முந்தையப் பதிவு

சூத்திரம் 12 : ஆன்மாவே கோயில்

செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

பதவுரை:

செம்மலர் - சிவப்பு மலர் போன்ற

நோன்தாள் - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவமாகிய நோன்பினில் நிலை நின்ற இறைவனின் திருவடிகளை

சேரல் ஒட்டா - சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நின்ற

அம்மலம் கழீஇ - அக்கொடிய பாவம் கழுவப்பட்டு

அன்பரொடு மரீஇ - என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு

மால் அற - ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு

நேயம் மலிந்து - ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு

அவர் வேடமும் - ஆன்மாவின் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலைப் பெற்ற நிலையில் அது

அரன் - பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன்

ஆலயம் தானும் என - மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து

தொழுமே - இறைவனை வாழ்த்தி வணங்குமே

பொருள்:

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவத்தில் நிலை நின்று சிகப்பு மலர் போன்று விளங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நிற்கும் கொடிய பாவம் கழுவப்பட்டு, என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு, இறைவனின் புதிய சாயலைப் பெற்று, பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து தன்னை மீட்டு ஆட்கொண்ட இறைவனை வாழ்த்தி வணங்கி இன்புறும்.

இறைவனின் திருவடிகளில் இணைந்த ஆன்மா, மயக்கம் முற்றிலுமாக நீங்கப் பெற்று ஆன்மீக நேயத்தால் நிரப்பப் பெறுகின்றது. அவ்வாறு நிரப்பப்பட்ட ஆன்மா எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குச் சித்தாந்த சாத்திரத்தின் திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகின்றது.

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான். - திருக்களிற்றுப்படியார் 55


இவ்வாறு அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவழியும் ஆன்மாவாக, இறைவன் வாழும் திருக்கோயிலாக மாறுகின்றது. அதன் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலாகிய இறை வேடத்தை தாங்கிக் கொள்கின்றது. என்பையும் பிறர்க்கீயும் அன்பனாக மாறுகின்றது. இப்படிப்பட்டவர்களே இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயில்கள் ஆகின்றனர். இறைவனை இடைவிடாது தொழும் பெரும்பேற்றை அடைந்து இறைவனில் இன்புறுகின்றனர். இதனையே இறைவனை உணர்ந்தவர்கள் கூறிச் சென்று உள்ளனர்

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இந்த நிலையே அவர்கள் இடைவிடா இன்பத்தை, இரவா இன்பத்தை அடையும் அதி உயர் நிலையாகும். இவ்வகையில் அடையும் இன்பம் என்றுமே அழிவதில்லை. அந்த இன்பம் இவ்வுலகிலேயே தொடங்குகின்றது.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

3 கருத்துகள்:

தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலின் பதிப்பகத்தின் பெயரை வெளியிட்டால் உதவியாக இருக்கும். நன்றி!

பதிப்பகத்தின் பெயர் - மெய்ப்பொருள் பதிப்பகம்

முகவரி - 278, கொன்னூர் நெடுஞ்சாலை. அயன்புரம், சென்னை - 600 023

தொலைபேசி - 26743842

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.
could u give me this in english. as it is written in bible

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு