முந்தையப் பதிவு

சூத்திரம் 8 : ஆன்ம மீட்பு

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

தம்முதல் - தமக்கு முதல்வனாகிய இறைவன்

ஐம்புல வேடரின் வளர்ந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து

அயர்ந்தனை என - உன்னையும் உன்னைப் படைத்த இறைவனையும் அறியாது மயங்கி உள்ளனை என்று

குருவுமாய் - குருவாக உலகத்தில் வந்து

தவத்தினில் - ஆன்மாவிற்காகத் தான் துன்பத்தை ஏற்றுத் தன்னுயிர் தானறப் பெறுதலாகிய தவத்தினில்

உணர்த்த - ஆன்மாவிற்கு உணர்த்திக் காட்ட

விட்டு - ஆன்மாவானது தனது பாவத்தை விட்டுப் பிரிந்து

அன்னியம் இன்மையின் - ஆன்மாவிற்கு இறைவனோடிருந்த பிளவு நீக்கப்பட்டமையால்

அரன் - பாவத்தை அரித்தெடுப்பவனாகிய இறைவனின்

கழல் - திருவடியைச்

செலுமே - சென்று அடையும்.

விளக்கம்:

தமக்கு முதல்வனாகிய கடவுள் ஆன்மாவை நோக்கி 'நீ மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து, இப்பொழுது இருக்கும் இழி நிலையை அடைந்தாய். நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியாது மயங்கி விட்டாய்' என்று குருவாக உலகில் வந்து, ஆன்மாவை மீட்பதற்காகத் தான் ஏற்றுக் கொள்ளும் துன்பமாகிய தவத்தினால், ஆன்மாவிற்கு உண்மையை உணர்த்திக் காட்ட, ஆன்மாவானது தன் பாவ நிலையை விட்டுத் தனக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள பாவமாகிய பிரிவினை நீக்கப்பட்டு மீட்கப் பட்டமையால் பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவனின் திருவடியைச் சென்று அடையும்.

ஆன்மாவினால் மட்டுமே கடவுளையும், உலகப் பொருளையும் அறிந்து உணர்ந்து கொள்ள இயலும். உலகப் பொருளை அறிந்துக் கொள்வதில் ஆன்மாவிற்கு இடையூறு ஒன்றும் இல்லை. ஆனால் கடவுளையும் தன்னையும் அறிந்துக் கொள்ள இயலாமல் சகச மலத்தினால் அது மறைப்புண்டு இருக்கின்றது. சகசமலம் ஆன்மாவை அதனுடைய பிறப்பில் இருந்தே தொடர்ந்து வருகின்றது. ஆகவே, ஆன்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றது. இறைவன் வந்து சகசமல மறைப்பை நீக்கி ஆன்மாவை விடுவிக்க இயலும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம். செம்பில் களிம்பு சேர்வது இயல்பு. செம்பில் சேரும் களிம்பை நிலையாக நீக்குவது எவ்வாறு?

களிம்பே சேராத பசும்பொன் கட்டி ஒன்றை எடுத்து, அக்னிக் குகையிலே (உலோகம் உருக்கும் பாத்திரத்திலே) அதை உருக்கி, உருகி நிற்கும் அதனுடன் செம்பையும் சேர்த்தால், செம்பு அதனோடு சேர்ந்து உருகி இரண்டும் ஒன்றாகி, ஒரு புதிய உலோகம் கிடைக்கின்றது. இந்தப் புதிய உலோகம் களிம்பு சேரக் கூடிய செம்பும், களிம்பு சேராத பொன்னும் சேர்ந்து உருவானதாயிருந்தாலும், இவ்வுலோகத்தில் உள்ள செம்பில் களிம்பு சேர்வதில்லை. ஏனென்றால் அச்செம்பு பசும்பொன்னுடன் சேர்ந்து நிற்கிறது.

இதைப் போலவே மலத்துளதாம் ஆன்மாவை மீட்க, மலம் சிறிதுமற்ற இறைவன் தவமாகிய அக்னிக் குகையிலே இறங்குகின்றான். இறங்கி, ஆன்மாவிற்காக உருகி நிற்கின்றான். அவனோடு இணைக்கப்பட்ட ஆன்மாவும் தன்னுடைய மலங்களுக்காக உருகிக் கண்ணீர் வடித்து இறைவனுடன் இணைகின்றது. அப்பொழுது மலமறைப்பு ஆன்மாவை விட்டு நீங்கி ஆன்மா இறைவனின் சாயலைப் பெற்றுத் தன்னை மீட்டுக் கொண்ட இறைவனை அடைகின்றது.

 இறைவனாகிய பசும்பொன்னுடன் இணைந்திருக்கும் செம்பாகிய ஆன்மாவை விட்டு, களிம்பாகிய மலம் நீங்குகின்றது.

மன்னனின் மகன் காணாமற் போய்க் காட்டிலே வேடர்களோடு வாழ்கின்றான், வேடர்களோடு வாழும் மன்னர் மகன் தன்னையும், தான் அரச குமாரன் என்பதையும், தனது தந்தை ஆட்சி செய்யும் மன்னர் என்பதையும் மறந்து தன்னை ஒரு வேடர் குடியில் தோன்றிய வேடனாக நினைத்து வாழ்கின்றான்.

வேடர் குடியில் வாழும் தன் மகனுக்கு அவன் யார் என்பதை உணர்த்தி, அரண்மனைக்கு அழைத்து வர அரசருக்கு வாய்ப்பு நேரிடுகிறது. அரச கோலத்தில் தான் சென்றால் தன்னைப் பார்த்து அவன் பயந்து ஓடிவிடக் கூடும் என்று எண்ணிய அரசன், தன் மகன் வாழும் நிலையிலுள்ள ஒரு வேடனைப் போல் உருவங்கொண்டு, மகனைத் தேடி காட்டிற்கு வருகின்றான். காட்டிலே வேடர் குடியில் தன மகனைச் சந்தித்து, " நீ வேடர் குடியைச் சார்ந்தவன் அல்லன்; ஆட்சிக்குரியவன். ஆகவே இந்த வேடர் தொடர்பை விட்டு அரண்மனைக்குத் திரும்பு" என்று அவனுக்கு உண்மை நிலையை அறிவுறுத்துகின்றான். வேடர் குடியிலிருந்த மன்னர் மகன் தன்னையும் தன் தலைவனையும் உணர்ந்து அரண்மனைக்குத் திரும்பும்படியாக அரசனைப் பின்பற்றுகின்றான்.

இறைவன் ஆன்மாவை மீட்டுக் கொண்ட தன்மையும் இவ்வாறே விளக்கப்படுகிறது.

முதல் மனிதனானவன் பாவத்தில் வீழ்ந்ததை சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமான திரு உந்தியார் பின் வருமாறுக் கூறுகின்றது.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41


அவ்வாறு பாவத்தில் வீழ்ந்து ஐம்பொறிகளான வேடர்களுடன் வாழ்ந்து வரும் மனிதனை மீட்க இறைவன் மனித உருக் கொண்டு மண்ணில் வந்தான் என்றே போற்றிப் பஃறொடை கூறுகின்றது

இறவா இன்பத்தெமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான் - போற்றிப் பஃறொடை 69

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1


சிலர் இறைவன் மனிதனாகப் பிறக்கவில்லை; அருளே உருவாக ஒரு தோற்றம் மட்டுமே கொண்டான் என எண்ணுகின்றனர். அதற்கு விடையாய், இறைவன் நம்மைப் போன்ற மனித உருவம் கொண்டு பிறந்தான் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாகிய சங்கற்ப நிராகரணம் கூறுகின்றது.

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான், எய்ந்தவர் எம்மனோரே - சங்கற்ப நிராகரணம் (சைவவாதி நிராகரணம் 25-27)


அவ்வாறு மனித உரு எடுத்து வந்த இறைவன் மனிதன் வீழ்ந்திருந்த பாவத்தை அறுக்க வந்தான் என்பதனை,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93என்றே திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.


சகசமலத்திலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் முயற்சியில் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் தவத்தை இறைவனோடு இணைத்துக் கூறுகின்றது சைவ சித்தாந்தம். உலக மக்கள் எல்லோரும் செய்த தவத்தை விட உலக மக்களுக்காக இறைவன் செய்த தவமே மிகவும் உயர்ந்தது என்பதை,


மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென்று உந்திப்பற
தவத்தில் தலைவரென்று உந்திப்பற - திரு உந்தியார் 12


என்று எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிச் சித்தாந்த சாத்திரத்தின் முதல் நூலாகிய திருஉந்தியார் கூறுகின்றது.

சகசமலமாகிய மூலையிருந்தாரை விடுவித்து அம்பலமாகிய முற்றத்தே கொண்டு நிறுத்தியவராகிய இறைவன் மிகவும் பெரியவர். எல்லாத் தவங்களிலும் அவர் தவமே தலைமை பெற்றது. அதுவே ஆன்ம மீட்பை மக்களுக்கு எல்லாம் அருளுவது என்பன விளக்கப்படுகின்றன.

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) 'தவத்தினில் உணர்த்த விட்டு' என்பன இங்கு சற்று ஆழ்ந்து நோக்கத்தக்கது. விட்டது ஆன்மா, உணர்த்தியது இறைவன்.

தவம் இறைவனுடைய தவமா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். விட்டது ஆன்மா என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.

விட்டது எதை? மலத்தை.

விடுவதற்கு முன் ஆன்மா மலத்தைப் பற்றி இருந்ததா? ஆம்.

அந்நிலையில் சகசமலத்தில் உள்ள ஆன்மா தன்னையும் இறைவனையும் உணர இயலுமா? இயலாது என்பது முன்னரே 'சகசமலத்து உணராது' என்பதின் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

தன்னையும் இறைவனையும் உணராத ஆன்மா எவ்வாறு தவம் செய்யப் புறப்படும். ஆகவே தவம் ஆன்மாவின் தவமன்று. தவத்தில் தலைவராகிய இறைவனுடைய தவமேயாகும்.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

3) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

நன்றாக இருக்கிறது.ரொம்ப நாட்களாக படிக்கணும் என்று நினைத்திருந்தேன்.விளக்கம் தேடிவந்தேன்.கிடைத்துவிட்டது.சைவ சித்தாந்தத்தின் மிக முக்கியமான-தத்துவப் பகுதியை விளக்கமாக அளிப்பதற்கு நன்றிகள்...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு