பெரியவர்கள் குழந்தைகளின் உலகினைப் புரிந்து கொள்வதில்லை...ஆம்...!!! நிச்சயம் அவர்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. எளிமையானதாக இருக்கக்கூடிய இந்த வாழ்வினைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதனைச் சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக அவர்கள் மாற்றி வைத்திருக்கின்றார்கள். அதனை மிகவும் தெளிவாக உணர்த்துகின்ற மற்றொரு புத்தகம் தான், பிரென்ச் மொழியில் 'அந்துவான் து செயிந் தெகுபெறி' அவர்கள் எழுதி வெளிவந்த இந்த 'குட்டி இளவரசன்'.

தன்னுடைய விமானம் பழுதடைந்த காரணத்தினால் சகாரா பாலைவனத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் விமானி ஒருவர், விண்கல் ஒன்றிலிருந்து தற்செயலாய் பூமிக்கு வந்திருக்கும் சிறுவன் ஒருவனை அந்த பாலைவனத்திலே காண்பதிலிருந்து இந்த கதை தொடங்குகின்றது. மக்கள் நடமாட்டம் ஏதுமற்ற அந்தப் பாலைவனத்தில் சிறுவனொருவன் தனியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடையும் அந்த விமானி அந்தச் சிறுவனுடன் பேசத் துவங்க, அந்தக் குட்டி இளவரசனின் (அந்தச் சிறுவனை அந்த விமானி அவ்வாறு தான் அழைக்கின்றார்) பார்வையிலிருந்து 'இந்த உலகம், மக்களின் இயல்புகள், மனித உறவுகள்' என்பன போன்றவற்றை நமக்கு விவரிக்கத் துவங்குகின்றது அவர்களது அந்த உரையாடல்.

மிகவும் சிறியதாக இருக்கக்கூடிய ஒரு விண்கல் தான் அந்த குட்டி இளவரசனின் கிரகமாகும். அந்த விண்கல்லில் தனியாக அவன் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் பொழுது, தற்செயலாய் அங்கே ஒரு ரோஜாச் செடியானது மலர்ந்து அதிலிருந்து ஒரு ரோஜாவும் பூக்கின்றது. துணைக்கு ஒருவருமில்லாத நிலையில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த அவனுக்கு அந்த ரோஜாவானது நல்லதொரு துணையாக இருக்கின்றது. அவன் அந்த ரோஜாவை நன்கு கவனிக்கிறான்...அது கேட்கும் அனைத்தையும் அவன் செய்து தருகின்றான்...அதனை அவன் நேசிக்கின்றான்...அந்த ரோஜாவும் அவனை நேசிக்கின்றது. ஆனால் காலங்கள் நகர நகர 'அந்த ரோஜாவானது தன்னிடமிருந்து அதிகம் எதிர்பார்கின்றதோ...தன்னை அது பயன்படுத்திக் கொள்ளுகின்றதோ' என்ற ஒரு சந்தேக எண்ணம் அவனது மனதினில் குடியேற, அவன் அந்த ரோஜாவை விட்டுவிட்டு, தன்னைத் தானே அறிந்து கொள்வதற்காக அந்த விண்கல்லில் இருந்து தனியே வெளியே கிளம்புகின்றான்.

ஒவ்வொரு விண்கல்லாய் அவன் பயணம் செய்கின்றான். ஒவ்வொரு விண்கல்லிலும் ஒரேயொரு நபர் மட்டுமே தான் வசித்து வந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறு அந்த பல்வேறு விண்கற்களில் வசித்து வந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களை அவன் காணுகின்றான். அவர்கள் அனைவரும் வளர்ந்தவர்களாய் இருந்த போதிலும் அவர்களின் செய்கைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

முதல் விண்கல்லில் இருந்த மனிதன் தன்னைத்தானே அரசன் என்று எண்ணிக் கொண்டு அவனது அதிகாரத்துக்கு அனைத்தும் கட்டுப்பட வேண்டுமென்கின்றான். குட்டி இளவரசனுக்கு அவனது அந்த செய்கை புரியவில்லை - அந்த விண்கல்லில் அந்த மனிதன் மட்டுமே தான் இருக்கின்றான்...மேலும் அவனுக்கு இயற்கையின் மீது எந்தொரு அதிகாரமும் கிடையாது...அந்நிலையில் அவன் யார் மீது அதிகாரம் செலுத்த விரும்புகின்றான்? அவனுடைய அதிகாரத்திற்கு யார் கட்டுப்பட வேண்டும் என்று அவன் எண்ணுகிறான் என்பது அந்த இளவரசனுக்கு புரியவில்லை. வளர்ந்த அம்மனிதனின் அதிகார வெறியினை இளவரசனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவன் அங்கிருந்து கிளம்புகின்றான்.

அவ்வாறே அவன் ஒவ்வொரு விண்கல்லாக பயணிக்க, 'புகழுக்கு மயங்கி இருக்கின்ற மனிதன்', 'அனைத்தையும் வியாபார நோக்கில் பார்க்கின்ற மனிதன்' என்று அர்த்தமேயில்லாத செயல்களை பெருமையுடன் செய்து கொண்டிருக்கும் மனிதர்களை காண்கின்றான். அவர்களது செயல்கள் அனைத்தும் அவனுக்கு அர்த்தமற்றதாகவே தோன்றுகின்றது. அவர்கள் எதனைச் சாதிக்கப் போகின்றார்கள் என்பது அவனுக்கு புரியாததால் அவன் அங்கிருந்து கிளம்பி அவனது பயணத்தைக் தொடருகின்றான். இறுதியில் அவன் பூமிக்கு வந்து சேருகின்றான்.

பிரமாண்டமான பூமி அவனுக்கு புதிதாய் இருக்கின்றது. அங்கே அவன் முதலில் பாம்பு ஒன்றினைக் காணுகின்றான். அதனுடன் அவன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது 'ஒருவேளை நீ உன்னுடைய கிரகத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்தாயானால், என்னால் உனக்கு உதவ முடியும்." என்றே அந்த பாம்பானது அவனிடம் கூறுகின்றது.

பின்னர் அவன் பரந்து விரிந்திருக்கும் அந்த இடத்தினைச் சுற்றிப் பார்க்கும் பொழுது சில ரோஜாச் செடிகளையும் அதில் வீற்றிருக்கும் ரோஜாக்களையும் கண்டு மனவருத்தமடைகின்றான். அவனுக்கு அவனுடைய ரோஜாவின் நினைவு வந்து விடுகின்றது. மேலும், அவன் அது வரை இந்த உலகினில் தன்னுடைய ரோஜாவைத் தவிர்த்து வேறு ரோஜாக்கள் இருக்காது என்றே எண்ணியிருந்தான், ஆனால் இப்பொழுது அவன் அவனுடைய ரோஜாவைப் போன்றே பல்வேறு ரோஜாக்களைக் கண்ட பொழுது 'என்னுடைய ரோஜா ஒன்றும் சிறப்பானதல்ல...அது ஆயிரக்கணக்கான ரோஜாக்களுள் ஒன்று...அவ்வளவே...நான் தான் தவறாக அது சிறப்பானது என்று எண்ணியிருக்கிறேன்' என்றே தனக்குள் எண்ணி வருந்திக் கொள்கின்றான். தன்னுடைய ரோஜாவானது சாதாரண ஒன்று தான் அது சிறப்பானதொன்றும் இல்லை என்ற எண்ணம் அவனை வருத்துகின்றது.

அவ்வாறு வருத்தத்துடன் அவன் அலைந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நரியினைக் காணுகின்றான். அந்த நரியுடன் அவன் நட்பு கொள்கின்றான். பின்னர் அந்த நரியானது சொன்னதன் காரணமாகவே மீண்டும் தன்னுடைய விண்கல்லிற்கு செல்ல அவன் தயாராகின்றான். எவ்வாறு தன்னுடைய விண்கல்லிற்கு திரும்புவது என்று தெரியாது அலைந்து கொண்டிருக்கும் பொழுது தான் அவன் அந்த விமானியை சந்திக்கின்றான். தன்னுடைய கதையையும் அவரிடம் கூறுகின்றான். நிற்க.

இது நிச்சயமாக குழந்தைகளுக்கான கதையல்ல...இது பெரியவர்களுக்கான கதை...அதுவும் குறிப்பாக சிக்கல்களால் சூழப்பட்டு இருக்கின்ற உலகினில் 'ஏன் இப்படி இருக்கின்றது....? சிறு வயதில் வாழ்க்கை எளிமையானதாகவும் அற்புதமானதாகவும் தோன்றியிருந்ததே...ஆனால் எவ்வாறு திடீரென்று அர்த்தமற்ற ஒன்றாய், போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த ஒன்றாய் வாழ்க்கை மாறி இருக்கின்றது? ஏன் இப்படி இருக்கின்றது?' என்று தங்களுக்குள்ளேயே கேள்விகள் கேட்டுக் கொண்டு, வேறு வழியில்லாமல் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கான கதை.

புகழாசை, பொருளாசை, அதிகார போதை என்பன போன்றவற்றால் நாம் எவ்வாறு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கக்கூடியதாகிய இந்த வாழ்வினை அர்த்தமில்லாத ஒரு ஒட்டப்பந்தயமாக மாற்றி வைத்திருக்கின்றோம் என்பதனை அந்த பல்வேறு விண்கற்களில் வாழுகின்ற மனிதர்களின் மூலமாக கூறுகின்ற இந்த கதை, அன்பு, நட்பு, காதல், மரணம் என்பவற்றை நரி, ரோஜா, பாம்பு ஆகியவற்றின் மூலமாக அருமையாக விளக்கியிருக்கின்றது - ஒரு கவிதையைப் போல...அழகாய்!!! உதாரணமாக,

"என்னுடைய ரோஜா தனித்தன்மையானது அல்ல...ஆயிரம் ரோஜாக்களுள் அது ஒரு ரோஜா...அவ்வளவே!!!" என்றே குட்டி இளவரசன் நரியிடம் வருந்துகின்றான்.

"ஏன் அவ்வாறு கூறுகின்றாய்? அது உன்னுடைய ரோஜா...அந்த ஒரு காரணத்திற்காகவே அது உனக்கு தனித்தன்மையாக இருக்கின்றது. மற்ற ரோஜாக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்...அவை உன்னுடைய ரோஜா அல்ல...நீ உன்னுடைய ரோஜாவுக்கு உன்னுடைய நேரத்தையும் அக்கறையையும் தந்திருக்கின்றாய்...அதுவே உன்னுடைய ரோஜாவை உனக்கு சிறப்பானதொன்றாக ஆக்குகின்றது." என்றே நரி அவனுக்கு பதிலளிக்கின்றது.

அவனும் காதலைப் புரிந்து கொள்கின்றான். இப்படி அழகான வாழ்வியல் தத்துவங்களை எளிமையாக விளக்கிக் கொண்டு செல்கின்றது இந்த நூல்.

ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக இருந்து தான் வளர்ந்து வந்திருக்கிறான். அர்த்தமற்ற விஷயங்களைக் கண்டு 'இது ஏன் இவ்வாறு இருக்கின்றது?' என்று சிந்தித்ததில் தொடங்கி 'இது இவ்வாறு தான் இருக்க வேண்டுமோ?' என்ற சிந்தனையாக மாறி 'ஆம்...!!! இவ்வாறு தான் இருக்க வேண்டும் போலிருக்கின்றது" என்று ஏற்றுக் கொள்வதிலேயே தான் அந்த வளர்ச்சியானது அடங்கியிருக்கின்றது. பெரும்பாலான பெரியோர் 'ஆம்...உலகம் இப்படித் தான் இருக்க முடியும், வேறு எப்படியும் அதனால் இயங்க முடியாது' என்று ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது 'ஏன் இது இவ்வாறு இருக்கின்றது...எளிமையானதாகவும் இனிமையானதாகவும் இருக்க வேண்டிய வாழ்வு ஏன் இவ்வாறு இருக்கின்றது?' என்ற கேள்வியை மீண்டும் அவர்களுள் இருந்து எழுப்புகின்ற அந்த சிறுவனாகவே குட்டி இளவரசன் இருக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் ஒரு காலத்தில் அந்த குட்டி இளவரசனாகவே இருந்திருக்கின்றோம். ஆனால் காலத்தில் அந்த விடயத்தினை நாம் மறந்து விட்டோம். நாம் மறந்து விட்டதை மீண்டும் இந்த குட்டி இளவரசன் நமக்கு நினைவூட்டுகின்றான். வாழ்வினை எவ்வாறு காண வேண்டும் என்று மறந்துவிட்ட நமக்கு வாழ்வினை எவ்வாறு காண வேண்டும் என்றே அவன் கூறுகின்றான்:

"வாழ்விற்கு முக்கியமான அனைத்தும் கண்களுக்குப் புலப்படாதவைகளாகவே இருக்கின்றன. இதயத்தின் மூலமாகவே தான் ஒருவரால் சரியானதைக் காண முடியும்"

அவனுக்கு நாம் செவி சாய்த்தாகத்தான் வேண்டியிருக்கின்றது. காரணம் அவனும் நாமும் வேறல்ல.

பி.கு:

இந்த புத்தகம் முழுதாகவும் தமிழில் வந்திருக்கின்றது, சுருக்க வடிவாகவும் தமிழில் வெளி வந்து இருக்கின்றது.

1 கருத்துகள்:

அருமையான அறிமுகம்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு