யூதர்கள் எதற்காக இயேசுவை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றே நாம்
கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது
நாம் ஒரு நிகழ்வினைக் காண வேண்டியிருக்கின்றது.
முதல் நிகழ்வு: இயேசுவை கொல்ல வேண்டும் என்று தலைமை ஆசாரியன் காய்பா முடிவெடுத்தல்.
'இயேசுவை கொலை செய்ய வேண்டும், அது தான் யூதர்களின் தேசத்திற்கும் யூதர்களின் கோவிலுக்கும் நல்லதொன்றாக இருக்கும். மாறாக அவ்வாறு செய்யாது போனால் யூதர்கள் சிதறுண்டு போய் விடுவார்கள், ரோமர்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வார்கள். எனவே ஒரு தேசத்திற்காக ஒரு மனிதனை கொலை செய்வது என்பது தவறில்லை' என்று யூதர்களின் தலைமை ஆசாரியனாக இருந்த காய்பா என்பவன் கூறிய கருத்தின் அடிப்படையிலேயே தான் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்ற முடிவினை யூத மதகுருக்கள் அனைவரும் ஏற்கின்றனர். இதனை நாம் விவிலியத்தில் இருந்து (யோவான் 11) அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆனால் இந்த கூற்று சற்று விசித்திரமானதாக அல்லவா இருக்கின்றது. ஏனென்றால், அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவித்து தங்களது இசுரவேல் இராஜ்யத்தை மீட்டுத் தருவதற்காக ஒரு மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக் கொண்டிருந்த அந்த 'மீட்பராகவே தான்' இயேசுவை இன்று கிருத்துவ சமயமானது சித்தரித்துக் கொண்டிருக்கின்றது. அந்த கோட்பாட்டினை அடிப்படையாக வைத்தே தான் இன்றைக்கு ஒட்டுமொத்த கிருத்துவ சமயமே இசுரவேல் நாட்டினை கண்மூடித்தனமாக ஆதரித்து கொண்டிருக்கின்றது. சரி இருக்கட்டும், அது வேற கதை...அதனை பின்னர் காணலாம். இப்பொழுது நாம் காண வேண்டியது என்னவென்றால் 'யூத தேசம் எதிர்பார்த்திருந்த மீட்பராக இன்றைக்கு கிருத்துவ சமயமானது இயேசுவை சித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இயேசுவை உயிரோடு விட்டால் யூத தேசமே சிதைந்து விடும் என்று கூறியே இயேசுவை கொலை செய்வதற்காக அன்றைக்கு யூதர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்' - இந்த முரண்பாட்டினையே தான் நாம் இப்பொழுது காண வேண்டும்.
இயேசுதான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் என்றால், எதற்காக யூதர்களே அவரைக் கொல்ல திட்டமிட வேண்டும்?
இயேசு வாழ்ந்திருந்த அந்த காலக்கட்டத்தில் யூதர்கள் ரோமர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். யூத தேசமானது ரோமப் பேரரசின் கீழ் இயங்கி வந்து கொண்டிருந்தது. அந்நிலையில் யூதர்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது என்றால், இறைவன் அவர்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு அவர்களது அந்த இராஜ்யத்தை அவர்களுக்கே தருவார் - அதற்காக ஒரு மீட்பர் வருவார் என்பதாகவே இருந்து வந்தது. ஒரு அரசியல் தலைவரை, ரோமர்களிடமிருந்து தங்களது தேசத்தை விடுவிக்கும் ஒரு அரசரை அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். தங்களது சமய நூல்களில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்யுமாறும், தங்களது நம்பிக்கைகளை மெய்ப்பிக்குமாறும் ஒருவர் வருவார் என்றே அவர்கள் காத்திருந்தனர்.
சிக்கல் அங்கு தான் இருந்தது. இயேசு அவர்கள் எதிர்பார்த்தபடி இருந்திருக்கவில்லை.
- யூதர்கள் ஓய்வு நாளான சபாத்தை அனுசரிக்க வேண்டும் என்றனர் - இயேசு ஓய்வு நாள் என்று எதுவும் இல்லை என்றார்.
- யூதர்கள் விரதமிருப்பது முக்கியம் என்றனர் - இயேசு அதையும் முக்கியமில்லை என்று கூறினார்.
- இறைவன் தங்களுக்கு இட்ட கட்டளையின் படி விருத்தசேதனம் அவசியம் என்றே யூதர்கள் கூறினர் - இயேசு விருத்தசேதனத்தை தேவையற்றது என்றார் (இன்றைக்கு கிருத்துவர்கள் விருத்தசேதனம் செய்வது இல்லை)
- யூதர்கள் சமாரியர்களை எதிரிகளாக கருதினர் - இயேசு சமாரியர்களுடன் சமமாக சகோதரராக பழகினார். அவ்வாறே அவர் மற்றவர்களையும் பழகச் சொன்னார்.
- எருசலேமில் இருக்கின்ற கோவிலில் தான் இறைவன் வீற்று இருக்கின்றார் என்று யூதர்கள் கூறினர் - இயேசு அதனை மறுத்தார். இறைவன் மனிதர்களின் மனதில் இருக்கின்றார் என்றே அவர் கூறினார்.
- மோசேவுக்கு கடவுள் தந்த கட்டளைகள் என்று யூதர்கள் பின்பற்றிக் கொண்டிருந்த கட்டளைகளையும் அவர் மறுத்தார்.
- அனைத்திற்கும் மேலாக, யூதர்கள் தாங்கள் மட்டுமே தான் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் தங்களின் இனம் மட்டுமே தான் சிறந்த இனம் என்றும் கருதி வந்தனர் - இயேசு அதனை முற்றிலுமாக நிராகரித்தார். இறைவன் மக்கள் அனைவரையும் சமமாகக் காண்கின்றார் என்றும் இறைவனின் பார்வையில் பல்வேறு தேசங்களோ அல்லது பல்வேறு இனங்களோ கிடையாது, அனைத்தும் ஒன்றே என்றே அவர் கூறினார்.
இவை தான் சிக்கலுக்கு வழிவகுத்தன. தாங்கள் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ, இயேசு அவ்வாறு இருந்திருக்கவில்லை. முற்றிலும் மாறாக இருந்தார். ஆனாலும் யூத மக்களுள் சிலர் இயேசு செய்த அதிசயங்கள்/போதனைகளின் காரணமாக அவர்தான் தங்களின் மீட்பராக இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொண்டிருந்தனர். அது தான் யூத சமய மதகுருக்களுக்கு சிக்கலாக இருந்தது.
அவர்களின் பார்வையின்படி இயேசு அவர்கள் எதிர்பார்த்திருந்த மீட்பர் அல்ல. அவர் வேறு யாரோ ஒருவர்...ஏதோ சில நூல்களைப் படித்துவிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருப்பவர்...அவர் அதிசயம் பண்ணுகின்றார் என்று மக்கள் பலர் கூறுகின்றனர் - ஏதோ வித்தைகளின் மூலமாக அவர் அவ்வாறு செய்யக் கூடுமாயிருக்கும் அல்லது அவை தற்செயலான நிகழ்வுகளாக இருக்கும், மக்கள் அதனை அறியாமல் அவர் அதிசயங்கள் செய்கின்றார் என்று கூறக் கூடுமாயிருக்கும். ஆனால் நிச்சயமாக அவர் நாம் எதிர்பார்த்திருக்கும் மீட்பர் இல்லை. நம்முடைய நம்பிக்கைகளுக்கும் அவருடைய கூற்றுகளுக்கும் முரண்பாடுகள் அநேகம் இருக்கின்றன. நிச்சயமாக அவர் நாம் எதிர்பார்க்கும் மீட்பர் அல்ல - இது தான் பெரும்பாலான யூத சமய மத குருக்களின் நம்பிக்கையாக இருந்தது.
அதனால் தான் அவர்கள் மக்களை இயேசுவிடமிருந்து பிரிப்பதற்கும், இயேசுவின் கூற்றுகள் தவறானவை என்று நிரூபணம் செய்வதற்கும், இயேசுவை சிக்கலில் சிக்க வைப்பதற்கும் அநேக முயற்சிகள் எடுக்கின்றனர். அந்த முயற்சிகளை நம்மால் விவிலியத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது. அவர்களின் நோக்கம் ஒன்று தான் - இயேசு யூதர்களின் மீட்பர் அல்ல...இது நிச்சயம். எனவே மக்கள் அவரைப் பின்பற்றிச் சென்று பிரிந்து விடாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் அவர்களது குறிக்கோள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் தொடக்கத்தில் எண்ணியிருக்கவில்லை. அவர் மீட்பர் அல்ல என்றும் அவருடைய கூற்றுகள் தவறானவை என்றும் மக்களை நம்ப வைத்து, மக்களை அவரிடமிருந்து விலக வைக்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோளாக இருந்தது. அவர் செய்த அதிசயங்களைக் குறித்த செய்திகளை எல்லாம் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் திடீரென்று அவரைக் கொலை செய்வது தான் யூத இனத்தையும் யூத மக்களையும் காப்பாற்றக் கூடிய ஒரே வழி என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். அவர்களது இந்த திடீர் முடிவிற்கான காரணத்தை நாம் காண வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அந்த முடிவினை எடுத்த சுழலினை நாம் காண வேண்டியிருக்கின்றது.
இயேசு லாசருவை மரணத்தில் இருந்து உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னரே தான் யூத சமய மதகுருக்கள் அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி அதில் 'வேறு வழியில்லை...இயேசுவை கொன்றாகத் தான் வேண்டியிருக்கின்றது' என்று முடிவெடுக்கின்றார்கள். இங்கே ஒரு கேள்வி கேள்வி எழுகின்றது...'எதற்காக இயேசு லாசருவை உயிர்ப்பித்த நிகழ்விற்கு பின்னர் அவர்கள் இம்முடிவினை எடுக்கின்றனர்? இயேசு இதற்கு முன்பாக இறந்து போயிருந்த ஒரு சிறுமியை உயிர்த்தெழ செய்தாரே, அப்பொழுது அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யாமல் எதற்காக லாசருவை உயிர்த்தெழ செய்த பொழுது அம்முடிவினை எடுக்கின்றனர்?
இதற்கு விடையாய் நாம் கண்டோம் என்றால் 'இயேசு அந்த சிறுமியை உயிர்த்தெழ வைத்தார் என்பதை பெருவாரியான யூத மதகுருக்கள் நம்பியிருக்கவில்லை' என்றே தான் வருகின்றது. 'நோய்வாய்ப்பட்டிருந்த
சிறுமி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது மயங்கி இருந்திருக்கலாம், அதனை அறியாத மக்கள் அவசரப்பட்டு அவள் இறந்து விட்டாள் என்று முடிவு செய்திருக்கலாம். பின்னர் இயேசு அங்கே சென்றிருந்த பொழுது அவள் விழித்தெழுந்து இருக்கலாம் - அதனை அறியாது அம்மக்கள் இயேசு சிறுமியை மரணத்திலிருந்து உயிர்த்தெழ வைத்து விட்டார் என்று கூறி இருப்பர்' என்பதே தான் அவர்களது எண்ணமாக இருந்தது. ஆகையால் அதனை அவர்கள் ஒரு பெரிய நிகழ்வாக கருதியிருக்கவில்லை.
ஆனால் லாசருவின் கதையோ முற்றிலும் வேறானது. அவன்
இறந்து நான்கு நாட்களானதற்குப் பின்னர் தான்
அவனை அவனது கல்லறையிலிருந்து உயிருடன் இயேசு எழுப்புகின்றார். இறந்து போனவன் என்று ஊரால் அடக்கம் செய்யப்பட்டவன், நான்கு நாட்களுக்கு பின்னர் கல்லறையிலிருந்து உயிருடன் வருவதை தற்செயலான ஒரு செயல் என்று எவராலும் கூற முடியாது.
அத்தகைய அதிசயங்கள் மக்களின் கவனத்தினை
நிச்சயம் ஈர்க்கும் என்பதனை அந்த மதகுருக்கள் அறிந்திருந்தனர். எனவே தான் இயேசு எப்பொழுது லாசருவை உயிர்த்தெழ செய்த நிகழ்வு அவர்களது கவனத்திற்கு வந்ததோ, அப்பொழுது அவர்கள் உடனடியாக கூட்டத்தினைக்
கூட்டி இயேசுவை கொலை செய்ய வேண்டுமென்று முடிவு செய்கின்றார்கள்.
ஆனால் இங்கே முக்கியமான மற்றொரு விடயம் என்னவென்றால், இறந்து போன லாசருவை தான் உயிருடன்
எழுப்பினால், நிச்சயமாக யூத மதகுருக்கள் தன்னை கொலை செய்வதற்கு வழி தேட ஆரம்பிப்பார்கள் என்று
இயேசுவும் அறிந்துதான் இருந்தார். அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும்
என்பதற்காகத் தான் அவர் நான்கு நாட்கள் கழித்து
லாசருவை உயிருடன் எழுப்புகின்றார். லாசரு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்று முன்னமே அறிந்திருந்தும் உடனடியாக அவனைக் காண செல்லாமல், அவன் இறந்ததற்கு பின்னரே அவனைக் காண்பதற்காக
அவர் புறப்படுகின்றார். மேலும் அவன் நோய்வாய்ப்பட்டு
இருக்கின்றான் என்பதனை அறிந்த பொழுதே அவர் தன்னுடைய சீடர்களிடம் 'அவன் இந்த நோயினால் மரணம் அடைய மாட்டான். தேவனின் குமாரனை மகிமைப்படுவதற்கான இறைவனின் சித்தம் இது' என்றே அவர் கூறியும் இருக்கின்றார். மேலும்
அவனை அவ்வாறு உயிர்த்தெழச் செய்தால் தான் அவரை மக்கள்
நம்புவார்கள் என்றுமே அவர் கூறி இருக்கின்றார்.
அவர் எதிர்பார்த்தபடியே, அவர் லாசருவை உயிர்த்தெழச் செய்த நிகழ்வு யூத மதகுருக்களின் கவனத்திற்கு எப்பொழுது வந்ததோ, அப்பொழுது
அவர்கள் உடனடியாக கூட்டத்தினைக் கூட்டி இயேசுவை கொலை செய்ய
வேண்டுமென்று முடிவு செய்கின்றார்கள்
'இயேசு அதிசயங்களை செய்கின்றார். அது உறுதி. எனவே
மக்கள் அவரைப் பின்பற்றப்
போவதும் உறுதி. ஆனால்
மக்கள் அவரைப் பின்பற்றினார்கள் என்றால் நம்முடைய தேசம்
சிதறுண்டு போகும், ஏனென்றால் அவர் நம்முடைய நம்பிக்கைகளுக்கு மாறானதாக இருக்கக்கூடிய விடயங்களையே போதிக்கின்றார். யூதர்களுக்கும் மற்ற மக்களுக்கும் வேறுபாடுகள்
கிடையாது என்றே அவர் கூறுகின்றார். இது யூதர்கள்
தனித்தன்மையானவர்கள் என்ற கூற்றினை உடைத்து விடும். இறைவனின்
பார்வைக்கு பல்வேறு தேசங்கள் என்பது கிடையாது என்றே அவர் கூறுவதை நம் மக்கள் நம்பினர் என்றால், யூத தேசம்
கடவுளின் பிள்ளைகளின் தேசம் என்ற நம்முடைய கூற்றினை அவர்கள் மறுத்து
விடுவர். நமக்குள்ளேயே இப்படி வேறுபாடுகள் தோன்றினால் எளிதாக ரோமர்கள்
நம்மளை முற்றிலுமாக வீழ்த்தி விடுவர். எனவே நம்முடைய
தேசத்தின் நலனுக்காக இயேசு
கொலை செய்யப்பட வேண்டும்.' என்று எண்ணியே இயேசுவை கொலை செய்வதற்கு அவர்கள் முடிவு செய்கின்றனர்.
அதாவது, தங்களது தேசம் நன்றாக இருக்க வேண்டும், தேச மக்கள் சிதறி விடக்கூடாது,
யூதர்கள் மற்ற
இனத்தவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்கின்ற நம்பிக்கை மறைந்து விடக்கூடாது என்கின்ற அந்த ஒரு காரணத்திற்காகவே தான் இயேசு கொலை செய்யப்படுகின்றார். மக்கள்
அனைவரும் சமம், தேசங்கள் என்று மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பிரிவினைகளை இறைவன் மதிப்பதில்லை என்கின்ற இயேசுவின் அந்த கொள்கைகளுக்காகவே அவர்
கொலை செய்யப்படுகின்றார்.
இதனையே தான் நாம் இந்த முதல் நிகழ்வின் மூலமாக அறிந்து கொள்கின்றோம். சரி
இப்பொழுது நாம் இரண்டாவது நிகழ்வினைக் காணலாம்.
தொடரும்...!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக