"இந்நேரம் மொட்டைமாடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்றேன்.
"ஹேய் நான் எங்க வீட்டு மொட்டை மாடில இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சரியத்தோடு ஒலித்தது அவள் குரல்.
"உன் ஒளியால் நிலா சற்று பிரகாசம் கூடுதலாக தெரிந்தது. அதை வைத்து தான் " என்றேன்.
"போடா.... உனக்கு இதே வேலையா போச்சி" என்றாள் வெட்கப்பட்டுகொண்டே.
"வெட்கப்படுகின்றாயா!!! ஆச்சரியமாக இருக்கின்றதே"
"வெட்கமா???நானா???.... யார் சொன்னா!!! எனக்கு வெட்கப்படுவது பிடிக்காது தெரியுமா" என்றாள் போலி திமிருடன்.
செல்லப்பொய்கள் சொல்வது பெண்களுக்கு பிடிக்கும்...ஆண்களுக்கோ கதை சொல்வது...
பொய் சொல்லிவிட்டாள்... இப்பொழுது கதையின் முறை... ஆரம்பித்தேன்
"அப்பாடி!!! உலகம் பிழைத்தது" என்றேன்.
"என்ன?நான் வெட்கப்படுவதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன தொடர்பு?..." என்றாள் ஆச்சரியத்தோடு.
"சொல்கிறேன்... இரவு வெகு நேரம் வெட்ட வெளியில் நிற்காதே என்று உன் வீட்டில் சொல்லி இருக்கிறார்கள் தானே" கதையைத் தொடர்ந்தேன்.
"ஆம்... அதற்கு என்ன"
"அது ஏன் தெரியுமா?"
"குழந்தைக்கு கூட தெரியும். இரவு வெகு நேரம் வெளியில் நின்றால் பனி பிடிக்கும்" என்றாள்.
"தவறு. பனி பிடித்து கொண்டு போய் விடும்" என்றேன்.
"பிடித்து கொண்டு போய் விடுமா? என்ன சொல்ற" என்றாள்
"உனக்கு கதையே தெரியாதா?... அந்த காலத்தில் பனித்தேவன் மிகவும் மோசமானவனாய் இருந்தானாம். இரவில் வெளியில் அலையும் அழகான பெண்களை தனக்கு சேவை செய்ய பிடித்து கொண்டு போய் விடுவானாம். அதனால் அந்த காலத்தில் பெண்களை இரவு நேரத்தில் வெளியில் உலாவ விட மாட்டார்கள்"
"ஆனால் இப்பொழுது உலாவ விடுகிறார்கள் அல்லவா!!! அந்த பனித்தேவன் இப்பொழுது சேவைக்கு ஆள் தேடுவது இல்லையா?" என்றாள்.
"இல்லை! அவன் மாறி விட்டான்" என்றேன்.
"ஓ!!! திருந்தி விட்டானா!!!" என்றாள்.
"இல்லை. காதலித்து விட்டான். அவனையும் தன் அறிவால் ஒரு மங்கை பித்து பிடிக்க வைத்து விட்டாள்." என்றேன்.
"காதலா?..."என்றாள்.
"ஆம். அந்த பெண்ணையே மணமுடித்து அவளுடன் வட துருவத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். அவள் இறக்கும் வரை. அன்று முதல் அவன் அவள் நினைவாகவே வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையே ஓய்வின்றி அலைந்து கொண்டு இருக்கின்றான்!!!" என்றேன்.
"சரி! அதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்" என்றாள்.
"தன் காதலியை மறக்க நினைத்து அலையும் அவன் உன் வெட்கத்தை கண்டால் நிச்சயம் அவள் எண்ணம் வந்து உருகி விடுவான். அவன் இல்லை என்றால் துருவங்கள் இரண்டும் அழிந்து விடும். அப்புறம் உலகம் அழிய தானே செய்யும்" என்றேன்
"உனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் கதை கிடைக்குதோ???" என்றாள்.
புன்னகைத்தேன்.
"என்ன பதிலை காணோம்" என்றாள்.
நான் கதை சொல்லவில்லை, உன் வெட்கம் என்னிடம் சொல்வதை நான் உன்னிடம் சொல்கிறேன் என்று சொல்ல துடித்த உதடுகள் ஏனோ "ஒன்றுமில்லை!!!" என்று சொல்லி அடங்கின.
"சரி!!! எனக்கு தூக்கம் வருகிறது. நீயும் போய் நிம்மதியாக தூங்கு. குட் நைட்" என்று சொல்லி அவளது கைப்பேசியை அணைத்தாள்.
விடிந்திருந்தது.!!!
முற்றும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக