குழந்தைகளின் உலகம் மிகவும் அற்புதமானது. அதனுள் நுழைகின்ற பெரியவர்களையும், அவர்களை அறியாமலே, தூய்மையான குழந்தைகளாக்கி விடக் கூடிய ஆற்றல் அந்த உலகிற்கு இருக்கின்றது. மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமான பரவசம் நிறைந்த அன்பினால் அந்த உலகினில் அமைதியாக ஒன்றிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அதிசய உலகம் - குழந்தைகளுடையது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எப்பொழுது மனிதர்கள், குழந்தைப் பருவத்திலிருந்து வளருகின்றனரோ அப்பொழுது அவர்கள் அந்த அற்புத உலகில் இருந்து சில காரணங்களின் காரணமாக வெளி வந்து விடுகின்றனர். பின்னர் தங்களின் வாழ்நாள் முழுவதும் அதே உலகினை அவர்கள் தேடினாலும், அதனைக் கண்டு பிடிப்பவர் வெகு சிலராகவே இருக்கின்றனர்.
ஆயினும் அனைத்து மக்களும் அவ்வாறு அந்த குழந்தைகளின் உலகத்திலிருந்து வெளிவந்து விடுவதில்லை. ஒருசிலர் எப்பொழுதும் அந்த உலகத்தை தங்களினுள்ளே போற்றிப் பாதுகாத்துக் கொண்டே தான் இருக்கின்றனர். மற்ற மக்கள் மறந்துவிட்ட அந்த அற்புதமான உலகத்தை அந்த மக்களுக்கு மீண்டும் நினைவூட்டும் வண்ணம் அவர்கள் அந்த குழந்தைகளின் உலகினை நூல்கள், திரைப்படங்கள் என்று அவர்களால் இயன்ற வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு குழந்தைகளின் உலகினை வெளிப்படுத்த வேண்டும் என்று சுவிட்ஸர்லாந்து நாட்டினைச் சார்ந்த 'ஜோஹானா ஸ்பியரி' என்ற பெண்மணி மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் 'ஹெய்டி' என்கின்ற ஒரு அற்புதமான புத்தகம் ஆகும்.
ஆல்ப்ஸ் மலைப்பிரதேசத்தில், 'மனிதர்கள் அனைவரும் சுயநலமாக இருக்கின்றார்கள்...அவர்களது சகவாசமே நமக்கு வேண்டாம்' என்று மலையுச்சியில் தன்னந்தனியாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் முதியவரின் வீட்டிற்கு, தாய் தந்தையை இழந்திருக்கும் அவரது பேத்தி 'ஹெய்டி' தங்க வருவதிலிருந்து கதை ஆரம்பமாகின்றது. மனிதர்கள் அனைவரும் தீயவர்கள், சுயநலவாதிகள் என்ற அந்த பெரியவரின் அனுபவமும், குழந்தைகளுக்கே உரிய தன்மையான கள்ளங்கபடமற்ற அன்புடன் அனைத்தையும் பார்க்கின்ற ஹெய்டியின் குணமும், மலைக்கு மேலிருக்கின்ற அந்த சிறிய குடிலில் ஒன்றாகத் தங்க நேரிடுகின்ற அந்த சூழலில், எப்படி பனி மூடியிருக்கும் மலைப்பிரதேசத்தில் வசந்த காலமானது வருகின்ற பொழுது பனியானது உருகி மலர்கள் பூத்துக் குலுங்குமோ, அவ்வாறே பெரியவரின் அந்த அனுபவமானது ஹெய்டியின் அன்பின் முன்னே உருகத் துவங்குகின்றது. என்ன செய்கின்றோம் என்று அறியாமலே ஹெய்டி அனைத்தையும் அன்பினால் மாற்றிக் கொண்டிருக்கின்றாள். ஆடுகள், அந்த ஆடுகளை மேய்க்கும் பீட்டர், கண் தெரியாத பீட்டரின் பாட்டி என்று அங்கிருக்கும் அனைவரையும் தனது அன்பினால் அவள் கவருகின்றாள். விரைவில் அங்கிருக்கும் அனைவருக்கும் அவள் இன்றியமையாதவளாகி விடுகின்றாள்.
ஆனால், எப்பொழுது அவள் இல்லாத வாழ்வினை அவர்களால் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலை இருந்ததோ, அப்பொழுது அவள் அவர்களை விட்டுப் பிரிந்து நகரத்திற்குச் செல்ல நேரிடுகின்றது. பணக்கார வியாபாரி ஒருவரின் உடல்நலம் குன்றிய மகளுக்குத் தோழியாக இருப்பதற்காக ஹெய்டியை அவளது சித்தி அழைத்துச் சென்று விடுகின்றார். ஹெய்டியும் ஒரு வாரத்தில் திரும்பி தன்னுடைய தாத்தாவிடமே வந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் அவளுடன் செல்லுகின்றாள். இயற்கையை மிகவும் நேசித்த ஹெய்டிக்கு நகரம் புதுமையானதாக இருக்கின்றது. சுதந்திரமாக மலைகளில் உலாவிய அவளுக்கு கட்டுக்கோப்பான விதிமுறைகளுடன் இருந்த அந்த பணக்கார வீடு வித்தியாசமானதொன்றாகவே இருந்தது. ஆயினும் ஒரு வாரத்தில் தன்னுடைய மலைக்கே மீண்டும் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையினால் அவள் அங்கே இருக்கத் துவங்குகிறாள். ஆனால் விரைவில் அவள் உண்மையினை அறிந்து கொள்ளுகின்றாள்.
அவள் இனி மீண்டும் மலைக்குப் போகப்போவதில்லை என்பதையும் தன்னுடைய சித்தி தன்னிடம் பொய் சொல்லியிருக்கின்றார் என்பதையும் உடல் நலம் குன்றியிருக்கும் பெண்ணான 'கிளாரா' வுக்கு துணையாக தான் இருக்க வேண்டும் என்பதையும் அவள் அறிந்து கொள்ளுகின்றாள். அந்நிலையில் ஹெய்டி என்ன செய்தாள்? ஹெய்டியின் அன்பினால் கவரப்பட்ட அந்த உள்ளங்கள் 'முதியவர், பீட்டரின் பாட்டி, கிளாரா' இவர்கள் என்னவாயினர்? ஹெய்டி மீண்டும் அவளுடைய தாத்தாவினுடன் வசிப்பதற்காகச் சென்றாளா? என்பதை எல்லாம் மிகவும் அருமையாக, 'ஹெய்டி' என்கின்ற அந்த குழந்தையின் பார்வையிலேயே இந்த கதை அருமையாக விளக்குகின்றது. ஹெய்டி என்கின்ற அந்த சிறுமி, கள்ளங்கபடமற்ற தன்னுடைய அன்பினால் ஒரு அற்புதமான உலகினை இந்த நூலில் உருவாக்கி இருக்கின்றாள்.
மேலும் மெதுவாக நமது கையினைப் பிடித்து அந்த அழகிய உலகினுள் நம்மையும் அவள் அழைத்துச் செல்லத்தான் செய்கின்றாள்.
இயந்திர உலகினுள் இயற்கையை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, அவள் மலையுச்சியில் வீற்றுயிருக்கக் கூடிய உயர்ந்த தேவதாரு மரங்களின் ஓசையை அறிமுகம் செய்து வைக்கின்றாள். மலையுச்சிக்கு இட்டுச் செல்லுகின்ற ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் பூத்துக் கிடக்கின்ற வண்ணமயமான பூக்களை நமக்கு அறிமுகம் செய்த வண்ணமே ஆட்டுக்குட்டிகளுடன் சூர்ய அஸ்தமனத்தையும், அந்த மலையுச்சிகளின் மீது சூரியனின் கதிர்கள் வரைகின்ற ஓவியங்களையும் காண்பதற்காக அவள் நம்மை அழைத்துச் செல்லுகின்றாள். நகரத்தின் இரைச்சலில் தொழில்நுட்பத்தின் படைப்புகளைக் கண்டு வியந்து சுற்றிக் கொண்டிருக்கும் நம்மை, ஜன நடமாட்டம் அதிகமில்லாத நகரின் வீதிகளில் அவள் அழைத்துச் சென்று தேவாலயத்தினுள்ளே இருக்கின்ற பூனைக்குட்டிகளை இரசிக்க வைக்கின்றாள். மேலும் மிகமுக்கியமாய், மனிதர்களின் அடிப்படை உணர்வுகளை, மனிதர்களுக்கு உண்மையில் எது தேவையாக இருக்கின்றது என்பதனை அவள் நமக்கு எளிதாக வெளிப்படுத்துகின்றாள்.
நல்லதே சூழ்ந்திருக்கும் ஒரு உலகினை அவள் உருவாக்கி வைத்துவிட்டு அதனுள் பயணிப்பதற்காக நம்மையும் அழைக்கின்றாள்.
இனிதான அந்த பயணத்தை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன். நிச்சயம் அற்புதமானதொரு பயணமாக அது இருக்கும்.
குழந்தைகளுக்கான ஒரு உலகையே இங்கே நாம் படைக்க வேண்டியிருக்கின்றது. உலகின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதுவேதான் தீர்வாக இருக்கின்றது.
பி.கு:
இந்த நூலை தமிழில் ஸ்ரீமதி / கயல்விழி ஆகியோர் மொழிபெயர்க்க, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த கதை திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றது, சித்திரப்படமாகவும் வந்திருக்கின்றது.
ஹெய்டி
மேலும் இந்த கதை திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றது, சித்திரப்படமாகவும் வந்திருக்கின்றது.
ஹெய்டி
1 கருத்துகள்:
அருமையான நூலறிமுகம்
கருத்துரையிடுக