உலகம் தோன்றியது எவ்வாறு? மனிதன் தோன்றியது எவ்வாறு? உயிர் என்றால் என்ன?

இக்கேள்விகளை ஒரு மனிதர் கேட்பாராயினில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அறிவியல் பேசுவோருக்கும் இருக்கின்றது...ஆன்மிகம் பேசுவோருக்கும் இருக்கின்றது. அக்கடமையை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

இந்நிலையில் அவர்கள் கூறும் விடையினைக் கண்டோம் என்றால் ஆன்மிகம் பேசுவோர் இறைவன் உலகைப் படைத்தான் என்றும் அறிவியல் பேசுவோர் இறைவன் படைக்கவில்லை மாறாக உலகம் 'பெரு வெடிப்பு' முதலிய சில காரணியால் இயல்பாகவே உருவாயிற்று என்றும் கருதுவது புலனாகின்றது. இக்கருத்துக்களிடையே மாபெரும் சண்டைகளும் நீண்டக் காலமாக முடியாது ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் கடவுள் இருக்கின்றார்...உலகையும் மனிதனையும் படைத்தது அவர் தான் என்றுக் கூறும் நம் மீதும் அக்கேள்விக்கான விடையினைக் கூறும் கடமை விழத் தான் செய்கின்றது. அதன் விளைவாக அக்கேள்விகளுக்கான விடைகளையும் நாம் காணத் தான் வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் அறிவியலையும் காண வேண்டி இருக்கின்றது ஆன்மீகத்தையும் காண வேண்டி இருக்கின்றது...காண்போம்...!!!

"அறிவியலின் துணை இல்லாத சமயங்கள் குருடாகும்
  சமயங்களின் துணை இல்லாத அறிவியல் ஊனமாகும் - ஐன்ஸ்டீன்!!!"

பொதுவாக இன்று அறிவியல் பேசுவோர் முன் வைக்கும் கூற்று 'வலிமையானது பிழைக்கும்' என்பதே ஆகும். அதாவது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு உயிர் பிழைக்க வல்லமை உள்ள உயிரினம் உயிர் பிழைக்கும். அவ்வாறு பிழைக்கும் தன்மை அற்ற உயிரினங்கள் அழிந்து போகும் என்ற ஒரு கூற்றே அது ஆகும்.

இக்கூற்றினைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

ஒரு உயிரினம் பிழைத்து இருக்க, அது அந்த குறிப்பிட்ட சூழலில் அதற்குரிய குணாதிசயங்களைக் கொண்டு எவ்வாறு தாக்கு பிடிக்கின்றது என்பதே முக்கியமான காரணம்.. அவ்வாறு தாக்கு பிடிக்க முடியாத உயிர்கள் அழிந்து போகின்றன என்ற கருத்தினை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

இப்பொழுது ஒரு எடுத்துக்காட்டினைப் காண்போம்.

கொசு இருக்கின்றது. நமக்கு அது தொல்லையாக இருப்பதினால் அது உயிர் வாழ முடியாத வண்ணம் ஒரு சூழலை மருந்துகள் கொண்டு உருவாக்குகின்றோம். அந்த மருந்தின் நச்சுத் தன்மை தாங்காது அதனை முழுமையாக உட்கொண்ட கொசுக்கள் முதலில் மாளுகின்றன.

ஆனால் பின்னால் நடப்பது என்ன, அந்த மருந்தினை சிறிதளவே உட்கொண்ட கொசுக்கள் பின்னர் அந்த மருந்தினை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு நாம் உருவாக்கிய அந்த சூழலில் வாழத் தொடங்குகின்றன. இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் அவை எவ்வாறு அந்த எதிர்ப்பு சக்தியினைப் பெற்றன என்பது தான். இங்கே தான் நாம் உடலினைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

உடல் – ஒரு இயந்திரம்.

அதற்கென்று சில வேலைகள் இருக்கின்றன. நிற்காது இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த உலகம் போல் உடலும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அது நம்மை கேட்டு வேலை செய்வதில்லை. தனக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதும் எது நல்லது எது கெட்டது என்பதும் உடலிற்கு நன்றாகத் தெரியும். பல உணவுகள் நாம் உண்ணுகின்றோம், அதில் தனக்கு தேவையானதினை எடுத்து கொண்டு தேவை அற்றதை கழிக்கும் வல்லமை உடலிடம் உண்டு. அதேப் போல் தனக்கு எதிரி ஒருவன் வருகின்றான் என்றால் அவனை எதிர்க்கும் ஆற்றலும் உடலுக்கு உண்டு. அதை தான் நாம் வெள்ளை அணுக்கள் என்றுக் கூறுகின்றோம்.

உடலுக்கு ஒவ்வாத ஒன்று எப்பொழுது உடலினுள் நுழைகின்றதோ அதனை அறிந்து அதை எதிர்க்க உடல் தயாராகின்றது. ஒரு வேளை அந்த எதிரியினை உடலினால் அழிக்க முடியவில்லை என்றால் உடல் அழிகின்றது. அல்லது அந்த எதிரியினை உடலினால் அழிக்க முடிந்தால் அந்த எதிரியினைப் பற்றியப் பாடத்தினை அது கற்றுக் கொள்கின்றது. மீண்டும் ஒரு முறை அந்த எதிரி அதனைத் தாக்காதவாறு உடல் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

அதாவது முன்னர் இருந்த செயல்பாடுகளுடன் உடல் புதிதாக இன்னொரு செயல்பாட்டினை சேர்த்துக் கொள்கின்றது…தான் பிழைப்பதற்கு.
மேலே சொன்ன அந்த உடலின் இயக்கம் தன்னிச்சையான இயக்கம். எதிரி வருகின்றான் அவனிடம் போய் மோது என்று உடலுக்கு நாம் கட்டளை இடத் தேவை இல்லை. அது உடலின் பணி. இது அனைத்து உயிர்களின் உடல்களுக்கும் பொருந்தும்.

உடல் ஒரு மாபெரும் அதிசயம் தான்.

ஆனால் எல்லாக் காலங்களிலும் உடலினால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதன் இயக்கத்திற்கு சில தேவைகள் இருக்கின்றன. உதாரணம் நீர்…உணவு!!!

இவற்றினை தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடலுக்கு இல்லை. இங்கே தான் உடல் நம்மை எதிர்ப்பார்கின்றது. இங்கே தான் அறிவு களத்திற்கு வருகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தனது அறிவினைப் பயன்படுத்தி தன் உடல் இயங்குவதற்கு ஆவன செய்யத் தொடங்குகின்றன. தன் உடலுக்கு எது உகந்தது என்பது அந்த உயிரினங்களுக்கு தெரிந்து இருக்கின்றது.

உதாரணத்திற்கு,

ஒரு மரம் தனக்குத் தேவையானது நீர் என்று அறிந்து அதன் வேர்களை நீரினைத் தேடி அனுப்புகின்றது. பாறைகள் பல இருந்தாலும் தனக்கு எது நல்லது என்று அறியும் அறிவு மரத்திற்கு இருக்கின்றது. இறுதியில் நீரினை சென்று அடைகின்றது.

அதே போல் ஒரு நாயினை எடுத்து கொள்ளுங்கள். அதன் முன் மெழுகினால் செய்யப்பட்ட ஒரு ரொட்டித் துண்டினைப் போடுங்கள். அந்த நாய் அந்த ரொட்டித் துண்டினை முகர்ந்து விட்டு அது அதற்கு ஒவ்வாது என்பதினை அறிந்துக் கொண்டு உண்ணாமல் சென்று விடும். மெழுகு அதன் உடலிற்கு உகந்தது அல்ல என்பது அந்த நாயிற்கு தெரிந்து இருக்கின்றது.

அதேப் போல் குளிர்காலத்தில் கிழக்கில் வெப்பமாக இருக்கும் என்று அறிந்து பறவைகள் பல தூரம் வருடா வருடம் பயணிப்பது அவற்றின் அறிவினை வைத்துத் தான். அவ்வாறு பயணித்து அவை தங்களைக் காத்துக் கொள்கின்றன.நிற்க.

இப்பொழுது நாம் இரு வேறு சூழ்நிலைகளில் ஒரு உயிர் பாதுகாக்கப்படுவதனைக் கண்டு இருக்கின்றோம். ஒன்று, அந்த உயிரினத்தின் உடலே சூழ்நிலைகேற்ப தன்னை பாதுகாத்துக் கொள்ளல். இரண்டு தன் அறிவை பயன்படுத்தி உயிரினம் தன்னை பயன்படுத்திக் கொள்ளல். இந்த இரண்டு சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத உயிரினம் அழிகின்றது.

ஐரோப்பிய அறிவியல் மேலே உள்ள அந்த இரண்டு சூழ்நிலைகளையும் மட்டுமே அறிந்த நிலையில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினை ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உடல் இயங்குகின்றது என்று கூறும் அறிவியல் உடல் எதனால் இயங்குகின்றது என்பதனைக் கூற முடியாது நிற்கின்றது. அறிவினை அறிந்த அறிவியல் அந்த அறிவின் பிரிவுகளை அறியாது நிற்கின்றது. இந்த நிலையில் தான் பரிணாம வளர்ச்சி என்னும் தத்துவத்தினை ஐரோப்பிய அறிவியல் முன் வைக்கின்றது. இந்த நிலையில் தான் அது மனிதனும் மிருகம் என்கின்றது. இந்த நிலையில் தான் நாம் அதனை எதிர்க்க வேண்டி இருக்கின்றது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, பரிணாம வளர்ச்சியில் வந்தவை என்று அறிவியல் கூறும் அனைத்தையும் நாம் அதற்கு பல காலம் முன்னரே அறிவின் அடிப்படையில் பிரித்து வைத்து இருக்கின்றோம்.

ஓரறிவு – மரம் – தொடு உணர்வு – உடல்.

ஈரறிவு – நத்தை – தொடு உணர்வு, சுவை உணர்வு – உடல்,வாய்.

மூன்றறிவு – எறும்பு – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு – உடல்,வாய்,நாசி(மூக்கு)

நான்கறிவு – நண்டு – தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு – உடல், வாய், நாசி, கண்.

ஐந்தறிவு – குரங்கு, மாக்கள் - தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்வை உணர்வு, கேட்கும் உணர்வு – உடல், வாய், நாசி, கண்,காது.

ஆறறிவு – மனிதன் – மேலே உள்ள அனைத்து உணர்வுகளுடன் ஏதோ ஒன்று இவனுக்கு சிறப்பாக இருக்கின்றது.

இதுவே தமிழ் அறிவியல் உயிரினங்களை பிரித்து இருக்கும் முறையாகும். இப்பொழுது நாம் மேலே கண்ட எடுத்துக்காட்டுகளை இந்த அறிவுப் பிரிவுகள் மூலம் பார்க்கலாம்.

மரம் தனக்குத் தேவையான தண்ணீரை தேடி வேர்களை அனுப்புகின்றது. வேர் நீரினை தொடுவதன் மூலம் அறிந்துக் கொள்கின்றது. ஒரு வேளை நீர் இல்லாவிடில் மரம் இறந்துப் போகுமே அன்றி என்னத்தான் முயன்றாலும் அதனால் அடுத்த அறிவிற்கு உரிய உறுப்பினை பெற முடியாது. அதன் அறிவு என்பது அதன் உடலினை அடிப்படையாகக் கொண்டது.

அதேப் போலவே மற்ற உயிர்களும் தங்களிடம் உள்ள புலன்களின் மூலம் மட்டுமே தங்களின் பிழைப்பிற்கு வழித் தேடுமே அன்றி மற்றொரு அறிவு நிலைக்கு உரிய புலன்களை அவை பெறுவதில்லை. அவற்றின் புலன்கள் அனைத்தும் பயனற்று போகும் நிலையில் அவை மரணத்தினைச் சந்திக்கின்றன.

இங்கேத் தான் நாம் மனிதனை சற்று பார்க்க வேண்டி இருக்கின்றது. அவனை ஆறறிவு படைத்த நிலையிலும் வைத்து இருக்கின்றனர். ஐந்தறிவு படைத்த நிலையிலும் வைத்து இருக்கின்றனர்.

மேலும் ஐந்தறிவு வரை புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை பிரித்து இருந்தோம். அந்த அந்த புலன்களுக்கு என்ன உறுப்புகள் என்பது நமக்கு தெரியும். ஆனால் மனிதனை ஆறாம் அறிவினை உடையவனாக கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு எது?

இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல் தான் ஐரோப்பிய அறிவியல் மனிதனும் விலங்கு தான் என்கின்றது. காரணம் விலங்குகளின் உள்ள அதே உறுப்புகள் தான் மனிதனிடமும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ஆனால் காலப் போக்கில் மனிதன் பரிணாம வளர்ச்சியின் படி ஏதோ நிலையில் சற்று உயர்ந்தவனாகி விட்டான் என்கின்றது. ஏன் மனிதன் அவ்வாறு இருக்கின்றான் என்று அதற்கு தெரியவில்லை. காரணம் ஐரோப்பிய அறிவியல் உயிரினை அறியவில்லை. மனதினையும் அறியவில்லை!!!

எனவே தான் உடலினைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டு இருக்கும் ஐரோப்பிய அறிவியலால் உடல் எவ்வாறு இயங்குகின்றது என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடிகின்றது ஆனால் உடல் எதனால் இயங்குகின்றது? என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.மேலும்  உயிருடன் பேசிக் கொண்டு இருக்கும் ஒருவனுக்கும் உயிரற்ற ஒருவனுக்கும் என்ன வித்தியாசம்? என்றும் அதனால் பதில் கூற முடியவில்லை.

அந்தக் கேள்விகளுக்கு தமிழ் அறிவியலில் விடை இருக்கின்றதா…அதனை இன்னொரு பதிவில்  காண்போம்…!!!

தொடரும்...!!!

3 கருத்துகள்:

நல்ல அலசல். உங்களை பின்தொடர விரும்புகிறேன். அனேகமா உங்க கேள்விக்கான பதில்,
http://uyirnutpam.blogspot.de/ இந்த வலைப்பூவில் கிடைக்கும்.

விடையை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். சீக்கிரம் வெளியிடுங்கள்.

@கோவம் நல்லது,

நன்றி நண்பரே...நிச்சயமாக படிக்கின்றேன் :)

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு