பொதுவாக ஒரு நூலினை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகின்ற படங்கள், அந்த நூலினை வாசித்த நபர்களுக்கு திருப்தியளிக்கும் வண்ணம் இருப்பதில்லை. அந்த நூல் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை, ஒன்று திரையில் கதை மாந்தர்களால் வெளிப்படுத்த முடியாது போகும் அல்லது அவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் அந்த படத்தின் திரைக்கதை அமைந்திருக்காது. எனவே பெரும்பாலும் ஏமாற்றமே தான் அந்த நூலின் இரசிகர்களுக்கு எஞ்சியிருக்கும். வெகு சில படங்கள் மட்டுமே தான், அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். அதைக் காட்டிலும் குறைந்தளவு படங்களே தான் அவர்களது எதிர்பார்ப்பினை மிஞ்சிய வண்ணம் இருக்கும். அத்தகைய ஒரு படம் தான், அதாவது எதிர்பார்ப்புகளை மிஞ்சியிருக்கின்ற ஒரு படம் தான் இந்த 'குட்டி இளவரசன்'.

'குட்டி இளவரசன்' என்று பிரென்ச் மொழியில் வெளிவந்த ஒரு நூலினை அடிப்படையாக வைத்தே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கின்றது (அந்த நூலைப் பற்றிய அறிமுகத்தை நாம் ஏற்கனவே இந்த பதிவில் கண்டிருக்கின்றோம் - குட்டி இளவரசன் - இதனை முதலில் படித்து விடுவது நல்லது). ஆனால் அந்த கதையினை அப்படியே எடுக்காமல், இந்த காலத்தில் அந்த கதையானது எவ்வாறு பொருந்தும் என்று எண்ணி அதன்படி இந்தத் திரைப்படத்தின் கதையினை அமைத்திருப்பதில் தான் இந்தப் படத்தின் சிறப்பு அடங்கியிருக்கின்றது.

உலகப்புகழ் பெற்ற பள்ளிக்கூடத்தில் தன்னுடைய மகளைச் சேர்ப்பதற்காக ஒரு தாய் காத்திருப்பதிலிருந்து இந்தக் கதைத் தொடங்குகின்றது. "இந்த கேள்விகளைத் தான் கேட்பார்கள்...இந்த வரிசையில் தான் கேட்பார்கள்...அதற்கான பதில்களை நன்றாக மனப்பாடம் செய்து விட்டாய் அல்லவா...அதனை அப்படியே அவர்கள் கேட்கும் பொழுது கூறி விட்டாய் என்றால் உனக்கு இந்தப் பள்ளிக்கூடத்தில் நிச்சயம் இடம் கிடைத்து விடும்...அப்புறம் உன்னுடைய வாழ்வில் கவலையே கிடையாது" என்றே அவள் தன்னுடைய மகளை அந்த பள்ளியின் நேர்முகத் தேர்விற்கு தயாராக்கிக் கொண்டிருக்கின்றாள். ஆனால் அந்த நேர்முகத் தேர்வில் கேள்விகள் மாற்றிக் கேட்கப்பட, தவறாக பதில் கூறி தோல்வியுறுகின்றாள் அந்தச் சிறுமி.

ஆனால் தோல்வியினை ஏற்றுக் கொள்வதற்கு அவளுடைய அம்மா தயாராக இல்லை. 'வாழ்வென்பது ஒரு ஓட்டப் பந்தயம்...அதில் அனைத்தையும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே தான் வெற்றியடைய முடியும்' என்பதை தனது கோட்பாடாக கொண்டிருக்கும் அவள், தன்னுடைய மகளை அந்த பள்ளியில் சேர்ப்பதற்கான மாற்று வழியினைத் தேட ஆரம்பிக்கின்றாள். அதன் முதல் கட்டமாக அந்த பள்ளிக்கு அருகாமையில் ஒரு வீட்டினை பார்த்து அங்கே குடியேறுகின்றாள். பின்னர் தன்னுடைய மகள் அந்த வருடத்தின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மணி நேரத்திலும் என்ன செய்ய வேண்டும் என்பதனை வரையறை செய்யும் வண்ணம் ஒரு அட்டவணையையும் தயாரித்து அதனை அவளிடம் 'இதனை மட்டும் நீ பின்பற்றினாய் என்றால் நீ நிச்சயம் ஒரு அருமையான பெண்ணாய் வெற்றிகரமாக உருவாவாய்' என்று கூறியே தருகின்றாள். தன்னுடைய தாய் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்றே நம்புகின்ற அந்த சிறுமியும், இயந்திரமயமான வாழ்க்கைக்கு வித்திடும் வண்ணம் இருக்கின்ற அந்த அட்டவணையைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றாள்.

அனைத்தும் அவளது தாய் எண்ணியவாறே நிகழ்ந்து கொண்டிருக்க பிரச்சனை பக்கத்து வீட்டிலிருந்து வருகின்றது. ஓய்வு பெற்ற வயதான விமானி ஒருவர் தன்னுடைய பழுதடைந்த விமானத்துடன் அங்கே வசித்து வந்து கொண்டிருக்கின்றார் (குட்டி இளவரசன் கதையில் சகாரா பாலைவனத்தில் சிக்கிய விமானி தான் அவர்). ஒரு நாள் அவர் அவருடைய விமானத்தை சரி செய்ய முயன்று கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக அவரது விமானத்தின் காத்தாடி அந்த சிறுமியின் வீட்டினைச் சேதப்படுத்தி விடுகின்றது. அதற்கு நஷ்டயீடாக அவர் தான் ஒரு சேகரித்து வைத்திருக்கும் பணத்தினை அந்த சிறுமியிடம் தந்து விடுகின்றார். அந்தப் பணத்தினை எண்ணிக் கொண்டிருக்கையில் சில விசித்திரமான பொம்மைகளை, ஒரு நரி, ஒரு சிறுவன், ஒரு குட்டி கத்தி என்பன போன்ற பொம்மைகளை அந்த பணத்தின் இடையில் அவள் காணுகின்றாள். அவை என்னவென்று அவளுக்கு சரியாகப் புரியாதிருந்தாலும் அவளுடைய கவனத்தை அவை ஈர்த்து விடுகின்றன.

பின்னர் மற்றொரு நாள் அந்த முதியவரின் வீட்டிலிருந்து ஒரு சிறிய காகிதம் அவளுடைய அறைக்கு சன்னலின் வழியாக வந்து சேருகின்றது. அதில் விமானி ஒருவர் பாலைவனத்தில் மாட்டிக் கொண்டதாய் தொடங்குகின்ற கதையின் ஒரு பகுதி ஓவியங்களுடன் இருக்கின்றது. முதலில் அந்த கதையில் ஆர்வமற்றவளாய் தன்னைத்தானே அவள் காட்டிக் கொண்டாலும், அந்த கதையானது அவளை கவரத்தான் செய்கின்றது. அந்த கதையினைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக அவள் அந்த முதியவரின் வீட்டிற்குச் செல்லுகின்றாள். இயந்திரமயமான உலகையே அதுவரை கண்டு வந்திருந்த அவளுக்கு அந்த முதியவரின் வீடு வித்தியாசமானதாய் இருக்கின்றது.

அவள் அவரிடம் அந்த காகிதத்தில் இருந்த கதையைப் பற்றி கேட்கின்றாள். அவரும் அந்த கதையை அவளுக்கு சிறிது சிறிதாய், எவ்வாறு அவர் அந்த பாலைவனத்தில் குட்டி இளவரசனை சந்தித்தார் என்பதைப் பற்றியும், அவனது விண்கல்லைப் பற்றியும், அவனது ரோஜாவைப் பற்றியும் கூற ஆரம்பிக்கின்றார். கதைகள் என்பன நேர விரயம், அவற்றால் யாதொரு உருப்படியான பயனும் இல்லை என்றே அதுவரை கருதி வந்து கொண்டிருந்த அவள், அந்த கதையினுள் மூழ்கின்றாள். மெதுவாய் அவளுடைய குழந்தைத் தனம் உயிர்பெற ஆரம்பிக்கின்றது. அதுவரை வேண்டத்தகாதவராய் இருந்து வந்த அந்த முதியவர் இப்பொழுது அவளுக்கு ஆர்வமூட்டக்கூடியவராகவும் இனிமையானவராகவும் அவளுக்கு தோன்றுகிறார்.



அவர்கள் விரைவில் சிறந்த நண்பர்களாகின்றனர். தந்தையும் தாயும் பணம் சேர்க்க வேண்டுமென்று எப்பொழுதும் வீட்டினை மறந்து உழைத்துக் கொண்டிருந்த சூழலில் அவள் எப்பொழுதுமே தனியாகத் தான் இருந்து வந்திருக்கின்றாள். அவ்வாறு தான் வாழ்வானது இருக்கும்...வேறு எப்படியும் இருக்க முடியாது என்றே அவள் நம்பியும் வந்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அந்த நம்பிக்கைகள் யாவும் மெதுவாய் உடைந்து கொண்டிருந்தன. அந்த குட்டி இளவரசனும் அந்த முதியவரும் அவளது உலகினை மாற்றியமைத்துக் கொண்டிருந்தனர். அட்டவணைகளுக்கு அப்பாற்பட்ட உலகினில் அவள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தாள். முதியவருக்கும் அந்தச் சிறுமியின் நட்பு மகிழ்ச்சியானதாக இருந்தது. தனியாகவே வசித்து வந்திருந்த அவருக்கு அந்தச் சிறுமி புத்துணர்ச்சி ஊட்டுகின்ற ஒரு வசந்தம் போலவே இருந்தாள். ஆயினும் தான் என்றாவது விரைவில் மரணமடைய போவதை உணர்ந்திருந்த அவர் சூசகமாக அவளிடம் தான் விரைவில் மீண்டும் அந்த குட்டி இளவரசனைக் காணப் போவதாகவே கூறி வந்து கொண்டிருந்தார். அவர் கூறிய அர்த்தத்தை அறியாமலே அந்தச் சிறுமியும் அவர் கூறியதை அப்படியே நம்புகின்றாள்.

அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, தனது மகள் ஒழுங்காகப் படிக்காமல் அந்த முதியவருடன் நட்பு கொண்டிருக்கின்றாள் என்பது அவளது தாயிற்கு தெரிய வருகின்றது. அவர்களது நட்பிற்கு அவள் தடை போடுகின்றாள். ஆனாலும், தன்னுடைய தாயின் இயந்திரமயமான உலகத்திற்கும் அந்த முதியவரின் உணர்வுபூர்வமான உலகத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டினை சிறிதளவு உணர்ந்துவிட்ட நிலையில் அந்த சிறுமி மீண்டும் அந்த முதியவரின் வீட்டிற்கு செல்லுகின்றாள். இம்முறை ஒரு முடிவுடன் தான் அவள் செல்லுகின்றாள் - குட்டி இளவரசனைக் காண்பதற்காக அவர் கிளம்பும் பொழுது அவருடன் அவளும் செல்லப் போகின்றாள் - இதுதான் அந்த முடிவு. இந்த முடிவினை அவரிடம் அவள் கூறுகின்ற பொழுது அவர் அதனை மறுக்கின்றார். அதனால் வருத்தமடையும் அவள், 'உங்களுக்கு உண்மையிலேயே அந்த இளவரசனின் மீது அக்கறை கிடையாது...பின்னர் எதற்காக அவனைப் பற்றி என்னிடம் கூறினீர்கள்?' என்றே கோபத்துடன் அந்த முதியவரின் வீட்டை விட்டு கிளம்புகின்றாள்.

அவள் மனம் முழுக்க ஒரே சிந்தனை தான் நிறைந்திருக்கின்றது...'தன்னுடைய ரோஜாவிடம் திரும்பிச் செல்ல வழி தெரியாத அந்த இளவரசன் என்னவாகியிருப்பான்...அந்த பாம்பினை அவன் நம்புகின்றான்...அது அவனை அவனது விண்கல்லிற்கு அனுப்பி வைக்கும் என்றே அவன் நம்பியிருக்கின்றான்...ஆனால் அது அவனை அங்கே தான் அனுப்பி வைத்தது என்பதற்கு ஏது உத்திரவாதம்...ஒருவேளை அவன் வழி தவறியிருந்தான் என்றால் என்னவாவது? அப்படியிருக்கையில் ஏன் இவர் என்னை அழைத்துச் செல்ல மாட்டேன் என்கின்றார்' என்ற எண்ணமே அவளது சிந்தனையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்தச் சிந்தனையை விட்டு வெளியேவர முடியாத காரணத்தினால் அவள் குட்டி இளவரசனையையும் வெறுக்க ஆரம்பிக்கின்றாள். மீண்டும் அவள் தனது அன்னை தந்திருந்த அந்த அட்டவணைகளின்படி வாழத் துவங்குகின்றாள். அந்நிலையில்தான் அந்த முதியவரும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். நிற்க

இயந்திரமயமான உலகிற்கும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு உலகிற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டினை அறியத் துவங்கியிருந்த அந்த சிறுமியின் வாழ்வு என்னவானது? அவள் மீண்டும் இயந்திரமயமான வாழ்வினுள்ளேயே நுழைந்து விட்டாளா? அந்த முதியவர் என்னவானார்? அந்த குட்டி இளவரசன் தன்னுடைய ரோஜாவிடம் மீண்டும் போய்ச் சேர்ந்தானா அல்லது அவன் மோசமான இந்த உலகினில் அந்த சிறுமி பயந்ததைப் போன்றே வழிதவறி விட்டானா? என்பன போன்ற கேள்விகளுக்கு மிகவும் அருமையான வண்ணமே இந்தப் படமானது பதில்களைத் தந்து நிறைவுறுகின்றது.

அந்த சிறுமிக்கு விமானியின் வாயிலாக 'குட்டி இளவரசனின்' கதையை விவரிப்பதாக அமைந்திருக்கின்ற இந்த கதை, அந்த சிறுமியின் வாயிலாக 'எவ்வாறு அன்பும் நேசமும் நிறைந்த கதைகளும் உறவுகளும் அர்த்தமற்ற இயந்திரத்தனமான வாழ்வினை சுக்குநூறாக உடைத்து ஒரு குழந்தைகளுக்கான உலகினைப் படைக்கின்றன என்பதனை அற்புதமாக விவரிக்கின்றது.

எவ்வாறு அந்த குட்டி இளவரசன் நம்முள் இருக்கின்ற அந்தத் தொலைந்து போன சிறுவனைப் பிரதிபலிக்கின்றானோ, அதனைப் போன்றே அந்தச் சிறுமி நம்மைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றாள். வாழ்வென்றால் இயந்திரத்தனமாகத் தான் இருக்க வேண்டும் என்றே பெரியவர்கள் குழந்தைகளிடம் போதிக்கின்றனர். அவர்கள் கூறுவதைத் தவிர வேறு எதனையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில், அவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்றெண்ணியே குழந்தைகளும் இயந்திரமயமான வாழ்வினை ஏற்றுக் கொள்ளுகின்றனர். பின்னர் அவர்கள் பெரியவர்களாகும் பொழுது, அவர்கள் நம்பிய அந்த இயந்திரமயமான உலகினையே அவர்கள் மீண்டும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு போதித்துச் செல்லுகின்றனர். இந்தச் சூழலின் காரணமாக இயந்திரமயமான வாழ்வானது தொடர்ந்து உலகினில் தனது செல்வாக்கினை நிலைநிறுத்திக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றது.

இந்தப்படம் அதனைக் கேள்வி கேட்கின்றது....குட்டி இளவரசனின் மூலமாகவும் அந்த சிறுமியின் மூலமாகவும் 'வாழ்வானது இயந்திரமயமானதாகத்தான் இருக்க வேண்டும்' என்கின்ற அந்த கோட்பாட்டினை அது கேள்வி கேட்கின்றது. கேள்வி கேட்பதுடன் நில்லாமல், வாழ்வென்றால் என்ன, அதனால் எவ்வளவு அருமையானதாக இருக்க முடியும் என்பதனையும் இந்தப்படமானது மிகவும் அற்புதமாக விளக்குகின்றது.

மேலும், இன்றைய கல்விமுறை, உலகமயமாக்கல், வேலைமுறை போன்றவை எவ்வாறு மனிதனின் தாழ்ந்த இயல்புகளை கையகப்படுத்திக் கொண்டு அதன் மூலமாக உலகினை அர்த்தமற்ற ஒன்றாக மாற்றி வைத்திருக்கின்றன என்பதனை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அவற்றின் அந்த கோரப்பிடியில் இருந்து நம்முள் இருக்கும் அந்த சிறுவனை மீட்பதற்காக அது முயல்கின்றது.

அந்த முயற்சிக்கு நாம் கை கொடுத்தாகத்தான் வேண்டியிருக்கின்றது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு