கடிதம் 6
21-24, கோர்ட் சேம்பர்ஸ்,
ஜோகன்னஸ்பர்க்,
ஆகஸ்ட் 15, 1910
டால்ஸ்டாய் பிரபு அவர்களுக்கு,

மனப்பூர்வமாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் நீங்கள் எனக்கு மே மாதம் எட்டாம் தேதி அன்று எழுதிய கடிதத்திற்காக நான் உங்களுக்கு மிகவும் கடன்பட்டு இருக்கின்றேன். 'இந்திய சுயராஜ்யம்' என்ற எனது நூலிற்கு நீங்கள் அளித்த அங்கீகாரத்தினை நான் மிகவும் மதிக்கின்றேன். மேலும் நீங்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் எனக்கு வாக்களித்திருப்பதைப் போல, என்னுடைய அந்த நூலினைக் குறித்த உங்களது விரிவான விமர்சனத்தினை, உங்களுக்கு நேரம் கிட்டியது என்றால் அனுப்புவீர்கள் என்றே நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

திரு.காலேன்பாக் (Kallenbach) அவர்கள் 'டால்ஸ்டாய் தோட்டத்தினைப்' பற்றி உங்களுக்கு எழுதி இருக்கின்றார். திரு.காலேன்பாக் அவர்களும் நானும் நீண்ட காலமாகவே நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றோம். 'எனது ஒப்புதல் வாக்குமூலம் (A Confession)' என்ற நூலினில் நீங்கள் விவரித்து இருக்கின்ற பல்வேறு அனுபவங்களை திரு.காலேன்பாக் அவர்களும் அனுபவித்து இருக்கின்றார் என்றே என்னால் கூற முடியும். உங்களுடைய எழுத்துக்களைப் போன்று வேறு எவருடைய எழுத்துக்களும் அவரை அந்தளவு ஆழமாக துளைத்ததில்லை. நீங்கள் உலகிற்கு முன்பாக முன்வைத்துக் கொண்டிருக்கும் கொள்கைகளின்படி வாழ்வதற்கான முயற்சிகள் துளிர் விடும் வண்ணம் தனது தோட்டத்திற்கு, என்னுடன் கலந்தாலோசித்த பின்பு, உங்களுடைய பெயரினை வைக்கின்ற உரிமையினை அவர் எடுத்து இருக்கின்றார்.

இந்தக் கடிதத்துடன் நான் அனுப்பி வைக்கின்ற 'இந்தியன் ஒப்பீனியன்' பிரதியானது, சாத்வீகப் போராளிகளின் பயன்பாட்டுக்காக திரு.காலேன்பாக் அவர்கள் தன்னுடைய தோட்டத்தினைத் தந்து உதவிய பெருந்தன்மையான செயலினைக் குறித்த அனைத்து விவரங்களையும் உங்களுக்கு வழங்கும்.

இந்தத் தகவல்களைக் கொண்டு உங்களை நான் தொந்தரவு செய்து இருக்கக் கூடாது தான். இருந்தும் டிரான்ஸ்வாலில் நடைபெற்றுக் கொண்டு வரும் அந்த சாத்வீகமான எதிர்ப்பு போராட்டத்தினில் நீங்கள் தனிப்பட்ட ஆர்வத்தினைக் கொண்டிருப்பதினால் நான் இத்தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்றென்றும்
உங்களது விசுவாசமுள்ள சேவகனாய்,
                                                                                                                                         மோ.க.காந்தி

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு