முந்தையப் பதிவு

சூத்திரம் 5: தன்னை உணரா ஆன்மா

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்
காந்தக் கண்ட பசாசத் தவையே.

பதவுரை:

விளம்பிய - முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட

உள்ளத்து - உள்ளே இருக்கும் ஆன்மாவினால்

மெய்,வாய்,கண்,மூக்கு - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும்

அளந்து அறிந்து - தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும்

அறியா ஆங்கவை போல - தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாதிருக்கும் ஐம்பொறிகளைப் போல

தாம் - ஆன்மாக்கள் தாமும்

தம் உணர்வின் - தமது உணர்வில் விளங்குகின்றன

தமி - முதல்வனாகிய கடவுளின்

அருள் - திருவருளினால்

காந்தம் கண்ட - காந்தத்தால் இழுக்கப்பட்ட

பசாசத்து அவையே - இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன.

விளக்கம்:

முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட உள்ளே இருக்கும் ஆன்மாவினால் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அறிந்தும், தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாது இருக்கும் அவற்றைப் போல ஆன்மாக்கள் தாமும் தமது உணர்வில் விளங்குகின்றன. முதல்வனாகிய கடவுளின் திருவருளினால் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன. இரும்பிற்குத் தானே இயங்கும் இயக்கம் இல்லாதது போல, ஆன்மாக்களுக்கும் தாமே தம்மை உணரும் ஆற்றல் இல்லை. காந்தம் இழுக்க இரும்பு அதனோடு இணைவதைப் போன்று, கடவுள் உணர்த்த உணரும் ஆற்றலை உடையது ஆன்மா.

உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா 'உள்ளம்' என்றே அழைக்கப்படுகின்றது. உள்ளே இருக்கும் உள்ளமாகிய ஆன்மாவினால் இயக்கப்பட்டு, உலகத்திலுள்ள எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று ஆன்மாவிற்கு அறிவிப்பவை ஐம்புலன்கள். அவ்வைம்புலன்களும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும், தம்மையோ தம்மைச் செயல்படவைக்கும் ஆன்மாவையோ அறியும் ஆற்றல் அற்றவைகளாய் இருக்கின்றன. அவற்றைப் போலவே ஆன்மாவும் தன்னையோ தன்னைச் செயல்பட வைக்கும் இறைவனையோ உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது. இவ்வாறு ஆன்மா தன்னை உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்குக் காரணம், அதை மூடி இருக்கும் சகசமலம் என்பதை முந்திய சூத்திரத்தில் சகசமலத்து உணராது என்ற பகுதியால் அறிந்தோம்.

அறியக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு எப்பொழுதுமே இல்லாமல் போய் விட்டதா? என்ற கேள்வி எழுப்பப்படுமானால், அதற்கு விடை, 'நிலையாகப் போய்விடவில்லை' என்பதாகும். கடவுள் உணர்த்தினால் அதை உணரக் கூடிய தகுதி ஆன்மாவிற்கு உண்டு. ஆனால் கடவுள் உணர்த்தாமல் தானாக, கடவுளை உணரக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு இல்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் வழி கூற வேண்டுமானால் கடவுளை காந்தத்திற்கும் ஆன்மாவை இரும்பிற்கும் ஒப்பிடலாம். இரும்பு தானாகச் சென்று காந்தத்தை அடைய இயலாது, காந்தம் இழுக்கும் பொழுது காந்தத்தோடு இணையும் ஆற்றல் இரும்பிற்கு உளது.

காந்தத்தின் முன்னால் ஒரு இரும்பையும் ஒரு மரக்கட்டையையும் வைத்தால், இரும்பு காந்தத்தை அடைகின்றது. மரக்கட்டை அடைவதில்லை. இதைப் போல ஆன்மாவே கடவுளை உணர முடியும். மற்றப் பொருள்களுக்கு கடவுளை உணரும் ஆற்றல் இல்லை.

கடவுள் தம்முடைய திருவருளினால் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் பொழுது மட்டுமே, அவை தம்மையும் தம் தலைவனாகிய கடவுளையும் உணரும் ஆற்றலைப் பெறுகின்றன. அதுவரை அவை தம்மை உணரா ஆன்மாவாகவே உள்ளன.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு