சென்ற பதிவில் சித்தர்கள் ஆரியர்களை எதிர்த்தார்கள் என்றுக் கண்டு இருந்தோம். அவ்விடயதினைப் பற்றி விரிவாக நாம் பார்க்க இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று...

"பேர்கொண்ட பார்ப்பான் பிறான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே” (திருமந்திரம்-519)
மேலே உள்ள திருமந்திரப் பாடலில் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பானை' அர்ச்சித்தால், அதாவது அவர்களின் பேச்சினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் தீங்கு வரும் என்றுக் கூறுகின்றார். எளிதான பாடல் தான். ஆனால் இங்கே திருமூலர் யாரையோ 'பேர் கொண்ட பார்ப்பான்' என்று குறிப்பிடுகின்றார். 'பார்ப்பான்' என்ற பெயர் நமக்குத் தெரியும் ... ஆனால் யார் அது 'பேர்க் கொண்ட பார்ப்பான்'. சற்று பார்ப்போம்...

'பார்ப்பான்' 'அந்தணர்' மற்றும் 'ஐயர்' போன்ற சொற்கள் எல்லாம் தூய தமிழ் சொற்கள். இவை இறை பணி செய்பவரையும் அறநெறிப்படி வாழ்பவரையும் குறிக்கும் மதிப்பு மிக்க சொற்கள். ஆனால் காலத்தில் ஆரியர்கள் தமிழ் மக்களுடன் கலந்து, அவர்களது வேத நெறிக் கொள்கையினைப் பரப்பி மக்களை ஏமாற்றி பார்ப்பான், அந்தணர் மற்றும் ஐயர் ஆகிய பெயர்களுக்குள் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே தூய தமிழ் பெயர்களான அந்தச் சொற்கள் இப்பொழுது பிராமணர்களைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டதால் தான் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பான்' என்கின்றார். ஏனெனில் பார்ப்பான் என்றப் பெயரில் பிராமணர்கள் சமுகத்தில் நுழைந்து அவர்களின் வேத நெறிக் கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருந்தனர். எனவே அவர்களின் சொல்லினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் கேடு என்று தான் சொல்லவந்த கருத்தினை திருமூலர் கூறுகின்றார்.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ. - சிவவாக்கியர்


இறைவனை புரிந்துக் கொள்ளாது மந்திரங்கள் சொல்வதும் கல்லுக்கு பூக்கள் சூடி பூசை செய்வதும் பலனில்லை என்ற மேலே உள்ள சிவவாக்கியரின் இந்தப் பாடலும் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையினை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் சித்தர்கள் எவ்வளவு முயன்றும் ஆரியர்களின் செல்வாக்கினை சரிக்க இயலவில்லை.


காரணம்...ஆரியர்களின் அரசியல் செல்வாக்கு. காலத்தில் அரசியலும் மதங்களும் ஒன்றாகக் கைகோர்ப்பதை நாம் வரலாறு எங்கிலும் கண்டு வந்து இருக்கின்றோம். தான் ஆட்சியில் இருக்க மதத்தினை ஆயுதமாக பயன்படுத்திய அரசர்கள் பற்றியும் நாம் கண்டு இருக்கின்றோம்... கிருத்துவத்திற்கு எப்படி ஒரு கோன்சன்டைன் மன்னனோ, அவ்வாறே ஆரியர்களுக்கும் சில மன்னர்கள் இங்கே துணைப்போகின்றனர்...பதவிக்காக...பொன்னிற்காக.. மேலும் பல காரணங்களுக்காக!!!
இந்த நிலையில் தான் "அரசியல் செல்வாக்கும் இருக்கின்றது...சமயங்களும் நம் கையில் இருக்கின்றன. ஆனால் இந்தச் சித்தர்கள் மட்டும் தொல்லைக் குடுத்தவாறே இருக்கின்றனரே.இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்" என்று எண்ணி அரசர்களின் உதவியோடு சித்தர்களை வேட்டையாட ஆரியர்கள் ஆரம்பிக்கின்றனர்.


சித்தர்கள் காடுகளுக்கு துரத்தப்படுகின்றனர். காட்டினில் குகைகளில் அவர்கள் பதுங்குகின்றனர். ஆனால் ஆரியர்களுக்கு அதுவும் பொறுக்கவில்லை.

"நம்முடைய கருத்திற்கு மறுக் கருத்தினை சொல்பவன் எவ்வாறு உயிரோடிருக்கலாம்?... தவறாயிற்றே... கொல் அவர்களை...குகையில் பதுங்கி இருந்தார்கள் என்றால் அந்த குகையுடன் சேர்த்தே அவர்களுக்கு சமாதியினை கட்டுங்கள்... அவர்கள் கடவுளின் எதிரிகள்" என்றவாறே குகையில் பதுங்கி இருந்த சித்தர்களை குகையில் வைத்தே கொல்லவும் செய்கின்றனர். சித்தர்கள் இருக்கக் கூடும் என்று எண்ணப்பட்ட குகைகள் எல்லாம் இடிக்கப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் இந்த நிகழ்வுகள் குகை இடிக் கலகம் என்றே வழங்கப்பெறுகின்றது. இதன் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு. சித்தர்கள் தலைமறைவாகின்றனர். ஆரியர்கள் கேள்விக்கேட்பார் இன்றி மேன்மையினை அடைகின்றனர். பல சித்தர்கள் பாடல்களும் தமிழ் பாடல்களும் அழிக்கப்படுகின்றன.
இந்தக் காலத்திலும் கோவிலில் தமிழே அர்ச்சனை மொழியாக இருக்கின்றது. தமிழ் பாடல்களே இசைக்கப்படுகின்றன. காரணம் இன்னும் சைவக் கோவிலிலும் வைணவக் கோவிலிலும் தமிழர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.
சைவக் கோவில்களில் பூசாரிகளாக பறையர்கள் இருக்கின்றனர். வைணவக் கோவிலில் பாணர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இந்த நிலை வெகுக் காலம் நீடிக்க வில்லை. சிதம்பரத்தில் பறையர்களை துரத்தி விட்டு தீட்சிதர்கள் நுழைய அதை எதிர்கின்றார் இறுதி நாயன்மாரான நந்தனார். ஆனால் எதிர்ப்பு பயன் தராது போகவே இறுதியில் நந்தனார் கொலை செய்யப்படுகின்றார். முக்தி அடைந்து விட்டார் என்று அவரின் சரித்திரமும் மூடப்படுகின்றது. இதைப்போலவே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் கொல்லப்பட்டார் என்பதே வரலாற்றுச் செய்தியாகும்.


இவ்வாறு இறுதி நாயன்மாரும் ஆழ்வாரும் காலமாக, எவ்வித எதிர்ப்பும் இன்றி கோயிலுள் அரச மரியாதையுடன் சமசுகிருதம் நுழைகின்றது. தமிழ் வெளியேற்றப்படுகின்றது. சைவ வைணவ மதங்கள் முழுமையாக ஆரியர்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன.வேத நெறியினை போற்றும் நூல்களே முதன்மையாக வைக்கப்படுகின்றன. அவற்றினை முன்வைத்தே கதைகள் பல இயற்றப்படுகின்றன. சாதிப் பிரிவுகள் சமுகத்தின் வேர்களாக ஆக்கப் படுகின்றன.பிரித்தாளும் சூழ்ச்சி நடைமுறைப் படுத்தப்படுகின்றது. சாதிகளுக்கும் சாதிகள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் பிரிக்கப்படுகின்றனர்.

பிரிக்கப்பட்டவர்களுக்குள் வன்மம் விதைக்கப்படுகின்றது. பகை உணர்ச்சிகளும் தான். அவற்றின் இடையே உண்மையான கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. திசை மாறிய ஒரு சமுகம் மலரத் தொடங்குகின்றது.


அன்று வெளியேறிய தமிழ் இன்று வரை வெளியிலேயே காத்துக் கொண்டு நிற்கின்றது. தேவாரமும் திருவாசகமும் இசைக்கப் பட்ட இடங்களில் இன்று புரியாத மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

பின்னர் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் இந்த இழிநிலை மாறவில்லை. முகமதியர்கள் வந்தாலும் சரி...ஆங்கிலேயர்கள் வந்தாலும் சரி...தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். காரணம் - அது அவர்களின் இறைவன் வகுத்தது... வேதம் அவ்வாறு தான் சொல்கின்றது. இதை மாற்ற யாருக்கும் உரிமைக் கிடையாது. மக்கள் அவர்களின் அவலங்களுக்குரிய காரணத்தினை அறியாமலேயே காலத்தினை நகர்த்திச் செல்கின்றனர்.


'ஏன்' என்றுக் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை... ஏனென்றால் வேதமும் மனு தர்மமும் அதைத் தான் போதிக்கின்றன. கேள்விக் கேட்பது இறைக் குற்றம். 'எங்கே வேதம் அவ்வாறு சொல்கின்றதா...அவற்றைக் காட்டுங்கள் நாங்கள் பார்கின்றோம்' என்றால் அவற்றை அவர்கள் பார்க்க முடியாது... படிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். மேலும் உண்மையினை கூறும் நூல்கள் பலவும் மறைக்கப்பட்டு இருந்தன. எனவே படிக்கவும் முடியாது... அவ்வாறு படிக்க எண்ணினாலும் உண்மையானக் கருத்துக்களை படிக்க இயலாது என்ற நிலையில் அறியாமையிலையே மக்கள் அடிமையாக காலத்தினை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.


மக்களின் அந்த நிலை ஆங்கிலேயர்களின் வருகையினால் மேலும் மோசமாகின்றது. மனுதர்ம சாசுத்திரம் ஆங்கிலேயர்களால் இந்து சமய மக்களுக்கு உரிய சட்டமாக ஆக்கப்படுகின்றது. (இதைப் பற்றி முதல் பதிவில் பார்த்து இருக்கின்றோம்). பின்னர் பெரியார் வருகின்றார்...அம்பேத்கர் வருகின்றார்... மக்களுக்குரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்து நடந்தவை... நடந்துக் கொண்டு இருப்பவை பற்றி நாம் அறிவோம். போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

சரி இந்து சமயத்தினைப் பற்றி ஓரளவு பார்த்தாயிற்று. எவ்வாறு தமிழகத்தில் தோன்றிய ஒரு இயக்கம் தமிழினை அடிமைப்படுத்த பயன்பட்டது என்பதினையும் கண்டாயிற்று.

ஆனால் இந்த விடயங்களைக் கொண்டு உலகின் முதல் மனிதன் தமிழன் என்று நாம் கூற முடியாது. உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதினைக் காண நாம் சிந்து சமவெளியில் இருந்து சற்று மேற்கே பயணிக்க வேண்டும்.
எவ்வாறு சிந்து சமவெளிக்கு கீழே வந்து இந்து சமயத்தினைப் பற்றிப் பார்த்தோமோ அதேப்போல் நாம் இப்பொழுது சற்று மேற்கே சென்று சுமேரியர்களையும் மெசொபோடமியர்களையும் அப்படியே கிருத்துவம் மற்றும் இசுலாமிய மதங்களையும் கண்டு கொண்டு வர வேண்டி இருக்கின்றது.


உலகின் முதல் மனிதர்கள் தமிழர்களா?.... என்ன சொல்லுகின்றனர் சுமேரியர்கள்...காணலாம்... அடுத்தப் பதிவில்..!!!

பயணம் தொடரும்...

4 கருத்துகள்:

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

boss going intresting...please don't stop it..i am waiting for the 18 episode..

@விச்சு
நன்றி தோழர் விச்சு அவர்களே!!!

@நாகராசன்
தாமதத்திற்கு மன்னியுங்கள் நண்பரே... இனிமேல் சீரிய இடைவெளியில் பதிவுகளை இட முயல்கிறேன்...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு