'எல் (EL)'...!!!
சுமேரியர்களும் பின்னர் யூதர்களும் வழிப்பட்டக் கடவுள்.
இந்தக் கடவுள் உலகினைப் படைத்தக் கதை தான் 'ஈனும் -மா - எல் - இசு' என்னும் நூலில் உள்ளது!!!
ஈனும் - படைத்த
இசு - இசைதல் - செய்தல்
மா - பெரிய
தன்னுடைய செயலால் உலகினைப் படைத்த மாபெரும் கடவுளான 'எல்'லின் கதை என்பதே 'ஈனும் -மா - எல் - இசு' என்ற சொல்லின் அர்த்தம் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் கதையினைப் பொறுத்த வரை இது சுமேரியர்களின் கதை என்ற ஒரு விடயத்தினைத் தவிர மற்ற அனைத்து விடயங்களும் நாம் முன்னர் கண்ட கதைகளை ஒத்தே இருக்கின்றன. முதல் மாந்தன்...வெள்ளம்...வெள்ளத்தில் இருந்து இறைவன் ஒருவனை காப்பாற்றுதல்... என நாம் முன்னர் பாபிலோனிய இலக்கியங்களில் கண்ட அதே நிகழ்வுகள் இதிலும் வருகின்றன. பெயர்கள் மாறி இருக்கின்றன...ஆனால் கதை அதே தான்...கூடவே அதே கேள்விகளும் தான்.
எவ்வாறு வெள்ளத்தினைக் கண்டிராத ஒரு பிரதேசத்தில் வெள்ளத்தினைப் பற்றிய கதைகள் வரலாறாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன?...அதுவும் அனைத்து இலக்கியங்களிலும்...!!! உண்மையிலையே இங்கே வெள்ளம் வந்ததா...இல்லையேல் இவை வெறும் கதைகளா?
மேலே உள்ள இந்தக் கேள்விக்கு இன்னும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் விடைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நாம் கண்டோம் எனவே அவர்களின் உதவி இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது நமக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் நமது அறிஞர்கள் என்ன சொல்லுகின்றனர் என்பதனை சற்றுக் கண்டுக் கொண்டு வந்து விடுவோம்...!!!
அவர்களின் கூற்றுப் படி 'பெரு வெள்ளம்' என்று அக்கதைகள் குறிப்பிடுவது குமரிக்கண்டத்தின் அழிவையே ஆகும். குமரிக்கண்டத்தினை பெருங் கடல் கொள்ள பிழைத்து வெளியேறிய மக்கள் சிலர் மேற்க்கே சென்று குடி ஏறினர். அவ்வாறு குடியேறிய மக்கள் தங்களின் வரலாற்றினை தாங்கள் உணர்ந்தப் படி கதையாக பதிவு செய்து வைத்தனர். அக்கதைகள் தான் மேலே கூறிய அந்த இலக்கியங்கள். எனவே தான் வெள்ளமே அவ்விடத்தில் தோன்றியிராத பொழுதும், வெள்ளத்தில் இருந்து மக்கள் தாங்கள் மீண்டு வந்த செய்தியை அந்த இலக்கியங்கள் சுமந்துக் கொண்டு இருக்கின்றன என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.
"அட...இது என்னப்பா வம்பா போச்சி... வெள்ளத்தப் பத்தி அப்ப எவன் பேசுனாலும் அவன் குமரிக்கண்டத்துல இருந்து தப்பிச்சி வந்து இருப்பான் அப்படின்னு சொல்லுவீங்க போல இருக்கே!!!" என்று எண்ணுகின்றீர்களா...
சரி தான். அப்படி என்றால் நாம் மேலும் சில தகவல்களைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னால் ஒரு கேள்வி...!!!
உங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றீர்களா? அங்கே கல் வழிப்பாட்டினைக் கண்டு இருக்கின்றீர்களா? ... கல் வழிபாடு என்றால் சிலையினைச் சொல்லவில்லை... வெறும் கல்... அதனை நட்டி வைத்து வணங்குவார்கள்...அவற்றினைக் கண்டு இருக்கின்றீர்களா?... மேலும் 'நடுகல் வழிபாடு' என்ற ஒன்றையும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?
இவை இரண்டும் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இதே பழக்கம் சுமேரியர்களிடமும் பாபிலோனியர்களிடமும் யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது....அதே முறையில்...அதே பெயரில்!!!
'நேர்கல் (Nergal)' - இவன் பாபிலோனியர்களின் போர்க் கடவுளாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். இங்கே தமிழர்கள் போரில் இறந்தவர்களுக்கு 'நடு கல்' நடும் பழக்கம் நம்மில் சிலருக்கு நினைவுக்கு வரலாம்.
மேலும் இதேக் கல் வழிபாடு 'கல்கால் (Gilgal)' என்று எபிரேயச் சமயத்திலும் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கே கல்கால் என்பதும் நேர்கல் என்பதும் தூயத் தமிழ் சொற்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. கற்களை நட்டு வழிபடும் தமிழர் பழக்கங்கள் இதன் மூலம் பாபிலோநியர்களிடமும் சுமேரியர்களிடமும் பின்னர் யூதர்களிடமும் இருந்தது என்பது தெரிய வருகின்றது. இதே போல தமிழர்களின் வழக்கமான ஊர் காவல் தெய்வங்கள் முறையும் அவர்களிடேயே இருந்து இருப்பது அவர்களின் இலக்கியங்கள் மூலம் புலனாகின்றது.
மேலும் சுமேரியர்கள் வழிப்பட்ட சில கடவுள்களின் பெயர்களை நாம் காணும் பொழுது அவை தமிழ் சொற்களை ஒத்து இருப்பதை நாம் அறிய முடிகின்றது...உதாரணம்...அணு (Anu),மருது க(Maruduk), நேர்கல், நின்கல், இன்னானா(Innaana)...!!!
ஆனால் மேலே நாம் கண்ட அந்த பெயர்கள் அனைத்தையும் விட ஒரு பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது....சுமேரியர்கள் வழிப்பட்ட ஒரு இளைய கடவுளின் பெயர் தான் அது...... தமுழ்(Tammuzh) - இது தான் அந்தக் கடவுளின் பெயர்!!!
தமுழ் இளைஞனாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். அவனுக்காக சுமேரியர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நாம் தை திருநாள் கொண்டாடும் காலத்தினை ஒட்டியே அமைந்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...!!! தமிழ் நாட்டில் தமிழை பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டாடிய தமிழர்கள், சுமேரியாவில் தமிழை இளைஞனாக உருவகப்படுத்தி கொண்டாடி இருக்கின்றார்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. அந்த பெயரினைத் தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் மொழிப் பெயர்க்க அறியாது தமுழ் என மாற்றி விட்டார்கள் எனவே தமிழ் கடவுள்....தமுழ் கடவுளாக மாறி விட்டான் என்பதும் அவர்கள் கூற்று.
சரி...இப்பொழுது நாம் 'எல்' என்று வழங்கப்படும் கடவுளினை பற்றி சற்றுப் பார்ப்போம். இந்த 'எல்' என்னும் கடவுள் மலை மேல் வீற்று இருக்கும் கடவுள் என்று அறியப்படுகின்றார். மேலும் இலக்கியங்களில் 'எல் சடை (El Shaddai)' என்றும் எல்லோன் (Elyon) என்றும் குறிக்கப்பட்டு இருக்கின்றார். எல்லோன் என்னும் சொல்லும் தமிழ் சொல்லாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இந்தக் கடவுளைத் தான் சுமேரியர்கள் சமயமும் எபிரேயச் சமயமும் வழிப்பட்டு இருக்கின்றன...!!!
சரி...இப்பொழுது ஒரு கேள்வி...'எல்' என்ற இந்தக் கடவுளின் பெயரை நீங்கள் இதற்கு முன்னால் கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா.
என்ன இல்லையா???... கொஞ்சம் யோசிங்க... இன்னும் இல்லையா... சரி அப்படி என்றால் இந்தப் பெயர்களையாவது கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா... மைகேல் (Michael) ,தானியல் (Daniel) ,இசுமாயில் (ismael) ,இசுரேல் (Israel) ,ராபல் (Raphael)...!!!
கேள்விப்பட்டு இருக்கின்றீர்கள் தானே...!!!சரி நல்லது.
இப்பொழுது இன்னொருக் கேள்வி...அருள் முருகன், வேல் முருகன், பால கணேசன், செந்தில் குமரன் போன்றப் பெயர்களைக் கேள்விப் பட்டு இருக்கின்றீர்கள் தானே. இந்தப் பெயர்கள் மக்கள் தாங்கள் வழிப்படும் இறைவனின் பெயரை தங்களின் குழந்தைகளுக்கு வைத்து அழகுப் பார்த்தவை. இறைவனின் பெயரால் குழந்தைகளை அழைப்பது வழக்கம். நம்மிடையே இருக்கும் இந்தப் பழக்கம் சுமேரியர்களிடமும் இருந்து இருக்கின்றது...யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது. எனவே தான் 'எல்' என்று தாங்கள் வழிப்பட்ட இறைவனின் பெயரை வைத்தே தங்களின் குழந்தைகளுக்கு பெயர் இட்டு இருக்கின்றார்கள்.
மைகேல் (மை - கா - எல்) - மை என்பது கருப்பினைக் குறிக்கும் தமிழ் சொல். மேலும் அது உருவமற்ற என்ற அர்த்தத்தினையும் தரும். எனவே உருவமற்ற கடவுள் 'எல்' என்ற அர்த்தத்தில் மைக்கேல் என்ற பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.
இரப்பேல் (இறப் - எல்) - இறத்தல் என்னும் சொல் தணிப்பது அல்லது குறைப்பது என்னும் அர்த்தத்தினையும் தரும். எனவே மக்களின் பிணியினையும் கவலைகளையும் குறைக்கும் கடவுள் 'எல்' என்னும் பொருளில் இப்பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.
மேலும் விவிலியத்தில் ஆதாமின் மகனான அபெல் என்றப் பெயரினையும் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
அபெல் (ஆப் - எல்) - தந்தையாகிய எல் என்னும் கடவுள் என்பதே இந்தப் பெயரின் அர்த்தம் என்கின்றனர் அறிஞர்கள். தன்னுடைய தந்தையான கடவுளின் பெயரையே ஆதி மனிதன் தனது மகனுக்கு வைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.
எனவே எல் என்னும் சொல் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும் அது அறியப்படாத நிலையில் இருக்கின்றது. காரணம் அந்தச் சமயம் இன்று உலகில் இல்லை... யூத மதமும் சுமேரிய மதமும் அழிந்து அதன் இடத்தில கிருத்துவமும் இசுலாமும் வளர்ந்து இருக்கின்றன. யூதப் பெயர்களும் சுமேரியப் பெயர்களும் கிருத்துவப் பெயர்களாகவும் இசுலாமியப் பெயர்களாகவும் மாறி இருக்கின்றன.
ஆனால் என்ன தான் மாறினாலும் சில வழக்கங்கள் மாறவில்லை... அவை கிருத்துவத்தையும் இசுலாமையும் தமிழுடன் இணைத்து கொண்டுத் தான் இருக்கின்றன...!!!
அவை என்ன... காண்போம்!!!!
கிருத்துவம் அழைக்கின்றது...!!!!
முந்தைய பதிவுகள் :
1 |
2 | 3 |
4 |
5 |
6 |
7 | 8 |
9 |
10 |
11 |
12 |
13|
14 |
15 |
16 |
17 |
18 |
பி.கு:
இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய மொழி அறிஞர் ம.சோ.விக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருடைய நூல்கள் தமிழர் சமயமும் , குமரிக்கண்டமும் தான் இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய நூல்கள்.