"செல்வனின் தங்கை நன்றாக நடனமாடினான்.
செல்வன் அவன் தங்கையின் நடனத்தை மகிழ்ச்சியுடன் கண்டு கொண்டு இருந்தாள்."

மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியான வாக்கியங்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.

காரணம்... அந்த வாக்கியங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான விகுதிகள் தவறாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

விகுதிகளா...அப்படி என்றால் என்ன? என்பவர்களுக்காக விகுதிகளை சற்று பார்த்து விடுவோம்.

விகுதி என்பது ஒரு சொல்லின் பொருளை தெளிவாக குறிக்க அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப்படும் ஒரு சொல். உதா - 'ன்' 'ள்' 'ஆர்'

தமிழ் இலக்கணத்தின் படி,
ஆண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ன்'. எடு: அவன், வந்தான்,நடந்தான்,முருகன்...
பெண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ள்'. எடு: அவள்,ஓடினாள்,ஆடினாள்...

ஆணுக்குரிய விகுதி பெண்ணுக்கு வாராது. அதேப் போல் பெண்ணுக்குரிய விகுதியும் ஆணுக்கு வாராது. எப்பொழுது இந்த விகுதிகள் மாறுகின்றனவோ அப்பொழுது அச்சொல் தவறான ஒன்றாக மாறுகின்றது. இந்நிலையில் தான் நாம் மேலே உள்ள வாக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

செல்வனின் தங்கை, 'ன்' என்ற ஆண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றாள்.
செல்வனோ, 'ள்' என்ற பெண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றான்.
ஒரு ஆண் விகுதி பெண்ணுக்கும், பெண் விகுதி ஆணுக்கும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இவை தமிழ் இலக்கண முறைப்படி தவறான வாக்கியங்களாகும்.

சரி இப்பொழுது நாம் இதன் அடிப்படையில் நம்முடைய கதைக்கு வருவோம்.

அம்மன் - பெண் தெய்வம். ஆனால் ஆண்களுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.
பெருமாள் - ஆண் தெய்வம். ஆனால் பெண்ணுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.

ஏன் இந்த வேறுபாடு? விகுதிகளை மாற்றிக் கூறுவது தவறென்று அறியாத சிலர் தெரியாது இந்த பெயர்களை இட்டு விட்டார்களா? அல்லது அவர்கள் இந்தப் பெயர்களை இட்டதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதனை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சென்ற பதிவில் பார்த்த சில விடயங்களை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது.

சென்ற பதிவில் நாம் கண்டபடி,

சைவம் என்பது ---> சிவன், அம்மன், முருகன் பிள்ளையார் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.
வைணவம் என்பது ---> சிவன் , பெருமாள், பிரமன் ஐயப்பன் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.

இங்கே நாம் நோக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,

சிவனுக்கு அம்மன் மூலமாக இரு குழந்தைகள் இருக்கின்றனர். அதேப்போல் பெருமாளின் மூலமாகவும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் எவ்வளவு தான் புராணக் கதைகளில் தேடினாலும் பெருமாளுக்கு என்று தனியே குழந்தைகள் இருப்பதாக செய்திகள் இல்லை. சைவ வைணவ சமயங்களில் காணப்படும் பிள்ளைக் கடவுள்கள் அனைவரும் தந்தை சிவனாகவே காணப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் தான் நாம் கிருத்துவ தத்துவத்தையும் காண வேண்டி இருக்கின்றது. சென்ற பதிவில் கண்டவாறு கிருத்துவம் இறைவனை 'தந்தை நிலை', 'பரிசுத்த ஆவி நிலை' மற்றும் 'பிள்ளை நிலை' என்ற மூன்று நிலைகளில் வைத்தே கூறுகின்றது.

இப்பொழுது ஒரு கேள்வி.

மூன்று பேர்களைக் கொண்ட ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தில் தந்தை இருக்கின்றார்...பிள்ளையும் இருக்கின்றார்...அப்படி என்றால் இடையில் விடப்பட்டு உள்ள அந்த இன்னொருவர் யார்?

அன்னை என்பதே விடையாக இருக்கும் தானே.

எனவே இதன் அடிப்படையில் 'தந்தை தாய் மகன்' என்பதே இயல்பான உறவு என்றுக் கொண்டு 'தூய ஆவி' என்பது ஒரு பெண் தான் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் விவிலியத்தின்படி மரியாளுக்கு தூய ஆவியின் மூலம் குழந்தை உருவாவதால், ஒரு ஆணின் மூலமே ஒரு பெண்ணுக்கு குழந்தை உண்டாக முடியும் என்ற கருத்தின் படி தூய ஆவியை ஆணாக வேறு சிலர் கருதுகின்றனர்.

ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வேறுபாடுகளே சைவ வைணவப் சமயங்களின் பிரிவின் அடிப்படைக் காரணமாகும்.

அதாவது தூய ஆவியை பெண்ணாக கருதி 'தந்தை - தாய் - பிள்ளை (சிவன் -அம்மன்-முருகன்/பிள்ளையார்)' என்ற உறவின் அடிப்படையில் சைவம் வளருகின்றது. அதற்கு மாறாக தூய ஆவியை ஆணாகக் கொண்டு 'தந்தை -தந்தை-பிள்ளை(சிவன்-பெருமாள்-பிரமன்/ஐயப்பன்)' என்ற உறவின் அடிப்படையில் வைணவம் வளருகின்றது.

இங்கே தூய ஆவி ஆணா இல்லை பெண்ணா என்று தெளிவாக கூற முடியாததால் அவ்விரு குணங்களுமே தூய ஆவிக்கு உண்டு என்றுக் கருதி,

அம்மன் - பெண் கடவுள் தான் ஆனால் ஆண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ன்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும்
பெருமாள் - ஆண் கடவுள் தான் ஆனால் பெண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ள்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அம்மனும் பெருமாளும் வேறுவேறு அல்லர் என்பதை கூற நமது புராணக் கதைகளில் இருவரும் அண்ணன் தங்கையாக குறிக்கப்பட்டு உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

 

மேலும் சைவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி அம்மன் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் என்று வழங்கப்படுகின்றது. அதேப்போல் வைணவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி பெருமாள் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அரிஅரன் என்று வழங்கப்படுகின்றது. இவ்விரண்டு வடிவத்திலும் வலப் பகுதி ஒன்றாகவே கூறப்பட்டு இருப்பதும் இடப்பகுதி மட்டும் மாற்றிக் கூறப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்களாகும்.

அதேப்போல் கிருத்துவத்தில் தூய ஆவி கடவுளின் ஆற்றல் என்று வழங்கப் பெறுவதும் இங்கே அம்மன் 'சக்தி' என்று வழங்கப் பெறுவதும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய ஒரு விடயமாகவும் உள்ளது.

சரி...பெருமாளையும் அம்மனையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது இன்னொரு கேள்விக்கு பதில் நாம் காண வேண்டி இருக்கின்றது.

கிருத்துவின் கருத்துக்கள் தான் நம் மண்ணிலும் வளர்ந்து உள்ளன என்றால் ஒரு குழந்தை வழிப்பாட்டு முறை தானே இங்கே இருக்க வேண்டும். கிருத்துவக் கொள்கைகள் படி இறைவனுக்கு ஒரு குழந்தை தானே. அனால் இங்கேயோ பிள்ளையார், முருகன், பிரமன் மற்றும் ஐயப்பன் என்று நால்வர் இருக்கின்றார்களே?... இதற்கு என்ன விளக்கம் என்று கேட்கின்றீர்களா....

நல்ல கேள்வி தான்...இதற்குரிய விடையையும் நாம் தேட வேண்டி இருக்கின்றது...தேடுவோம்...!!!

வினைத் தீர்க்கும் விநாயகர் நமக்காக முதலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

தொடரும்...!!!முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |


3 கருத்துகள்:

but christva samayathil marupiravi(மறு பிறவி) nambikaikal kidaiyathe???

சைவ வைணவ இலக்கியங்களிலும் மறு பிறவி பற்றிய குறிப்புகள் இல்லை என்றே நான் நினைகின்றேன்... மறுபிறவி கோட்பாடு புத்தம் மற்றும் சமண சமயக் கோட்பாடாகும். பிற்காலத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகள் சைவ வைணவ சமயங்களுள் புகுத்தப் பட்டப் பொழுது மறு பிறவி கொள்கைகளும் அதனுடன் இணைந்தன.

தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி