நான் ஒரு கேலிக்குரிய மனிதன். இப்பொழுது
என்னை அவர்கள் கிறுக்கன் என்றே அழைக்கின்றார்கள். முன்பு அவர்களின்
பார்வைக்கு கேலிக்குரியவனாக தோன்றி இருந்ததைப் போன்று இப்பொழுது நான்
தோன்றவில்லை என்றால், அவர்கள் என்னை கிறுக்கன் என்று அழைப்பது நிச்சயம் ஒரு
படி மேலான நிலை தான். ஆனால் இப்பொழுதெல்லாம் நான் கோபம் கொள்வதில்லை.
அவர்கள் அனைவரும் இப்பொழுது எனக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள்.
என்னைப் பார்த்து அவர்கள் அனைவரும் சிரிக்கும் பொழுதும் கூட, ஏனோ அவர்கள்
அனைவரும் எனக்கும் நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர். அவர்களைக்
காணுகின்றப் பொழுது அவர்கள் மீது மிகுதியான வருத்தம் எனக்கு
தோன்றாதிருந்திருந்தால், ஒருவேளை நானும் அவர்களுடன் சேர்ந்து
சிரித்திருக்கக் கூடும், என்னைக் கண்டு அல்ல மாறாக அவர்கள் மீதிருந்த
அன்பின் காரணமாகவே நானும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் எனக்கு வருத்தமாக
இருக்கின்றது. அவர்கள் உண்மையை அறியாது இருக்கின்றனர். நானோ உண்மையை
அறிந்து இருக்கின்றேன். ஆ!!! உண்மையினை அறிந்திருக்கும் ஒரே ஒரு நபராக
இருப்பது எவ்வளவு கடினமாக இருக்கின்றது. ஆனால் இதனை அவர்கள் புரிந்துக்
கொள்ள மாட்டார்கள். இல்லை…அவர்கள் நிச்சயம் இதனைப் புரிந்துக் கொள்ள
மாட்டார்கள்.
கேலிக்குரிய ஒருவனாக நான் மற்றவர்களுக்கு
தோன்றியது முன்பு எனக்கு மிகுந்த மனக் கவலையினை அளித்திருந்தது.
இல்லை…கேலிக்குரியவனாக நான் தோன்றி இருக்கவில்லை. கேலிக்குரியவனாகத் தான்
இருந்தேன். எப்பொழுதும் நான் கேலிக்குரிய ஒருவனாகத் தான் இருந்து
இருக்கின்றேன். அது எனக்குத் தெரியும். ஒருவேளை பிறப்பில் இருந்தே நான்
கேலிக்குரியவனாக இருந்து இருக்கலாம். ஒருவேளை எனக்கு ஏழு வயதான பொழுதே நான்
கேலிக்குரிய ஒருவன் என்று நான் அறிந்து இருக்கலாம். பின்னர் நான்
பள்ளிக்குச் சென்றேன்…அதனைத் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்றேன்…ஆனால் நான்
எவ்வளவு அதிகமாக கற்றேனோ அவ்வளவு அதிகமாக நான் கேலிக்குரியவன் என்பதனை நான்
உணர்ந்துக் கொண்டேன். ஆகையால் என்னுடைய பல்கலைக்கழக படிப்பினுள் நான்
ஆழமாகச் செல்ல செல்ல, அதன் இறுதியான குறிக்கோள் நான் கேலிக்குரிய ஒருவன்
தான் என்பதனை நிரூபித்து எனக்கு அதனை விளக்குவதே ஆகும் என்றே எனது
பார்வையில் பட்டது. கல்வியில் தான் இந்நிலை என்றால் வாழ்விலும் அதே நிலை
தான் இருந்தது. ஒவ்வொரு வருடமும், என்னுடைய தோற்றமானது அனைத்து வகையிலும்
கேலிக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது என்ற என்னுடைய மனநிலை என்னுள் தொடர்ந்து
வளர்ந்து வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. எப்பொழுதும் அனைவராலும் நான் கேலி
செய்யப்பட்டே வந்து இருக்கின்றேன். நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன்
என்பதனை உறுதியாக என்னை விட இந்த உலகினில் வேறு எந்த மனிதனாலும் அறிந்து
இருக்க முடியாது. இதனை நான் அறிவேன். ஆனால் இதனை என்னைக் கேலி செய்பவர்கள்
அறிந்து இருக்கவில்லை. ஏன்…நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன் என்பதனை
நான் அறிந்தே தான் இருப்பேன் என்று அவர்கள் சந்தேகப்பட்டு கூட இருக்க
மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு அதனை அறிந்து இருக்காதது தான் என்னை மிகவும்
தொல்லைப்படுத்தியது. ஆனால் அவர்கள் அவ்வாறு இருந்ததற்கு நான் என்னையே தான்
குறைக் கூறிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் கேலிக்குரியவனாக
இருக்கின்றேன் என்பதனை எதற்காகவும் வேறு எவரிடமும் நான் ஒப்புக்
கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய பெருமை என்னை அவ்வாறு ஒப்புக் கொள்ள விட்டு
இருக்காது.
அத்தகைய பெருமையானது காலங்களில் என்னுள்
வளர்ந்துக் கொண்டே வர, எவரிடமாவது நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன்
என்பதனை ஒப்புக் கொள்ள என்னை நானே அனுமதித்தேன் என்றால் அதே நாள் மாலையில்
என்னை நானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன் என்றே
எண்ணுகின்றேன். ஆ…இளம் வயதில் எனக்கு நானே உதவிக் கொள்ள முடியாமல் எப்படியோ
திடீரென்று என்னுடைய தோழர்களிடம் நான் கேலிக்குரியவனாக இருப்பதனை ஒப்புக்
கொள்ள வேண்டி இருந்தைக் குறித்து நான் எவ்வளவு துயரப்பட்டேன். ஆனால் நான்
இளைஞனாக வளர்ந்த உடன் ஏதோ ஒரு காரணத்தினால் நான் சிறிது அமைதியானவனாக
மாறினேன். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பயங்கரத் தன்மையினைக் குறித்து நான்
அதிகமாக அறிந்தப் பொழுதும் ஏனோ நான் சற்று அமைதியானவனாக மாறினேன். ஏன் நான்
அவ்வாறு அமைதியானவனாக மாறினேன்? இந்நாள் வரை அதற்கான காரணத்தினை என்னால்
அறிந்துக் கொள்ள முடியவில்லை.
நான் அமைதியானவனாக மாறியதற்கு, ஒருவேளை
என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஒரு சூழ்நிலையினால் என்னுடைய
ஆன்மாவினுள் வளர்ந்துக் கொண்டிருந்த அந்த பயங்கரமான வேதனை காரணமாக
இருக்கலாம். என்னுடைய கேலிக்குரியத் தன்மையானது, இந்த உலகினில் எங்கேயும்
எதையும் மாற்றப் போவதில்லை என்கின்ற அந்த தீர்க்கமான முடிவே தான் என்னை
அப்பொழுது முழுமையாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இவ்வுலகினில் என்னுடைய
கேலிக்குரிய தன்மையானது ஒரு பொருட்டாகக் கூட இருக்கப்போவதில்லை என்பதனைக்
குறித்த ஒரு சிறு உணர்வினை நான் நெடுங்காலமாகவே பெற்று இருந்தேன். ஆனால்
எப்படியோ அந்த உணர்வின் முழுமையான வடிவத்தினை நான் சென்ற வருடம் தான்
திடீரென்று உணர்ந்தேன். இந்த உலகானது இருந்தாலும் சரி அல்லது எங்குமே
ஒன்றுமே இல்லாதிருந்தாலும் சரி அதனால் எனக்கு ஒன்றுமே இல்லை என்றே நான்
திடீரென்று உணர ஆரம்பித்தேன். என்னுள் ஒன்றுமே இல்லை, எதற்கும் ஒரு
அர்த்தமே இல்லை என்பதனை நான் முழுமையாக உணரத் துவங்கினேன்.
அவ்வாறு நான் சிந்திக்க ஆரம்பித்த
நாட்களில், முன்னர், சிறுவயதில் அனைத்திற்கும் ஏதோ பொருள் இருந்ததனைப்
போன்றும் இப்பொழுது தான் அனைத்திற்கும் ஏதோ பொருள் இல்லாது மாறி
இருப்பதனைப் போன்றும் தோன்றியது. ஆனால் அப்பொழுதும் எதற்கும் அர்த்தம்
என்று எதுவும் இருந்தது இல்லை என்பதனையும் ஏதோ ஒரு காரணத்தினால் அவற்றிற்கு
அப்பொழுது அர்த்தம் இருந்தனைப் போல் தோன்றி இருக்கின்றது என்பதனையும் நான்
பின்னர் உணர்ந்துக் கொண்டேன். இங்கே ஒன்றுமே இருக்கப் போவதில்லை என்றே
நான் காலங்கள் நகர நகர நம்ப ஆரம்பித்தேன்.
பின்னர் திடீரென்று மற்ற மக்களின் மீது
கோபம் கொள்வதை நான் நிறுத்தினேன். அவர்களை கவனிக்காமல் இருக்க
ஆரம்பித்தேன். என்னுடைய இந்த போக்கானது விரைவில் அற்பமான சிறு விசயங்களில்
கூட வெளிப்பட ஆரம்பித்தது. உதாரணத்திற்கு, நான் சாலையினில் நடந்துச்
சென்றுக் கொண்டிருக்கும் பொழுது சில மனிதர்கள் மீது மோத நேரிடும். அவ்வாறு
நான் மோத நேரிட்டதற்கு ஏதோ சிந்தனையில் நான் மூழ்கி இருந்தது காரணம்
கிடையாது. எதனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்திருக்க முடியும்.
சிந்திப்பதனைத் தான் அப்பொழுது முற்றிலுமாக நிறுத்தி விட்டு இருந்தேனே.
சிந்திப்பது என்பது எனக்கு எதனையும் மாற்றப் போவதில்லை. ஒருவேளை நான்
என்னுடைய கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுக் கொண்டிருந்தேன் என்றால் நலமாக
இருந்து இருக்கக் கூடும். என்னிடம் அநேக கேள்விகள் இருந்தன, இருந்தும் நான்
ஒரு கேள்வியினைக் கூட தீர்த்து இருக்கவில்லை. ஆனால் அக்கேள்விகளும்
எதனையும் மாற்றப் போவதில்லை என்றே எனக்கு தோன்ற ஆரம்பிக்க, அந்த கேள்விகள்
அனைத்தும் என்னை விட்டு விலகிச் சென்றன.
அதற்கு பின்னர் நான் உண்மையினை அறிந்துக்
கொண்டேன். கடந்த நவம்பர் மாதம், சரியாகச் சொல்லுவதென்றால் கடந்த நவம்பர்
மாதம் மூன்றாம் தேதி நான் உண்மையானது என்னவென்பதை அறிந்துக் கொண்டேன்.
அக்கணம் முதலாக என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நான் நினைவில்
வைத்து இருக்கின்றேன்.
அது ஒரு இருள் படந்திருந்த மாலை நேரம். ஒரு
மாலை நேரமானது எந்தளவு இருளினால் மூடி இருக்க முடியுமோ அந்தளவு இருளானது
அந்நேரத்தில் படர்ந்திருந்தது. நான் அப்பொழுது வீட்டிற்குத் திரும்பிக்
கொண்டிருந்தேன். நேரமானது பத்து மணிக்கும் பதினொரு மணிக்கும் இடையே
நகர்ந்துக் கொண்டிருந்தது. இதனை விட ஒரு மனிதனின் மன அழுத்தத்தினை
அதிகரிக்க செய்யும் நேரம் வேறு இருக்க முடியாது என்றே எனக்கு அப்பொழுது
தோன்றி இருந்ததை என்னால் இன்றும் நினைவுக்கூர முடிகின்றது. அன்றிருந்த
புறச்சூழல்களும் அப்படியே தான் இருந்தன. அன்றைய தினம் முழுவதும் மழையானது
கொட்டித் தீர்த்து இருந்தது. மழை என்றால் சாதாரண மழை அல்ல, இருப்பதிலேயே
குளிர் அதிகமானதும் மனதினைத் தாழ்த்தக் கூடிய சூழலினை அதிகமாக உருவாக்கக்
கூடியதுமான ஒரு மழை அது. அதனை ஒரு கொடூரமான மழை என்றுக் கூட கூறலாம்.
ஆம்…எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. மனிதர்கள் மேல் இருந்த
வெறுப்பின் காரணமாகத் தான் அந்த மழை அவ்வாறு கொட்டித் தீர்த்து இருந்தது.
ஆனால் இப்பொழுதோ, நேரமானது பத்திற்கும் பதினொன்றுக்கும் இடையில் நகர்ந்து
கொண்டிருந்த பொழுது அந்த மழையானது திடீரென்று நின்று இருந்தது.
தொடரும்…!!!
பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.
1 கருத்துகள்:
நல்ல முயற்சி
மொழிபெயர்ப்பு உணர்வுப் பூர்வமாகவும்
இரசித்துப்படிக்கும்படியாகவும் உள்ளது
தொடர நல்வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக