சைவ சமயத்தின் முதல் கோவில் என்ற பெருமையுடன் இன்று மயிலையில் நின்று கொண்டு இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கோவில். ஆனால் நாம் முந்தையப் பதிவுகளில் பார்த்தபடி இக்கோவில் ஆரம்பத்தில் இருந்தே மயிலையில் இருந்து இருக்கவில்லை மாறாக இன்றைய சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் தான் இக்கோவில் இருந்தது என்றும் கி.பி 16 நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்துகேசியர்களால் இந்த கோவில் இடிக்கப்பட்டு பின்னர் இன்று இருக்கும் மயிலையில் மீண்டும் கட்டப்பட்டு உள்ளது என்று அறிகின்றோம்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.
௧) ஏன் போர்துகீசியர்கள் இக்கோவிலை இடிக்க வேண்டும். அவர்களுக்கு தேவாலயம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்றால் வேறு இடமா கிடைக்கவில்லை?
இக்கேள்விக்கு விடையாய் நமக்கு வரலாறு தரும் பதில் - தோமாவின் கல்லறை. ஆம். தோமாவின் கல்லறையின் மேல் கபாலீசுவரர் கோவில் கோவில் கட்டப்பட்டு இருந்தமையால், ஒரு கிருத்துவ துறவியின் கல்லறையின் மேலே வேறு சமயத்தினரின் கோவில் இருப்பதா என்று எண்ணியே அவர்கள் இக்கோவிலை இடித்து வேறு இடத்தில் கட்டுகின்றனர். பதிலாக அந்த கிருத்துவ துறவியினை சிறப்பிக்க ஒரு தேவாலயத்தினையும் கட்டுகின்றனர். அது தான் இன்றைய சாந்தோம் தேவாலயம்.
சரி...இப்பொழுது நம் முன் இருக்கும் விடயங்களை சற்று உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கின்றது.
கபாலீசுவரர் கோவில் - சைவ சமயத்தின் முதல் கோவில். இதற்கு முந்தைய கோவில்கள் என்று எதுவும் கிடையாது.
தோமா - இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். கிருத்துவர்.
அப்படியிருக்க தோமாவை சிறப்பிக்க அவரின் கல்லறையின் மேல் முதல் சைவ சமயக் கோவிலை எழுப்பக் காரணம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு விடையாய் நாம் முந்தையப் பதிவுகளில் தோமா கிருத்துவின் கருத்துக்களை இந்தியா கொண்டு வந்தார் என்றும் அக்கருத்துக்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றும் அதனால் அவரை சிறப்பிக்கவே அக்கோவில் கட்டப்பட்டது என்பதை கண்டோம். ஆனால் அக்கருத்தினை நாம் சான்றுகள் இன்றி நிரூபிக்க முடியாது. காரணம் வேதங்களில் இருந்தே சைவமும் வைணவமும் தோன்றின என்றக் கருத்துக்கள் இன்று மக்களிடையே பரவி இருக்கின்றது. எனவே இப்பொழுது நாம் நம்முடைய கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றுக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு கருத்தினை தெளிவாக நாம் கண்டுக் கொள்வது நல்லது.
வேதங்களில் கோவில் வழிபாட்டு முறை பற்றி எந்தொரு தகவலும் இல்லை. கோவில் வழிபாட்டு முறை வேத முறை அல்ல.(வேதங்களைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்).
சரி. இப்பொழுது நாம் சான்றுகளைத் தேடுவோம். அதற்கு நாம் முதலில் இயேசுவினைக் காண வேண்டி இருக்கின்றது.
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் எங்கு வைத்து சிலுவையில் அறையப்பட்டார் என்பதே. வரலாற்றின் படி இயேசு கல்வாரி அல்லது கல்கொதா என்ற மலையில் வைத்தே கொல்லப்படுகின்றார். இங்கே நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு விடயம் என்னவென்றால் கல்வாரி அல்லது கல்கொதா என்றால் 'கபாலத்தின் இடம்' அல்லது 'கபாலம் இருக்கும் இடம்' என்றே பொருள் தருவது தான். மேலும் விவிலியத்தின் படியும் இந்தச் செய்தியினை நாம் அறிகின்றோம்.
" கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது," - மத்தேயு 27 :33
"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்." - லூக்கா 23 : 33
எனவே கபாலம் போன்றுக் காணப்படும் மலையில் இயேசு கிருத்து உயிர் துறந்தார் என்று நாம் அறிகின்றோம். ஒரு வேளை இந்த செய்தியின் மூலமாகவே முதல் சைவ சமயத்தின் கோவிலுக்கு கபாலீசுவரர் கோவில் என்று பெயர் வந்து இருக்கலாமா?
ம்ம்ம்... செல்லாது செல்லாது!!! கபாலம் அப்படின்னு பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா...அத வச்சி என்னனாலும் சொல்லலாமா என்று சொல்லுகின்றீர்களா. சரி தான். மேலும் கபாலம் என்ற சொல் பொருந்தி வந்தாலும். ஈசுவரன் என்ற பெயர் இடிக்கின்றதே. இக்கோவில் இயேசுவினைக் குறிக்க கட்டப்பட்ட ஒன்று என்றால் ஈசுவரனுக்கும் இயேசுவுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. நல்ல வேளை நம்முடைய இந்த கேள்விக்கு நீண்ட காலம் பதிலினைத் தேட வைக்காது விடையினை அதோ நம்முடைய மகாகவி பாரதியார் அவர்களே கொண்டு வந்துக் கொண்டு இருக்கின்றார்.
"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;" - என்று இயேசுவினைப் பற்றிய தனது கவிதையில் குறிப்பிடுகின்றார்.
அதாவது இயேசுவினைக் குறிக்க ஈசன் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கின்றார். ஏன் பாரதி அவ்வாறு குறிப்பிடுகின்றார் என்று கண்டால், எபிரேயத்தில் 'ஜோசுவா' என்று இருக்கும் பெயர் ஆங்கிலத்தில் 'ஜீசஸ்' என்றும் அரபியில் 'ஈசா' என்றும் ஒலித் திரிபு பெற்று இறுதியில் தமிழில் ஈசன் என்றும் இயேசு என்றும் ஒழி மாற்றம் பெற்று வந்து இருக்கின்றது என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எபிரேயம் - ஜோசுவா
ஆங்கிலம் - ஜீசஸ்
அரபி - ஈசா
தமிழ் - ஈசன்/இயேசு
அவர்கள் கூற்றுக்கு உறுதுணையாய் இருப்பது போல ஈசன் என்ற பெயர் கிருத்துவுக்கு முந்தைய காலத்தில் எங்கும் பயன்பட்டு இருக்கவில்லை.
எனவே ஈசன் என்ற சொல் இயேசுவினைக் குறிக்கும் என்றால் கபால மலையில் உயிர் துறந்து பின்னர் மக்களுக்காக உயிர்தெழுந்த வந்த இயேசுவினையும் (ஈசன்) சிறப்பித்து 'கபாலீசுவரன் கோவில்' கட்டப்பட்டது என்றும் நாம் கருத முடிகின்றது.
அட ஒரு பக்கத்து கதையை மட்டும் கேட்டு தீர்ப்பு எழுதுனா எப்படிங்க...இந்து சமயத்தின் கருத்தையும் கேளுங்கள்...அதையும் பார்த்து தானே நாம் முடிவு செய்ய முடியும் என்று கூறுகின்றீர்களா... சரி தான். இப்பொழுது இந்து சமயம் கூறும் கதையினைக் காண்போம்.
புராணங்களின் படி சிவனும் பார்வதியும் ஒன்றாய் இருந்த பொழுது அதை பிரமன் கண்டுக்கொண்டே இருந்தாராம். அதைக் கண்டு சிவன் சினமுற்று பிரமனின் ஒரு தலையைக் கொய்து விட்டாராம். அதற்கு பரிகாரமாக பிரமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூசைகள் செய்து சிவனின் கோபத்தை தனித்தாராம். இது தான் புராணத்து கதை. இன்னும் பல கதைகள் இருக்கின்றன. ஆனால் பிரமனின் கபாலத்தினை ஈசுவரன் கொய்ததால் கபாலீசுவரன் கோவில் என்று இக்கோவில் பெயர் பெற்றது என்பதே முக்கியமான புராணக் கதை. இப்பொழுது இந்தக் கதையினை ஆராய்வோம்.
சென்ற பதிவுகளில் பிரமன் பெருமாளின் மகன் என்பதனைக் கண்டோம். மேலும் சைவ வைணவத் தத்துவங்களின் படி சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான்.
நில்லுங்கள் நில்லுங்கள்...சிவனும் விஷ்ணுவும் ஒன்றா... என்று கேட்பவர்களுக்கு இதோ முதல் ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரின் பாடல்.
"தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து."
இப்பாடல் மூலம் சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான் என்பது தெளிவாகின்றது. எனவே இந்நிலையில் பிரமன் சிவனுக்கும் மகனாகின்றார். எனவே புராணக் கதையின் படி தன் தந்தை தன் தாயுடன் இருப்பதை பிரமன் காண்பதாக வருகின்றது (இப்படி எல்லாம் இருந்தா பெரியார் என்ன சின்ன குழந்தை கூட பிரமனை கல் எடுத்து அடிக்கும்...அடிக்கணும்). இப்பொழுது இது கடவுளுக்கு பொருந்திய செயலா என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. நிச்சயம் இல்லை. இக்கதை இறைவனுக்கு சிறப்பினை அளிப்பதாக இல்லை. ஆனால் இக்கதை முதலில் இவ்வாறு இருக்க வில்லை என்றும் பின்னரே மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கருத்துப்படி தந்தை இறைவன் தன்னுடைய மகனின் சாவுக்கு காரணமாக இருக்கின்றார். ஆனால் மகனோ இறந்தாலும் மீண்டும் உயிர்தெழுந்து வருகின்றார். இதை உணர்த்தவே பிரமன் சிவன் அவர்களை வைத்து இந்தக் கதை கூறப்பட்டதாகவும். பின்னர் கதைகள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதை சற்று விரிவாக பார்ப்போம்.
பிரமன் - சிவனின் பிள்ளை. இவர் படைப்புக் கடவுளாக கூறப்பட்டு உள்ளார். உயிர்களின் படைப்புக்கு இவரே காரணம். ஆனால் அதிசயத்தக்க விதத்தில் இவ்விடயம் கிருத்துவுடனும் ஒத்து போகின்றது.
விவிலியத்தில் படைப்புக்கு காரணமாக இயேசுவே கூறப்பட்டு உள்ளார்.
"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" - யோவான் 1 : 3
ஆய்வாளர்களின் கருத்துப்படி இயேசுவினாலையே படைப்புகள் தோன்றின என்பதை உணர்த்தவே பிரமன் என்ற உருவகம் தோற்றுவிக்கப்பட்டது. சரி இப்பொழுது மீண்டும் கதைக்கு வருவோம்.
சிவன் தன் மகனாகிய பிரமனின் தலையை கொய்கின்றார். பொதுவாக ஒருவரின் தலையைக் கொய்தால் அவர் மரணம் அடைவார். ஆனால் இங்கே பிரமன் மரணம் அடையவில்லை. காரணம் அவருக்கு வேறு தலைகள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே அவர் உயிர் பிழைத்து இருக்கின்றார்.
எனவே சிவனால் மரணமடைய வேண்டிய பிரமன் மரணம் அடைய வேண்டிய நிலை வந்தும் உயிர் கொண்டு இருக்கின்றான். அதாவது சாவை வென்று இருக்கின்றான். இயேசுவைப் போல....இயேசுவாக!!! இந்தக் கதை தான் பிற்காலத்தில் பலவாறாக திரிபு படுத்தப்பட்டு உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே மரணம் அடைய வேண்டிய கடவுள் தன் தந்தையின் அருளால் மரணத்தை வென்று உயிர்தெழுந்த விடயத்தை சிறப்பிக்கவே கபாலீசுவரர் கோவில் கட்டப்பட்டது என்ற கருத்தினையே இந்துக் புராணமும் கூறுகின்றதை நாம் அறிகின்றோம். சுருக்கமாக கூற வேண்டின் இயேசுவின் கதையையே பிரமனை வைத்து கூறப்பட்டு இருக்கும் புராணமும் கூறுகின்றது.
எனவே இயேசுவின் கருத்துக்களை இந்தியாவுக்கு கொண்டு வந்த தோமாவின் கல்லறையில் அவரைச் சிறப்பிக்க அவரின் செய்திகளின் அடிப்படையில் அமைந்த சைவ சமயத்தின் முதல் கோவிலை கட்டுகின்றனர் மக்கள்.
ஆனால் காலப்போக்கில் சைவ வைணவ அர்த்தங்களும் மாற்றப்பட, கிருத்துவமும் மாற்றப்படுகின்றது. எனவே இரண்டும் தங்களின் ஒற்றுமைகளை மறந்து இரு வேறு சமயங்களாக தோன்றுகின்றன. இந்நிலையில் தான் போர்துகீசியர்கள் கபாலீசுவரர் கோவிலை இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தை கட்டுகின்றனர். இதுவே ஆய்வாளர்களின் கருத்து.
சரி சைவ சமயத்தின் முதல் கோவிலின் வரலாற்றினைக் கண்டாயிற்று. பிரமனையும் கண்டாயிற்று. எவ்வாறு அவை இயேசுவுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் கண்டு இருக்கோம். ஆனால் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கலாம். காரணம் வேதங்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றே நமக்கு கூறப்பட்டு உள்ளது. நாமும் அதைத் தான் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களை சற்று கண்டு கொண்டு வந்துவிட வேண்டி இருக்கின்றது.
சைவ வைணவ சமயங்கள் என்றால் என்ன? சைவ வைணவ சமயங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
காண்போம்...!!!
முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14 | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |