கடந்த பதிவுகளில் அமெரிக்கா சந்தித்த பொருளாதார நெருக்கடியின் காரணிகளைப் பற்றி பார்த்திருந்தோம். அதிலிருந்து நாம் அறிந்து கொண்டவை...
- வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் தான் அந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தன.
- அவை அனைத்தும் தனியார் நிறுவனங்கள்.
- தனி நபர்களின் பேராசையின் காரணமாகவே தான் அந்த நெருக்கடிக்கு காரணமாக இருந்தது.
- அந்த நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ப சட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். அதற்கு ஏதாக ஆட்சியாளர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
- அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அமெரிக்க அரசானது கண்டு கொள்ளவே இல்லை. அனைத்து கட்டுப்பாடுகளையும் அது தளர்த்தி இருந்தது.
மிகவும் கட்டுக்கோப்பான சட்டங்களைக் கொண்ட நாடு...40 KM வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 41 KM வேகத்தில் சென்றாலே அபராதம் கட்ட வேண்டி வரும், இலஞ்சம் கிஞ்சம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சராசரி மனிதனால் புகழப்படும் அமெரிக்காவிலேயே நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தான் நாம் இந்தியாவை பார்க்க வேண்டியிருக்கிறது.
உலகையே உலுக்கிய அந்த பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை...எந்தெந்த துறைகள் அமெரிக்காவையும் ஐரோப்பியாவையும் சார்ந்து இருந்தனவோ (ஏற்றுமதி...மென்பொருள்) அந்த துறைகள் மட்டுமே தான் பாதிப்படைந்து இருந்தன. ஏனென்றால் இந்தியாவின் ஏனைய துறைகள் ஒன்று அரசாங்கத் துறைகளாக இருந்தன, அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவைகளாக இருந்தன. மக்களின் வாழ்க்கை முறை பெருமளவு வங்கிகளைச் சார்ந்து இருக்கவில்லை. இதனால் மற்றைய துறைகள் எவ்விதமான பாதிப்புகளுமின்றி இயல்பாகவே இயங்கிக் கொண்டிருந்தன என்றே கூறலாம். தனது கொள்கைகளை அரசாங்கம் மாற்ற முயன்ற பொழுதும் வலுவான எதிர்ப்புகள் அந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தின...உதாரணமாக,
பங்குச் சந்தையை ஊக்குவிக்க, மக்களின் PF பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று மன்மோகன் சிங் அரசு முடிவெடுத்த பொழுது, அப்பொழுது எதிர்ந்த எதிர்ப்பால் அந்த நடவடிக்கையை அது கைவிட்டது.
இத்தகைய நடவடிக்கைகளால் எவனோ எங்கோ செய்த தவறினால்/திருட்டினால் ஒட்டு மொத்த நாட்டு மக்களுமே இன்னலுக்கு உள்ளாகும் அந்த நிலை தடுக்கப்பட்டது. சரி, இப்பொழுது நாம் இன்றைய சூழலைப் பார்ப்போம்...
- கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுத்த நடவடிக்கை என்று கூறப்பட்ட பணமதிப்பிழக்க நடவடிக்கையின் பலனாக எஞ்சியிருப்பது, மக்கள் அனைவரின் பணமும் வங்கிகளுக்கு வந்து விட்டது...அவ்வளவே!!!
- அனைத்து துறைகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
- நிறுவனங்களின் மீதிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு கொண்டிருக்கின்றன (Deregulating the industry) (உதாரணமாக பெட்ரோல் டீசல் விலைகளை அரசு கட்டுப்படுத்தாமல், அதனை அந்த நிறுவனங்களிடமே விட்டு இருக்கின்றது தானே...)
- PF மற்றும் பென்ஷன் தொகைகளை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முயற்சிகள் (இன்றைக்கு தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் இதனை எதிர்த்து தான் போராட்டம் செய்கின்றனர்)
- அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடு அளவுக்கு அதிகமாக அனுமதிக்கப்படுகின்றது. அதாவது அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான பெரு நிறுவனங்கள் இந்தியாவிலும் முதலீடு செய்யலாம்.
- காங்கிரஸ் பிஜேபி போன்ற கட்சிகளுக்கு பெருவாரியான நிதிகள் பெரு நிறுவனங்களிடமிருந்தே வருகின்றது.
ஒருவரின் சொற்களால் அல்ல மாறாக செயல்களிலாலேயே அவரது குணத்தினை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்...அதன் அடிப்படையிலேயே தான் நாம் நமது அரசாங்கத்தையும் காண வேண்டியிருக்கின்றது. அவ்வாறு கண்டோமென்றால், நமக்கு புலனாவது, அமெரிக்காவைப் போன்றே, நமது அரசும் பெரு நிறுவனங்களின் கைப்பாவையாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களின் நலனை அதனிடம் இருந்து எதிர் பார்க்க முடியாது.
அரசாங்கம் இப்பொழுது மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் எல்லாம்வெற்றி பெற்றது என்றால், அடுத்த முறை இப்படி ஒரு பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் வரும் பொழுது இந்தியாவிலும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். இது பொய் அல்ல...!!!
உதாரணமாக, ஐஸ்லேன்ட் நாட்டின் பொருளாதாரம் மிகவும் அருமையானதொரு பொருளாதாரமாக இருந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டில், IMFயின் சிபாரிசின் பேரில், அது தன்னுடைய மூன்று மாபெரும் பொது வங்கிகளை தனியார் மயமாக்கியது. அதன் விளைவு, 2007 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியில், அந்த நாடும் அதிகமாக அடிபட்டு, அங்கும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர், உடைமைகளை இழந்தனர்...சேமிப்புகளை இழந்தனர்...!!! அதே நிலை தான் நாளை நமக்கும் வரலாம்...வரும்!!!
உலக முழுவதையும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்து, தங்களது வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள சில நிறுவனங்கள் விரும்புகின்றன...அதற்கு அவை 'கடன்', 'ஆசை' என்ற மாபெரும் ஆயுதங்களை பயன்படுத்துகின்றன...IMF, உலக வங்கி போன்ற நிறுவனங்களும் அந்த நிறுவனங்களின் கொள்கைகளும், அந்த மாபெரும் வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன...
ஒரு சாதாரண மனிதன் விரும்புகின்ற ஒரு எளிமையான அமைதியான வாழ்வினை, தங்களது பேராசையால் அந்த நிறுவனங்கள் வெறும் பகற் கனவாக்கி விடுகின்றன...!!!
வாழ்க்கை உண்மையில் எளிமையானது தான்...அதனை நம்மிடமிருந்து அவர்கள் மறைத்து விடுகின்றார்கள்...முடியாத ஒரு வட்டத்தில் நம்மை அவர்கள் ஓட வைத்து விடுகின்றார்கள்...!!!
அந்த வட்டத்தில் இருந்து வெளிவரவே நாம் போராட வேண்டியிருக்கின்றது...ஒரு எளிமையான வாழ்விற்காகவே நாம் முயல வேண்டி இருக்கின்றது...!!!
அந்த எளிமையான வாழ்வினை நம்மிடம் இருந்து மறைக்கின்ற பொய்களை நாம் அடையாளம் காண வேண்டியிருக்கின்றது...அதற்காகவே நாம்அதிகமாய் அறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது...அறிந்து கொண்டு பிறருக்கும் போதிக்க வேண்டியிருக்கின்றது...!!! தற்சார்பு பொருளாதார அமைப்பிற்கே நாம் முயல வேண்டியிருக்கின்றது...அதுவே தான் தீர்வு!
உண்மை நம்மை விடுவிக்கும்...!!!
தொடர்புடைய இடுகைகள்:
வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
வாழ்வும் கடனும்
முதலாளித்துவம் ஒரு காதல் கதை
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக