"பொதுவுடைமை என்பது ஒரு தோற்ற சித்தாந்தம்" என்பது நண்பர் ஒருவரின் கருத்து. அதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டையும் அவர் தந்து இருந்தார்.

சோவியத் நாட்டிலே இரண்டு நபர்கள் பேசிக் கொண்டே சென்றுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சோவியத் நாட்டு விவசாயி. அவரிடம் இரண்டு வாத்துக்கள் இருந்தன. மற்றொருவர் இங்கிலாந்து நாட்டுப் பத்திரிகையாளர். அவர் வெறும் கையினை வீசிக் கொண்டு நடந்துக் கொண்டு இருக்கின்றார்.

"சோவியத் அருமையான நாடு. இங்கே அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கின்றது என்கின்றார்களே அது உண்மையா." என்று அந்த பத்திரிக்கையாளர் பேச்சினை ஆரம்பிக்கின்றார்.

"ஆமாம்...ஆமாம்...இதோ இரண்டு வீடுகள் வைத்து இருந்தவர்களிடம் இருந்து ஒரு வீட்டினைப் பறித்து வீடில்லாத எங்களுக்குத் தந்து இருக்கின்றார்களே...அனைவரையும் சமம் என்ற நிலைக்கு எங்களுடைய தேசம் சென்றுக் கொண்டு இருக்கின்றது. இது நல்லது" என்றார் அந்த விவசாயி.

"ஆமாம்...இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு தருவது என்பது அருமையான செயல் தான். சரி தோழரே...உங்களிடம் இரண்டு வாத்துக்கள் இப்பொழுது இருக்கின்றன...ஆனால் என்னிடம் ஒன்றுக் கூட இல்லை...எனக்கு உங்களின் வாத்துகளில் இருந்து ஒன்றைத் தருகின்றீர்களா" என்றே அப்பத்திரிகையாளர் கேட்க,

உடனே பதறிப் போய் "இல்லை...என்னுடைய வாத்துக்களை எதற்காக நான் உங்களுக்குத் தர வேண்டும். இதனை வைத்து நான் பல்வேறு திட்டங்கள் வைத்து இருக்கின்றேன். மன்னிக்கவும் இவை என்னுடையவை. இவற்றை உங்களுக்கு பங்கிட்டு தர இயலாது." என்றே அந்த விவசாயி மறுக்கின்றார்.

உடனே அந்த பத்திரிக்கையாளர் சிரிக்கின்றார். "பாருங்கள்...அடுத்தவரிடம் இருந்து உங்களுக்கு வாங்கித் தந்தால் ஏற்றுக் கொள்வீர்..ஆனால் உங்கள் பொருளை அடுத்தவரிடம் பகிர்ந்துக் கொடுக்க வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டீர். நல்ல கொள்கையையா உமது..." என்றுக் கூறியே நகர்கின்றார்.

இது தான் நண்பர் கூறிய எடுத்துக்காட்டு. "பொது உடைமை என்பது அடுத்தவனிடம் இருந்து நமக்கு எடுத்து தரும் பொழுது இனிக்கும்...அதே நேரம் நம்முடையதை அடுத்தவனுக்கு தர வேண்டும் என்றால் கசக்கும். இந்நிலையில் அது தோற்ற சித்தாந்தமே...அனைத்து நிலைகளிலும் அதனால் நிலைத்து நிற்க முடியாது...அதனால் தான் உலகில் அதற்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது. பொது உடைமை தோற்று போய் விட்டது" இது தான் அவரின் கருத்து. நிற்க.

சோவியத் நாட்டினை எதிர்த்து மேற்கத்திய உலகத்தில் எழுந்த கதைகள் பலவற்றுள் இக்கதை ஒன்றாக இருக்கலாம். இந்த கதையினை மறுத்து நம்மால் நிச்சயமாய் பல காரணங்களையும் சித்தாந்தங்களையும் கூறி விளக்க முடியலாம்.

இருந்தும் ஒரு கேள்வி நிச்சயம் எஞ்சி இருக்கும்...!!!

அடுத்தவனின் நிலையைப் புரிந்துக் கொண்டு அவனது வலியை தனக்கு வந்த ஒன்றாக பாவித்து அவனது வலியைப் போக்க தன்னால் இயன்றனவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை ஒரு மனிதனுக்குள் எவ்வாறு கொண்டு வர முடியும்?

சட்டங்களால் முடியுமா இல்லை சித்தாந்தங்களால் முடியுமா?

எதனை வைத்து ஒரு மனிதனை அடுத்த மனிதனின் மேல் உண்மையிலேயே அக்கறைக் கொள்ள வைக்க முடியும்?

அன்பினால் மட்டுமே முடியும். இங்கு தான் நாம் ஆன்மீகத்தினைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

"என்னது பொதுவுடைமையைப் பற்றிப் பார்க்கணும் அப்படினா ஆன்மீகத்தைப் பார்க்கணுமா...தெளிவாத் தான் பேசுறீங்களா..." என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரலாம். காரணம் எளிது. பொதுவுடைமைக் கொள்கை இன்று இறைவனை ஏற்றுக் கொள்வது இல்லை...பொதுவுடைமை பேசும் நண்பர்களும் தான். இந்நிலையில் ஆன்மீகத்திற்கும் பொது உடைமைக் கொள்கைக்கும் தொடர்பு இருக்கின்றது என்றால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும்.

இருந்தும் நாம் அவ்விடயத்தினைப் பற்றிப் பார்க்கத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்றைக்கு பொது உடைமைக் கொள்கையும் சரி, அக்கொள்கை உடையவர்களும் சரி பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தான் இருக்கின்றனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர்களே ஒற்றுமையாக இல்லாத நிலையில், ஏன் அந்த நிலை இருக்கின்றது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் ஆன்மீகத்தைப் பற்றி பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

ஆன்மிகம்....இறைவனை அன்பின் வடிவமாகவே காணுகின்றது.

அன்பே சிவம் என்கின்றது சைவம்.

"நான் உங்களுக்குச் சொல்கின்றேன்; உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் ஒரு சேர மழையைப் பெய்யப் பண்ணுகின்றார்." - மத்தேயு 5:44,45

"இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்து இருக்கின்றது. இவைகளில் பெரியது அன்பே" - கொரிந்தியர் I 13:13

என்றே கிருத்துவக் கருத்துக்களும் கூறுகின்றன. இதன் மூலம் இறைவன் அன்பின் வடிவமாகவே இருக்கின்றான் என்றே நாம் அறிய முடிகின்றது. நிற்க.

இங்கே தான் நாம் வள்ளுவரின் ஒரு குரளினைக் காண வேண்டி இருக்கின்றது.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."

அன்பில்லாதவர்கள் எல்லாம் தங்களைப் பற்றிய எண்ணத்தினை மட்டுமே கொண்டு இருப்பர்...ஆனால் அன்பினை பெற்றவர்களோ அவர்களின் உடலினைக் கூட அடுத்தவருக்காக தர ஆயுத்தமாக இருப்பர் என்பதே அக்குறளின் பொருள் ஆகும்.

முன்னர் நாம் அன்பே சிவம் அல்லது இறைவன் அன்பின் வடிவாகவே இருக்கின்றான் என்றே கண்டோம்.

அதாவது,

அன்பு = இறைவன்.

இப்பொழுது இந்த அர்த்தத்துடன் வள்ளுவரின் அக்குறளை மீண்டும் காண்போம்.

இறைவனைப் பெறாதவர்கள் எல்லாம் தங்களைப் பற்றிய எண்ணத்தினை மட்டுமே கொண்டு இருப்பர். ஆனால் இறைவனைப் பெற்றவர்களோ அவர்களின் உடல்/உயிரினைக் கூட அடுத்தவருக்காக தர ஆயுத்தமாக இருப்பர்.

அதாவது இறைவனை உணர்ந்தவர்கள்/ பெற்றவர்கள் தமக்காக மட்டும் வாழாது...உலக மக்கள் அனைவருக்காகவும் தங்களது வாழ்வினை வாழ்வர்.

இதற்கு சான்றாக இயேசுவின் சீடர்களைப் பற்றிக் காணலாம்...பயந்துக் கொண்டும் சந்தேகத்தினைக் கொண்டும் இருந்து வந்தவர்கள் பரிசுத்த ஆவியினை (இறைவனின் அருள் என்றும் கொள்ளலாம்) பெற்றவுடன் பொதுவுடைமை கொள்கை உடையவர்களாக மாறுகின்றனர்.

"விசுவாசிகள் எல்லாரும் ஒன்றாக இருந்து, அனைத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தார்கள். தங்கள் சொத்துக்களையும் பொருட்களையும் விற்று ஒவ்வொருவனின் தேவையும் சந்திக்கும்படி அவைகளில் அனைவருக்கும் பகிர்ந்துக் கொடுத்தார்கள்." - அப்போஸ்தலர் 2:44,45

உண்மையான ஆன்மிகம் அடுத்தவர்களுக்காக வாழ வைக்கும். அனைத்தும் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தினை வளர்க்கும். இயேசுவின் சீடர்கள் யாரும் தங்களுக்காகவென்று வாழவில்லை....சித்தர்கள் யாரும் தங்களுக்கென்று வாழவில்லை...மக்களுக்காகவே வாழ்ந்தனர்.


இதைத்தானே இன்றைக்கு பொது உடைமைக் கொள்கைக்காக உண்மையாக போராடும் நண்பர்கள் செய்கின்றார்கள்/விரும்புகின்றார்கள்.

உண்மையில், உண்மையான இறைத் தத்துவம் என்பது பொதுவுடைமையே ஆகும்.

"அட என்னங்க...பொது உடைமை பேசுறவன் கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கான்...ஆனா நீங்க கடவுள் கொள்கையே பொதுவுடைமைக் கொள்கைன்னு சொல்றீங்க. எப்படிங்க?" என்ற கேள்விகள் இங்கே நிச்சயமாக எழலாம். அக்கேள்விக்கான விடையை நாம் நிச்சயமாய் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது.

காணலாம்...!!!

தொடரும்....

2 கருத்துகள்:

என்னத்தெ காணலாம்...? எங்கே...?

ஆன்மீகத்திற்கும் பொது உடைமைக்கும் என்ன தொடர்பு என்றுக் காணலாம் அண்ணா... அடுத்தப் பதிவில்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு