வேதங்கள்!!!

இந்து சமயத்தின் அடிப்படை கருத்துக்களைக் கொண்டவை இவை என்று சிலரால் இன்று நம்பப்பட்டும் அவ்வாறே பரப்பப்பட்டும் இருப்பவை. நாம் முந்தைய பதிவுகளில் சைவ வைணவ சமயங்களே ஒன்றிணைக்கப்பட்டு இந்து சமயம் என்று வழங்கப்பெருகின்றன என்று கண்டோம். இந்நிலையில், அதாவது இந்து சமயத்தின் அடிப்படை வேதங்களே என்ற கருத்து நிலவும் பட்சத்தில் நாம் இந்த வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களின் அடிப்படை வேதங்களா... காண்போம்.

இன்று உங்களுக்கு பிடித்த கடவுள் யார் என்று மக்களிடம் கேள்விகள் கேட்டால் 'சிவன்,முருகன்,பிள்ளையார்,பெருமாள்,அம்மன்,இராமன்' போன்ற பெயர்கள் பதிலாக வருமே அன்றி 'இந்திரன்,வருணன்,அக்னி,வாயு,பிரசாசுபதி' போன்ற பெயர்கள் பதிலாக வரும் வாய்ப்புகள் மிக அரிது. இப்பொழுது நாம் இந்த கடவுளரின் பெயர்களைப் பற்றி பார்ப்போம்.

சிவன்,முருகன்,பெருமாள் போன்ற பெயர்கள் சைவ வைணவ சமயக் கடவுள்களின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எதுவும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்திரன்,வாயு,அக்னி போன்ற பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்களின் பெயர்கள். இக்கடவுள்களுக்கே வேதத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு வேதத்தில் சிறப்பிக்கப்பட்டு இருக்கும் இக்கடவுள்கள் சைவ வைணவ சமயங்களில் ஏதோ ஒரு மூலையில் இருப்பதையே நாம் இன்று காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்... வேதத்தில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றால் வேதம் போற்றிய இந்திரன்,வருணன் போன்ற கடவுள்களைத் தானே சைவ வைணவ சமயங்களும் போற்றி இருக்க வேண்டும் மாறாக வேறு தெய்வங்களை முதன்மைப்படுத்தி அச்சமயங்கள் விளங்கிக் கொண்டு இருப்பது ஏன்?

சரி பெயர்கள் மாறி உள்ளன. இருக்கட்டும். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் காண வேண்டி இருக்கின்றது.
பலி வழிபாடு...!!!

வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தெய்வங்கள் அனைவருக்கும் பலி இட்டு வணங்கும் முறையே காணப்படுகின்றது. இறைவனை கவர பலி தேவை என்பதே வேதக் கொள்கை. வேதங்கள் இக்கருத்துக்களையே கூறுகின்றன. சரி இப்பொழுது இந்த பலி இடும் பழக்கம் சைவ வைணவ சமயங்களில் காணப்படுகின்றனவா என்று கண்டால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது.

சிவன் கோவில்களிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பலி இடும் பழக்கம் கிடையாது. அங்கே பலிபீடங்கள் இருக்கின்றன அனால் பலி கிடையாது. இப்பழக்கமே முருகன் கோவிலிலும் சரி பிள்ளையார் கோவில்களிலும் சரி கடைப்பிடிக்கப்படுகின்றன. அதாவது இன்று பெருவாரியான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களுக்கு பலி இட்டு வணங்கும் வழிபாட்டு முறை இல்லை.

அட என்னங்க இன்றும் நம்முடைய ஊர்களில் அய்யனாருக்கும் சரி மற்ற குல தெய்வங்களுக்கும் சரி விலங்குகளை பலியிட்டு வழிபடும் பழக்கம் இருக்கின்றதே இதுக்கு என்ன சொல்றீங்க என்ற கேள்வி இப்பொழுது எழலாம். நியாயமான கேள்வி தான். இந்தக் கேள்விக்கு விடையினை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் மீண்டும் சைவ வைணவ சமயத்துக்கும் வேதங்களுக்கும் வரலாம்.

வேதங்கள் - பலி வழிபாட்டு முறையினை உடையவை.
சைவ வைணவ சமயங்களிலோ பலி கிடையாது. ஏன் இந்த வேறுபாடு என்று வினவின் நமக்கு இரு தரப்புகளிடம் இருந்து இரு வேறு பதில்கள் வருகின்றன. ஒரு தரப்பினர் வேதங்களை நம்பிகின்ற தரப்பினர். மற்றொருவர் கடவுள் நம்பிக்கை அற்ற தரப்பினர். இப்பொழுது அவர்கள் கூறும் கூற்றினைக் காண்போம். முதலில் வேதங்களை நம்பும் தரப்பினரின் கூற்றினைக் காண்போம்.

இவர்களின் கூற்றின் படி வேதங்களில் பலி வழிப்பாட்டு முறை இருந்தாலும் வேதாந்தங்களில் பலி மறுப்பு கோட்ப்பாடுகள் இருக்கின்றனவே. எனவே பலி மறுப்பும் வேதங்களின் கோட்பாடுகளே என்கின்றனர். ஆனால் இப்பொழுது நமக்கு சில கேள்விகள் எழுகின்றன... ஏன் இந்த திடீர் மாற்றம். வேதாந்தங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுந்தன என்றால் திடீர் என்று கோட்பாடுகளின் ஏன் மாற வேண்டும். பலி என்ற விடயம் ஒன்று தான் என்று இல்லை பல விடயங்கள் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையே மாறுபடுகின்றன. வேதத்தில் இருக்கும் இயற்கை வழிபாட்டு முறை வேதாந்தத்தில் இல்லை மாறாக ஒரு கடவுள் வழிபாட்டு முறை காணப்படுகின்றது. மேலும் வேதத்தில் இல்லாத ஆன்மா, மனிதன் இறைவனை அடைய வழி போன்ற பல கருத்துக்கள் வேதாந்தத்தில் காணப்படுகின்றது. வேதத்திற்கும் வேதாந்தங்களுக்கும் ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. சைவ வைணவத்துக்கும் வேதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காண நாம் வேதாந்தங்களை அணுகினால் கேள்வி வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் ஏன் என்ற நிலைக்கு சென்று விட்டது. இக்கேள்விக்கு விடை இதுவரை கிட்டாததால் நாம் இப்பொழுது மற்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.

அட கொஞ்சம் நில்லுங்க... வேதம் அப்படின்னு சொல்றீங்க சரி... அது தெரியும்... வேதாந்தங்கள் அப்படின்னு சொல்றீங்களே அப்படினா என்னனு சொல்லுங்க...அப்படினா தான படிக்குற எல்லாத்துக்கும் புரியும் அப்படின்னு கேட்குறீங்களா சரி தான்.


வேதாந்தங்கள் என்றச் சொல் - வேதா + அந்தங்கள் - அதாவது வேதத்தின் முடிவு பொருளைத் தருபவை என்று பொருள் தருவது. இதனை உபநிடங்கள் என்றும் வழங்குவர். இவை வேதங்களைத் தொடர்ந்து அவற்றை விளக்க எழுதப்பட்டவை. எழுதப்பட்டதின் காரணத்தை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் கருத்தினைக் காண்போம்.

அவர்களின் கூற்று நம்மை சமண புத்த சமய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் முன்னரே அம்மதங்களைப் பற்றிக் கண்டு இருக்கின்றோம். அவை பலி மறுப்பு கோட்பாடு உடைய சமயங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி பத்தாம் நூற்றாண்டு வரை இந்திய மண்ணில் நிலை பெற்று சிறந்து விளங்கிய சமயங்கள். அதுவும் அசோகரின் காலத்தில் கொடி கட்டி பறந்த சமயங்கள். அக்காலத்தில் மக்கள் பலர் இச் சமயக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு இருந்ததால் பலி இடும் பழக்கங்கள் சற்று நலிவடைந்து இருந்தன. சரி இப்பொழுது நாம் இவர்களின் கூற்றினைக் காண்போம்.

பலி வழிபாட்டினை உடைய மக்கள், பலி மறுப்பு சமயங்களான சமணத்திற்கும் புத்ததிற்கும் மக்களிடையே பெருகும் செல்வாக்கினைக் கண்டு, மக்களை தன் பால் இழுக்க பலி வழிப்பாட்டு முறையினை மாற்றி பலி இல்லா முறைகளை வகுத்துக் கொண்டனர். அவ்வாறு மாற்றி தங்களது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர். எனவே தான் இன்றைய சைவ வைணவ சமயங்களில் பலி என்பது இல்லை. இதுவே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

ம்ம்ம்...ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து தான். மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலு பெற்று வருகின்றது என்றால் அக்கருத்துகளை வைத்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்ளும் வழிகளை உருவாக்கிக் கொள்கின்றவர்களை நாம் இன்றளவிலும் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். எனவே சமண புத்தக் கொள்கைகளை சேர்த்துக் கொண்டு வேதக் கருத்துக்கள் உருமாறி இருக்கலாம் என்ற இவர்களின் கண்ணோட்டத்தை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களின் கூற்றிலேயும் ஒரு கேள்வி எழுகின்றது.

௧) சமண புத்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். ஆனால் சைவ வைணவச் சமயங்களோ பலி நிறைவேற்றச் சமயங்கள். அதாவது பலி நிறைவேறி விட்டது இனிமேல் பலி தேவை இல்லை என்ற கொள்கை உடைய சமயங்கள். எனவே தான் அக்கோவில்களில் பலிபீடங்கள் இருக்கின்றன ஆனால் பலி இல்லை. எனவே சமண புத்த சமயத்தில் இருந்து இந்தக் கொள்கையை (பலி இல்லா வழிபாடு) சைவமும் வைணவமும் பெற்று இருந்தன என்றால் இவற்றில் ஏன் இந்த வேறுபாடு என்றும் நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. இதனை நாம் பின்னர் காண்போம்.

சரி இப்பொழுது நாம் கண்ட வரை...

௧) வேதக் கடவுள்கள் சைவ வைணவத்தில் சிறு நிலையில் இருப்பதும், சைவ வைணவக் கடவுள்களை பற்றி வேதத்தில் குறிப்புகள் காணப்படாது இருப்பதும்
௨) பலி கோட்பாடுடைய வேதத்தில் இருந்து எவ்வாறு பலி இல்லா வழிப்பாட்டுடைய சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்ற கேள்விக்கு விடை இல்லா காரணத்தினாலும்
௩) வேதத்தில் காணப்படும் பல கடவுள் வழிப்பாடு முறை மற்றும் இயற்கை வழிப்பாட்டு முறை போன்றவை சைவ வைணவத்தில் காணப்படாதமையும்
௪) சைவ வைணவத்தில் இருக்கும் ஒரு மூலக் கடவுள் (சைவம் -சிவன், வைணவம்-விஷ்ணு) என்ற கோட்பாடு வேதத்தில் காணப்படாதமையும்
௫) சைவ வைணவ சமயத்தின் அடிப்படையான இறைக் குடும்ப வழிப்பாட்டு பழக்கமும், அவதாரக் கோட்பாடும் வேதத்தில் காணப்படாதமையும்

சைவமும் வைணவமும் வேதங்களில் இருந்து தோன்றிய சமயங்கள் அல்ல என்று நாம் கூறுவதற்கு வழி வகுக்கின்றன. சரி வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றவில்லை என்றால் அவை எவற்றில் இருந்து தோன்றின...பின்னர் வேதங்கள் என்றால் என்ன...அவற்றின் காலங்கள் என்ன? ஏன் வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்கள் நிலவுகின்றன?

இக்கேள்விகளுக்கு நாம் விடையினை காண்போம்...!!!

பயணிப்போம்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29

4 கருத்துகள்:

அருமையான தொகுப்புகள் வாழ்த்துக்கள்

Here is a discussion I came across. I have given the link to the fourth part which has links to the previous three parts.

http://jataayu.blogspot.in/2008/06/4.html

The above links discuss the relation between vedas, vedantham and siddhantham.

வணக்கம்
வேதங்களைக் கற்றவர்கள் சற்று போசிக்கத் தொடங்கிறார்கள் ஏன் என்றால் கடவுளுக்கு பலி கொடுக்க தேவை இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக சிந்திக்கத் தொடங்கிறார்கள். மக்கள் பல புராணக்கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும் கேக்கத் தொடங்கிறார்கள் மேலும் இரண்டுக்கும் வித்தியத்தைப் புரிந்து கொள்கிறார்கள் அதன் பின்பு வேதங்கள் கற்றவர்களுடன் உரையாட தொடங்கிறார்கள் பின்பு வேதம் கற்றவர்களும் ''அறிவியல் பூர்வமாக பல விடங்களையும் கண்டுபிடித்து இயற்கைக்கு எந்த எதிர்ப்பார்ப்பு இல்ல எல்லா பொருள்களும் அழியக்கூடியவை அழியாத ஒன்று இந்த உலகம் ஒரு நாளைக்கு ஒரு பொருளிலிருந்து பல உயிர்கள் தோன்றக்கூடும் உணவு சங்கிலி போல தொடர்ந்து சூழற்சியாகும் என்பதை அவர்கள் உணர்ந்து சில அறிவுரை வழங்கினார் ஆனால் மக்களுக்கு மீணடும் சந்தேகத்தை தீர்பபதற்கும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும என்பதற்கு இரண்டு கோட்பாட்டை முன் வைக்கின்றனர் அது தான் சைவம்,வைணவமாகும்.
முனைவர்.ம.மூவேந்தன்
சீர்காழி
நாகை மாவட்டம்
8056506519
vendar007@gmail.com

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு