சனி, 25 பிப்ரவரி, 2012

மேசொபோடமியர்கள் தமிழர்களா -ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-18

மேசொபோடோமியா...!!!

இன்றைய ஈராக், துருக்கி,சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதி. டைகிரிசு மற்றும் யுபிரடுசு ஆகிய நதிகளின் இடையில் அமைந்த ஒரு வளமான பிரதேசம்.

சுமேரிய நாகரீகம்...பாபிலோனிய நாகரீகம் போன்ற உலகின் தலை சிறந்த நாகரீகங்கள் செழித்து விளங்கிய ஒரு இடம். எனவே தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் முதலில் மேசொபோடோமியாவினை 'மனித நாகரீகத்தின் தொட்டில்' என்று கூறினர். இங்கிருந்து தான் உலகின் பல்வேறு நாகரீகங்கள் தோன்ற தலைப்பட்டன என்றும் அவர்கள் கருதினர்....சிந்து சமவெளி நாகரீகத்தினைக் அவர்கள் கண்டுப்பிடிக்கும் வரை!!! சிந்து சமவெளி நாகரீகம் ஆராய்ச்சியாளர்கள் அது வரை கொண்டு இருந்த கருத்தினை முற்றிலுமாக மாற்றிப் போட்டது.

"சரிங்க இருக்கட்டும்... அதான் அத பத்தியும் குமரிக்கண்டத்தைப் பத்தியும்  முன்னாடியே பாத்தாச்சில...இப்போ மேசொபோடோமியாவுக்கு வாங்க. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த ஒரு நாகரீகம் எப்படி இன்றும் தழைத்து இருக்கும் ஒரு நாகரீகத்தின் கிளையாக இருக்க முடியும்? மேசொபோடமியர்களை தமிழர்கள் என்று எவ்வாறு சொல்லுகின்றீர்கள்...அந்த கதைக்கு வாங்க" என்று கூறுகின்றீர்களா...சரி!!!

மேசொபோடமியர்கள் தமிழர்களா என்று நாம் காண்பதற்கு முன் மேசொபோடமியர்களைப் பற்றி சற்று அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

உண்மையில் மேசொபோடமியர்கள் யார் என்று ஒரு கேள்வி எழும்புமானால் அதற்குரிய விடை 'தெரியவில்லை!!!' என்றே ஆய்வாளர்களிடம் இருந்து வரும். பல்வேறு காலங்களில் பல்வேறு மக்கள் அங்கே வந்து பல நாகரீகங்களை உருவாக்கி விட்டு சென்று இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார்...எங்கிருந்து வந்தனர்...தெரியவில்லை. முதலில் சுமேரியர்...பின்னர் பாபிலோனியர் என்று பலர் அங்கே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் அவர்களின் தொடக்கம் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இந்நிலையில் தான் நாம் அவர்களது உலகின் தோற்றத்தினைப் பற்றிய நூலினை பற்றி ஆராய வேண்டியிருக்கின்றது.

என்ன...உலகத்தின் தோற்றம் பற்றி இன்னொரு நூலா என்று எண்ணுகின்றீர்களா?. ஒரு சின்ன திருத்தம். ஒரு நூல் அல்ல... இரு நூல்கள்!!!

ஈனும் -மா - எல் - இசு(Enuma-Elis) - எனப்படும் சுமேரிய இலக்கியமும்...
கில்காமேசு (GILGAMESH) - எனப்படும் மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் தான் அவை.

இந்த நூல்கள் தான் இது வரைக் கிடைக்கப்பெற்ற நூல்களிலேயே உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள். மேலும் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மாந்தனைப் பற்றியும் கூறுகின்றன. இங்கு தான் அறிவாளர்கள் குழம்புகின்றனர்.

ஏன் இந்த நூல்கள் வெள்ளத்தினைப் பற்றிக் கூற வேண்டும்?. மேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரை வெள்ளம் வந்ததுக்கான கூறுகளே இல்லையே. அதுவும் இவர்கள் கூறுவது போல உலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் இங்கே வந்து இருப்பதற்கு சாத்தியக் கூறுகளே கிடையாது...பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப் பேசுகின்றார்கள் - இது தான் ஆய்வாளர்களின் குழப்பம். இந்தக் கேள்விக்கு இன்றும் விடை தெரியாமல் அவர்கள் நிற்கின்றார்கள்...காரணம் இன்னும் அவர்கள் தமிழின் வழி அந்த கதைகளையும் நாகரீகங்களையும் நோக்க ஆரம்பிக்கவில்லை. சரி தவறில்லை... நாம் ஆரம்பிப்போம்...நமக்குத் தான் தமிழ் அறிந்த மொழி அறிஞர்கள் துணை இருக்கின்றார்களே.

முதலில் கில்காமேசு என்னும் இலக்கியத்தில் இருந்து ஆரம்பிப்போம். இக்கதையின் படி 'யா (Ea)' என்னும் கடவுள் 'ஆதப்பா (Adappa)' என்னும் மனிதனை படைக்கின்றான். அம்மனிதனை கடவுள் தன்மையுடைய ஒருவனாக மாற்ற 'யா' எத்தனித்த பொழுது 'ஆதப்பா' செய்த தவறால் அவன் அவ்வாயப்பினை இழக்கின்றான். பின்னர் மற்ற கடவுள்கள் உலகினை அழிக்க முடிவு செய்த பொழுது 'யா', 'ஊத்-நா-பிசுடம் (Ut. Na- Pishtim)' என்னும் ஒருவனை படகில் ஏற்றி அவனைக் காப்பாற்றுகின்றார். அவ்வாறு பிழைத்த அந்த மனிதனின் மூலம் மனித இனம் மீண்டும் தழைக்கின்றது.நிற்க.

இப்பொழுது விவிலியம் கூறும் உலகப் படைப்பின் கதையை ஒத்து இருக்கும் இந்த கதையில் நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.

முதல் மனிதனின் பெயர் - ஆதப்பா. இந்த பெயருக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று ஆராச்சியாளர்கள் கூறி கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்த பெயரினைப் பார்த்த உடன் நமக்கு பொருள் விளங்கி இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.

ஆதப்பா - ஆதி அப்பா. உலகின் முதல் மனிதன் தானே அனைவருக்கும் அப்பா. எனவே தான் அவனை ஆதப்பா என்று அந்த இலக்கியம் கூறுகின்றது என்று நாம் கருதலாம்.

அடுத்து 'ஊத்-நா-பிசுடம்' என்றப் பெயரினை நாம் காண வேண்டி இருக்கின்றது. கதையின் படி இறைவனின் எண்ணப்படி படகின் மூலம் பிழைத்தவன் இவன் என்று அறிய வருகின்றோம். ஆனால்  நாம் முன்னர் 'நோவா' வினைக் கண்டது போல் இதுவும் ஒரு காரணிப் பெயரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஊத்-நா-பிசுடம் என்ற சொல் 'ஊற்று -நாவி - பித்தன்' என்றச் சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். 'ஊற்றும் நாவியும்' வெள்ளத்தினையும் படகினையும் குறிக்கும் சொல்லாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் 'ஊத்-நா-பிசுடம்' என்பவன் 'சூர்பாக்(Shurpak)' என்னும் ஒரு ஊரில் இருந்தவன் என்றும் அவ்வூர் ஆற்றங்கரைப் பக்கம் இருந்தது என்றக் குறிப்புகளும் கிடைக்கப்படுகின்றன. இதில் சூர்பாக் என்பது 'சூரிப் பாக்கம்' என்னும் பெயரின் திரிபே என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் அந்தக் கதைகளிலும் சரி மேசொபோடமியா வரலாற்றிலும் சரி காணப்படும் பல பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

உதாரணத்திற்கு, மேசொபோடமியாவின் மாபெரும் நகரங்களின் பெயர்கள் இதோ... 'ஊர் (Ur)'..'ஊருக்(Uruk)'...'உடு(Utu)' (விண்மீன்)'...'நிப்பூர்(Nippur)'...'மாரி(Mari)'...!!! இவை அனைத்தும் எம்மொழிப் பெயர்கள் என்று நாம் அறிவோம். ஆனால் தமிழினை அறியாதக் காரணத்தினால் இப்பெயர்களின் வேரினை அறியாது இன்னும் தவறான திசையில் ஆராய்ச்சிகளை மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றன.

'யா' என்னும் கடவுள் : மாந்தனைப் படைத்ததும் அவனை அழிவில் இருந்து காப்பாற்றியதும் 'யா' என்னும் கடவுளே என்றே மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியம் கூறுகின்றது. இந்தக் கடவுளை நீர் நிலையினைச் சேர்ந்தக் கடவுளாகவே அந்த இலக்கியம் சிறப்பிக்கின்றது. பத்தி மனிதன், பாதி மீன் என்றவாறே 'யா' போற்றுவிக்கப் பட்டு இருக்கின்றார். வெள்ளத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிய கடவுளை மக்கள் நீரின் வடிவில் கண்டனர் என்றும் நாம் இங்கே கருத வாய்ப்பு இருக்கின்றது. மேலும் குமரிக்கண்டத்தினை ஆண்ட பாண்டியனின் சின்னமும் 'மீன்' என்பதினை நாம் இங்கே நினைவுக் கூற வேண்டி இருக்கின்றது. மேலும் 'யா' என்னும் சொல் தமிழ் சொல்லே என்பதும் கவனிக்கத்தக்கது.

சரி... மேசொபோடமிய கதையினைக் கண்டாயிற்று... அடுத்து சுமேரியக் கதை என்ன கூறுகின்றது என்பதனையும்...அக்கதைகள் கொண்டாடும் கடவுள்களையும்....அக்கதைகளின் உண்மையான வரலாற்றினையும் இனி காண்போம்....

'ஈனும் -மா - எல் - இசு' வின்  பக்கங்கள் காத்து இருக்கின்றன...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 

பி.கு:

இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய மொழி அறிஞர் ம.சோ.விக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருடைய நூல்கள் தமிழர் சமயமும் , குமரிக்கண்டமும் தான் இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய நூல்கள்.

வியாழன், 26 ஜனவரி, 2012

இந்த நாடும்… நாட்டு மக்களும்…

தவறினைக் கண்டிக்காமல் இருப்பதும் குற்றம். நல்ல செயல்களை ஆதரிக்காது இருப்பதும் குற்றம்.

ஒரு நாட்டின் மக்கள் எப்பொழுது மேலே உள்ளக் குற்றங்களை தங்களது மனம் உறுத்தாமல் செய்யத் தொடங்குகின்றனரோ அன்று அந்த நாடு தனது அழிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றது. அது எப்பேர்ப்பட்ட நாடாக இருந்தாலும் சரி இந்த விதியிலிருந்து அது தப்புவதில்லை. அந்த நிலையில் அது மக்கள் வாழும் நாடு என்னும் நிலையில் இருந்து மாறி மாக்கள் வாழும் காடு என்ற நிலைக்கு தாழ்ந்து விடுகின்றது.

இன்றைக்கு தமிழகமும் சரி இந்தியாவும் சரி இத்தகைய இக்கட்டான மாற்ற நிலையிலையே உள்ளன. காரணம் பெருன்பான்மையான மக்கள் சிந்திப்பது இல்லை…சிலர் சிந்திக்க முயன்றாலும் அவர்கள் சிந்திக்க விடப்படுவதில்லை. மனதை மயக்கி அறிவினை தாழ்த்தும் மாயை வலையினுள் அவர்கள் சிறு வயது முதலிலேயே சிக்க வைக்கப் படுகின்றனர். அறியாமையே அறிவாக அவர்களுக்கு புகட்டப்படுகின்றது.

இதனால் தான் இன்று இந்தியாவில் சிலர் தவறுகள் செய்கின்றனர். ஒரு சிலர் தவறினை எதிர்த்து போராடுகின்றனர். பலர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். வாழ்கையே அவர்களுக்கு வேடிக்கையாக போய் விடுகின்றது. சில நேரம் பயம் அவர்களை எந்த முடிவும் எடுக்க விடாது தடுக்கின்றது… சில நேரம் சுயநலம்.. பல நேரம் அறியாமை.

பிரச்சனை அந்த வேடிக்கை பார்ப்பவர்களால் தான். இவர்கள் களம் இறங்காததினால் தான் இன்று பல பிரச்சனைகள் முடிவுறாது தொடர்ந்து பிரச்சனைகளாகவே இருந்துக் கொண்டு வருகின்றன. நாட்டின் பிரச்சனைகளை பிறரின் பிரச்சனைகளாகவே பார்க்க கற்றுக் கொண்டு விட்டனர். அடுத்தவனின் வலி இவர்களுக்கு புலப்படுவதில்லை. தாங்கள் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும், உடுத்தும் உடையிலும், செய்யும் தொழிலிலும் அரசியல் கலந்து இருப்பதனை அறியாது, அரசியல் ஒரு சாக்கடை என்றுக் கூறி மேலும் தங்களின் அறியாமையை பெருக்கிக் கொள்கின்றனர்.

தவறுகள் செய்பவர்களுக்கு இது தான் வேண்டும்… பெருவாரியான மக்களின் மௌனம் தான் வேண்டும்!!! அவர்கள் மௌனமாய் இருக்கும் வரை இவர்கள் தாராளமாய் தவறுகள் செய்யலாம். பதவியும் பலமும் இவர்கள் கையில். இந்நிலை இருக்கும் வரை இவர்களை எந்தப் போராட்டமும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் போராட்டக்காரார்கள் நிலை தான் பாவம். இவர்கள் போராடுவது அந்த பெருன்பான்மையான மக்களுக்காகவே. ஆனால் அநேக நேரங்களில் அம்மக்களால் இவர்கள் விரோதிகளாகவே பார்க்கப் படுகின்றனர். காரணம் அவ்வாறே இவர்கள் ஊடகங்களால் முன்னிருதப்படுகின்றனர். ஊடகங்களை மட்டுமே நம்பும் பெருன்பான்மையான மனிதர்களும் இவர்களையும் இவர்களின் போராட்டங்களையும் தேச விரோதச் செயல்களாகவே பார்க்க தலைப்படுகின்றனர்…. உண்மை எங்கோ நடுவில் புதைக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாடு அழிவுப் பாதையில் செல்ல ஆரம்பிக்கின்றது.

நண்பர்களே…!!!

நம்முடைய நாடும் இன்று அழிவுப்பாதையில் சென்றுக் கொண்டு இருக்கின்றது. காரணமாய் பல காரணிகள்!!! ஆனால் முக்கியமான காரணி நம்முடைய மௌனம் மற்றும் அறியாமை. இவை இரண்டும் இருக்கும் வரை நாமும் சரி நம்முடைய நாடும் சரி உண்மையான முன்னேற்றத்தினை அடையப் போவதில்லை.

நாம் நம்முடைய நாட்டினை உண்மையிலையே நேசித்தோம் என்றால் முதலில் நம் நாடு சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அறிந்துக் கொண்டு பின்னர் அப்பிரச்சனைகளை களைவதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

தவறென்றால் எதிர்த்து குரல் கொடுப்போம்.

சரி என்றால் ஆதரித்து குரல் கொடுப்போம்.

மொத்தத்தில் குரல் கொடுப்போம். மெளனமாக மட்டும் இருக்க வேண்டாம்… ஒரு காலம் நாம் மெளனமாக இருக்க வேண்டிய காலம் வரும்… அன்று மெளனமாக திகழலாம். அது வரையிலாவது குரல் கொடுப்போமே. நம் அடுத்த தலைமுறையினருக்கு அமைதியான நல்ல உலகினை விட்டு செல்வதற்கு நம்மால் ஆவன செய்வோமே!!!

முதலில் நாம் இப்பொழுது சந்தித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளை பற்றி அறிந்துக் கொள்வோம். இன்று நாளிதழ்களிலும் சரி… தொலைக்காட்சிகளிலும் சரி விவாதப் பொருளாக இருப்பது கூடங்குளம் போராட்டம் தான்.

சிலர் இத்திட்டம் நாட்டிற்க்கு நல்லது என்கின்றார்கள்… சிலர் அதை எதிர்த்து போராடுகின்றார்கள். இதில் யார் சொல்வது உண்மை என்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. ஏற்கனவே கூடங்குளப் போராட்டத்தினைப் பற்றி ஒரு இணையப் பக்கத்தினை பகிர்ந்து இருந்தேன். ஆனால் அப்பக்கத்தினை எத்தனைப் பேர் கண்டு இருப்பீர் என்று தெரியவில்லை. எனவே ’கீற்று’ இணையத்தில் வெளிவந்த அந்தப் பதிவின் சில பகுதிகளை இப்பக்கத்தில் இணைக்கின்றேன்.

படியுங்கள்… உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள்… சேர்ந்தே விடை தேடுவோம். அறியாமையில் மட்டும் இனி இருக்க வேண்டாம் நண்பர்களே.

அந்தப் பதிவினை முழுதாகப் படிக்க இந்த இணைப்பை பாருங்கள்.

********************************************************************************************** 
இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?
இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?
************************************************************************************************* 
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!
‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?
23)            அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.
  • அணு மின்சாரம் மலிவானது.
  • கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
  • அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
  • நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
  • யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா? 
முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:
ð  அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)
ð  அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.
ð  அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?
ð  நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்? 
2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
ð  இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?
ð  அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?
ð  மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன? 
3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ð  கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?
ð  அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.
ð  இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?
ð  அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்? 
4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
ð  ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?
ð  ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)
ð  ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?
ð  ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?
ð  புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606
5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
ð  இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
ð  ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!
ð  செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).
ð  செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது. 
6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.
ð  செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?
ð  யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!
ð  யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்? 
**************************************************************************************************** 
அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா? 
******************************************************************************************************* 
நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?
புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)
**************************************************************************************************** 
சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?
மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது. 
****************************************************************************************************** 
சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?
ð  தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.
ð  தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð  இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
ð  ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.
ð  நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.
ð  தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.
ð  இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.
நன்றி..!!!

வெள்ளி, 6 ஜனவரி, 2012

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-17

சென்ற பதிவில் சித்தர்கள் ஆரியர்களை எதிர்த்தார்கள் என்றுக் கண்டு இருந்தோம். அவ்விடயதினைப் பற்றி விரிவாக நாம் பார்க்க இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று...









"பேர்கொண்ட பார்ப்பான் பிறான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே” (திருமந்திரம்-519)
மேலே உள்ள திருமந்திரப் பாடலில் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பானை' அர்ச்சித்தால், அதாவது அவர்களின் பேச்சினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் தீங்கு வரும் என்றுக் கூறுகின்றார். எளிதான பாடல் தான். ஆனால் இங்கே திருமூலர் யாரையோ 'பேர் கொண்ட பார்ப்பான்' என்று குறிப்பிடுகின்றார். 'பார்ப்பான்' என்ற பெயர் நமக்குத் தெரியும் ... ஆனால் யார் அது 'பேர்க் கொண்ட பார்ப்பான்'. சற்று பார்ப்போம்...

'பார்ப்பான்' 'அந்தணர்' மற்றும் 'ஐயர்' போன்ற சொற்கள் எல்லாம் தூய தமிழ் சொற்கள். இவை இறை பணி செய்பவரையும் அறநெறிப்படி வாழ்பவரையும் குறிக்கும் மதிப்பு மிக்க சொற்கள். ஆனால் காலத்தில் ஆரியர்கள் தமிழ் மக்களுடன் கலந்து, அவர்களது வேத நெறிக் கொள்கையினைப் பரப்பி மக்களை ஏமாற்றி பார்ப்பான், அந்தணர் மற்றும் ஐயர் ஆகிய பெயர்களுக்குள் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே தூய தமிழ் பெயர்களான அந்தச் சொற்கள் இப்பொழுது பிராமணர்களைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டதால் தான் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பான்' என்கின்றார். ஏனெனில் பார்ப்பான் என்றப் பெயரில் பிராமணர்கள் சமுகத்தில் நுழைந்து அவர்களின் வேத நெறிக் கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருந்தனர். எனவே அவர்களின் சொல்லினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் கேடு என்று தான் சொல்லவந்த கருத்தினை திருமூலர் கூறுகின்றார்.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ. - சிவவாக்கியர்


இறைவனை புரிந்துக் கொள்ளாது மந்திரங்கள் சொல்வதும் கல்லுக்கு பூக்கள் சூடி பூசை செய்வதும் பலனில்லை என்ற மேலே உள்ள சிவவாக்கியரின் இந்தப் பாடலும் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையினை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் சித்தர்கள் எவ்வளவு முயன்றும் ஆரியர்களின் செல்வாக்கினை சரிக்க இயலவில்லை.


காரணம்...ஆரியர்களின் அரசியல் செல்வாக்கு. காலத்தில் அரசியலும் மதங்களும் ஒன்றாகக் கைகோர்ப்பதை நாம் வரலாறு எங்கிலும் கண்டு வந்து இருக்கின்றோம். தான் ஆட்சியில் இருக்க மதத்தினை ஆயுதமாக பயன்படுத்திய அரசர்கள் பற்றியும் நாம் கண்டு இருக்கின்றோம்... கிருத்துவத்திற்கு எப்படி ஒரு கோன்சன்டைன் மன்னனோ, அவ்வாறே ஆரியர்களுக்கும் சில மன்னர்கள் இங்கே துணைப்போகின்றனர்...பதவிக்காக...பொன்னிற்காக.. மேலும் பல காரணங்களுக்காக!!!
இந்த நிலையில் தான் "அரசியல் செல்வாக்கும் இருக்கின்றது...சமயங்களும் நம் கையில் இருக்கின்றன. ஆனால் இந்தச் சித்தர்கள் மட்டும் தொல்லைக் குடுத்தவாறே இருக்கின்றனரே.இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்" என்று எண்ணி அரசர்களின் உதவியோடு சித்தர்களை வேட்டையாட ஆரியர்கள் ஆரம்பிக்கின்றனர்.


சித்தர்கள் காடுகளுக்கு துரத்தப்படுகின்றனர். காட்டினில் குகைகளில் அவர்கள் பதுங்குகின்றனர். ஆனால் ஆரியர்களுக்கு அதுவும் பொறுக்கவில்லை.

"நம்முடைய கருத்திற்கு மறுக் கருத்தினை சொல்பவன் எவ்வாறு உயிரோடிருக்கலாம்?... தவறாயிற்றே... கொல் அவர்களை...குகையில் பதுங்கி இருந்தார்கள் என்றால் அந்த குகையுடன் சேர்த்தே அவர்களுக்கு சமாதியினை கட்டுங்கள்... அவர்கள் கடவுளின் எதிரிகள்" என்றவாறே குகையில் பதுங்கி இருந்த சித்தர்களை குகையில் வைத்தே கொல்லவும் செய்கின்றனர். சித்தர்கள் இருக்கக் கூடும் என்று எண்ணப்பட்ட குகைகள் எல்லாம் இடிக்கப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் இந்த நிகழ்வுகள் குகை இடிக் கலகம் என்றே வழங்கப்பெறுகின்றது. இதன் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு. சித்தர்கள் தலைமறைவாகின்றனர். ஆரியர்கள் கேள்விக்கேட்பார் இன்றி மேன்மையினை அடைகின்றனர். பல சித்தர்கள் பாடல்களும் தமிழ் பாடல்களும் அழிக்கப்படுகின்றன.
இந்தக் காலத்திலும் கோவிலில் தமிழே அர்ச்சனை மொழியாக இருக்கின்றது. தமிழ் பாடல்களே இசைக்கப்படுகின்றன. காரணம் இன்னும் சைவக் கோவிலிலும் வைணவக் கோவிலிலும் தமிழர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.
சைவக் கோவில்களில் பூசாரிகளாக பறையர்கள் இருக்கின்றனர். வைணவக் கோவிலில் பாணர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இந்த நிலை வெகுக் காலம் நீடிக்க வில்லை. சிதம்பரத்தில் பறையர்களை துரத்தி விட்டு தீட்சிதர்கள் நுழைய அதை எதிர்கின்றார் இறுதி நாயன்மாரான நந்தனார். ஆனால் எதிர்ப்பு பயன் தராது போகவே இறுதியில் நந்தனார் கொலை செய்யப்படுகின்றார். முக்தி அடைந்து விட்டார் என்று அவரின் சரித்திரமும் மூடப்படுகின்றது. இதைப்போலவே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் கொல்லப்பட்டார் என்பதே வரலாற்றுச் செய்தியாகும்.


இவ்வாறு இறுதி நாயன்மாரும் ஆழ்வாரும் காலமாக, எவ்வித எதிர்ப்பும் இன்றி கோயிலுள் அரச மரியாதையுடன் சமசுகிருதம் நுழைகின்றது. தமிழ் வெளியேற்றப்படுகின்றது. சைவ வைணவ மதங்கள் முழுமையாக ஆரியர்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன.வேத நெறியினை போற்றும் நூல்களே முதன்மையாக வைக்கப்படுகின்றன. அவற்றினை முன்வைத்தே கதைகள் பல இயற்றப்படுகின்றன. சாதிப் பிரிவுகள் சமுகத்தின் வேர்களாக ஆக்கப் படுகின்றன.பிரித்தாளும் சூழ்ச்சி நடைமுறைப் படுத்தப்படுகின்றது. சாதிகளுக்கும் சாதிகள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் பிரிக்கப்படுகின்றனர்.

பிரிக்கப்பட்டவர்களுக்குள் வன்மம் விதைக்கப்படுகின்றது. பகை உணர்ச்சிகளும் தான். அவற்றின் இடையே உண்மையான கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. திசை மாறிய ஒரு சமுகம் மலரத் தொடங்குகின்றது.


அன்று வெளியேறிய தமிழ் இன்று வரை வெளியிலேயே காத்துக் கொண்டு நிற்கின்றது. தேவாரமும் திருவாசகமும் இசைக்கப் பட்ட இடங்களில் இன்று புரியாத மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

பின்னர் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் இந்த இழிநிலை மாறவில்லை. முகமதியர்கள் வந்தாலும் சரி...ஆங்கிலேயர்கள் வந்தாலும் சரி...தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். காரணம் - அது அவர்களின் இறைவன் வகுத்தது... வேதம் அவ்வாறு தான் சொல்கின்றது. இதை மாற்ற யாருக்கும் உரிமைக் கிடையாது. மக்கள் அவர்களின் அவலங்களுக்குரிய காரணத்தினை அறியாமலேயே காலத்தினை நகர்த்திச் செல்கின்றனர்.


'ஏன்' என்றுக் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை... ஏனென்றால் வேதமும் மனு தர்மமும் அதைத் தான் போதிக்கின்றன. கேள்விக் கேட்பது இறைக் குற்றம். 'எங்கே வேதம் அவ்வாறு சொல்கின்றதா...அவற்றைக் காட்டுங்கள் நாங்கள் பார்கின்றோம்' என்றால் அவற்றை அவர்கள் பார்க்க முடியாது... படிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். மேலும் உண்மையினை கூறும் நூல்கள் பலவும் மறைக்கப்பட்டு இருந்தன. எனவே படிக்கவும் முடியாது... அவ்வாறு படிக்க எண்ணினாலும் உண்மையானக் கருத்துக்களை படிக்க இயலாது என்ற நிலையில் அறியாமையிலையே மக்கள் அடிமையாக காலத்தினை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.


மக்களின் அந்த நிலை ஆங்கிலேயர்களின் வருகையினால் மேலும் மோசமாகின்றது. மனுதர்ம சாசுத்திரம் ஆங்கிலேயர்களால் இந்து சமய மக்களுக்கு உரிய சட்டமாக ஆக்கப்படுகின்றது. (இதைப் பற்றி முதல் பதிவில் பார்த்து இருக்கின்றோம்). பின்னர் பெரியார் வருகின்றார்...அம்பேத்கர் வருகின்றார்... மக்களுக்குரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்து நடந்தவை... நடந்துக் கொண்டு இருப்பவை பற்றி நாம் அறிவோம். போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

சரி இந்து சமயத்தினைப் பற்றி ஓரளவு பார்த்தாயிற்று. எவ்வாறு தமிழகத்தில் தோன்றிய ஒரு இயக்கம் தமிழினை அடிமைப்படுத்த பயன்பட்டது என்பதினையும் கண்டாயிற்று.

ஆனால் இந்த விடயங்களைக் கொண்டு உலகின் முதல் மனிதன் தமிழன் என்று நாம் கூற முடியாது. உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதினைக் காண நாம் சிந்து சமவெளியில் இருந்து சற்று மேற்கே பயணிக்க வேண்டும்.
எவ்வாறு சிந்து சமவெளிக்கு கீழே வந்து இந்து சமயத்தினைப் பற்றிப் பார்த்தோமோ அதேப்போல் நாம் இப்பொழுது சற்று மேற்கே சென்று சுமேரியர்களையும் மெசொபோடமியர்களையும் அப்படியே கிருத்துவம் மற்றும் இசுலாமிய மதங்களையும் கண்டு கொண்டு வர வேண்டி இருக்கின்றது.


உலகின் முதல் மனிதர்கள் தமிழர்களா?.... என்ன சொல்லுகின்றனர் சுமேரியர்கள்...காணலாம்... அடுத்தப் பதிவில்..!!!

பயணம் தொடரும்...

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-16

கி.பி ஏழாம் நூற்றாண்டில் வடக்கே ஆர்ய வர்த்தம் நிலைப்பெற்ற அதே காலக் கட்டத்தில் தெற்கிலேயும் சைவ வைணவ சமயங்களின் வாயிலாக ஆரிய வேள்வி நெறிகள் வளரத் தொடங்கின.

சமணம் மற்றும் புத்த சமயங்களை தனித்து எதிர்க்க திராணி இல்லாது வலுவிழந்திருந்த வேத நெறிக் கருத்துக்கள், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் வளர்ச்சியோடு இலைமறைக் காயாய் மீண்டும் வளர ஆரம்பித்தன. சைவ வைணவக் கருத்துக்களுடன் வேள்வி நெறிக் கருத்துக்கள் இணைக்கப்பட்டன. இணைத்தே பரப்பவும் பட்டன. வேத நெறிக் கருத்துக்கள் இருந்தமையால் வடக்கேயும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் தோன்றிய இலக்கியங்கள் சமசுகிருதத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வடக்கேயும் பரப்பப் படுகின்றன.

வெகு விரைவில் சைவ வைணவக் கொள்கைகள் வேறு... ஆரிய
வேள்விக் கொள்கைகள் வேறு என்ற நிலை மறைந்து இரண்டுக் கொள்கைகளும் ஒன்றே என்ற நிலை தோன்றலாயிற்று.இந்நிலையில் தமிழர்கள் பின் தள்ளப்படுகின்றனர்...ஆரியர்கள் செல்வாக்கினைப் பெற ஆரம்பிக்கின்றனர்.

"மேன்மையான நிலைக்கு வந்தாயிற்று...நல்லது!!! ஆனால் இந்த நிலை நிரந்தரமல்ல. இப்பொழுதே சில கேள்விகள் நம்முடைய கொள்கைகளைப் பற்றி எழுகின்றன. எனவே நம் நிலை எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறலாம்...ஆனால் மாறக் கூடாது. நாம் உயர்ந்தவர்கள். உயர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி..!!!" என்று ஆரியர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த வழி அவர்களின் கண்ணுக்குப் புலனாகின்றது.

'பிறவி சுழற்சிக் கொள்கை - செய்யும் செயலினைப் பொறுத்தே பிறவிகள்' என்ற புத்த சமணத் தத்துவமே அந்த வழி.

என்ன புத்த சமணத் தத்துவமா?... அச்சமயங்கள் தான் தங்கள் செல்வாக்கினை இழந்து விட்டனவே... பின் எவ்வாறு அவற்றின் கொள்கைகள் இவர்களுக்கு உதவி இருக்க கூடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்பக் கூடும்.

உண்மைதான்... புத்தமும் சமணமும் தங்களின் செல்வாக்கினை இழந்து தான் இருந்தன. ஆனால் அவற்றின் மறுப்பிறவிக் கொள்கை மட்டும் மக்களிடம் அதன் செல்வாக்கினை இழக்காது நின்று இருந்தது. கடவுள் இல்லை என்ற நிலை கடந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலை வந்தும் மக்கள் மறு பிறவிகளில் நம்பிக்கையினை கொண்டு தான் இருந்தனர்.

அந்த நம்பிக்கை தான் ஆரியர்களுக்கு அவர்கள் தேடிய வழியாய் அமைந்தது. அவ்வழியினை அமைத்துத் தந்தவர் தாம் ஆதி சங்கரர்.

"நாம் உயர்ந்தவர்கள்... ஆனால் எதனால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்றுக் கேட்டால் என்ன சொல்வது... அறிவு, பண்பு, வீரம் மற்றும் பொருள் போன்றக் காரணிகளால் நாம் உயர்ந்தவர் என்றுக் கூறினால் அவற்றில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருக்கின்றனர்... அப்பொழுது அவர்களும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்... நம்முடைய மேன்மை அப்பொழுது கேள்விக்குறி ஆக்கப்படும்...!!! ஆனால் நம்முடைய மேன்மை கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அதற்கு மேன்மை நம் பிறப்பில் இருக்க வேண்டும். நான் பிறப்பால் உயர்ந்தவன்... நீ உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றால் என் இனத்தில் பிறந்து இருக்க வேண்டும்...இல்லையெனில் மன்னித்துக் கொள் நீ என்னை விடத் தாழ்ந்தவன் தான்...!!! ஆம்..!!! இது தான் சரி... நம் மேன்மையை யாரும் கேள்விக் கேட்காதிருக்க இது தான் சரியான வழி" என்றவாறே 'பிறவிச் சுழற்சிக் கொள்கையினை' தங்களின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். மாற்றிக் கொள்ள ஆரம்பித்தக் காலாம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு.

"நீ முற்பிறவியில் செய்த செயலின் காரணமாகத் தான் இப்பிறவி. சென்றப் பிறவியில் பல நன்மைகள் செய்து இருந்தால் பிராமணனாகப் பிறப்பாய்... இல்லையெனில் செய்த பாவத்திற்கேற்ப பிறப்பாய்... சத்திரியனாய்... அல்லது வைசியனாய்... அல்லது சூத்திரனாய். இதுவே இறைவனின் நியதி"என்பதே அந்தக் கருத்து. மக்களை பிறப்பிலேயே பிரிக்கும் இந்தக் கருத்து அப்போதைய அரசியல் சூழ்நிலைகளால் நசுக்கப்படாது வளர்க்கப்படுகின்றது. இறைவன் பெயரினைச் சொல்லி மக்கள் தாழ்த்தப்படுகின்றனர். மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தோன்றிய சைவ வைணவத் தத்துவங்கள் ஆரியர்களால் திசை மாற்றப்படுகின்றன.

ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள நல்லதொருக் காலக்கட்டமும் அமைகின்றது. அது வரை இருந்த பல விடயங்களுக்கு அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன.

ஆரியர்களின் சட்ட நூலாக இருந்த மனு தர்மம், மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சாசுத்திரமாக மாற்றப் படுகின்றது. பிராமணர்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமும் மாற்றப்பட்டு ஒரு புது பிரிவு உருவாக்கப்படுகின்றது.

சிவனைக் வணங்குபவர் - சைவர்.
பெருமாளை வணங்குபவர் - வைணவர். என்ற இந்த இரு மக்கள் பிரிவுகளுக்குள் புதிதாய், 'பிராமணன்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மாற்றப்பட்டு ஒரு புதிய பிரிவு உருவாகின்றது.
பிராமணன் - நான் பிரமன்.. அதாவது 'நான் கடவுள் (அகம் பிரமாச்மி)' என்றப் பொருள் கொண்ட பிரிவே அது.

இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப புராணக் கதைகளும் மாற்றப்படுகின்றன. இவை அனைத்தினையும் செய்தவர் ஆதி சங்கரர். இந்தக் கொள்கையினை பரப்ப அவர் ஆரம்பித்த மடங்கள் தான் இன்றைய சங்கர மடங்கள்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆரியர்களுக்கு உதவிய தமிழர்கள் சற்சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்களே இன்றைய உயர்சாதியினர்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாது ஆரியர்களை எதிர்த்த தமிழர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இன்றைய தாழ்த்தப்பட்டோர் இவர்கள் தாம்.

மற்ற தமிழர்கள் எல்லாம் சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்கள் தான் இன்றைய பிற்படுத்தப்பட்டோர்.

மலைக்கு தப்பி ஓடியவர்கள் மலைவாழ் சாதியினராயினர்.

இந்த நிலையில் ஒரு கேள்வி எழலாம்...!!! 'இவர்கள் இவ்வளவு மாற்றங்கள் செய்து இருக்கின்றார்களே... இதனைக் கண்டித்து தமிழகத்தில் ஒருக் கேள்விக் கூட எழவில்லையா' என்று நீங்கள் கேட்கலாம்.

கேள்விகள் எழத்தான் செய்தன... மாற்றுக் கருத்துக்களும் வரத் தான் செய்தன. அந்த கேள்விகளை எழுப்பியவர்களுள் முக்கியமானவர்கள் நம் சித்தர்கள். அதனாலையே அவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் கூறினர்.ஆனால் தமிழகத்தில் அன்று சமசுகிருதம் ஆட்சி மொழியாக இருந்தமையால் (பல்லவர் ஆட்சி காலம்) தமிழ் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. மேலும் அரசியல் செல்வாக்கினால் இந்தக் கருத்துக்கள் மக்களிடையே சென்றடையாது மறைக்கப்பட்டன. சில நூல்கள் அழிக்கப்பட்டன... சில கருத்துக்கள் மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட காரணிகளால் பல கருத்துக்கள் மக்களிடையே சேராது மறைக்கப்பட்டன.

ஒரு வேளை பல்லவர்களின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்திருக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் இன்று நமக்கு கிட்டாமலே போயிருக்கக் கூடும். ஆனால் தமிழகத்தின் பொற்காலமும் வருகின்றது சோழனின் வாயிலாக... இராசஇராச சோழனின் வாயிலாக!!!

தமிழின் அனைத்து இலக்கியங்களும் சமசுகிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமசுகிருதம் வளர்க்கப்பட்டுக் கொண்டு இருந்தக் காலக் கட்டத்தில், இராச இராச சோழனால் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு தமிழ் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது. கோவில்களில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். தமிழிலேயே இறைவனை வணங்குகின்றனர். தமிழ் பாடல்களே இசைக்கப் படுகின்றன. சித்தர் பாடல்கள் தொகுக்கப்படுகின்றன. சைவ வைணவ இலக்கியங்கள் முழுவதுமாக இயன்ற வரை தொகுக்கப்படுகின்றன.ஆரியர்களின் செல்வாக்கு தமிழகத்தில் குறைய ஆரம்பிக்கின்றது. தமிழ் மேன்மை அடைய ஆரம்பிக்கின்றது.

ஆனால் முழுமையான மேன்மை தமிழ் அடையவில்லை.ஏனெனில் சைவ வைணவ இலக்கியங்களைத் தொகுக்கும் பணியில் ஆரியர்களும் இருந்தனர.

பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி ஒரு ஆரியர். எனவே தான் சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்கள் பாடிய அவர் அப்பரைப் பற்றி ஒன்றே ஒன்றினை மட்டும் பாடி உள்ளார்.

அதேப் போல் 63 நாயன்மார்களைப் பற்றி பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் நூலில் பெறும் பகுதியை வேள்வி நெறிக் கருத்துக்களை வளர்த்த சம்பந்தருக்கே ஒதுக்கி உள்ளார்.

இது போன்ற செயல்களால் தமிழ் என்ன தான் வளர முயற்சித்தாலும் அதனுடன் இணைந்து இலைமறைக்காயாக வேள்வி நெறிக் கொள்கையும் ஆரியமும் வளர்ந்து கொண்டே வந்தன. முழுமையான வெற்றி கிட்டவில்லை என்றாலும் சோழனின் இந்த முயற்சிகள் காரணமாகத் தான் இன்று தமிழ் இன்னும் தனித் தன்மையுடன் இருக்கின்றது. இல்லையெனில் என்றோ சமசுகிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்ற கருத்தினை மறுப்பதற்கு நமக்கு விடயமே கிட்டாது போயிருக்க கூடும். ஆரியத்தினை எதிர்த்து உண்மையான நெறிகளைக் கூறிய சித்தர்களின் பாடல்களும் கிட்டாமலே போயிருக்க கூடும்.

என்ன ஆரியர்களை சித்தர்கள் எதிர்த்தார்களா?... வேள்வி நெறிகளையும் அவர்கள் எதிர்த்தார்களா என்று கேள்விக் கேட்கின்றீர்களா... அப்படி என்றால் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்றையும் சிவவாக்கியரின் பாடல் ஒன்றையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அடுத்தப் பதிவில் அவற்றினை பார்ப்போம்... அதனுடனே குகை இடிக்கலகம், கோவிலில் சமசுகிருத அர்ச்சனை போன்றவற்றினைப் பற்றியும் பார்ப்போம்.


முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15

சனி, 24 டிசம்பர், 2011

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-15

பக்தி இயக்கம்....!!!

சமணமும் பௌத்தமும் ஒருக் காலத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த மண்ணில் இன்று அவற்றின் சுவடே இல்லா வண்ணம் இருக்கும் நிலைக்கு வழிவகுத்த ஓர் இயக்கம்...!!! உண்மையினைச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய இந்தியாவின் இன்றைய நிலைக்கு -இந்து மதம் என்று நாம் இன்று கொண்டாடும் மதத்திற்கு அடிப்படைக் காரணியாக ஒரு இயக்கம் அமைந்து இருக்கும் என்றால் அது இந்த இயக்கம் தான்.

இவ்வியக்கம் இல்லை என்றால் சைவமும் இல்லை... வைணவமும் இல்லை... இந்தியா இன்னும் ஒரு சமணத் தேசமாகவோ அல்லது புத்த தேசமாகவோ இருந்திருக்கக் கூடும். ஆனால் ஏனோ தெரியவில்லை, இன்று இந்து சமயத்தின் பெருமைகளைப் பற்றிப் பறைசாற்றுவோர், அச்சமயத்தினை போற்றிப் பாதுகாத்து வளர்த்த இந்த இயக்கத்தினைப் பற்றிப் பெரிதும் கண்டுக் கொள்வதில்லை. அதைக் கண்டுக் கொள்ள அவர்களுக்குத் தேவையும் இல்லை.

ஆனால் இந்தியாவினுள் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைகள் எவ்வாறு புகுந்தன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள, கவனிப்பாரின்றி இந்திய வரலாற்றின் முக்கியப் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டு இருக்கும் இந்த இயக்கத்தினைப் பற்றி நாம் அறிந்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. ஏனெனில் மறைக்கப்பட்ட அந்தப் பக்கங்களில் தான் மறுக்கப்பட்ட நீதிகளும் உண்மைகளும் புதைந்துக் கிடக்கின்றன.

"கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை..." என்றுக் கூறிக் கொண்டு சமணத் துறவிகளும், கடவுளைப் பற்றி எதுவுமே சொல்லாது அன்பினை மட்டும் போதித்துக் கொண்டு புத்த துறவிகளும் சுற்றிக் கொண்டு இருந்த தமிழகத்தில் தான் "இறைவன் இல்லையா... என்னய்யா சொல்கின்றீர்... இதோ என் இறைவன் இங்கேயே இருக்கின்றானே... காணும் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற நிற்கின்றானே... அவ்வாறு இருக்கும் அவனை எவ்வாறையா இல்லை என்கின்றீர்" என்றவாறே கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் புத்த சமணக் கருத்துக்களுக்கு மாற்றாக உருவான எழுச்சி தான் இந்த பக்தி இயக்கம் என்று நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

இறைவன் இல்லை என்று அதுவரை சொல்லி வந்த மண்ணில் திடீர் என்று "இறைவன் இருக்கின்றான்...அவன் யாதுமாகி நிற்கின்றான்" போன்றக் கருத்துக்கள் பரவ ஆரம்பிக்கின்றன. ஆங்காங்கே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்ற ஆரம்பிக்கின்றனர். அவர்களின் கைப் பற்றி மெதுவாய் வைணவமும் சைவமும் வளர ஆரம்பிக்கின்றன.

தமிழ் மண்ணில் பக்தி மணம் கமிழ ஆரம்பிக்கின்றது. தெருவெங்கிலும் பக்திப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. மன்னர்கள் மாறுகின்றனர். மக்களும் மாறுகின்றனர். 'அன்பே சிவம்' என்று அன்பின் வழியில் மக்கள் இறைவனைக் காண முயல்கின்றனர். தமிழகம் சமணக் கோலத்தினைத் துறந்து சைவ வைணவக் கோலத்திற்கு மாற ஆரம்பிக்கின்றது.

நல்ல மாற்றம் தான்!!!.

ஆனால் அன்பினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் இறைவனை உணர வேண்டும்.... வாழ்வினை நல்வழியில் வாழ வேண்டும் என்பதற்காக ஆரம்பித்த இந்த எழுச்சியினை, சமணத்தினையும் புத்ததினையும் இந்த மண்ணை விட்டு நீக்குவதற்காகவும் மேலும் அச்சமயங்களால் தளர்ச்சி உற்றிருந்த தங்களது வேத நெறிக் கொள்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சில ஆரியர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்க, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த மாற்றம் தடுமாற ஆரம்பிக்கின்றது.

அந்தத் தடுமாற்றம் ஆரம்பிக்கும் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. ஆரம்பித்து வைப்பவர் திருஞானசம்பந்தர்!!!

"என்ன திருஞானசம்பந்தரா?... தேவாரம் இசைத்த சம்பந்தரையா சொல்லுகின்றீர்... சைவம் வளர்த்த அவரைப் பற்றி எப்படி ஐயா இவ்வாறு உங்களால் கூற முடிகின்றது..." என்றுக் கேட்கின்றீர்களா... ஒரு கணம் பொறுங்கள்... இதோ அவர் எழுதிய தேவாரத்தின் சில வரிகளைப் படியுங்கள்.

"பெண்ணகத்து எழில்சாக்கியயப் பேய் அமன் தென்ணாற் கற்பழிக்கத் திருவுள்ளமே"

மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.

"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும். இரண்டுக் கருத்துக்களும் முரண்பட்டு அல்லவா இருக்கின்றன. அப்படி என்றால் ஞானசம்பந்தர் வளர்த்தது என்ன?

"என்னங்க சொல்றீங்க... வரலாறு உங்களுக்குத் தெரியுமா... சமணர்கள் சைவர்களை என்னப்பாடு படுத்துனாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியுமா... திருநாவுக்கரசர் மீது மத யானையை ஏவி விட்டும், அவரை கடலில் தள்ளியும், மேலும் பல இன்னல்களும் தந்தனரே. அவர்கள் அச்செயல்களை சைவர்கள் மேல் புரிந்தப் பொழுது கோபத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பாடலைப் பாடி விட்டார். அதைப் போய் பெரிது படுத்துகின்றீர்களே" என்கின்றீர்களா. சரி அவ்வாறே வைத்துக் கொள்வோம்.

அப்படி சைவர்களை சமணர்கள் கொடுமைப்படுத்தியதால் திருஞானசம்பந்தர் இப்பாடலை பாடி விட்டார் என்றால் அவரின் பாடல்களில் அந்தச் செய்திகள் தான் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எதற்கு ஐயா அவர் சைவத்திற்கு துளியும் தொடர்பில்லாத வேள்விகளைப் பற்றியும் வேதங்களைப் பற்றியும் பாடி இருக்கின்றார்.

"
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே..."

"அந்த ணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே..."

"வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே..."

மேலே உள்ள வரிகள் மூலம் திருஞானசம்பந்தர் சமணர்களை வெறுக்கின்றார் என்று தெரிய வருகின்றது. ஆனால் எதற்கு அவர்களை வெறுக்கின்றார் என்பதே நாம் அறிய வேண்டியது. சமணர்கள் வேத வேள்விகளை மதிப்பதில்லையாம்... அந்தணர்கள் சொல்லையும் கேட்பதில்லையாம்...அதனாலே திருஞானசம்பந்தர் அவர்களைச் சாடுகின்றார். அதனாலையே சாடுகின்றாரே தவிர அவர்கள் சைவத்தினை
மதிப்பதில்லை என்பதற்காக சாடவில்லை.

இதன் மூலம் திருஞானசம்பந்தர் சைவத்தினை வளர்க்கவில்லை என்றும் சைவத்தின் வாயிலாக வேத நெறிகளையே வளர்த்தார் என்றும் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தரின் இந்தச் செயல்பாடுகள் மூலம் சமணம் மற்றும் புத்தத்தினால் வீழ்ந்திருந்த வேத வேள்விக் கருத்துக்கள் சைவத்தின் கைப்பற்றிக் கொண்டு சமணத்தினையும் புத்தத்தினையும் வேரறுக்க கிளம்புகின்றன.

சைவ நெறி... சைவ வெறியாகின்றது...!!!

அன்பினைப் போதித்த மதம் 8000 சமணர்களை மதுரையில் கழுவில் ஏற்றுகின்றது. அன்பும் பக்தியும் பரவிய வீதிகளில் வெறியும் பயமும் பரவ ஆரம்பிக்கின்றது.

சைவமும் சரி... பக்தி இயக்கமும் சரி... திசை மாற ஆரம்பிக்கின்றன. இதனைக் கண்ட திருநாவுக்கரசர் போன்றோர்

"நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்குஅரையன், நாளைப்போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி,
கண்ணப்பன், கணம்புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டு, நின் குரைகழல் அடைந்தேன்"

என்றுக் கூறிச் சென்றாலும் மதம் பிடித்த யானை எவ்வாறு கட்டுக்கடங்காது இருக்குமோ அதேப்போல் மக்களும் கட்டுக்கடங்காது இருக்கின்றனர். அவர்களுக்கு பிடித்து இருந்தது சைவம் மற்றும் வைணவ மதம்.

வேத நெறிகள் நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் பலம் பெற ஆரம்பித்தன...தமிழகத்தில். இது நடந்தக் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு.

கிட்டத்தட்ட இதேக் காலத்தில் தான் வடக்கில் ஆரியவர்த்தமும் அமைகின்றது. வேத நெறி மீண்டும் வளர நல்ல காலக்கட்டம். அதுவும் வளரத் தான் செய்தது சைவம் மற்றும் வைணவத்தின் நிழலில்.

நிலை இவ்வாறு இருக்கையில் தான் ஆதி சங்கரர் வருகின்றார்...சாதி ஏற்றத் தாழ்வுக் கருத்துக்களை தன்னுடன் அழைத்துக் கொண்டே வருகின்றார். அடுத்தப் பதிவில் அவரை சந்திப்போம்....

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14

பி.கு:

வேத வேள்விக் கருத்துக்களை திருஞானசம்பந்தர் வளர்த்ததற்கு காரணம்... அவர் ஒரு ஆரிய பிரோகிதர். 63 நாயன்மார்களில் அவர் ஒருவர் மட்டுமே ஆரியர்.சமயக் குரவர்களில் தமிழரான திருநாவுக்கரசர் முதன்மையானவராக இருந்தப் போதும் முதலிடம் திருஞானசம்பந்தருக்கு கொடுக்கப் பட்டு இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-14

கி.பி!!!

கிருத்துவுக்கு முன்…. கிருத்துவுக்குப் பின் என காலம் இரண்டாகப் பிரிந்தக் காலம்.

“செய்தி கேட்டாயா சகோதரா…இறைவனின் மைந்தன் நமக்காக இன்னுயிர் துறந்தாராம்… பின் மீண்டும் உயிர்தெழுந்து விண்ணுலகம் சென்றாராம். கண்டவர்கள் சொல்கின்றனர். மேலும் அவர் கூறியதாக பல அறியக் கருத்துக்களையும் கூறுகின்றனர். கேட்பதற்கே இனிதாக இருக்கின்றது. நீயும் வா…போய் அவர்கள் கூறுவதை முழுவதுமாகக் கேட்போம்” என்று உலகின் மக்கள் தாங்கள் அது வரை தான் கொண்டிருந்த கொள்கைகளில் இருந்து புதுக் கொள்கைகளுக்கு மாற ஆரம்பித்தக் காலம்.

அந்த மாற்றம் இந்தியாவிற்கும் வருகின்றது…. தோமா என்னும் கிருத்துவின் சீடர் வாயிலாக.

 ’தோமா’ என்ற இந்தப் பெயர் நிச்சயம் தமிழர்களுக்கு பழக்கப்பட்ட ஒருப் பெயராக இருக்கும்… அதுவும் குறிப்பாக சென்னையில் வாழ்கின்ற மக்கள் நிச்சயம் இந்தப் பெயரினைக் கேள்விப்பட்டு இருப்பர்.

சாந்தோம்… பரங்கி மலை… போன்ற இடங்கள் இவரின் வரலாறினை இன்றும் சுமந்துக் கொண்டு இருக்கின்றன.

“தோமா இந்தியா வந்தது வரலாறா…??? சுத்த ஏமாற்றுத்தனம்…தோமா என்பது ஒருக் கட்டுக்கதை” என்றுக் கூறுவோரும் உளர்.

தோமாவின் கதை வரலாறா அல்லது கட்டுக்கதையா என்பது நாம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. ஆனால் நாம் இப்பொழுது சமசுகிருதத்தை பின் பற்றிச் சென்றுக் கொண்டு இருப்பதனால் தோமாவின் கதையினை நாம் தற்சமயம் ஒதுக்கி வைத்து விட்டு பயணிக்க வேண்டி இருக்கின்றது.

ஏற்கனவே சமணம், புத்தம் போன்ற சமயங்களின் கருத்துக்களை பரப்புவதற்கு ஒரு புது மொழி தேவை என்று அரசர்கள் சிந்தித்து முடிவினை செய்தப் பொழுது கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் தோமாவின் வாயிலாக கிருத்துவின் கருத்துக்களும் இந்தியாவிற்கு வருகின்றன.

“கடவுள் இல்லை என்று சமணமும் கடவுளைப் பற்றியே ஒன்றும் சொல்லாது புத்தமும் இருக்கும் பொழுது, இவர் கடவுள் நமக்காக அவரின் புதல்வனை பலி கொடுத்தார் என்று சொல்கின்றாரே…மேலும் பல நல்லக் கருத்துக்களை கூறுகின்றாரே…இவரின் கருத்துகளையும் நாம் இந்த தேசம் முழுவதும் பரப்ப வேண்டும்.” என்று எண்ணிக் கொண்டு தோமாவின் கருத்துக்களை பரப்ப மன்னர்கள் ஆரம்பிக்கின்றனர்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இக்காலக் கட்டத்தில் தான் கடவுளைப் பற்றி எதுவுமே பேசாத புத்த மதத்தில் கிருத்துவின் கொள்கையான ‘மூஒருமைக் கோட்பாட்டினை’ ஏற்றுக் கொண்டு ‘மகாயானம்’ என்னும் ஒரு பிரிவு தோன்றுகின்றது. கடவுள் மனிதராக வந்தார் என்னும் அவதாரக் கோட்பாடும் தோன்றுகின்றது. தமிழில் திருக்குறளும் தோன்றுகின்றது. நிற்க!!!

சமசுகிருதம் உருவாக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் அப்பொழுது இந்தியாவில் வந்து தங்கி இருந்த யவனர்கள் மற்றும் மற்ற மொழி பேசும் மக்களிடம் அந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்புவதற்கே.

“சரி மொழியினை உருவாக்கியாயிற்று…நல்லது…!!!ஆனால் இந்தக் கருத்துக்களை அதில் எப்படிப் பரப்புவது…???
ம்ம்ம்… சிறப்பு பள்ளிகள் அமைக்கலாம்…அந்தப் பள்ளிகளில் யவனர்களின் (இங்கே யவனர்கள் என்பது ஆரியர்களையும் குறிக்கின்றது) பழைய பாடல்கள்… வரலாறு…பழக்க வழக்கங்கள் முதலியவையை முதலில் சமசுகிருதத்தில் தொகுக்கலாம்… பின்னர் அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதன் திருத்தங்களை தொகுக்கலாம்… அவர்களின் கதைகளை ஒட்டியக் கதைகளை உருவாக்கலாம்… அதில் இந்தச் சமயக் கருத்துக்களைப் புகுத்தி அவர்களைத் தெளிவு நிலைக்கு கொண்டு வரலாம்… ஆம் அது தான் சரியானதாக இருக்கும்.” என்று எண்ணி சமசுகிருதத்தில் நூல்களை உருவாக்கவும் தொகுக்கவும் பள்ளிகள் நிறுவப்படுகின்றன.

அப்பள்ளிகளில் தான் யவனர்களின் பாடல்களான வேதங்கள் தொகுக்கப்படுகின்றன. அவற்றின் திருத்தங்களாக உபநிடங்களும் உருவாக்கப்படுகின்றன.
மகாபாரதமும் தோன்றுகின்றது. அவற்றினைத் தொகுத்த வியாசர் என்னும் தமிழர் வேதவியாசர் எனப்படுகின்றார் (வியாசர் என்பது தனி மனிதனைக் குறித்தச் சொல் இல்லை என்றும் அந்தப் பள்ளிகளில் தொகுக்கும் பணியினைச் செய்த அனைவரையும் குறித்தச் சொல் என்றும் கருத்துக்கள் உண்டு. இவற்றினைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டு இருக்கின்றது).

இவ்வாறே காலங்கள் நகர்ந்துக் கொண்டு இருக்க தமிழகத்தின் இருண்டக் காலமும் வருகின்றது. சோழனும் பாண்டியனும் செல்வாக்கினை இழக்க தமிழகம் களப்பிரர்கள் வசம் போகின்றது. அத்துடன் கடைச் சங்கக் காலமும் முடிவிற்கு வருகின்றது. இது நடந்தது கி.பி மூன்றாம் நூற்றாண்டில்.

மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சியினைப் பிடித்த களப்பிரர்கள் கிட்டத்தட்ட கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் வீற்று இருந்தார்கள். அவர்கள் யார்? தமிழர்களா?… எவ்வாறு ஆட்சியினைப் பிடித்தார்கள்….??? அவர்கள் காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? - தெரியவில்லை. இன்னும் யாரும் அதிகமாகப் படிக்காத பக்கங்களாகவே அந்தக் காலங்கள் இருந்துக் கொண்டு இருக்கின்றன. படிப்பதற்கும் தெளிவான விடயங்கள் இதுவரையும் கிட்டவில்லை.

இப்படிப்பட்ட களப்பிரர்களின் வரலாறு கி.பி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களின் எழுச்சியோடு முடிந்துப்போகின்றது. காஞ்சியினை தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசு தமிழகத்தினை ஆளத் தொடங்குகின்றது…. பிராகிருதத்தையும் சமசுகிருதத்தையும் ஆட்சிமொழியாக வைத்துக் கொண்டு. சமசுகிருதப் பள்ளிகள் பல காஞ்சி மாநகரத்தில் வளரத் தொடங்குகின்றன. கூடவே பல புத்த மடங்களும் தான். காஞ்சி மாநகரம் புத்தத்தையும் சமசுகிருதத்தையும் நன்கு வளர்க்கின்றது. (புத்தத்தினை வளர்க்க ஆறாம் நூற்றாண்டில் சீனா சென்ற போதிதர்மன் இங்கே உங்கள் நினைவிற்கு வரலாம்).

கி.பி ஆறாம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் பல்லவர்கள் சிறப்புற்று இருக்கின்றார்கள்… புத்தமும் சமசுகிருதமும் அவர்களால் போற்றப்பட்டு இருக்கின்றன. நிற்க…. இப்பொழுது நாம் சற்று வட இந்தியாவினைக் கண்டு வந்து விட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

தென் இந்தியாவினைப் போலவே கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் கிட்டதட்ட வட இந்தியாவின் வரலாறும் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சீனாவில் இருந்து புறப்பட்ட ஒரு நாடோடிக் குழுவினரான குசானர்கள் வட மேற்கு இந்தியாவினை கி.பி ஒன்றாம் நூற்றாண்டு முதல் ஆண்டுக் கொண்டு வருகின்றனர். இந்தியர்கள் அல்லாத அவர்களின் ஆட்சி பின்னர் குப்த பேரரசின் எழுச்சியினால் கி.பி நான்காம் நூற்றாண்டில் ஒரு முடிவிற்கு வருகின்றது. ஆனால் குப்த பேரரசும் நீண்டக் காலம் நிலைத்து நிற்கவில்லை. கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அப்பேரரசு ஒரு முடிவிற்கு வருகின்றது.

அதன் இறுதி மன்னர்… வட இந்தியாவின் இறுதி திராவிட பேரரசின் மன்னர் அரச வரதன் (Harshavardhan ) கொலை செய்யப்படுகின்றான். அவனின் குடும்பமும் கொலை செய்யப்படுகின்றது. அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களைப் போலவே இச்செயல்களும் மர்மமாகவே உள்ளன. அரச வரதன் கொலை செய்யப்படும் காலமும் வட இந்தியாவில் அன்நேர்கள் (Huns ) படையெடுத்து வரும் காலமும் ஒன்றாக இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அக்காலத்தில்,
குப்த பேரரசு வீழ்கின்றது.
வட இந்தியாவின் மீது அன்நேர்கள் படை எடுக்கின்றனர்.
வட இந்தியா பல சிறு பகுதிகளாக சிதறுகின்றது.

இதேக் காலத்தில் தான் வட இந்தியாவில் ‘ஆரியவர்தமும்’ ஆரம்பமாகின்றது. இந்தியாவின் மீது பல காலங்களில் படையெடுத்து வந்த பாரசீகர்கள்,கிரேக்கர்கள்,குசானர்கள்,அன்நேர்கள் மற்றும் வணிகத்திற்காக வந்த ரோமர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஆரம்பித்ததே ‘ஆரிய வர்த்தம்’ என்றே அறிஞர்கள் கருதுகின்றனர். நிறத்தால் ஒன்றுப்பட்டு ’ஆரியவர்தத்தினை’ ஆரம்பித்த அவர்கள் தான் நாம் இன்றுக் கூறும் ஆரியர்கள் என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

அக்காலத்தில் தான் ஆரியர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொண்டு ஒரு பேரரசாக மாற சில பிரிவுகளையும் சட்டங்களையும் உருவாக்குகின்றனர். அந்தப் பிரிவுகளே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகும்.

பிற நாடுகளில் சென்று ஆன்மீகப் பொறுப்புகளை கவனிப்பவன் - பிராமணன்.
பிற நாடுகளுடன் போரிடச் செல்பவன் - சத்திரியன்.
பிற நாடுகளில் வணிகத்தினை மட்டும் பார்ப்பவன் - வைசியன்.
இவை எதையுமே செய்யாதவன் - சூத்திரன்.

இவர்களை எதிர்க்கும் எதிரிகள் அனைவரும் - பஞ்சமன்(திராவிடர்கள்).

இவர்களுக்காக எழுதிய அந்தச் சட்டமே மனு நீதி நூல் ஆகும்!!! இந்த நூல் பின்னர் பல மாற்றங்களைக் கண்டது மேலே உள்ளப் பிரிவுகளைப் போலவே!!!

தென் இந்தியாவிலும் சமசுகிருதம் இருக்கின்றது. வடக்கேயும் இருக்கின்றது. ஆரியர்கள் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை வடக்கே அடைந்து இருக்கின்றனர். திராவிடர்கள் தெற்கில் இருக்கின்றனர். புத்தம் இந்தியா முழுவதும் இருக்கின்றது. இக்காலத்திலே தான் பக்தி இயக்கமும் ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையில் என்ன நடந்தது வரலாற்றில்….

காண்போம்… வரலாற்று ஆராய்ச்சி முயற்சி தொடரும்…!!!

பி.கு:

கி.பி முதல் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வரலாறு இன்னும் புதிராகவே இருக்கின்றது… அது வட இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும்… அல்லது தென் இந்தியாவின் வரலாறாக இருக்கட்டும். வட இந்தியாவின் மேல் பல படையெடுப்புகள் நிகழ்ந்த அதேக் காலக்கட்டத்தில் தென் இந்தியாவிலும் ஆட்சிகள் மாறி உள்ளன. சமசுகிருதம் வளர்ந்த இக்காலக் கட்டம் தெளிவில்லாத சூழல்களால் சூழப்பட்டு உள்ளது. இக்காலத்தின் வரலாற்றினைப் பற்றிய ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13

ஞாயிறு, 27 நவம்பர், 2011

உலகின் வரலாறு - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-13

சென்ற பதிவின் முடிவில் நாம் இந்தியா முழுவதும் அசோகர் புத்த மதத்தினை பரப்புவதைக் கண்டோம்.

"பலி வேண்டாம்... எல்லா உயிர்களும் ஒன்றே.." என்ற புத்த மதத்தின் கோட்பாட்டின் காரணமாக வேள்வி மற்றும் பலிகளை நம்பியே வாழ்ந்து வந்த ஆரியர்கள் திகைக்கின்றனர். அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கின்றனர்.

அவர்கள் என்ன செய்தனர் என்பதனை நாம் காணும் முன் அக்காலம் ... அதாவது கிமு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் கண்டுவிடலாம்.

மௌரிய பேரரசு கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே பரவி இருந்தது. சந்திர குப்த மௌரியன் தொடங்கி வைத்த அந்த பேரரசு அசோகரின் கீழ் அதன் உச்ச நிலையினை அடைந்து இருந்தது. ஆரியர்களின் செல்வாக்கு வடக்கே மிகுந்து இருந்தது (சந்திர குப்தனின் ஆசிரியராகவும் பின்னர் அமைச்சராகவும் சாணக்கியன் என்ற ஆரியன் இருந்ததினை நோக்குக).

இந்த நிலையில் தான் கலிங்க யுத்தத்திற்கு பின்னர் அசோகனின் மனம் மாறுகின்றது. அசோகன் போரில் இருந்த நாட்டத்தினை மறந்து புத்தத்தின் பால் நாட்டம் கொள்கின்றான். பலிகள் கூடாது என்று புத்தம் சொல்கின்றது. எனவே அசோகனும் பலிகள் கூடாது என்கின்றான். அரசன் கட்டளையினை இட்டப் பின்பு மக்கள் கேட்காமலா இருப்பார்கள். மக்களும் பலிகள் வேண்டாம் என்கின்றார்கள். மௌரியப் பேரரசு முழுவதுமே புத்தம் பரவுகின்றது. நிற்க. இது வட இந்தியாவின் அன்றைய நிலை.

இப்பொழுது அக்காலத்தில் தென் இந்தியா எவ்வாறு இருந்தது என்பதினை நாம் சற்றுக் காண்போம்.

வடக்கே என்னத்தான் மௌரிய பேரரசு இணையின்றி விளங்கிக் கொண்டு இருந்தாலும் அதற்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக தெனிந்தியாவில் இரண்டு பேரரசுகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ஒன்று சோழப் பேரரசு... இன்னொன்று பாண்டியப் பேரரசு. அப்பேரரசுகள் மௌரிய பேரரசிடம் வணிகத் தொடர்பினை மட்டுமே வைத்து இருந்தன. தெற்கில் இருந்து வணிகர்கள் வடக்கே செல்வதும் வடக்கே இருந்து தெற்க்கே வருவதுமாக இப்பேரரசுகளிடையே வணிகம் நன்றாக நடைப் பெற்றுக் கொண்டு இருந்ததாக அசோகனின் கல்வெட்டுகளும் பல இதர சான்றுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.

எனக்கு ஒன்று பிடிப்படவில்லை, ஏன் வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ் வரலாற்றின் மீது அதிகமாக அக்கறை காட்ட மறுக்கின்றார்கள்?. அசோகனின் வரலாற்றையும் சந்திர குப்தனின் வரலாற்றையும் ஆராயும் அவர்கள், அப்பேரரசர்களின் காலத்திலையே அவர்களுக்கு கட்டுப்படாமல் இயங்கி வந்த தமிழ் அரசர்களைப் பற்றி ஏன் ஆராய மறுக்கின்றார்கள். வட இந்தியா முழுவதையுமே வென்ற அந்தப் பேரரசர்கள் ஏன் தெற்கில் அவர்களது செல்வாக்கினை காட்டவில்லை என்றக் கேள்வி அந்த வரலாற்று ஆசிரியர்களின் மனதினில் எழாமலா இருந்து இருக்கும்?. அதுவும் ஆங்கிலேயர்களுக்கு முன்னால் வரை எந்த இனமும் எந்த பேரரசும்... அது அசோகனாக இருக்கட்டும், முகலாயர்களாக இருக்கட்டும், தேவராயராக இருக்கட்டும், தென் இந்தியாவினை முழுமையாக போரிட்டு வெல்ல முடியவில்லையே. அது ஏன் என்றக் கேள்விக்கு அவர்கள் ஏன் விடையினைத் தேடவில்லை என்பது தான் எனக்கு பிடிப்படவில்லை. சரி அது இருக்கட்டும். நம் வரலாற்றுக்கு நாம் மீண்டும் வருவோம்.

மௌரிய பேரரசிற்கு கட்டுப்படாமல் சோழனும் பாண்டியனும் தெற்க்கே ஆண்டு வருகின்றார்கள். நாம் முந்தைய பதிவுகளில் பார்த்தது போல் அவர்கள் நாகரீகத்திலும் கலைகளிலும் சரி சிறந்து விளங்குகின்றனர். அறிஞர்களின் கணிப்புப்படி அக்காலத்தில் கடைச் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றது. தமிழ் மேலும் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது.

மக்களுள் தொழில் அடிப்படையில் சாதிகள் இருக்கின்றன. அந்தப் பிரிவுகள் கலை முன்னேற்றதிற்க்காகவும் தொழில் முன்னேற்றதிற்க்காகவுமே உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதாவது, இன்று எப்படி மருத்துவம் பயின்றவர்கள் மருத்துவன் என்று ஒரு பிரிவாகவும், விஞ்ஞானம் பயின்றவர்கள் விஞ்ஞானிகள் என்று ஒரு பிரிவாகவும், பொறியியல் படித்தவர்கள் பொறியாளர்கள் என்றும், பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள் என்றும் பலப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனரோ அதேப் போல் அன்று,

பள்ளமான விவசாய நிலங்களில் நன்றாக வேலை செய்து விவசாயத்தினை வளர்த்தவர்களை 'பள்ளர்கள்' என்றும்,

பறை அறைந்து மக்களுக்கு செய்திகளை தெரிவித்த செய்தி தொடர்பாளர்களை பறையர்கள் என்றும்

இசைக் கருவிகளான பாணங்களை இசைத்து இசைத் தமிழ் வளர்த்த தமிழர்களை பாணர்கள் என்றும்

அது போன்று மேலும் பல சிறப்பு மிகுந்த தொழில்களைச் செய்த மக்களுக்கு அவர்களின் தொழில் அடிப்படையில் துறைகளை ஒதுக்கி மேலாண்மைத் துறையில் சிகரங்களைக் கண்டார்கள் தமிழர்கள். இந்தப் பிரிவுகள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தனவே அன்றி பிறப்பின் அடிப்படையில் அல்ல.

அவர்கள் அனைவரும் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி தமிழகத்தில் வாழ்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர்.

இக்காலத்தில் தான் வடக்கே அசோகன் புத்தத்திற்கு மாறுகின்றான். ஆரியர்கள் என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.

இப்பொழுது ஒருக் கேள்வி,

நீங்கள் ஒருத் தொழிலினை செய்துக் கொண்டு வருகின்றீர். அந்தத் தொழிலுக்கு உங்கள் நாட்டில் திடீர் என்று தடை விதிக்கின்றார்கள். ஆனால் பக்கத்துக்கு நாட்டில் அதற்குத் தடை இல்லை. அங்கே நீங்கள் செல்லவும் தடை இல்லை. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள். பக்கத்துக்கு நாட்டிற்க்கு சென்று உங்கள் தொழிலை ஆரம்பிப்பீர்களா இல்லையா? ஆரம்பிப்பீர்கள் தானே!!!

அதையே தான் அந்த ஆரியர்களும் செய்தார்கள். புத்தம் பரவாது இருந்த, புத்த மன்னர்கள் இல்லாது இருந்த தமிழகத்தில் அவர்கள் நுழைய தடை ஒன்றும் இல்லை. போதாக்குறைக்கு வந்தோரை வாழ வைத்தே பழகிய தமிழகமும் அவர்களை வரவேற்க தடை ஒன்றும் இடவில்லை. போதாதா!!!

காலப்போக்கில் ஆரியர்கள் தமிழகத்தில் நுழைகின்றனர்.

"என்ன ஐயா... உங்களுக்கு பிழைக்க இடம் இல்லையா... அவ்வாறு சொல்லாதீர்கள்... நாங்கள் இருக்கும் வரை எங்கள் தேசத்தில் இல்லை என்பதே இல்லை... தாராளமாக நீங்கள் வரலாம்... தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது" என்றவாறே மன்னர்கள் அவர்களை வரவேற்கின்றனர்.

இந்த நிகழ்வு கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வடக்கில் செல்வாக்கினை இழந்த ஆரியர்கள் தெற்க்கே நுழைகின்றனர். வடக்கே வழக்கிழந்த வேள்விகளையும் இதர செயல்களையும் அவர்கள் தமிழகத்தில் மறு சீரமைப்பு செய்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தான் அவர்கள் எதிர்பாராத ஒரு செயல் நிகழ்கின்றது.

தன் பேரரசு முழுமையும் புத்தத்தினை பரப்பிய அசோகன் அதனை மற்ற நாடுகளுக்கும் பரப்ப ஆட்களை அனுப்புகின்றான். அசோகனின் செய்தியினை சுமந்தப்படி துறவிகள் உலகெங்கிலும் செல்லுகின்றனர். சீனத்திற்கு, கிரேக்கத்திற்கு...தமிழகத்திற்கு!!!

ஆரியர்களை வரவேற்று ஏற்றுக் கொண்ட தமிழர்கள் ... அசோகனின் துறவிகளையும் வரவேற்று ஏற்றுக் கொள்ளுகின்றனர். அவ்வாறே அசோகனின் கருத்துகளையும்!!! புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது. புத்ததினைப் போன்றே ஏற்கனவே மற்றொரு நாத்திக சமயமான சமணமும் தமிழகத்தில் பரவி இருக்கின்றது.

சமணம் மற்றும் புத்த சமயங்களின் கருத்துக்கள் தமிழக மன்னர்களின் மனதினைக் கவர அவர்களுள் சிலர் அம்மதங்களுக்கு மாறுகின்றனர். ஒரு வித்தியாசமான சூழ்நிலையினை தமிழகம் சந்திக்கின்றது.

பல மொழி பேசும் பல மனிதர்கள், வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் இன்னும் பல மேற்கு நாட்டவர்கள்... பாலி மொழி பேசும் மௌரியர்கள்... சமயத்தினை பரப்ப வந்த துறவிகள்... ஆரியர்கள், ஒரே நேரத்தில் தமிழகத்தில் வந்து சேர்ந்து இருந்தனர்.

இவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும். தங்கு தடையின்றி பேசிப்பழக வேண்டும். அதற்கு என்ன செய்வது... சிந்திக்க ஆரம்பித்தனர் தமிழக மன்னர்கள்.

"தமிழ் இனிமையான மொழி... ஆனால் நம்முடைய மொழியினை இவர்கள் கற்க வேண்டும் என்று திணிப்பது சரியல்ல... மேலும் இவர்களுள் பலர் சில வேலை நிமித்தமாக வந்து இருக்கின்றனர்... இவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினை நாம் உருவாக்கினால் என்ன?... நம் வணிகர்களும் அந்த நாட்டிற்கு சென்று வணிகம் செய்வதற்கு அம்மொழி உதவும் தானே!!!" என்று எண்ணி ஒரு மொழியினை உருவாக்கும் முயற்சியினை மேற்கொள்கின்றனர்.

தமிழ் அறிஞர்கள் அப்பொறுப்பினை எடுத்துக் கொண்டு முழு வீச்சில் ஒரு மொழியினை செம்மையாக உருவாக்க ஆரம்பிக்கின்றனர். தமிழில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றி இருப்பதினால் அவர்களின் வேலை எளிதாக அமைகின்றது. கிரேக்கம், இலத்தின், பாலி, அரேமியம் போன்ற மொழிகளையும் தமிழையும் சேர்த்து ஒரு மொழி உருவாக்கப்படுகின்றது.

"எம் தமிழ் மக்கள் பேசி மகிழ எம் உயிரினும் மேலான தமிழ் இருக்கின்றது... பிறநாட்டவர் தங்களது பணிகளை எளிதாக இங்கே மேற்கொள்ள இந்த புதிய மொழி உதவட்டும்... தமிழில் உள்ள செல்வங்கள் இம்மொழியின் வாயிலாக உலகிற்கு செல்லட்டும்" என்றக் கொள்கையோடு தமிழ் மன்னர்கள் அந்த புதிய மொழியினை உருவாக்கிப் பரப்புகின்றனர்.

அம்மொழி தான் சமசுகிருதம்.

சமசுகிருதம் என்றால் 'செம்மையாக செய்யப்பட்டது' என்பதே பொருள். இம்மொழி தோன்றியக் காலம் கிமு முதல் நூற்றாண்டு என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மொழி பிற்காலத்தில் தமிழினையும் தமிழையும் அடக்கி ஒடுக்க பயன்படும் ஒருக் கருவியாக மாறியது.

அது எவ்வாறு... காண்போம்!!! நம் பயணம் இப்பொழுது 'கிபி'யினுள் முதல் முறையாக நுழைகின்றது.

முந்தையப் பதிவு : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...