"அவள் வகுப்பு எடுக்கும் நேரங்களில் அவளிடம் பேசியதை தவிர வேறு எதையும் நான் கற்றுக் கொள்ளவில்லை.இருந்தும் அந்த தடவை எழுதிய தேர்வு முடிவுகள் வந்த பொழுது நான் கணக்கில் தேர்ச்சி பெற்று இருந்தேன்."
தங்கைக்கோ ஆச்சரியம். அம்மாவிற்கோ சந்தோசம். வீட்டில் அவளை தலையில் தூக்கி வைத்து ஆடாத ஒரு குறை தான்.
அவளுக்கோ பெருமிதம்.
என்னை கண்டுக்கொள்ளத் தான் யாருமில்லை. அது சரி, யாருக்குத் தெரியும், அவள் வகுப்பு எடுத்த நேரங்களில் பாடத்தை கவனிக்காது விட்டுவிட்டு, ஐயோ நாம் தேர்ச்சி ஆகவில்லை என்றால் ஒருவேளை நாம் ஒழுங்காக சொல்லிக் குடுக்கவில்லையோ என்று அவள் மனம் வருந்துவாளே என்றெண்ணி தேர்விற்கு முன்னால் இரு தினங்கள் தூங்காமல் கண் விழித்துப் படித்தது.
தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள். வழக்கம் போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தேன். அவளும் அவள் தோழிகளோடு முன்னே சென்று கொண்டு இருந்தாள். திடீரென்று அவள் அவளது தோழிகளிடம் எதையோ சொல்லி விட்டு என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். என்ன என்று நான் யோசிக்க ஆரம்பிக்கும் முன்னால் என் அருகே வந்து இருந்தாள்.
"நன்றி...!" என்றாள்.
குழப்பம். நியாயப்படி நான் தான் அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவள் சொல்லி இருந்தாள்.
"எதுக்கு நன்றி நீங்க சொல்றீங்க.... நான் தான சொல்லணும்?.." என்றேன்
"இல்ல... நீங்க நான் சொல்லிக் கொடுக்கும் போது என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியும்... இருந்தும் நீங்க ரொம்ப கடினமா முயற்சிப் பண்ணி தேர்வுல தேர்ச்சியாகிட்டீங்க... உங்களால எனக்கு நல்ல பெயர்... அதான் நன்றி சொல்லலாம்னு பார்த்தேன்" என்றாள்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. "என்ன படீச்சீங்கனு எனக்குத் தெரியுமா" என்னை கவனித்துக் கொண்டா இருந்தாள் அவள்...
"ஐயோ அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. நீங்க நல்லா சொல்லித் தந்தீங்க... அதான் காரணம்" என்றேன்.
புன்னகைத்தாள்.
"உண்மையிலையேங்க... நீங்க நல்லாத் தான் சொல்லித் தந்தீங்க" என்றேன்
"தெரியும்!! இருந்தும் நன்றி... சரி நான் கிளம்புறேன். எனக்கு நேரமாச்சி" என்று கூறி புன்னகைத்துவிட்டு அவளின் தோழிகளை நோக்கி நகர ஆரம்பித்தாள்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அது வரையில் என்னிடம் அதிகம் பேசாத அவள் அன்றில் இருந்து என்னிடம் இயல்பாய் பேசுவதற்கு ஆரம்பித்து இருந்தாள்.
மெதுவாய் நகர்ந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த இடைவெளி குறையத் தொடங்கியது. அவளின் நட்பு வட்டாரத்தில் நானும் இணைந்து இருந்தேன். பல தோழிகள் மத்தியில் ஒரே தோழனாய் நான். சிறிது சிறிதாய் அந்த வட்டாரமும் சுருங்கத் தொடங்கியது. அவளின் தோழிகள் நடக்கும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நானும் அவளும் மெதுவாய் தனிமையில் நடந்து செல்லும் காலங்களும் வந்தன. என்னைப் பற்றி அவளும் அவளைப் பற்றி நானும் நன்கு அறிந்து கொண்ட காலம். சில நேரங்களில் பயணிக்கும் தொலைவு முழுவதும் மௌனமாய் கடந்து இருப்போம். மௌனமாய் காதலைத் தான் பேசி இருப்போம். ஆனால் வார்த்தைகளில் அதை மொழி பெயர்க்க வார்த்தைகள் தான் சிக்கவில்லை... இருவருக்கும்.
எனக்கோ என்னுடைய கல்லூரி படிப்பு முடிவிற்கு வரும் தருணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மேற்படிப்பிற்காக விண்ணப்பித்து இருந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்தும் சாதகமாக செய்தி வந்து இருந்தது. அநேகமாக படிப்பு முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு செல்வதைப் போல் நேரமும் அமைந்து இருந்தது. அனைத்தும் சரி. ஆனால் அவளிடம் என்னுடைய காதலை சொல்லாது செல்ல எனக்கு மனமில்லை. கடந்த நான்கு மாதங்களில் என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்ட அவளிடம் என் காதலைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கேற்ப ஒரு தருணமும் வந்தது.
அன்றும் அது ஒரு மழைக்காலம்!!!
இருவரும் வழக்கம் போல் கல்லூரி முடிந்து நடந்து வந்து கொண்டு இருக்கும் போது மழைத் தூற ஆரம்பித்தது. இன்னும் வீட்டிற்கு செல்ல தூரம் இருந்ததால் இருவரும் அங்கு ஒரு அரணாய் நின்று கொண்டு இருந்த ஆலமரத்தின் அடியில் ஒதுங்கினோம்.தனியாய் அவள். என் துணையாய் மழை. காதலை சொல்ல அருமையான சந்தர்ப்பம் தான். இருந்தும் வார்த்தைகள் பதுங்கின. இலையின் மேல் படர்ந்து இருக்கும் சிறிய நீர்த்துளியானது எப்படி மண் சேர இன்னும் தன்னுள் நீரை சேமித்து கொண்டு இருக்குமோ, அதே போல் நானும் என் காதலைச் சொல்ல என் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டு இருந்த வார்த்தைகளை சேர்த்துக் கொண்டு இருந்தேன். அவளோ என்னுடைய போராட்டங்களை சிறிதும் அறியாதவளாய் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள்.
"மலர்..." தைரியத்தை சேமித்துக் கொண்டு அவளை அழைத்தேன்.
"ம்ம்ம்... என்ன" என்றாள் மழையைப் பார்த்துக் கொண்டே
"நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்... "
"ம்ம்ம்"
"அது... எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... "
திரும்பி என்னை ஒரு கணம் பார்த்தாள். பின் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
"உனக்கும் என்னைப் பிடிச்சி இருக்கா... பிடிக்கலைனா இப்பவே பிடிக்கலைனு சொல்லிடாத... உனக்கு எப்போ பிடிக்குதோ அப்ப வந்து பிடிச்சி இருக்குனு சொல்லு... அது போதும்... என்ன சொல்ற" என்று முடித்தேன் ஒரு வழியாய்.
சிரித்தாள்.
"நான் கொஞ்சம் யோசிக்கணும்... யோசிச்சிட்டு சொல்றேன்" என்றாள் சாதாரணமாய்.
"நான் கொஞ்ச நாள்ல வெளிநாடு போக வேண்டி இருக்கும்... அதுக்குள்ள சொல்லுவியா?" என்றேன்
"தெரியலை... ஆனா சொல்லுவேன்... சரி நான் கிளம்புறேன். மழை நிக்கப் போகுது" என்று கூறி அவளின் வீட்டை நோக்கி கிளம்பினாள்.
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்பார்கள். நான் என் கடமையை செய்துவிட்டேன். ஆனாலும் பலனை எதிர்பார்த்தே நகர ஆரம்பித்தேன் என் வீட்டை நோக்கி.
அதற்கப்புறம் கழிந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதும் போலவே கழிந்தன. என்னுடைய கல்லூரி படிப்பு முடிந்து நான் வெளிநாட்டிற்க்கு செல்லும் அந்த நாளும் வந்தது. ஆனால் அவளுடைய பதில் மட்டும் இன்னும் என்னை காக்க வைத்துக் கொண்டு இருந்தது. ஒரு விதமான சோகத்தில் என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருந்தேன்.
"ஏன்டா உன்ன நாங்களா வெளிநாட்டுக்கு படிக்க போனு சொன்னோம்... நீயா தான ஏதோ உதவித்தொகை கிடச்சி இருக்கு ... படிச்சா நல்லதுனு சொன்ன... அப்புறம் கிளம்புற நேரம் இப்படி முகத்தை தூக்கி வச்சி இருந்தா நல்லா வா இருக்கு" என்றவாறு என் பொருட்களை எடுத்து வைக்க உதவிக் கொண்டு இருந்தார் அம்மா.
"பிரியா...!"
வாசலின் அவளின் குரல்.
"யாரு மலரா... பிரியா அவங்க அப்பாவோட இவனுக்கு வண்டி பிடிக்கிறததுக்கு போய் இருக்காமா... நீ உள்ள வா" என்று பதில் அளித்தார் அம்மா.
"ஓ அப்படியா அத்தை... சும்மா தான் வந்தேன்... வீட்டுல பலகாரம் பண்ணினோம்.. அதத் தான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்..." என்றாள்
"நல்ல நேரத்தில தான் வந்து இருக்க... இவன் இன்னிக்கு ஊருக்கு கிளம்புறான் ... சாப்பிடறதுக்கு அதிகமா எதையுமே கொடுத்து விடலையேனு நெனசிக்கிட்டு இருந்தேன்... ஆமாம்... வீட்ல எதாவது வீஷேசமா?"
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல அத்தை. சும்மா பண்ணனும்னு தோணிச்சி அதான் பண்ணேன்" என்றாள் ஒரு ஒரப்பார்வையை என் மீது படர விட்டவாரே.
"சரி அத்தை... அப்படினா நான் கிளம்புறேன். நீங்க வேலையா இருப்பீங்க.. நான் பிறகு வர்றேன்" என்றவாறு திரும்பிக் கிளம்ப ஆரம்பித்தாள்.
"கொஞ்சம் நில்லுமா ... இது என்ன தலைக்கு பூ வைக்காம வந்து இருக்க போல இருக்கு... ஒரே நிமிசம் இரு ... இதோ வந்துடறேன்" என்று கூறி அவளை நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றார்.
இது வரை இந்த தருணத்திற்காக காத்து இருந்தவள் போல் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆனால் காதலிக்கின்றாளா இல்லையா என்பதை மட்டும் சொல்ல மாட்டாள் என்று சலித்துக் கொண்டு என்னுடைய பொருட்களை சரி பார்க்க ஆரம்பிப்பது போல் நடிக்க ஆரம்பித்தேன்.
எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டு இருக்கும் முகம் சற்று வாடி தான் போய் விட்டது.
சரி போதும் என முடிவு செய்து விட்டு, அவளுக்காக வெளியில் காத்து இருப்பதாக சைகை காட்டி விட்டு "அம்மா ... நான் என்னுடைய நண்பன் குமார பார்த்துட்டு வந்துடுறேன்.. சீக்கிரம் வந்துருவேன்" என்று கூறி வெளியில் கிளம்பினேன்.
வீட்டுக்கு வெளியில் யாரோ சூடிய பின் அவசரம் அவசரமாக கழட்டி எறிந்து இருந்த மல்லிகை பூக்கள் என் வீட்டு ரோஜா செடியை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.
ரோஜாவின் மேல் மல்லிகையா... நிச்சயம் அவளாகத்தான் இருக்கும்!
திரும்பி வீட்டினுள் பார்த்தேன். என் அன்னை அவளுக்கு பூவை சூடிக் கொண்டு இருந்தார்கள். அவளோ வெட்கத்துடன் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றாள்.
சிறிது புன்னகையுடன் நான் அவளிடம் காதலை சொன்ன அந்த ஆல மரத்தின் அடியில் அவளுக்காக காத்து இருக்க சென்றேன். என்னை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. 5 நிமிடத்தில் வந்து சேர்ந்து இருந்தாள். ஒரு வேலை இவ்வளவு நாட்கள் காக்க வைத்ததே போதும் என எண்ணி விட்டாள் போல...
"நான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறேன்..." தொடங்கினேன்.
"தெரியும்..."
"இன்னும் ஒரு வருசத்துக்கு வர மாட்டேன்.."
"ம்ம்ம்.."
"இப்பயாவது உன்னுடைய முடிவ நான் தெரிஞ்சிக்கலாமா...?" என்றேன்.
சிறிது நேரம் அவள் பதில் எதுவும் பேசவில்லை... அப்புறம் ஆரம்பித்தாள்
"வெளிநாடு ரொம்ப அழகா இருக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்... நம்ம ஊரு மாதிரி எல்லாம் அங்க இருக்காதாம்..."
"நான் என்ன கேட்டேன்... நீ என்ன..." என்று நான் ஆரம்பித்து முடிப்பதற்குள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
"அத எல்லாம் பார்த்து அங்கேயே ரொம்ப நாள் இருந்துராதீங்க... இங்க நிறைய பேரு காத்துக்கிட்டு இருக்கோம்..." என்றாள்.
"இன்னும் நான்... " என்று நான் ஆரம்பிப்பதற்குள்... மெதுவாய் என் கிட்டே வந்து
"காத்துக்கிட்டு இருப்பேன் ... ஒரு வருசம் தான் சரியா... வந்துடனும்" என்று கூறி விட்டு அவளின் வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
புன்னகைத்தேன்..
"கண்டிப்பா... வந்துடுவேன்..." என்று மனதுக்குள் கூறிவிட்டு நானும் என் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். " ஏன்டா சிரிச்சிகிட்டே இருக்க" என்று வீட்டில் எல்லோரும் கேட்டும் கூட ஏனோ இதயம் சிரிப்பதை நிறுத்த மாட்டேன் என்றது.
அன்று தான் நான் அவளை கடைசியாக கண்டது. இதோ அதற்கு அப்புறம் இன்று தான் சொந்த ஊருக்கே திரும்ப வருகின்றேன். அன்று அவள் புன்னகையோடு ஓடி மறைந்தது என் கண்ணுக்குள் இன்றும் அப்படியே நிற்கின்றது. நாளுக்கு நாள் ஏதோ ஒரு மாற்றத்தால் மாறிக் கொண்டு இருக்கும் நகரத்திற்கு மாறாய் மாற்றம் ஏதும் இன்றி நான் செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் இருந்தது என் ஊர். அந்த மரம். நான் கொடுத்த வாக்கு. எல்லாம் அப்படியே தான் இருந்தன.
ஒரு வருடம் என்று நான் கொடுத்த வாக்கின் படி நான் வந்து விட்டேன்.
காத்துஇருப்பேன் என்று சொன்ன என்னவள் எங்கே?...
வழி எங்கும் தேடியபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
4 கருத்துகள்:
கடைசியில ஒரு டச்... சூப்பட். .காத்திருப்பது தான் காதல் என்றாலும் காத்திருப்பு மட்டுமே அதன் அடையாளம் இல்லை.
azhagana kathai, thelivana variyamaippu... vazhthukkal..
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சரவணன் அண்ணா... உண்மைதான்... காதலில் காத்து இருப்பது சுகம் தான்... ஆனால் காத்து இருப்பதே காதல் என்றால் அது ரணம் தான்... தங்கள் பகிர்விற்கு நன்றி!!!
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிவேதா!!!...
கருத்துரையிடுக