இத்தொடரினில் உயிரினையும் உடலினையும் பற்றியே நாம் கண்டு வந்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் தொடர்வதுக்கு முன்னர் முந்தையப் பகுதியினை படித்து இருத்தல் நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். இணைப்பு இதோ (முதல் பகுதி)

சரி இப்பொழுது பதிவினைத் தொடர்வோம்...!!!


உடல் ஒரு அற்புதமான இயந்திரம் என்றே நாம் கண்டு இருக்கின்றோம். பல்வேறுப் பணிகளை செம்மையாக செய்வதற்கு ஏற்றக் கருவிகளை கொண்டே அது அமைந்து இருக்கின்றது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் அதற்கென்று தனிப்பட்ட செயல்கள் இருக்கின்றன. அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்படும் பொழுது உடலின் செயலும் சீராக இருக்கின்றது. மாறாக ஏதேனும் ஒரு உறுப்பு பழுதடைந்து விட்டால் உடலில் அவ்வுறுப்பு செய்ய வேண்டிய பணிகளில் குறை நேர்கின்றது. உடல் தனது முழு திறனுடன் இயங்க முடியாத நிலை வருகின்றது.

உதாரணத்திற்கு, கண்கள் செம்மையாக இயங்கும் பொழுது உடலால் பிற பொருட்களைக் காண முடியும். மாறாக கண்கள் பழுதடைந்து இருந்தால் உடலால் பிற பொருட்களைக் காண முடியாது. நிற்க.

இப்பொழுது ஒரு கேள்வி...

உயிருள்ள உடலுக்கும் உயிரற்ற உடலுக்கும் என்ன வித்தியாசம்?

"அட என்னங்க...உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கும். உயிர் அற்ற உடல் இயங்காது...சில தினங்களுக்குள் மக்கிப் போய் விடும்...இந்த வித்தியாசத்தைக் கூடவா தெரியாமல் இருப்பார்கள்" என்கின்றீர்களா...சரி தான்!!!

உயிர் உள்ள உடல் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. உயிரற்றதோ வெறும் சடலமாக இயக்கமின்றி கிடக்கின்றது. இரண்டிலும் உறுப்புகள் இருக்கின்றன...ஆனால் உயிருள்ள உடல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது....உயிரற்ற உடலோ இயங்காமல் அழிந்துக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ஏன் இந்த வேறுபாடு என்றே நாம் கண்டோம் என்றால் விடை உயிர் என்றே நமக்கு கிட்டுகின்றது.

உயிர் இருக்கும் வரை ஒரு உடல் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உயிர் இல்லாத உடலோ அதன் இயக்கம் நிற்கப் பெற்று அழியத் துவங்குகின்றது. இதன் மூலம் நாம் அறியக் கூடிய விடயங்கள் என்னவென்றால்,

1) உயிர் உடலினை இயக்கிக் கொண்டும் அழியாது பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றது.
2) உயிர் இன்றி உடல் இயங்குவது இல்லை.
3) உயிரும் உடலும் சேர்ந்தால் தான் உயிரினங்கள் உருவாகப் பெறுகின்றன.

(இதனைப் பற்றி தமிழ் எழுத்துக்கள் அழகாக விளக்கிக் கொண்டு இருக்கின்றன...அவற்றைப் பற்றி அறிய இந்த இணைப்பினைப் பார்க்கவும் (எழுத்துக்களில் அறிவியல்)

உடல் எனும் அற்புதமான இயந்திரத்தை உயிர் இயக்கிக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறு உடலின் உறுப்புக்களை இயக்குவதன் வாயிலாக உடல் அழியாது இருக்க உயிர் வழி செய்கின்றது.

உணவு செரிக்கப்படல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல், இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படல் ஆகிய இயல்பூக்கச் செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் செய்து கொண்டு இருக்கின்றது.

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன...உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிற்கப் பெற்று உடலும் அழியத் துவங்குகின்றது.

இது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

நாம் ஏற்கனவே சென்றப் பதிவினில் கண்டு இருக்கின்றோம், தமிழ் அறிவியல் உயிர்களை ஆறு விதமாக (ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் வரை) பிரித்து உள்ளது என்று. இப்பிரிவுகள் அவ்வுயிரினங்கள் கொண்டுள்ள புலன்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன.இந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உயிர் உண்டு.

அந்த உயிர் அவ்வுயிரினங்களின் உடலினை இயக்கியும் பாதுகாத்தும் கொண்டு இருக்கின்றது. மேலும் உயிரின் இயக்கம் ஒவ்வொரு வகையான உயிரினங்களுக்கும் வேறும் படுகின்றது.

அதாவது ஓரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு...ஈரறிவு உயிரினங்களின் உயிர் செயல்படும் முறை வேறு. காரணம் அந்த உயிரினங்கள் வெவ்வேறு தன்மையை உடையவை. ஈரறிவு உயிரினம் கூடுதலாக சுவை உணர்வினை தரும் வாயினைப் பெற்று இருக்கின்றது...எனவே அவ்வுயிரினத்தின் உயிர் அந்த புலனையும் இயக்கும் தன்மைப் பெற்றதாக விளங்க வேண்டி இருக்கின்றது. இந்த வேறுபாடு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பொருந்தும்.

எனவே அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருந்தாலும் உயிரின் செயல்பாடுகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப மாறுபடுகின்றது.

உதாரணத்திற்கு கடலில் வாழும் உயிரினங்களின் உடல் நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்து இருக்கின்றது. உயிர் அந்த உடலினை இயக்குகின்றது. நீரில் இருக்கும் வரை உடலின் துணைக் கொண்டு உடலினை இயக்குவதற்குரிய ஆற்றலை உயிர் பெற்றுக் கொண்டு உடலினை அழியாது பாதுகாக்கின்றது.

ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் உடலை இயக்க முடிவதில்லை. காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை...அந்த உடலின் உறுப்புகளும் தரையில் இயங்குவதற்கு பயன்படுவதில்லை. இந்நிலையில் உயிர், அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்த முயன்றும் பயன் இல்லாததால் இறக்கின்றது. காரணம் உயிர் அதன் சேவைக்கு கொண்டிருந்த கருவிகள் நிலத்தில் பயனற்றுப் போய் விடுகின்றன. நிற்க.

எனவே ஒவ்வொரு உயிரினத்தின் உடலிற்கேற்ப உயிர் இயங்குகின்றது என்றே நாம் அறிகின்றோம். இந்நிலையில் ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால் உடலின் தன்மைகேற்பவே உயிரால் உடலை இயக்க முடியும். ஈரறிவு உயிரினத்தின் உடலில் மூன்றாம் அறிவிற்கான புலனாகிய நாசியினை பயன்படுத்தவோ/உருவாக்கவோ உயிரால் முடியாது. நிற்க.

உடலிற்கேற்ப உயிரின் செயல்பாடுகள் அமைந்து இருக்கின்றது என்றும், ஒரு உயிர் மற்றொரு உயிராக மாறுவது இயலாத காரியம் என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். சரி...இப்பொழுது அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது என்று நாம் கண்டு இருக்கின்றோம். அவை புலன்களுக்கு ஏற்ப ஓரறிவு முதல் ஆறறிவு வரை பிரிக்கப்பட்டும் இருக்கின்றன என்றும் நாம் கண்டு இருக்கின்றோம். இந்நிலையில் தான் நாம் மனிதனைப் பற்றி பார்க்க வேண்டி இருக்கின்றது.

காரணம் அவனை ஐந்து அறிவுடையவனாகவும் வைத்து இருக்கின்றனர், ஆறறிவு உடையவனாகவும் வைத்து இருக்கின்றனர். மேலும் மனிதனும் ஒரு வகை மிருகம் என்றும் சிலர் கூறுகின்றனர். அது ஏன் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

அதற்கு ஆறாம் அறிவைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது...!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு