முந்தையப் பதிவு

சூத்திரம் 9 : ஆன்ம முயற்சி

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே.

பதவுரை:

ஊனக்கண் பாசம் உணராப் பதியை - ஐம்புல வேடர்களில் ஒன்றாகிய புறக் கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா பதியாகிய இறைவனை

ஞானக் கண்ணினில் - இறைவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால்

சிந்தை நாடி - ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில்

உரா - யாராலும் ஏறிச் செலுத்த (ஊர்ந்து செல்ல) இயலாத

துனை - மிக வேகமுடைய

தேர்த்து என - பேய்த் தேரைப் (கானல் நீர்) போல

பாசம் ஒருவ - பாசம் விரைந்து நீங்க

தண்ணிழலாம் பதி - ஆன்மாக்களின் பாவம் ஆகிய வெப்பம் தணியக் குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான்

விதி எண்ணும் - அவனை முறைப்படி இடை விடாது தியானிப்பது

அஞ்செழுத்தே - ஐந்து எழுத்தின் உட் பொருளின் வழி ஆகும்.

பொருள்:

ஐந்து வேடர்களில் ஒன்றாகிய புறக்கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா கடவுளை, அவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால் ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில், யாராலும் ஏறிச் செலுத்த இயலாத மிக வேகமுடைய பேய்த் தேராகிய கானல் நீரைப் போலப் பாவம் விரைந்து நீங்க, அவ்வான்மாக்களின் பாவமாகிய வெப்பம் தணிய, குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான். முறைப்படி இடைவிடாது ஐந்து எழுத்தின் உட்பொருளின் வழி அவனைத் தியானிக்க வேண்டும்.

இறைவன் தவத்தினில் உணர்த்த அதை உணர்ந்த ஆன்மா மலத்தை விட்டு, பாவத்தை அரித்தெடுக்கும் அரனடியைச் சேர்கின்றது என்பதைப் பார்த்தோம். உணர்ந்தவுடன் மலம் நீங்கிற்று என்றால் மலம் நீங்கிய முறை எவ்வாறு? என்ற கேள்வி எழலாம். புறக்கண் கொண்டு கடவுளைக் காண முயன்றால் அவனைக் காண இயலாது. ஆன்மாவிற்கு, கடவுள் அருளால் திறந்துள்ள அகக் கண்ணால் ஆராய்ந்து உணர்ந்த அளவில், பாசமாகிய மலமானது மிக விரைந்து நீங்கிற்று. அது எவ்வாறு நீங்கிற்று என்றால் கானல் நீராகிய பேய்த் தேரைப் போல மிக விரைந்து நீங்கிற்று.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் காடு வழிச் செல்லும் பொழுது கானல் நீராகிய பேய்த் தேரை நாம் காணஇயலும். அதனுடைய விரைவு, அதை நேரில் கண்டோர்க்கே புலப்படும். பாவம் நீங்கியதற்குப் பேய்த் தேரின் விரைவு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் நடந்து துன்புறும்மனிதனுக்குக் குளிர்ந்த நிழல் எவ்வளவு ஆறுதலைக் கொடுக்குமோ அவ்வளவு ஆறுதலைப் பாவமாகிய கானலினின்று விடுபட்ட ஆன்மா, இறைவன் திருவடியாகிய குளிர் நிழலில் பெற்று மகிழ்ச்சி அடைகின்றது. அந்த மகிழ்ச்சியில் நிலை நிற்க ஆன்மாவானது முறைப்படி ஐந்தெழுத்தின் உட் பொருளைத் தன்னகத்தே இடை விடாது தியானித்து நிற்கும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு