திருநீறு!!!

என்று சொன்னாலே அது சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கும் ஒரு சொல்லாகவே இன்று இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் சின்னமும் திருநீறு தான் என்று நாம் எவ்வாறுக் கூறுகின்றோம் என்பதனை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பழைய ஏற்பாட்டினை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் திருநீறு என்றால் என்ன என்பதனை சற்று சுருக்கமாக பார்த்து விடுவோம்.

திருநீறு என்பது சாம்பலே என்றும், அதனை நெற்றியில் இறைவனை நினைத்து வைத்துக் கொள்வது வழக்கம் என்பதனை நாம் அறிந்து இருப்போம். சாதாரண சாம்பல் இறைவனை நினைத்து இடப் படுவதால் 'திரு' என்னும் சிறப்பு விகுதி பெற்று திருநீறு என வழங்கப்படுகின்றது. சரி இப்பொழுது இப்பழக்கம் விவிலியத்தில் கூறப்பட்டு உள்ளதா என்பதனை நாம் காண்போம்.

பழைய ஏற்பாட்டினில் பல இடங்களில் சாம்பலை மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் மனம் திரும்புதலின் அடையாளமாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்ற விடயம்  பின்வரும் பழைய ஏற்பாட்டுச் செய்திகள் மூலமாக நமக்கு தெரிய வருகின்றது.

"தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்." - சாமுவேல் II - 13 -19 

"மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்."  - எசுதர் 4 : 3 

"இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்." - யோனா 3 : 6 

மேலும் பழைய ஏற்பாட்டினில் திருநீற்றினை எவ்வாறு செய்கின்றனர் என்பதனை பற்றியக் குறிப்புகளும் உள்ளன. அதன் படி

ஒரு பழுதற்ற செங்கிடாரி (ஆடு) ஒன்றினை பலியிட்டு அதன் தோல் தசை இரத்தம் ஆகியவற்றினை சாணியுடன் சுட்டு எரித்து, அவ்வாறு எரிப்பதனால் கிடைக்கும் சாம்பலை ஒரு தூய்மையான இடத்தில் வைக்க வேண்டும். அந்த சாம்பல் மக்களின் பாவத்தினை போக்குவதற்கு பயன் படும். (எண்ணாகமம் : 18 - 1 : 9 )

இந்தச் செய்திகள் வாயிலாக சாம்பலின் பயன்பாடு யூதர்கள் மத்தியில் இருந்தது என்பதனை நாம் அறிய வருகின்றோம். ஆனால் இது வரை நாம் கண்ட செய்திகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டினைச் சார்ந்தவை. இயேசு கிருத்து வருவதற்கு முன்னர் நிலவிய பழக்கங்கள். எனவே இப்பொழுது நம் முன் ஒரு கேள்வி வருகின்றது. இயேசு கிருத்து வந்ததிற்கு பின்னரும் சாம்பலின் பயன்பாடு மக்களிடத்து இருந்து இருக்கின்றதா? புதிய ஏற்பாடு அதனை விளக்குகின்றதா?

ஆம்!!! புதிய ஏற்பாட்டிலும் சாம்பலின் பயன்பாடு வருகின்றது. புதிய ஏற்பாட்டிலும் சாம்பல் மனம் திரும்புதலின் அடையாளமாகவும் பாவத்தினை நீக்கும் சின்னமாகவும் பயன்பட்டு இருக்கின்றது. இதனை பின் வரும் வரிகள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.

"கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்." - மத்தேயு 11 : 21

"வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்." - எபிரெயர் 9 : 13

இந்தச் செய்திகள் மூலமாக சாம்பலினை பயன்படுத்தும் பழக்கம் யூத மக்களிடம் கிருத்துவுக்கு முன்பும் கிருத்துவுக்கு பின்னாலும் இருந்து இருப்பதனை நாம் அறிய முடிகின்றது.

மேலும் அவர்கள் அந்த சாம்பலினை தங்களின் நெற்றியில் இட்டார்கள் என்பதனை விளக்கும் செய்தியும் விவிலியத்தில் இருக்கின்றது.

"ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்." - விடுதலைப் பயணம் 13 : 9 (பழைய ஏற்பாடு)

"மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்." - திருவெளிப்பாடு 14 : 1 (புதிய ஏற்பாடு)

மேற்கண்ட செய்திகள் மூலமாக சாம்பல் அல்லது திருநீற்றின் பயன்பாடு விவிலியத்தில் விளக்கப்பட்டு உள்ளது  என்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.

ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருக்கலாம். இவை அனைத்தும் வேறு அர்த்தங்கள் தரலாம் என்ற எண்ணமும் இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு தகவல்.

சாம்பலின் பயன்பாடு இன்றும் கிருத்துவர்களின் மத்தியில் இருக்கின்றது. இறைவனை நினைத்து அவர்கள் தங்கள் நெற்றியில் இன்றும் திருநீற்றினை அணிந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். திருநீற்றின் வடிவம் மாறி இருக்கின்றது. ஆனால் அர்த்தம் மாறவில்லை. அதனை அவர்கள் ஒரு புனித நாளாகவே கொண்டாடுகின்றனர்.

இயேசு கிருத்துவின் மரணம் மற்றும் உயிர்த்து எழுதலினை நினைவுக் கூர்ந்து அதற்கென்று நோன்பு மேற்கொள்ளும் காலத்தின் தொடக்க நாளிலேயே தான் அவர்கள் திருநீற்றினை அணிந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர்.

அந்த நாள் தான் சாம்பல் புதன்கிழமை என்று வழங்கப்பெறும் திருநீற்றுத் திருநாள் ஆகும். அந்நாளில் தான் கிருத்துவர்கள் இன்றும் அவர்கள் நெற்றியில் திருநீற்றினை சிலுவை வடிவில் அணிந்துக் கொண்டு வழிபடுகின்றனர்.

ஆனால் நாம் சென்ற பதிவில் பார்த்த செய்திகளின் படி சிலுவை என்பது கிருத்துவர்களின் சின்னம் அல்ல என்றும் கி.பி நான்காம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் தான் அரசியல் காரணமாக சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக ஆக்கப் படுகின்றது என்பதனையும் நாம் அறிந்துக் கொண்டோம். எனவே சாம்பல் புதன்கிழமை என்று வழங்கப்பெறும் நாளில் வெறும் திருநீறே முதலில் கிருத்துவர்கள் பூசிக் கொண்டு இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் காலத்தில் சிலுவையினை சின்னமாக கொண்டு வந்த பொழுது வெறும் திருநீறு, சிலுவை வடிவமாக மாறி இருக்க வேண்டும் என்றும் நாம் கருத முடிகின்றது.

எனவே கிருத்துவ மக்கள் திருநீற்றினையே தங்களின் சின்னமாக கொண்டு இருந்தனர் என்று நாம் அறிய முடிகின்றது. அவ்வாறே அவர்கள் பயன்படுத்திய அந்த சின்னத்தினைக் கொண்டே தூய தோமாவும் தமிழகம் வருகின்றார்.

சரி கிருத்துவத்தில் திருநீறு பயன் பட்டு இருக்கின்றது சரி... ஆனால் சைவ வைணவ சமயங்களிலும் திருநீறு பயன் படுகின்றதே... ஏன் இந்த ஒற்றுமை என்ற கேள்வி இங்கே இயல்பாகவே எழும்.

அந்தக் கேள்விக்கும் மேலும் பல ஒற்றுமைகளுக்கும் விடை அளிக்க தோமா காத்துக் கொண்டு இருக்கின்றார்.

தோமாவை சந்திப்போம்...!!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23

கிருத்துவம்...!!!

இன்று உலகில் உள்ள மக்களில் அதிகப் பேரால் பின்பற்றக் கூடிய ஒரு மதம். இன்று அதன் பலம், செல்வாக்கு போன்றவற்றினை எண்ணிப் பார்த்தால் வியக்க மட்டுமே செய்ய முடியும். அப்பேர்ப்பட்ட அரசியல் செல்வாக்கினையும் பண பலத்தினையும் ஆன்மீகத்தோடு கொண்டு விளங்கும் ஒரு அமைப்பாக கிருத்துவம் இருக்கின்றது. ஆனால் ஆரம்பக் காலம் முதலே கிருத்துவம் இவ்வாறு பலம் பொருந்திய அமைப்பாக இருந்ததா என்றால் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும். ஆரம்பக் காலத்தில் கிருத்துவத்தின் வளர்ச்சி சீரான ஒன்றாக இருக்கவில்லை.

ஆரம்பக்கால கிருத்துவர்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள்....ரோமர்களின் வாயிலாக. கிருத்துவினைக் கொன்ற ரோமர்கள் அடுத்து கிருத்துவினை பின்பற்றியவர்களை குறி வைக்க ஆரம்பித்தனர்.

"ஐயா வணக்கங்கள்...இயேசுவின் கருத்துக்களை தாங்கள் போதிக்கின்றீர்களா...நல்லது. உங்களின் சேவை முடியும் நேரம் வந்து விட்டது. அதோ உங்கள் இயேசு அலைகின்றார். சென்று வாருங்கள்" என்றவாறே இயேசுவினை பின்பற்றியவர்களை தேடித் தேடி கொன்றுக் கொண்டு இருந்தனர் ரோமர்கள் மற்றும் யூதர்கள்.

இயேசுவின் கருத்துக்களை பரப்ப உலகம் முழுவதும் சென்ற அவரின் சீடர்களில் பலர் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு இடத்தில் கொல்லப்படுகின்றனர். அவர்களுள் சிலர் சிலுவையிலும் அறையப்படுகின்றனர்.

இந்நிலையில்...அதாவது கிருத்துவின் கருத்துக்களும் பரப்பப்பட வேண்டும்...ஆனால் ரோமர்களும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற நிலையில் சில ரகசியக் குறியீடுகளை உருவாக்குகின்றனர் அன்றைய கிருத்துவர்கள். அப்படிப்பட்ட ஒரு குறியீடு தான் மீன் சின்னம்.

வரலாற்றுக் கூற்றுகளின் படி கிருத்துவர்கள் ரோமர்களால் வேட்டையாடப் பட்ட பொழுது அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள இந்த மீன் சின்னத்தினையே பயன்படுத்தினர். ஒருவர் மற்றொருவர் கிருத்துவரா என்பதனை அறிந்துக் கொள்ள மீனின் மேல்பகுதி போன்ற தோற்றமுள்ள அரை வட்டத்தினை வரைவார். அதனைக் கண்ட மற்றொருவர் அவரும் கிருத்துவராக இருக்கும் பட்சத்தில் மீனின் அடிப்பகுதியை போன்ற அரை வட்டத்தினை வரைந்து சின்னத்தினை முற்றுப் பெற செய்வர். இவ்வாறே கிருத்துவர்கள் ஆரம்பக் காலத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுக் கொண்டனர்.

மேலும் மீன் சின்னம் பல இடங்களில் கிருத்துவினையும் கிருத்துவர்களையும் குறிக்க பயன்பட்டு இருக்கின்றது.

எடுத்துக்காட்டுக்கு... கிரேக்கத்தில் மீனைக் குறிக்கும் 'இக்தைசு' என்னும் சொல் 'இயேசு கிருத்து கடவுளின் மகன் - மீட்பர்' என்னும் பொருள் தரும் வண்ணம் பயன்பட்டு இருக்கின்றது.

ரோமர்களின் சுரங்கக் கல்லறைகளில் இயேசு கிருத்து மீன் சின்னத்தில் குறிக்கப்பட்டு உள்ளார்.

இன்னும் பல இடங்களில் கிருத்துவுக்கு பின் பட்ட காலத்தில் மீன் சின்னம் கிருத்துவர்களை குறிக்க பயன்பட்டு இருக்கின்றது. நிற்க.

இங்கே நாம் இந்த மீன் சின்னத்தைத் சற்று உற்று கவனிக்க வேண்டியிருக்கின்றது. வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே இந்த சின்னம் மக்களின் வாழ்வோடு இணைந்து வந்து இருக்கின்றது. நம்முடைய கூற்றின் படி குமரிக்கண்டதினை ஆண்ட பாண்டியனின் சின்னமாகவும் பின்னர் சுமேரியர்கள், மேசொபோடமியர்கள் வணங்கிய கடவுளின் வடிவமாகவும் மீன் இருந்து இருக்கின்றது. இந்த மீன் சின்னமானது பண்டைய மக்களின் பண்பாட்டினில் தொடர்ச்சியாக பயனில் இருந்து உள்ளது என்ற விடயம் இங்கே கவனிக்கத்தக்கது.

சரி இப்பொழுது மீண்டும் நாம் வரலாற்றுக்கு வருவோம். ரோமர்கள் கிருத்துவர்களை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இருந்தும் கிருத்துவம் மக்களின் மத்தியில் செல்வாக்கினை பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

சில கிருத்துவர்கள் ரோமர்களின் அச்சுறத்தல் காரணமாக வேறு நாடுகளுக்கு செல்லுகின்றனர். அவ்வாறு பிழைப்பதற்காக கிளம்பிய கிருத்துவர்கள் சிலர் இந்தியாவுக்கும் வருகின்றனர். இந்தியா என்றால் தமிழகத்தில் உள்ள சேர நாட்டுக்கு (தமிழகத்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வணிக தொடர்பு பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது என்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்). அவ்வாறு குழுக்களாய் தமிழகம் வந்த கிருத்துவர்கள் சேர நாட்டிலையே தனி குழுவாக தங்கி விடுகின்றனர். இவர்கள் பிழைப்பதற்காக வந்தவர்களே அன்றி மதத்தினை பரப்புவதற்கோ அல்லது எந்த ஒரு ஆன்மீக விடயமாகவோ வந்தவர்கள் அல்ல. இவர்களே சீரியக் கிருத்துவர்கள் எனப்படுபவர். இவர்கள் தமிழகம் வந்தக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்றே கருதப்படுகின்றது.

இவ்வாறு பலர் பல நாடுகளுக்கு சென்றாலும் கிருத்துவம் அடக்குமுறையை எதிர்த்து வலுவாய் வளருகின்றது. ஒரு கட்டத்தில் நாட்டில் பெருன்பான்மையான மக்கள் கிருத்துவர்களாக இருப்பதை ரோம அரசன் கான்சண்டீன் உணருகின்றான். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்களின் எண்ணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...அதாவது கிருத்துவத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிந்துக் கொள்ளுகின்றான்.

பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள என்ன காரியம் வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்பது நாம் அறிந்த/ நேரில் காணுகின்ற ஒரு விடயம் தானே. ரோம அரசன் மட்டும் அந்த விதிக்கு விதி விலக்கா என்ன.

அவனும் மாறுகின்றான். அது வரை தானும் மற்ற ரோமபுரி மன்னர்களும் எதிர்த்து வந்த கிருத்துவத்தினை அரச மதமாக ஏற்றுக் கொள்கின்றான். கிருத்துவம் அரச அரியணை ஏறுகின்றது. அது வரை இல்லாத பல பழக்கங்கள் கிருத்துவத்தில் இணைக்கப்படுகின்றன. காரணம் மக்களை ஈர்க்க வேண்டும். அவ்வாறு ஈர்த்தால் தான் மதமும் வளரும் அதனை முன்னிட்டு அந்த தலைவர்களும் வளருவார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட பழக்கங்களுள் சில,

௧) மரியாள் வணக்கம்.
௨) சிலுவை சிறப்பிக்கப்படுதல்
௩) அரசர், பிரபுக்கள் மற்றும் பணக்காரர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றக் கொள்கை.


இந்தக் கொள்கைகள் எல்லாம் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னால் வரை அதாவது கான்சண்டீன் மன்னன் எப்பொழுது கிருத்துவத்தை அரச மதமாக எற்றுக்கொள்கின்றானோஅதற்கு முன்னர் வரை கிருத்துவத்தில் கிடையாது. அக்காலத்தில் சிலுவை என்பது ஒரு கொலைக் கருவி. அவ்வளவே!!!.

அவ்வாறு கிருத்துவம் அரசியல் சாயம் பூசப் பெறுகின்றது. இது நடப்பது கி.பி நான்காம் நூற்றாண்டில். அன்று ஐரோப்பிய அரசியலோடு ஒன்று இணைந்த கிருத்துவ மதம் இன்று வரை வெளிவர இயலாது அவ்வரசியலோடு பிண்ணி பிணைந்துக் கொண்டு நிற்கின்றது.

இதுவே ஐரோப்பிய கிருத்துவத்தின் வரலாறு.

சரி வரலாறு இருக்கட்டும். கிருத்துவர்களின் சின்னம் சிலுவை அல்ல என்று சொல்லுகின்றீர்களே அப்படி என்றால் கிருத்துவர்களின் சின்னம் என்ன? கிருத்துவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கினார்கள்? தோமா எவ்வாறு வணங்கினார்... முன்னர் கண்டது போல் மீன் தான் கிருத்துவர்களின் சின்னமா? போன்ற கேள்விகள் எழுகின்றனவா...!!! சரி அக்கேள்விக்கான விடையினைக் காண்போம்.

இல்லை மீன் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. இறைவனைக் குறிக்க பயன்பட்ட ஒரு சின்னம் அவ்வளவே. இவ்வாறுக் கூறுவதினால் மீன் சின்னத்தின் மதிப்பினை குறைத்து எண்ணி விடாதீர்கள்...அனைத்து நாகரீகங்களிலும் இச் சின்னம் பயன்படுத்தப் பட்டு இருக்கின்றது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கிருத்துவர்கள் இறைவனை நினைத்து வணங்க பயன்படுத்திய சின்னம்... திருநீறு!!! ஆம்... இன்று சைவர்களும் வைணவர்களும் பூசிக் கொண்டு இருக்கின்றோமே அதே திருநீறு தான்!!!

"என்ன இந்துக்களின் சின்னத்தை கிருத்துவர்களின் சின்னம் என்றுக் கூறுகின்றாயா!!! தெளிவாகத் தான் இருக்கின்றாயா... எதற்கும் ஒரு அளவு வேண்டும்..." என்றும், இதனைத் தாண்டியும் பல எண்ணங்கள் தோன்றுகின்றனவா....

சற்றுப் பொறுங்கள்... இதனை நான் சொல்லவில்லை.

விவிலியம் தான் அவ்வாறு கூறுகின்றது.

என்ன விவிலியத்தில் திருநீற்றினைப் பற்றியச் செய்தி இருக்கின்றதா...என்கின்றீர்களா.

அக்கேள்விக்கான விவிலியத்தின் கூற்றினை அடுத்த பதிவில் காணலாம்.

பயணிப்போம்....!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22

தூய தோமா (St. Thomas)!!!

நிச்சயம் கிருத்துவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயராக இருக்கக் கூடும். சென்னை வாழ் மக்களுக்கும் ஒருவேளை சாந்தோம் (Santhome), பரங்கி மலை (St.Thomas Mount) போன்ற இடங்களின் வாயிலாக இந்த பெயர் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு இந்தப் பெயர் அவ்வளவு பரிச்சியமாக இருக்குமா என்பது சந்தேகமே...எனவே தூய தோமா இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா என்பதனை காணும் முன் நாம் சற்று அவரைப் பற்றி அறிந்துக் கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

விவிலியத்தின்படி தோமா இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவர். இயேசுவின் கூடவே இருந்து அவரின் கருத்துக்களை கேட்டு, பின்னர் அக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்காக மற்ற சீடர்களைப் போலவே இவரும் வேறு நாடுகளுக்கு கிளம்பியவர். அவ்வாறு கிளம்பி இவர் வந்தடைந்த நாடு தான் இந்தியா. இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது.

தோமா இந்தியா வந்தார் என்று ஒரு கூட்டம் கூற மற்றொரு கூட்டமோ தோமா இந்தியா வந்தது வெறும் கட்டுக்கதை, தோமா இந்தியா வந்ததற்கு சான்றுகள் எதுவும் இல்லை என்கின்றது. எனவே இப்பொழுது தோமா இந்தியா வந்தாரா இல்லையா... வந்தார் எனில் அதற்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் தோமாவின் இந்திய வரலாற்றினை சற்று சுருக்கமாக கண்டு விடலாம்.

வரலாற்று குறிப்புகளின் படி தோமா இந்தியாவிற்கு கி.பி 52 ஆம் ஆண்டில் வருகின்றார். வந்து இறங்கிய இடம் அன்றைய சேர நாடான இன்றைய கேரளா. பின்னர் 20 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து இயேசுவின் கருத்துக்களைப் பரப்பியப் பின் தமிழகத்தில் சிலரால் அவர் கொல்லப்படுகின்றார். அவ்வாறு அவர் கொலையுண்ட இடமே இன்றைய பரங்கி மலையாகும். பின்னர் அவர் அன்றைய தமிழகத்தின் அரசனால் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றார். அவ்வாறு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமே இன்றைய சாந்தோம் ஆகும். நிற்க.

இப்பொழுது நாம் அந்தக் கதையினையும் அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களின் கூற்றினையும் சற்று காண்போம்.

௧) தோமா இந்தியா வந்து இருக்கவே முடியாது. ஏனெனில் அத்தனை தூரம் அக்காலத்தில் பயணித்து ஒருவர் வந்து இருக்க முடியும் என்பது நம்ப முடியாத ஒன்று. எனவே தோமா இந்தியாவுக்கு அதுவும் சேர நாட்டிற்க்கு வந்தார் என்பது கட்டுக்கதையே என்பது தோமாவை மறுப்பவர்களின் ஒரு முக்கிய கூற்றாகும்.

ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது, தோமாவின் காலத்துக்கு முன்பே கிரேக்கர்களும், ரோமர்களும், யூதர்களும் இந்தியாவுடன் வணிக தொடர்பில் இருந்தது...அதுவும் குறிப்பாக தமிழகத்துடன் தொடர்பில் இருந்தது சங்க இலக்கியங்களின் மூலமும் மற்றும் பல்வேறு சான்றுகள் மூலமும் நமக்கு புலனாக வருகின்றது. தமிழர்கள் அவர்கள் அனைவரையும் யவனர் என்ற பொது பெயரினைக் கொண்டே அழைத்தனர். உதாரணமாக...

'யவனர் தந்த வினைமாண் நன்கலம்...' அகநானூறு 149 
'யவனர் இயற்றிய வினைமாண் பாவை ...' நெடுநல்வாடை 101 

போன்ற சங்க இலக்கியங்கள் மூலம் யவனர்கள் அக்காலத்திலேயே தமிழகத்துடன் தொடர்பில் இருந்து இருக்கின்றனர் என்பது நமக்கு புலனாகின்றது.

மேலும் இயேசுவின் காலத்தில் ரோமப் பேரரசினை ஆண்ட ஆகசுடசு (Augustus Ceaser) என்ற மன்னனின் காலத்துக்கு உட்பட்ட ரோம நாணயங்கள் பல மதுரை மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அதிகமாக கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

மேலும் அசோகரின் கல்வெட்டுகளில் கூட அவரின் ஆளுமைக்கு கீழே இருந்த யவன மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மேலும் அசோகரின் கல்வெட்டுகள் அரேமிய மொழியிலும் கிடைப்பது இங்கே கவனிக்கத்தக்கது ஏனெனில் இயேசு பேசிய மொழி அரேமியமே.

எனவே சான்றுகள் இவ்வாறு இருக்க தோமா இந்தியா வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கத் தான் செய்கின்றன. சரி... இப்பொழுது நாம் மறுப்பவர்களின் மற்றொரு கூற்றினையும் கண்டு விடலாம்.

௨) தூய தோமா இந்தியாவின் வட பகுதியில் தட்சசீலத்தில் கொண்டாபோரோசு (Gondophares) என்னும் மன்னனை சந்தித்ததாக செய்திகள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய ஒரு அரசன் அங்கே வாழ்ந்ததாக எந்த ஒரு சான்றுமே இல்லை. கொண்டாபோரோசு என்பது ஒரு கற்பனைப் பாத்திரமே. எனவே தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பதும் ஒரு கற்பனையே. இது தோமாவை மறுப்பவர்களின் மற்றுமொரு கூற்றாகும்.

ஆனால் சமீத்திய ஆராய்ச்சிகள் கொண்டோபோரோசு என்ற மன்னன் ஒருவன் வட நாட்டில் ஆட்சி செய்து வந்து இருக்கின்றான் என்று கண்டு பிடித்து இருக்கின்றன. அவ்வரசனின் நாணயங்களும் பல கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. எனவே தோமாவின் வரலாற்றில் கூறப் படும் இந்த அரசன் உண்மையாகவே இருந்து இருக்கும் பொழுது தோமாவும் உண்மையாகவே இந்தியாவுக்கு வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

௩) தோமாவை மறுப்பவர்கள் கூறும் மூன்றாவது கருத்து. அவ்வாறே தோமா இங்கே வந்து இருந்தார் என்றால் அவரின் தாக்கங்கள் இங்கே தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. எனவே அவர் இந்தியா வந்தது என்பது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்கும்.

ம்ம்ம்....உண்மையான கூற்று. தோமா இந்தியா வந்து இருந்தார் என்றால் அவர்தம் கருத்துக்கள் இங்கே பல மாற்றங்களை உருவாக்கி இருக்க வேண்டுமே....அத்தகைய மாற்றங்கள் உருவாக்கி இருந்தன என்றால் தானே தோமா இங்கே வந்தார்...அவர் இயேசுவின் கருத்துக்களை பரப்பினார் என்பதனை நாம் நம்ப முடியும். எனவே இப்பொழுது தோமா பரப்பிய கருத்துக்களை நாம் அறிய வேண்டி இருக்கின்றது.

தோமா ஒரு கிருத்துவர் தான். அதில் மாற்றுக் கருத்துக்களே கிடையாது. ஆனால் அவர் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கக் கூடிய ஐரோப்பியக் கிருத்துவரா என்றால் இல்லை என்பதே பதில் ஆகக் கூடும். தோமா ஒரு ஆசியக் கிருத்துவர்.

என்னங்க குழப்புறீங்க...ஐரோப்பிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க...ஆசிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க... கிருத்துவம் அப்படினாலே ஒண்ணுதானுங்களே அத எப்படி நீங்க பிரிக்குறீங்க என்று கேட்கின்றீர்களா...!!! அந்தக் கேள்விக்கு விடையினைக் காணும் முன் உங்களுக்கு ஒருக் கேள்வி.

கிருத்துவ சமயத்தின் சின்னம் எது?

சிலுவை அப்படின்னு சொல்றீங்களா. அப்படி என்றால் உங்களுக்கு ஒருத் தகவல்.

கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக இருக்கவில்லை. நான்காம் நூற்றாண்டில் எப்பொழுது ரோம பேரரசின் மன்னனான கான்சண்டீன் (Constantine) கிருத்துவ சமயத்தை அரச சமயமாக ஏற்றுக் கொள்கின்றானோ அப்பொழுது தான் சிலுவையும் கிருத்துவத்தின் சின்னமாக உருவாகின்றது.

அதற்கு முன்னர் வரை, இயேசுவின் காலத்திலும் சரி...தோமாவின் காலத்திலும் சரி சிலுவைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான். சிலுவை என்பது மக்களைக் கொள்ளும் ஒரு ரோமானிய கொலைக் கருவி. அவ்வளவே. அத்தகைய சிலுவையைத் தான் ரோமர்கள் கிருத்துவத்தின் சின்னமாக ஆக்குகின்றார்கள். அப்படியாக்கப்பட்ட கிருத்துவத்தைத் தான் நாம் ஐரோப்பியக் கிருத்துவம் என்கின்றோம்.

தோமா அப்படிப்பட்ட கிருத்துவர் அல்ல. அவர் சிலுவையை வழிபடவில்லை. அவர் வழி வேறு.

அது என்ன வழி... சான்றுகள் இருக்கின்றனவா... என்றுக் கேட்கின்றீர்களா...!!!

ஆம்...சான்றுகள் இருக்கின்றன. அச் சான்றுகளுடன் இயேசுவுக்கு பின்னர் வளர்ந்த கிருத்துவத்தைப் பற்றியும் நாம் இப்பொழுது நம் பயணத்தில் காண வேண்டி இருக்கின்றது....!!!

காண்போம்... அடுத்த பதிவில்....!!!

பயணிப்போம்...!!!

இன்னொரு முக்கியத் தகவல்:

தமிழகம் வந்த தோமாவினை அவரின் மரணத்திற்குப் பின் சாந்தோம் என்ற இடத்தில அடக்கம் செய்தனர் என்பதனை நாம் கண்டோம்.

'சாந்தோம்' என்பது போர்சுகிசிய சொல்.

சாந்தோம் என்றால் தூய தோமா என்றே அர்த்தம். இன்று அந்த இடத்தில தூய தோமாவின் நினைவாக ஒரு தேவாலயம் இருக்கின்றது.

சாந்தோம் தேவாலயம். நிச்சயம் சென்னையில் இருக்கும் அனைவரும் இதனைக் கண்டு இருப்பர் என்றே நம்புகின்றேன்.

இந்த தேவாலயம் தோமாவின் நினைவாக கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் நாம் அறியாத சில விடயங்களும் இந்த தேவாலயத்தில் இருக்கின்றன.

தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். ஆனால் இந்த தேவாலயம் கட்டப்பட்டதோ கி.பி 16 ஆம் நூற்றாண்டில். இந்தியாவுக்கு அப்பொழுது வந்த போர்சுகிசியர்களால் தான் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.

தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். வரலாற்றின் படி அன்றைய தமிழக மன்னன் அவரை சிறப்பித்து அவரை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஆலயத்தினை கட்டுகின்றான் என்று நாம் கண்டு இருக்கின்றோம். அப்படி இருக்க, கி.பி 16 நூற்றாண்டில் போர்சுகிசியர்கள் வந்து ஒரு தேவாலயத்தினைக் கட்டுகின்றார்கள் என்றும் காண்கின்றோம். அப்படி என்றால் தமிழக அரசன் தோமாவினை சிறப்பித்து கட்டிய ஆலயம் என்ன ஆனது...அது எந்த ஆலயம் என்றக் கேள்விகள் எழலாம்...!!! அக்கேள்விகளுக்கு விடை இதோ...

தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது மயிலாப்பூரில், அவரை மதித்து தமிழக அரசனால் கட்டப்பட்ட ஆலயம் - கபாலீஸ்வரர் கோவில். அந்தக் கோவிலை கி.பி 16 நூற்றாண்டில் வந்த போர்சுகிசியர்கள் இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தினை கட்டுகின்றனர். அவ்வாறு இடித்த கபாலீஸ்வரர் கோவிலை வேறு இடத்தில் கட்டுகின்றனர். இது வரலாறு. (சாந்தோம் வரலாறு)

அதாவது இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் சுமார் 400 ஆண்டுகள் முன்னர் வரை இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அக்கோவில் ஆனது தூய தோமாவினை சிறப்பித்துக் கட்டப்பட்டதாகும். நிற்க.

இத்தகவலை நான் இங்கே கூறியது, இந்து கோவிலை கிருத்துவர்கள் இடித்து விட்டனர் என்ற ஒரு கருத்தினை விதைக்க அல்ல. ஏனெனில் தோமாவின் காலத்தில் அவ்விரு மதங்களுமே வேர் ஊன்றி இருக்க வில்லை. மாறாக கிருத்துவராக சித்தரிக்கப்படும் தோமாவை சிறப்பித்து இந்து கோவில் என்றுக் கூறப்படும் ஒரு கோவில் ஏன் கட்டப்பட்டது என்றக் கேள்வியினை எழுப்பத் தான் அக்கருத்தினை நான் பகிர்வு செய்து இருக்கின்றேன். மேலும் இக்கோவிலே சைவ சமயத்தின் முதல் கோவில் என்று கூறப்படுவதும் இங்கே முக்கியமான ஒரு தகவலாகும்.

தோமா - கிருத்துவர்.
கபாலீஸ்வரர் கோவில் - சைவ கோவில்.


இவ்வாறு இருக்க தூய தோமாவை சிறப்பித்து ஒரு சைவ கோவில் கட்டப்பட்டது எதனால்?....இதையும் நம்முடைய பயணத்தில் காண்போம்.

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21

விவிலியம்...!!!

கிருத்துவர்களின் வேத நூல். உலகின் தோற்றத்தில் தொடங்கி பின்னர் யூதர்களின் வரலாறாய் பயணித்து இறுதியில் இயேசு கிருத்துவின் வாழ்வினையும் கொள்கைகளையும் விளக்குவதாய் அமைந்த ஒரு நூல். கிருத்துவத்தினைப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் விவிலியத்தினை பற்றி முதலில் அறிய வேண்டும். எனவே தான் நாம் முன்னரே விவிலியத்தின் சில பகுதிகள் பற்றி பார்த்து இருந்தோம். அதன் அடிப்படையில்,

௧) ஆதாம் மற்றும் ஏவாள் என்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் என்றும் (ஆதாம்)
௨) வெள்ளத்தால் உலகம் அழிவது குமரிக்கண்ட அழிவு என்றும்
௩) நோவா என்பதும் தமிழர்களை குறித்த சொல் என்றும் கண்டு இருந்தோம். (நோவா)

சரிங்க...இது எல்லாம் நம்ம ஏற்கனவே பார்த்த செய்திகள் தான். விவிலியத்துல சிவலிங்க வழிபாடு/கல் வழிபாடு இருக்கு அப்படின்னு சொன்னீங்களே அதப் பத்தி சொல்லுங்க அப்படிங்கிறீங்களா... அதனை பார்ப்போம்...ஆனால் அதற்கு முன் நாம் இன்னொரு தகவலையும் கண்டு விட்டால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்..விவிலியம் கூறும் கதையினை ஒத்த கதைகள் சுமேரிய இலக்கியத்திலும், பாபிலோனிய இலக்கியத்திலும் காணப்படுகின்றன என்று. அவ்விலக்கியங்களில் கதைகள் மட்டும் ஒரே மாதிரியாக அல்லாது சில பெயர்களும் கூட ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதனையும் நாம் கண்டு இருக்கின்றோம். விவிலியத்தில் ஆதாம் என்றுக் கூறப்படும் மனிதன் சுமேரிய இலக்கியத்திலும் பாபிலோனிய இலக்கியத்திலும் ஆதப்பா என்று வழங்கப்படுகின்றான். விவிலியத்தில் நோவா என்று வழங்கப்படுபவன் சுமேரிய இலக்கியங்கள் மற்றும் பாபிலோனிய இலக்கியங்களில் 'ஊற்றுநாவிபித்தன்' என்று அழைக்கப்படுகின்றான்.

மேலும்,

ஆதாம் தொடங்கி நோவா வரை விவிலியம் பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.
அதேப் போல் சுமேரியக் கதைகளும் ஆதப்பா தொடங்கி ஊற்றுநாவிபித்தன் வரை பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கதைகள் கூறும் பத்து தலைமுறையினரில் ஏழாம் தலைமுறையினராக கூறப்படுபவனின் பெயர் அந்த இரண்டு கதைகளிலும் ஒன்றாகவே இருக்கின்றது.

'ஏனோக்கு' - அந்தக் கதைகளின் படி இவன் ஒருவன் தான் இறைவனை நேரில் கண்டு இறைவனோடு சென்றுக் கலந்தவன். இப்பொழுது இந்தப் பெயரைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

'ஏனோக்கு' என்பது 'யானோக்கு' என்ற சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

'யானோக்கு' என்னும் சொல் - யா + நோக்கு என்று பிரிந்து - யா என்னும் கடவுளை நோக்கியவன்/கண்டவன் என்னும் பொருளினைத் தருவதினை நாம் காணலாம். விவிலியமும் இவனை இறைவனை நேரில் கண்டவன் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது.

"ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)

இங்கே 'யா' என்பதும் 'நோக்கு என்பதும் தமிழ் சொற்கள் என்பது கவனிக்கத்தக்கது. இது விவிலியம் கூறும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்பதற்கும் முதல் மொழி தமிழ் என்பதற்கும் இன்னொரு சான்றாக நாம் எடுத்துக்கொள்ளத் தக்க ஒன்றாகும். சரி.. இனி விவிலியத்தில் கல் வழிபாடு இருந்ததா என்பதனைக் காண்போம். அதற்கு நாம் யாக்கோபுவை காண வேண்டி இருக்கின்றது.

அந்தக் கதையின்படி யாக்கோபு ஆரான் என்னும் இடத்துக்கு பயணம் செய்கின்றான். அவ்வாறு பயணிக்கும் பொழுது இரவு நெருங்கவே தலைக்கு ஒரு கல்லினை தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குகின்றான். அன்று இரவு அவன் கனவு காணுகின்றான். அக்கனவில் இறைவன் அவனிடம் உரையாடுகின்றார். தூக்கம் கலந்து எழுந்த யாக்கோபு 'இந்த இடத்தில இறைவன் உண்மையாகவே இருக்கின்றார்' என்றுக் கூறி தான் இறைவனை உணர்ந்த இடத்தில தான் தலைக்கு வைத்த கல்லினை எடுத்து நட்டி அதற்கு எண்ணெயினை ஊற்றி 'இக்கல் தேவனோட வீடாக' இருக்கும் என்றுக் கூறி அந்த இடத்துக்கு பெத்தேல் என்று பெயரிட்டான். (ஆதியாகமம் -28 : 10 - 12 )

மேலும் விவிலியத்தில் பல இடங்களில் இதே மாதிரியான வழிப்பாட்டு முறைகளை நாம் காண முடிகின்றது.

யாக்கோபு அவனுக்கும் லாபான் என்பவனுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படும் பொழுது சாட்சியாக ஒரு கல்லினை நட்டி வைத்து விட்டு அதனை சுற்றி கற்களைக் குவித்து வைத்துக் கொள்கின்றான். அதற்கு கலீடு என்றும் அவன் பெயரிடுகின்றான். (ஆதியாகமம் - 31 : 44 - 50 )

"மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்." - யாத்திராகமம் (24 - 4 )

"அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி," - யோசுவா (4 - 20 )

"அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." - சாமுவேல் (7 - 12 )

இவ்வாறு விவிலியம் கூறும் பழைய ஏற்பாட்டில் கல்லினை நட்டி வைத்து அதனை வழிபடும் பழக்கம் மக்களிடம் இருந்து இருக்கின்றது என்பது நமக்கு தெரிய வருகின்றது. அவர்கள் கல்லினை இறைவனாக கருதவில்லை மாறாக இறைவன் இருப்பதற்கு ஒரு அடையாளமாகவே கருதினார்கள் என்றும் நாம் காண முடிகின்றது. மேலும் மற்றக் கல்லில் இருந்து இந்தக் கல்லினை வேறுப்படுத்திக் காட்டவே அதில் எண்ணெயும் ஊற்றினர் என்றும் அறிய முடிகின்றது.

சரிங்க... அவங்க கல்லினை வைத்து வழிப்பட்டாங்க. ஆனா அத எப்படி சிவலிங்க வழிப்பாடு அப்படின்னு சொல்றீங்கனு கேட்குறீங்களா...

சிவலிங்கம் என்பது இறைவனை அடையாளப்படுத்திய கல்லினைக் குறிக்க பயன்படுத்திய சொல்லே ஆகும். கிருத்துக்கு முன்பட்ட நூற்றாண்டுகளில் சிவலிங்கம் என்ற சொல் எந்த இலக்கியங்களிலும் கிடைக்கப்படவில்லை. கிருத்துக்கு பின்பட்ட நூற்றாண்டுகளில் தான் சிவலிங்கம் என்ற சொல் காணப்பெறுகின்றது. எனவே மக்களால் ஆதி இறைவனை குறிக்க பயன்பட்ட கல்லுக்கு பின்னாளில் சிவலிங்கம் என்று பெயர் வந்தது என்று நாம் கருத வேண்டியிருக்கின்றது.

மேலும் சிவலிங்க வழிப்பாட்டில் சிவலிங்கம் இருக்கும், அதன் முன்னர் நந்தி எனப்படும் சிவனின் வாகனமான காளை இருக்கும். ஆனால் காளை என்றால் கொம்புகள் இருக்க வேண்டும், ஆனால் சிவலிங்கத்தின் முன் இருக்கும் நந்திக்கோ முழுதாய் வளர்ந்த கொம்புகள் கிடையாது...கொம்புகள் வளர்ந்துக் கொண்டு இருக்கும் நிலையிலேயே நந்தியின் சிலைகள் காணப்படுகின்றன. எனவே நந்தி என்று சிவலிங்கத்தின் முன் வைக்கப்பட்டு இருப்பது காளை அல்ல என்றும் அது வளர்ந்துக் கொண்டு இருக்கும் கன்றுக்குட்டி தான் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே சிவலிங்கம்...அதன் முன்னர் ஒரு கன்றுக் குட்டி - இதுவே தான் சிவலிங்க வழிப்பாட்டு முறையின் தோற்றம் ஆகும்.

இதே மாதிரியான வழிபாடு விவிலியத்திலும் இருக்கின்றது.

எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )

மேலே உள்ள விவிலிய பகுதியின் மூலம் அதுவரை கல்லினை மட்டுமே பலி கொடுத்து வணங்கிக்கொண்டு இருந்த மக்களின் வழிப்பாட்டு முறையில் புதிதாக கன்றுக்குட்டியும் சேர்க்கப் பட்டது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளுகின்றோம்.

சரி இதுவரை நாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு உள்ள செய்திகளில் கல் வழிப்பாட்டினை பற்றிப் பார்த்தோம். தமிழர்களின் பழக்கமான கல் வழிபாடு சிந்து சமவெளியில் இருந்து மேற்கே சுமேரிய மற்றும் பாபிலோனிய வழிப்பாட்டு பழக்கமாக மாறி பின்னர் இசுரவேலர்களின் பழக்கமாகவும் மாறி இருப்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இறைவனை கல்லினால் அடையாளப்படுத்தி இருக்கின்றார்களா என்பதனைக் காண்போம்.

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்," - (பேதுரு I - 2 : 4 )

மேலே உள்ள வாக்கியத்தில் பேதுரு, இயேசுவை உயிருள்ள கல் என்று குறிப்பிட்டு உள்ளார். இங்கே அவர் ஏன் கல் என்ற சொல்லினை பயன் படுத்த வேண்டும். அதுவும் உயிர் உள்ள கல் என்றுக் கூறி இருக்கின்றார். கல்லுக்கு தான் உயிர் கிடையாதே...பின்னர் ஏன் அவர் உயிருள்ள கல் என்று கூறி இருக்கின்றார்? விடையினைக் காண்போம்...

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...மக்கள் கல் நட்டி தங்களின் கடவுளை வழிப்பட்டு வந்தனர் என்று. கல் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. தாங்கள் உயிரில்லாத கல்லின் மூலமாக வழிபட்டு வந்த இறைவன் உயிருள்ள மனிதனாக அவர்களுக்காக வந்ததை தெரிவிக்கவே உயிருள்ள கல் என்று பேதுரு கூறி இருக்கின்றார் என்கின்றனர் அறிஞர்கள்.

உயிரற்ற கல் வழிப்பாடு - அருவ நிலை - சிவலிங்கம்.
உயிருள்ள கல் - உருவ நிலை - இயேசு.

இவ்வாறே விவிலியத்தில் கல் வழிபாடு கூறப்பட்டு/பின்பற்றப்பட்டு உள்ளது. சரி...இதைப் போலவே இசுலாம் சமயத்திலும் கல் வழிப்பாட்டு முறை இருக்கின்றது. ஆனால் அதனை நாம் மற்றொரு பதிவில் பின்னர் காண்போம். இப்பொழுது தோமா நமக்காக தமிழகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

என்ன தோமாவா....தமிழகத்திலா??? என்கின்றீர்களா!!! ஆமாங்க... தோமா தான். அதுவும் நம்ம சென்னையில தான். அவரின் வரலாற்றின் கூடவே சாந்தோம்...பரங்கி மலை..ஆகியவற்றின் வரலாறும் காத்திருக்கின்றன ...பயணிப்போம்!!!

மேலும் சில தகவல்கள்:

நாம் மேலே இறைவனை நினைத்து நட்டப்பட்ட கற்களுக்கு எண்ணெய் ஊற்றி மக்கள் வேறு கற்களில் இருந்து அவற்றினை வேறுப்படுத்தினர் என்றுக் கண்டு இருந்தோம். அதன் அடிப்படையில் இரு தகவல்கள்.

மேசியா என்றால் 'எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்பது பொருள்.
கிருத்து என்றாலும் அபிசேகம் பண்ணப்பட்டவர் என்பதே பொருள்.

ஆனால் விவிலியத்தில் கிருத்துவினை எவரும் அபிசேகம் செய்ததாக செய்திகள் இல்லை. அது அப்படி இருக்க அவரை ஏன் அவ்வாறு அழைக்கின்றனர் என்றக் கேள்விக்கு 'அது வரை மக்கள் கல்லில் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டு வந்த இறைவன் இன்று மனித வடிவில் வந்து இருக்கின்றார். இவரைத் தான் நாம் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டோம். எனவே இவர் எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்று மக்கள் கருதி அவரை கிருத்து என்று அழைத்தனர்' என்றே விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
 

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20


பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு