கனவுகளில் சில நேரம் நீங்கள் உயரமான
இடங்களில் இருந்து கீழே விழுவீர்கள் அல்லது கத்தியினால் குத்தப் படுவீர்கள்
அல்லது அடிப்படுவீர்கள். ஆனால் நீங்கள் ஒருபொழுதும் அப்பொழுது வலியினை
உணர்ந்து இருக்க மாட்டீர்கள். சில நேரம் உங்களது படுக்கையில் நீங்கள்
உண்மையாகவே காயப்பட்டு இருந்தீர்கள் என்றால் மட்டுமே உங்களால் வலியினை உணர
முடியும். அப்படிப்பட்ட ஒரு சம்பவமானது எப்பொழுதும் உங்களை எழுப்பி விட்டு
விடும். அதனைப் போன்றே தான் எனது கனவிலும் நடந்தது. நான் எந்தொரு
வலியினையும் உணரவில்லை. ஆனால் நான் என்னைச் சுட்டுக் கொண்ட பொழுது என்னுள்
இருந்த அனைத்தும் ஆடியதனைப் போன்றும், அனைத்தும் அணைந்துப் போனதைப்
போன்றுமே நான் எண்ணிக் கொண்டேன். என்னைச் சுற்றி இருந்த அனைத்தும் பயங்கர
இருளாக மாறிப் போயிருந்தன.
நான் ஒரு குருடனைப் போன்றும் ஊமையைப்
போன்றும் ஆகிப் போயிருந்தேன். ஏதோ கடினமான ஒன்றின் மீது எனது முதுகினை
முழுமையாக கிடத்தியவாறே நான் படுத்து இருந்தேன். என்னால் எதனையும் காண
முடியவில்லை. சிறிதளவு கூட என்னால் அசைய முடியவில்லை. என்னைச் சுற்றி சிலர்
நடக்கின்றார்கள், சிலர் கத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த கப்பல்
தலைவனின் குரலும் வீட்டு எசமானி அம்மாளின் கூக்குரலும் கேட்டுக்
கொண்டிருக்கின்றது. இப்பொழுது திடீரென்று அந்த காட்சியானது உடைகின்றது.
இப்பொழுது நான் ஒரு சவப்பெட்டியினில்
வைத்து தூக்கிக் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றேன். அந்த
சவப்பெட்டியானது அசைந்துக் கொண்டிருப்பதனை நான் உணருகின்றேன். அதனைக்
குறித்து நான் சிந்திக்கும் பொழுது முதல் முறையாக நான் இறந்து விட்டேன்
என்ற சிந்தனை என்னுள் தெளிவாக எழுகின்றது. நான் இறந்து விட்டேன் என்பதனை
நான் அறிந்து இருக்கின்றேன். அதனை நான் சந்தேகிக்கவில்லை. என்னால் எதனையும்
காண முடியவில்லை. அசையவும் முடியவில்லை. இருந்தும் என்னால் உணரவும்
சிந்திக்கவும் முடிகின்றது. ஆனால் நீண்ட நேரம் சிந்தித்துக்
கொண்டிருக்காமல், கனவுகளில் நாம் எப்பொழுதும் செய்வதனைப் போன்றே, நான்
இறந்து விட்டேன் என்ற அந்த உண்மையினை எவ்விதமான கேள்வியுமின்றி ஏற்றுக்
கொள்ளுகின்றேன்.
இப்பொழுது அவர்கள் என்னை
புதைக்கின்றார்கள். பின்னர் அனைவரும் கிளம்பிச் செல்லுகின்றார்கள். நான்
தனியாக இருக்கின்றேன். முற்றிலும் தனியாக இருக்கின்றேன். என்னால் அசைய
முடியவில்லை. முன்பு நான் இந்நிகழ்வினைக் குறித்து, அதாவது ‘நான்
புதைக்கப்படும் பொழுது எனக்கு எப்படி இருக்கும்’, சிந்தித்துக்
கொண்டிருக்கும் பொழுது, நான் புதைக்கப்படும் பொழுது அங்கே மிகவும்
குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் என்றே எப்பொழுதும் எண்ணி இருந்து
இருக்கின்றேன். எனவே இப்பொழுதும் நான் மிகவும் குளிராக, அதுவும் குறிப்பாக
எனது கால் விரல் நுனிகள் மிகவும் குளிர்ந்ததனைப் போன்றே உணர்ந்தேன். ஆனால்
அதனைத் தவிர நான் வேறெதனையும் உணரவில்லை.
நான் அப்படியே வேறு எதனையும்
எதிர்பார்க்காமல் அங்கே இருந்தேன். இறந்த மனிதன் எதிர்பார்ப்பதற்கு என்று
எதுவும் இல்லை என்பதனை நான் அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தேன். இருந்தும்
அவ்விடம் ஈரப்பதமாக இருந்தது. ஒரு மணி நேரம் கழிந்ததா, அல்லது சில நாட்களா
அல்லது பல நாட்கள் கழிந்தனவா என்பதனை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால்
திடீரென்று என்னுடைய சவப்பெட்டியின் மூடியின் வழியாக எப்படியோ
நுழைந்திருந்த ஒரு துளி நீர், மூடி இருந்த எனது இடது கண்ணின் மீது
விழுந்தது. ஒரு நிமிடத்திற்கு பின் மற்றொமொரு நீர் துளி வந்து விழுந்தது.
அப்படியே ஒரு நிமிட இடைவெளியில் அந்த நீர் துளிகள் என் மீது விழுந்த வண்ணமே
இருந்தன. ஆழமான கோபம் ஒன்று என்னுடைய இதயத்தில் கொழுந்து விட்டு எரிய
ஆரம்பித்தது. ஆனால் திடீரென்று அந்த கோபத்துடன் ஒரு உடல் சார்ந்த
வலியினையும் நான் உணரலானேன். ‘ஆ…என்னுடைய புண் தான் வலிக்கின்றது…அங்கே
நான் சுட்டுக் கொண்ட ஒரு தோட்டா இருக்கின்றது’ என்றே நான் எண்ணிக்
கொண்டேன். அந்த நீர்த் துளிகளானவை தொடர்ந்து ஒரு நிமிட இடைவெளியில் எனது
கண்ணின் மீது விழுந்த வண்ணமே இருந்தன.
அதற்கு மேலும் தாங்க இயலாதவனாய் நான்
திடீரென்று, என்னைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் இவ்வனைத்து
விடயங்களுக்கும் எசமானராக இருப்பவரை நோக்கி அழைக்க ஆரம்பித்தேன். குரலினைக்
கொண்டு நான் அவரை அழைக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுது அசைவற்றவனாக நான்
இருந்தேன். மாறாக என்னுடைய முழு இருப்பையும் வைத்தே நான் அவரை அழைத்தேன்.
எனது குரல் அல்ல…நானே அவரை அழைத்துக் கொண்டிருந்தேன்.
“நீங்கள் யாராக இருப்பீனும் சரி, நீங்கள்
அங்கே இருந்தீர்கள் என்றால், இப்பொழுது இங்கே கடந்து கொண்டிருக்கும்
நிகழ்வினை விட அர்த்தம் மிக்க வேறொன்று இருக்குமேயானால், அதனை இங்கேயும்
நிகழ அனுமதியுங்கள். அல்லது நீங்கள், அசிங்கமாகவும் நகைப்பிற்கிடமாகவும்
இருக்க கூடிய என்னுடைய இந்த சூழலின் மூலமாக, அர்த்தமற்ற என்னுடைய
தற்கொலைக்காக என்னைப் பழி வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இதனைத்
தெளிவாக அறிந்துக் கொள்ளுங்கள். எவ்வளவு வாதையானது என் மீது விழுந்தாலும்
சரி, அவற்றை நான் அமைதியாக அலட்சியப்படுத்தப் போகின்றேன். அந்த
வாதைகளானவைகள் இலட்சம் ஆண்டுகள் தொடர்ந்தாலும் சரி என்னுடைய
அலட்சியப்படுத்தலுக்கு அவை ஈடாக முடியாது.” என்றே நான் அவரை நோக்கி அழைத்து
விட்டு அமைதியானேன்.
கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரத்திற்கு
என்னுடைய அந்த மௌனமானது நீடித்து இருந்தது. அந்தத் தருணத்தில் மற்றுமொரு
நீர் துளியும் கூட என் மீது விழுந்து தான் இருந்தது. இருந்தும் இப்பொழுது
நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்தும் நிச்சயமாக மாறப் போகின்றன என்பதனை
மட்டும் உறுதியாக நான் நம்பினேன். அச்சமயம் திடீரென்று எனது சவக்குழியானது
திறந்தது. அதாவது, அக்குழியானது தோண்டி எடுக்கப்பட்டு திறக்கப்பட்டதா
இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தெரியாத ஒருவரால் நான்
விண்வெளியில் அழைத்துக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று
என்னால் மீண்டும் பார்க்க முடிந்தது. அது ஒரு இரவுப் பொழுதாக இருந்தது.
அத்தகைய ஓர் இருளினை நான் அதுவரை கண்டதே இல்லை. நாங்கள் பூமியை விட்டு
விலகி விண்வெளியில் விரைந்து சென்றுக் கொண்டிருந்தோம். என்னை அழைத்துக்
கொண்டு சென்றிருந்தவரிடம் நான் எதனையும் கேட்கவில்லை. அவ்வாறு நாங்கள்
எவ்வளவு நேரம் பயணித்துக் கொண்டிருந்தோம் என்பது எனக்குத் தெரியவில்லை.
கனவுகளில் நிகழ்வதனைப் போன்றே காலத்திற்குரிய விதிகளுக்கு அப்பாற்பட்டு
இருந்தது எங்களது பயணம். திடீரென்று அந்த இருளினில் மின்னிக் கொண்டிருந்த
ஒரு சிறு நட்சத்திரத்தினை நான் கண்டேன். எதனைக் குறித்தும் எக்கேள்வியையும்
கேட்க கூடாது என்றிருந்த பொழுதும் என்னால் என்னுடைய ஆவலினை அப்பொழுது
தடுக்க முடியவில்லை.
“அது சிரியஸ் நட்சத்திரமா…?” என்றே நான் கேட்டேன்.
“இல்லை…நீ வீடு திரும்பிக் கொண்டிருந்த
பொழுது மேகங்களுக்கு இடையே கண்ட நட்சத்திரம் தான் அது” என்றே என்னை அழைத்து
சென்றுக் கொண்டிருந்த அந்த நபர் கூறினார். ஒரு மனிதனானவன் எப்படி பதில்
அளித்திருப்பானோ அவ்வாறே தான் அவர் பதில் அளித்து இருந்தார் என்பதனை நான்
அறிந்து இருந்தேன். ஏனோ தெரியவில்லை, எனக்கு அவரைப் பிடித்து இருக்கவில்லை.
ஒருவிதமான வெறுப்பினையும் நான் அவர் மீது உணர்ந்தேன். என்னை நானே சுட்டுக்
கொண்ட பொழுது, முற்றிலுமாக இல்லாதவனாகிப் போவேன் என்றே நான் எண்ணி
இருந்தேன். மனிதர்கள் எவருடனும் எனக்கு இனிமேல் ஒன்றுமே இருக்கப்போவதில்லை
என்றே நான் கருதி இருந்தேன். ஆனால் இங்கேயோ நான் ஒருவரது கைகளில் இருந்து
கொண்டிருக்கின்றேன். அவர் மனிதரல்ல தான், இருந்தும் அவர் இதோ இருந்து
கொண்டு தான் இருக்கின்றார்.
“ஆ…மரணத்திற்கு பின்னரும் வாழ்வானது
இருக்கத்தான் செய்கின்றதோ…”என்றே நான் கனவுகளில் எண்ணுவதை போல் சாதாரணமாக
எண்ணிக் கொண்டேன். “அப்படி நான் மீண்டும் மற்றொருவரின் விருப்பத்தின்படி
வாழ்ந்தாகத் தான் வேண்டும் என்றால், தவிர்க்க முடியாத அந்த சூழலில் நான்
தோற்கடிக்கப்படவோ அல்லது அவமானப்படவோ விரும்பவில்லை” என்றே நான் எனக்குள்
எண்ணிக் கொண்டேன்.
“நான் உங்களைக் குறித்து அஞ்சுகின்றேன்
என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் அதற்காக என்னை வெறுக்கவும்
செய்கின்றீர்கள்” என்றே நான் என்னுடன் வந்துக் கொண்டிருந்தவரிடம் கூறினேன்.
அவ்வாறு என்னுடைய நெஞ்சினில் இருந்ததை அவரிடம் கூறியது சற்று அவமானமாகத்
தான் இருந்தாலும், அவரிடம் என்னுடைய அவமானத்தினை பொருட்படுத்தாது என்னுடைய
எண்ணத்தை திடீரென்று ஒப்புக் கொண்டேன். என்னுடைய அந்த கூற்றிற்கு அவர் எந்த
பதிலையும் அளிக்கவில்லை. ஆனால் திடீரென்று, என்னை யாரும் வெறுக்கவும்
இல்லை என்னைக் கண்டு சிரிக்கவும் இல்லை என்றே எனக்கு தோணலாயிற்று. கூடவே
என் மீது யாரும் வருத்தப்படவும் இல்லை என்றும் தோணிற்று. எங்களுடைய
பயணத்திற்கு ஒரு குறிப்பிட்ட புதிரான நோக்கம் இருக்கின்றது என்றும், அதில்
நான் மட்டுமே சம்பந்தப்பட்டு இருக்கின்றேன் என்றும் நான் உணரலானேன்.
என்னுடைய இதயத்தினில் பயம் கூடிக் கொண்டே
இருந்தது. என்னுடன் வந்துக் கொண்டிருந்த அந்த நபரிடம் இருந்து மௌனமாக ஆனால்
அதே நேரத்தில் வேதனைத் தரக் கூடிய ஏதோ ஒரு சிந்தனை என் நெஞ்சைக்
கிழிக்கும் வண்ணம் என்னிடம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது . நாங்கள்
தொடர்ந்து இருளையும் அறியப்படாத வெளிகளையும் கடந்த வண்ணம் பயணித்துக்
கொண்டே இருந்தோம். நான் அறிந்திருந்த நட்சத்திரக் கூட்டங்களை எல்லாம்
கடந்து வெகு நேரமாகி விட்டது. விண்வெளியில் இருக்கும் சில நட்சத்திரங்களில்
இருந்து வரும் ஒளியானது பூமியினை சில ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு
அப்புறமோ அல்லது இலட்சக்கணக்கான வருடங்களுக்கு அப்புறமோ தான் வந்தடையும்
என்று நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஒருவேளை நாங்கள் அப்படிப்பட்ட
வெளிகளில் தான் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்க கூடுமாயிருக்கும்.
அப்பொழுது திடீரென்று ஏதோ மிகவும் பழக்கப்பட்ட ஒரு உணர்ச்சி என்னுள் வந்து
என்னை உலுக்கியது. ஆம்…நான் திடீரென்று நமது சூரியனைக் கண்டேன்.
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக