நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்…
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’
பசுடோர் நிமொல்லெர் என்னும் செர்மானிய சிந்தனையாளரின் ‘First they came for the jews’ என்னும் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பே இது. ஹிட்லரின் காலத்தில் ஒரு ‘சராசரி’ மனிதனைப் பற்றிய கவிதை. அவன் எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை. காரணம் பயம்…சுயநலம்…அறியாமை என்று எதை வேண்டும் என்றாலும் கொள்ளலாம். அவன் அவ்வாறே இருந்து விட்டால் அவனுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய உலகத்திற்கும் எந்த தீங்கும் வந்து விடாது என்றே அவன் நம்பினான். அந்த நம்பிக்கையிலையே அவன் குருடனாய் நாட்களை கடத்துகின்றான். ஆனால் பயங்கரமான போர் நடந்துக் கொண்டு இருக்கும் போர்க்களத்திலே கண்களை மூடிக் கொள்வதால் மட்டுமே குண்டுகள் நம்மைத் தாக்காது சென்று விடுமா என்ன? அதே போல் அவன் எந்த அநியாயம் தனக்கு நேராது என்று நம்பிக்கொண்டு இருந்தானோ அதே அநியாயம் அவனுக்கு நேரும் பொழுது அவனுக்கு ஆதரவான குரலுக்காக சுற்றியும் அலைகின்றான். ஆனால் பாவம்…புதைக்கப்பட்டவர்கள் பேச மாட்டார்கள் என்பதனை அவன் அறியும் காலமும் வருகின்றது. ‘ஐயகோ…நான் என்று அடுத்தவர்களுக்காக வாய் திறக்க மறுத்தேனோ அன்றே நான் புதைக்கப்பட்டு விட்டேனே… அன்று வராத வார்த்தை இன்று நிச்சயம் பயனில்லை’ என்றவாறே அவனின் முடிவை நோக்கி செல்கின்றான்.
இன்று நம்முடைய நிலையும் அது தான். நம்மை சுற்றிக் கொண்டும் நம்மை இயக்கி கொண்டும் இருக்கும் ஒரு மாபெரும் சதுரங்க ஆட்டத்தினை நாம் உணர மறுக்கின்றோம். அறியாமை சுகமாக இருக்கின்றது….ஆம் அதில் நாம் பயப்பட தேவை இல்லை. கெட்டதினை செய்ய மக்கள் பயந்தக் காலம் போய் இன்று நல்லதினை செய்ய பயப்படும் காலத்தில் அறியாமை நல்லதாக போய் விடுகின்றது. பயம் நம்மை ஆட்டுவிக்கின்றது. என் வாழ்க்கையினை மட்டும் நான் கண்டுக் கொண்டு இருந்தால் எந்த ஒரு பிரச்னையும் எனக்கு வாராது என்ற எண்ணதிலையே நாமும் குருடர்களாக மாறி விடுகின்றோம். சமுக அநீதிகளையும் அக்கிரமங்களையும் கண்டு ‘நம்மளால இத மாத்த முடியுமா…எல்லாம் அடுத்தவன் பார்த்துப்பான்’ என்றே கண் மூடிக் கொண்டு கடந்து விடுகின்றோம்….நாளை அந்த நஞ்சுச் செடிகள் நமது காலையும் சுற்றும் என்ற உண்மையினை அறியாது.
போதும் நண்பர்களே….!!!
பல கதைகள் கேட்டாயிற்று…பல தத்துவங்களும் கேட்டாயிற்று…!!!
நான்கு காளைகள் சேர்ந்து ஒரு சிங்கத்தினை வென்ற கதையும் சரி இன்ன பிற கதைகளும் சரி… இன்று வெறும் கதைகளாகவே போய் விட்டன. அவை சொல்லும் தத்துவங்களை நாம் மறந்து விட்டோம். இவ்வாறே சென்றால் நேற்று ஈழம்…இன்று கூடங்குளம்…நாளை உங்கள் வீடாகவும் இருக்கலாம்!!! உணருவோம்…பயம்தனை விடுத்து நம் உரிமைக்காகவும் உண்மைக்காகவும் அச்சமின்றி குரல் கொடுக்க முயல்வோம். என்றோ முடியப் போகும் நம் வாழ்வுக்கு சற்று அர்த்தம் தர பார்ப்போமே. நம் வாழ்வு பல ஊமைகளுக்கு குரலாகவும், இருட்டில் தவிப்போருக்கு விடியலாகவும் இருக்கட்டுமே. அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்ல சமூகத்தினை விட்டு செல்ல தான் எத்தனிப்போமே!!!
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்பதனை உணர்வோமே!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக