நானும் நான் வாடகைக்கு தங்கி இருந்த
அறையிற்கு வந்து சேர்ந்தேன். ஒரு அரை வட்ட சாளரத்தினைக் கொண்டிருந்த
ஏழ்மையான அந்த சிறிய அறையானது ஐந்தாவது மாடியினில் இருந்தது. ஒரு
மெழுகுவர்த்தியினை ஏற்றி வைத்துவிட்டு அங்கிருந்த சாய்வு நாற்காலியினில்
அமர்ந்த வண்ணம் நான் சிந்திக்க ஆரம்பித்தேன். எனது பக்கத்து அறையினில்
ஓய்வு பெற்ற ஒரு கப்பல் தலைவன் வசித்து வந்தான். மேலும் மற்றுமொரு
அறையினில் ராணுவ வீரன் ஒருவனின் மனைவி அவர்களது மூன்று குழந்தைகளுடன்
வசித்து வந்து கொண்டிருந்தாள். பொதுவாக ஓய்வு பெற்ற தலைவனின் அறைக்கு அவனது
சகாக்கள் வருவது வாடிக்கையாக இருக்கும். அவர்கள் அங்கே குடித்துக்
கொண்டும் சீட்டாடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் பொழுதினை கழித்துக்
கொண்டிருப்பர். வீட்டு எசமானி அம்மாளுக்கு அவர்கள் மீது ஏதேனும் புகாரினை
பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த தலைவனின் மீது இருந்த
பயத்தின் காரணமாக அவள் அவ்வாறு செய்யாமல் அனைத்தையும் பொறுத்துக்
கொண்டிருந்தாள்.
அன்றும் அவ்வாறு அந்த ஓய்வு பெற்ற தலைவனின்
சகாக்கள் ஆறு பேர் அவனது அறைக்கு வந்திருந்து குடித்துக் கொண்டும்
கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்து
கொண்டிருந்தது என்னுடைய வாழ்வினில் எவ்விதமான பாதிப்பினையோ அல்லது
மாற்றதினையோ ஏற்படுத்தவில்லை. அவர்களின் செயல்பாடுகள் எனக்கு
முக்கியமற்றவைகளாகவே இருந்தன. இரவு முழுமையும் நான் முழித்து இருந்தாலும்
அவர்களது கூச்சல்களை நான் கவனத்தில் கொள்ள மாட்டேன். அவர்களை நான்
முற்றிலுமாக மறந்து விட்டு இருப்பேன். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருட காலமாக
இரவு வேலையினில் நான் தூங்குவதில்லை. விடியும் வரையில் முழித்துக் கொண்டே
இருப்பேன். இரவு முழுமையும் எனது மேசைக்கு அருகே ஒரு சாய்வு நாற்காலியினில்
அமர்ந்த வண்ணமே நான் இருப்பேன். பகற்பொழுதினில் மட்டுமே நான்
புத்தகங்களைப் படிப்பேன். ஆனால் இரவு வேளையினில் நான் வேறு எந்த
வேலையினையும் செய்வதில்லை. வெறுமன மேசையின் முன்னர் அமர்ந்து மட்டுமே
இருப்பேன். சிந்திக்க கூட மாட்டேன். சில சிந்தனைகள் எனது மனதினில் உலாவத்
துவங்கினாலும் நான் அவற்றைக் கண்டு கொள்ளாது அவற்றை நீங்கி செல்ல விட்டு
விடுவேன். அவ்விரவு முழுமையும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டே
இருக்கும்.
நான் அந்த மேசையின் முன்னர் அமைதியாக
அமர்ந்து, அதனுள் இருந்த துப்பாக்கியினை மெதுவாக வெளியே எடுத்து அதனை
எனக்கு முன்னர் வைத்தேன். அதனை எனக்கு முன்னர் வைத்த பொழுது ‘இது நிகழ்ந்து
ஆக வேண்டுமா?” என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது எனக்கு நன்றாக
நினைவில் இருக்கின்றது. அக்கேள்விக்கு ‘ஆம்..!!!’ என்றே உறுதியாக நான்
எனக்குள் பதில் அளித்துக் கொண்டதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது.
என்னுள் நிகழ்ந்த அக்கேள்வி பதிலின் அர்த்தம் இது தான் – என்னை நானே
சுட்டுக் கொள்ளப் போகின்றேன். உறுதியாக அன்றிரவு என்னை நானே சுட்டுக்
கொள்ளப் போகின்றேன் என்பதனை நான் அறிந்து இருந்தேன். ஆனால் அந்த
துப்பாக்கியினைப் பார்த்தவாறே எவ்வளவு நேரம் நான் அந்த மேசையின் முன்னே
அமர்ந்து இருக்கப் போகின்றேன் – அதனை நான் அறிந்திருக்கவில்லை. அப்பெண்
மட்டும் அன்று என்னுடைய வாழ்வினில் வராமல் இருந்து இருந்தால் நான்
நிச்சயமாக என்னை சுட்டுக் கொண்டு இருப்பேன்.
ஆனால் பாருங்கள், அச்சிறுமியினைக் குறித்த
சம்பவமானது எனக்கு எவ்வகையிலும் முக்கியமானதொன்றாக இல்லாதிருந்தாலும், ஒரு
வகையான வலியினை நான் உணரத் தான் செய்தேன். உதாரணமாக எவராவது என்னை
உடல்ரீதியாக அடித்தார்கள் என்றால், அக்கணம் என்னால் வலியினை உணர முடியும்.
அதனைப் போன்றே தான் மனிதநேயத்தின் அடிப்படையிலும் இருக்கின்றது : மிகவும்
வருத்தகரமான நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்தது என்றால், நான் நிச்சயம்
வருத்தமடைந்து இரக்கம் கொள்வேன். அந்நிகழ்வானது என்னுடைய வாழ்வினில் யாதொரு
முக்கியத்துவத்தையோ அல்லது தாக்கத்தினையோ கொண்டிராதிருந்தாலும், நான்
நிச்சயமாக இரக்கம் கொள்வேன். அன்றிரவும் நான் இரக்கம் கொள்ளத் தான்
செய்தேன். மேலும், நிச்சயமாக நான் அந்த சிறுமிக்கு உதவியும் செய்து இருந்து
இருப்பேன். அப்படியிருக்க நான் ஏன் அந்த சிறுமிக்கு உதவியினை செய்யாது
போனேன்?
அவள் என்னுடைய உதவியினைக் கோரிக்
கொண்டிருந்த பொழுது என்னுடைய மனதினில் தோன்றிய ஒரு சிந்தனையினாலேயே நான்
அச்சிறுமிக்கு உதவி புரியாது போனேன். அச்சிறுமியானவள் எனது கைகளை
இழுத்தவாறு என்னை உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தப் பொழுது, திடீரென்று என்
முன்னே ஒரு கேள்வியானது உருப்பெற்று நின்றது. அந்த கேள்வியானது இயல்பான
ஒன்றாக இருந்த பொழுதும் அக்கேள்விக்கு என்னால் அப்பொழுது விடையினைக் காண
முடியவில்லை. இயல்பான அந்த கேள்வி என்னைக் கோபமுறச் செய்தது.
என்னை நானே அன்றிரவு கொலை செய்துக்
கொள்வதென்ற முடிவினை நான் ஏற்கனவே எடுத்து விட்டிருந்தேன் என்றால்,
அந்நிலையில் இந்த உலகில் உள்ள யாவையும் எனக்கு யாதுமொரு
முக்கியத்துவமுமற்றவைகளாக அல்லவா மாறி இருந்திருக்க வேண்டும். அவ்வாறே
அவைகள் மாறி இருக்க வேண்டும் என்றே நான் முடிவும் செய்து இருந்தேன். ஆனால்
அனைத்தும் அவ்வாறு இருக்க, ஏன் திடீரென்று அவைகள் எனக்கு முக்கியமானவைகளாக
இருப்பதனைப் போல் நான் உணர்ந்து அந்த சிறுமிக்காக இரக்கப்பட்டேன்? அந்த
சிறுமிக்காக நான் மிகவும் இரக்கப்பட்டது எனக்கு இன்றும் நியாபகம்
இருக்கின்றது. நான் அன்றிருந்த அந்த அசாத்தியமான சூழலிலும் அச்சிறுமியை
எண்ணி என்னுள் ஒருவகையான புதிரான வலியினை நான் உணரத் தான் செய்தேன். நான்
அன்று உணர்ந்த வலியினை என்னால் இதனை விடவும் தெளிவாகவோ அல்லது விரிவாகவோ
விளக்குவதற்கு முடியவில்லை. இருந்தும் அவ்வலியானது நான் என்னுடைய மேசையின்
முன்னர் விரக்தியில் அமர்ந்திருந்த பொழுதிலும் கூட தொடர்ந்து இருந்து
கொண்டே தான் இருந்தது. அதனைக் குறித்த என்னுடைய ஒவ்வொரு சிந்தனையில்
இருந்தும் வேறு பிற சிந்தனைகள் உருபெற்றுக் கொண்டே இருந்தன.
நான் இறந்து போகும் பொழுது
ஒன்றுமில்லாதவனாக, ஒரு பூஜ்யமாக மாறி விடுவேன். ஆனால் அவ்வாறு நான் இறந்து
போகாத வரையிலும் நான் உயிருள்ளவனாகவே இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு
பூஜ்யமாக மாறாது உயிரோடு இருக்கின்ற வரையிலும் என்னால் துயரப்படவோ,
கோபப்படவோ அல்லது எனது நடவடிக்கைகளுக்காக வெட்கப்படவோ நிச்சயமாக முடியும்.
அது எனக்குத் தெளிவாக புரிந்தது. நல்லது. ஆனால் இன்னும் இரண்டு மணி
நேரத்தினில் என்னை நானே கொலை செய்துக் கொள்ள போகின்ற இத்தருணத்தினில்,
அந்தச் சிறுமிக்கு என்னவானால் எனக்கென்ன? அவளால் எனக்கென்ன ஆகப் போகின்றது?
இந்த உலகத்தினில் வெட்கப்படுவதனைக் குறித்தோ அல்லது வேறு எதனைக் குறித்தோ
நான் ஏன் அக்கறைக் கொள்ள வேண்டும்? நானே ஒரு பூஜ்யமாக, முற்றிலும்
இல்லாதவனாக ஆகப் போகின்றேன்.
ஒருவேளை, ‘முற்றிலுமாக நான் இல்லாதவனாகப்
போகின்றேன். நானே ஒன்றுமில்லாதவனாக ஆன பின்பு இங்கும் வேறொன்றும் இருக்கப்
போவதில்லை’ என்கின்ற இந்த சிந்தனை தான் அச்சிறுமியின் மீது நான் இரக்கம்
கொண்டிருந்தாலும் அவளுக்கு உதவ விடாமல் என்னைத் தடுத்து இருக்குமோ? அதனைப்
போன்றே அற்பத்தனமான எனது அந்த செயலினைக் குறித்து நான் வெட்கப்படுவதையும்
அந்த சிந்தனையே தடுத்து இருக்குமோ?
“இங்கே பார்…நான் இரக்கப்படவில்லை என்பது
மட்டும் அல்ல. மனிதத்தன்மையற்ற எவ்விதமான சுயநலச் செயலினையும் என்னால்
இப்பொழுது செய்ய முடியும். ஏன் என்றால் இன்னும் இரண்டு மணி நேரத்தினில்
அனைத்தும் அர்த்தமற்று ஒன்றுமில்லாது போய் விடும்.” என்ற சிந்தனையின்
காரணமாகவே நான் அந்த பாவப்பட்ட சிறுமியினை நோக்கி ஆக்ரோசமாக கத்தி
இருந்தேன். நான் அந்தச் சிந்தனையினாலேயே தான் அவ்வாறு கத்தி இருந்தேன்
என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களா? அந்த சிந்தனையினால் தான் நான் அவ்வாறு
நடந்துக் கொண்டேன் என்பதனை நான் இப்பொழுது உறுதியாக நம்புகின்றேன்.
வாழ்வும் இந்த உலகும் என்னைச் சார்ந்தே
இருப்பதனைப் போன்றே எனக்கு தெளிவாக புலப்பட்டது. எனக்காக மட்டுமே
படைக்கப்பட்டதைப் போன்றே இவ்வுலகானது இப்பொழுது இருந்தது என்றும் கூட
ஒருவரால் கூற முடியும் : என்னை நானே சுட்டுக் கொள்வேன், அப்பொழுது என்னைப்
பொறுத்த வரைக்குமாவது இந்த உலகென்ற ஒன்று இல்லாது போய் விடும். ஒருவேளை
எனக்கப்புறம் இங்கே எவருக்குமே ஒன்றுமில்லாதே போய் விட்டாலும் விடலாம்.
என்னுடைய சிந்தனையானது எப்பொழுது அணைந்து விடுகின்றதோ அப்பொழுது அதனுடனே
ஒருவேளை இந்த ஒட்டு மொத்த உலகமும் ஒரு மாயாவியைப் போன்று மறைந்து விடக்
கூடும். என்னுடைய சிந்தனையின் ஒரு உதரிப் பொருளினைப் போல இந்த உலகமும்
என்னுடைய சிந்தனையுடனே அழிந்தும் போய் விடலாம். ஒருவேளை இந்த மொத்த உலகமும்
அதில் இருந்த மக்கள் அனைவரும் எனது சிந்தனையின் அம்சமாக, நானாகக் கூடவே
இருந்திருக்கலாம்.
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக