கண்டிப்பாக போட வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். அவற்றால் தான் உயிர்கொல்லியான பல தொற்றுநோய்கள் தடுக்கப்பட்டு இருக்கின்றன என்று அவர்கள் தங்களது தரப்பு வாதத்தையும் வைக்கின்றனர். தடுப்பூசிகள் வேண்டாம் என்பதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு புறமோ தடுப்பூசிகள் தேவையே இல்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர். தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஏராளமாக இருக்கின்றன என்றும் சில நேரங்களில் மரணங்களுக்கே அவை வழி வகுக்கின்றன என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் தடுப்பூசிகள் என்பது குழந்தைகள் மீது நாம் செலுத்துகின்ற வன்முறையாகும் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

இந்த இரண்டு தரப்பு வாதங்களுக்கு நடுவில் தான் ஒரு சாமானியனாக அவர்கள் இருவரையும் பார்த்தவாறே நான் நின்று கொண்டிருக்கின்றேன். நான் மட்டும் அல்ல, மருத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்ற பல்வேறு மக்களும் என்னைப் போன்றே தான் நின்று கொண்டிருப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன். காரணம், இது குழந்தைகள் சம்பந்தப்பட்டது. யாரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுவதற்கு தயாராக இருப்பதில்லை தான். ஆனால் இங்கே நம் முன்னே இருக்கும் கேள்வி தான் நம்மை மிகவும் குழப்புகின்றது.

'தடுப்பூசிகள் போடாததால் நாம் குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா அல்லது போடுவதால் அவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுகின்றோமா?' நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதே நமக்குள் இருக்கும் மாபெரும் கேள்வியாக இருக்கின்றது. அதுவும் மருத்துவத்தைப் பற்றிய அறிவு மிகவும் சிறிதே இருக்கக்கூடிய நிலையில் அந்த கேள்விக்கு தெளிவான விடையினைக் காண்பது என்பது கடினமான ஒரு செயலாகத் தான் இருக்கின்றது. அந்நிலையில் 'அரசாங்கம் சொல்லுகின்றது...மக்கள் பலரும் போடுகின்றனர்...எனவே நல்லதே நடக்கும் என்றும் நாமும் நம்புவோம்' என்று எண்ணிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக பெருவாரியான மக்களின் முடிவோடு ஒன்றிணைந்து விடத் தான் ஒரு சராசரி மனிதனின் மனமானது விரும்பும்.

நானும் அத்தகைய ஒரு சராசரி மனிதன் தான். இருந்தும், மனம் ஏனோ சற்று நிம்மதியற்றே இருக்கின்றது. நம்மைச் சுற்றி நடக்கின்ற விடயங்களைக் காணும் பொழுது என்னுள் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • மருத்துவம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றுக் கூறுகின்றோம். மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதன் விளைவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடிய ஒரு சமூகமாக அல்லவா இருக்க வேண்டும். ஆனால் இங்கே நாம் பார்த்தோம் என்றால், நிலைமை முற்றிலுமாக மாறியல்லவா இருக்கின்றது. மருத்துவமனைகளும் நோயாளிகளும் தொடர்ந்து எண்ணிக்கையில் கூடிய வண்ணம் அல்லவா நமது சமூகத்தில் இருக்கின்றனர். தரமான உணவினை அதிகமாக உற்பத்தி செய்து அனைவருக்கும் வழங்குகின்றோம் ஆனால் பசியுடன் வாடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அதிகமாக கூடிக் கொண்டே இருக்கின்றனர் என்பது எப்படிப்பட்ட ஒரு முரணான வாக்கியமோ, அதனைப் போன்றே தானே மருத்துவம் முன்னேறி இருக்கின்றது ஆனால் அதன் கூடவே நோய்களும் நோயாளிகளும் கூடி இருக்கின்றனர் என்பதும் முரணாக இருக்கின்றது. இந்த முரண் எதனால் வந்திருக்கின்றது.
  • மருத்துவம் அந்தளவு முன்னேறி இருக்காத காலகட்டம் என்று உங்களால் கூறப்படுகின்ற காலத்தில் பிறந்து வளர்ந்த மனிதர்கள், வயதான போதிலும் கூட இன்றளவும் ஆரோக்கியமாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நவீன மருத்துவமானது கோலோச்சிக் கொண்டிருக்கும் காலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் அந்த மனிதர்களை விட ஆரோக்கியம் குன்றியவர்களாகவே இருக்கின்றார்கள். இதனை நாம் நடைமுறை வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டிருக்கின்றோம். 'முன்னாடி எல்லாம் வயசானவங்க கூட்டம் தான் மருத்துவமனைல அதிகமாக இருக்கும்..ஆனா இப்போ எல்லாம் அவங்கள விட அதிகமா சின்ன கொழந்தைங்க தான் வருதுங்க' என்ற கூற்று அரசு மருத்துவமனையின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது என்னுடைய காதில் விழுந்தது. அதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை ஒவ்வொருவருமே அறிவோம். எதனால் இந்த நிலை?
  • நான் சிறுவனாக இருந்த பொழுது எப்பொழுதாவது காய்ச்சல் வரும். மருத்துவரிடம் போனால், மூன்று நாட்களுக்கு மருந்து தருவார். அதுவும் பெரும்பாலும் அரை மாத்திரை அளவே தான் இருக்கும். 'மருந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு' என்ற ஒரு கூற்று என்னுடைய நினைவிற்கு இப்பொழுது வருகின்றது. ஆனால் இப்பொழுதோ, குறைந்தது பத்து நாட்களுக்காவது மாத்திரைகள் தரப்படுகின்றன. இதுவும் புரியவில்லை...மருத்துவம் முன்னேறி இருக்கின்றது என்றால் மருந்துகளின் வீரியம் கூடி இருக்க வேண்டுமல்லவா...அல்லது அதே அளவு வீரியமாகவாவது இருக்க வேண்டுமல்லவா? அதனை விடுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டு செல்வது ஏன்?
இன்னும் கேள்விகள் அநேகம் கேட்கலாம் தான்...ஆனால் அவை எதுவும் புதியதாய் இருக்காது. ஏனென்றால் நமது சமூகத்தில் நாம் அன்றாடம் காணுகின்ற நிகழ்வுகளாகவே தான் அவை நமக்கு பரிச்சியமாக இருக்கும். நம்மில் ஒவ்வொருக்குள்ளேயும் அந்த கேள்வியானது இருக்கும்.

எனக்குத் தடுப்பூசிகளைப் பற்றி அதிகம் தெரியாது. அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதன் பக்கவிளைவுகள்/பயன் என்ன என்பதைப் பற்றி ஒரு சாமானிய மனிதன் எந்தளவு அறிந்து இருப்பானோ, அந்தளவே தான் நானும் அறிந்திருக்கின்றேன். அனுபவ அறிவே தான் இங்கே பேசுகின்றது தவிர அறிவியல் அறிவல்ல.

எனக்குத் தடுப்பூசி போட்டார்கள்...எனக்கு சின்னம்மை வரவில்லை. எனது தம்பிக்கும் அதே தடுப்பூசி போட்டார்கள். அவனுக்கு சின்னம்மை வந்தது. சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட என்னுடைய சித்தி மகளுக்கும் சின்னம்மை வந்திருக்கின்றது.

போலியோ சொட்டு மருந்தினால் போலியோ நோயை ஒழித்தோம் என்கின்றீர்கள். நம்புகின்றேன். ஆனால் அதே நேரம், போலியோ சொட்டு மருந்தினை பெற்றிராத என்னுடைய நண்பனின் குழந்தைகளும் போலியோவின் தாக்குதலின்றி மிகுந்த ஆரோக்கியத்துடன் நலமாகவே தான் அதே சமூகத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை நாம் எப்படி புரிந்து கொள்வது...தடுப்பூசி போட்டும் சிலர் நோய்களுக்கு ஆளாகின்றனர்...தடுப்பூசி போடாமலும் சிலர் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசியின் உண்மையான பயனை ஒரு சாதாரணமான மனிதன் எவ்வாறு புரிந்து கொள்வது?

உணவும் மருத்துவமும் செல்வம் கொழிக்கும் வியாபாரமாக மாறிவிட்டிருக்கும் இந்த காலத்தில் சிறிது சந்தேகங்கள் எழுவதனைத் தவிர்க்க முடியவில்லையே. உதாரணமாக உணவினையே எடுத்துக் கொள்ளுங்கள்,

உணவு உற்பத்தியை அதிகரிக்கின்றோம் என்றுக் கூறி இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைக் கணக்கில்லாமல் கொட்டி நஞ்சு கலந்த உணவினை இன்றைக்கு நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.உணவு இருக்கின்றது...ஆனால் உணவில் சத்து இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை. மாறாக நம்முடைய ஆற்றலைக் குறைக்கின்ற நஞ்சே தான் இருக்கின்றது. பசி நோய் வருவதில்லை தான். ஆனால் ஆற்றல் இல்லாத உடலில் பல்வேறு விதமான வேறு நோய்கள் வரத் தான் செய்கின்றன. இந்த முறையைத் தான் நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் அவர்களின் கூற்றினை 'இவர்கள் கூறுவது போல விவசாயம் செய்தால் உணவினை போதுமான அளவு தயாரிக்க முடியாது' என்ற ஒன்றினைக் கூறியே மழுங்கடித்து விட்டார்கள். 'இல்லை இயற்கை முறையில் அதிகளவு உணவினை உற்பத்தி செய்ய முடியும்' என்று அவர்கள் நிரூபித்தாலும் கூட அதனை ஏற்பதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை. காரணம் அதில் பெரிய நிறுவனங்களுக்கு பணம் ஏதும் கிட்டப்போவதில்லை.

தமிழக விவசாய கல்லூரிகளில் நான் அறிந்தவரை நம்மாழ்வாரின் சிந்தனைகள் மற்றும் கருத்துகள் பாடத் திட்டத்தில் கிடையாது. அங்கிருக்கும் ஆசிரியர்களும் இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லியைப் பற்றி மட்டுமே தான் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றனர். அந்த மாணவர்களும் தாங்கள் எதனைக் கற்று கொண்டிருக்கின்றார்களோ அந்த அறிவுடனேயே தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் நம்மாழ்வாரின் கருத்தினை நாம் அவர்களின் முன்னே வைத்தால், அவர்களின் போக்கானது 'அவர்களா அல்லது நம்மாழ்வாரா' 'நம்முடைய அறிவு பெரியதா அல்லது அவர்களுடைய அறிவு பெரியதா' என்ற ஒரு போட்டி மனப்பான்மையினுள்ளேயே போய் சிக்கிக் கொண்டு விடுகின்றது. அவனுக்கு ஆதரவாக பணம் கொழிக்கும் இரசாயன உர நிறுவனங்களும் சரி பூச்சிக் கொல்லி நிறுவனங்களும் சரி அடுக்கடுக்காக ஆராய்ச்சி கட்டுரைகள் என்பனவற்றை தந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஆனால் சமூகத்தை நாம் உற்றுப் பார்த்தோமே என்றால், அவர்கள் எந்தளவு ஆராய்ச்சி கட்டுரைகள் தந்தாலும் கூட, கடனில் வாடும் விவசாயி, பெரும் பணத்தினை கொட்டிக் குவிக்கின்ற பெரு நிறுவனங்கள்  மற்றும் இறுதியாக ஆரோக்கியமில்லாத சிறிது சிறிதாக நஞ்சு கலக்கப்பட்ட உணவு...இவை மட்டுமே தான் நம்முடைய சமூகத்தில் எஞ்சி இருக்கின்றன.

எனவே தான் நவீன மருத்துவம் வழங்குகின்ற தடுப்பூசிகளைப் பற்றியும் நான் சிறிது அஞ்ச வேண்டி இருக்கின்றது. அந்த பூச்சிக்கொல்லிகளைப் போன்றே தான் தடுப்பூசியும் இருக்குமோ என்ற சிந்தனையை என்னால் தவிர்க்க முடியவில்லை.

ஆம்...பூச்சிக்கொல்லி நிச்சயமாக ஒரு வெற்றிகரமான அறிவியல் கண்டுபிடிப்பு தான். ஆனால் அது அந்த பூச்சி எதனால் வருகின்றது என்பதனை கண்டறிந்துக் கூறுவதில்லை. அதன் பணி அந்த பூச்சியினைக் கொல்வது மட்டும் தான். அதனை அது செம்மையாகச் செய்கின்றது. ஆனால், அது அந்த மரத்திற்கும் சிறிது கேடு விளைவிக்கின்றதே...அந்த செடியானது தன்னுடைய முழுமையான ஆற்றலுடன் உணவினை தயார் செய்வதில்லையே. உணவின் ஆற்றல் குறைகின்றதே.

ஒருவேளை தடுப்பூசியும் அதனைப் போன்றே தான் இருக்குமா? சில நோய்களை அழித்து விட்டு வேறேதாவது பாதிப்பினை உண்டாக்குமா? என்பன போன்ற கேள்விகளை 'மருத்துவமனைகளும், நோய்களும், நோயாளிகளும், பெரு நிறுவனங்களின் ஆதிக்கமும் கூடிக் கொண்டே இருக்கின்ற நம்முடைய சமூகத்தினைக் காணும் பொழுது' கேட்காமல் இருக்க முடியவில்லை. இருந்தும் சாமானியர்களான நாங்கள் தடுப்பூசியினைப் பயத்தினால் போடத் தான் செய்வோம்.

ஆம்...அறிவினாலோ அல்லது தெளிவான நம்பிக்கையினாலோ அல்ல (அதனை நீங்கள் எங்களுக்குத் தந்திருக்கவில்லை), மாறாக எங்களது குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே என்கின்ற பயத்தினால் தான் நாங்கள் அவ்வாறு செய்வோம்.

ஆம்...உங்களுடைய மருத்துவமானது பெரும்பாலும் சாமானியர்களின் மனதினில் பயத்தினைத் தான் விதைத்து இருக்கின்றது.

பி.கு:

எனது மனதில் இருப்பதை இங்கே கூறி இருக்கின்றேன். மாற்றுக் கருத்துகள் இருப்பின், தயைக் கூர்ந்து தெரிவிக்கவும்.


தொடர்புடைய இடுகைகள்: 

வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-1!!!
வணிகமான மருத்துவமும் நமது கடமையும்-இறுதிப் பகுதி!!!
சிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
உணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)
 

1 கருத்துகள்:

"Vaccination is a barbarous practice and it is one of the most fatal of all the delusions current in our time,"

"The vaccine is a filthy substance and it is foolish to expect that one kind of filth can be removed by another."

"Conscientious objectors to vaccination should stand alone, if need be, against the whole world, in defence of their conviction"

WORDS ARE WRITTEN BY GANDHIJI IN HIS BOOK "GUIDE TO HEALTH"
YEAR 1921.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு