முந்தையப் பதிவு

சூத்திரம் 10 : ஆன்ம ஈடேற்றம்

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகிய இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதவுரை:

அவனே - ஞானக்கண்ணால் உணரப்பட்ட கடவுளே

தானே ஆகிய - தன்னை முழுமையாக ஆட்கொண்டவனாகிய நிலையில்

அந்நெறி - அவன் காட்டும் வழியில்

ஏகனாகி - தன்னை ஒப்படைத்து, அவன் வழியில் ஒன்றாகி

இறைபணி நிற்க - இறைவன் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க

மலம் - ஜென்ம பாவமாகிய சகசமலமும்

மாயை - சகசமலத்தின் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல் இறைவனுக்கு அடிமையாகி இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும்

தன்னொடு - ஆகிய இவற்றுடன்

வல்வினை - (சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டின் காரணமாகச் செயல்படக் கூடிய) கொடிய பாவ வினைகளும்

இன்றே - இல்லாமல் போயிற்றே.

பொருள்:

ஞானக் கண்ணினால் உணரப்பட்ட கடவுளே தன்னை முழுமையாக ஆட்கொண்ட நிலையில், அவன் காட்டும் வழியில் தன்னை ஒப்படைத்து அவன் வழியில் ஒன்றாகி கடவுள் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க, ஜென்ம பாவமாகிய சகசமலமும், சகசமலத்தினின்று விடுபட்டு இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும், சகசமலம், போராட்டம் ஆகியவற்றின் காரணமாக செயல்படக்கூடிய கொடிய பாவ வினைகளும் இல்லாமல், இவற்றினின்று முற்றிலும் விடுதலை அடைந்ததாய்ப் பரிசுத்த நிலையை ஆன்மா அடைகின்றது.

இவ்வாறு இடைவிடாமல் கடவுளை ஞானக்கண் கொண்டு நோக்கித் தியானிக்க, தியானிக்க, தனது சித்தத்தை முழுமையாக விட்டு கடவுளுடைய சித்தத்தையே செயல்படுத்தும் நிலைக்கு ஆன்மா வளர்கின்றது. 'இனி நான் அல்ல...என்னுள் வாழும் கடவுளே என்னைச் செயல்படுத்துகின்றான்' என்ற நிலைக்கு ஆன்மா வரும் பொழுது கடவுள் ஏவும் பணியில் தன்னை மறந்து ஒன்றித்து விடுகின்றது. அந்நிலையில் ஆன்மா செய்யும் செயல்கள் யாவும் கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் செயல்களாக மாறி விடுகின்றன. பிறவியிலேயே இவனைத் தொடர்ந்து வரும் சகசமலம் அழிந்து விடுகின்றது.

சகசமலத்திற்கு அடிமையாய் இருந்து அதன் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல், சகசமலத்தில் இருந்து விடுதலைப் பெற்று, கடவுளுக்கு அடிமையாகி இறை பணி செய்வதால், மாயையாகிய உடலின் போராட்டங்கள் நீங்குகின்றன. சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டில் இருந்து விடுதலைப் பெற்ற காரணத்தால், இவை இரண்டன் காரணமாகச் செயல்படக் கூடிய பாவ வினைகளும் இல்லாமல் அழிகின்றன.

அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் தன் உறுப்புகளை முன்பு அது அடிமை ஆக்கி இருந்தது. அதுபோல இப்பொழுது தூய்மையில் (பரிசுத்தத்தில்) மலரும் ஏற்புடைய வாழ்விற்கு அது தன் உறுப்புகளை உட்படுத்திக் கொள்கின்றது.

முன்னே பாவத்திற்கு அடிமையாயிருந்த ஆன்மா, பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமையாகின்றது. இதனால் அதற்குக் கிடைத்துள்ள பலன் தூய்மையடைவதே, பரிசுத்தம் ஆவதே ஆகும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு