ரியல் எஸ்டேட் வணிகம்...!!!
2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா சந்தித்த அந்த பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கியமான காரணம் இந்த வணிகம் தான் என்றால் அது மிகையாகாது. எனவே இதனடிப்படையில் அந்த பொருளாதார நெருக்கடியினைப் பற்றிப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.
"குறைந்த காலத்தில் அதிக இலாபம்" என்பதே அமெரிக்கா நிதி நிறுவனங்களின் இலக்காக இருந்தது. அதற்கு ரியல் எஸ்டேட் வணிகம் அவர்களுக்கு பெரிதும் உதவியது.
"வீடு என்பது இலாபகரமான முதலீடு, அதில் நீங்கள் தங்கவும் செய்து கொள்ளலாம்...வாடகைக்கும் விட்டு வருமானம் பார்க்கலாம், இல்லையேல் அதனை விற்கவும் செய்யலாம்...பாருங்கள், சென்ற வருடத்தினை விட வீட்டின் விலை இப்பொழுது எவ்வளவு அதிகரித்து இருக்கின்றது என்று. எனவே வீட்டில் முதலீடு செய்வது நிச்சயமாக இலாபகரமானது தான்" என்ற விளம்பரங்களின் வாயிலாக ரியல் எஸ்டேட் வணிகம் பெரிதும் வளர்க்கப்பட்டது.
வீட்டு மனைகளின் விலை உயர்வு |
அனைவருக்கும் கடன் வாரி வாரி வழங்கப்பட்டது. அவர்களால் கடனினைத் திருப்பி அடைக்க முடியுமா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை, அவர்கள் கடன் வாங்க வேண்டும், அவ்வளவு தான் என்ற குறிக்கோளுடன் இயங்குவது போல் வங்கிகள் செயல்பட்டன. என்ன, வட்டியின் அளவு தான் சற்று மிக அதிகம். இதன் விளைவாக வீட்டு மனைகளின் விலைகளும் உயர்ந்தன...கடனாளிகளான அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
அமெரிக்காவில் தனி மனிதனின் கடன் அளவு |
ஆனால், இங்கு ஒரு கேள்வி எழலாம்...அவ்வளவு கடன் தருவதற்கு வங்கிகளிடம் பணம் எவ்வாறு வந்தது? இந்த கேள்விக்கு விடையில் தான் அரசியலே இருக்கின்றது. வங்கிகள் தாங்கள் கடன் வாங்கிய பணத்தினைக் கொண்டே தான் மற்ற மக்களுக்கு கடனினைத் தந்தன. அதாவது கடன் வாங்கி கடன் தந்தன. புரியவில்லை தானே...இங்கு தான் பங்குச்சந்தை வருகின்றது.
வங்கிகள் கொடுத்த வீட்டு மனைக் கடன்களுக்கு வட்டி விகிதம் அதிகம்...மிகஅதிகம்...எனவே அந்த வட்டிகள் எல்லாம் முறையாக வந்திருந்தன என்றால் அந்த வங்கிகள் கொள்ளை இலாபம் அடைந்திருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு பங்குச் சந்தை நிறுவனங்கள் என்ன செய்தன என்றால், அந்த கடன்களை எல்லாம் ஒரு பங்காகத் திரட்டி, அதனை முதலீட்டாளர்களிடம் 'அதிக வருமானம் பெற்றுத் தரக் கூடிய பங்குகள்' என்று கூறி விற்கத் துவங்கின. எனவே அந்த பங்குகளில் பெருமளவு முதலீடு செய்ய மக்கள் ஆரம்பித்தனர். அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு வங்கிகள் தொடர்ந்து கடன் தந்து கொண்டிருந்தனர்.
மேலும், இங்கே அந்த நிதி நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை...'நாங்கள் இந்த பங்குகளை விற்று இருக்கின்றோம்...' அவை வீழ்ச்சியடைந்தால் எங்களுக்கு இழப்பீடு தேவை என்று கூறி தங்களைத் தாங்களே அதிகத் தொகைக்கு காப்பீடும் செய்து கொண்டன (மேலும் தாங்கள் விற்ற அந்த பங்குகள் தோல்வியடையும் என்று அவர்கள் பங்குச் சூதாட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது வேறு கதை).
அதாவது, முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை வைத்துக் கொண்டு வங்கிகள் கடன் தந்திருக்கின்றன. அந்த கடன் திரும்பி வருமா இல்லையா என்பதையெல்லாம் அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களது நோக்கம் குறுகிய கால இலாபம் மட்டுமே தான். அந்த இலாபத்தை அவர்கள் அடையவும் செய்தார்கள். அவ்வாறு இலாபமானது கூட கூட, அவர்கள் இந்த வணிகத்தை மேலும் மேலும் வளர்க்கலாயினர்.
Wall Street நிதி நிறுவங்களின் தலைமை அதிகாரிகள் பெற்ற போனஸ் தொகைகள் |
"நீங்கள் அபாயகரமான முதலீடுகள் செய்கின்றீர்கள்..." என்ற கூற்றுகளையும், "இந்த நிதி நிறுவனங்களின் செயல்களை வரையறை செய்து கட்டுப்படுத்த வேண்டும் (regulate)" என்ற வாதங்களையும் அந்த நிறுவனங்கள் மதிக்காமல் சென்று கொண்டே இருந்தன...காரணம் - அவர்களின் பண பலம் அத்தகையது. தங்களது பண பலத்தினைக் கொண்டு அவர்கள் அரசை விலைக்கு வாங்கி இருந்தனர்.
ரகுராம் ராஜனின் எச்சரிக்கை அறிக்கை |
அந்த நிதி நிறுவனங்களின் இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என்றும், அதனால் மாபெரும் பொருளாதார நெருக்கடி உலகமுழுவதும் வரலாம் என்று பலர் எச்சரிக்கை செய்தும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. உதாரணமாக நம்முடைய ரகுராம் ராஜனும் நிதி நிறுவங்களின் சந்திப்பில் இதனைப் பற்றி கூறி இருக்கின்றார். "நீங்கள் குறைந்தளவு ரிஸ்கில் அதிகளவு இலாபம் அடைகின்றோம் என்று கூறுகின்றீர்கள்...ஆனால் அதிகளவு ரிஸ்க் எடுத்து நீங்கள் அதிகளவு இலாபம் பார்க்கின்றீர்கள். இது ஒரு மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்" என்றே ரகுராம் ராஜன் அவர்கள் கூறி இருக்கின்றான். ஆனால் அதனை அந்த நிர்வாகிகள் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் குறிக்கோள் முழுவதும் 'குறுகிய காலத்தில் கொள்ளை இலாபம்' என்பதாகவே இருந்தது.
அதன் விளைவு தான் அமெரிக்காவின் 2008ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பித் தர முடியாத பொழுது அந்த பிரச்சனைத் துவங்கியது. கடன் வாங்கியவர்களால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை என்ற பொழுது, ஒன்றிற்கும் ஆகாத வீட்டு மனைகளை வைத்துக் கொண்டு வங்கிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை...மேலும் அதன் விளைவாக தாங்கள் வாங்கிய கடன்களையும் அந்த நிறுவனங்களால் திருப்பித் தர முடியவில்லை. அதன் விளைவாக வங்கிகள் மற்றும் அந்த பங்குச் சந்தை நிறுவனங்கள் வீழ்ச்சி அடைகின்றன.
மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது இந்த விளையாட்டில் காப்பீட்டு நிறுவனங்களையும் இழுத்து விட்டு வைத்திருப்பதால், அந்த காப்பீட்டு நிறுவனங்களும் வீழ்ச்சியடைகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் ஒற்றை நாளில் வேலை இழக்கின்றனர். மேலும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கின்றது. வங்கிகளில் தங்களது பணத்தினைப் போட்டு வைத்திருந்த மக்களால் எவ்வாறு அந்த வங்கியானது மூடியதற்கு பின்பு அப்பணத்தை எடுக்க முடியும்? அவர்களின் பணமும் பறி போகிறது. அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தாலும், அதன் தலைமை நிர்வாகிகள் தாங்கள் அடைந்த இலாபத்தை அப்படியே வைத்துக் கொண்டனர். அதாவது வங்கியில் பணத்தைப் போட்ட சாதாரண மனிதன் ஆண்டியாகி விட்டான்...ஆனால் அந்த வங்கி நிர்வாகியோ கோடீஸ்வரராகி விட்டார். எப்படி இருக்கிறது கதை?
இந்த சூழலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றது. ஆனால் இம்முறை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமுமே இந்த நெருக்கடிக்கு ஆளாகின்றது. ஏனென்றால், அமெரிக்காவில் இருக்கின்ற நிறுவனங்கள் உலகமுழுதும் தங்களது செயல்பாடுகளை வைத்து இருக்கின்றன. அதனால் அவற்றின் தாக்கம் உலகமுழுவதும் இருக்கின்றது.
அதாவது ஒரு சில நிதி நிறுவன அதிகாரிகளின் பேராசையின் காரணமாக உலகமே ஒரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது...இலட்சக்கணக்கான மனிதர்கள் வேலை இழந்து இருக்கின்றார்கள்...இன்னும் அநேக பாதிப்புகள் இருக்கின்றன...சரி இருக்கட்டும்...'பணமதிப்பிழக்கமும் வங்கிகளும்' என்று தலைப்பிட்டு விட்டு அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினைப் பற்றியே நாம் இது வரை அநேகமாக கண்டு வந்திருக்கின்றோம்...அதன் காரணம் என்னவென்றால், இன்றைய இந்திய அரசின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் இந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் நம்மால் முழுதாக இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
சரி இப்பொழுது நாம் நம்முடைய நாட்டைப் பற்றிப் பார்க்கலாம்...!!!
(அடுத்த பதிவில் முடியும்)
தொடர்புடைய இடுகைகள்:
வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக