"கண்களை திறங்கள்".
இயற்கையின் அமைதியை குலைக்காதவாறு ஒலித்தது அந்த குரல்.
மெதுவாய் கண்களை திறந்தேன். கண் குளிர்ந்தது.
பசுமை.
சுற்றிலும் பசுமை.
காடுகள் எங்களுக்கு கீழே சுற்றி பரந்து விரிந்து கிடந்தன. கொடைக்கானலுக்கு 20கிமீ மேலே உள்ள மலையிலா நான் இப்போது இருக்கின்றேன்!, நினைக்கும் போதே சற்று பிரமிப்பாய் இருந்தது. 
"என்ன உணர்ந்தீர்கள்" தொடர்ந்தார் பேராசிரியர் கந்தசாமி, எங்களது இந்த பயணத்தின் வழிகாட்டி. இவர் இல்லை என்றால், நான்கு நாட்கள் நாங்கள் காட்டினுள் தங்கி இயற்கையை படிப்பதற்கு வன அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இருக்க வாய்ப்பே இல்லை.

"அமைதி". ஆச்சரியமாய் அங்கு இருந்த அனைவரும் ஒரே பதிலைக் கூறினோம்.


புன்னகைத்தார்.
"ஏன் இங்கு அமைதி நிலவுகிறது தெரியுமா?" என்றார்.
".... இங்கே மனிதர்கள் இல்லை.... அதனாலயா?" தயக்கத்துடன் பதிலளித்தான் ஒருவன்.
"ஆம்! அதனாலே தான்!!!. இங்கே நம்மையும் சில வன அதிகாரிகளையும் தவிர மிக நெருங்கிய ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி நமக்கு 25 கிமி கிழே. அதான் இங்கே அமைதி நிலவுகிறது. மிருகங்களும் நிம்மதியாய் உலவுகின்றன." என்றார் நிதானமாய். "சரி! நீங்கள் ஏன் இங்கு வந்து இருக்கின்றீர்கள் என்று தெரியுமா?" தொடர்ந்தார் பேராசிரியர்.

"இயற்கையை படிக்க..." என்றான் ஒருவன்.
"ஹ்ம்ம்ம்... சரி."
"இயற்கையை ரசிக்க..." என்றான் இன்னொருவன்.
"ஹ்ம்ம்ம்... இதுவும் சரி தான்.!! ஆனால் எப்படி இயற்கையை படிப்பீர்கள்?... சொல்லுங்கள்" என்றார்.
இம்முறை கூட்டத்தினுள் இருந்து பதில் வரவில்லை.
அவரே தொடர்ந்தார்,
"இயற்கையை புத்தகத்தை கொண்டு படிக்க முடியாது. இயற்கையுடன் வாழ்வதன் மூலமே அதனை படிக்கமுடியும். அதற்காகத்தான் நாம் இங்கே வந்து இருக்கின்றோம். இதோ மேற்குத் தொடர்ச்சி மலை உங்களை அன்போடு அரவணைத்துக் கொண்டு நிற்கின்றது. இந்த மலையில் தான் நாம் நான்கு நாட்கள் தங்கப்போகிறோம். தனிமையில் இயற்கையோடு!. கற்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் காலமோ வழக்கம் போல சிறிதே கிடைத்து இருக்கின்றது. எனவே உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. கவனமாய் கவனியுங்கள்." என்று கூறி முடித்து அவர் அமர்ந்திருந்த பாறையில் இருந்து எழுந்தார்.

"அதோ அங்கே அடர்த்தியாய் மரங்கள் தெரிகின்றதே. அவை என்ன என்று தெரியுமா" என்றவாறே தொலைவில் இருந்த ஒரு இடத்தை நோக்கி கை காட்டினார்.
அனைவரும் அவர் காட்டிய திசையை நோக்கி திரும்பினோம். அங்கே வித்தியாசமாய் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. மற்ற மலைகளில் இருந்ததை விட சற்று அடர்த்தி அதிகமாய் அந்த இடத்தில் மரங்கள் இருந்தன. அவ்வளவு தான்.

"அவைகளும் காடுகள் தானே" என்றான் ஒருவன்.
"காடுகளா... அவைகள் பொக்கிசங்கள். நம் வாழ்வின் ஆதாரங்கள்... அவைகள் சோலைகள்...!"
"சோலைகளா! அப்படி என்றால்?" என்றேன்.
நின்றார்.
"காடுகள் என்றால் என்ன?"
"ஹ்ம். மரங்கள் அடர்த்தியாய் இருக்கும் பகுதி." என்றேன்.
"சரி... ஆனால் நாம் மலை ஏறி வந்த பொழுது இருந்த மரங்கள் அடர்த்தியாய் இல்லையே. அவைகளையும் நாம் காடு என்று தானே சொல்கின்றோம்." என்றார்
இம்முறை யாரிடம் இருந்தும் பதிலில்லை. எனவே தொடர்ந்தார்
"காடுகள் பல வகைப்படும். சோலைகள் அவற்றில் ஒரு வகை.சோலைகள் நம் நாட்டின் ஆதி வனங்கள். இயற்கை நம் நாட்டிற்க்கு வழங்கிய செல்வம். சோலைகளும் புல்வெளிகளுமே நம் நாட்டின் இயற்கைச் சொத்துகள்.அவற்றை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் இன்று வருத்தப்பட வேண்டி இருக்கின்றது" என்றார்
"வருத்தமா!!!" என்றேன் சற்று குழப்பமாய்
"ஆம்!!! வருத்தம் தான்...இன்று அவை அழிந்து கொண்டு இருக்கின்றன." என்றார்
"அழிந்து கொண்டா!... ஏன்?" என்றான் ஒருவன்.
"நீ ஒரு நாளைக்கு எத்தனை முறை தேநீர் குடிப்பாய்?"என்றார்    
"மூன்று முறை"
"அதுவும் ஒரு காரணம் தான். நீங்கள் பருகும் தேநீர்க்காக சோலைகள் தேயிலைத் தோட்டங்களாக உருமாறிக் கொண்டு இருக்கின்றன" என்றார்.
"சோலைகள் அழிகின்றது என்று சொல்லுகின்றீர்கள்... இதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமா" என்றேன்
"ம்ம்ம். ஆதாரங்கள் இல்லை என்றால் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் வெல்ல முடியுமா?" என்றார்.
"முடியாது"
"அதே போல தான்!! நம் வாழ்வின் ஆதாரங்கள் ஆன இந்த சோலைகள் இல்லை என்றால் நம் வாழ்வையும் வெல்ல முடியாது. நேரில் பார்த்தால் நீங்களே சோலையின் சிறப்பை அறிந்து கொள்வீர்கள். நாளை சோலையுள் செல்லலாம். இன்று நேரமாகி விட்டது. இருட்டுவதற்குள் நாம் நம் கூடாரங்களை அடைய வேண்டும். வன விலங்குகள் நடமாடும் பகுதி இது" என்று கூறி மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தார்.

நாங்களும் பின் தொடர்ந்து இறங்க ஆரம்பித்தோம்... மலையில் இருந்து காட்டை நோக்கி!!!

பயணிப்போம் .... சோலையினுள்...
மதி கெட்டான் சோலையினுள்!!!

7 கருத்துகள்:

//"நீ ஒரு நாளைக்கு எத்தனை முறை தேநீர் குடிப்பாய்?"என்றார்
"மூன்று முறை"
"அதுவும் ஒரு காரணம் தான். நீங்கள் பருகும் தேநீர்க்காக சோலைகள் தேயிலைத் தோட்டங்களாக உருமாறிக் கொண்டு இருக்கின்றன" என்றார்.
//
சமூகப் பொறுப்புள்ள ஒரு கட்டுரையாக இதை நீங்கள் கொண்டு செல்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துகள்

உங்கள் பதிவிற்கு நன்றி நரேன்!!!
தொடர்ந்து படியுங்கள்... பதியுங்கள்!!!

/ இயற்கையை புத்தகத்தை கொண்டு படிக்க முடியாது. இயற்கையுடன் வாழ்வதன் மூலமே அதனை படிக்கமுடியும். /

/காடுகளா... அவைகள் பொக்கிசங்கள். நம் வாழ்வின் ஆதாரங்கள்... அவைகள் சோலைகள்...!"/

-நல்ல கருத்துக்கள். சோலைகள் பற்றி அதிகம் எதிர்பார்த்தேன்.நல்ல வேலையாக அடுத்த பதிவில் வாக்களித்துள்ளீர்கள். நன்றி !

தங்கள் கருத்திற்கு நன்றி மாசிலன். சோலைகள் பற்றி நிச்சயம் விரிவாக பாப்போம்...

அருமையான பதிவு தோழரே, தொடர்ந்து எங்களை போன்ற வாசகர்களை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குங்கள் அதில் தான் உங்கள் பதிவின் வெற்றியிருக்கிறது.. வாழ்த்துகள்...

தோழரே தங்கள் பதிவிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி... நீங்களும் தொடர்ந்து எழுதுவீர் என்று ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றேன்...

is it Nagarajan, what a memory power and language do u have, great,

i proud that i was with you on the berijam trip, but i think only u can explain the trip better than anybody, all the best for further posts

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு