வெள்ளி, 5 நவம்பர், 2010

நான் ரசித்த திரைப்படங்கள் - 1

கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands) :

1990ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வித்தியாசமான காதல் கதை.

ஒரு குன்றின் உச்சியில் ஒரு பாழடைந்த மாளிகை. அந்த மாளிகையினுள் அனாதையாய் கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் கொண்டவாறு வசிக்கும் ஒரு அப்பாவிச் செயற்கை மனிதன். அவன் மேல் பாவப்பட்டு அவனை ஊருக்குள் அழைத்து வந்து தங்கள் குடும்பத்தினுள் அவனையும் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணின் மேல் அவனுக்கு உண்டாகும் காதல். அந்த காதலுக்கு எதிர்ப்பாய் அந்த பெண்ணின் காதலன். இறுதியில் அந்த செயற்கை மனிதனின் காதல் கை கூடியதா என்பதே கதை.

சுருக்கமா சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படம் அதிரடி சண்டைகள், கிராபிக்ஸ் வித்தைகள் என்று எதுவும் இல்லாத அந்த கால எந்திரன் படம் என்றுக் கூட சொல்லலாம்.

ஆவான் என்றொரு இடத்தில உள்ள குன்றில் ஒரு மாளிகையில் ஒரு விஞ்ஞானி தனது படைப்புகளுக்கு எல்லாம் தலைமையான படைப்பாய், தனிமையாய் இருக்கும் அவருக்கு ஒரு மகனாய் ஒரு செயற்கை மனிதனை உருவாக்க முயன்றுக் கொண்டு இருகின்றார். அவரின் முயற்சியின் பயனாய் எட்வர்ட் என்னும் செயற்கை மனிதனும் உயிர் பெறுகின்றான். பார்ப்பதற்கு உண்மையான மனிதனைப் போலவே இருக்கும் எட்வர்டிடம் ஒரே ஒரு குறை. அவனுக்கு கைகள் கிடையாது. தனது மாளிகையின் தோட்டத்தில் உள்ள செடிகளை எல்லாம் அழகுப் படுத்தி சீர் அமைப்பதற்கு எட்வர்டிற்கு வசதியாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு கைகளுக்கு பதிலாய் கத்திகளையும் கத்திரிக்கோள்களையும் வைத்துப் படைத்தது இருந்தார் அந்த விஞ்ஞானி. எட்வர்ட் தோட்டக் கலைகளில் சிறந்தவனான உடனையே அவனுக்கு கத்திகளுக்கு பதிலாகஉண்மையானக் கைகளை மாற்றி விடுவோம் என்று காத்து இருந்த விஞ்ஞானி, அந்த நாள் வந்த பொழுது எட்வர்டிற்கு கைகளை மாட்டாமலேயே மாரடைப்பால் இறந்துப் போகிறார். அந்த பதட்டத்தில் எட்வர்ட் அவனுடைய கத்திக் கைகளால் அந்த உண்மையான கைகளை எடுக்க முயல, அந்த கைகள் கிழிந்துப் போகின்றன. எனவே தனது கத்திக் கைகளுடனேயே அந்த மாளிகையில் தோட்டத்தை பராமரித்துக் கொண்டே தனது காலத்தை கழிக்க ஆரம்பிகின்றான்.

பின் ஒரு நாள், பெக் என்னும் பொருட்களை விற்பனை செய்யும் பெண் ஒருத்தி, எட்வர்ட் தங்கி இருக்கும் மாளிகைக்கு பொருட்களை விற்பனை செய்ய போகும் போது தனியாய் இருக்கும் எட்வர்டின் மீது பாவம் கொண்டு அவனை அவளுடன் அவளின் வீட்டிற்க்கு வர அழைக்கின்றாள். எட்வர்டும் அவளுடன் அவளின் வீட்டிற்க்கு சென்று அவளின் குடும்பத்தில் ஒன்றாகி விடுகின்றான்.

பெக்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் பார்த்த முதலிலேயே எட்வர்டைப் பிடித்து விடுகின்றது. பெக்கின் மூத்த மகள் கிம்மைத் தவிர. கிம் முதலில் எட்வர்டை ஒரு மிருகமாகப் பார்க்க ஆரம்பிகின்றாள். பின் போகப் போகப் எட்வர்டின் உண்மையான குணம் அறிந்து அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிக்கின்றது. அதற்குள் எட்வர்ட் பெக்கின் குடும்பம் வசிக்கும் ஆவான் பகுதியில் தனது தோட்டக் கலையின் மூலமாகவும் தனது சிகை அலங்காரத் திறமைகள் மூலமாகவும் நல்ல பெயர் பெற்று அந்த மக்களுள் இணைந்து விடுகின்றான். அவனின் கத்திக் கைகளும் கற்பனைத் திறனும் அவனுக்கு புகழை வாரிக் குவித்த வண்ணம் இருக்கின்றன. அனைத்தும் நன்றாகவே போய்க் கொண்டு இருக்கும் வேளையில் எட்வர்டிற்கு புதிதாய் பிரச்சனை ஜிம் என்றவனின் வடிவில் வருகின்றது. ஜிம் கிம்மின் காதலன். அவனுக்கு சுத்தமாகவே எட்வர்டை பிடிக்கவில்லை. ஒருநாள் தனது தந்தை தான் கார் வாங்குவதற்கு பணம் தரவில்லை என்றவுடன், தன் சொந்த வீட்டிலேயே திருடுவதற்கு திட்டமிட்டு அந்த திட்டத்தில் எட்வர்டையும் கிம்மின் உதவியால் சேர்த்துக் கொள்கின்றான் ஜிம். அந்த திருட்டு முயற்சி தோல்வி அடைய எட்வர்டைத் தவிர மற்ற அனைவரும் தப்பி விடுகின்றார்கள். எட்வர்டை போலீஸ் கைது செய்து கொண்டு போய் விடுகின்றது.

பின்னர் எட்வர்ட் தனிமையிலேயே வளர்ந்ததால் அவனுக்கு நல்லதுக் கெட்டது தெரியாது, அவனுக்கு அதை யாரவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அது வரை அவன் மேல் சட்டப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நீதிபதி சொல்லி எட்வர்டை விடுதலை செய்கிறார். "இன்னொரு முறை இவனால் இந்த பகுதி மக்களுக்கு எதாவது பிரச்சனை வந்தது என்றால் இவனை நான் சிறையில் அடைக்க வேண்டி இருக்கும்" என்று ஒரு எச்சரிக்கை செய்துவிட்டு எட்வர்டை பெக்கின் குடும்பத்திடம் விட்டு விட்டு செல்கின்றார் எட்வர்டை கைது செய்த போலீஸ் அதிகாரி. அதன் படியே எட்வர்டிற்கு நல்லதையும் கெட்டதையும் சொல்லிக் கொடுக்க பெக்கின் குடும்பம் முயல்கிறது. அந்த சம்பவத்திற்கு பின் எட்வர்ட் என்ன தான் நல்லது செய்தாலும் அந்த பகுதி மக்கள் எட்வர்டை ஒரு திருடனாகப் பார்ப்பதை நிறுத்த மாட்டேன்கின்றார்கள். இந்த காலக் கட்டத்தில் கிம்மிற்கு ஜிம்மின் மேல் வெறுப்பும் எட்வர்டின் மேல் பற்றும் வர ஆரம்பிக்கின்றது. ஒரு நாள் இரவு ஜிம்மும் அவனது நண்பனும் குடித்துவிட்டு கிம்மின் வீட்டிற்க்கு வேகமாக காரில் வரும் பொழுது எதிர்பாராவிதமாக காருக்கு நடுவில் கிம்மின் தம்பி கெவின் வந்து விட, கெவினைக் காப்பற்றுகின்றான் எட்வர்ட். காப்பாற்றப்பட்ட கெவின் நலமாக இருக்கின்றானா என்று அறிய அவனின் முகத்தில் தன்னுடைய கத்திக் கையை வைத்துப் பார்க்கும் பொழுது எட்வர்டை அறியாமலேயே கெவினின் முகத்தில் கத்தி கீறி விட, சுற்றி இருந்தவர்கள் எட்வர்ட் தான் கெவினைத் தாக்குகின்றான் என்று தப்பாக புரிந்துக் கொண்டு அவனைத் துரத்துகின்றனர்.

எட்வர்ட் அவர்களிடம் இருந்து ஓடி மீண்டும் தனது மாளிகைக்கே செல்கின்றான். அவனைத் துரத்தியவாறே ஆவான் நகர மக்களும், அவனைக் கொள்வதற்காக ஜிம்மும், அவனைக் காப்பற்றுவதற்காக கிம்மும் அந்த மாளிகைக்குள் செல்கின்றனர்.

ஜிம் எட்வர்டைக் கொன்றானா?. எட்வர்டின் காதல் என்னவாயிற்று?. கிம் என்னவானாள்?. என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

படம் முழுவதையும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்துகின்றார் ஜானி டெப்(johnny depp). அப்பாவியான செயற்கை மனிதனாய், வசனங்கள் அதிகம் இன்றி அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் வாய்ப்புகள் அதிகம். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு எட்வர்ட் என்ற அந்த கதாப்பாத்திரதிற்கு உயிர் கொடுத்து இருக்கின்றார். அவருடைய திரைப்பட வாழ்க்கை பயணத்தில் இந்த படம் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

ஜானி டெப்பின் திறமைக்கு தீனி அளிக்கும் படி காட்சிகளை உருவாக்குவதில் இயக்குனர் டிம் பர்டன் (tim burton) வெற்றிப் பெற்று இருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பக் காட்சியில் இருந்தே தனது கற்பனை உலகைத் திரையில் அருமையாக விவரித்துக் காட்டி இருக்கின்றார்.

எளிமையான காதல் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் விரும்புபவர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள். அதுவும் குறிப்பாக ஜானி டெப்பின் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக காண வேண்டிய ஒரு படம்.   

திங்கள், 1 நவம்பர், 2010

பிற நாட்டு நாடோடிக் கதைகள் - 1

"முன்னொரு காலத்தில்" என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்காமல் நம் நாட்டில் எந்த ஒரு குழந்தையும் வளர்ந்து இருக்கவே முடியாது. ஏன்!!! இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. குழந்தைகளுக்கு என்று எழுதப்பட்டு இன்று சாகா வரம் பெற்று விளங்கும் நாடோடிக் கதைகளும் தேவதைக் கதைகளும் உலகத்தில் ஏராளம். அப்படி உலகம் எங்கும் கூறப்படும் கதைகளை 'பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் நம் மொழியில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும்" என்ற கூற்றின் படி பலப் பதிப்பகங்கள் மொழிப்பெயர்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த பதிப்பகங்கள் வாயிலாக வெளிநாட்டு காவியங்களும் , கதை மாந்தர்களும் இனிய தமிழ் மொழி பேசிக் கொண்டு நம்முள் உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.

எல்லாம் அப்படி இருக்க எனக்குள் திடீர் என்று ஒரு எண்ணம் 'நாமும் ஏன் நாம் படித்தக் கதைகளை மொழிபெயர்த்துப் பார்க்கக் கூடாது. நாம் ரசித்த கதைகளை பிறரும் அறியும் வண்ணம் நாம் ஏன் எழுதிப் பார்க்க கூடாது?' என்று!. அந்த எண்ணத்தின் விளைவாகவே இந்தப் பதிவு.


பன்னிரு மாதங்களும் மரிசாவும் - ஒரு செக் நாட்டு நாடோடிக் கதை!

முன்னொரு காலத்தில் மரிசா என்னும் பெண் தன்னுடைய கொடுமைக்காரச் சித்தியுடனும் தங்கை ஒலினாவுடனும் கானகத்திற்கு அருகே ஒரு மர வீட்டினில் வசித்து வந்தாள். மரிசா இயல்பிலேயே மற்ற உயிர்களிடத்து அன்பான பெண். எனவே ஊரில் உள்ள அனைவருக்கும் மரிசாவை மிகவும் பிடிக்கும். ஆனால் ஒலினாவோ அவள் அன்னையைப் போலவே செருக்கானவள். பிறரை சிறிதும் மதிக்க மாட்டாள். எனவே ஊரில் ஒலினாவை யாருக்கும் பிடிக்காது.
இது ஒலினாவின் தாயாரை கோபம் கொள்ளச் செய்தது. "என்ன ... என்னுடைய மகளை யாரும் பாராட்ட மாட்டேன்கின்றார்கள் ஆனால் இந்த மரிசாவை மட்டும் இப்படி தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றார்களே... அறிவில்லா மக்கள்!" என்று எண்ணிக் கொண்டு அவள் கோபத்தை எல்லாம் மரிசாவின் மேல் காட்ட ஆரம்பித்தாள்.

காலை தொடங்கி மாலை வரைக்கும் உள்ள வீட்டு வேலை எல்லாம் மரிசாவே தனியாய் செய்ய வேண்டியதாய் ஆயிற்று. மரிசா கடினப்பட்டு தோட்டத்திலும் முற்றத்திலும் வேலைச் செய்து கொண்டு இருப்பாள் ஆனால் ஒலினாவோ வேலை எதுவும் செய்யாது நேரத்தை சோம்பேறித்தனமாக கழித்துக் கொண்டு இருப்பாள். இவ்வளவு கடினப் பட்டும் மரிசா அவள் சித்தியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளுக்கு வேலை செய்வது பிடித்து இருந்தது. அது அவளுக்கு கடினமாய் படவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்த அன்பும் பாசமும் அவள் சித்தியிடமும் தங்கையிடமும் கிடைக்காதது மட்டுமே அவளுக்கு மிகவும் மன வருத்தம் தருவதாய் இருந்தது. தன்னுடைய சோகத்தை பகிர்ந்து கொள்வதற்கு வேறு யாரும் இல்லாததினால் அவள் தான் வளர்த்த ரோசா செடிகளிடம் மட்டும் தன்னுடைய கதையையும் சோகத்தையும் சொல்லி காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தாள்.

இவ்வாறே காலங்கள் வேகமாய் நகர்ந்தன.

மரிசா மிக அழகான பெண்ணாய் வளர்ந்து இருந்தாள். ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மரிசாவை மணம் முடிக்க தயாராய் இருந்தனர். ஆனால் ஒலினாவை மணக்கவோ யாரும் முன் வரவில்லை. இது மரிசாவின் சித்தியை மேலும் கோபமும் பொறாமையும் கொள்ளச் செய்தது. "இந்த மரிசா இருக்கும் வரை நம்முடைய மகளை யாரும் மணக்க முன் வரப் போவதில்லை. எனவே இந்த மரிசாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும்" என்று எண்ணிக் கொண்டு மரிசாவை துரத்த வழிகளை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவள் காத்து இருந்த அந்த நாளும் வந்தது. அது ஒரு பனிக்காலம். வெளியில் பனி பயங்கரமாக பெய்துவிட்டு அடங்கி இருந்தது.

திடீர் என்று ஒலினாவிர்க்கு செவ்வூதா(violet) பூக்களை சூடிக் கொண்டு தன்னை அழகுப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. உடனே அவள் மரிசாவை நோக்கி,
"ஏய் மரிசா! எனக்கு செவ்வூதாப் பூக்களை சூட வேண்டும் போல் இருக்கின்றது. நீ காட்டுக்குள் போய் எனக்காக அவற்றைத் தேடிப் பறித்துக் கொண்டு வா." என்றாள்.
மரிசா அதிர்ந்து போனாள். மார்ச்சு மாசம் பூக்கும் செவ்வூதாப் பூக்களை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த பூக்கள் பூக்கும் காலம் இது அல்லவே. அந்த பூக்களுக்கு நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"அம்மா ... மரிசாவைப் பாருங்கள். நான் சொன்ன வேலையைச் செய்ய முடியாது என்கின்றாள்" என்று தன்னுடைய துணைக்கு அவளின் அன்னையையும் அழைத்துக் கொண்டாள்.
ஒலினாவின் அன்னையும் இது தான் மரிசாவை வீட்டை விட்டு துரத்தி விட அருமையான சந்தர்ப்பம் என்று முடிவு செய்து கொண்டு
" என்ன மரிசா. ஒலினா சொன்ன வேலையை செய்ய முடியாது என்றாயாமே... ஏன்?" என்றார் கோபமாய்.
"இல்லை சித்தி .. இந்த காலத்தில் அந்த பூக்கள் பூக்காது... அவற்றைப் நான் எங்கே போய் பறிப்பது. மார்ச்சு மாதத்தில் நானே தங்கைக்கு அந்த பூக்களை வேண்டிய அளவிற்கு கொண்டு வந்து தருகின்றேன்" என்றாள் மரிசா.
"அது எல்லாம் எனக்கு தெரியாது. அவள் ஆசைப்படுவதை இப்பொழுதே நீ கொண்டு வந்து தர வேண்டும். இல்லாவிடில் இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை. போ போய் அந்த பூக்களைக் கொண்டு வா!" என்றார் மரிசாவின் சித்தி.
"ஐயோ சித்தி..." என்று ஆரம்பித்த மரிசாவை வீட்டை விட்டு வெளியே பனியில் தள்ளிவிட்டு கதவை அடைத்தனர் மரிசாவின் சித்தியும் ஒலினாவும்.
மரிசா அழுதுக் கொண்டே காட்டினுள் செவ்வூதாப் பூக்களைத் தேடி நடக்க ஆரம்பித்தாள்.   எவ்வளவு நேரம் நடந்து இருப்பாள் என்று தெரியாது ஆனால் அவள் நடந்துக் கொண்டே இருந்தாள். பூக்கள் இல்லாமல் அவள் வீட்டிற்க்கும் செல்ல முடியாது, வேறு எங்கு செல்வது என்றும் அவளுக்கு தெரியவில்லை. எனவே கால் போன போக்கிலே அவள் நடந்துச் சென்றாள். விரைவில் இருட்ட ஆரம்பித்தது. பனி வேறு தூற ஆரம்பித்தது.
பயங்கரமான காட்டில் இது வரை தனியாக போய் பழக்கப்படாத மரிசா பயப்பட ஆரம்பித்தாள்.
"கடவுளே ... எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தூரத்தில் யாரோ நெருப்பை மூட்டி இருப்பதை கண்டாள். சிறிது நம்பிக்கை அவளுக்கு பிறந்தது. இங்கு வேறு யாரோ இருகின்றார்கள். நமக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்று அவள் எண்ணிக் கொண்டு அந்த நெருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போகும் வழியில் சிறிது பயமும் ஆவலுடன் தொற்றிக் கொண்டது. இந்த பனியில் மனிதர்கள் யாரும் காட்டினுள் வர மாட்டார்களே. ஒரு வேலை அங்கு இருப்பது திருடர்களாக இருக்குமோ என்று அஞ்சியவாறே அவள் நெருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அந்த நெருப்பை நோக்கி நெருங்க நெருங்க அங்கு இருந்தவர்கள் அவளுக்கு நன்றாக தெரிய ஆரம்பித்தனர். அவர்கள் மொத்தம் 12 பேர் இருந்தனர். 3 பேர் வயதானவர்களாகவும், 3 பேர் நடுத்தர வயதினராகவும், 3 பேர் இளைஞர்களாகவும் மற்ற மூன்று பேர் சிறு வயதினராகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அந்த நெருப்பை சுற்றி அமர்ந்து இருந்தனர். அவர்களுள் 11 பேர் நிலத்தில் அமர்ந்து இருக்க ஒரு சிறு வயது நபர் மட்டும் ஓர் அரியணையில் அமர்ந்து இருந்தார். மரிசா அவர்களை நோக்கி ஆச்சர்யத்துடனும் பயத்துடனும் நெருங்கினாள்.
நெருங்கிய பொழுதே மரிசா உணர்ந்து கொண்டாள், அந்த நெருப்பை சுற்றி அமர்ந்து இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள் தான் பன்னிரு மாதங்கள் என்று.
மரிசா அவர்களை நெருங்கி "பெரியவர்களே வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்று ஆரம்பித்தாள்.
மரிசாவை கண்ட அவர்கள் அதிர்ச்சி உற்றனர். இந்த பனியில் அவர்கள் யாரையும் அந்த காட்டினுள் எதிர்பார்க்கவில்லை.
"உனக்கும் வந்தனங்கள் சிறுமியே... கண்டிப்பாக நீயும் எங்களுடன் சேர்ந்து குளிர் காயலாம். ஆனால் இந்த பனியில் இவளவு தூரம் எதற்காக வந்து இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா ? உன்னை உன் வீட்டில் தேட மாட்டார்களா?" என்றார் அரியணையில் அமர்ந்து இருந்த சனவரி.
"இல்லை ஐயா!! என்னை தேட மாட்டார்கள். என்னை செவ்வூதாப் பூக்கள் பறித்துக் கொண்டு வர அனுப்பியதே அவர்கள் தான். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?. இந்த கானகத்துள் இப்பொழுது அந்த பூக்களை நான் எங்கு பார்க்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மரிசா.
"செவ்வூதா பூக்களா... அதுவும் இந்த காலத்திலா" என்றார் சனவரி அதிர்ச்சியாய் " அவை இந்த பனியில் பூக்காது என்று உன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாதா?".
"தெரியும்... இருந்தாலும்..." என்று ஆரம்பித்த மரிசாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. அதைக் கண்ட சனவரி,
"அழாதே பெண்ணே!!! உனக்கு இப்பொழுது செவ்வூதாப் பூக்கள் தானே வேண்டும்.. ஒரு கணம் பொறு" என்று கூறி விட்டு அங்கு கூடி இருந்தவர்களுள் கொஞ்சம் இளமையானவரை நோக்கித் திரும்பினார்.
"சகோதரா மார்ச்சு... இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை மார்ச்சுவிடம் கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
மார்ச்சு அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,

"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
    கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
 இவளை வாட்டுகின்றது இவள் சொந்தம்...
     வாட்டாதே நீயும்.. வழிவிடு வரட்டும் சிறிது வசந்தம்!!!" என்றார்.

நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகி பச்சைப்பசேல் புல் வெளிகள் தென்படலாயிற்று. அவற்றின் நடுவே கொடிகள் எங்கும் பூத்துக் குலுங்கின செவ்வூதாப் பூக்கள்.
மரிசா சிரித்தாள்.
"போ பெண்ணே!!! போய் உனக்கு வேண்டிய மட்டும் மலர்களை பறித்துக் கொள்." என்று கூறினார் மார்ச்சு.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று மலர்களை வேண்டிய மட்டும் பறித்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே பூக்களை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி பூக்களை கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த பூக்களை வாங்கிக் கொண்டாள். "இந்த பூக்களை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் பூக்களை சுடி தன்னை அழகுப் பார்க்க ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த பூக்கள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. மரிசாவின் சித்திக்கு தான் ஐயோ நாம் மரிசாவை வீட்டை விட்டு துரத்த போட்ட திட்டம் தோற்று விட்டதே என்று கோபம் தலைக்கு ஏறியது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.
அவளின் யோசனைக்கு ஏற்றார்ப்போல் அடுத்த நாள் ஒலினாவிற்கு செம்புற்றுப்பழம்  (strawberry) சாப்பிட வேண்டும் என்பது போல் ஆசை வந்தது. உடனே அவள் மரிசாவை அழைத்தாள்.
"மரிசா. எனக்கு செம்புற்றுப்பழம் சாப்பிட வேண்டும் என்பது போல ஆசையாக உள்ளது. நீ காட்டினுள் போய் எனக்கு அந்த பழங்களைப் பறித்து வா" என்றாள்.
மரிசா மீண்டும் அதிர்ந்து போனாள். சூன் மாசம் கனிக்கும் செம்புற்றுப் பழத்தை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த கனிகள் வரும் காலம் இது அல்லவே. அந்த கனிகளுக்கு இந்த பனியில் நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"எனக்கு அது எல்லாம் தெரியாது. அந்த கனிகள் இல்லாது நீ வீட்டினுள் வர முடியாது" என்று கூறிவிட்டு மரிசாவை வெளியே தள்ளி கதவை பூட்டினர்.
மரிசா மீண்டும் சோகத்துடன் காட்டினுள் நடக்க ஆரம்பித்தாள். விரைவில் முந்தைய இரவு அவள் மாதங்களை சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
"பெரியவர்களே மீண்டும் வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்றாள்.
அவளை மீண்டும் கண்டு அதிர்ச்சியுற்ற சனவரி
"நிச்சயமாக எங்களுடன் நீ இணைந்துக் கொள்ளலாம்! ஆனால் ஏன் பெண்ணே மீண்டும் இந்த பனியில் காட்டினுள் வந்து இருக்கின்றாய் என்று நாங்கள் அறிந்துக் கொள்ளலாமா?. என்ன பிரச்சனை?" என்றார்.
"என்னுடைய தங்கைக்கு இம்முறை செம்புற்றுப்பழம் வேண்டுமாம். அதை பெறாது நான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர்" என்றாள் மரிசா.
"செம்புற்றுப்பழமா!!! இந்த பனிக் காலத்திலா... நீ ஒன்றும் கவலைப் படாதே பெண்ணே" என்றுக் கூறிக் கூட்டத்தில் இருந்த சற்று நடுத்தர வயதை சேர்ந்த ஒருவரை பார்த்து திரும்பினார்.
"சகோதரா சூன் .. இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை சூன்இடத்து கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
சூன் அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,

"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
    கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
 செடிகளை விழுங்கி நின்றதுப் போதும் பனியே...
     சற்று விலகிடு கனியட்டும் இவள் விரும்பிய கனியே!!! என்றார்.

நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகி பச்சைப்பசேல் புல் வெளிகளும் பழம் கனிக்கும் செடிகளும் தென்படலாயிற்று.
"போ பெண்ணே!!! போய் உனக்கு வேண்டிய மட்டும் கனிகளைப் பறித்துக் கொள்." என்று கூறினார் சூன்.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று கனிகளை வேண்டிய மட்டும் பறித்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே கனிகளை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி கனிகளைக் கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த கனிகளை வாங்கிக் கொண்டாள். "இந்த கனிகளை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் கனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த கனிகள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. மரிசா மிகத் தொலைவு அலைந்து வந்து இருந்தமையால் பசியுடனே உறங்கப் போனாள்.
மீண்டும் மறுநாள் ஒலினாவிற்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல் ஆசை வந்தது. உடனே அவள் மரிசாவை அழைத்தாள்.
"மரிசா. எனக்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல ஆசையாக உள்ளது. நீ காட்டினுள் போய் எனக்கு அந்த பழங்களைப் பறித்து வா" என்றாள்.
மரிசா மீண்டும் அதிர்ந்து போனாள். செப்டம்பர் மாசம் கனிக்கும் ஆப்பிள் பழங்களை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த கனிகள் வரும் காலம் இது அல்லவே. அந்த கனிகளுக்கு இந்த பனியில் நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு மீண்டும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"எனக்கு அது எல்லாம் தெரியாது. அந்த கனிகள் இல்லாது நீ வீட்டினுள் வர முடியாது" என்று கூறிவிட்டு மரிசாவை வெளியே தள்ளி கதவை பூட்டினர்.
மரிசா மீண்டும் சோகத்துடன் காட்டினுள் நடக்க ஆரம்பித்தாள். விரைவில் முந்தைய இரவு அவள் மாதங்களை சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
"பெரியவர்களே மீண்டும் வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்றாள்.
அவளை மீண்டும் கண்டு அதிர்ச்சியுற்ற சனவரி
"நிச்சயமாக எங்களுடன் நீ இணைந்துக் கொள்ளலாம்! ஆனால் ஏன் பெண்ணே மீண்டும் இந்த பனியில் காட்டினுள் வந்து இருக்கின்றாய் என்று நாங்கள் அறிந்துக் கொள்ளலாமா?. என்ன பிரச்சனை?" என்றார்.
"என்னுடைய தங்கைக்கு இம்முறை ஆப்பிள் பழம் வேண்டுமாம். அதை பெறாது நான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர்" என்றாள் மரிசா.
"ஆப்பிள் பழமா!!! இந்த பனிக் காலத்திலா... நீ ஒன்றும் கவலைப் படாதே பெண்ணே" என்றுக் கூறிக் கூட்டத்தில் இருந்த சற்று வயது முதிர்ந்த ஒருவரை பார்த்து திரும்பினார்.

"சகோதரா செப்டம்பர் .. இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை செப்டம்பர் இடம் கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
செப்டம்பர் அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,

"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
    கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
 மரங்களை மறைத்து நின்றதுப் போதும் பனியே...
     சற்று விலகிடு கனியட்டும் இவள் விரும்பிய கனியே!!! என்றார்.

நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகியது. வானம் வரை உயர்ந்து நின்ற ஒரு மரத்தில் இருந்து மட்டும் இரு பூக்கள் பூத்து உடனே ஆப்பிள் பழங்களாய் கனிந்து மண் மேலே விழுந்தன.

"போ பெண்ணே!!! போய் அந்த இரண்டு ஆப்பிள் கனிகளைப் எடுத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்க்கு போ." என்று கூறினார் செப்டம்பர்.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று அந்த இரண்டு கனிகளை எடுத்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே கனிகளை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி கனிகளைக் கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த இருக் கனிகளை வாங்கிக் கொண்டாள். "இந்த கனிகளை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் கனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த கனிகள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. அந்த பழங்கள் மிகவும் இனிமையாய் இருக்கவே ஒலினா மரிசாவை நோக்கி
"இந்த பழங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இரு பழங்களை மட்டுமே கொண்டு வந்து தந்து விட்டு மீதிப் பழங்களை எல்லாம் தின்று விட்டாயா?" என்றாள் கோபமாய்.
"ஐயோ! இல்லை ஒலினா... அந்த மரத்தில் இந்த இரு கனிகள் மட்டும் தான் இருந்தன. என்னை நம்பு. நான் பொய் சொல்லவில்லை" என்றாள் மரிசா.
"உன்னை நம்புவதா... நீ அந்த பழங்களை சாப்பிட்டு இருந்தாலும் சாப்பிட்டு இருப்பாய். நானே போய் அந்த பழங்களை பறித்துக் கொள்கிறேன்." என்று கூறி விட்டு தன்னுடைய அங்கியை அணிந்துக் கொண்டு பனியில் தனது அன்னை எவ்வளவு தடுத்தும் வெளியே செல்ல ஆரம்பித்தாள்.
விரைவில் அவளும் அந்த பன்னிரு மாதங்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். குளிர் அவளை பயங்கரமாக வாட்டவே அவள் அவர்களின் அனுமதி இன்றியே அவர்கள் மூட்டி இருந்த நெருப்பில் குளிர் காய ஆரம்பித்தாள்.
இதைக் கண்டு கடுப்புற்ற சனவரி
"சொல் பெண்ணே... நீ யார்!. இந்த பனியில் இந்த நேரத்தில் காட்டுக்குள் என்ன செய்துக் கொண்டு இருக்கின்றாய்?" என்றார்.
இது வரை யாரிடமும் பதிலோ இல்லை காரணமோ சொல்லிப் பழக்கமில்லாத ஒலினா அதைக் கேட்டு கோபமுற்று,
"என்னுடைய வேலையை நான் எதற்காக கிழவா உன்னிடம் சொல்ல வேண்டும். உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போ!" என்றாள்.
அதைக் கேட்டு மிகவும் கோபம் அடைந்த சனவரி தன் கையில் இருந்த செங்கோலை அசைக்க, வானம் மிகவும் இருட்டிக் கொண்டு வந்து மிகவும் பெரிய பனி அந்த இடத்தில பெய்ய ஆரம்பித்தது. அந்த பனியில் மாட்டி வழித் தவறி ஒலினா காட்டினுள் தொலைந்து போனாள்.
மிக நேரம் ஆகியும் தன்னுடைய மகள் திரும்பாததால், "அவள் ஆப்பிள் பழங்களை தின்றுக் கொண்டே அவளை மறந்து காட்டினுள் அமர்ந்து இருக்க கூடும்" என்று எண்ணி, வீட்டை மரிசாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மரிசாவின் சித்தியும் காட்டினுள் ஒலினாவைத் தேடி செல்ல ஆரம்பித்தார்.
மிக விரைவில் மரிசாவின் சித்தியும் பனியில் மாட்டிக் கொண்டு காட்டினுள் தொலைந்து போனார். 
நீண்ட நேரம் ஆகியும் தன் சித்தியும் திரும்பவில்லை, தங்கையும் திரும்பவில்லை என்பதை கண்டு கவலை உற்று அவர்கள் திரும்ப மரிசா இறைவனிடம் வேண்டினாள். அப்படியே அவர்களின் வருகைக்காக காத்து இருந்தாள். ஆனால் நாட்கள் பல ஓடியும் அவர்கள் வராததால் அவள் தன்னுடைய வீட்டினுள் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தாள்.

பின் ஒரு நாள், அவளுக்கு ஏற்ற ஒருவனை மணம் முடித்துக் கொண்டு அவள் தன் வாழ்நாள் முழுவதும் மாதங்களின் ஆசியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்.

முற்றும்.


   

சனி, 16 அக்டோபர், 2010

கற்பனை உலகில் ... நான்! -2

மாயாவி...!!!

1980களில் இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் இருந்த இளம் வயதினர் நிச்சயம் இந்த பெயரைக் கேள்விப்படாது இருந்திருக்க முடியாது. அதுவும் குறிப்பாக தமிழ் காமிக்ஸ் உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்த அனைவராலும் தவிர்க்க முடியாத பெயராய் மாயாவி விளங்கிற்று என்று சொன்னாலும் அது மிகையாகாது.

அப்படி என்னயா மாயம் அந்த பெயரில் இருக்கு என்கின்றீர்களா?.
அதான் மாயாவி!!!.

காமிக்ஸ் உலகத்தில் வாத்துக்களோடும் முயல்களோடும் தவழ்ந்து கொண்டு இருந்த இளைய சமுகத்தை, எங்கள் கை பிடித்து அதிரடி சாகசங்கள் என்னும் அடுத்தக் கட்ட கற்பனை உலகத்திற்கு கூட்டிச் சென்றவர் அவர்.

சுருக்கமாகச் சொன்னால் எங்கள் தலைமுறையின் முதல் அதிரடி நாயகன் அவர் - மாயாவி.
"அது எப்படி உங்க தலைமுறையை மட்டும் சொல்லலாம்... எங்க காலத்துலையும் அவர் தான்பா நாயகன்" என்று எங்களின் முந்தைய தலைமுறையும் கூட சண்டைக்கு வரலாம். தவறில்லை. மாயாவியின் தாக்கம் அப்படி.

1980களையும் 90களையும் தமிழ் காமிக்ஸின் பொற்காலம் என்பார்கள். அந்த காலம் எப்பொழுது தொடங்கிற்று என்று எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் மாயாவி இன்றி அது தொடங்கி இருக்காது என்பது மட்டும் எனக்கு தெரியும். அது வரை வெள்ளித்திரையில் மட்டுமே கதாநாயகர்களை கண்டு கொண்டு இருந்த எங்களின் கைகளில் வெள்ளித்திரை காணாத நாயகர்களை காமிக்ஸ்கள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்த காலம்.

அது ஒரு கனாக்காலம்...

எப்படி வெள்ளித்திரையில் ரஜினியின் படம் என்றால் போட்ட காச எடுத்து விடலாம் என்ற உத்திரவாதம் ஒன்று இருந்ததோ அதே போல் தான் மாயாவியின் கதைகளுக்கும்.

"மாயாவி கதையா... நிச்சயம் எல்லா பிரதியும் வித்துரும்னே" என்பது தான் விற்பனையாளர்களின் கூற்றாக இருந்தது.

புத்தகம் வெளியான அன்றே 'இப்பொழுது விற்பனையில்' என்று ஊரெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி விளம்பரம் செய்யும் அளவுக்கு காமிக்ஸ்களின் தாக்கம் இருந்தது. அதுவும் மாயாவியின் தாக்கம் குறிப்பாக அதிகம் இருந்தது.

அறிந்தோ அறியாமலோ மாயாவி ஒரு புரட்சி செய்து கொண்டு இருந்தார். இல்லையா சமூகத்திடம் உள்ள படிக்கும் குணத்தை அவர் பெருக்கிக் கொண்டு இருந்தார்.

பள்ளி முடிந்து வந்த உடனே "அம்மா அம்மா ... ஒன்னா ரூபா தாங்கமா... புத்தகம் வாங்கிட்டு வந்துடறேன்" என்று ரூபாயை கேட்டு வாங்கிக் கொண்டு விரைவாக மிதிவண்டியில் போய் புத்தகம் வாங்கிப் படித்தது இன்றும் அப்படியே ஞாபகம் இருக்கின்றது. அந்த புத்தகமும் தான். ஆனால் மாயாவி முன்பு இருந்தது போல் இப்பொழுது இல்லை. இன்றைய இளைய சமுதாயம் மாயாவியை புறக்கணித்துக் கொண்டு இருகின்றனர். மாயாவியை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ்களையே, ஏன் கிட்டத்தட்ட தமிழ் நூல்களையே தங்களை அறியாது புறக்கணித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மாயாவி இன்றும் பெருநகரங்களில் ஆங்கில புத்தக கடைகளில் ஆங்கிலம் பேசிக் கொண்டு சண்டையிட்டு கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர் தமிழ் பேசிய நூல்கள் தான் எங்கோ பின் தங்கி விட்டன.

"பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்" என்றார் பாரதி.
ஆனால் இன்று இந்த இளைய சமுதாயம் நம் மொழியின் மகிமையை அறியாது நின்றுக் கொண்டு இருக்கும் காரணத்தால், நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு இருந்த நிறுவனங்கள் இன்று அந்த தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு பெயர்ந்து கொண்டு இருக்கின்றன.

எனவே தான் ஆங்கிலம் பேசும் மாயாவியை 400 ரூ கொடுத்து வாங்க ஆட்கள் இருகின்றார்கள். ஆனால் 4 ரூ கொடுத்து தமிழில் வாங்க ஆட்கள் யாருமில்லை.

இந்த பதிவு என்னுடைய கற்பனை உலகில் நான் கடந்த கதாநாயகர்களை பற்றியே... என்னை அதிரடி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த மாயாவியை விட்டு விட்டு வேறு யாரைப் பற்றியும் எழுதத் தொடங்க மனம் ஒத்துழைக்கவில்லை. எனவே இதோ மாயாவியை பற்றிய ஒரு சிறு பதிவு. தங்களின் சிறு வயதை மாயாவியோடு கடந்தவர்களுக்கு இந்தப் பதிவு ஒரு சின்னத் திரும்பிப் பார்க்கும் படலமாக இருக்கும். மாயாவியை அறியாதவர்களுக்கோ அவரை நான் அறிமுகம் செய்து வைக்கும் படலமாக இருக்கும்.

ஆரம்பிக்கும் முன் என்னை மாயாவிக்கு அறிமுகம் செய்து வைத்து என்னை காமிக்ஸ் உலகத்திற்குள் குறைந்த செலவினுள் உலாவ வைக்க ஆரம்பித்த ராணி காமிக்ஸிக்கு எனது நன்றிகள்.

இதோ பெங்காலியாவின் கானகத்தின் வெளியே நாம் நின்று கொண்டு இருக்கின்றோம். உள்ளே எங்கேயோ ஒரு மண்டை ஓட்டுக் குகையுள் சுற்றியும் விஷ அம்புடன் குள்ளர்கள் காவல் காக்க நம்மளை எதிர்ப் பார்த்து மாயாவி காத்துக் கொண்டு இருகின்றார்.

பயணிப்போம்.....

ஒரு வேண்டுகோள் :

அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பை உடைய இன்றைய பெற்றோர்களுக்கும் உழைக்கும் தலைமுறைக்கும்... உங்களின் பிள்ளைகளுக்கு ஒரு நல்லத் தோழனை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு நல்ல புத்தகத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். அவன் எங்கே இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி அந்த புத்தகங்கள் அவனுக்கு ஒரு உற்ற நண்பனாக இருக்கும். நல்ல புத்தகங்கள் எந்த மொழியில் இருந்தாலும் தவறில்லை ... ஆனால் அவனது தாய் மொழியில் இருந்தால் இன்னும் சிறப்பாக அவன் மனதில் பதியும்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இயற்கையைத் தேடி-4

நம்ப முடியவில்லை!!!

பேரிஜம் ஏரியைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டு நின்றேன். அதற்குள் இந்த பயணம் முடிவிற்கு வந்து விட்டதா?. ஏதோ நேற்றுக் காலை தான் இந்த ஏரியின் கரையில் வந்து இறங்கியது போல் இருந்தது. ஆனால் என்னை அறியாமலே மூன்று நாட்கள் கடந்து சென்று இருந்தன. சோலைகள்,ஏரிகள்,நீர் நிலை ஆதாரங்கள், அருவிகள், செந்நாய்கள் ... மிக முக்கியமாய் அட்டைகள் என அந்த மூன்று தினங்களில் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். நிச்சயம் எங்களில் யாரும் இந்த பயணத்தை தங்கள் வாழ்நாளில் மறக்கப் போவதில்லை. ஆரம்பத்தில் "நாலு நாளு காட்டுக்குள்ள என்னடா பண்றது" என்று வந்தவர்கள் கூட இன்று "ச்சே... இன்னும் கொஞ்ச நாள் கூடுதலா இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்குமேடா" என்று மாற்றிச் சொல்லும்மாறு அமைந்து இருந்தது எங்களின் பயணம்.

"ஹ்ம்ம்.. எப்படி இருந்தா என்ன... இதோ பயணம் முடிந்து கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டு இருகின்றதே" என்று எண்ணியவாறே ஏரிக்கரையில் இருந்த என்னுடைய குடிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.

"எல்லோரும் இங்கே வாருங்கள்!!!" சற்று தூரத்தில் பேராசிரியர் கந்தசாமியின் குரல் ஒலித்தது. அனைவரும் அவரின் அருகில் விரைவாகச் சென்றோம்.
"எல்லாரும் கிளம்புவதற்கு தயாராக இருகின்றீர்களா" என்றார்.
கூட்டத்தில் இருந்து பதில் இல்லை.
புன்னகைத்தார்.
"என்ன... கிளம்புவதற்கு மனம் இல்லையா?" தொடர்ந்தார்.
இம்முறையும் கூட்டத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் அவர் கூற்றை ஆமோதிப்பதை போல பல தலைகள் அசைய மட்டும் செய்தன.
" சரி! அப்படி என்றால் நீங்கள் கிளம்புவதற்குள் புதிதாய் ஒரு இடத்திற்கு சென்று வந்து விடலாமா?" என்றார்.
கூட்டத்தில் இருந்து புன்னகைகள்.
" எங்களுக்கு சரி... எங்கே போகின்றோம்.. மீண்டும் காட்டுக்குள்ளேயா" என்றான் ஒருவன்.
"இல்லை இல்லை. நாம் இப்பொழுது பேரிஜம் ஏரிக்கு செல்லப்போகின்றோம்.. அங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்னும் 10 நிமிடங்களில் நாம் கிளம்ப வேண்டும். அனைவரும் போய் தயார் ஆகுங்கள்" என்று கூறி அவர் அவரின் குடிலின் உள்ளே சென்றார். நாங்களும் கிளம்பத் தயார் ஆனோம்.

நாங்கள் செல்ல இருந்த ஏரிக்கரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம். நாங்கள் சென்ற நேரம் காலை 8 மணி என்பதால் எந்த சுற்றுலாப் பயணியும்(எங்களைத் தவிர) இல்லாது அமைதியாய் காட்சி அளித்தது அந்த ஏரிக்கரை. நாங்கள் அந்த காட்டினுள் கண்ட அனைத்து இடங்களைப் போலவே இந்த இடத்தையும் இயற்கை நன்றாக அலங்கரித்து இருந்தது.

"அனைவரும் வந்து விட்டீர்களா" என்றவாறே தனது பேச்சை ஆரம்பித்தார் பேராசிரியர். " சரி! மூன்று நாட்களாக நாம் இயற்கையை பற்றி படித்து வந்து கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது சொல்லுங்கள். இயற்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சக்தி எது?"

"....மனிதன்" என்றாள் ஒருத்தி.

"மிகவும் சரி... அதே போல் இயற்கையை காக்கும் வல்லமையும் யாரிடம் இருக்கின்றது" தொடர்ந்தார் பேராசிரியர்.

"அதுவும் மனிதன் தான்" என்றாள் அவள்.

"சரியாகச் சொன்னாய்... ஆனால் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கின்றது என்றால் தன்னிடம் காக்கும் வல்லமையும் பொறுப்பும் இருக்கின்றது என்பதை பல மனிதர்கள் மறந்துவிட்டு அழிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துவதினால் தான் இயற்கைக்கு பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. இதோ இந்த எரிக்கரையைப் பாருங்கள். இயற்கை மனிதன் ஓய்வெடுக்க ஒரு நிம்மதியான இடத்தை உருவாக்கி விட்டு அவனுக்காக காத்து இருக்கின்றது. ஆனால் அவனோ அவனது இன்பத்திற்காக அவனை அறியாமலே இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று அந்த ஏரிக்கரையில் இருந்த ஒரு சிகரட் பெட்டியை எடுத்தவாறே முடித்தார்.

"புகைப் பிடிப்பதினால் சுற்றுச் சுழல் மாசுப் படுகின்றதே அதை பற்றியா சொல்லுகின்றீர்கள்?" என்றேன்.

"அதை மட்டும் அல்ல... இதோ இந்த ஏரிக்கரையில் நீங்கள் பார்த்தால் தெரியும்.. மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் ... இன்னும் பல இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கின்றன. அதுவும் குறிப்பாக அந்த பிளாஸ்டிக் கவர்கள்... நாம் நேற்று பைன் மரங்களைப் பற்றியும் அவைகள் மண்ணிற்கு செய்யும் தீங்கைப் பற்றியும் பார்த்தோம் அல்லவா... இந்த பிளாஸ்டிக் கவர்கள் அந்த பைன் மரங்களையே வளரவிடாது செய்து விடும் தன்மை பெற்றவை. அப்படி என்றால் இவைகளை இப்படி இயற்கையின் மத்தியில் விட்டுச் செல்வது இயற்கைக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களா?. மண்ணிற்கு உரிய தண்ணீரை மண்ணிடம் சேர்க்காது, அதே போல் வேறு செடிகளையும் வளர விடாது இந்த கவர்கள் இயற்கையை மெதுவாக அழித்து விடும்." என்று கூறி முடித்தார்.

"சரி ஐயா! இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றேன்.
"பெரிதாய் ஒன்றும் இல்லை. மனிதன் மாசு படுத்திய இடங்களை மனிதனே தான் தூய்மை செய்ய வேண்டும். இப்பொழுது நாம் இந்த இடத்தில இருக்கும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் நீக்கி இந்த இடத்தை சுத்தம் செய்யப் போகின்றோம். உங்களுக்குள்ளேயே அணிகள் பிரித்து கொண்டு ஆரம்பியுங்கள் பாப்போம்" என்றார்.

புதிதாய் எதையாவது இன்று கற்றுக்கொள்வோம் என்று எதிர்ப் பார்த்துக் கொண்டு இருந்த நான் சற்று ஏமாந்து தான் போனேன். அவர் இன்று சொன்ன அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே பாடங்களில் படித்து இருந்தோம். என்னை அறியாமலே முகம் கொஞ்சம் வாடிப் போனது.

"என்ன ஆயிற்று" என்றார் பேராசிரியர்.

"இல்லை... இன்று நீங்கள் முக்கியமான விஷயம் எதையாவது சொல்லித் தருவீர்கள் என்று எண்ணி இருந்தேன்... ஆனால் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் எனக்கு ஏற்கனவே தெரியும் .." என்றேன்.

"அப்படி என்றால் நான் இன்று சொன்ன விஷயம் முக்கியமானதாக உனக்கு படவில்லையா...!!!" என்றார்.

"நான் அப்படி சொல்லவில்லை... ஆனாலும் நீங்கள் சொன்ன சோலைகள், நீர் நிலை ஆதாரங்கள் போல இது பெரிய விஷயமாக படவில்லை... அதான்..." என்றேன்.
சிரித்தார்.

"உனக்கு உண்மை ஒன்று தெரியுமா. உலகில் மிக முக்கியமான விஷயங்கள் அனைத்தும் சிறிய விஷயங்கள் தான். ஒன்று சொல், சோலைகள் எத்தனை இடங்களில் அழிக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதே போல் எத்தனை இடங்களில் இயற்கை இந்த பிளாஸ்டிக் கவர்களால் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது." என்றார்.

நான் பதில் எதுவும் சொல்லாததால் அவரே தொடர்ந்தார் " சோலைகள் என்பன பெரிய விஷயங்கள்.... நிச்சயம் நாம் அவற்றை காக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம்முடைய வீட்டிலும் சரி நம் ஊரிலும் சரி இயற்கையை வளர விடாது அழித்துக் கொண்டு இருக்கும் இந்த சின்ன விஷயங்களையும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இயற்கையை உண்மையாக நாம் பேண முடியும். என்ன புரிந்ததா. இப்பொழுது போய் இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை பார்ப்போமா!!!" என்று கூறி முடித்தார்.

நானும் என்னால் முடிந்த அளவிற்கு இயற்கையை மாசுபடுத்திக் கொண்டு இருக்கும் பொருட்களை நீக்குவதற்காக செல்லத் தொடங்கினேன்.

இத்துடன், இயற்கையைத் தேடி என்ற தலைப்பில் பேரிஜம் பற்றிய பதிவுகள் முடிந்தன. என்னால் முடிந்தவரை, நான் பெரிஜமைப் பற்றியும் சோலைகளைப் பற்றியும் அறிந்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளேன்.

பேரிஜம் ஒரு அருமையான இடம். கொடைக்கானலுக்கு மேலே ஒரு 30 கி.மி தூரத்தில் இருக்கின்றது அந்த ஏரி. பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுவார்கள். நாங்கள் தங்கி இருந்தது போல காட்டுக்குள் தங்க வேண்டும் என்றால் அதற்காக சிறப்பு அனுமதி வன இலாகா அதிகாரிகளிடம் வாங்க வேண்டி இருக்கும்.

மலையையும் இயற்கையும் ரசிப்பவர்கள் நிச்சயம் பேரிஜமை ரசிப்பார்கள். குறிப்பாக ட்ரெக்கிங் (trekking) மீது ஆவல் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடம்.

இந்த தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவுகள்,
சோலைகள்:
இயற்கையைத் தேடி - 2
சோலைகளும் கூட்டுக்குடும்பங்களும்:
 இயற்கையைத் தேடி-3
 **********************************************************************

எப்பொழுது உலகில் கடைசி மரம் சாய்கின்றதோ, எப்பொழுது கடைசி மீன் அழிகின்றதோ, கடைசி ஆறு வற்றுகின்றதோ அப்பொழுது தான் மனிதன் உணர்ந்து கொள்வான் - பணத்தை அவனால் உண்ண முடியாது என்று.
-ஒரு செவிந்தியப் பழமொழி:

சனி, 25 செப்டம்பர், 2010

ஒரு காதல் கதை- இறுதிப் பகுதி

" ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?...
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்."


வீடும் நெருங்கிக் கொண்டு இருந்தது. எதாவது ஒரு சந்தினில் அல்லது கடையினில் மறைந்து நின்று என்னை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள் என்ற எனது எண்ணமும் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுடனும் கரைந்துக் கொண்டு இருந்தது.

"அம்மா .... அண்ணன் வந்திரிச்சி...".

என்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த எனது தங்கை மகிழ்ச்சியுடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருந்தாள். அவளின் பின்னாடியே வீட்டினுள் இருந்து அம்மாவும் அப்பாவும் புன்னகையுடன் வந்தனர். கூடவே சில உறவினர்களும். அவர்களுள் அவள் இல்லை.

ஒரு வேளை வீட்டினில் அவள் இருக்க கூடும் என்ற எனது கடைசி நம்பிக்கையும் சிதைந்து போனது.

அவள் என்னை காண வரவில்லை.

சோகம் தான். இருந்தும் ஏனோ மனம் நிலை குழையவில்லை. எதிரினில் என்னை நோக்கி பாசத்துடன் வரும் தங்கையின் புன்னகை, ஒரு வருடம் பெற்ற பிள்ளையை காணாது இருந்து விட்டு பாசத்துடன் என்னை நோக்கி வந்து கொண்டு இருக்கும் எனது பெற்றோரின் புன்னகை... என்னை புன்னகைக்க தூண்டிக் கொண்டு இருந்தன. நானும் என்னை அறியாது புன்னகைத்துக் கொண்டு இருந்தேன். பாதி மனது ஒருத்தியை தேடிக் கொண்டு இருந்தது. மற்றோர் பாதியோ துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது. சிறிது இடைவெளிக்கு பின்னால் மீண்டும் என்னுடைய வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றேன்." இது என் உலகம். இங்கு எனக்கு தீங்கு எதுவும் நேராது." என்று எண்ணியவாறு வீட்டினுள் செல்லத் தொடங்கினேன். என் தோட்டத்து மலர்கள் மலர்ந்து புன்னகைத்துக் கொண்டு இருந்தன. உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். அவள் நன்றாகத் தான் இருக்கின்றாள். என்னை விட்டு வேறு எங்கு சென்று விடுவாள். வரட்டும். அவளைப் பார்த்துக் கொள்கிறேன்!!!

ஊர்க்கதைகள் அனைத்தும் பேசி விட்டு உறவினர்கள் அனைவரும் சென்ற பின்னும் கூட அவளின் சுவடு தெரியவில்லை. சரி சிறிது நேரம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு பின் அவள் வீட்டிற்க்கு நாமே போகலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கையில்,

"என்ன சக்தி... யாரையோ தேடுற மாதிரி இருக்கு?... குமாரயா!!!" என்று ஆரம்பித்து வைத்தாள் பிரியா.

திரும்பி அவளை முறைத்தேன்.

"நான் யார தேடுறேன்னு உனக்குத் தெரியும்... நானே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்... எங்கடி அவ... நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன்... அவளைக் காணோமே?" என்றேன்.

"எனக்கும் தெரியல சக்தி.. நேத்து வரைக்கும் இங்க தான் சுத்திக்கிட்டு இருந்தாங்க... ஒரு வேளை நீ ஊருக்கு வரது தெரிஞ்சி இருக்குமோ?... ஐயோ தொல்லை வருதேனு நெனச்சி தப்பிச்சி இருக்கலாம்... அவுங்க புத்திசாலினு நான் அப்பவே சொன்னேன்ல" என்றாள் நக்கலாய்.

"உன்னை... " என்று நான் அவளுக்கு பதில் கூறத் தொடங்கும் போது வாசலில் அவளின் தந்தையின் குரல் கேட்டது.

"சண்முகம்!!!".

விரைவாகச் சென்று சன்னலின் வழியாக எட்டிப் பார்த்தேன். அவள் அவளது பெற்றோர் உடன் நின்று கொண்டு இருந்தாள். கோவிலுக்கு சென்று வந்து இருந்தனர் போல் இருந்தது. ஒரு வருடத்திற்கு முன் எப்படி இருந்தாளோ அதை விட மேலும் அழகு கூடி இருந்தாள். அவளிடம் நான் கேட்க நினைத்த கேள்விகளுள் "நாளுக்கொரு தரம் அழகைக் கூட்டிக் கொண்டே போகின்றாயே... அதை எப்படி என்று சொல்கின்றாயா?" என்ற இந்த கேள்வியையும் சேர்த்துக் கொண்டேன்.

"ஏன்டா முருகா... நீ முன்னமே வருவேனு நெனச்சேன்... ஏண்டா இவ்வளவு நேரம்... சரி சரி உள்ள வா" என்று எனது தந்தை அவர்களை வீட்டினுள் அழைத்து வந்தார். ஓடிச் சென்று நானும் அவர்களை வரவேற்க வேண்டும் போல் இருந்தது, இருந்தும் "அவசரப்பட்டு காரியத்த கெடுத்துடாத சக்தி... பொறுமையா இரு.. கூப்பிடுவாங்க!!" என்ற எனது மனசாட்சியின் கூற்றுக்கு மரியாதை கொடுத்து எனது அறையின் உள்ளே இருந்தேன்.

"அது இல்லடா சண்முகம்... இன்னிக்குனு பார்த்து பக்கத்து ஊர்ல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வரணும்னு என் பொண்ணு ஒரே அடம்பிடிச்சிச்சி... அதான் போயிட்டு வர தாமதம் ஆயிடிச்சி.. சரி சக்தி வந்துட்டான்ல" என்றவாறே அவளின் தந்தை எனது வீட்டினுள் வந்தார். அவளும் தொடர்ந்து உள்ளே வந்தாள்.

"கேட்டியா சக்தி... கோவிலுக்கு போயிட்டு வந்து இருக்காங்களாம்... "ஆண்டவா என்னை காப்பாத்துனு வேண்டிட்டு வந்து இருப்பாங்க போல" என்றாள் பிரியா.

"அடி..." என்று நான் அவளை அடிக்க போகும் முன் வேகமாக ஓடி,
"வாங்கக்கா.." என்றவாறு அவளின் அருகே போய் நின்றுக் கொண்டாள்.

"டேய் சக்தி... இங்கவா.. உன்ன பார்க்க முருகன் அண்ணாச்சி வந்து இருக்காங்க" என்று அழைப்பு விடுத்தார் அம்மா. அந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டு இருந்தவன், இயல்பாய் அவர்களை பார்க்க வருவதைப் போல்

"வாங்க மாமா... வாங்க அத்தை... நல்லா இருக்கீங்களா?..." என்று கூறியவாறே அறைக்குள் நுழைந்தேன். வேண்டும் என்றே அவளைப் பார்க்காது கவனத்தை அவளின் பெற்றோர்களின் மீது வைப்பதை போன்று நடித்துக் கொண்டு நின்றேன்.

"நாங்க நல்லா இருக்கோம்பா... நீ எப்படி இருக்க... படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா" என்றார் அவளின் தந்தை.

"எனக்கென்ன மாமா... நல்லா இருக்கேன்... எல்லாம் நல்ல படியா முடிந்தது!!!" என்றேன் ஒரு புன்னகையுடன். அவள் மௌனமாய் நின்று கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"நல்லதுப்பா... எப்படியோ கடைசில ஊர் பக்கம் வந்துட்ட... சரி.. எதாவது புதுசா சொல்லிக் குடுத்தானுங்களா அந்த ஊர்ல... விவசாய புரட்சி அது இதுனு எதாவது பண்ணிக்கிட்டு இருப்பானுங்களே... அப்படி ஏதாவது இருந்தா சொல்லு... நம்மளும் முயற்சி பண்ணிப் பார்ப்போம்..." என்றார்.

"புரட்சியா!!!" சிரித்தேன். "மாமா... அவன் விவரமாத்தான் இருக்கான். அவன் புரட்சினு, பூச்சிக் கொல்லி, உரம் அது இதுனு கண்டுபிடிச்சி நம்மளுக்கு கொடுத்துட்டு போயிட்டான். அங்க அவன் இத எல்லாம் அதிகமா பயன்படுத்துரதே இல்ல... நம்ம ஒரு காலத்துல பண்ணிக்கிட்டு இருந்த விவசாய முறையத் தான் அவன் புரட்சினு இப்போ பண்ணிக்கிட்டு இருக்கான்... நம்ம ஆளுங்க தான் வெளிநாட்டுக்காரன் எத சொன்னாலும் தலைய ஆட்டிருவோமே... அதான் இன்னும் அவன் தூக்கி போட்ட முறையையே இன்னும் பயன் படுத்திக்கிட்டு இருக்கோம்" என்றேன்.

"என்ன சக்தி சொல்ற" என்றார் ஆச்சர்யமாய்.

"ஆமாம் மாமா... இப்போ எல்லாம் அவன் நம்ம பண்ணிக்கிட்டு இருந்த இயற்கை விவசாய முறையைத் தான் அதிகமா பயன் படுத்த ஆரம்பிச்சி இருக்கான்... நாம தான் இன்னும் அவன் சொன்னதையே கேட்டுக் கிட்டு இருக்கோம்" என்றேன்.

"அப்படினா..." என்று அவளின் தந்தை தொடங்கும் போது இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதை போல்,

"அண்ணே!!! இன்னிக்கு தான் புள்ள ஊரில இருந்து வந்துருக்கு... நீங்க இந்த கேள்வி எல்லாம் அப்புறம் கேட்டுக்கலாமே... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் அவன்" என்றார் என் அம்மா.

"அதுவும் சரிதான்... நம்ம அப்புறம் பேசலாம் சக்தி.. நீ போயி ஓய்வு எடுத்துக்கோ... நாங்களும் கிளம்புறோம்... கோவில்ல இருந்து நேரா உங்க வீட்டுக்குத் தான் வந்தோம்... நாங்களும் போயிட்டு அப்புறமா வறோம்" என்று கூறியாவாறு அவளின் தந்தையும் கிளம்ப ஆரம்பித்தார்.

"சரிமா ... அப்படியே நானும் வெளியே போயிட்டு சீக்கிரமா வர பார்க்கிறேன்..." என்று கூறி விட்டு நானும் வேகமாக வெளியே கிளம்பத் தயார் ஆனேன்.

"டே... நீ எங்கடா போற?"

"போகும் போதே எங்க போறேன்னு கேக்குறீயேம்மா!!! வெளிநாட்டுல இருந்து நீங்க வந்தீங்களா...இல்ல நான் வந்தேனா... எல்லாத்தையும் மறந்துட்டிங்களே..." என்று விளையாட்டாய் அம்மாவை கிண்டல் அடித்து விட்டு " சும்மா ஊர சுத்திப் பார்த்துட்டு வந்துடுறேன்மா... ரொம்ப நாள் ஆச்சில... எவனாவது வந்து தேடுனானுங்கன்னா ஏரிக்கரை பக்கம் இருப்பேன்னு சொல்லுங்க.. சீக்கீரம் வந்துருவேன்" என்று சொல்லி வெளியே கிளம்பினேன். நான் சொன்னது நிச்சயம் அவளின் காதிலேயும் விழுந்து இருக்கும் என்று நம்பியவாறு ஏரியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

போலக் ... போலக் ... போலக்....

நான் எறிந்த கல் ஏரி நீரினில் மூன்று முறை குதித்து எழுந்து விட்டு நான்காவது முறை நீரினுள் மூழ்கியது. நான் எதிர்ப்பார்ததைப் போலவே ஏரிக்கரை யாரும் இன்றி அமைதியாய் இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் என்னிடம் பல கதைகள் பேசிக் கொண்டு இருக்க, அவள் வருவாள் என நான் காத்து இருக்க தொடங்கி 20 நிமிடங்கள் கழிந்து இருந்தன.

தூரத்தில் எங்கோ கேட்ட கொலுசுச் சத்தம அவள் வருகையை எனக்கு முன் கூட்டியே அறிவிக்க நான் தயாரானேன்.

சில கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது.

சிறிது நேரத்தில் அவளும் ஏரிக்கரைக்கு வந்து சேர்ந்தாள். ஏனோ முகம் வாடி போய் இருந்தது.

சொல்லாமலே அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதை உணர்ந்தேன்.

"ஏய் என்னாச்சி?" என்றேன்.

பதில் வரவில்லை.

"எதாவது பிரச்சனையா...?" தொடர்ந்தேன்.

"இல்லை..." என்றாள்.

பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். நிச்சயப் படுத்திக் கொண்டேன். அவள் ஏதோ பிரச்சனையில் தான் இருகின்றாள்.

" சரி... ஏன் என்னைப் பார்க்க முன்னாடியே வரல" என்றேன்.

மீண்டும் பதில் எதுவும் வரவில்லை.

"இங்க பாரு... நீ என்ன நினைகிறேன்னு எனக்கு தெரியல்ல.. ஆனா அது என்னனு சொன்னாத் தான் நான் எதாவது சொல்ல முடியும்...உனக்கு எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்போ சொல்லு... நான் கட்டாயப்படுத்தல... சரியா" என்று கூறி விட்டு மீண்டும் ஏரியைநோக்கித் திரும்பினேன்.

அவளின் மௌனத்தை கலைக்குமே என்று எண்ணி கையில் இருந்த கல்லை நீரில் எறியாது கையிலையே வைத்துக் கொண்டு ஏரியை கண்டு கொண்டு நின்றேன்.

"நீங்க என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?"

சிறிது நேர மௌனத்திற்கு பின் அவள் பேசி இருந்தாள். ஆச்சர்யத்தோடு திரும்பினேன்.

"இன்னும் காதலிக்கிறீங்களாவா?"... புரியவில்லை.

"என்ன கேக்குற" என்றேன்.

"சொல்லுங்க... என்ன இன்னும் காதலிக்கிறீங்களா?" என்றாள் மீண்டும்.

"இன்னுமாவா!!! நான் உன்னை காதலிப்பதை எப்ப நிறுத்தினேன் ... அதைத் தொடர்வதற்கு... என்ன ஆச்சி மலர்... ஏன் இந்த கேள்வி" என்றேன்.

 மௌனத்தை கலைத்தாள்.

"என்னோட தோழிங்க தான் சொன்னங்க...." ஆரம்பித்தாள்.

ஒ! பிரச்சனை அப்படி வருதா என்று நினைத்தவாறே,

"என்ன சொன்னார்கள்" என்றேன்.  

"நீங்க வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம் எனக்கு ஒரு கடிதாசி கூட போடலைல.. உங்க வீட்டுக்கு எழுதுன கடிதத்துல கூட என்னை பத்தி கேக்கல... அத பத்தி என்னோட தோழிங்க கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது தான் அவளுக சொன்னாளுக... வெளிநாட்டுப் பொண்ணுங்க எல்லாம் அழகா இருப்பாங்கலாம். அந்த நாடுங்க எல்லாம் வளமான நாடுங்களாம். அங்க போன யாரும் திரும்பி இங்க வர மாட்டங்களாம். அங்கயே யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவாங்களாம்." என்றாள். 

"ஒ! அதுனால நானும் உன்ன மறந்துட்டு அங்கயே யாரையாவது காதலிச்சிருப்பேன்னு நினைச்சியாக்கும் !" என்றேன் புன்னகையை அடக்கிக் கொண்டு.

ஆம் என்பதைப் போல் தலையாட்டினாள்.

"அடி அப்பாவி!!! அப்படி யாரையாவது நான் கூட்டிகிட்டு வந்து நின்று இருந்தேன்னா எங்க அம்மாவே என்ன ஊர் முழுக்க துரத்தி துரத்தி அடிச்சி இருப்பாங்க என்கிறத மறந்துவிட்டியேடி" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு "உன் தோழிங்க சொன்னது உண்மை தான்" என்றேன்.

அதிர்ச்சியாய் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்ன..."

"ஆம்... அந்த நாட்டுப் பெண்கள் அழகாக இருப்பார்கள். உன் தோழிகள் சரியாகத்தான் அதை சொல்லி இருகின்றார்கள்." என்றேன்.

மௌனம். அவள் பேசவில்லை.

"ஆனால், உன்ன போல ஒரு பொண்ணு அங்க கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியாது. அவங்கள சொல்லி தப்பு இல்லை. அவங்க அந்த நாட்டுக்கு எல்லாம் போனது கிடையாது. நான் சொல்றேன், அங்க பொண்ணுங்க அழகா இருப்பாங்க. ஆனா நம்ம ஊரு பொண்ணுங்க அளவுக்கு அழகா இருக்க மாட்டாங்க. அதுவும் உன்ன போல ஒரு பொண்ண உலகத்துல வேறு எங்கயும் யாரும் பார்த்து இருக்க முடியாது. இத தெரிஞ்சிக்கோ " என்றேன். 

சிறிது புன்னகைத்தாள்.

"அப்புறம் வளமான நாடுன்னு சொன்னாங்களோ... வளம் நாட்டுக்கு நாடு வேறுபடும். அவனுங்க பொன்னையும் எண்ணையையும் வைச்சி வளமான நாடுன்னு சொல்லுவானுங்க. ஆனா என் கணக்கே வேற. நான் என்னையும் உன்னையும் வைச்சே வளமான நாட்டை முடிவு செய்றேன். உனக்கு ஒரு உண்மை தெரியுமா, இன்னிக்கு நான் பேருந்து நிறுத்தத்துல இருந்து எங்க வீடு வரைக்கும் உன்ன தான் தேடிக்கிட்டே வந்தேன். கூட வேற யாரும் வரல. ஆனாலும் நான் தனியா இல்லை. நம்மள சுத்தி முழுதும் இருந்தும், நமக்குள்ளேயும் இருந்தும், கண்ணுக்கு தெரியாத கடவுள போல தான் நீயும் இருந்த. எனக்குள்ளேயும், நான் வந்த பாதை முழுதும் நினைவுகளாவும். என் கண்ணுக்கு தான் நீ தெரியல. ஆனா நீ என் கூடத் தான் இருந்த. அப்படி பார்க்கும் போது எனக்கு சந்தோசத்த குடுக்குற இந்த ஊர் தான் என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்திலேயே வளமான ஊர். புரிஞ்சதா!!" தொடர்ந்தேன்.

அவள் கண் கலங்கி இருந்தது. இருந்தும் முகத்தில் சிறு புன்னகை அரும்பிக் கொண்டு இருந்தது.

"ம்ம்ம்.... அப்புறம் ஏன் கடிதம் எதுவுமே போடல" என்றாள். 

சிரித்தேன்.

"எப்படி... எங்க வீட்டுக்கு எழுதுற கடிதத்துல, அப்புறம் அம்மா, உங்க மருமக எப்படி இருக்கானு கேக்க சொல்றியா... இல்ல உங்க வீட்டுக்கு தனியா ஒரு கடிதத்தை போட்டு, என்னடா இதுன்னு உங்க அப்பாவ யோசிக்க வைக்க சொல்றியா... நான் என்னவோ, சரி நம்ம ஆளு தான.. ஒரு வருஷம் தான ... புரிஞ்சிப்பானு நெனச்சேன்... எனக்கு மட்டும் உன் கூட பேசணும்னு ஆசை இல்லைன்னு நெனச்சியா?" என்று முடித்தேன்.

மீண்டும் மௌனம்.

அவளே ஆரம்பித்தாள்.

"மன்னிச்சிகோங்க... அவளுக சொன்னதை நான் கேட்டு குழம்பிட்டேன்" என்றாள்.

"அடி பைத்தியம்! உன்ன மன்னிக்கிறதுக்காக நான் இங்க வரல.. உன்ன காதலிக்கிறதுக்காகவே வந்து இருக்கேன்" என்று கூறி அவளின் கைப் பிடித்தேன்.

என் தோளில் மெதுவாய் சாய்ந்தாள்.

"நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன்.

"வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றேன் புன்னகைத்தவாறு.

"நல்லவேளை... நான் கணக்குல கொஞ்சம் சுமாரா இருந்தேன். இல்லைனா நீ எப்படி எனக்கு சொல்லிக்குடுக்க வந்து இருப்ப... நான் எப்படி உன்கிட்ட பேசி இருப்பேன். சில நேரம் இந்த நாள் வரைக்கும் கூட உன்கிட்ட பேசாம இருந்திருப்பேன்... நன்றி எங்க அம்மாவுக்குத் தான் சொல்லணும்... அவங்க மட்டும் உன்ன எனக்கு சொல்லிக் குடுக்க சொல்லலைனா..." என்று தொடர்ந்தேன்.

தோள் மீது சாய்ந்து இருந்தவள் திடீர் என்று நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

பின் புன்னகைத்தாள்.

"நீங்க யோசிச்சே பார்க்கலையா" என்றாள்.

எனக்கு புரியவில்லை.

"என்ன யோசிக்கணும்?" என்றேன்.

மீண்டும் புன்னகைத்தாள்.

"எனக்கு கணக்கு நல்லா வரும்னு உங்க அம்மாகிட்ட யார் சொல்லி இருப்பானு நீங்க யோசிச்சிக் கூட பார்க்கலையா... இல்ல நான் உங்களுக்கு சொல்லித் தந்தா நீங்க தேர்ச்சி ஆகலாம்னும் யார் சொல்லி இருப்பாங்கனும் யோசிச்சிப் பாக்கல சரியா" என்றாள்.

சிறிது யோசித்தேன். மெதுவாய் பொறி தட்டியது.

"நீயா!!"

சிரித்தாள். ஆம் என்பது போல் தலை ஆட்டினாள்.

"அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றேன்.

"ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள்.

"சரி... அப்புறம் ஏன் நான் உன்ன பிடிச்சி இருக்குனு சொன்னதுக்கு அப்புறமும் நீ என்ன பிடிச்சி இருக்குனு சொல்லல" தொடர்ந்தேன்.

சிரித்தாள்... " சும்மா தான்!!!" என்றுக் கூறி என் நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள்.

"சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டே தொடங்கினேன் " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றேன்.

"ம்ம்ம்!!!" என்றாள்.

"நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றேன்.

நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! என் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே

"அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள்.

"என்ன கேள்வி" என்றேன்.

"உண்மையிலேயே வெளிநாட்டிற்கு போய் என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள்.

புன்னகைத்தேன்.

"உன்னை எவ்வளவு காதலிக்கின்றேன் என்பதை கற்றுக் கொண்டேன்" என்றேன்.

மீண்டும் வெட்கம். பின் மீண்டும் பதில்.

"ஐயோ... இதுக்கு வெளிநாட்டுக்கு போயி தான் கத்துக்கணுமா ... நான் இங்கயே தான கத்துகிட்டேன், உங்கள எவ்வளவு காதலிக்கிறேன்னு" என்றாள்.

"சரி தான். ஆண்கள் எளிதானவர்கள் அவர்களை பற்றி இங்கேயே அறிந்து கொள்ளலாம். ஆனால் நீயோ புத்திசாலி உன்னைப் பற்றி அங்கே போயி தான கத்துக்க முடியும்" என்றேன்.

"நான் புத்திசாலி எல்லாம் இல்லை..." என்றாள்.

"ஆம் ... நீ புத்திசாலியான முட்டாள்" என்றேன்.

"அப்போ நீங்க?" என்றாள் குறும்பாய்.

"நானும் அதே தான். காதலில் அனைவரும் புத்திசாலியான முட்டாள்கள் தான்" என்றேன்.

மீண்டும் ஒரு புன்னகையோடு என் நெஞ்சினில் சாய்ந்தாள். அவளை பாதுகாப்பாய் அணைக்க கையில் இருந்த கல் தடையாய் இருந்ததால் கல்லை தண்ணீரில் எறிந்து விட்டு அவளை அணைத்தேன்.

அவளுக்கு என் இதயம் சொல்லிக் கொண்டு இருக்கும் சேதிக்கு தடங்கலாய் சத்தம போடக் கூடாது என்று சத்தம இடாது நீரினுள் சென்றது அநதக் கல்.

அவள் என் இதயம் அவள் பேர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

நானோ என் உலகத்துக்குள் மீண்டும் வந்ததை மகிழ்ச்சியுடன் எண்ணிக் கொண்டு இருந்தேன்.

தூரத்தில் கதிரவனோ மறைந்து கொண்டு இருந்தான்.

முற்றும்.         

புதன், 22 செப்டம்பர், 2010

ஒரு காதல் கதை-3

"அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன்."

தங்கைக்கோ ஆச்சரியம். அம்மாவிற்கோ சந்தோசம். வீட்டில் அவளை தலையில் தூக்கி வைத்து ஆடாத ஒரு குறை தான். 
அவளுக்கோ பெருமிதம். 
என்னை கண்டுக்கொள்ளத் தான் யாருமில்லை. அது சரி, யாருக்குத் தெரியும், அவள் வகுப்பு எடுத்த நேரங்களில் பாடத்தை கவனிக்காது விட்டுவிட்டு, ஐயோ நாம் தேர்ச்சி ஆகவில்லை என்றால் ஒருவேளை நாம் ஒழுங்காக சொல்லிக் குடுக்கவில்லையோ என்று அவள் மனம் வருந்துவாளே என்றெண்ணி தேர்விற்கு முன்னால் இரு தினங்கள் தூங்காமல் கண் விழித்துப் படித்தது.  
தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள். வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தேன். அவளும் அவள் தோழிகளோடு முன்னே சென்று கொண்டு இருந்தாள். திடீரென்று அவள் அவளது தோழிகளிடம் எதையோ சொல்லி விட்டு என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். என்ன என்று நான் யோசிக்க ஆரம்பிக்கும் முன்னால் என் அருகே வந்து இருந்தாள்.
"நன்றி...!" என்றாள்.
குழப்பம். நியாயப்படி நான் தான் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவள் சொல்லி இருந்தாள்.
"எதுக்கு நன்றி நீங்க சொல்றீங்க.... நான் தான சொல்லணும்?.." என்றேன்
"இல்ல... நீங்க நான் சொல்லிக் கொடுக்கும் போது என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியும்... இருந்தும் நீங்க ரொம்ப கடினமா முயற்சிப் பண்ணி தேர்வுல தேர்ச்சியாகிட்டீங்க... உங்களால எனக்கு நல்ல பெயர்... அதான் நன்றி சொல்லலாம்னு பார்த்தேன்" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. "என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியுமா" என்னை கவனித்துக் கொண்டா இருந்தாள் அவள்...
"ஐயோ அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நீங்க நல்லா சொல்லித் தந்தீங்க... அதான் காரணம்" என்றேன்.
புன்னகைத்தாள்.
"உண்மையிலையேங்க... நீங்க நல்லாத் தான் சொல்லித் தந்தீங்க" என்றேன்
"தெரியும்!! இருந்தும் நன்றி... சரி நான் கிளம்புறேன். எனக்கு நேரமாச்சி" என்று கூறி புன்னகைத்துவிட்டு அவளின் தோழிகளை நோக்கி நகர ஆரம்பித்தாள். 

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அது வரையில் என்னிடம் அதிகம் பேசாத அவள் அன்றில் இருந்து என்னிடம் இயல்பாய் பேசுவதற்கு ஆரம்பித்து இருந்தாள். 
மெதுவாய் நகர்ந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையத் தொடங்கியது. அவளின் நட்பு வட்டாரத்தில் நானும் இணைந்து இருந்தேன். பல தோழிகள் மத்தியில் ஒரே தோழனாய் நான்.  சிறிது சிறிதாய் அந்த வட்டாரமும் சுருங்கத் தொடங்கியது. அவளின் தோழிகள் நடக்கும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நானும் அவளும் மெதுவாய் தனிமையில் நடந்து செல்லும் காலங்களும் வந்தன. என்னைப் பற்றி அவளும் அவளைப் பற்றி நானும் நன்கு அறிந்து கொண்ட காலம். சில நேரங்களில் பயணிக்கும் தொலைவு முழுவதும் மௌனமாய் கடந்து இருப்போம். மௌனமாய் காதலைத் தான் பேசி இருப்போம். ஆனால் வார்த்தைகளில் அதை மொழி பெயர்க்க வார்த்தைகள் தான் சிக்கவில்லை... இருவருக்கும்.
எனக்கோ என்னுடைய கல்லூரி படிப்பு முடிவிற்கு வரும் தருணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேற்படிப்பிற்காக விண்ணப்பித்து இருந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்தும் சாதகமாக செய்தி வந்து இருந்தது. அநேகமாக படிப்பு முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு செல்வதைப் போல் நேரமும் அமைந்து இருந்தது. அனைத்தும் சரி. ஆனால் அவளிடம் என்னுடைய காதலை சொல்லாது செல்ல எனக்கு மனமில்லை. கடந்த நான்கு மாதங்களில்  என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்ட அவளிடம் என் காதலைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கேற்ப ஒரு தருணமும் வந்தது.

அன்றும் அது ஒரு மழைக்காலம்!!!

இருவரும் வழக்கம் போல் கல்லூரி முடிந்து நடந்து வந்து கொண்டு இருக்கும் போது மழைத் தூற ஆரம்பித்தது. இன்னும் வீட்டிற்கு செல்ல தூரம் இருந்ததால் இருவரும் அங்கு ஒரு அரணாய் நின்று கொண்டு இருந்த ஆலமரத்தின் அடியில் ஒதுங்கினோம்.தனியாய் அவள். என் துணையாய் மழை. காதலை சொல்ல அருமையான சந்தர்ப்பம் தான். இருந்தும் வார்த்தைகள் பதுங்கின. இலையின் மேல் படர்ந்து இருக்கும் சிறிய நீர்த்துளியானது எப்படி மண் சேர இன்னும் தன்னுள் நீரை சேமித்து கொண்டு இருக்குமோ, அதே போல் நானும் என் காதலைச் சொல்ல என் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு இருந்த வார்த்தைகளை சேர்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ என்னுடைய போராட்டங்களை சிறிதும் அறியாதவளாய் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
"மலர்..." தைரியத்தை சேமித்துக் கொண்டு அவளை அழைத்தேன்.
"ம்ம்ம்... என்ன" என்றாள் மழையைப் பார்த்துக் கொண்டே
"நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்... "
"ம்ம்ம்"
"அது... எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... "
திரும்பி என்னை ஒரு கணம் பார்த்தாள். பின் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
 
"உனக்கும் என்னைப் பிடிச்சி இருக்கா... பிடிக்கலைனா இப்பவே பிடிக்கலைனு சொல்லிடாத... உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப வந்து பிடிச்சி இருக்குனு சொல்லு... அது போதும்... என்ன சொல்ற" என்று முடித்தேன் ஒரு வழியாய். 
சிரித்தாள்.
"நான் கொஞ்சம் யோசிக்கணும்... யோசிச்சிட்டு சொல்றேன்" என்றாள் சாதாரணமாய்.

"நான் கொஞ்ச நாள்ல வெளிநாடு போக வேண்டி இருக்கும்... அதுக்குள்ள சொல்லுவியா?" என்றேன்
"தெரியலை... ஆனா சொல்லுவேன்... சரி நான் கிளம்புறேன். மழை நிக்கப் போகுது" என்று கூறி அவளின் வீட்டை நோக்கி கிளம்பினாள்.

"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"
என்பார்கள். நான் என் கடமையை செய்துவிட்டேன். ஆனாலும் பலனை எதிர்பார்த்தே நகர ஆரம்பித்தேன் என் வீட்டை நோக்கி.
அதற்கப்புறம் கழிந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதும் போலவே கழிந்தன. என்னுடைய கல்லூரி படிப்பு முடிந்து நான் வெளிநாட்டிற்க்கு செல்லும் அந்த நாளும் வந்தது. ஆனால் அவளுடைய பதில் மட்டும் இன்னும் என்னை காக்க வைத்துக் கொண்டு இருந்தது. ஒரு விதமான சோகத்தில் என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருந்தேன்.
"ஏன்டா உன்ன நாங்களா வெளிநாட்டுக்கு படிக்க போனு சொன்னோம்... நீயா தான ஏதோ உதவித்தொகை கிடச்சி இருக்கு ... படிச்சா நல்லதுனு சொன்ன... அப்புறம் கிளம்புற நேரம் இப்படி முகத்தை தூக்கி வச்சி இருந்தா நல்லா வா இருக்கு" என்றவாறு என் பொருட்களை எடுத்து வைக்க உதவிக் கொண்டு இருந்தார் அம்மா.
 "பிரியா...!"
வாசலின் அவளின் குரல்.

"யாரு மலரா... பிரியா அவங்க அப்பாவோட இவனுக்கு வண்டி பிடிக்கிறததுக்கு போய் இருக்காமா... நீ உள்ள வா" என்று பதில் அளித்தார் அம்மா.
"ஓ அப்படியா அத்தை... சும்மா தான் வந்தேன்... வீட்டுல பலகாரம் பண்ணினோம்.. அதத் தான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்..." என்றாள்
"
நல்ல நேரத்தில தான் வந்து இருக்க... இவன் இன்னிக்கு ஊருக்கு கிளம்புறான் ... சாப்பிடறதுக்கு அதிகமா எதையுமே கொடுத்து விடலையேனு நெனசிக்கிட்டு இருந்தேன்... ஆமாம்... வீட்ல எதாவது வீஷேசமா?"
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. சும்மா பண்ணனும்னு தோணிச்சி அதான்
பண்ணேன்" என்றாள் ஒரு ஒரப்பார்வையை என் மீது படர விட்டவாரே.
"சரி அத்தை... அப்படினா நான் கிளம்புறேன். நீங்க வேலையா இருப்பீங்க.. நான் பிறகு வர்றேன்" என்றவாறு திரும்பிக் கிளம்ப ஆரம்பித்தாள்.
"கொஞ்சம் நில்லுமா ... இது என்ன தலைக்கு பூ வைக்காம வந்து இருக்க போல இருக்கு... ஒரே நிமிசம் இரு ... இதோ வந்துடறேன்" என்று கூறி அவளை நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றார்.
இது வரை இந்த தருணத்திற்காக காத்து இருந்தவள் போல் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் காதலிக்கின்றாளா இல்லையா என்பதை மட்டும் சொல்ல மாட்டாள் என்று சலித்துக் கொண்டு என்னுடைய பொருட்களை சரி பார்க்க ஆரம்பிப்பது போல் நடிக்க ஆரம்பித்தேன்.
எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டு இருக்கும் முகம் சற்று வாடி தான் போய் விட்டது.
சரி போதும் என முடிவு செய்து விட்டு, அவளுக்காக வெளியில் காத்து இருப்பதாக சைகை காட்டி விட்டு "அம்மா ... நான் என்னுடைய நண்பன் குமார பார்த்துட்டு வந்துடுறேன்.. சீக்கிரம் வந்துருவேன்" என்று கூறி வெளியில் கிளம்பினேன்.
வீட்டுக்கு வெளியில் யாரோ சூடிய பின் அவசரம் அவசரமாக கழட்டி எறிந்து இருந்த மல்லிகை பூக்கள் என் வீட்டு ரோஜா செடியை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.
ரோஜாவின் மேல் மல்லிகையா... நிச்சயம் அவளாகத்தான் இருக்கும்!
திரும்பி வீட்டினுள் பார்த்தேன். என் அன்னை அவளுக்கு பூவை சூடிக் கொண்டு இருந்தார்கள். அவளோ வெட்கத்துடன் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றாள்.
சிறிது புன்னகையுடன் நான் அவளிடம் காதலை சொன்ன அந்த ஆல மரத்தின் அடியில் அவளுக்காக காத்து இருக்க சென்றேன். என்னை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. 5 நிமிடத்தில் வந்து சேர்ந்து இருந்தாள். ஒரு வேலை இவ்வளவு நாட்கள் காக்க வைத்ததே போதும் என எண்ணி விட்டாள் போல...
"நான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறேன்..." தொடங்கினேன்.
"தெரியும்..."
"இன்னும் ஒரு வருசத்துக்கு வர மாட்டேன்.."
"ம்ம்ம்.."
"இப்பயாவது உன்னுடைய முடிவ நான் தெரிஞ்சிக்கலாமா...?" என்றேன்.
சிறிது நேரம் அவள் பதில் எதுவும் பேசவில்லை... அப்புறம் ஆரம்பித்தாள்
"வெளிநாடு ரொம்ப அழகா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்... நம்ம ஊரு மாதிரி எல்லாம் அங்க இருக்காதாம்..."
"நான் என்ன கேட்டேன்... நீ என்ன..." என்று நான் ஆரம்பித்து முடிப்பதற்குள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
"அத எல்லாம் பார்த்து அங்கேயே ரொம்ப நாள் இருந்துராதீங்க... இங்க நிறைய பேரு காத்துக்கிட்டு இருக்கோம்..." என்றாள்.
"இன்னும் நான்... " என்று நான் ஆரம்பிப்பதற்குள்... மெதுவாய் என் கிட்டே வந்து
"காத்துக்கிட்டு இருப்பேன் ... ஒரு வருசம் தான் சரியா... வந்துடனும்" என்று கூறி விட்டு அவளின் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
புன்னகைத்தேன்..
"கண்டிப்பா... வந்துடுவேன்..." என்று மனதுக்குள் கூறிவிட்டு நானும் என் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். " ஏன்டா சிரிச்சிகிட்டே இருக்க" என்று வீட்டில் எல்லோரும் கேட்டும் கூட ஏனோ இதயம் சிரிப்பதை நிறுத்த மாட்டேன் என்றது.

அன்று தான் நான் அவளை கடைசியாக கண்டது. இதோ அதற்கு அப்புறம் இன்று தான் சொந்த ஊருக்கே திரும்ப வருகின்றேன். அன்று அவள் புன்னகையோடு ஓடி மறைந்தது என் கண்ணுக்குள் இன்றும் அப்படியே நிற்கின்றது. நாளுக்கு நாள் ஏதோ ஒரு மாற்றத்தால் மாறிக் கொண்டு இருக்கும் நகரத்திற்கு மாறாய் மாற்றம் ஏதும் இன்றி நான் செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் இருந்தது என் ஊர். அந்த மரம். நான் கொடுத்த வாக்கு. எல்லாம் அப்படியே தான் இருந்தன.  
ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?...
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு காதல் கதை-2

"இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி."

ஊரை நெருங்குவதற்குள் மழை மீண்டும் தூற ஆரம்பித்தது. மழையில் நனையாது இருக்க வழியில் இருந்த ஆலமரத்திற்கு அடியில் ஒதுங்கினேன். அது வரை ஒன்றாக வந்த சாலை இரண்டாக பிரியும் முக்கியமான இடத்தில் நின்று கொண்டு இருந்தது அந்த மரம். பிரிந்த வழிகளுள் ஒரு வழி அவளின் வீட்டை நோக்கியும், மற்றொன்று என் வீட்டை நோக்கியும் சென்று கொண்டு இருந்தன.  சிறு வயதில் மரத்தில் செதுக்கி விளையாடிய பெயர்களை வளர்ந்த பின் பார்க்கும் போது அந்த சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் சற்று நெஞ்சத்தில் எட்டிப் பார்த்து விட்டு போகும் அல்லவா... அது போல தான் என்னுள் அப்பொழுது சில பழைய ஞாபகங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.
நானும் செதுக்கி இருந்தேன் அந்த ஆலமரத்தில்... பெயர்களை அல்ல... சில நிமிடங்களை!!! அவளிடம் நான் என் காதலை முதலில் சொன்ன நிமிடங்களை!!!


எப்படி கடந்தன என்று தெரியாது ஆனால் அவள் எனக்கு அறிமுகமாகி ஐந்து மாதங்கள் கடந்து இருந்தன. தங்கைக்கு தோழியாய் , அம்மாவிடம் சமத்து பெண்ணாய் , அப்பாவிற்கு விவரமான பெண்ணாய் என என் வீட்டில் உள்ள அனைவரிடமும் படிப்படியாய் நெருங்கி இருந்தாள், என்னைத் தவிர. வீட்டில் உள்ள அனைவரிடமும் வார்த்தைகளால் பேசிச் செல்கின்றவள் என்னிடம் மட்டும் இன்னும் புன்னகையால் பேசிக் கொண்டு இருந்தாள். நானோ மௌனத்தால்.
என் கல்லூரிக்கு சற்று முன்னால் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் தான் அவள் அவளது பட்டப்படிப்பிற்கு சேர்ந்து இருந்தாள். கல்லூரி வழியாக எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி என்ற விகிதம் தான் இருக்கும். எனவே கல்லூரி முடிந்து நானும் அவளும் அநேகமாக ஒரே பேருந்தில் தான் செல்வோம். வீட்டில் தான் பேச முடியவில்லை சரி எப்படியாவது பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு செல்லும் முன் அவளிடம் பேசி விடலாம் என்றால் என்னுடைய என்ணத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார்கள் அவளின் தோழிகள். நாம் காதலிக்கும் பெண்களிடம் இந்த ஒரு பிரச்சனை தான். தனியாக வெளியே தென்படவே மாட்டார்கள். சுற்றியும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சில நண்பர்களின் கூற்றுப் படி "மச்சான்! அவகிட்ட காதல சொல்றது கூட பிரச்சனை இல்லடா... ஆனா அவளை தனியாக பேசணும்னு கூப்பிடும் போது சுத்தி இருக்கிறவங்க எல்லாம் சிரிக்கிறாங்க டா. அங்க தான்டா பிரச்சனையே. சிரிக்கிறாங்க ஆனா எதுக்கு சிரிக்கிறாங்கனு தெரியலடா"  காதலைச் சொல்வதை விட, அவளின் கூட்டத்தில் இருந்து தனியாக அவளை பேச அழைப்பது தான் சிரமமான காரியம் என்பது மட்டும் நன்றாக புரிந்து இருந்தது. எனவே அவள் எப்போது தனியாக இருப்பாள் என்று எதிர் பார்த்தே காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தேன்.
என் நேரமும் ஒரு நாள் வந்தது. எப்பொழுதும் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தோழிகளுடன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுபவள் அன்று தோழிகளை முன்னே செல்லச் சொல்லி விட்டு தனியே ஊருக்குள் செல்லும் வழியின் அருகே நின்று கொண்டு இருந்தாள். ஒன்றும் புரியாமல் நானும் பேருந்தில் இருந்து இறங்கி ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். "பேசுடா முட்டாள்" என்று என்னுடைய நெஞ்சம் திட்டிக் கொண்டு இருந்த போதும் ஏனோ என்னுடைய கால்கள் அவளின் அருகே செல்லாது விலகிச் சென்று கொண்டு இருந்தன.
"ஒரு நிமிசம்..."
அழைத்து இருந்தாள். நெஞ்சம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. என்னைத் தான் அழைத்து இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள சுற்றியும் பார்த்தேன். என்னை தவிர வேறு யாருமில்லை. என்னைத் தான் அழைத்து இருந்தாள்.
திரும்பினேன்.
"என்னையா கூப்பிட்டீங்க" என்றேன்.
"ஆமாம்... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் .... பேசலாமா" என்றாள் சற்று தயக்கத்துடன். 

இதயம் பற்றி எரிந்துக் கொண்டு இருந்தது அதைப் பொருட்படுத்தாது
"சொல்லுங்க... என்ன விஷயம்!" என்றேன்
"தப்பா எடுத்துக்காதீங்க... உங்களுக்கு கணக்குப் பாடம் கொஞ்சம் நல்லா வராதாமே?" என்றாள்.
இதயம் மீண்டும் ஒரு முறை துடிப்பதை நிறுத்தியது. இம்முறை அதிர்ச்சியால். நிச்சயம் இந்த கேள்வியை நான் எதிர் பார்த்து இருக்கவில்லை.
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே... யார் சொன்னாங்க?" என்றேன்.
"உங்க அம்மா தான் சொன்னாங்க...."
இது வரையிலும் படிப்பை பொருத்தவரை என் மானத்தை அப்பா தான் வாங்குவார். இப்போ அம்மாவும் களம் இறங்கி விட்டார்களோ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே தொடர்ந்தாள் 

"இல்லை ... எனக்கு கணக்கு கொஞ்சம் நல்லா வரும்... இது உங்களுக்கு கடைசி வருசமாம்... இந்த ஒரு பாடத்துல தான் நீங்க ரெண்டு வருசமா தேர்ச்சி ஆகாம இருக்கீங்களாம்... அதுனால என்னை உங்களுக்கு கொஞ்சம் சொல்லித் தர முடியுமானு உங்க அம்மா கேட்டுக்கிட்டாங்க... நானும் சரினு சொல்லிட்டேன்... ஆனா உங்களுக்கு பிரச்சனை இல்லைனா மட்டும் தான்... வேண்டாம்ணு நினைச்சீங்கனா வேண்டாம்" என்று கூறி முடித்தாள்.  
அவசரப்பட்டு அம்மாவை சந்தேகப்பட்டு விட்டாயேடா மடையா என்று உள்ளுக்குள் என்னைத் திட்டி விட்டு "சரி சொல்லு ... சரி சொல்லு" என்று உள்ளுக்குள் கூச்சல் இட்டுக் கொண்டு இருந்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் இயல்பாய்
"ஓ! அப்படியா... எனக்கு கணக்கு வராதுன்னு எல்லாம் ஒண்ணும் இல்லை... நல்லாத் தான் பண்ணுவேன். ஆனா எனக்கு எடுத்த வாத்தியார் சரி இல்லை.. அதான் இப்படி... கொஞ்ச கணக்குல மட்டும் சந்தேகங்கள் இருக்கு.. மற்றத எல்லாம் நான் கிட்டத்தட்டப் படிச்சிட்டேன்.." என்றேன்.
"ஓ!! அப்படினா நீங்களே படிச்சிடுவீங்கனு உங்க அம்மாக்கிட்ட சொல்லிடட்டுமா?" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நம்ம முட்டாள்னு நெனச்சிடக் கூடாதுணு கொஞ்சம் படிச்சி இருக்கேன்னு சொன்னா இவ நம்மள அறிவாளினுல நெனச்சிட்டா என்று உள்ளுக்குள் பதறியவாறு
"இல்ல இல்ல... நான் அப்படி சொல்ல வரல... கொஞ்சம் சந்தேகம் இருக்குனு சொன்னேன்ல... உங்களுக்கு வேற வேலை இல்லைனா... கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்றேன்.
சிரித்தாள்.
"சரி அப்படி என்றாள் நாம் நாளையில் இருந்து படிப்பதை தொடங்குவோம். சாயங்காலம் 6:30 மணி உங்களுக்கு சரியா இருக்குமா" என்றாள். 

"எனக்கு பிரச்சனை இல்லை. எப்ப வைத்தாலும் எனக்கு சரி தான்" என்றேன்.
"அப்படினா சரி. நாளைக்கு சந்திப்போம். கவலைப்படாதீங்க.. இந்த தடவ நீங்க அந்த பாடத்துல தேர்ச்சி ஆயிடுவீங்க... அதுக்கு நான் பொறுப்பு" என்று புன்னகைத்தவாறே கிளம்ப ஆரம்பித்தாள்.
நானும் அவள் பின் அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்.
ஏனோ இதயம் மட்டும் துள்ளிக் குதித்துக் கொண்டே அவளின் முன்னால் ஓடிக் கொண்டு இருந்தது.   

அடுத்த நாளில் இருந்து வகுப்புகள் ஆரம்பித்தன. அவளோ கண்ணும் கருத்துமாய் எனக்கு கற்பித்துக் கொண்டு இருந்தாள். நானோ "என்ன... அவ சொல்லிக் குடுத்து நீ படிக்கப் போறீயா?... அப்படினா இந்த வருசமும் கணக்கு போச்சா சக்தி" என்ற என்னுடைய தங்கையின் வாக்கை உண்மையாக்குவதைப் போல் கணக்கை அல்லாது அவளைக் கற்றுக் கொண்டு இருந்தேன். அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஒரு காதல் கதை-1

மழைத் தூறி விட்டு நின்றிருந்தது.
ஒரு வருடம் வெளிநாட்டில் படித்து முடித்து வரும் என்னை காண ஆவலுடன் இரு கண்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கிடக்கும் என்று எண்ணியே வந்தவனுக்கு காலியாய் வரவேற்பு அளித்தது எங்கள் ஊர் பயணியர் நிழற்க்கூடம்.
அவள் வரவில்லை.
மழை வந்து இருந்தது.
ஏமாற்றம் தான். நிச்சயம் வருவாள் என எதிர் பார்த்து இருந்தேன்.
ஒரு வேளைச் செய்தி போய் சேர்ந்து இருக்காதோ?... இல்லையே அன்று ஒரு நாள் வெளிநாட்டில் எனக்கு உடம்பு சரியில்லை என்ற செய்தியை அறிந்து கொண்டு என் அன்னையின் கடிதத்தோடு வேறு யாரும் அறியாமல் சில வரிகளையும் ஒரு முத்தத்தையும் சேர்த்து அனுப்பியவளுக்கு நான் ஊருக்கு வருவதா தெரியாது போய் இருக்கும் என்று குழம்பியவாறு எனது பெட்டியை எடுத்துக்கொண்டு வயல்களின் வழியாக எனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு ஆண்டுக்கு மேலாக நகரத்தின் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, திடீரென்று சிறு வயது முதல் என்னை கண்டு வளர்த்த சூழலின் நடுவே நிற்பதை உணர்ந்த போது புரியாது ஒரு புன்னகை அதுவாக அரும்பியது.
இங்கு நான் அந்நியன் அல்ல. இது என் ஊர்.
"யாரு ... நம்ம கனி மகனா?"  என்றார் வழியில் ஒரு பாட்டி.
"ஆமாம் பாட்டி. நல்லா இருக்கீங்களா?" என்றேன் ஒரு புன்னகையுடன். டில்லிக்கே ராஜா ஆனாலும் எங்க ஊர்ல எல்லாருக்கும் நான் எங்க அம்மாவோட பையன் தான். 
 "எனக்கென்னபா நல்லா இருக்கேன். நீ சீமையிலே இருக்கிறதாவுலே சொன்னாங்க ... எப்ப வந்த" என்றார் அவர்.
"இன்னிக்கு தான் பாட்டி. இப்ப தான் ஊருக்குள்ள வறேன்" என்றேன்.
"சரி சரி... விரைவா வீட்டுக்கு போயி சேரு... ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்க்க போற சந்தோசத்திலே உங்க அம்மா ஊரையே ரெண்டு பண்ணிக்கிட்டு இருக்கா" என்று கூறி அவர் அவர் வழியில் நடந்து செல்ல ஆரம்பித்தார்.
நானும் புன்னகையோடு தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன்.
சிறிது தூரத்தில் அய்யனாரின் கோவில் கண்ணுக்கு புலப்பட்டது.
அய்யனார் - எங்க ஊர் காவல் தெய்வம். அந்த கோவில், அதை சுற்றியுள்ள இடங்கள் அவற்றை பார்க்கும் போது என்னை அறியாது ஒரு ஞாபகம் என்னை உரசிக் கொண்டு போனது.நம்ம வாழ்க்கைலே ஏதோ ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைக்கும் போது ஏன்னு தெரியாமலையே ஒரு புன்னகை வரும் தெரியுமா, நம்மள அறியாமலையே யாரைப் பார்த்தாலும் புன்னகைக்கத் தோணும். சினிமா வசனம் மாதிரி சொல்லணும்னா ஒரு பட்டாம்பூச்சி மனசுக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கும். நானும் அப்படி தான் உணர்ந்தேன்.
ஆம், இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு தான் நான் அவளை முதன் முதலில் சந்தித்தேன்.
அது ஒரு திருவிழாக் காலம்.
நான் தேவதைகளில் நம்பிக்கைக் கொள்ள ஆரம்பித்து இருக்காத ஒரு காலம்.
எப்பொழுதும் போல் தான் அன்றும் விடிந்திருந்தது.
"திருவிழா அன்னிக்கும் இன்னும் எழுந்திரிக்காம தூங்கிக்கிட்டு இருக்கான் பாரு... இவன... டேய் சக்தி.."
அடுப்பாங்கடையில் இருந்து வந்த அம்மாவின் சத்தம் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த என்னை எழுப்பி விட்டது.
எழுந்து மணியைப் பார்த்தேன்.
'6:50' என காட்டியது அறைக் கடிகாரம்.
"காலங்காத்தாலையே ஏன்மா..." என்று சலித்துக் கொண்டே கோவிலுக்கு போக தயாராக கிளம்பினேன்.என்றும் நண்பர்களோடு ஊர் சுற்றித் திரிய சுதந்திரம் இருந்த எனக்கு, திருவிழாக்கள் அன்று மட்டும் ஒரு செல்லத்தடை, குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போய்கொள் என்பதே அது. அதற்கு ஏற்றார்ப் போல் நண்பர்களின் அழைப்பை எல்லாம் தவிர்த்து குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல கிளம்பினேன்.
ஊர்த் திருவிழா என்பதால் ஊரெங்கும் அலங்காரங்கள் களை கட்டிக் கொண்டு இருந்தன. என்றும் அமைதியாக இருக்கும் எங்கள் ஊர் தெருக்கள் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒலிப்பெருக்கிகளின் சத்தத்தால் அதிர்ந்து கொண்டு இருந்தன. மக்களும் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் ஊரெங்கும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாய் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
ஊரே களைக் கட்டி இருக்கின்றது என்றால் கோவிலை பற்றி கேட்கவா வேண்டும். சுற்றியும் சந்தை, பொங்கல் வைப்பவர்கள், மின்விளக்குகள் என்று அந்த இடமே அமர்க்களமாய் இருந்தது.
"என்ன கனி. இந்த வட்டம் நீ பொங்கல் வைக்கலையா?".பொங்கல் வைக்கும் கூட்டத்தில் இருந்து அம்மாவிற்கு விசாரிப்பு வந்தது.
"இல்ல மாரி. இந்த தடவை வைக்கலை. அடுத்த வருசம் தான் இனி பாக்கணும்" என்று கூறிவிட்டு கோவிலின் உள் அம்மா நுழைந்தார். பின் தொடர்ந்தே நாங்களும் நுழைந்தோம்.

"நல்லா சாமி கும்புடுங்க கண்ணுகளா... எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க" என்றவாறே அம்மா சாமி கும்பிட ஆரம்பித்தார்.
தங்கச்சி குறும்பை ஆரம்பித்தாள்.
"ஆமாம் ஆமாம்... இந்த தடவையாவது என்னை எல்லா தேர்வுலையும் தேர்ச்சி பண்ணி விடு சாமினு வேண்டிக்கோ. அப்படியாவது ரெண்டு வருசமா எழுதிக்கிட்டு இருக்கிற அந்த ஒரு பாடத்துல தேர்ச்சி ஆகிறியானு பார்ப்போம்" என்றாள் நக்கலாய்.
தங்கைகளிடம் இந்த ஒரு பிரச்சனை தான். எப்படி படிக்கிறாளுகனு தெரியாது. ஆனா எப்படியோ நம்மள விட நல்லா படிச்சி வீட்டில நம்ம மதிப்பிற்கு வேட்டு வச்சிடுவாளுக.
"ஹ்ம்ம்ம்... நீ எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்க போறியோ... அங்க பாரு உன்ன விட மூணு வயசு சின்ன கழுத எப்படி படிக்குதுனு. நீயும் தான் இருக்கியே" னு வீட்டில அப்பாவிடம் அப்பாவியாய் நல்ல பேர் எடுத்துவிட்டு நம்ம சோத்துக்கு வேட்டு வைப்பதில் இவளுகளுக்கு ஒரு தனி பட்டமே தரலாம்.
அவளைத் திரும்பி முறைத்தேன்.
"என்ன விட நல்லா படிக்கிறேனு ஆணவத்துல பேசாத. எங்க சுத்தினாலும் வீட்டுக்கு தான வந்து சேருவ. அங்க வச்சிக்கிறேன் உனக்கு." என்றேன்.

நக்கலாய் முகத்தை சுழித்து விட்டு பத்திரமாய் அப்பாவின் அருகே போய் நின்று கொண்டாள்.
"பயந்தான்கோளி.." என்று முணுமுணுத்துக்கொண்டே நானும் சாமி கும்பிடலாம் என்று திரும்பினேன்.
அங்கே அவள் நின்று கொண்டு இருந்தாள்.
இதுவரை அவளை என் ஊரில் பார்த்தது இல்லை. நிச்சயம் புதியவள் தான். இருக்கட்டும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு அழகாகவும் யாராவது இருப்பார்களா?.
பார்த்த உடன் வரும் காதலில் அன்று வரை எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. ஏன்! தேவதைகளின் மீதும் தான்.
ஆனால், இவ்வளவு அருகில் ஒருத்தி நின்று கொண்டு இருக்கையில் நம்பாமல் இருக்க முடியவில்லை. எங்கோ ஒரு பட்டாம்பூச்சி சிறகை ஆட்ட எங்கோ ஒரு இடத்தில் பூகம்பம் நேருமாம். இங்கோ, மெதுவாய் அவள் இமைகள் துடித்துக் கொண்டு இருந்தன... என் உலகமோ நொறுங்கிக் கொண்டு இருந்தது.
அவளோ அவளின் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டு இருந்தாள். நானோ இறைவன் புரிந்து கொள்வான் என்று என் இஷ்ட தேவதையை தரிசித்துக் கொண்டு இருந்தேன். இறைவனோ எங்கள் இருவரையும் கண்டு புன்னகைத்து கொண்டு இருந்தான்.

"சக்தி! சாமி கும்பிட்டது போதும். வா போகலாம்" என்று தொலைவில் எங்கோ தங்கையின் குரல் கேட்க திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தேன். விடுக்கென்று கோவிலில் இருந்த திருநீரை எடுத்து பூசி விட்டு நானும் கிளம்ப ஆரம்பித்தேன். அதே நேரம் அவளின் குடும்பமும் கிளம்புவதற்கு தயார் ஆகி கொண்டு இருந்தனர்.
ஹ்ம்ம்ம்... இனி மேல் இவள பத்தி விவரத்தை எப்படி சேகரிக்கிறதுனு யோசிச்சிக்கிட்டே கோவிலுக்கு வெளியே வரும் போது அவளின் தந்தை எங்களை கூர்ந்து கவனிப்பதை கவனித்தேன்.
இது என்னடா திடீர்னு நம்மள பார்க்கிறார்... என்ன விஷயம்னு நான் யோசிக்கிறதுக்கு முன்னாடியே புன்னகைத்தவாறே எங்களை நோக்கி வர தொடங்கினார்.
"டேய் சண்முகம்...!!!"
என் தந்தையின் பெயரைச் சொல்லி அழைத்து இருந்தார்.
என்னுடைய தந்தை நின்று ஓசை வந்த திசை நோக்கி திரும்பி பார்த்தார்.
சிறிது நேரம் அதே யோசனை. பின் அதே புன்னகை.
"முருகா... நீ எங்கடா இங்க.. பார்த்து எத்தன வருசம் ஆச்சி..உன் கல்யாணத்துல பார்த்தது" என்று கூறியவாறே அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
பழைய நண்பர்களாம்.
பிரச்னை இல்லை. என் வேலை கொஞ்சம் எளிதானது. உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டேன்.

"என்னை இந்த மாசம் தான்டா உன் ஊருக்கு மாற்றம் செஞ்சி இருக்கானுங்க.. நானே உன் வீட்டுக்கு வரணும்னு இருந்தேன்" என்று அவளின் தந்தை விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு குடும்பத்தினரும் அவர்களின் அருகிலே வந்து விட்டு இருந்தோம்.
என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு அவள்.
வார்த்தைகளற்று நான். என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே,
"இது யாரு உங்க பொண்ணா... என்ன பண்றா?" என்றார் என் அன்னை.
முற்றிலும் அன்னியமான சூழலில் உரையாடல்களை ஆரம்பித்து வைப்பதற்கு அன்னைகளை விட சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. சந்தித்த 10 நிமிடங்களில் நெருங்கிய தோழிகளைப் போல உரையாட ஆரம்பித்து இருந்தனர் எங்கள் இருவர் அம்மாக்களும்.
"ஆமா.. இப்ப தான் +2 முடிச்சிட்டு முடிவுக்காக காத்துக்கிட்டு இருக்கா" என்றார் அவளின் அன்னை.
"உன் பேரு என்னமா?" என்றார் என் அன்னை அவளை நோக்கி.
புன்னகைத்தாள்.
"மலர்!" என்றாள்.
கோவிலைச் சுற்றி இருந்த மலர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் பெருமூச்சி விட்டன. 

"சரி உங்க பசங்களை பத்தி ஒண்ணுமே சொல்லலையே" என்றார் அவளின் அன்னை.
"பெரியவன் பேரு சக்தி... ரெண்டாம் ஆண்டு விவசாயம் படிச்சி முடிக்க போறான்.. சின்னவ ... பிரியா... இப்ப தான் 10ம் வகுப்பு முடிச்சி இருக்கா... இவளும் முடிவுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கா..." என்று முடித்தார் என் அன்னை.
"விவசாயமா?..." என்றாள் அவள் ஆச்சரியமாய்.
"ஆமாம் மா... ஏன் ஆச்சரியத்தோடு அப்படி கேட்குற?" 

"இல்லை ... இப்ப எல்லாம் எல்லாரும் பொறியியல் இல்லை மருத்துவம்னு தான் எடுத்துப் படிக்கிறாங்க... விவசாயம் என்கிறது கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சி அதான்" என்றாள்.
"இவங்க அப்பாவும் அத தான் சொன்னாப்பில.. ஆனா இவன் தான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான்... இத்தனைக்கும் மதிப்பெண் எல்லாம் நெறைய தான் வச்சி இருந்தான்... ஆனா எனக்கு வயல்ல வேலை செய்றது தான் பிடிச்சி இருக்குனு சொல்லிட்டான்" என்றார்.
"சரிக்கா..." என்று கூறி மீண்டும் புன்னகையைச் சூடிக் கொண்டாள்.
விவசாயமானு கொஞ்சம் அதிர்ச்சியாக அவள் கேட்ட போது தப்பான முடிவு எடுத்து விட்டோமா என்று என் மனசு பதறியதை அவள் அறிந்து இருக்க வாய்ப்பில்லை தான். ஆமாம் இந்த காலத்தில் நான் படிக்கும் படிப்பிற்கு மதிப்பில்லை தான். ஆனால் என் கனவுகள் வேறு. ஒரு வேளை அவள் கனவுகள் வேறாக இருக்குமோ?... எனக்கு ஏற்றவளாக இவள் இருக்க மாட்டாளோ? என்ற எண்ணங்கள் என்னுள் மிக வேகமாக கிளம்ப ஆரம்பித்தன.
"சரி நீ என்னமா படிக்கலாம்னு இருக்க" தொடங்கினார் என் அன்னை.
"ஹ்ம்... இவளும் பொறியியல் இது எல்லாம் வேண்டாம்ணு சொல்லிட்டா... ஏதோ ஒரு படிப்பு சொன்னாளே... அது என்னடி"
"ஹோம் சைன்ஸ் மா" என்றாள்.
"ஆமாம்... அந்த படிப்பு தான் படிக்க போறாளாம்" என்று முடித்தார் அவளின் அன்னை.

தென்றல் கொஞ்சம் என்னை தீண்டி விட்டு போனது.
பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பழங்கதைகள் பேசி கொள்ள ஆரம்பித்தனர்.
நானோ வார்த்தைகள் எல்லாம் தொலைத்து விட்டு புதுக்கதைகள் பேசுவதற்காக மொழிகளைத் தேடிக் கொண்டு இருந்தேன்.
அவளோ மௌனமாய் விழிகளில் புதுக்கவிதைகள் புனைந்துக் கொண்டு இருந்தாள்.
"நீ சரி இல்லையே" என் காது அருகே ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும் மாதிரி ஒலித்தது.
திரும்பினேன். என் தங்கை ஒரு புருவத்தை உயர்த்தியவாறு என்னைப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
"என்ன...!!!"
"நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்... அந்த பொண்ணயே பார்த்துக்கிட்டு இருக்கியே... அப்பாகிட்ட சொல்லட்டுமா" என்றாள் புன்னகைத்துக் கொண்டே.
அவர் அவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, என்னை பார்க்கிறதையே வேலையா வச்சிக்கிட்டு அலையுறா என்று முணுமுணுத்துக்கொண்டே,
"என்ன வேண்டும்" என்றேன்.
"சந்தையில ஏதாவது வாங்கி கொடு" என்றாள்.
சலித்துக்கொண்டே "சரி வா.." என்று சொல்லி கிளம்ப தயாரானேன்.
"அம்மா... நாங்க சந்தைக்கு போய்ட்டு வந்திருறோம்" என்று எங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டு சந்தோசத்துடன் கிளம்ப ஆரம்பித்தாள் பிரியா.
"இருடி.. இந்த அக்காவையும் கூட கூட்டிட்டு போ... நம்ம ஊர் சந்தைய இவங்க பார்த்து இருக்க மாட்டாங்க... என்னமா போயிட்டு வறியா?" என்றார் என் அம்மா.
அவள் திரும்பி அவளின் அம்மாவைப் பார்த்தாள். அவர் சம்மதம் தெரிவிக்கவே
"சரிக்கா" என்று கூறி அவளும் சந்தைக்கு வர கிளம்பினாள்.
என் மூளையில் மின்னல் வெட்டியது.
என்ன இன்னிக்கு எல்லாமே நல்லாதவே நடக்குதே என்று சந்தோசப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு சின்னக்கல் பறந்து வந்து தலையில் அடித்தது.
நண்பர்கள்... 

சரியா எப்ப எவன் வரக் கூடாதுனு நினைப்போமோ அப்ப சரியா வந்து நிப்பானுங்க. அந்தக் கல்லைப் பொருட்படுத்தாது கிளம்ப ஆரம்பித்த போது சரியாக அடுத்த கல் அம்மாவின் மேல் வந்து விழுந்தது.
"என்னடா சக்தி... உன் கூட்டம் வந்திரிச்சி போல இருக்கு... நீ வேணும்னா கெளம்பு... ஏற்கனவே உன்ன ரொம்ப நேரம் இங்க இருக்க வச்சாச்சி.. நீ கெளம்பு..."
"அப்ப பிரியாவ சந்தைக்கு கூட்டிட்டு போறது?" என்று இழுத்தேன்.
"அது நான் போயிப்பேன் சக்தி... நீ காச மட்டும் குடு" என்றாள் நேரம் அறிந்து என் அருமை தங்கச்சி.
வேறு ஒன்றும் சொல்ல இயலாதவனாய் காசை கொடுத்து விட்டு அவள் புன்னகைத்துக் கொண்டே என் தங்கையுடன் சந்தைக்கு போவதை பார்த்துவிட்டு கடுப்புடன் கல் எறிந்தவனை தேடி கிளம்பினேன்.


டேய்... நான் என்ன பண்ணினேன்னு இப்ப என்ன அடிக்க வர என்று கத்திக்கொண்டே அவன் வயல் வரப்புகளில் எல்லாம் ஓடியதும் அவனை நான் துரத்தியதும் ஏதோ நேற்று நடந்தது போல இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அதற்குள் 2 வருடங்கள் ஓடிப் போய் விட்டது. வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் அந்த இடங்கள் எல்லாம் அப்படியே இருந்தன.

இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி.
 
   

புதன், 7 ஜூலை, 2010

இயற்கையைத் தேடி - 3

பைன் மரங்களின் வழியாக கதிரவன் நாங்கள் செல்லும் பாதையில் ஒளிப்பரப்பி கொண்டு இருந்தான். நாங்களும் மதி கெட்டான் சோலையை நோக்கி ஆர்வத்துடன் சென்று கொண்டு இருந்தோம்.
"இன்னும் சோலையை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?." என்றேன்.
"ஏன் கேட்கிறாய்" என்றார் பேராசிரியர் கந்தசாமி.
"இல்லை நாமும் வெகு நேரமாக நடந்து கொண்டு இருக்கின்றோம், ஆனால் இந்த பைன் மரக்காட்டைத்தவிர வேறு இடமே தெரியவில்லையே அதான் கேட்டேன்" என்றேன் தயக்கத்துடன்.
நின்றார் பேராசிரியர். அவரை தொடர்ந்து வந்த மாணவர் கூட்டமும் நின்றது. சில நொடிகளில் வனம் அமைதி ஆனது.
"தூரத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதா" என்றார்.
கூர்ந்து கவனித்ததில் சிறு தொலைவில் ஒரு நீரோடை ஓடுகின்ற சத்தம் கேட்டது.
"ஆம்" என்றோம்.
"அப்படி என்றால் சோலை நெருங்கி விட்டது என்று அர்த்தம். சோலை எங்கு இருக்கின்றதோ அங்கே நீரும் இருக்கும்." என்றார்.
பயணத்தின் இலக்கு நெருங்கி விட்டதை எண்ணி சற்று மகிழ்ச்சியோடு நடக்க ஆரம்பித்தோம்.
"நில்லுங்கள்! சோலைக்குள் செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அமருங்கள்" என்று கூறி அவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
நாங்களும் அவரைச் சுற்றி அமர்ந்தோம்.
"ஓங்கி வளர்ந்து இருக்கும் இந்த பைன் மரங்களை பார்த்தீர்களா? இவற்றை பார்க்கும் போது என்ன எண்ணம் வருகின்றது?" என்றார்.
"தமிழ் சினிமா படத்தில் சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வரும் காடுகள் போல இருக்கின்றன" என்றான் ஒருவன்.
"ஆம். இந்த காடுகளை நீங்கள் அடிக்கடி படங்களில் பார்த்து இருப்பீர்கள். காடுகளில் பல வகைகள் இருக்கும் போது என் இந்த காடுகளில் மட்டும் அதிகமாக படம் எடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?"
"இவை அழகாய் இருக்கின்றன! அதனாலா?" என்றாள் ஒருத்தி.
"ஒவ்வொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளிகள் அவர்கள் படம்பிடிக்க சிரமமாய் இருக்காது. அதனால் இருக்கும்" என்றான் இன்னொருவன்.
"ஆம்!! இந்த மரங்களுக்கு இடையில் இருக்கும் இந்த இடைவெளிகள் தான் காரணம். இந்த மரங்களை உற்று கவனியுங்கள். இந்த நிலப்பரப்பில் இந்த மரங்களை தவிர வேறு மரங்கள் எதையாவது நீங்கள் காணமுடிகின்றதா" என்றார் பேராசிரியர்.
"இல்லை!" என்றோம். அந்த நிலப்பரப்பு முழுவதும் பைன் மரங்கள் தவிர வேறு மரங்கள் தென்படவில்லை.
"இருக்கும் மரங்களும், தனித் தனியாக இருப்பதையும் பார்த்து கொள்ளுங்கள். இந்த இடத்தில், நீரோட்டம் இல்லை, அதிகமான மிருக நடமாட்டமும் இல்லை. இருப்பவை அனைத்தும் பைன் மரங்களும் அவை உதிர்த்த இலைகளுமே. இவற்றை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். முக்கியமான உண்மையை அறிய இந்த விஷயங்கள் தேவையாக இருக்கும்" தொடர்ந்தார் பேராசிரியர்.
ஆம். அவர் கூறியதை போலவே அந்த பகுதியில் பைன் மரங்களையும் அதன் உதிர்ந்த இலைகளையும் தவிர வேற இயற்கையின் படைப்புகளை காண முடியவில்லை.

"சரி வாருங்கள்!!! இப்பொழுது சோலைக்குள் செல்லலாம்" என்று கூறி விட்டு எழுந்து தண்ணீரின் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நாங்களும் பின் தொடர்ந்தோம்.
இது வரையிலும் தனித் தனி மரமாக காட்சியளித்த வனம் இப்பொழுது சற்று இறுக்கமாய் காட்சியளிக்க ஆரம்பித்தது. மரங்கள் மிகவும் நெருக்கமாய் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டு வெயில் உள்ளே வராதவாறு இருந்தன.
தண்ணீரின் சத்தம் சற்று பலமாக கேட்க ஆரம்பித்தது. கூடவே சில பறவைகளின் சங்கீத சத்தமும்தான்.
"இதோ....இது தான் மதி கெட்டான் சோலை. இனி அனைவரும் தங்கள் முன்னால் செல்பவரை பின் தொடர்ந்தே சீக்கிரம் வரப் பாருங்கள். ஏன் எனில், இந்த சோலையின் பெயருக்கு ஏற்ப ஒருவர் வழி தவறினால் அவரை கண்டு பிடிப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாது. எனவே இயற்கையை ரசியுங்கள் ஆனால் ஜாக்கிரதையாய் ரசியுங்கள். என்னை தொடர்ந்து பின் வாருங்கள்" என்று சொல்லி அந்த அடர்ந்த சோலைக்குள் பிரவேசித்தார்.

இது வரை நாங்கள் கடந்து வந்த அந்த பைன் மரக்காட்டை விடவும் மிகவும் வித்தியாசமான ஒரு சூழல் எங்களை எதிர் பார்த்து அங்கே காத்துக்கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை, வித விதமான மரங்கள்,நீரோடை, நீரோடும் வழியில் தடைகல்லாய் சில பாறைகள், வரையறுக்காத பாதை என முற்றிலும் மாறுபட்ட ஒரு இடமாய் காட்சியளித்தது அந்த சோலை.
பேராசிரியரின் எச்சரிக்கை எங்களுக்கு ஞாபகம் வந்தது. இங்கே தொலைந்தால் கண்டிப்பாய் திரும்பி சரியான வழி கண்டு பிடிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது.
"இந்த சோலை முழுவதும் நீரோடைகள் ஓடிக் கொண்டே இருக்கும். சோலைகள் எங்கேயோ, அங்கே நீர் ஆதாரங்களும் இருக்கும் என்பது எழுதப்படாத விதி" என்றார் பேராசிரியர்.
"ஏன் அப்படி! இதுவும் ஒரு வகையான காடுதானே. ஏன் அந்த பைன் மரக்காட்டில் இல்லாத நீர் ஆதாரம் இந்த சோலைகளில் மட்டும் இருக்கின்றது." என்றேன்.
"அது தான் சோலைகள். விவரமாக சொல்கின்றேன் அமருங்கள்!" என்று கூறி ஒரு பாறையில் அமர்ந்தார். நாங்களும் கிடைத்த பாறைகளில் அமர்ந்து கேட்க ஆரம்பித்தோம்.
"அங்கு அந்த பைன் மரங்களை பார்த்தீர்கள் அல்லவா... அந்த இடத்திற்கும் இந்த இடத்திற்கும் ஏதாவது வித்தியாசத்தை உணருக்கின்றீர்களா?" என்றார்.
"ஆம். நிறைய வேறுபாடுகள் உள்ளன" என்றோம்.
"அந்த வேறுபாடுகள் என்ன என்னவென்று சொல்லுங்கள். நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லுகின்றேன்." என்றார்.
"ம்ம்ம்... இங்கே நிறைய மரங்கள் இருக்கின்றன. பெரிய மரங்கள், சின்ன செடிகள் ஆகியவையெல்லாம் ஒன்றாய் இருக்கின்றன. அங்கே அந்த பைன் மரங்கள் மட்டும் தனியாக இருந்தன." என்றான் ஒருவன்.
புன்னகைத்தார் பேராசிரியர். "சரியாக கவனித்து இருக்கின்றாயே. வாழ்த்துகள். ஆம்! இங்கே மரங்கள் ஒன்றாக இருக்கின்றன. ஒற்றுமையாய் இருக்கின்றன. அங்கே உள்ளது போல் ஒவ்வொரு மரமும் தனித் தனியாக இல்லை. அது தான் இந்த இடம் செழித்து இருப்பதற்கு காரணம்." என்றார்
"புரியவில்லையே" என்றேன்.
"இந்த மரங்கள் இங்கே ஒன்றை ஒன்று கவனித்து கொள்கின்றன. இந்த சிறிய செடிகள் அளவிற்கு அதிகமாய் வெயில் பட்டால் வளராது போய் விடும். எனவே இந்த பெரிய மரங்கள் அந்த செடிகளை வெயில் படாதவாறு காத்து தங்கள் பாதுகாப்பில் வளர செய்கின்றன. அதே போல் இந்த செடிகளும் மண்அரிப்பை தடுத்து மழைக்காலத்தில் நீரை சேமித்து, நிலத்தடி நீரை அதிகரிப்பதின் மூலம் பெரிய மரங்கள் செழித்து வளர உதவுகின்றன. இவ்வாறு ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வதின் மூலம் இந்த இடத்தை செழிப்பாக வைத்துக் கொள்கின்றன. இங்கே உதிர்ந்து விழும் இலை கூட உரம் ஆகுமே தவிர குப்பை ஆகாது. ஆனால் அந்த பைன் காட்டிலோ மரங்களுக்குள் இந்த ஒற்றுமை கிடையாது. எனவே அங்கே இந்த சோலைகளில் இருக்கும் உயிர் கிடையாது. சோலை இயற்கை.... அந்த பைன் காடுகள் செயற்கை!!!" என்று கூறி முடித்தார்.
"என்ன அந்த பைன் காடுகள் செயற்கையா?" என்றேன் ஆச்சரியத்துடன்.
"ஆம். அவை செயற்கை தான். நீங்கள் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். சில அடிகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் அந்த பைன் காடுகளில் நீர் இருந்த அறிகுறியையே காணோமே. இது இயற்கையா..... இல்லை.... மனிதன் பணம் வேண்டும் என்பதற்காக சோலைகளை அழித்து இந்த பைன் காடுகளை உருவாக்கி விட்டு சென்று விட்டான். சோலைகள் சேர்ந்து இருப்பது இந்த மண்ணிற்காக... இந்த பைன் மரங்கள் தனித்து நிற்பது பொன்னிற்காக. இது அவற்றின் பிழை அல்ல. மனிதனின் பேராசை. பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மலைகளில் இருக்கும் சில முக்கியமான நீர் ஆதாரங்களை அவன் அழித்து விட்டான்" என்றார்.
"அந்த அழிந்து போன சோலைகளை நம்மால் திரும்பவும் கொண்டு வர முடியுமா?" என்றான் ஒருவன்
"ஏன் முடியாது. சோலைகள் நாம் மண்ணின் வனங்கள். அந்த பைன் மரக்காடுகளை அழித்து விட்டோம் என்றால்மீண்டும் சோலைகள் செழித்து வளரும். இது சோலைகளின் பூமி. ஆனால் அந்த பணி எளிதல்ல. அரசாங்கம் முயற்சியெடுக்க வேண்டும். இல்லை என்றால் இன்றைய சோலைகள் நாளைய பைன் மரக்காடுகளாவோ அல்லது தேயிலை தோட்டங்களாவோ மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.சரி நான் இந்த சோலைகள் நம் மண்ணின் வனங்கள் என்று சொன்னேனே... அதற்கு ஒரு சான்று சொல்லமுடியுமா" என்றார்.
வழக்கம் போல் எங்கள் குழு மௌனம் சாதித்தது.
"என்ன தெரியவில்லையா?"
மீண்டும் மௌனம்.
"சரி. நானே சொல்கிறேன்." என்று கூறிவிட்டு அருகில் இருந்த ஒருவனை நோக்கி திரும்பினார்.
"உங்கள் வீட்டில் எத்தனை பேர்" என்றார்.
"மூன்று! நான், அப்பா அப்புறம் அம்மா" என்றான்.
"சரி. உங்களில் யாருடைய வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றீர்கள்" என்றார் மீண்டும் கூட்டத்தை நோக்கி.
நான் எதிர்பார்த்தததை விட அதிக கைகள் மேலே எழூம்பின.
புன்னகைத்தார்.
"நன்று. எப்படி இந்த சோலைகள் நம்முடைய நாட்டினை கட்டி எழுப்பி இருக்கின்றனவோ அது போலவே தான் நம்முடைய கலாச்சாரம் கூட்டுக் குடும்பங்கள் வாயிலாகவே கட்டப்பட்டு உள்ளது." என்றார்.
அவர் எதை நோக்கி செல்கின்றார் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது.
" இந்த சோலைகளில் மரங்கள் எவ்வாறு கூடி ஒற்றுமையாய் ஒன்றுக்கொன்று பயன் உள்ளதாய் உதவிக்கொண்டு இருக்கின்றனவோ அதே போல் தான் நம் நாட்டின் குடும்பங்களும் கூட்டு குடும்பமாய் ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கொண்டு வாழ்ந்து வந்தன. இந்த சோலைகளும் நம் குடும்பங்களும் ஒன்று தான். இரண்டும் நம் மண்ணின் அடையாளங்கள். வாழ்க்கை நெறியை உணர்த்துபவை. வாழ்வில் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கை என்னும் நீரோடை மகிழ்ச்சியாய் அதன் வழியே ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்று இந்த சோலைகளை போலவே ஒற்றுமையான குடும்பங்களும் அழிந்து
கொண்டு இருக்கின்றன. சோலைகள் அழிந்து சில பைன் மரங்கள் பணம்  என்னும் காரணம் ஒன்றிர்க்காக புதிதாய் துளிர் விட்டு கொண்டு  இருக்கின்றன." என்றார்.
திடீர் என்று தொலைவில் இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தை உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் எங்களை நோக்கி திரும்பினார்.
 "அந்த தனி பைன் மரங்களால் இந்த மண்ணிற்கு எந்த பயனும் இல்லை. தீமை மட்டுமே உண்டு. இந்த பைன் மரங்களில் இருந்து மண்ணை காப்பாற்ற அரசாங்கத்தால் முடியாது. உங்களால் மட்டுமே முடியும். எப்படி இந்த சோலைகளை புதுப்பிக்க முடியுமோ அதே போல் குடும்பங்களையும் வளம் படுத்த முடியும். இரண்டுமே இயற்கை. நம் மண்ணின் சொத்துக்கள். நம் அடையாளங்கள். முயலுங்கள். இந்த மண் உங்களை நம்பியே. கிளம்புவோம் இன்னும் 5 நிமிடங்களில் மழை இங்கு வந்து விடும். அதற்குள் நாம் ஒரு  அருவியை கடக்க வேண்டும்" என்று கூறிக் கிளம்பினார்.
நாங்களும் புதிய சிந்தனையோடு நடக்க ஆரம்பித்தோம். 
பயணிப்போம்...

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...