சிவஞானபோதம்...!!!

தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்களால் இயற்றப்பட்ட இந்த நூலைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இக்காலத்திலும் வெறும் அறிவியலை மட்டுமே மற்ற மொழிகள் அனைத்தும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, அறிவியலின் அடுத்த நிலையான ஆன்மவியலைப் பற்றி தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது இந்நூல்...அதுவும் 12 சூத்திரங்களில். எனவே ஆன்மாவைப் பற்றி நாம் அறிய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த நூலினைப் பற்றிக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி...இப்பொழுது சிவஞானபோதம் என்ன கூறுகின்றது என்றே காண்போம்.

சூத்திரம் 1: உலகத் தோற்றமும் வீழ்ச்சியும்

"அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்"

பதவுரை:

அவன் - முதல் மனிதன்

அவள் - முதல் பெண்

அது - உலகம்

எனும் அவை - எனப்பட்ட அவை

மூவினைமையின் - மனிதனைப் படைத்தல், பெண்ணைப் படைத்தல், உலகைப் படைத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் திறனால்

தோற்றிய திதியே - படைக்கப்பட்டு இருக்கும் நிலையில்

ஒடுங்கி - தமது தூய நிலையில் இருந்து ஒடுங்கி

மலத்து உளதாம் - பாவத்தில் வீழ்ந்ததாகிய

அந்தம் - தூய நிலையின் முடிவே

ஆதி - பாவ நிலையின் தொடக்கம்

என்மனார் - என வழிவழியாகக் கூறுவர்

புலவர் - வேத அறிவில் புலமை பெற்றோர்.

விளக்கம்:

இறைவன் உலகையும் முதல் மனிதனையும் முதல் பெண்ணையும் மூன்று வகையான செயல்களால் படைக்கின்றார். அவர் மனிதனைப் படைத்த நிலை வேறு...பெண்ணைப் படைத்த நிலை வேறு...உலகைப் படைத்த நிலை வேறு. அவ்வாறு படைக்கப்பட்ட அவை, அவற்றிடம் இருந்த இயல்பான தூய நிலையில் இருந்து ஒடுங்கி தாழ்ந்த நிலைக்கு சென்று பாவத்தில் வீழ்ந்தது தான் பாவ நிலையின் தொடக்கம் என்று இறையறிவாளர் வழிவழியாகக் கூறி வருகின்றனர்.

இதனையே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமாகிய திருஉந்தியார்,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41

என்று கூறுகின்றது.

சூத்திரம் 2: வீழ்ச்சியில் கடவுளது ஆட்சி

அவையே தானே ஆயிரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

பதவுரை:

அவையே ஆய் - ஆண் பெண் உலகம் ஆகிய அவற்றைத் தோற்றுவித்தும்

தானே ஆய் - அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாகியும்

இரு வினையின் - தோற்றுவித்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால்

போக்கு - தம்மை விட்டுப் போக்குதலாகிய தோற்றுவித்தல்

வரவு - தம்மிடத்தில் சேர்த்தலாகிய மறைத்தல்

புரிய - ஆகியவற்றைச் செய்ய

ஆணையின் - அவை கடவுளது ஆணையிலிருந்து

நீக்கம் இன்றி - நீக்கம் இல்லாமல்

நிற்கும் அன்றே - நிலைத்து நிற்கும்.

விளக்கம்:

ஆண், பெண், உலகம் ஆகியவற்றைப் படைத்தும், அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாக நின்றும், படைத்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால் தம்மை விட்டுப் போக்குதலாகிய பிறப்பித்தல், தம்மிடத்துச் சேர்த்தலாகிய மறைத்தல் ஆகியவற்றைச் செய்யும் கடவுளது ஆணையில் இருந்து எதுவும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

முதல் சூத்திரத்தில் பாவமாகிய மலத்தில் வீழ்ந்தமையால் இறைவனை அறியாத நிலைக்கு படைப்புகள் சென்றன என்றுக் கண்டோம். இப்பொழுது சில கேள்விகள் எழலாம், பாவத்தில் உள்ள அவற்றிற்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டா? அவ்வாறு தொடர்பு இல்லை என்றால் அவை கடவுளின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையா இல்லையா? இக்கேள்விக்கான விடையைத் தான் இங்கே விளக்கி இருக்கின்றார் மெய்கண்டார்.

இறைவனை உணராத நிலையில் மலத்தால் சூழப்பட்டு அவை இருப்பினும் இறைவனின் அதிகாரத்துக்கு அவை உட்பட்டவையே ஆகும். அப்படைப்புகளை உலகில் தோற்றுவிப்பதும் சரி பின்னர் மீண்டும் தன்னிடமே சேர்த்துக் கொள்வதும் சரி இறைவனின் ஆணையின் படியே நடக்கும். அவனின் ஆணையை மீறி எதுவும் இயங்குவது இல்லை.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

கடவுள் உயிர்களைக் படைக்கவில்லை, என்பதே சைவ சித்தாந்தம்.
இன்று வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் பதிவிடலாம் எனவே அரை குறையாக தெரிந்ததை வைத்துக் கொண்டு .பதிவிடாதீர்கள்.

குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே . திருமூலர்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு