'கடனின்றி அமையாது உலகு' என்று இன்றைய காலக்கட்டத்தில் கூறுவது நிச்சயம் தவறானதொரு கூற்றாக அமையாது என்பதனைப் போன்றே தான் இன்றைய உலகம் முற்றிலும் கடனினால் சூழப்பட்டு இருக்கிறது. படிப்பதற்கு கடன், பொருட்கள் வாங்குவதற்கு கடன், வீடு கட்டுவதற்கு கடன், மருத்துவத்திற்காக கடன் என்று இன்றைக்கு ஒரு தனி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வுமே கடனினால் நிறைந்திருக்கிறது. கடனில்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது என்ற நிலைக்கே இன்றைய சமூக சூழல்கள் இருக்கின்றன. கடன், ஒரு மனிதனின் சுதந்திரத்தை பறிக்கின்றது என்பதனைத் தெரிந்தும், வேறு வழியில்லாமல் கடன் வாங்குகின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடனை விரைவாக அடைக்க வேண்டுமே இல்லாவிடில் வட்டி கூடிக் கொண்டே போகுமே என்ற ஒரே சிந்தனை அவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள, 'அடிமகள் என்று பெயரிடப்படாத அடிமைகளாக அவர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் படம் அவர்களைப் பற்றிய ஒரு படமல்ல. ஆம், தனி நபர் கடனினைப் பற்றி இந்தப் படம் பேசுவதில்லை. மாறாக, ஒரு கடனினால் தனி நபர் ஒருவனின் வாழ்வே பெரிதளவு மாறிப் போகின்ற பொழுது, மாபெரும் கடன்களை வாங்குகின்ற தேசங்களின் நிலை என்னவாகின்றது என்பதனைக் குறித்தேதான் இந்த படம் பேசுகின்றது. அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைப் பற்றியும், உலக வங்கியிடமிருந்தும் சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்தும் அவை பெற்ற கடன்களைப் பற்றியும் அவற்றால் அவை அடைந்த இன்னல்களைப் பற்றியும் இந்த படம் பேசுகின்றது. 'ஜமைக்கா' என்றொரு மூன்றாம் உலக நாட்டினை நம் கண் முன்னே கொண்டு வந்து, அதன் வரலாற்றை விரிவாக விரித்து, எப்படி அந்த நாடு கடன் என்ற பொறிக்குள் சிக்க வைக்கப்பட்டது...அதனால் அதன் நிலை என்னவானது என்று தெளிவாக நமக்கு விளக்க முற்படுகின்றது. அதனைப் பற்றியே தான் நாம் இப்பொழுது சிறிது காண வேண்டி இருக்கின்றது.

ஜமைக்கா - அழகான ஒரு தீவு. மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போன்றே அந்நிய ஆதிக்க சக்தியிடமிருந்து (இங்கேயும் ஆட்சி புரிந்தது ஆங்கிலேயர்கள் தான்) இரண்டாம் உலக போருக்குப் பின்னர் விடுதலை அடைந்து, சுதந்திர காற்றினை சுவாசித்ததொரு நாடு அது. ஆனால் சுதந்திரம் என்ற சொல், கேட்பதற்கு இனிமையாக இருப்பதனைப் போன்றே செயல்முறையில் இருப்பதில்லை என்பதனை அது விரைவில் கண்டு கொண்டது.

சுதந்திரம் இருக்கின்றது...ஆனால் பணம் இல்லை...வேண்டிய மருந்துகளை வாங்க முடியவில்லை, தொழிற் கருவிகளை வாங்க முடியவில்லை, சம்பளம் தர முடியவில்லை...புதிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை...இந்நிலையில் வெறும் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே அந்த நாட்டின் பிரதமர் மைக்கேல் மான்லி திணறிக் கொண்டிருக்கும் பொழுதுதான், வேறு வழியில்லாமல் அவர் உலக வங்கியிடமும் IMFயிடமும் உதவிக் கோரி செல்லுகின்றார்.

"ஓ...நிதி நெருக்கடியில் இருக்கின்றீர்களா...நல்லது. கவலைப் படாதீர்கள், உங்களுக்கு உதவுவதற்குத் தானே நாங்கள் இருக்கின்றோம். நிச்சயமாக உதவி செய்கின்றோம். என்ன கொஞ்சம் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது தானே. அப்புறம் கூற மறந்து விட்டோம், உங்களுக்கு நாங்கள் தருகின்ற பணத்தினை நீங்கள் எங்களுக்கு திருப்பித் தருவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது? நீங்கள் அந்த பணத்தினை மோசமான வழிகளில் செலவழித்து விட்டீர்கள் என்றால் எப்படி அதனைத் திரும்பத் தருவீர்கள்? உங்களை நாங்கள் எப்படி நம்புவது? எனவே உங்களுக்கு நாங்கள் பணத்தினைத் தருகின்றோம்...ஆனால் அதனை நாங்கள் கூறுகின்றபடிதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும். உங்களுக்கென்று நாங்கள் முன் வைத்திருக்கும் திட்டம் இதோ..." என்றே அந்த நிறுவனங்கள் அவரை எதிர் கொள்ளுகின்றன (கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளையும் அவை இவ்வாறே தான் எதிர் கொள்ளுகின்றன).

அந்த நிறுவனங்கள் போட்ட கட்டுப்பாடுகளில் முக்கியமான சில விடயங்கள் என்னவென்றால்,

 • சுதந்திர வணிகத்தை அனுமதிக்க வேண்டும். அதாவது மற்ற உலக நாடுகளுக்கு (அமெரிக்கா, இங்கிலாந்து...) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி தனது சந்தையை திறந்து வைக்க வேண்டும்.
 • மக்களுக்கு வழங்குகின்ற மானியங்களை நிறுத்த வேண்டும்.
 • கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் மிகவும் குறைவாகவே செலவழிக்க வேண்டும்.
 • அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளின் விளைவாக ஜமைக்காவின் பல்வேறு தொழில்கள் என்னவாயின என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் இந்த ஆவணப்படமானது விளக்குகின்றது. அதனைச் சுருக்கமாக நாம் கண்டு விடலாம்.

விவசாயம்:

சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜமைக்கா தனது சந்தையை உலக நாடுகளுக்குத் திறந்து வைத்தது. அதன் விளைவாக, பல்வேறு நாடுகளிலிருந்தும்...குறிப்பாக அமெரிக்காவிலிருந்து காய்கறிகள் ஜமைக்கன் சந்தைகளில் வந்து குவிய ஆரம்பித்தன. வெளிநாடுகளிலிருந்து வந்த காய்கறிகள் விலை மலிவாக இருந்த காரணத்தினால் உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்குவோர் குறைந்தனர். விவசாயம் அழிந்தது.

கடன்:

உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்களின் மோசமான திட்டங்கள் காரணமாக, ஜமைக்காவின் கடன் மேலும் வளர்ந்து கொண்டேதான் சென்றது. 1970களில் 800 மில்லியன் டாலராக இருந்த கடன், 1980களின் முடிவில் நான்கு பில்லியன் டாலர்களாக இருந்தது. அதுவே 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 7 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது அந்த நாட்டின் கடன் கூடிக் கொண்டேதான் சென்று இருக்கின்றது.

பால் வணிகம்:

விவசாயத்தைப் போன்றே பால் வணிகத்திலும் அந்நிய நிறுவனங்கள் நுழைந்ததால், ஜமைக்கன் பால் பண்ணையாளர்கள் தங்களது தொழிலை விட்டு விட நேருகின்றது. இதனைப் பற்றி இந்த படம் என்ன கூறுகின்றது என்பதனை சற்று விரிவாக காணலாம்.

பால் பண்ணையாளர் ஒருவர் - வருடத்திற்கு 18 மில்லியன் லிட்டர் முதல் 30 மில்லியன் லிட்டர் வரை பாலினை உற்பத்தி செய்யும் அளவு நாங்கள் முன்னேறி இருந்தோம். 1991ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 34 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்தோம். ஆனால் 1992 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டு வளர்ச்சி வங்கியிடமிருந்து, விவசாயம் மற்றும் உற்பத்தியை பெருக்குவதற்கென்று 50 மில்லியன் டாலர்கள் கடன் வாங்குவதற்கென்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தமிட்டுக் கொண்டது. அதன்படி, அரசாங்கமானது எவ்விதமான மானியத்தையும் உள்நாட்டுப் பொருட்களுக்கு வழங்கக் கூடாது, மேலும் பால் பவுடர் மற்றும் மாமிசம் போன்ற பொருட்களின் இறக்குமதியின் மீதிருக்கும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கமானது நீக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக பாலிற்கான போட்டி கடினமானதொன்றாக மாற ஆரம்பித்தது. பெருமளவு பால் பவுடர் இங்கே வந்து குவியத் துவங்கியதால் பால் தொழில் அழிந்து போயிற்று. அனைவரும் பால் பவுடரை பயன்படுத்தத் துவங்கியதால், பால் துறை தவிக்கலாயிற்று. இதில் கொடுமை என்னவென்றால், உள்நாட்டு பாலுக்கு அரசாங்கம் எவ்விதமான மானியமும் அளிக்கக் கூடாது, ஆனால் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் பவுடருக்கு அமெரிக்க அரசானது கிட்டத்தட்ட 137 சதவீத மானியத்தை வழங்குகின்றனர். யாரால் அதனை எதிர்த்து வணிகம் செய்ய முடியும்? தேசிய உணவு பாதுகாப்பு இல்லாமல் போவதே இதன் முடிவாக இருக்கும். எப்பொழுது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பால் பவுடருக்கான மானியம் நிறுத்தப்படுகின்றதோ, அப்பொழுது அந்த பொருட்களின் விலைகள் நமது உள்நாட்டு பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். ஆனால் அப்பொழுது நாம் இந்த வணிகத் துறையை விட்டே விலகிச் சென்றிருப்போம்.

நிற்க.

இவ்வாறு இன்னும் பல புள்ளி விவரங்களுடன் வரலாற்றுத் தரவுகளுடன் இந்த படமானது, உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்கள் கடன்களின் மூலமாக எவ்வாறு பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை சீர்குலைக்கின்றன என்பதனைத் தெளிவாக விளக்குகின்றது. அதுவும் அந்த நிறுவனங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதனையும் எதனால் அவை உருவாக்கப்பட்டன என்பதனைப் பற்றியும் சுருக்கமாக இது விளக்குகின்றது. எனவே இந்த படத்திற்கு நாம் சிறிது கவனத்தைத் தந்தாகத்தான் வேண்டியிருக்கின்றது.

ஏனென்றால், நாமும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நம்முடைய அரசும் இன்று,

 • மானியங்களை குறைத்து வந்து கொண்டிருக்கின்றது.
 • அனைத்தையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கின்றது.
 • 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருக்கிறது.
 • சுதந்திர வணிகம் என்ற கோட்பாட்டினை ஏற்று இருக்கின்றது.
 • விவசாயத்தினை முன்னுரிமை படுத்த மறுக்கின்றது.
 • வங்கிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
 • அனைத்திற்கும் மேலாக நம்முடைய நாடும் கடன் வாங்கிக் கொண்டு, அதற்கான வட்டியினைக் கட்டிக் கொண்டிருக்கின்றது.
ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருக்கும் பொழுது கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்கட்சியானது எதிர்க்கின்றது. எதிர்கட்சியானது ஆட்சியில் இருக்கின்ற பொழுது தான் எதிர்த்த அதே திட்டங்களை செயல்படுத்துகின்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, வரிவிலக்கு வரம்பை 1.5 லட்சத்திலிருந்து  4.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கூறிய அருண் ஜெட்லீ, ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்ற போதிலும் 1.5 லட்ச வரம்பிலிருந்து ஒரு பைசா கூட கூட்டியிருக்கவில்லை. இதையேதான் காங்கிரசும் செய்தது...செய்திருக்கும்...இனியும் செய்யும். இந்த நடவடிக்கைகள் கேலிகரமாக தெரிந்தாலும், அதனுள் ஒளிந்திருக்கும் அந்த முக்கியமான விடயத்தை நாம் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டியிருக்கின்றது.

கடன் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் பொழுது, ஒரு நாட்டினை என்ன செய்யும் என்ற கேள்வியை நாம் இங்கே எழுப்ப வேண்டியிருக்கின்றது.

கடன்...ஒவ்வொரு மனிதனும் இதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்தப் படம் சிறிது உதவும் என்றே நம்புகின்றேன்.

கடனின்றியே அமைய வேண்டும் உலகு. அதற்கே நாம் முயல வேண்டும்.

முற்றும்.

பி:கு:

IMFஐ பற்றி அறிந்து கொள்ள 'ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை சைபர்' என்ற நூலும் உதவும்.

தொடர்புடைய இடுகைகள்:

2 கருத்துகள்:

அருமையாக அலசி சொல்லி இருக்கின்றீர்கள் நாமும் மூன்றாம் தர நாடுதானே...
கில்லர்ஜி

அருமையான விமர்சனம் அன்பரே,

நான் ஒருவன் மாறினால் எல்லாம் சரியாகிடுமா, என்று கேட்பவர்களுக்கு அருமையான விளக்கப்படம். தனி மனிதன்/குடும்பம்/நண்பர்கள்/உறவினர்கள்/அவர்களது குடும்பங்கள்/தெரு/ஊர்...நாடு தனது7தங்களது வீண் செலவுகளை, குறைத்தால் மாற்றங்கள் நிகழும் என்பதை நிஜத்துடன் விளக்கும் படம்.

ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை சைபர்

என்ற புத்தகத்தை கண்டறிய இயலவில்லையே!! புத்தக ஆசிரியர் பெயரை குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

ராஜா

பயணிகள்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு