"இடி இடிக்கும் சத்தம் கேட்கவே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் எல்லாம் மீண்டும் ஒன்று கூடிக் கொண்டு இருந்தன. மழை மீண்டும் வரும் போல் இருந்தது. அது வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என்று விரைவாக நடக்க ஆரம்பித்தேன் ஊரை நோக்கி."
ஊரை நெருங்குவதற்குள் மழை மீண்டும் தூற ஆரம்பித்தது. மழையில் நனையாது இருக்க வழியில் இருந்த ஆலமரத்திற்கு அடியில் ஒதுங்கினேன். அது வரை ஒன்றாக வந்த சாலை இரண்டாக பிரியும் முக்கியமான இடத்தில் நின்று கொண்டு இருந்தது அந்த மரம். பிரிந்த வழிகளுள் ஒரு வழி அவளின் வீட்டை நோக்கியும், மற்றொன்று என் வீட்டை நோக்கியும் சென்று கொண்டு இருந்தன. சிறு வயதில் மரத்தில் செதுக்கி விளையாடிய பெயர்களை வளர்ந்த பின் பார்க்கும் போது அந்த சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் சற்று நெஞ்சத்தில் எட்டிப் பார்த்து விட்டு போகும் அல்லவா... அது போல தான் என்னுள் அப்பொழுது சில பழைய ஞாபகங்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன.
நானும் செதுக்கி இருந்தேன் அந்த ஆலமரத்தில்... பெயர்களை அல்ல... சில நிமிடங்களை!!! அவளிடம் நான் என் காதலை முதலில் சொன்ன நிமிடங்களை!!!
எப்படி கடந்தன என்று தெரியாது ஆனால் அவள் எனக்கு அறிமுகமாகி ஐந்து மாதங்கள் கடந்து இருந்தன. தங்கைக்கு தோழியாய் , அம்மாவிடம் சமத்து பெண்ணாய் , அப்பாவிற்கு விவரமான பெண்ணாய் என என் வீட்டில் உள்ள அனைவரிடமும் படிப்படியாய் நெருங்கி இருந்தாள், என்னைத் தவிர. வீட்டில் உள்ள அனைவரிடமும் வார்த்தைகளால் பேசிச் செல்கின்றவள் என்னிடம் மட்டும் இன்னும் புன்னகையால் பேசிக் கொண்டு இருந்தாள். நானோ மௌனத்தால்.
என் கல்லூரிக்கு சற்று முன்னால் இருக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் தான் அவள் அவளது பட்டப்படிப்பிற்கு சேர்ந்து இருந்தாள். கல்லூரி வழியாக எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரை மணி நேரத்திற்கு ஒரு வண்டி என்ற விகிதம் தான் இருக்கும். எனவே கல்லூரி முடிந்து நானும் அவளும் அநேகமாக ஒரே பேருந்தில் தான் செல்வோம். வீட்டில் தான் பேச முடியவில்லை சரி எப்படியாவது பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு செல்லும் முன் அவளிடம் பேசி விடலாம் என்றால் என்னுடைய என்ணத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்தார்கள் அவளின் தோழிகள். நாம் காதலிக்கும் பெண்களிடம் இந்த ஒரு பிரச்சனை தான். தனியாக வெளியே தென்படவே மாட்டார்கள். சுற்றியும் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சில நண்பர்களின் கூற்றுப் படி "மச்சான்! அவகிட்ட காதல சொல்றது கூட பிரச்சனை இல்லடா... ஆனா அவளை தனியாக பேசணும்னு கூப்பிடும் போது சுத்தி இருக்கிறவங்க எல்லாம் சிரிக்கிறாங்க டா. அங்க தான்டா பிரச்சனையே. சிரிக்கிறாங்க ஆனா எதுக்கு சிரிக்கிறாங்கனு தெரியலடா" காதலைச் சொல்வதை விட, அவளின் கூட்டத்தில் இருந்து தனியாக அவளை பேச அழைப்பது தான் சிரமமான காரியம் என்பது மட்டும் நன்றாக புரிந்து இருந்தது. எனவே அவள் எப்போது தனியாக இருப்பாள் என்று எதிர் பார்த்தே காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தேன்.
என் நேரமும் ஒரு நாள் வந்தது. எப்பொழுதும் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் தோழிகளுடன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்து விடுபவள் அன்று தோழிகளை முன்னே செல்லச் சொல்லி விட்டு தனியே ஊருக்குள் செல்லும் வழியின் அருகே நின்று கொண்டு இருந்தாள். ஒன்றும் புரியாமல் நானும் பேருந்தில் இருந்து இறங்கி ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். "பேசுடா முட்டாள்" என்று என்னுடைய நெஞ்சம் திட்டிக் கொண்டு இருந்த போதும் ஏனோ என்னுடைய கால்கள் அவளின் அருகே செல்லாது விலகிச் சென்று கொண்டு இருந்தன.
"ஒரு நிமிசம்..."
அழைத்து இருந்தாள். நெஞ்சம் துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியது. என்னைத் தான் அழைத்து இருக்கிறாள் என்பதை உறுதி செய்து கொள்ள சுற்றியும் பார்த்தேன். என்னை தவிர வேறு யாருமில்லை. என்னைத் தான் அழைத்து இருந்தாள்.
திரும்பினேன்.
"என்னையா கூப்பிட்டீங்க" என்றேன்.
"ஆமாம்... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் .... பேசலாமா" என்றாள் சற்று தயக்கத்துடன்.
இதயம் பற்றி எரிந்துக் கொண்டு இருந்தது அதைப் பொருட்படுத்தாது
"சொல்லுங்க... என்ன விஷயம்!" என்றேன்
"தப்பா எடுத்துக்காதீங்க... உங்களுக்கு கணக்குப் பாடம் கொஞ்சம் நல்லா வராதாமே?" என்றாள்.
இதயம் மீண்டும் ஒரு முறை துடிப்பதை நிறுத்தியது. இம்முறை அதிர்ச்சியால். நிச்சயம் இந்த கேள்வியை நான் எதிர் பார்த்து இருக்கவில்லை.
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே... யார் சொன்னாங்க?" என்றேன்.
"உங்க அம்மா தான் சொன்னாங்க...."
இது வரையிலும் படிப்பை பொருத்தவரை என் மானத்தை அப்பா தான் வாங்குவார். இப்போ அம்மாவும் களம் இறங்கி விட்டார்களோ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போதே தொடர்ந்தாள்
"இல்லை ... எனக்கு கணக்கு கொஞ்சம் நல்லா வரும்... இது உங்களுக்கு கடைசி வருசமாம்... இந்த ஒரு பாடத்துல தான் நீங்க ரெண்டு வருசமா தேர்ச்சி ஆகாம இருக்கீங்களாம்... அதுனால என்னை உங்களுக்கு கொஞ்சம் சொல்லித் தர முடியுமானு உங்க அம்மா கேட்டுக்கிட்டாங்க... நானும் சரினு சொல்லிட்டேன்... ஆனா உங்களுக்கு பிரச்சனை இல்லைனா மட்டும் தான்... வேண்டாம்ணு நினைச்சீங்கனா வேண்டாம்" என்று கூறி முடித்தாள்.
அவசரப்பட்டு அம்மாவை சந்தேகப்பட்டு விட்டாயேடா மடையா என்று உள்ளுக்குள் என்னைத் திட்டி விட்டு "சரி சொல்லு ... சரி சொல்லு" என்று உள்ளுக்குள் கூச்சல் இட்டுக் கொண்டு இருந்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியில் இயல்பாய்
"ஓ! அப்படியா... எனக்கு கணக்கு வராதுன்னு எல்லாம் ஒண்ணும் இல்லை... நல்லாத் தான் பண்ணுவேன். ஆனா எனக்கு எடுத்த வாத்தியார் சரி இல்லை.. அதான் இப்படி... கொஞ்ச கணக்குல மட்டும் சந்தேகங்கள் இருக்கு.. மற்றத எல்லாம் நான் கிட்டத்தட்டப் படிச்சிட்டேன்.." என்றேன்.
"ஓ!! அப்படினா நீங்களே படிச்சிடுவீங்கனு உங்க அம்மாக்கிட்ட சொல்லிடட்டுமா?" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நம்ம முட்டாள்னு நெனச்சிடக் கூடாதுணு கொஞ்சம் படிச்சி இருக்கேன்னு சொன்னா இவ நம்மள அறிவாளினுல நெனச்சிட்டா என்று உள்ளுக்குள் பதறியவாறு
"இல்ல இல்ல... நான் அப்படி சொல்ல வரல... கொஞ்சம் சந்தேகம் இருக்குனு சொன்னேன்ல... உங்களுக்கு வேற வேலை இல்லைனா... கொஞ்சம் சொல்லித் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்றேன்.
சிரித்தாள்.
"சரி அப்படி என்றாள் நாம் நாளையில் இருந்து படிப்பதை தொடங்குவோம். சாயங்காலம் 6:30 மணி உங்களுக்கு சரியா இருக்குமா" என்றாள்.
"எனக்கு பிரச்சனை இல்லை. எப்ப வைத்தாலும் எனக்கு சரி தான்" என்றேன்.
"அப்படினா சரி. நாளைக்கு சந்திப்போம். கவலைப்படாதீங்க.. இந்த தடவ நீங்க அந்த பாடத்துல தேர்ச்சி ஆயிடுவீங்க... அதுக்கு நான் பொறுப்பு" என்று புன்னகைத்தவாறே கிளம்ப ஆரம்பித்தாள்.
நானும் அவள் பின் அமைதியாய் நடக்க ஆரம்பித்தேன்.
ஏனோ இதயம் மட்டும் துள்ளிக் குதித்துக் கொண்டே அவளின் முன்னால் ஓடிக் கொண்டு இருந்தது.
அடுத்த நாளில் இருந்து வகுப்புகள் ஆரம்பித்தன. அவளோ கண்ணும் கருத்துமாய் எனக்கு கற்பித்துக் கொண்டு இருந்தாள். நானோ "என்ன... அவ சொல்லிக் குடுத்து நீ படிக்கப் போறீயா?... அப்படினா இந்த வருசமும் கணக்கு போச்சா சக்தி" என்ற என்னுடைய தங்கையின் வாக்கை உண்மையாக்குவதைப் போல் கணக்கை அல்லாது அவளைக் கற்றுக் கொண்டு இருந்தேன். அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக