சனி, 1 மே, 2010

அழாத குழந்தைகள்


எங்க ஊர் பங்குனி பொங்கல்னா கண்டிப்பா பல பேர் சட்டி எடுப்பாங்கணு தெரியும். 21 நாள் விரதம் இருந்து ஒரு நேர்த்திக்கடனுக்காக எடுப்பாங்கன்னும் தெரியும். ஆனால் எப்படி எடுக்கிறாங்கனு தெரியாது. நெருப்பை கையில் சுமந்து கொண்டு பல மணி நேரம் நடக்கிறார்களே அவர்களுக்கு கை சுடாதா என்ற கேள்விகளுக்கும் பதில் தெரியாது. கோவிலுக்கு சென்று பல பூச்சட்டிகளை வேடிக்கை மட்டும் பார்த்து இருக்கின்றேன். இந்த பொங்கலுக்கு முன்னால் வரை.


"டேய்! இந்த பொங்கலுக்கு எங்க அப்பாவும் அம்மாவும் சட்டி எடுக்குறாங்கடா. கண்டிப்பா நீங்களும் கூட வரீங்கடா " என்ற நண்பனின் அழைப்பை மறுக்க முடியவில்லை.
"நிச்சயமா வர்றோம்டா... எத்தனை மணிக்கு அங்க இருக்கணும்னு சொல்லு சரியா  வந்திர்றோம்" என்றேன்.
"விடியக்காலைல 1:30 மணிக்குடா" என்றான் நண்பன்.
"சரி விடு... சரியா அந்த நேரத்திற்கு அங்க இருப்போம்" என்று சொல்லி நாங்கள் கிளம்பினோம்.

சொல்லியவாறே அவனின் பெற்றோர் எடுத்த சட்டிக்கு துணையாக சென்றோம். அவன் வீடு கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அங்கே இருந்து கிளம்பி முதலில் மாரியம்மன் கோவிலை சுற்றி விட்டு பின் தெப்பம் வழியாக சென்று கருப்பசாமியை தரிசித்து விட்டு பின் மீண்டும் ஊரை சுற்றி மாரியம்மன் கோவிலை அடைந்து சட்டியை இறக்கி வைக்கும் வரை கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் வெறுங்காலில் சுற்றியும் நாங்கள் உணரவில்லை  தளர்ச்சியை. நாங்கள் உணராதது பெரிதல்ல. அவனின் பெற்றோர்கள் தளர்ச்சியை சற்றும் உணராது நின்றிருந்தார்கள். ஆச்சர்யம் தான். 21 நாள் விரதம் இருந்ததிற்கு அப்புறம், இவ்வளவு தூரம் சட்டியை எடுத்து கொண்டு நடந்தும் இவர்கள் தளரவில்லையே...அதிலும் நண்பனின் அம்மாவை நினைத்து தான் இன்னும் ஆச்சர்யமாய் இருந்தது... தூரம் கூட கூட நண்பனின் தந்தையின் வேகம் சற்று குறைந்தது போல் இருந்தது. ஆனால் அவனின் தாயின் வேகமோ கோவிலை நெருங்க நெருங்க அதிகரித்து கொண்டே இருந்தது... பெண்களின் சக்தி ஆச்சர்யமானது தான்!!!.    

எல்லாம் முடிந்து கோவிலுக்கு வெளியே வரும் போது ஒரு நண்பன் கையை உதறி கொண்டே வந்தான்.
"டேய்!! என்னடா ஆச்சி" என்றேன்
"ஒண்ணும் இல்லடா... அவங்க அப்பா கைல இருந்து சட்டி கொஞ்சம் நழுவுற மாதிரி இருந்துச்சி அதான் பிடிக்கலாம்னு போன்னேன்...பொசிக்கிருச்சி" என்றான்
"ஏன்யா சட்டிய மேலயா பிடிப்ப... அதுக்கு பதில்லா நெருப்புக்குள்ள கைய விட்டுருக்க வேண்டியது தான" என்றவாறே எங்களுடன் வந்து சேர்ந்தார் விக்கி அண்ணா.
"ஏன்னா!! சட்டி சுடும் தான" என்றேன்
"சுடலைனா அத எதுக்கு எடுக்குறாங்க" என்றார் அவர். 
"அப்புறம் எப்படினா இவ்வளவு தூரம் அத தூக்கிட்டு இவங்களால வர முடியுது" என்றேன்.
"அதுக்குதான்யா இந்த விரதம் இருக்கிறது எல்லாம். அருள் பெறணும் என்று மனசை பக்குவப்படுத்திகிறாங்க. அதனால தான் அவங்களால சூட்ட தாங்கிக்க முடியுது" என்று முடித்தார். 


அப்பொழுது இன்னொரு சட்டி எங்களை கடந்து சென்றது. ஒரு தாய் தன் கைக்குழந்தையை கழுத்தில் கட்டிய தூழியில் சுமந்து கொண்டு கையில் சட்டியை ஏந்தி சென்று கொண்டிருந்தார். அவர்கள் செல்வதையே சிறிது நேரம் கண்டு விட்டு மீண்டும் விக்கி அண்ணாவை நோக்கி திரும்பினேன்.

"அண்ணா அந்த குழந்தை அழாது தான" என்றேன்
"ஆமாம்" என்றார்
"பொதுவா சின்ன கொழந்தைங்க தூங்கும் போது சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிருங்க தான " தொடர்ந்தேன்.
"ஆமாம்!!!"
"அப்புறம் எப்படினா இந்த குழந்தைகள் மட்டும் இவ்வளோ சத்தத்திற்கு நடுவிலேயும் அழாம இருக்குங்க. அதுவும் பக்கத்துலேயே நெருப்பும் இருக்கு. அம்மாவும் கவனிக்க முடியாத நிலையில இருக்காங்க. எப்படினே அழாம இருக்குங்க" என்றேன்
"அதுங்க அழாதுங்கையா" என்றார்.
"அதான் எப்படினே" என்றேன்
அவர் திரும்பி கோவிலை பார்த்தார்.
"அந்த குழந்தைகளோட அம்மா தான் அதுங்கள பார்த்துகிட்டு இருக்காங்கல்ல அப்புறம் எதுக்கு அதுங்க அழ போகுதுங்க... அந்த குழந்தைகள் அழாதுங்க" என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார்.

நானும் திரும்பி கோவிலை பார்த்தேன். அந்த சட்டியை எடுத்த தாய் கோவிலுள் சென்று கொண்டு இருந்தார். கோவிலுள் மாரி அன்னை வீற்றிருந்தாள். ஆம் குழந்தைகள் ஏன் அழ வேண்டும்?. அவற்றை தான் அவர்களின் அன்னை பார்த்து கொண்டு இருக்கின்றாளே!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

பிரிவோம் சந்திப்போம்

வாழ்வில் தவிர்க்க முடியாத சிலவற்றுள் பிரிவும் ஒன்று. இதோ, இந்த ஹைதராபாத் மாநகருக்கு வந்து கழிந்த இரண்டு வருடங்களில் என் சக பயணியாய், தோழனாய் பயணித்தவர் விடை பெரும் நேரம் வந்து விட்டது. பாதைகள் ஒன்றானாலும் பயணங்கள் ஒன்றல்லவே!!! இதோ பயணத்திற்கு ஏதுவாக பாதைகளும் பிரிகின்றன... அவர் பிரியும் தருணம் வந்துவிட்டது. உதட்டில் புன்னகையும் கண்ணில் கண்ணீரும் ஒரு சேர சுமக்கும் ஜீவன் மனிதன் மட்டுமே. சுமக்கின்றோம்...!!!!

இந்த கவிதை அவருக்காக... என் வழிப்பயணத்தில் அவர் சிந்திய மணித்துளிகளுக்காக!!! அந்த மணித்துளிகள் சிப்பியில் விழுந்த மழைத்துளிகள்... வீற்றிருக்கும் என்றும் முத்தாய்... அந்த முத்தை கொண்டே இந்த பாமாலை... அந்த முத்துக்காக!!!   


"கரைகின்றன காலங்கள்...
     நம்மையும் கரைத்துக்கொண்டே...
இதோ,
ஒரு வழி இரு வழிகளாய்
    பிரிந்து கிடக்கின்றது.....
இரு விழியோ ஒரு துளியால்
     நிறைந்து துடிக்கின்றது!!!
பிரிவு...
இத்தனை காலங்களாய் நிற்காது
  அத்தனை கண்ணீர்களை பருகியும்
இதோ புன்னகையோடு
   நம்மை நோக்கி வருகின்றது - தாகத்தோடு!!!
ஆம்!!!
   இது கண்ணீரின் நேரம் தான்!!!
சந்திப்பவர்கள் அனைவரும் பிரிவதுபோல்
   பிரிந்தவர்கள் அனைவரும் சந்திப்பதில்லை!!!

பயணம்,
ஒரே பாதையில் பயணித்தும்
    நம் பயணங்கள் ஒன்றல்ல!!!
இதோ,
   உன் வெற்றியை தேடி
        உன் பயணத்தை தொடங்கி விட்டாய்...
  நேசத்துடன் வாழ்த்துகள்!!!  

உன்னுடன் பயணித்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன்
     நீ உதிர்த்த வார்த்தைகளும் கரைத்த காலமுமா
அங்கே பூத்தோட்டங்கலாய் மாறி இருக்கின்றன?
     வாழ்த்துகள்- பிரிவை வீழ்த்தும் திறன் உன்னிடம் இருக்கின்றது!!!

ஆம்,
  வெல்ல நினைத்தவர்கள் எதையும் வென்றது கிடையாது
     வாழ்வையும் சரி...பிரிவையும் சரி...
  வாழ நினைத்தவர்களே வென்றிருகிறார்கள் அவற்றை!!!
  நீ வாழ்ந்து இருக்கிறாய்...
    அந்த தோட்டங்கலாய் வீற்று இருப்பாய்-என்றும்!!! 

பிரிவோம் தோழா!!!
காலங்களில் நாளை என்றும் அழிவதில்லை...
நாளை இருக்கும் வரை என் நம்பிக்கையும் குறைவதில்லை!!!
மீண்டும் சந்திப்போம்!!!   "


                                             - வழிப்போக்கன்     

சனி, 24 ஏப்ரல், 2010

சிறுமியின் கடிதங்கள் - 2


புரியவில்லை அம்மா உன் அன்பு
    உலகிற்கு வளர்ந்தவளாக தெரியும் நான்
எப்படி உன் கண்களுக்கு மட்டும்
    சிறுமியாகவே தெரிகின்றேன்" என்றேன்
“ஏன் என்றால் நீ இன்னும் சிறுமி தான்" என்றாய் புன்னகைத்துக்   கொண்டே.
“நான் சிறுமி அல்ல! வளர்ந்து விட்டேனாக்கும்” என்றேன்.
“ஆம்! வளர்ந்து விட்டாய்…சிறுமியாகவே!!!” என்றாய்.
உண்மை புரிந்தது அம்மா,
காலங்களில் உன் பாசம் வளரும்
ஆனால்
உன் பார்வையில் நான் வளர்வதில்லை என்று !!!!          
                                                                   இப்படிக்கு,
                                                                                                             - உன் அன்பு மகள்!!!

விந்தை பெண்ணும் பேசும் கண்களும் !!!

ஒரு மாலை நேரம். ஒரு தென்றலோடு உரையாடிக் கொண்டு பூங்காவினில் நடந்துச் சென்று கொண்டு இருந்தேன்.

அவளைத் தென்றல் என்றால் சிலர் சண்டைக்கு வரலாம். இவள் தென்றலை விடவும் மெலிதானவள் எனலாம். தென்றல் கூட எதிர்க்காற்றாய் வீசும் போது அதன் கனம் தெரியும் ஆனால் இவள் ஒரு கணமும் கனப்பதில்லை என்று விளக்கமும் தரலாம்.

தவறு. இவள் கனக்கிறாள். இவள் என்னை பிரிந்து இருக்கும் கணங்களில் நினைவாய் கனக்கிறாள். எனவே இவள் தென்றல் தான்.


இவளைக் காண்பதற்கு இயற்கை அலங்காரம் சூடிக் கொண்டு நின்றது. 


 "விந்தையடி பெண்ணே நீ!!!
 இதோ பார்,
 நீ நடக்கையில் சிந்திய வண்ணங்களை
 மேகங்கள் எடுத்துச் சூடிக்கொள்வதை!!!" என்றேன்.

நின்றாள்.

நீ ஆரம்பித்துவிட்டாயா என்று சொல்வது போல் ஒரு பார்வையை என் பக்கம் வீசினாள். நீண்ட காலமாகவே கேட்க வேண்டும் என்று வைத்திருந்த கேள்வி ஒன்று நினைவிற்கு வந்தது.
"உன்கிட்ட ரொம்ப நாளாவே ஒண்ணு கேட்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன். கேட்கலாமா??" என்றேன்.
பெண்களுக்கே உரிய சந்தேகத்துடன் புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்த்தாள். ஒரு வார்த்தையும் பேசாமல் தங்களது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துவது பெண்களுக்கு இயற்கை தந்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை.


"சற்றே புருவம் உயர்த்துகிறாள்
       அவளின் ஆளுமை உணர்த்துகிறாள்!!

"ஏய்! நீ சந்தேகப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. எதுவும் கேட்க வேண்டாம்னா சொல்லு... கேட்கல... முறைக்காத!!! என்றேன்.
"நான் ஒண்ணும் முறைக்கல" என்றாள்.
"அப்படினா கேட்கலாமா" என்றேன்
"ம்ம்ம்!!!". என்றாள்.

 "பேசுவதற்கு தான் கண்களை
        வைத்து இருக்கின்றாயே   
பின் ஏன் இதழ்களை தேவை இல்லாது
        அலங்கரித்து  கொண்டிருக்கிறாய்!!!" என்றேன்.

சற்று முகம் மலர்ந்தாள். பின் என்னை நோக்கித் திரும்பி


“..ம்ம்ம் ..!! கண்களால் முத்தமிட முடியாதே!!!”  என்று கூறி ஓடி மறைந்தாள்.

அப்படி என்றாள் இதழ்களுக்கு அலங்காரம் சரி தான்!!! 

திங்கள், 19 ஏப்ரல், 2010

ஒரு பொம்மை வாங்கிக்கோங்கக்கா!!!

"அக்கா ஒரு பொம்மை வாங்கிக்கோங்கக்கா". 

எங்க ஊர் பங்குனி பொங்கல் என்றால் ஞாபகத்திற்கு வரும் பல விசயங்களில் இந்த குரல்களும் முக்கியமானவை. பொங்கலை முன்னிட்டு கோவிலைச் சுற்றி புதிதாய் முளைத்திருக்கும் பல கடைகளுள் பொம்மை விற்பவர்கள் தான் பெருன்பான்மையாக இருப்பார்கள். பொம்மை என்றால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் அல்ல. அம்மனின் அருள் பெற நமக்கு வேண்டியவர்களுக்காக வேண்டி வைக்கப்படும் பொம்மைகள்.

கை குணமாக கை பொம்மை. காலுக்கு கால் பொம்மை. குழந்தைகளுக்கு சிறுவர் பொம்மை. பெரியவர்களுக்கு அவர்களுக்கு உரிய பொம்மை என்று பல வகையான பொம்மைகளை விற்று கொண்டு இருப்பர்.

"பையனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல. ஒரு பையன் பொம்மை தாங்கமா." என்றார் ஒரு சிறுவனின் அன்னை.
"என்ன ஆச்சிமா பிள்ளைக்கு?" பல வருடங்களாகவே அந்த அன்னையையும் சிறுவனையும் பொங்கல் அன்று கண்டு பழகி இருக்கும் அந்த கடைக்கார பாட்டி அக்கறையுடன் விசாரித்தார்.
"கொஞ்ச நாளா காய்ச்சல் தொடர்ந்து வந்துகிட்டே இருக்குமா. என்ன பண்றதுனே தெரியல" என்றார் அந்த அன்னை.
"கவலைப்படாதேமா! இந்தா... இந்த பக்கத்துக் கடையில கொஞ்சம் பூவை வாங்கி இந்த பொம்மையில சுத்தி அம்மன் கோவிலுக்குள்ள வச்சிரு... அப்புறம் எல்லாம் அந்த மாரித்தாய் பாத்துப்பா. நீ கவலைப்படாதே" என்று சொல்லி ஒரு பொம்மையை அந்த பாட்டி கொடுத்தார்.
"சரிமா!" என்று அந்த பொம்மையை வாங்கி தன் மகனிடம் கொடுத்தார் அந்த அன்னை.   
"அம்மா... அம்மா... எனக்கு கடிகாரம் வச்ச பொம்மை தான் வேண்ணும்" என்றான் அவன்.
"கடிகாரம் வச்ச பொம்மை தானே ராசா... இந்தா எடுத்துக்கோ " என்று அந்த பாட்டி அவனுக்கு பிடித்த பொம்மையை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு மகிழ்ச்சியுடன் அவன் கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். பின்னால் அவன் அன்னை நம்பிக்கையுடன் நகர ஆரம்பித்தார்.

மேலே சொன்னது போல் பல கதைகளை அந்த பொம்மைகள் சுமந்து கொண்டு தான் அலைகின்றன இன்றும், அந்த பொம்மைகளை சுமப்பவர்களோ ஒரு புது நம்பிக்கையை சுமந்து கொண்டு தான் செல்கின்றனர்.

 "இந்த பொம்மையை வச்சா மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திடுமா? இது எல்லாம் மூட நம்பிக்கையா தெரியில" என்று கேட்டேன். அந்த பாட்டியிடம்.
என்னை அந்த பாட்டி சற்று உற்றுப் பார்த்தார். "நம்ம நல்லா இருப்போம்னு நம்புறது மூட நம்பிக்கையாப்பா?" என்றார்.
"இல்லை!!... ஆனா.."
"யாருக்கும் தீங்கு செய்யாம நமக்கு அந்த நம்பிக்கைய ஒண்ணு தருதுனா அது தப்பாப்பா" அந்த பாட்டி தொடர்ந்தார்.
"இல்லை!!"
"மனுசனுக்கு நம்பிக்கை தான்பா முக்கியம். அந்த நம்பிக்கைய இதுங்க தருதுங்க. இதை போயி மூடநம்பிக்கைனு சொல்லிகிட்டு...நம்ம நல்லா இருப்போம்னு யாருக்கும் எந்த தீங்கும் தராம நம்பிக்கை கொடுக்குற எந்த விஷயமும் மூட நம்பிக்கை இல்லை...!!! அப்புறம் பிரச்சனைகள் தீர்ந்திடுமான்னு கேட்டேல... தீரும் ... தீர்ந்திருக்கு!!!" என்று கூறி முடித்துவிட்டு தன் கடை வேலையை பார்க்க தொடங்கினார் அந்த பாட்டி.
நானும் அந்தக் கடையை விட்டு நகர்ந்தேன் ஒரு தெளிவுடன்...

விருதுநகர் பொங்கல்னா கண்டிப்பா பொம்மைகள் இருக்கும்... அவை இல்லாம பொங்கலா... வாய்ப்பே இல்ல... எனக்கு நம்பிக்கை இருக்கு!!! நம்புவோம்!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொங்கல்னா மழை வரும்டே!!!

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.


மழை! எங்கள் ஊர் மிகவும் எதிர் பார்க்கும் ஒரு விருந்தாளி. வேலைக்கு வெளியூர் சென்ற மகன் எப்பொழுது ஊர் திரும்புவான் என்று காத்திருக்கும் அன்னையைப் போல், எங்கள் ஊரும் மழைக்காக காத்து இருக்கும். நாங்கள் சற்றும் எதிர் பார்க்காத பொழுது அவனும் வருவான், சில நேரங்களில் தன் உள்ளத்தில் மறைந்து இருக்கும் காதலை கயல்விழி அசைவில் வெளிப்படுத்தும் பெண்ணைப் போல் ஒரு கவிதையாய்- குற்றாலத்து  சாரலாய்!!! சில நேரங்களில் இன்று உலகத்தின் கடைசி நாள் என்று அறிந்தவுடன் இது வரை தன் நெஞ்சத்தில் சேர்த்து வைத்து இருந்த காதலை தன் காதலியிடம் சொல்லும் காதலனை போல் - பெரு மழையாய்!!! இருக்கும் வரை ஊரை நன்றாக மகிழ்விப்பான். பின் எவ்வாறு சொல்லாமல் வந்தானோ அவ்வாறே சொல்லாமல் சென்று விடுவான். நாங்களும் அவன் வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.

உலகமெங்கும் சுற்றினாலும் வீட்டில் ஒரு விழா என்றால் எப்படியாவது வீட்டிற்கு வந்து தன் தாயின் மனத்தை குளிர்விக்கும் மகனை போல் எங்கள் ஊருக்கு தவறாமல் மழை வந்து செல்லும் ஒரு விழா உள்ளது. அது எங்கள் ஊர் மாரியம்மன் திருவிழா. பங்குனி மாதத்தில் மாரியம்மனை துதித்து நடத்தும் பொங்கலை அவன் இது வரை காணாமல் விட்டதில்லை. எதிர்பார்க்காத பொழுதே வந்து பழகியவனை நிச்சயமாய் வருவான் என்று நாங்கள் எதிர் பார்ப்பது அப்பொழுது தான். இது வரை அந்த எதிர்பார்ப்பு பொய்தததில்லை.

இன்றும் அப்படித்தான், மேகம் இல்லா வானில் கதிரவன் கொழுத்திக் கொண்டு இருந்தான். ஊரில் பொங்கல். அருகிலிருந்த சிறுவன் எதிர்பார்ப்போடு கேட்டான்,

"அண்ணே! நம்ம ஊரு பொங்கல்னா அன்னிக்கு கண்டிப்பா மழை வருமா அண்ணே" என்றான் அந்த சிறுவன்.
புன்னகைத்தேன். "கண்டிப்பா வரும்டா....!!!" என்றேன்.
"எப்படினே.. ஒரு மேகத்தை கூட காணோம்... அப்புறம் எப்படி வரும்?" என்றான்.
"வரும்டா!... பொறுமையா இரு... வராம எங்க போகும்..." என்று சொல்லி நகர்ந்தேன். அவனும் "ஆகோ.... அய்யாகோ" என்று கூறியவாரே கோவிலை நோக்கி செல்லத் தொடங்கினான். நானும் கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்தேன்.

மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டினுள் இருந்த சமயம் வெளியே இருந்து மண் வாசனை வீச ஆரம்பித்தது. ஆவலுடன் வெளியே சென்று பார்த்தேன். எப்படியோ மேகங்கள் ஒன்று சேர்ந்து இருந்தன. மழை மண்ணை நனைத்துக் கொண்டு இருந்தது. மண்ணோ மணத்தை பரப்பிக் கொண்டு இருந்தது. மீண்டும் நிமிர்ந்து வானத்தை பார்த்தேன். ஒரு மழைத்துழி என் கண் சேர மனம் சிலிர்த்தது.
மழை அருமையானவன் தான்!!! இந்த வருடமும் பொங்கலுக்கு  தன் அன்னையை காண வந்து விட்டான்.
புன்னகைத்தேன்.
"எங்க ஊர்ல பொங்கல்னா மழை வரும்டே!!!!"

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

சனி, 13 மார்ச், 2010

ஒரு குத்துச்சண்டையின் கதை - 1


"எனக்கு தோல்வி என்பதே கிடையாது". மதனின் வார்த்தைகளில் ஆவேசம் கொந்தளித்தது.

"ஆம்" என்றார் சார்லஸ்.

மதன் நிமிர்ந்து சார்லெஸை பார்த்தான். பின் மீண்டும் குனிந்து தன்னுடைய குத்துச்சண்டை கையுறைகளை பார்த்தவாறு "எனக்கு வலிக்காது சார்ல்ஸ். நான் வெல்லப்பிறந்தவன்" என்றான்.

"ஆம்!" என்றார் சார்ல்ஸ். அவருக்கு மதனின் வார்த்தைகள் புதிதல்ல. மதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவனை அவர் கண்டு இருக்கிறார். புதிதாய் அவன் அவரிடம் எதையும் சொல்ல போவதில்லை. இப்போது அவன் சொல்லும் வார்த்தைகள்அவனுக்காக மட்டுமே. அவருக்கு தெரியும், அவன் தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறான்.



"என் மகனை ஒரு பெரிய குத்துச்சண்டை வீரனாக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவனுக்கு பயிற்சி அளிக்க சரி என்று சொல்ல வேண்டும்." 15 வருடங்களுக்கு முன்னால் மதனின் தந்தை உதிர்த்த வார்த்தைகள் இன்றும் அவருக்கு நன்றாக நினைவில் இருந்தன.

"மன்னிக்கவும்! என்னால் பயிற்சி அளிக்க முடியாது. உங்கள் விருப்பங்களை உங்கள் குழந்தைகளின் மீது சுமத்துவது சரியல்ல."

"இல்லை... இல்லை நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றீர்கள். அவனுக்கு குத்துச்சண்டை பிடிக்கும்" என்று மதனின் தந்தை தொடங்கினார்.

"6 வயதுச் சிறுவனுக்கு குத்துச்சண்டை சரியான ஒன்றல்ல. நீங்கள் போகலாம்" என்று உரையாடலை முடித்து விட்டவராய் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. வேண்டாம் என்று எந்தச் சிறுவனைப்பார்த்து சொன்னாரோ அந்தச் சிறுவன் அவருடைய கையுறைகளை அணிந்துக்கொண்டு விளையாட்டாய் சண்டைப்பயிற்சி செய்யும் பையை குத்திக்கொண்டு இருந்தான்.

நின்றார் சார்ல்ஸ். ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்தார்.

 இவன் சராசரி சிறுவனல்ல.

" எனக்கும் குத்துச்சண்டைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் ஏனோ இவன் குத்துச்சண்டையில் பெரிய ஆளாய் வருவான் என்று எனக்கு தோன்றுகின்றது" மதனின் தந்தை தொடர்ந்தார். சார்ல்ஸ் அவரை அமைதியாய் திரும்பி பார்த்தார்.

"தினமும் காலை 6 மணிக்கு பயிற்சி தொடங்கும். நீங்கள் போகலாம்" என்று கூறிநகர்ந்தார் சார்ல்ஸ்.

அவை நடந்து 15 வருடங்கள் முடிந்து போயிருந்தன. அந்த வருடத்திலேயே மதனின் பெற்றோர் ஒரு சாலை விபத்தில் காலமாக, சார்ல்ஸ் மதனை தன் வளர்ப்பு மகனாக தத்து எடுத்து இருந்தார். மதன் தன்னை ஒரு முழு நேர குத்துச்சண்டை வீரனாக தயார் செய்து கொள்ள ஆரம்பித்து இருந்தான். அன்று தொடங்கி அவன் தோற்று அவர் கண்டதில்லை. வெற்றி... அது ஒன்றே இலக்கு என்று வென்ற போட்டிகள் தந்த வேகம், வேகம் தந்த வெறி , வெறி தந்த வெற்றி .... என்றே அவன் தன்னை ஒரு முன்னணி குத்துச்சண்டை வீரனாக நிலை நிறுத்தி கொண்டு இருந்தான். இதோ அவன் கனவான உலக சாம்பியன் பட்டம் அவன் கைக்கு அருகே இருக்கின்றது.
இடையில் ஒரே போட்டி.
ஒரே நபர்.
கார்த்திக்... சாமானியன் அல்ல. கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்தை தன் வசம் வைத்து இருப்பவன். செய்திகளின் கூற்று உண்மையானால் அவனை போல் ஒரு வீரனை குத்துச்சண்டை உலகம் இது வரை கண்டதில்லை. வெற்றி கடினம் தான். ஆனால் முடியாததில்லை. சார்ல்ஸ் மதனை கூர்ந்து பார்த்தார். மதன் தயாராகவே இருக்கின்றான். அவனிடம் பயமில்லை. அவன் வெல்வான்.

"மக்களே!!! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டி இதோ சற்று நேரத்தில் தொடங்க போகிறது." அறிவிப்பாளரின் குரல் அரங்கமெங்கும் ஒலித்தது. உடை மாற்றும் அறையில் மதன் எழுந்து தனது மேல் அங்கியை அணிந்தான். அரங்கமெங்கும் ஒலிக்கும் மக்களின் கரகோசங்கள் அவனின் வெற்றித் தாகத்தை மேலும் அதிகரித்தன.
மதன் சார்லசை பார்த்தான். சார்ல்ஸ் தலை அசைத்தார். நம் நேரம் வந்து விட்டது.
போகலாம்...
"இதோ... உலக சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடும்... 21 வயதே ஆன... இது வரை தோல்விகளே காணாத ...மதன்....!!!"
மதன் தனது அறையிலிருந்து அரங்கத்தின் உள் நுழைந்தான். சார்ல்ஸ் பின் தொடர்ந்தார்.
"வரலாறு படைப்பாரா?... பார்ப்போம்... இதோ உங்களுக்காக ... மதன்" அறிவிப்பாளர் தொடர்ந்தார்.
அரங்கமெங்கும் மதனின் பெயர் எதிரொலித்தது மக்களின் குரலோடு சேர்ந்து.
மதன் புன்னகைத்தான். இதை தான் அவன் எதிர்பார்த்தான். உலகமே அவன் பெயர் சொல்ல வேண்டும்.
"3 சுற்றுகளுக்குள் வெல்ல வேண்டும். என்னால் முடியும்.
எனக்கு வலிக்காது. நான் தோற்க மாட்டேன்." 
மதன் குத்துச் சண்டை மேடையுள் நுழைந்தான்.  

திங்கள், 8 மார்ச், 2010

பெண்….

பெண்….

யாரிவள்…

சாந்தமான காந்தமா…
இல்லை
அண்டம் வாழும் அண்டமா….

ஆதியா??? அந்தமா???...
அல்லது
வெறும் குயில்களின் சந்தமா….




இவள் எண்ணங்கள் என்ன…

ஆழம் அறியா கடலா…
அல்ல
மலரில் எழுதிய மடலா???

அனைவரும் படிக்கும் புத்தகம் இவள் தான்…
பக்கங்களில் பாசம் ஊட்டுகிறாள்
நேசம் காட்டுகிறாள்…
அர்த்தங்கள்??? – அதற்கு மட்டும் புன்னகைக்கிறாள்!!!

மௌனத்தில் உருக்கும் என்னை
கண்ணீரில் கரைக்கிறாள்
பின் புன்னகையில் மீண்டும் உயிர்பிக்கிறாள்…!!!

புரிந்த புதிரே…
விழி அசைவில் காலத்தை மாற்ற அறிந்தவள் நீ…
அறியாதிருப்பாயோ….
நீயின்றி நாங்கள் இல்லை என்று!!!

சனி, 6 மார்ச், 2010

சும்மா ஒரு காதல் உரையாடல்- 2

"இந்நேரம் மொட்டைமாடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்றேன்.
"ஹேய் நான் எங்க வீட்டு மொட்டை மாடில இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சரியத்தோடு ஒலித்தது அவள் குரல்.

"உன் ஒளியால் நிலா சற்று பிரகாசம் கூடுதலாக தெரிந்தது. அதை வைத்து தான் " என்றேன்.
"போடா.... உனக்கு இதே வேலையா போச்சி" என்றாள் வெட்கப்பட்டுகொண்டே.
"வெட்கப்படுகின்றாயா!!! ஆச்சரியமாக இருக்கின்றதே"
"வெட்கமா???நானா???.... யார் சொன்னா!!! எனக்கு வெட்கப்படுவது பிடிக்காது தெரியுமா" என்றாள் போலி திமிருடன்.
செல்லப்பொய்கள் சொல்வது பெண்களுக்கு பிடிக்கும்...ஆண்களுக்கோ கதை சொல்வது...
பொய் சொல்லிவிட்டாள்... இப்பொழுது கதையின் முறை... ஆரம்பித்தேன்
"அப்பாடி!!! உலகம் பிழைத்தது" என்றேன்.
"என்ன?நான் வெட்கப்படுவதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன தொடர்பு?..." என்றாள் ஆச்சரியத்தோடு.
"சொல்கிறேன்... இரவு வெகு நேரம் வெட்ட வெளியில் நிற்காதே என்று உன் வீட்டில் சொல்லி இருக்கிறார்கள் தானே" கதையைத் தொடர்ந்தேன்.
"ஆம்... அதற்கு என்ன"
"அது ஏன் தெரியுமா?"
"குழந்தைக்கு கூட தெரியும். இரவு வெகு நேரம் வெளியில் நின்றால் பனி பிடிக்கும்" என்றாள்.
"தவறு. பனி பிடித்து கொண்டு போய் விடும்" என்றேன்.
"பிடித்து கொண்டு போய் விடுமா? என்ன சொல்ற" என்றாள்
"உனக்கு கதையே தெரியாதா?... அந்த காலத்தில் பனித்தேவன் மிகவும் மோசமானவனாய் இருந்தானாம். இரவில் வெளியில் அலையும் அழகான பெண்களை தனக்கு சேவை செய்ய பிடித்து கொண்டு போய் விடுவானாம். அதனால் அந்த காலத்தில் பெண்களை இரவு நேரத்தில் வெளியில் உலாவ விட மாட்டார்கள்"
"ஆனால் இப்பொழுது உலாவ விடுகிறார்கள் அல்லவா!!! அந்த பனித்தேவன் இப்பொழுது சேவைக்கு ஆள் தேடுவது இல்லையா?" என்றாள்.
"இல்லை! அவன் மாறி விட்டான்" என்றேன்.
"ஓ!!! திருந்தி விட்டானா!!!" என்றாள்.
"இல்லை. காதலித்து விட்டான். அவனையும் தன் அறிவால் ஒரு மங்கை பித்து பிடிக்க வைத்து விட்டாள்." என்றேன்.
"காதலா?..."என்றாள்.
"ஆம். அந்த பெண்ணையே மணமுடித்து அவளுடன் வட துருவத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். அவள் இறக்கும் வரை. அன்று முதல் அவன் அவள் நினைவாகவே வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையே ஓய்வின்றி அலைந்து கொண்டு இருக்கின்றான்!!!" என்றேன்.
"சரி! அதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்" என்றாள்.
"தன் காதலியை மறக்க நினைத்து அலையும் அவன் உன் வெட்கத்தை கண்டால் நிச்சயம் அவள் எண்ணம் வந்து உருகி விடுவான். அவன் இல்லை என்றால் துருவங்கள் இரண்டும் அழிந்து விடும். அப்புறம் உலகம் அழிய தானே செய்யும்" என்றேன்
"உனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் கதை கிடைக்குதோ???" என்றாள்.
புன்னகைத்தேன்.
"என்ன பதிலை காணோம்" என்றாள்.
நான் கதை சொல்லவில்லை, உன் வெட்கம் என்னிடம் சொல்வதை நான் உன்னிடம் சொல்கிறேன் என்று சொல்ல துடித்த உதடுகள் ஏனோ "ஒன்றுமில்லை!!!" என்று சொல்லி அடங்கின.
"சரி!!! எனக்கு தூக்கம் வருகிறது. நீயும் போய் நிம்மதியாக தூங்கு. குட் நைட்" என்று சொல்லி அவளது கைப்பேசியை அணைத்தாள்.
விடிந்திருந்தது.!!!
                                   முற்றும்
  

என்ன வேண்டும்

புகைவண்டி கடப்பதற்காக
        நிலவு நிற்குமா – நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
       வெட்கம் சூழ்ந்த உன் முகத்தை கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும்
     'பாவம் அவனை ஒரு முறை பார்த்து விடு என்று!!! '
திரும்பினாய்
   " என்ன வேண்டும்!!!" என்றாய் எதுவும் அறியாதவள் போல்
   "உன் காதல்!!" என்றேன் ....
மறுகணம் மேகம் மறைத்த நிலவை போல்
     ஜன கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!
  " மெதுவாகவே எடுத்து வா
              உன் காதலை,
     காத்திருப்பேன்
               என் வாழ்க்கையோடு!!!

கவிதைகளின் கவிதை



"நீ கவிஞனாமே??

    என்னை பற்றி ஒரு கவிதை சொல்லேன்" என்றாள்!!!

“நான் எழுதிய கவிதைகள் கேட்கின்றன

    அவற்றை பற்றி கவிதை எழுத சொல்லி,

கவிதைகளின் கவிதையா – என்னவள்" என்றேன்.

 கவிதைகள் பூரித்தன சரி

          உன் கன்னங்கள் ஏன் சிவந்தன???’

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...