முந்தையப் பதிவு


சூத்திரம் 4: வீழ்ந்த ஆன்மா செயல்படும் விதம்

அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது
அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே.

பதவுரை:

ஆன்மா - ஆன்மாவானது

அந்தக்கரணம் - மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக் கரணங்களாகிய

அவற்றின் ஒன்று அன்று - அவற்றில் ஒன்று அன்று

சகசமலத்து உணராது - சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கிறது

அமைச்சரசு ஏய்ப்ப நின்று - அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல் நின்று

அவை - அந்தக்கரணங்களை

சந்தித்தது - சந்தித்துச் செயல்படுவது

அஞ்சவத்தைத்தே - நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அனுபவங்களில் ஆகும்.

விளக்கம்:

ஆன்மாவானது மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக்கரணங்களாகிய அவைகளில் ஒன்று அன்று. சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கின்றது. அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல நின்று அந்தக்கரணங்களை ஆன்மா சந்தித்துச் செயல்படுவது நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அவத்தைகளிலே ஆகும்.

மாயா இயந்திரமாகிய உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அது உடலின் செய்கைகளை அறிவதாலும், உணர்த்த உணர்வதாலும் இருப்பதாக அறியலாம் என்று கூறுவது சரிதானா? பற்றுவது, சிந்திப்பது, துணிவது, தன்கண் கொள்வது முதலிய செயல்கள் உடலுக்கு உள்ளேயுள்ள மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணத்தின் செயலாகும் அல்லவா! என்ற சந்தேகம் எழலாம்.

அறிவது, பற்றுவது, முடிவெடுப்பது, துணிவது முதலியன மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்களின் செயல்களே என்பதில் சந்தேகமில்லை.

நான் அறிந்தேன்! நான் பற்றினேன்! நான் முடிவெடுத்தேன்! நான் துணிந்தேன்! என்றுக் கூறும் பொழுது அந்தக்கரணங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆன்மா ஒன்று உளது என்பது விளங்குகின்றது.

அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவியாகுமே தவிர, ஆன்மாவாகாது. கண் முதலிய கருவிகளின் வழியாகக் காணப்படுவதைப் பற்றுவது மனம். அதை இன்னதெனச் சிந்திப்பது சித்தம். சிந்தனையின் கண் இது தான் எனத் துணிவேன் என எழுவது அகங்காரம். துணிந்து தன் கண் கொள்வது புத்தி. இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர்கள் போல் நின்று உதவுகின்றன.

ஆன்மாவிற்கு தன்னை உணரும் ஆற்றல் இல்லை என்பதை முன்னரே கண்டோம். தன்னை உணரும் ஆற்றல் அதற்குத் தோன்றாமல் போனதற்குக் காரணம், அது பிறக்கும் பொழுதே அதை மூடி மறைத்து இருக்கும் ஜென்மப் பாவமாகிய சகச மலமாகும். ஆகவே சகச மலத்திற்குட்ப்பட்ட ஆன்மா தன்னை உணரா நிலையில் அந்தக்கரணங்களின் துணைக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக்கரணங்கள் ஆன்மாவாகிய அரசனுக்கு ஏற்ற அமைச்சர்களாயிருந்து செயல்படுகின்றன. கண் இருப்போன் நோயின் காரணமாகக் காண இயலாமல் இருப்பது போன்று, சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் இருக்கின்றது.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2 கருத்துகள்:

ஐயா வழிப்போக்கரே...

ஆன்மா பற்றி கிறிஸ்தவ மதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றி இங்கே குறிப்பிடலாமே?

@பெருமாள் தேவர்

கேள்வி புரிந்தாலும் கேள்வியின் நோக்கம் புரியவில்லை. உங்கள் பார்வையில் கிருத்துவ மதம் என்றால் என்ன? ஐரோப்பிய கிருத்துவ பார்வையில் இருந்து விளக்கங்களை இங்கே கொடுக்க வேண்டியத் தேவை யாது?

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு