அவர்களுடைய சில பாடல்களை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை நான் புரிந்துக் கொண்டாலும், அவர்களது பாடலின் முழுமையான அர்த்தத்தினை என்னால் அறிந்துக் கொள்ள முடியவில்லை. என்னுடைய மூளைக்கு எட்டாத வண்ணமே அவை இருந்தன ஆயினும் எனது இதயத்தினுள், நான் அறியாமலேயே அவை ஆழமாக ஊடுருவிக் கொண்டிருந்தன.

அங்கிருந்த அதே மகிழ்ச்சியும் மகிமையும் நான் பூமியிலிருந்த பொழுதே என்னுடன் வேதனையான ஒரு குரலில் பேசி இருக்கின்றன. சில நேரங்களில் அக்குரலானது தாங்கவொண்ணா துயரடைந்த நிலையிலும் இருந்திருக்கின்றது. என்னுடைய இதயத்தின் கனவுகளிலும், தீவிரமான ஒரு சிந்தனையில் மூழ்கி என்னையே நான் மறந்திருக்கும் நிலையினிலும் அந்த மகிழ்ச்சியினையும் மகிமையினையும் குறித்து நான் அறிந்திருந்தேன். அவற்றின் விளைவாக சில நேரங்களில் சூரியன் மறைவதை காணும் பொழுது கண்ணீர் சிந்துவதை நிறுத்த முடியாமலும் நான் இருந்திருக்கின்றேன். நமது பூமியிலிருந்த மக்களின் மேல் நான் கொண்டிருந்த வெறுப்பானது எப்பொழுதும் அதனுள்ளே ஒரு வகையான வேதனையினை கொண்டே தான் இருந்து இருக்கின்றது….ஏன் என்னால் அவர்களை நேசிக்காமல் அவர்களை வெறுக்க முடியவில்லை? அவர்களை மன்னிக்காது இருக்க ஏன் என்னால் முடியவில்லை? அவர்கள் மேல் நான் கொண்டிருக்கும் அன்பினில் ஏன் ஒரு வகையான வேதனை இருந்துக் கொண்டே இருக்கின்றது? ஏன் அவர்களை வெறுக்காமல் என்னால் அவர்களை நேசிக்க முடியவில்லை?

இவ்வாறு அங்கிருந்த அனைத்தைக் குறித்தும் வெகுகாலத்திற்கு முன்னரே நான் எண்ணி இருக்கின்றேன் என்று நான் அவர்களிடம் பல முறை கூறி இருக்கின்றேன். நான் கூறிய அனைத்தையும் அவர்கள் மிகவும் கவனமாக கேட்டார்கள் ஆயினும் நான் எதனைப் பற்றிக் கூறுகின்றேன் என்பதனை அவர்களால் கற்பனைக் கூட செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவர்களிடம் என் மனதில் இருந்ததைக் கூறியதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் நமது பூமியில் கைவிட்டு வந்தவர்களுக்காக பட்டுக் கொண்டிருந்த வேதனையின் ஆழத்தை அவர்கள் உணர்ந்துக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆம்…எப்பொழுதும் அன்பினால் நிறைந்திருக்கும் அவர்களது கண்களினால் அவர்கள் என்னைக் கண்ட பொழுதும், அவர்கள் என்னுடன் இருந்த பொழுது என்னுடைய இதயமும் அவர்களுடையதைப் போன்றே பரிசுத்தமானதாகவும் உண்மையானதாகவும் மாறியதை உணர்ந்தப் பொழுதும், அவர்களை முழுமையாகப் புரிந்துக் கொள்ள என்னால் முடியாதிருந்ததைக் கண்டு நான் வருத்தமடையவில்லை. மாறாக வாழ்வினை முழுமையாக நான் அந்நொடியில் மெய்மறந்த வண்ணம் உணர்ந்தேன். அவர்களை நான் அமைதியாக வணங்கிக் கொண்டிருந்தேன்.

ஆ…இப்பொழுது அனைவரும் என்னைக் கண்டு சிரிக்கின்றனர். கனவினில் கூட ஒருவனால் நான் கூறுகின்ற விடயங்களைப் போன்று பார்க்க முடியாது என்றே அவர்கள் கூறுகின்றனர். ஒருவித மனக்குழப்பமான நேரத்தில் என்னுடைய இதயமானது ஒரு சில உணர்வுகளைத் தோற்றுவித்து இருக்கும் என்றும் அதன் தொடர்பாக மற்ற விடயங்கள் அனைத்தையும் விழித்து எழுந்தவுடன் நானாக கற்பனையில் உருவாக்கிக் கொண்டு இருப்பேன் என்றுமே அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். ஒருவேளை அவர்கள் கூறுவதனைப் போன்று தான் நடந்தும் இருக்கும் என்று நான் அவர்களிடம் கூறிய பொழுது, ஆ…அவர்கள் எப்படி சிரித்தார்கள்.

ஆம்…அந்த கனவினைப் பற்றிய உணர்வினால் தான் நிறைந்திருந்தேன். அந்த கனவு மட்டுமே தான் என்னுடைய காயம்பட்ட இதயத்தில் எஞ்சி இருந்தது . அந்த கனவினில் நான் கண்ட அந்த உண்மையான வடிவங்கள் மற்றும் அனைத்தும் மிகவும் அழகாக, மிகவும் உண்மையாக, முழுமை அடைந்து இருந்தவைகளாக இருந்தன. ஆகவே தான் என்னால் நான் விழிப்படைந்ததற்குப் பின்னால் வெறும் வார்த்தைகளில் அவற்றை சரியாக விவரிக்க முடியவில்லை. இருந்தும் அவற்றைப் பற்றி விரைவாக எப்படியாவது மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்ற ஆவலினால், எனது மனதில் பதிந்திருந்த அவற்றைப் பற்றி, என்னை அறியாமலேயே சில விடயங்களை நானே உருவாக்கி சொல்லி இருக்கலாம். வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியாத அவற்றைப் பற்றி அப்படி கூறி இருக்கும் பொழுது உண்மையான அந்த விடயங்களை சில நேரம் திரித்தும் இருக்கலாம்.

இருந்தும் அவை அனைத்தும் உண்மையானவை அல்ல என்று எப்படி என்னால் நம்ப முடியும்? நான் கூறுவதனை விட ஆயிரம் மடங்கு அவை சிறந்தவைகளாகவும், ஒளி நிறைந்தவைகளாகவும், மகிழ்ச்சி நிறைந்தவைகளாகவும் இருந்தன என்பதனை எப்படி என்னால் மறுக்க முடியும்? அது ஒரு கனவாகவே இருந்து விட்டு போகட்டும். இருந்தும் அவை முழுமையும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்க முடியாது. நான் உங்களுக்கு இப்பொழுது ஒரு இரகசியத்தினைச் சொல்லுகின்றேன்: ஒரு வேளை அது ஒரு கனவாகவே இருந்திருக்காது. ஏனென்றால் என்னால் கனவினால் கூட சிந்தித்திருக்க முடியாத வண்ணம் ஒரு பயங்கர செயலானது உண்மையில் அங்கே நடந்தது. அந்த கனவானது என்னுடைய இதயத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து இருக்கட்டும்…பிரச்சனை இல்லை…ஆனால் அதன் பின்னர் நிகழ்ந்த அந்த பயங்கரமான உண்மையினை எனது இதயத்தினால் மட்டுமேவா உருவாக்கி இருக்க முடியும்? அந்த விடயத்தினை எப்படி நானே என்னுடைய இதயத்தினில் சிந்தித்திருக்கவோ அல்லது உருவாக்கி இருக்கவோ முடியும்?

ஆ…நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்…நான் இதுவரை நான் செய்ததை உங்களிடம் இருந்து மறைத்து இருந்து இருக்கின்றேன். ஆனால் இப்பொழுது இந்த உண்மையினையும் நான் உங்களிடம் கூறியே முடிக்கின்றேன். அந்த உண்மையானது என்னவென்றால்….நான் அந்த மனிதர்களை கெடுத்து விட்டேன்!!!

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

இங்கே பாருங்கள்…அது ஒரு கனவாகவே கூட இருந்து விட்டு போகட்டும். ஆனால் பாவமேதும் அறிந்திராத அந்த மக்கள் என் மேல் காட்டிய அந்த அன்பு உணர்ச்சியானது என்னுள் அதன் பிறகு எப்பொழுதும் இருந்துக் கொண்டு தான் இருக்கின்றது. இப்பொழுதும் கூட அவர்கள் அங்கிருந்து என் மீது அன்பினைப் பொழிந்துக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் உணர்கின்றேன். அவர்களை என் கண்களால் நானே கண்டேன். நான் அவர்களை அறிந்து இருந்தேன். அவர்கள் இருக்கின்றார்கள் என்பதனை நான் தெளிவாக நம்பவும் செய்தேன். நான் அவர்களை நேசித்தேன், பின்பு அவர்களுக்காக நான் வருத்தப்படவும் செய்தேன். இருந்தும் அவர்களை என்னால் முழுமையாகப் புரிந்துக் கொள்ள முடியாது என்பதனை நான் அப்பொழுதே உடனடியாகப் புரிந்துக் கொண்டேன்.

நான் ரஷ்ய நாட்டினைச் சார்ந்த ஒரு முற்போக்கு சிந்தனையாளன்…அப்படிப்பட்ட என்னுடைய சிந்தனையினால், அவர்கள் அவ்வளவு அறிந்திருந்தும் அவர்களிடம் நம்மிடம் இருக்கின்ற அறிவியலானது இல்லை என்கின்ற ஒரு விடயத்தினை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் வெகுவிரைவில் நான் ஒன்றினைப் புரிந்துக் கொண்டேன். பூமியில் நாம் கொண்டிருக்கும் நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருந்தன அவர்களது நோக்கங்களும் விருப்பங்களும். அவர்கள் எதற்காகவும் ஆசைப்படவில்லை. எப்பொழுதும் அமைதியான நிலையிலேயே அவர்கள் வாழ்ந்தும் வந்தனர். நம்மைப் போல் வாழ்வினைக் குறித்த அறிவினை அறிந்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களது வாழ்வானது முழுமையடைந்து இருந்தது. அவர்கள் அனைத்தையும் ஏற்கனவே அடைந்து இருந்தனர். ஆயினும் அவர்களது அறிவானது நம்முடைய அறிவியலைக் காட்டிலும் ஆழமானதாகவும் பரந்ததாகவும் இருந்தது.

நம்முடைய அறிவியலோ, எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக வாழ்வினைக் குறித்து அறிந்துக் கொண்டு அதனை விளக்க முற்படுகின்றது. ஆனால் அவர்கள் அந்த அறிவியல் இல்லாமலேயே எப்படி வாழ வேண்டும் என்று அறிந்திருந்தனர். அது எனக்குப் புரிந்தது. ஆனால் அவர்களது அறிவினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அங்கிருந்த மரங்களை எனக்கு சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் அந்த மரங்களை மிகுந்த அன்புடன், ஏதோ அம்மரங்களும் அவர்களது இனத்தினைச் சார்ந்தவை தான் என்பதனைப் போன்றே அவர்கள் கண்டார்கள். அந்த அன்பின் அளவினை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் அம்மரங்களுடன் பேசிக் கொண்டும் இருக்க கூடும் என்றே நான் கூறலாம். என்னுடைய அந்த கூற்றானது நிச்சயம் தவறாக இருக்காது. ஆம்…அவர்கள் அம்மரங்களின் மொழியினை அறிந்துக் கொண்டார்கள்…அம்மரங்களும் அவர்களைப் புரிந்துக் கொண்டன என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

இயற்கை முழுமையையும் அவர்கள் ஒன்றாகவே கண்டார்கள். அவர்களுடன் அமைதியாக வாழ்ந்து வந்த மிருகங்கள் அவர்களைத் தாக்கவில்லை. மாறாக அவர்களது அன்பினால் வெல்லப்பட்டு அவைகளும் அவர்களை நேசித்தன. அவர்கள் நட்சத்திரங்களை என்னிடம் காண்பித்து ஏதோ ஒன்றினைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் பேசியது எனக்கு புரியவில்லை, ஆனால் அவர்களுக்கும் அந்த விண்வெளி நட்சத்திரங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு, வெறும் சிந்தனையினால் மட்டுமல்ல அதையும் தாண்டி வாழ்வோடு பின்னிப் பிணைத்திருக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது என்பதனை நான் தெளிவாக நம்பினேன்.

அவர்கள் எதனையும் எனக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக எவ்விதமான முயற்சியும் செய்யவில்லை. எதனையும் நான் புரிந்துக் கொள்ளாமல் இருந்தாலும் அவர்கள் என்னை நேசிக்கத் தான் செய்தனர். ஆனால் அவர்களாலும் என்னைப் புரிந்துக் கொள்ள முடியாது என்பதனை நான் அறிந்து தான் இருந்தேன். ஆகவே நம்முடைய பூமியினைக் குறித்து நான் அவர்களிடம் பேசாமலேயே இருந்தேன்.சில நேரங்களில் வியப்புடன் என்னை நானே கேட்டுக் கொள்வேன், எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகின்றது? என்னைப் போன்றிருக்கும் ஒரு மனிதனை கேவலப்படுத்தாமலும், என்னுள் எவ்விதமான பொறாமையையும் பேராசையையும் தூண்டாமலும் இவர்களால் எப்படி இப்படி இருக்க முடிகின்றது?

அவர்கள் குழந்தைகளைப் போன்று துறுதுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். அழகான காடுகளிலும் தோட்டங்களிலும் அவர்கள் உலாவினார்கள். அழகான பாடல்களை அவர்கள் பாடினார்கள். மரங்களில் இருந்து கிடைத்த பழங்கள், காடுகளில் இருந்து சேகரித்த தேன், அவர்களை நேசித்த விலங்குகளிடம் இருந்து கிடைத்த பால் என்ற எளிமையான உணவினையே அவர்கள் அருந்தினார்கள். அவர்களது உணவிற்காகவும் உடைகளுக்காகவும் அவர்கள் சிறிதளவே உழைத்தார்கள்.

அவர்களுள் அன்பும் இருந்தது…குழந்தைகளும் பிறந்தன. இருந்தும் ஒருமுறை கூட நான் நம்முடைய பூமியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொண்டிடும் அந்த பயங்கரமான உடற் சார்ந்த சிந்தனைகளை அவர்களிடம் கண்டதில்லை. அந்தச் சிந்தனைகளே மனிதகுலத்தின் அனைத்து விதமான பாவங்களுக்கும் கிட்டத்தட்ட மூல காரணமாக இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளைக் கண்டு களிகூர்ந்தனர். அவர்களது சொர்கத்தினை பங்கிட்டு கொள்ள வந்திருக்கும் புது நபர்களாக அவர்கள் அக்குழந்தைகளைக் கண்டனர். அவர்களுள் வாக்குவாதங்களோ அல்லது பொறாமையோ துளியும் கிடையாது. அவைகள் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அவற்றின் அர்த்தங்களை அவர்கள் புரிந்துக் கொள்ளவே இல்லை. அவர்களது குழந்தைகள் அனைவருடைய குழந்தைகளாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஒரு மிகப் பெரிய குடும்பமாகவே இருந்தார்கள். மரணமானது அவர்களிடத்தில் இருந்தாலும், நோய் என்ற ஒன்று அவர்களிடம் கிடையாது. அவர்களது முதிய மக்கள், மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு விடைக்கொடுக்க சூழ்ந்திருக்கும் பொழுது, அவர்கள் அனைவரையும் வாழ்த்திக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏதோ உறங்கப் போவதனைப் போன்றே காலமானார்கள்.

அவ்வாறு அவர்கள் மரணமடைந்ததைக் கண்டு எவரும் துயரங் கொண்டோ அல்லது கண்ணீர் சிந்தியோ நான் கண்டதில்லை. மாறாக அந்த நொடியில் அன்பானது அதனது உச்ச கட்ட பேரானந்த நிலையினில் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. அந்த அன்பானது முழுமையானதும், அமைதியானதும் ஒரு தியான நிலையினைப் போன்றதுமாக இருந்தது. அம்மக்கள் ஒருவேளை இறந்துப் போனவர்களுடன் தொடர்ந்து தொடர்பினைக் கொண்டே தான் இருந்தனர் என்றே ஒருவர் எண்ணலாம். அவர்களுடன் இருந்த அந்த பந்தமானது மரணத்தினால் எந்தொரு பாதிப்பும் அடைந்திடவில்லை என்றும் எண்ணலாம். நித்தியமான வாழ்வினைக் குறித்து நான் அவர்களிடம் வினவிய பொழுது அவர்களால் எனது கேள்வியினைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. மரணத்திற்கு பின்னர் இருக்கும் வாழ்வினைப் பற்றி அவர்கள் அவர்களது ஆழ்மனதில் தெளிவாக உணர்ந்து அறிந்திருந்தமையினால், அது ஒரு கேள்வியாகவே அவர்களுக்குத் தோன்றவில்லை.

அவர்கள் எந்தொரு கோவிலையும் அவர்களுக்கென்று கொண்டிருக்கவில்லை. இருந்தும் வாழ்விற்கு அத்தியாவசியமான வண்ணம் அவர்கள் ஒட்டுமொத்த அண்டத்தோடும் ஒன்றிணைந்து இருந்தனர். அவர்கள் அவர்களுக்கென்று எந்தொரு தனிப்பட்ட நம்பிக்கையினையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், எப்பொழுது இயற்கையின் எல்லைக்குட்பட்ட அளவில் அவர்களது மகிழ்ச்சிகரமான இந்த வாழ்வு முழுமை அடைகின்றதோ, அப்பொழுது அவர்கள் அனைவரும் அந்த முழுமையான அண்டத்தோடு இன்னும் சிறப்பான நிலையில் ஒன்றுப்படும் தருணம் ஒன்று வரும் என்பதனை தெளிவாக அறிந்திருந்தனர். அந்த தருணத்திற்காக அவர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அவசரப்படவும் இல்லை, அதனை எண்ணித் துயரப்படவும் இல்லை.

மாலை நேரங்களில், உறங்கச் செல்லுவதற்கு முன்பாக அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுக் கூடி பாடல்கள் பாடுவதை அவர்கள் விரும்பினர். கடந்துச் சென்ற அந்த தினமானது அவர்களுக்குத் தந்துச் சென்றிருந்த அனைத்தைப் பற்றியும் அவர்கள் அந்த பாடல்களில் கூறினார்கள். அன்றைய தினத்தினை அவர்கள் போற்றி அதற்கு பிரியாவிடையும் அளித்தனர். இயற்கையை, பூமியினை, கடல் மற்றும் அந்த கானகங்களை அவர்கள் அப்பாடல்களில் புகழ்ந்தனர். மேலும் குழந்தைகளைப் போன்று அவர்களுள் ஒருவரைப் பற்றி மற்றவர் பாராட்டிக் கொண்டும் புகழ்ந்துக் கொண்டும் இருப்பதனைப் போன்று பாடல்களை இயற்றினர். அவர்களது இதயத்தில் இருந்து எழுந்த அந்த பாடல்கள் மிகவும் எளிமையாக இருந்தன. இதயத்தினை ஊடுருவிச் செல்லும் வல்லமைப் பெற்றும் அவை இருந்தன. பாடல்கள் மட்டுமல்ல, மாறாக அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்வுமே மற்றவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுவதில் அடங்கி இருந்ததைப் போன்றே தான் இருந்தது. தன்னைப் போலவே மற்றவர்களையும் கருதும் ஒரு உயர்ந்த அன்பானது அவர்களுள் நிறைந்திருந்தது.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

நமது பூமியினை உருவாக்கி இருக்கும் சூரியனாய் அது இருக்க முடியாது என்பதனை நான் அறிந்து இருந்தேன். மேலும் நமது சூரியனிடம் இருந்து கணக்கிட முடியாத தொலைவில் நாங்கள் இருந்தோம் என்பதனையும் நான் அறிந்திருந்தேன். இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால், அந்த சூரியனானது நம்முடைய சூரியனைப் போன்றே முற்றிலுமாக இருந்தது என்றும் நமது சூரியனின் மற்றுமொரு பிரதியாக, ஒரு நகலாக இருந்தது என்றுமே என்னால் உணர முடிந்தது. இனிமையான ஒரு உணர்வின் அழைப்பு என்னுடைய ஆன்மாவினில் மகிழ்ச்சியுடன் ஒலித்தது. எந்த ஒளியானது எனக்கு பிறப்பினைத் தந்திருந்ததோ, அந்த ஒளியின் இயல்பு சக்தியானது என்னுடைய இதயத்தினில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒளியானது என்னுடைய இதயத்தினை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தது. நான் வாழ்வினை உணர்ந்தேன். மரணத்திற்கு பின்னர் முதல் முறையாக நான் என்னுடைய பழைய வாழ்வினை மீண்டும் உணர்ந்தேன்.

“இது சூரியனாக இருக்குமேயானால், இது நமது சூரியனைப் போன்றே முற்றிலுமாக இருக்கின்ற ஒரு சூரியனே என்றால்…பூமியானது எங்கே?” என்றே நான் வினவினேன். என்னுடன் இருந்தவர் தொலைவில் ஒரு மரகத கல்லினைப் போன்று மின்னிக் கொண்டிருந்த ஒரு சிறு நட்சத்திரத்தினை நோக்கி கை காட்டினார். நாங்கள் அவளை நோக்கித் தான் விரைந்துக் கொண்டிருந்தோம்.

“இப்படிப்பட்ட பிரதிகள் பிரபஞ்சத்தில் இருப்பது உண்மையிலேயே சாத்தியம் தானா? உண்மையிலேயே அது இயற்கையின் விதி தானா?…மேலும்…அங்கிருப்பது பூமியாக இருக்கும் பட்சத்தில், உண்மையிலேயே அது நமது பூமியினைப் போலவா முற்றிலும் இருக்கக் கூடும்…நமது பூமியினைப் போன்று துரதிர்ஷ்டசாலியாகவும் ஏழ்மை நிறைந்தவளாகவும், அதே நேரத்தில் தன்னுடைய மிகவும் இழிந்த நன்றியற்ற குழந்தையின் மனதிலும் அவளின் மீது அன்பினை பிறப்பிக்க செய்பவளாகவும், என்றென்றும் அன்பிற்குரியவளாகவுமா இந்த பூமியானது இருக்கக் கூடும்?” என்றே நான் கதறினேன். எந்த பூமியினை நான் கைவிட்டு இருந்தேனோ, அந்த பூமியின் மீதிருந்த அளவுக்கடந்த ஆனந்தமான அன்பினால் நான் தடுக்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தேன். நான் காயப்படுத்தி இருந்த அந்த ஏழைச் சிறுமியின் உருவமானது என் முன்னே தோன்றி மறைந்துக் கொண்டிருந்தது.

“அனைத்தையும் நீயே காண்பாய்” என்றே என்னுடன் வந்தவர் பதிலளித்தார். அவருடைய வார்த்தைகளில் சிறிது சோகம் கலந்து இருந்தது. நாங்கள் விரைவாக அந்த பூமியினை நெருங்கிக் கொண்டிருந்தோம். அந்த கிரகமானது எனது கண்முன்னே வளர்ந்துக் கொண்டிருந்தது, ஏற்கனவே என்னால் பெருங்கடல்களையும், ஐரோப்பிய கண்டத்தின் எல்லைகளையும் வரையறை செய்ய முடிந்தது. ஆனால் அப்பொழுது திடீரென்று ஒருவிதமான பொறாமை ஒன்று எனது இதயத்தினில் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.

“பூமியினைப் போன்றே இருக்கும் இப்படிப்பட்ட ஒரு நகல் இருப்பது எப்படி சாத்தியமாகும்? எதற்காக இப்படி ஒன்று இருக்க வேண்டும்? நன்றியற்றவனாகிய என்னுடைய இரத்தத்தினை, என்னை நானே சுட்டுக் கொண்டு வாழ்வினை முடித்துக் கொண்ட பொழுது மண்ணில் சிந்திய இரத்தத்தினை, சுமந்து கொண்டிருக்கும் அந்த பூமியினைத் தான் நான் நேசிக்கின்றேன். அதனை மட்டுமே தான் என்னால் நேசிக்க முடியும். என்னுடைய வாழ்வினை நானே முடித்துக் கொண்டிருந்தாலும், அவளை நேசிப்பதை நான் நிறுத்தி இருக்கவில்லை. சரியாக கூற வேண்டுமேயானால், அன்றிரவு தான் நான் அவளை மிகவும் அதிகமாக நேசித்தேன். அது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தாலும் அவளை நான் அதிகமாக நேசித்தேன். இந்த புதிய பூமியில் துயரங்கள் இருக்கின்றனவா? நமது பூமியில் நம்மால் துயரங்களின் மூலமாகவே உண்மையாக நேசிக்க முடியும். நம்மால் வேறு எப்படியும் நேசிக்க முடியாது. துயரத்தின் மூலமாக வெளிப்படும் அன்பினைத் தவிர நாம் வேறொரு அன்பினை அறியோம். இந்த நொடியில், நான் கண்ணீர் சிந்தியவாறு நான் விட்டு வந்த அந்த பூமியின் மீது முத்தம் செய்ய விரும்புகின்றேன்…வேறு எந்த உலகிலும் எனக்கு எவ்விதமான வாழ்வும் வேண்டாம்…அதனை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்.” என்றே நான் இதயத்தில் இருந்து கதறினேன்.

ஆனால் என்னுடன் வந்திருந்த அந்த நபர் என்னை விட்டுவிட்டு ஏற்கனவே சென்று இருந்தார். திடீரென்று நான் அந்த பூமியின் மீது, கிட்டத்தட்ட எப்படி அங்கே வந்தேன் என்றே எனக்கு புலப்படாமல் நின்றுக் கொண்டிருந்தேன். வெளிச்சம் மிகுந்த ஒரு பகற்பொழுதினில், சொர்க்கம் போல் அழகாய் இருந்த அந்த பூமியினில் நான் நின்றுக் கொண்டிருந்தேன்.

நமது பூமியிலுள்ள கிரேக்கத் தீவு கூட்டங்களைப் போன்றிருந்த தீவுக் கூட்டங்களில் ஒன்றினிலோ அல்லது அத்தீவுக் கூட்டங்களுக்கு அருகாமையில் இருந்த ஒரு நிலப்பகுதியின் கடற்கரை ஒன்றினிலோ நான் நின்றுக் கொண்டு இருந்தேன். அங்கிருந்த அனைத்தும் நமது பூமியினில் இருப்பவற்றைப் போன்றே தான் இருந்தன. இருந்தும் அவை அனைத்தும் ஒரு விதமான புனித உணர்வினை கோலாகலமாக தங்களிடமிருந்து பரப்பிக் கொண்டிருந்ததைப் போலவே தோன்றியது. இறுதியில் வெற்றியினை அடைந்து விட்ட ஒரு உயர்ந்த உணர்வினையே அவை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. மரகதக் கடலோ, தனது அலைகளை மெதுவாக கரையின் மீது பரப்பி அதனை அன்புடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. அக்கடலானது, தான் என்ன செய்கின்றோம் என்பதனை அறிந்தே செய்து கொண்டிருந்ததைப் போன்றே தோன்றியது. அழகிய உயர்ந்த மரங்கள் அங்கே பூக்களாலும் இலைகளாலும் நிரம்பப்பட்டு அங்கே நின்றுக் கொண்டிருந்தன. அன்பான வார்த்தைகளைக் கூறி ஒருவரை வரவேற்பதனைப் போன்றே அம்மரங்கள் என்னை அவர்களது மிருதுவான இனிய ஒலியினால் என்னை வரவேற்றன. அவைகள் என்னை அப்படி வரவேற்றன என்பதனை மறுக்க முடியாதபடி நான் நம்பினேன்.

வண்ணமயமான பூக்களால் புற்கள் மின்னிக் கொண்டிருந்தன. பறவைக் கூட்டங்கள், என் மீது துளியும் அச்சமின்றி, வானத்தில் பறந்து வந்தபடி என்னுடைய தோள்களிலும் கைகளிலும் வந்தமர்ந்தன. அவற்றின் அருமையான சிறகுகளை விசிறியவாறு அவைகள் என்னை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தன. பின்னர் இறுதியாக, மகிழ்ச்சியானது நிறைந்து இருந்த அந்த பூமியின் மனிதர்களையும் நான் கண்டறிந்துக் கொண்டேன். அவர்களாகவே அவர்கள் என்னை நோக்கி வந்தார்கள். அவர்கள் என்னை சூழ்ந்துக் கொண்டு என்னை முத்தமிடவும் செய்தார்கள். சூரியனின் குழந்தைகள் அவர்கள்…அவர்களது சூரியனின் குழந்தைகள்…ஆ…அவர்கள் தான் எவ்வளவு அழகாக இருந்தார்கள். அத்தகைய அழகான ஒரு மனிதனை நான் நமது உலகினில் கண்டதே கிடையாது. ஒருவேளை நமது குழந்தைகளில், அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கின்ற அந்த சில வருடங்களில் மட்டும், அத்தகைய அழகினை மங்கலாக சிறிதளவு நாம் கண்டிருக்கலாம். அம்மனிதர்களின் கண்கள் தெளிவான ஓர் பிரகாசத்தோடு மின்னிக் கொண்டிருந்தன. அவர்களது முகமானது தெளிவான விழிப்புணர்வினால் தோன்றும் அமைதியினையும் நேர்த்தியான சிந்தனையையும் ஒருசேர வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இருந்தும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களது வார்த்தைகளிலும் குரல்களிலும் எப்பொழுதும் ஒரு குழந்தையினைப் போன்ற குதூகலம் இருந்துக் கொண்டே இருந்தது.

அவர்களது முகத்தினை பார்த்த முதல் நொடியிலேயே நான் அனைத்தையும் புரிந்துக் கொண்டேன்…ஆம்…அனைத்தையும் புரிந்துக் கொண்டேன். வீழ்ச்சிக்கு முன்பிருந்த பூமி தான் இது. இங்கிருந்த மக்கள் இன்னும் பாவம் செய்திருக்கவில்லை. நமது மூதாதையர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தனர் என்று புராணக்கதைகளில் கூறப்பட்ட சொர்க்கத்தில் தான் இந்த மக்கள் வாழ்ந்து வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்கள் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறே என்னைச் சுற்றிக் கொண்டு, என்னை நன்றாக கவனிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களுடன் என்னையும் அழைத்துச் சென்றனர். அவர்களுள் ஒவ்வொருவரும் என்னை நிம்மதியாகவும் நலமாகவும் ஆக்குவதற்கு அவர்களால் இயன்ற எதையேனும் செய்வதற்கு தயாராக இருந்தனர். ஆ…அவர்கள் என்னைக் குறித்து ஒன்றையும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் அனைத்தையும் அறிந்திருந்தனர் என்றே எனக்குத் தோணிற்று. என்னுடைய முகத்தில் இருந்த வலியினை விரைவில் களைய வேண்டும் என்றே அவர்கள் விரும்பினர்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

கனவுகளில் சில நேரம் நீங்கள் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுவீர்கள் அல்லது கத்தியினால் குத்தப் படுவீர்கள் அல்லது அடிப்படுவீர்கள். ஆனால் நீங்கள் ஒருபொழுதும் அப்பொழுது வலியினை உணர்ந்து இருக்க மாட்டீர்கள். சில நேரம் உங்களது படுக்கையில் நீங்கள் உண்மையாகவே காயப்பட்டு இருந்தீர்கள் என்றால் மட்டுமே உங்களால் வலியினை உணர முடியும். அப்படிப்பட்ட ஒரு சம்பவமானது எப்பொழுதும் உங்களை எழுப்பி விட்டு விடும். அதனைப் போன்றே தான் எனது கனவிலும் நடந்தது. நான் எந்தொரு வலியினையும் உணரவில்லை. ஆனால் நான் என்னைச் சுட்டுக் கொண்ட பொழுது என்னுள் இருந்த அனைத்தும் ஆடியதனைப் போன்றும், அனைத்தும் அணைந்துப் போனதைப் போன்றுமே நான் எண்ணிக் கொண்டேன். என்னைச் சுற்றி இருந்த அனைத்தும் பயங்கர இருளாக மாறிப் போயிருந்தன.

நான் ஒரு குருடனைப் போன்றும் ஊமையைப் போன்றும் ஆகிப் போயிருந்தேன். ஏதோ கடினமான ஒன்றின் மீது எனது முதுகினை முழுமையாக கிடத்தியவாறே நான் படுத்து இருந்தேன். என்னால் எதனையும் காண முடியவில்லை. சிறிதளவு கூட என்னால் அசைய முடியவில்லை. என்னைச் சுற்றி சிலர் நடக்கின்றார்கள், சிலர் கத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த கப்பல் தலைவனின் குரலும் வீட்டு எசமானி அம்மாளின் கூக்குரலும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. இப்பொழுது திடீரென்று அந்த காட்சியானது உடைகின்றது.

இப்பொழுது நான் ஒரு சவப்பெட்டியினில் வைத்து தூக்கிக் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றேன். அந்த சவப்பெட்டியானது அசைந்துக் கொண்டிருப்பதனை நான் உணருகின்றேன். அதனைக் குறித்து நான் சிந்திக்கும் பொழுது முதல் முறையாக நான் இறந்து விட்டேன் என்ற சிந்தனை என்னுள் தெளிவாக எழுகின்றது. நான் இறந்து விட்டேன் என்பதனை நான் அறிந்து இருக்கின்றேன். அதனை நான் சந்தேகிக்கவில்லை. என்னால் எதனையும் காண முடியவில்லை. அசையவும் முடியவில்லை. இருந்தும் என்னால் உணரவும் சிந்திக்கவும் முடிகின்றது. ஆனால் நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருக்காமல், கனவுகளில் நாம் எப்பொழுதும் செய்வதனைப் போன்றே, நான் இறந்து விட்டேன் என்ற அந்த உண்மையினை எவ்விதமான கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

இப்பொழுது அவர்கள் என்னை புதைக்கின்றார்கள். பின்னர் அனைவரும் கிளம்பிச் செல்லுகின்றார்கள். நான் தனியாக இருக்கின்றேன். முற்றிலும் தனியாக இருக்கின்றேன். என்னால் அசைய முடியவில்லை. முன்பு நான் இந்நிகழ்வினைக் குறித்து, அதாவது ‘நான் புதைக்கப்படும் பொழுது எனக்கு எப்படி இருக்கும்’, சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் புதைக்கப்படும் பொழுது அங்கே மிகவும் குளிராகவும் ஈரப்பதமாகவும் இருக்கும் என்றே எப்பொழுதும் எண்ணி இருந்து இருக்கின்றேன். எனவே இப்பொழுதும் நான் மிகவும் குளிராக, அதுவும் குறிப்பாக எனது கால் விரல் நுனிகள் மிகவும் குளிர்ந்ததனைப் போன்றே உணர்ந்தேன். ஆனால் அதனைத் தவிர நான் வேறெதனையும் உணரவில்லை.

நான் அப்படியே வேறு எதனையும் எதிர்பார்க்காமல் அங்கே இருந்தேன். இறந்த மனிதன் எதிர்பார்ப்பதற்கு என்று எதுவும் இல்லை என்பதனை நான் அப்படியே ஏற்றுக் கொண்டிருந்தேன். இருந்தும் அவ்விடம் ஈரப்பதமாக இருந்தது. ஒரு மணி நேரம் கழிந்ததா, அல்லது சில நாட்களா அல்லது பல நாட்கள் கழிந்தனவா என்பதனை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் திடீரென்று என்னுடைய சவப்பெட்டியின் மூடியின் வழியாக எப்படியோ நுழைந்திருந்த ஒரு துளி நீர், மூடி இருந்த எனது இடது கண்ணின் மீது விழுந்தது. ஒரு நிமிடத்திற்கு பின் மற்றொமொரு நீர் துளி வந்து விழுந்தது. அப்படியே ஒரு நிமிட இடைவெளியில் அந்த நீர் துளிகள் என் மீது விழுந்த வண்ணமே இருந்தன. ஆழமான கோபம் ஒன்று என்னுடைய இதயத்தில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஆனால் திடீரென்று அந்த கோபத்துடன் ஒரு உடல் சார்ந்த வலியினையும் நான் உணரலானேன். ‘ஆ…என்னுடைய புண் தான் வலிக்கின்றது…அங்கே நான் சுட்டுக் கொண்ட ஒரு தோட்டா இருக்கின்றது’ என்றே நான் எண்ணிக் கொண்டேன். அந்த நீர்த் துளிகளானவை தொடர்ந்து ஒரு நிமிட இடைவெளியில் எனது கண்ணின் மீது விழுந்த வண்ணமே இருந்தன.

அதற்கு மேலும் தாங்க இயலாதவனாய் நான் திடீரென்று, என்னைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் இவ்வனைத்து விடயங்களுக்கும் எசமானராக இருப்பவரை நோக்கி அழைக்க ஆரம்பித்தேன். குரலினைக் கொண்டு நான் அவரை அழைக்கவில்லை. ஏனென்றால் அப்பொழுது அசைவற்றவனாக நான் இருந்தேன். மாறாக என்னுடைய முழு இருப்பையும் வைத்தே நான் அவரை அழைத்தேன். எனது குரல் அல்ல…நானே அவரை அழைத்துக் கொண்டிருந்தேன்.

“நீங்கள் யாராக இருப்பீனும் சரி, நீங்கள் அங்கே இருந்தீர்கள் என்றால், இப்பொழுது இங்கே கடந்து கொண்டிருக்கும் நிகழ்வினை விட அர்த்தம் மிக்க வேறொன்று இருக்குமேயானால், அதனை இங்கேயும் நிகழ அனுமதியுங்கள். அல்லது நீங்கள், அசிங்கமாகவும் நகைப்பிற்கிடமாகவும் இருக்க கூடிய என்னுடைய இந்த சூழலின் மூலமாக, அர்த்தமற்ற என்னுடைய தற்கொலைக்காக என்னைப் பழி வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இதனைத் தெளிவாக அறிந்துக் கொள்ளுங்கள். எவ்வளவு வாதையானது என் மீது விழுந்தாலும் சரி, அவற்றை நான் அமைதியாக அலட்சியப்படுத்தப் போகின்றேன். அந்த வாதைகளானவைகள் இலட்சம் ஆண்டுகள் தொடர்ந்தாலும் சரி என்னுடைய அலட்சியப்படுத்தலுக்கு அவை ஈடாக முடியாது.” என்றே நான் அவரை நோக்கி அழைத்து விட்டு அமைதியானேன்.

கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரத்திற்கு என்னுடைய அந்த மௌனமானது நீடித்து இருந்தது. அந்தத் தருணத்தில் மற்றுமொரு நீர் துளியும் கூட என் மீது விழுந்து தான் இருந்தது. இருந்தும் இப்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்தும் நிச்சயமாக மாறப் போகின்றன என்பதனை மட்டும் உறுதியாக நான் நம்பினேன். அச்சமயம் திடீரென்று எனது சவக்குழியானது திறந்தது. அதாவது, அக்குழியானது தோண்டி எடுக்கப்பட்டு திறக்கப்பட்டதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தெரியாத ஒருவரால் நான் விண்வெளியில் அழைத்துக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று என்னால் மீண்டும் பார்க்க முடிந்தது. அது ஒரு இரவுப் பொழுதாக இருந்தது. அத்தகைய ஓர் இருளினை நான் அதுவரை கண்டதே இல்லை. நாங்கள் பூமியை விட்டு விலகி விண்வெளியில் விரைந்து சென்றுக் கொண்டிருந்தோம். என்னை அழைத்துக் கொண்டு சென்றிருந்தவரிடம் நான் எதனையும் கேட்கவில்லை. அவ்வாறு நாங்கள் எவ்வளவு நேரம் பயணித்துக் கொண்டிருந்தோம் என்பது எனக்குத் தெரியவில்லை. கனவுகளில் நிகழ்வதனைப் போன்றே காலத்திற்குரிய விதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது எங்களது பயணம். திடீரென்று அந்த இருளினில் மின்னிக் கொண்டிருந்த ஒரு சிறு நட்சத்திரத்தினை நான் கண்டேன். எதனைக் குறித்தும் எக்கேள்வியையும் கேட்க கூடாது என்றிருந்த பொழுதும் என்னால் என்னுடைய ஆவலினை அப்பொழுது தடுக்க முடியவில்லை.

“அது சிரியஸ் நட்சத்திரமா…?” என்றே நான் கேட்டேன்.

“இல்லை…நீ வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது மேகங்களுக்கு இடையே கண்ட நட்சத்திரம் தான் அது” என்றே என்னை அழைத்து சென்றுக் கொண்டிருந்த அந்த நபர் கூறினார். ஒரு மனிதனானவன் எப்படி பதில் அளித்திருப்பானோ அவ்வாறே தான் அவர் பதில் அளித்து இருந்தார் என்பதனை நான் அறிந்து இருந்தேன். ஏனோ தெரியவில்லை, எனக்கு அவரைப் பிடித்து இருக்கவில்லை. ஒருவிதமான வெறுப்பினையும் நான் அவர் மீது உணர்ந்தேன். என்னை நானே சுட்டுக் கொண்ட பொழுது, முற்றிலுமாக இல்லாதவனாகிப் போவேன் என்றே நான் எண்ணி இருந்தேன். மனிதர்கள் எவருடனும் எனக்கு இனிமேல் ஒன்றுமே இருக்கப்போவதில்லை என்றே நான் கருதி இருந்தேன். ஆனால் இங்கேயோ நான் ஒருவரது கைகளில் இருந்து கொண்டிருக்கின்றேன். அவர் மனிதரல்ல தான், இருந்தும் அவர் இதோ இருந்து கொண்டு தான் இருக்கின்றார்.

“ஆ…மரணத்திற்கு பின்னரும் வாழ்வானது இருக்கத்தான் செய்கின்றதோ…”என்றே நான் கனவுகளில் எண்ணுவதை போல் சாதாரணமாக எண்ணிக் கொண்டேன். “அப்படி நான் மீண்டும் மற்றொருவரின் விருப்பத்தின்படி வாழ்ந்தாகத் தான் வேண்டும் என்றால், தவிர்க்க முடியாத அந்த சூழலில் நான் தோற்கடிக்கப்படவோ அல்லது அவமானப்படவோ விரும்பவில்லை” என்றே நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன்.

“நான் உங்களைக் குறித்து அஞ்சுகின்றேன் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் அதற்காக என்னை வெறுக்கவும் செய்கின்றீர்கள்” என்றே நான் என்னுடன் வந்துக் கொண்டிருந்தவரிடம் கூறினேன். அவ்வாறு என்னுடைய நெஞ்சினில் இருந்ததை அவரிடம் கூறியது சற்று அவமானமாகத் தான் இருந்தாலும், அவரிடம் என்னுடைய அவமானத்தினை பொருட்படுத்தாது என்னுடைய எண்ணத்தை திடீரென்று ஒப்புக் கொண்டேன். என்னுடைய அந்த கூற்றிற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. ஆனால் திடீரென்று, என்னை யாரும் வெறுக்கவும் இல்லை என்னைக் கண்டு சிரிக்கவும் இல்லை என்றே எனக்கு தோணலாயிற்று. கூடவே என் மீது யாரும் வருத்தப்படவும் இல்லை என்றும் தோணிற்று. எங்களுடைய பயணத்திற்கு ஒரு குறிப்பிட்ட புதிரான நோக்கம் இருக்கின்றது என்றும், அதில் நான் மட்டுமே சம்பந்தப்பட்டு இருக்கின்றேன் என்றும் நான் உணரலானேன்.

என்னுடைய இதயத்தினில் பயம் கூடிக் கொண்டே இருந்தது. என்னுடன் வந்துக் கொண்டிருந்த அந்த நபரிடம் இருந்து மௌனமாக ஆனால் அதே நேரத்தில் வேதனைத் தரக் கூடிய ஏதோ ஒரு சிந்தனை என் நெஞ்சைக் கிழிக்கும் வண்ணம் என்னிடம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது . நாங்கள் தொடர்ந்து இருளையும் அறியப்படாத வெளிகளையும் கடந்த வண்ணம் பயணித்துக் கொண்டே இருந்தோம். நான் அறிந்திருந்த நட்சத்திரக் கூட்டங்களை எல்லாம் கடந்து வெகு நேரமாகி விட்டது. விண்வெளியில் இருக்கும் சில நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியானது பூமியினை சில ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு அப்புறமோ அல்லது இலட்சக்கணக்கான வருடங்களுக்கு அப்புறமோ தான் வந்தடையும்  என்று நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஒருவேளை நாங்கள் அப்படிப்பட்ட வெளிகளில் தான் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்க கூடுமாயிருக்கும். அப்பொழுது திடீரென்று ஏதோ மிகவும் பழக்கப்பட்ட ஒரு உணர்ச்சி என்னுள் வந்து என்னை உலுக்கியது. ஆம்…நான் திடீரென்று நமது சூரியனைக் கண்டேன்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 | 4 |

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

அவ்வாறு என்னுடைய மேசையினில் அமர்ந்துக் கொண்டு, என்னுள் எழுந்த கேள்விகளை புதிய கோணத்தில் கண்டு, புதிதான சிந்தனைகளை நான் அன்று கண்டு கொண்டிருந்தது எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது. உதாரணமாக,

நான் ஒருவேளை நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்திலோ வசித்து வந்திருந்தவனாக இருந்து, அங்கே மிகவும் வெட்கப்படத்தக்க மனிதத்தன்மையற்ற கேவலமான செயலினை நான் செய்து, அச்செயலுக்காக அங்கே மிகவும் கேவலப்பட்டு மதிப்பிழந்து போய் இருந்திருக்கும் நிலையில், நான் இங்கே பூமிக்கு நிரந்தரமாக வந்து விட்டேன் என்றால், என்னுடைய அந்த கேவலமான செயலினைக் குறித்து நான் இங்கே, இப்பூமியில், வெட்கப்படுவேனா அல்லது மாட்டேனா? மீண்டும் நான் நிலவிற்கு செல்ல மாட்டேன் என்ற நிலையில், அங்கே நான் செய்த கேவலமான செயலானது என்னுடைய மனதினில் மறையாது நின்றிருக்கும் பொழுது, அச்சிந்தனையானது என்னுடைய வாழ்வினில் ஒரு பொருட்டாக இருக்குமா அல்லது இல்லையா?

என்பதனை போன்ற கேள்விகள் என்னுளே ஓடிக் கொண்டிருந்தன. எனக்கு முன்னே எனது துப்பாக்கியானது எனக்காகத் தயாராக காத்திருந்த பொழுது, இக்கேள்விகளானவைகள் பயனற்றதும் தேவையற்றதுமாகவுமே இருந்தன. இருந்தாலும் அக்கேள்விகள் என்னுள் ஏதோ ஒரு உணர்ச்சியினை தூண்டிக் கொண்டிருந்தன. அக்கேள்விகளால் நான் சீற்றமடைந்துக் கொண்டிருந்தேன். அக்கேள்விகளில் எவற்றேனுக்கும் விடையினைக் காணாது என்னால் மரணமடைய முடியாது என்கின்ற ஒரு நிலையே அப்பொழுது இருந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அச்சிறுமியானவள் என்னுடைய வாழ்வினைக் காப்பாற்றி இருந்தாள். ஏனென்றால் அக்கேள்விகளின் விளைவாகவே நான் என்னை சுட்டுக் கொள்வதை தாமதித்து இருந்தேன். அதே நேரத்தில் அருகிருந்த அந்த கப்பல் தலைவனின் அறையிலும் அனைத்தும் அமைதியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் அவர்களுடைய சீட்டாட்டத்தினையும் சச்சரவுகளையும் ஒருவழியாக முடித்துக் கொண்டு உறங்குவதற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தினில் தான் நான் எனது சாய்வு நாற்காலியில் அமர்ந்த வண்ணமே திடீரென்று தூங்க ஆரம்பித்தேன். அதனைப் போன்று அது வரை ஒருபோதும் நடந்ததே கிடையாது. என்னை அறியாமலேயே நான் தூங்கத் தொடங்கி இருந்தேன்.

அனைவரும் பொதுவாக அறிந்து இருப்பதனைப் போல, கனவுகள் முற்றிலும் வித்தியாசமானவை தான். சில விஷயங்கள், எவ்வாறு ஒரு நகை ஆசாரியானவன் தன்னுடைய நகையின் ஒவ்வொரு அங்குலத்தையும் நேர்த்தியாக செய்து இருப்பானோ அதனைப் போன்றே மிகவும் துல்லியமாக மிகுந்த நேர்த்தியுடன் கனவினில் படம்பிடிக்கப் பட்டு இருக்கும். அதே நேரம் மற்ற சில விஷயங்களோ, உதாரணமாக காலம் மற்றும் இடங்கள் ஆகிய விடயங்கள், அவற்றை நாம் கவனிக்காது செல்லும் வண்ணமே அமைந்திருக்கும். கனவுகள் ‘ஏன்’ என்று சிந்திக்க வைக்கும் ‘காரண அறிவில்’ இருந்து தோன்றுவதில்லை. அவைகள் ஆசைகளில்  இருந்தே தோன்றுகின்றன. மூளையில் இருந்தல்ல, இதயத்தில் இருந்தே கனவுகள் தோன்றுகின்றன. இருந்தும் சில நேரங்களில் என்னுடைய சிந்தனையானது என்னுடைய கனவுகளில் செய்திருக்கும் புத்திசாலித்தனமான செயல்கள் தான் எத்தனை!!! இருந்தும் சில நேரங்களில் சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத சில விஷயங்களும் கனவுகளில் நிகழத்தான் செய்கின்றன.

உதாரணமாக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய சகோதரன் இறந்து விட்டிருந்தான். சில நேரம் நான் அவனை என்னுடைய கனவினில் காணுகின்றேன். கனவினில் நான் செய்து கொண்டிருக்கும் விடயங்களில் அவனும் பங்கெடுத்துக் கொள்கின்றான். நாங்கள் இரண்டு பேருமே மிகுந்த ஆர்வத்துடன் அக்கனவில் இருக்கின்றோம். இருந்தும் அக்கனவு முழுமையும் நான், என்னுடைய சகோதரன் இறந்து விட்டான் என்பதையும் அவனை அடக்கம் செய்தாயிற்று என்பதனையும் தெளிவாக நினைவில் கொண்டு தான் இருக்கின்றேன். அவ்வாறு இருக்கையில் ஏன் நான் எவ்விதமான ஆச்சரியமும் அடையவில்லை? அவன் இறந்து போயிருந்தாலும், இதோ என்னருகில் என்னுடன் இருந்துக் கொண்டு என்னுடன் வேலையைச் செய்துக் கொண்டிருக்கின்றான். ஏன் என்னுடைய சிந்தனையானது இதனை முழுமையாக அனுமதிக்கின்றது? சரி…இத்துடன் இது போதும். நான் என்னுடைய கனவிற்கே நேரடியாக வருகின்றேன்.

ஆம்…நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று நான் அந்த கனவினைக் கண்டேன். அது வெறும் கனவென்றே இன்று அவர்கள் என்னை நோக்கி கிண்டல் செய்கின்றனர். ஆனால் அக்கனவானது உண்மையை எனக்கு அறிவித்திருக்கும் பட்சத்தில், அது வெறும் கனவாக இருந்தால் என்ன அல்லது கனவாக இல்லாதிருந்தால் தான் என்ன? ஏனென்றால், நீங்கள் ஒருமுறை உண்மையினை அறிந்துக் கொண்டு அதனைக் கண்டு விட்டீர்களே என்றால், அதுவே தான் உண்மையானது என்றும் அதனைத் தவிர்த்து உண்மையென்று வேறொன்றும் கிடையாது/இருக்கவும் முடியாது என்பதனையும் நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள். நீங்கள் முழித்துக் கொண்டிருந்தீர்கள் என்றாலும் சரி அல்லது உறங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றாலும் சரி,உண்மையினை நீங்கள் கண்டு விட்டீர்களே என்றால் நீங்கள் அதனை நிச்சயமாக அறிந்துக் கொள்வீர்கள்.

எனவே நான் கண்டது ஒரு கனவாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எந்த வாழ்வினை நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்களோ, அதனை தற்கொலையின் மூலமாக முடித்துக் கொள்ளவே நான் விரும்பினேன். ஆனால் எனது கனவோ, உயர்ந்ததும் புதியதுமானதான ஒரு வலிமையான வாழ்வினை என்முன்னே புதுப்பித்து  காட்டியது.

கவனியுங்கள்…!!!

என்னை அறியாமலேயே நான் உறங்கிப் போனேன் என்றே நான் கூறி இருந்தேன். திடீரென்று நான் அக்கனவினைக் காண ஆரம்பித்தேன். என்னுடைய நாற்காலியினில் அமர்ந்துக் கொண்டே நான் திடீரென்று எனக்கு முன்பிருந்த அத்துப்பாக்கியினை எடுத்து நேராக எனது இதயத்தினை நோக்கி குறி வைக்கின்றேன். என்னுடைய தலையில் அதுவும் குறிப்பாக வலது நெற்றியில் சுட்டுக் கொள்ள வேண்டும் என்றே நான் முன்னர் தீர்மானித்து இருந்தேன். ஆனால் என்னுடைய கனவிலோ நான் தலைக்கு மாறாக என்னுடைய இதயத்தை குறி வைத்துக் கொண்டிருந்தேன். இதயத்தினை குறி வைத்த மாதிரியே நான் இரு நொடிகள் காத்திருந்தேன். என் முன்னே இருந்தே மெழுகுவர்த்தி, மேசை மற்றும் சுவர் ஆகியவைகள் திடீரென்று நகரத் துவங்கின. நான் அவசரமாக என்னுடைய துப்பாக்கியை முழங்கினேன்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 |


பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

நானும் நான் வாடகைக்கு தங்கி இருந்த அறையிற்கு வந்து சேர்ந்தேன். ஒரு அரை வட்ட சாளரத்தினைக் கொண்டிருந்த ஏழ்மையான அந்த சிறிய அறையானது ஐந்தாவது மாடியினில் இருந்தது. ஒரு மெழுகுவர்த்தியினை ஏற்றி வைத்துவிட்டு அங்கிருந்த சாய்வு நாற்காலியினில் அமர்ந்த வண்ணம் நான் சிந்திக்க ஆரம்பித்தேன். எனது பக்கத்து அறையினில் ஓய்வு பெற்ற ஒரு கப்பல் தலைவன் வசித்து வந்தான். மேலும் மற்றுமொரு அறையினில் ராணுவ வீரன் ஒருவனின் மனைவி அவர்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்து கொண்டிருந்தாள். பொதுவாக ஓய்வு பெற்ற தலைவனின் அறைக்கு அவனது சகாக்கள் வருவது வாடிக்கையாக இருக்கும். அவர்கள் அங்கே குடித்துக் கொண்டும் சீட்டாடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் பொழுதினை கழித்துக் கொண்டிருப்பர். வீட்டு எசமானி அம்மாளுக்கு அவர்கள் மீது ஏதேனும் புகாரினை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த தலைவனின் மீது இருந்த பயத்தின் காரணமாக அவள் அவ்வாறு செய்யாமல் அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தாள்.

அன்றும் அவ்வாறு அந்த ஓய்வு பெற்ற தலைவனின் சகாக்கள் ஆறு பேர் அவனது அறைக்கு வந்திருந்து குடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் இருந்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்து கொண்டிருந்தது என்னுடைய வாழ்வினில் எவ்விதமான பாதிப்பினையோ அல்லது மாற்றதினையோ ஏற்படுத்தவில்லை. அவர்களின் செயல்பாடுகள் எனக்கு முக்கியமற்றவைகளாகவே இருந்தன. இரவு முழுமையும் நான் முழித்து இருந்தாலும் அவர்களது கூச்சல்களை நான் கவனத்தில் கொள்ள மாட்டேன். அவர்களை நான் முற்றிலுமாக மறந்து விட்டு இருப்பேன். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருட காலமாக இரவு வேலையினில் நான் தூங்குவதில்லை. விடியும் வரையில் முழித்துக் கொண்டே இருப்பேன். இரவு முழுமையும் எனது மேசைக்கு அருகே ஒரு சாய்வு நாற்காலியினில் அமர்ந்த வண்ணமே நான் இருப்பேன். பகற்பொழுதினில் மட்டுமே நான் புத்தகங்களைப் படிப்பேன். ஆனால் இரவு வேளையினில் நான் வேறு எந்த வேலையினையும் செய்வதில்லை. வெறுமன மேசையின் முன்னர் அமர்ந்து மட்டுமே இருப்பேன். சிந்திக்க கூட மாட்டேன். சில சிந்தனைகள் எனது மனதினில் உலாவத் துவங்கினாலும் நான் அவற்றைக் கண்டு கொள்ளாது அவற்றை நீங்கி செல்ல விட்டு விடுவேன். அவ்விரவு முழுமையும் ஒரு மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டே இருக்கும்.

நான் அந்த மேசையின் முன்னர் அமைதியாக அமர்ந்து, அதனுள் இருந்த துப்பாக்கியினை மெதுவாக வெளியே எடுத்து அதனை எனக்கு முன்னர் வைத்தேன். அதனை எனக்கு முன்னர் வைத்த பொழுது ‘இது நிகழ்ந்து ஆக வேண்டுமா?” என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. அக்கேள்விக்கு ‘ஆம்..!!!’ என்றே உறுதியாக நான் எனக்குள் பதில் அளித்துக் கொண்டதும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. என்னுள் நிகழ்ந்த அக்கேள்வி பதிலின் அர்த்தம் இது தான் – என்னை நானே சுட்டுக் கொள்ளப் போகின்றேன். உறுதியாக அன்றிரவு என்னை நானே சுட்டுக் கொள்ளப் போகின்றேன் என்பதனை நான் அறிந்து இருந்தேன். ஆனால் அந்த துப்பாக்கியினைப் பார்த்தவாறே எவ்வளவு நேரம் நான் அந்த மேசையின் முன்னே அமர்ந்து இருக்கப் போகின்றேன் – அதனை நான் அறிந்திருக்கவில்லை. அப்பெண் மட்டும் அன்று என்னுடைய வாழ்வினில் வராமல் இருந்து இருந்தால் நான் நிச்சயமாக என்னை சுட்டுக் கொண்டு இருப்பேன்.

ஆனால் பாருங்கள், அச்சிறுமியினைக் குறித்த சம்பவமானது எனக்கு எவ்வகையிலும் முக்கியமானதொன்றாக இல்லாதிருந்தாலும், ஒரு வகையான வலியினை நான் உணரத் தான் செய்தேன். உதாரணமாக எவராவது என்னை உடல்ரீதியாக அடித்தார்கள் என்றால், அக்கணம் என்னால் வலியினை உணர முடியும். அதனைப் போன்றே தான் மனிதநேயத்தின் அடிப்படையிலும் இருக்கின்றது : மிகவும் வருத்தகரமான நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்தது என்றால், நான் நிச்சயம் வருத்தமடைந்து இரக்கம் கொள்வேன். அந்நிகழ்வானது என்னுடைய வாழ்வினில் யாதொரு முக்கியத்துவத்தையோ அல்லது தாக்கத்தினையோ கொண்டிராதிருந்தாலும், நான் நிச்சயமாக இரக்கம் கொள்வேன். அன்றிரவும் நான் இரக்கம் கொள்ளத் தான் செய்தேன். மேலும், நிச்சயமாக நான் அந்த சிறுமிக்கு உதவியும் செய்து இருந்து இருப்பேன். அப்படியிருக்க நான் ஏன் அந்த சிறுமிக்கு உதவியினை செய்யாது போனேன்?

அவள் என்னுடைய உதவியினைக் கோரிக் கொண்டிருந்த பொழுது என்னுடைய மனதினில் தோன்றிய ஒரு சிந்தனையினாலேயே நான் அச்சிறுமிக்கு உதவி புரியாது போனேன். அச்சிறுமியானவள் எனது கைகளை இழுத்தவாறு என்னை உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தப் பொழுது, திடீரென்று என் முன்னே ஒரு கேள்வியானது உருப்பெற்று நின்றது. அந்த கேள்வியானது இயல்பான ஒன்றாக இருந்த பொழுதும் அக்கேள்விக்கு என்னால் அப்பொழுது விடையினைக் காண முடியவில்லை. இயல்பான அந்த கேள்வி என்னைக் கோபமுறச் செய்தது.

என்னை நானே அன்றிரவு கொலை செய்துக் கொள்வதென்ற முடிவினை நான் ஏற்கனவே எடுத்து விட்டிருந்தேன் என்றால், அந்நிலையில் இந்த உலகில் உள்ள யாவையும் எனக்கு யாதுமொரு முக்கியத்துவமுமற்றவைகளாக அல்லவா மாறி இருந்திருக்க வேண்டும். அவ்வாறே அவைகள் மாறி இருக்க வேண்டும் என்றே நான் முடிவும் செய்து இருந்தேன். ஆனால் அனைத்தும் அவ்வாறு இருக்க, ஏன் திடீரென்று அவைகள் எனக்கு முக்கியமானவைகளாக இருப்பதனைப் போல் நான் உணர்ந்து அந்த சிறுமிக்காக இரக்கப்பட்டேன்? அந்த சிறுமிக்காக நான் மிகவும் இரக்கப்பட்டது எனக்கு இன்றும் நியாபகம் இருக்கின்றது. நான் அன்றிருந்த அந்த அசாத்தியமான சூழலிலும் அச்சிறுமியை எண்ணி என்னுள் ஒருவகையான புதிரான வலியினை நான் உணரத் தான் செய்தேன். நான் அன்று உணர்ந்த வலியினை என்னால் இதனை விடவும் தெளிவாகவோ அல்லது விரிவாகவோ விளக்குவதற்கு முடியவில்லை. இருந்தும் அவ்வலியானது நான் என்னுடைய மேசையின் முன்னர் விரக்தியில் அமர்ந்திருந்த பொழுதிலும் கூட தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது. அதனைக் குறித்த என்னுடைய ஒவ்வொரு சிந்தனையில் இருந்தும் வேறு பிற சிந்தனைகள் உருபெற்றுக் கொண்டே இருந்தன.

நான் இறந்து போகும் பொழுது ஒன்றுமில்லாதவனாக, ஒரு பூஜ்யமாக மாறி விடுவேன். ஆனால் அவ்வாறு நான் இறந்து போகாத வரையிலும் நான் உயிருள்ளவனாகவே இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு பூஜ்யமாக மாறாது உயிரோடு இருக்கின்ற வரையிலும் என்னால் துயரப்படவோ, கோபப்படவோ அல்லது எனது நடவடிக்கைகளுக்காக வெட்கப்படவோ நிச்சயமாக முடியும். அது எனக்குத் தெளிவாக புரிந்தது. நல்லது. ஆனால் இன்னும் இரண்டு மணி நேரத்தினில் என்னை நானே கொலை செய்துக் கொள்ள போகின்ற இத்தருணத்தினில், அந்தச் சிறுமிக்கு என்னவானால் எனக்கென்ன? அவளால் எனக்கென்ன ஆகப் போகின்றது? இந்த உலகத்தினில் வெட்கப்படுவதனைக் குறித்தோ அல்லது வேறு எதனைக் குறித்தோ நான் ஏன் அக்கறைக் கொள்ள வேண்டும்? நானே ஒரு பூஜ்யமாக, முற்றிலும் இல்லாதவனாக ஆகப் போகின்றேன்.

ஒருவேளை, ‘முற்றிலுமாக நான் இல்லாதவனாகப் போகின்றேன். நானே ஒன்றுமில்லாதவனாக ஆன பின்பு இங்கும் வேறொன்றும் இருக்கப் போவதில்லை’ என்கின்ற இந்த சிந்தனை தான் அச்சிறுமியின் மீது நான் இரக்கம் கொண்டிருந்தாலும் அவளுக்கு உதவ விடாமல் என்னைத் தடுத்து இருக்குமோ? அதனைப் போன்றே அற்பத்தனமான எனது அந்த செயலினைக் குறித்து நான் வெட்கப்படுவதையும் அந்த சிந்தனையே தடுத்து இருக்குமோ?

“இங்கே பார்…நான் இரக்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல. மனிதத்தன்மையற்ற எவ்விதமான சுயநலச் செயலினையும் என்னால் இப்பொழுது செய்ய முடியும். ஏன் என்றால் இன்னும் இரண்டு மணி நேரத்தினில் அனைத்தும் அர்த்தமற்று ஒன்றுமில்லாது போய் விடும்.” என்ற சிந்தனையின் காரணமாகவே நான் அந்த பாவப்பட்ட சிறுமியினை நோக்கி ஆக்ரோசமாக கத்தி இருந்தேன். நான் அந்தச் சிந்தனையினாலேயே தான் அவ்வாறு கத்தி இருந்தேன் என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களா? அந்த சிந்தனையினால் தான் நான் அவ்வாறு நடந்துக் கொண்டேன் என்பதனை நான் இப்பொழுது உறுதியாக நம்புகின்றேன்.

வாழ்வும் இந்த உலகும் என்னைச் சார்ந்தே இருப்பதனைப் போன்றே எனக்கு தெளிவாக புலப்பட்டது. எனக்காக மட்டுமே படைக்கப்பட்டதைப் போன்றே இவ்வுலகானது இப்பொழுது இருந்தது என்றும் கூட ஒருவரால் கூற முடியும் : என்னை நானே சுட்டுக் கொள்வேன், அப்பொழுது என்னைப் பொறுத்த வரைக்குமாவது இந்த உலகென்ற ஒன்று இல்லாது போய் விடும். ஒருவேளை எனக்கப்புறம் இங்கே எவருக்குமே ஒன்றுமில்லாதே போய் விட்டாலும் விடலாம். என்னுடைய சிந்தனையானது எப்பொழுது அணைந்து விடுகின்றதோ அப்பொழுது அதனுடனே ஒருவேளை இந்த ஒட்டு மொத்த உலகமும் ஒரு மாயாவியைப் போன்று மறைந்து விடக் கூடும். என்னுடைய சிந்தனையின் ஒரு உதரிப் பொருளினைப் போல இந்த உலகமும் என்னுடைய சிந்தனையுடனே அழிந்தும் போய் விடலாம். ஒருவேளை இந்த மொத்த உலகமும் அதில் இருந்த மக்கள் அனைவரும் எனது சிந்தனையின் அம்சமாக, நானாகக் கூடவே இருந்திருக்கலாம்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1 | 2 |


பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

அம்மழையானது நின்ற பிறகு பயங்கர ஈரப்பதமிக்க ஒரு சூழல் அங்கே சூழ்ந்துக் கொண்டது. மழை பெய்துக் கொண்டிருந்த பொழுதினை விட இப்பொழுது மிகவும் அதிகமாகக் குளிர்ந்து. அங்கிருந்த அனைத்து பொருட்களில் இருந்தும் ஒரு வகையான நீராவி எழும்பிக் கொண்டிருந்தது. அப்பொருட்கள் அனைத்தின் மீதும் தங்களது ஒளியினைப் பாய்ச்சியவாறே எரிந்துக் கொண்டிருந்தன அங்கிருந்த வளிம விளக்குகள். அவ்வாறு அவ்விளக்குகள் ஒளியினைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது என்னுடைய இதயத்தினை சோகமாக்கியது. அந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமே என்றே நான் எண்ணிக் கொண்டேன்.

அவ்வாறு நான் தெருவினில் நின்று கொண்டு அவ்விளக்குகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்த பொழுது, சற்று நிமிர்ந்து வானத்தினைப் பார்த்தேன். வானத்தினை பயங்கர இருளானது சூழ்ந்து இருந்தது. இருந்தும், அதனில் வீற்றிருந்த உடைந்த மேகங்களையும் அம்மேகங்களின் இடைவெளியில் வீற்றிருந்த முடிவில்லாத கரும் வெளிகளையும் ஒருவரால் நிச்சயம் அப்பொழுது கண்டுக் கொள்ள முடியும் தான். அப்படிப்பட்ட கரும் வெளி ஒன்றினில் திடீரென்று ஒரு நட்சத்திரத்தினை நான் கவனித்தேன். அதனை மிகவும் உன்னிப்பாக நான் உற்றுப் பார்க்கத் தொடங்கினேன். ஏன் என்றால் அந்த நட்சத்திரமானது எனக்கு ஒரு சிந்தனையினைத் தந்து இருந்தது. ஆம்..அன்றிரவு என்னை நானே கொலை செய்துக் கொள்ள நான் முடிவெடுத்து விட்டிருந்தேன்.

அம்முடிவினை நான் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தீர்க்கமாக எடுத்து இருந்தேன். அதன் விளைவாக, நான் ஏழையாக இருந்த போதிலும், நல்ல துப்பாக்கி ஒன்றினை வாங்கி அதனை குண்டுகளால் நிரப்பியும் வைத்து இருந்தேன். ஆனால் அச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் ஆகியும் அத்துப்பாக்கியானது என்னுடைய மேசையின் உள்ளேயே இருந்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்னை நானே கொலை செய்துக் கொள்வது என்பது அப்பொழுது எனக்கு எந்தொரு பெரிய மாற்றத்தினையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றே எனக்கு அப்பொழுது தோன்றியதனால் தக்கதொரு தருணத்திற்காக நான் காத்திருக்கத் துவங்கினேன். ஏன் அவ்வாறு எனக்கு தோன்றியது? எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது இந்த நட்சத்திரனமானது எனக்கு அந்த சிந்தனையினைத் தந்து இருக்கின்றது. அச்செயலினை பிழையின்றி நிறைவேற்ற வேண்டியது இன்றிரவே என்றே நான் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டேன். ஏன் அந்த நட்சத்திரம் எனக்கு அந்த சிந்தனையினைத் தந்திருக்க வேண்டும்? அதுவும் எனக்குத் தெரியாது.

அவ்வாறே நான் வானத்தினைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அப்பொழுது திடீரென்று அச்சிறுமியானவள் என்னுடைய முழங்கையினைப் பற்றிக் கொண்டு என்னை இழுக்க முயன்றாள். அத்தெருவானது ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய் இருந்தது. சற்று தூரத்தில் வண்டிக்காரன் ஒருவன் அவனது வண்டியினில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அச்சிறுமிக்கு எட்டு வயது இருக்கலாம். சின்ன ஆடையினையும் கைக்குட்டையும் மட்டுமே அவள் கொண்டிருந்தாள். அத்துணிகளும் நனைந்து இருந்தன. ஆனால் அவைகளை விட கிழிந்தும் நனைந்தும் இருந்த அவளது காலணிகளையே என்னால் மிகவும் நன்றாக நினைவுக்கூர முடிகின்றது. இப்பொழுதும் கூட அவை என் நினைவில் இருக்கின்றன. அச்சிறுமி திடீரென்று எனது முழங்கையினைப் பற்றிக் கொண்டு என்னை இழுக்க ஆரம்பித்தாள். அவள் அழுகவில்லை. அவள் எதனைக் கண்டோ பயந்திருந்தாள். அவள் மிகுந்த குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்ததால் அவளால் தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. இருந்தும் அவள் ‘அம்மா…!அம்மா…!’ என்றே நடுங்கிக் கொண்டு என்னை நோக்கி பதட்டத்துடன் அழைக்க ஆரம்பித்தாள். நான் அவளை நோக்கி எனது முகத்தினைத் திருப்பினேன். ஆனால் அவளிடம் ஒரு வார்த்தையினையும் கூறாமல் எனது வழியிலே மீண்டும் நடக்கத் துவங்கினேன். ஆனால் அவள் விடாமல் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து என்னை அழைக்க முயன்றுக் கொண்டிருந்தாள்.

மிகவும் பயந்து போய் இருக்கின்ற குழந்தைகளின் குரலில் வெளிப்படுகின்ற விரக்தியானது அவளது குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவ்வொலியினை நான் நன்கறிவேன். அவள் கூற வந்த அனைத்தையும் முழுமையாக கூற அவளால் இயலாவிட்டாலும், அவள் கூற வந்ததை நான் அறிந்துக் கொண்டேன். ஒன்று அவளது அன்னையார் எங்கேயோ மரணித்துக் கொண்டிருக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஏதோ ஒன்று அங்கே நேர்ந்து இருக்க வேண்டும். எனவே இவள் அவளது அன்னைக்கு உதவி செய்வதற்கு யாரையாவது அழைத்துக் கொண்டு செல்ல இங்கே வந்திருக்கின்றாள்.

ஆனால் நான் அவளுடன் செல்லவில்லை. மாறாக அவளை விரட்டி விட வேண்டும் என்ற எண்ணமும் என்னுள் திடீரென்று தோன்றியது. எனவே முதலில் நான் அவளிடம் ஒரு காவல்காரரை சென்று அனுகுமாறே கூறினேன். ஆனால் அவள் அவளது கைகளை ஒன்று கூப்பி என்னை வேண்டியவாறே என்னை விடாது பின்தொடர்ந்து, மூச்சிரைத்தவாறும் தேம்பியவாறும் ஓடி வந்து கொண்டிருந்தாள். அக்கணம் நான் எனது கால்களை தரையில் கோபமாக மிதித்தவாறு அவளை நோக்கி கத்த ஆரம்பித்தேன். இருந்தும் அவள் ‘ஐயா…ஐயா…!!!’ என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்தாள். பின்னர் திடீரென்று அவள் என்னை விட்டுவிட்டு அச்சாலையின் மறுபுறம் நோக்கி ஓட ஆரம்பித்தாள். அங்கே மற்றுமொரு மனிதன் தோன்றி இருந்தான். எனவே அவள் என்னை விட்டுவிட்டு அவனிடம் உதவி கோருவதற்காக அவனிடம் விரைந்தாள்.

தொடரும்…!!!

முந்தைய பகுதிகள்: 1


பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

நான் ஒரு கேலிக்குரிய மனிதன். இப்பொழுது என்னை அவர்கள் கிறுக்கன் என்றே அழைக்கின்றார்கள். முன்பு அவர்களின் பார்வைக்கு கேலிக்குரியவனாக தோன்றி இருந்ததைப் போன்று இப்பொழுது நான் தோன்றவில்லை என்றால், அவர்கள் என்னை கிறுக்கன் என்று அழைப்பது நிச்சயம் ஒரு படி மேலான நிலை தான். ஆனால் இப்பொழுதெல்லாம் நான் கோபம் கொள்வதில்லை. அவர்கள் அனைவரும் இப்பொழுது எனக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள். என்னைப் பார்த்து அவர்கள் அனைவரும் சிரிக்கும் பொழுதும் கூட, ஏனோ அவர்கள் அனைவரும் எனக்கும் நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர். அவர்களைக் காணுகின்றப் பொழுது அவர்கள் மீது மிகுதியான வருத்தம் எனக்கு தோன்றாதிருந்திருந்தால், ஒருவேளை நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்திருக்கக் கூடும், என்னைக் கண்டு அல்ல மாறாக அவர்கள் மீதிருந்த அன்பின் காரணமாகவே நானும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் எனக்கு வருத்தமாக இருக்கின்றது. அவர்கள் உண்மையை அறியாது இருக்கின்றனர். நானோ உண்மையை அறிந்து இருக்கின்றேன். ஆ!!! உண்மையினை அறிந்திருக்கும் ஒரே ஒரு நபராக இருப்பது எவ்வளவு கடினமாக இருக்கின்றது. ஆனால் இதனை அவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். இல்லை…அவர்கள் நிச்சயம் இதனைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

கேலிக்குரிய ஒருவனாக நான் மற்றவர்களுக்கு தோன்றியது முன்பு எனக்கு மிகுந்த மனக் கவலையினை அளித்திருந்தது. இல்லை…கேலிக்குரியவனாக நான் தோன்றி இருக்கவில்லை. கேலிக்குரியவனாகத் தான் இருந்தேன். எப்பொழுதும் நான் கேலிக்குரிய ஒருவனாகத் தான் இருந்து இருக்கின்றேன். அது எனக்குத் தெரியும். ஒருவேளை பிறப்பில் இருந்தே நான் கேலிக்குரியவனாக இருந்து இருக்கலாம். ஒருவேளை எனக்கு ஏழு வயதான பொழுதே நான் கேலிக்குரிய ஒருவன் என்று நான் அறிந்து இருக்கலாம். பின்னர் நான் பள்ளிக்குச் சென்றேன்…அதனைத் தொடர்ந்து கல்லூரிக்குச் சென்றேன்…ஆனால் நான் எவ்வளவு அதிகமாக கற்றேனோ அவ்வளவு அதிகமாக நான் கேலிக்குரியவன் என்பதனை நான் உணர்ந்துக் கொண்டேன். ஆகையால் என்னுடைய பல்கலைக்கழக படிப்பினுள் நான் ஆழமாகச் செல்ல செல்ல, அதன் இறுதியான குறிக்கோள் நான் கேலிக்குரிய ஒருவன் தான் என்பதனை நிரூபித்து எனக்கு அதனை விளக்குவதே ஆகும் என்றே எனது பார்வையில் பட்டது. கல்வியில் தான் இந்நிலை என்றால் வாழ்விலும் அதே நிலை தான் இருந்தது. ஒவ்வொரு வருடமும், என்னுடைய தோற்றமானது அனைத்து வகையிலும் கேலிக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது என்ற என்னுடைய மனநிலை என்னுள் தொடர்ந்து வளர்ந்து வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. எப்பொழுதும் அனைவராலும் நான் கேலி செய்யப்பட்டே வந்து இருக்கின்றேன். நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன் என்பதனை உறுதியாக என்னை விட இந்த உலகினில் வேறு எந்த மனிதனாலும் அறிந்து இருக்க முடியாது. இதனை நான் அறிவேன். ஆனால் இதனை என்னைக் கேலி செய்பவர்கள் அறிந்து இருக்கவில்லை. ஏன்…நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன் என்பதனை நான் அறிந்தே தான் இருப்பேன் என்று அவர்கள் சந்தேகப்பட்டு கூட இருக்க மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு அதனை அறிந்து இருக்காதது தான் என்னை மிகவும் தொல்லைப்படுத்தியது. ஆனால் அவர்கள் அவ்வாறு இருந்ததற்கு நான் என்னையே தான் குறைக் கூறிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன் என்பதனை எதற்காகவும் வேறு எவரிடமும் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய பெருமை என்னை அவ்வாறு ஒப்புக் கொள்ள விட்டு இருக்காது.

அத்தகைய பெருமையானது காலங்களில் என்னுள் வளர்ந்துக் கொண்டே வர, எவரிடமாவது நான் கேலிக்குரியவனாக இருக்கின்றேன் என்பதனை ஒப்புக் கொள்ள என்னை நானே அனுமதித்தேன் என்றால் அதே நாள் மாலையில் என்னை நானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன் என்றே எண்ணுகின்றேன். ஆ…இளம் வயதில் எனக்கு நானே உதவிக் கொள்ள முடியாமல் எப்படியோ திடீரென்று என்னுடைய தோழர்களிடம் நான் கேலிக்குரியவனாக இருப்பதனை ஒப்புக் கொள்ள வேண்டி இருந்தைக் குறித்து நான் எவ்வளவு துயரப்பட்டேன். ஆனால் நான் இளைஞனாக வளர்ந்த உடன் ஏதோ ஒரு காரணத்தினால் நான் சிறிது அமைதியானவனாக மாறினேன். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பயங்கரத் தன்மையினைக் குறித்து நான் அதிகமாக அறிந்தப் பொழுதும் ஏனோ நான் சற்று அமைதியானவனாக மாறினேன். ஏன் நான் அவ்வாறு அமைதியானவனாக மாறினேன்? இந்நாள் வரை அதற்கான காரணத்தினை என்னால் அறிந்துக் கொள்ள முடியவில்லை.

நான் அமைதியானவனாக மாறியதற்கு, ஒருவேளை என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்த ஒரு சூழ்நிலையினால் என்னுடைய ஆன்மாவினுள் வளர்ந்துக் கொண்டிருந்த அந்த பயங்கரமான வேதனை காரணமாக இருக்கலாம். என்னுடைய கேலிக்குரியத் தன்மையானது, இந்த உலகினில் எங்கேயும் எதையும் மாற்றப் போவதில்லை என்கின்ற அந்த தீர்க்கமான முடிவே தான் என்னை அப்பொழுது முழுமையாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இவ்வுலகினில் என்னுடைய கேலிக்குரிய தன்மையானது ஒரு பொருட்டாகக் கூட இருக்கப்போவதில்லை என்பதனைக் குறித்த ஒரு சிறு உணர்வினை நான் நெடுங்காலமாகவே பெற்று இருந்தேன். ஆனால் எப்படியோ அந்த உணர்வின் முழுமையான வடிவத்தினை நான் சென்ற வருடம் தான் திடீரென்று உணர்ந்தேன். இந்த உலகானது இருந்தாலும் சரி அல்லது எங்குமே ஒன்றுமே இல்லாதிருந்தாலும் சரி அதனால் எனக்கு ஒன்றுமே இல்லை என்றே நான் திடீரென்று உணர ஆரம்பித்தேன். என்னுள் ஒன்றுமே இல்லை, எதற்கும் ஒரு அர்த்தமே இல்லை என்பதனை நான் முழுமையாக உணரத் துவங்கினேன்.

அவ்வாறு நான் சிந்திக்க ஆரம்பித்த நாட்களில், முன்னர், சிறுவயதில் அனைத்திற்கும் ஏதோ பொருள் இருந்ததனைப் போன்றும் இப்பொழுது தான் அனைத்திற்கும் ஏதோ பொருள் இல்லாது மாறி இருப்பதனைப் போன்றும் தோன்றியது. ஆனால் அப்பொழுதும் எதற்கும் அர்த்தம் என்று எதுவும் இருந்தது இல்லை என்பதனையும் ஏதோ ஒரு காரணத்தினால் அவற்றிற்கு அப்பொழுது அர்த்தம் இருந்தனைப் போல் தோன்றி இருக்கின்றது என்பதனையும் நான் பின்னர் உணர்ந்துக் கொண்டேன். இங்கே ஒன்றுமே இருக்கப் போவதில்லை என்றே நான் காலங்கள் நகர நகர நம்ப ஆரம்பித்தேன்.

பின்னர் திடீரென்று மற்ற மக்களின் மீது கோபம் கொள்வதை நான் நிறுத்தினேன். அவர்களை கவனிக்காமல் இருக்க ஆரம்பித்தேன். என்னுடைய இந்த போக்கானது விரைவில் அற்பமான சிறு விசயங்களில் கூட வெளிப்பட ஆரம்பித்தது. உதாரணத்திற்கு, நான் சாலையினில் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது சில மனிதர்கள் மீது மோத நேரிடும். அவ்வாறு நான் மோத நேரிட்டதற்கு ஏதோ சிந்தனையில் நான் மூழ்கி இருந்தது காரணம் கிடையாது. எதனைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்திருக்க முடியும். சிந்திப்பதனைத் தான் அப்பொழுது முற்றிலுமாக நிறுத்தி விட்டு இருந்தேனே. சிந்திப்பது என்பது எனக்கு எதனையும் மாற்றப் போவதில்லை. ஒருவேளை நான் என்னுடைய கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுக் கொண்டிருந்தேன் என்றால் நலமாக இருந்து இருக்கக் கூடும். என்னிடம் அநேக கேள்விகள் இருந்தன, இருந்தும் நான் ஒரு கேள்வியினைக் கூட தீர்த்து இருக்கவில்லை. ஆனால் அக்கேள்விகளும் எதனையும் மாற்றப் போவதில்லை என்றே எனக்கு தோன்ற ஆரம்பிக்க, அந்த கேள்விகள் அனைத்தும் என்னை விட்டு விலகிச் சென்றன.

அதற்கு பின்னர் நான் உண்மையினை அறிந்துக் கொண்டேன். கடந்த நவம்பர் மாதம், சரியாகச் சொல்லுவதென்றால் கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நான் உண்மையானது என்னவென்பதை அறிந்துக் கொண்டேன். அக்கணம் முதலாக என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நான் நினைவில் வைத்து இருக்கின்றேன்.

அது ஒரு இருள் படந்திருந்த மாலை நேரம். ஒரு மாலை நேரமானது எந்தளவு இருளினால் மூடி இருக்க முடியுமோ அந்தளவு இருளானது அந்நேரத்தில் படர்ந்திருந்தது. நான் அப்பொழுது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். நேரமானது பத்து மணிக்கும் பதினொரு மணிக்கும் இடையே நகர்ந்துக் கொண்டிருந்தது. இதனை விட ஒரு மனிதனின் மன அழுத்தத்தினை அதிகரிக்க செய்யும் நேரம் வேறு இருக்க முடியாது என்றே எனக்கு அப்பொழுது தோன்றி இருந்ததை என்னால் இன்றும் நினைவுக்கூர முடிகின்றது. அன்றிருந்த புறச்சூழல்களும் அப்படியே தான் இருந்தன. அன்றைய தினம் முழுவதும் மழையானது கொட்டித் தீர்த்து இருந்தது. மழை என்றால் சாதாரண மழை அல்ல, இருப்பதிலேயே குளிர் அதிகமானதும் மனதினைத் தாழ்த்தக் கூடிய சூழலினை அதிகமாக உருவாக்கக் கூடியதுமான ஒரு மழை அது. அதனை ஒரு கொடூரமான மழை என்றுக் கூட கூறலாம். ஆம்…எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றது. மனிதர்கள் மேல் இருந்த வெறுப்பின் காரணமாகத் தான் அந்த மழை அவ்வாறு கொட்டித் தீர்த்து இருந்தது. ஆனால் இப்பொழுதோ, நேரமானது பத்திற்கும் பதினொன்றுக்கும் இடையில் நகர்ந்து கொண்டிருந்த பொழுது அந்த மழையானது திடீரென்று நின்று இருந்தது.

தொடரும்…!!!

பி.கு:
‘The Dreams of a Ridiculous man’ என்ற பியோதர் தஸ்தோவஸ்கியின் நூலின் மொழிபெயர்ப்பு முயற்சியே இது ஆகும்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு