சமசுகிருதம் இறைவன் உலகினில் வந்து மக்களுக்காக பலியான செய்தியினைத் தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மொழி என்று நாம் சென்ற பதிவினில் கண்டு இருந்தோம். இறைவனே வந்து மக்களுக்காக பலியாகி விட்டதினால் தான் பலி வழிபாட்டினை உடைய சமயங்கள் அனைத்தும் பலியற்ற சமயங்களாக மாறின என்றும் நாம் கண்டு இருந்தோம்.


ஆனால் இங்கே தான் நண்பர்கள் சிலர் ஒரு மாற்றுக் கருத்தினை முன்வைக்கின்றனர். "சமணமும் பௌத்தமும் நீண்ட காலமாகவே இந்திய மண்ணில் நிலை பெற்று இருக்கின்றன. அதுவும் நீங்கள் கூறும் கி.பி முதல் நூற்றாண்டில் பௌத்தம் குறிப்பாக இந்தியா முழுவதுமே பரவி இருக்கின்றது. அந்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். அதாவது உயிரினை பலி இடாதீர்கள் என்பதே அந்தச் சமயங்களின் கொள்கை. அவ்வாறு இருக்கும் பொழுது ஏன் அந்தச் சமயங்களின் தாக்கத்தினால் பலி வழிபாடு நின்று இருக்கக் கூடாது. ஒரு தேசத்தில் மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலுப்பெற்றால் ஆள்பவர்கள் அக்கருத்தினை ஏற்றுக் கொண்டு மக்களை கவருவது என்பது காலம் காலமாக நடக்கும் செயல் தானே. அதனைப் போன்று தான் பௌத்தம் மக்கள் மத்தியில் பரவி இருந்த பொழுது மக்களைக் கவர இந்து சமயம் புத்தத்தின் சிலக் கருத்துக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டது. அப்படியே புத்தனையும் ஒரு அவதாரமாக ஆக்கிக் கொண்டது. அதனால் தான் பலி வழிபாட்டினை உடைய கடவுளர் அனைவரும் பலி இல்லாத கடவுளராக உருமாறி இருக்கின்றனர்." என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது. அதாவது பௌத்த சமயம் மற்றும் சமண சமயங்களின் தாக்கத்தினால் பலி வழிப்பாட்டு முறை பலி இல்லாத வழிபாட்டு முறையாக மாறி இருக்கின்றது என்பதே அவர்களின் கருத்து.


எளிதில் மறுக்க இயலா கருத்துக்கள் தான். காரணம் வரலாற்றில் நாம் அத்தகைய சம்பவங்களை கண்டு இருக்கின்றோம். காண்கின்றோம். காணவும் செய்வோம். மக்கள் அனைவரும் கிருத்துவத்தினை நம்புகின்றார்கள் என்பதனால் கான்சண்டீன் என்ற மன்னன் அரசியல் நோக்கிற்காக கிருத்துவத்தினை அரச சமயமாக ஏற்றுக் கொண்டான் என்பதனை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம். எனவே தான் ஆதாயம் அடைவதற்காக சமயங்களின் கருத்துக்களை பயன்படுத்துவது என்பது நடக்க இயலாத ஒன்றல்ல. மேலும் புத்தன் இங்கே ஒரு அவதாரமாகவும் ஆக்கப்பட்டு இருக்கின்றான். இந்நிலையில் பௌத்தக் கருத்துக்களை அரசியல் காரணமாக சைவ வைணவ சமயங்கள் எடுத்துக்கொண்டன என்றக் கருத்தினை பலரும் மறுக்க மாட்டார்கள்.


ஆனால் நாம் மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.


சைவ வைணவ சமயங்களிலும் பௌத்த சமயங்களிலும் காணப்படும் ஒற்றுமைகள் அரசியல் காரணத்தினாலேயோ அல்லது மக்களை ஏமாற்றவோ உருவாக்கப்பட்ட ஒற்றுமைகள் அல்ல. மாறாக இறைவன் ஒருவனே என்பதனை நிலை நிறுத்தவே அத்தகைய ஒற்றுமைகள் இந்தச் சமயங்களில் காணப்படுகின்றன. இதுவே நமது கூற்று. ஆனால் வெறுமனவே கூறிவிட்டால் போதுமா....சான்றுகள் வேண்டாமா நமது கூற்றினை முன் நிறுத்துவதற்கு?... வேண்டும் தானே... எனவே இப்பொழுது நாம் நம்முடைய கருத்துக்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்றே காண வேண்டி இருக்கின்றது.


கி.பி முதல் நூற்றாண்டில் இந்தியா ஒரு மாபெரும் மாற்றத்தினை சந்தித்து இருக்கின்றது என்று நாம் கண்டு வருகின்றோம். ஏன் உலகமே ஒரு மாபெரும் மாற்றத்தினைக் கண்டு இருக்கின்றது என்று தான் நாம் கண்டு வருகின்றோம். சமயங்கள் புதிதாய் தோன்றி இருக்கின்றன. ஏற்கனவே இருந்த பழக்கங்கள் மாறி இருக்கின்றன. பலி வழிபாடு பலியற்ற வழிபாடாக மாறி இருக்கின்றது. "அட என்னங்க...அதான் பௌத்த சமண சமயங்களின் தாக்கத்தினால் தான் பலியற்ற வழிபாடு தோன்றி இருக்கின்றது என்று நாங்கள் கூறிக் கொண்டே இருக்கின்றோம்...அதையே திரும்ப திரும்ப சொல்றீங்களே" என்று என்னும் நண்பர்கள் சற்று பொறுத்துக்கொள்ளவும்...காரணம் அக்காலத்தில் பௌத்தமும் மாறி இருக்கின்றது. சமணமும் மாறி இருக்கின்றது.


ஆம்...கி.பி முதல் நூற்றாண்டில் பௌத்த சமயமும் மாற்றம் கண்டு இருக்கின்றது. சமண சமயமும் மாற்றம் கண்டு இருக்கின்றது. இப்பொழுது இந்த மாற்றங்களைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. முக்கியமாக புத்தத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.


பௌத்த சமயத்தினைப் பற்றி நமக்கு ஓரளவு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது. கௌதம புத்தரால் தொடங்கப்பெற்று, உலக மக்கள் அனைவருக்கும் அன்பினை போதிக்கும் ஒரு சமயம். போதி தர்மரின் சமயம் என்றால் இன்னும் நன்றாக மக்களைச் சென்று அடையும் என்றே எண்ணுகின்றேன். கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஒரு சமயம், கி.பி முதல் நூற்றாண்டில் ஒரு மாபெரும் மாற்றத்தினைக் காணுகின்றது. புதிய கொள்கைகள் புத்தத்தில் முளைக்கின்றன. அந்நிலையில் பௌத்தம் இரு பிரிவுகளாக பிரிகின்றது. அவை,

௧) ஈனயான பௌத்தம் (Hinayana) அல்லது தேரவாத பௌத்தம் (Theravada) - பௌத்தத்தின் பழையக் கொள்கைகளைப் பெற்று விளங்குவது. சிறிய வாகனம் என்றே பொருள்படுவது. இந்த பிரிவான புத்தத்தின்படி எதுவுமே கடவுளால் படைக்கப்படவில்லை. தன் சொந்த முயற்சியினாலோ அல்லது மற்றவர்கள் வழிநடத்தப்பட்டோ தான் ஒருவன் அனைத்தையும் துறந்த நிலையினை அடைய முடியும்.

௨) மகாயான பௌத்தம் (Mahayana)- புதுக் கொள்கைகளுடன் விளங்கும் பௌத்தம். பெரிய வாகனம் என்றே பொருள்படுவது. இதன் படி அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டன. கடவுள் மனித வடிவம் எடுத்து இவ்வுலகிற்கு வந்தார், வந்து தன்னையே பலியாகக் கொடுத்து மனித குலத்திற்கு மீட்பு கொடுத்தார் என்பதே மகாயான புத்தத்தின் கொள்கைகள் ஆகும். நிற்க.

முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் தான் அல்லவா. பழைய பௌத்தமோ கடவுள் எதையுமே படைக்கவில்லை என்றே கூறுகின்றது...ஆனால் மகாயான பௌத்தமோ அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்றே கூறுகின்றது. மேலும் மகாயான பௌத்தம் இறைவன் உலகில் வந்து மனிதர்களுக்காக பலியான செய்தியினைக் கூறுகின்றது. இது கிருத்துவத்தின் கொள்கையல்லவா?

மேலும் ஆச்சர்யமாக புத்தத்தில் இந்தப் பிரிவுகள் கி.பி முதல் நூற்றாண்டிலேயே ஏற்படுகின்றன. சரி இருக்கட்டும். இப்பொழுது நாம் மகாயான புத்தத்தினைப் பற்றியே காண வேண்டி இருக்கின்றது. காரணம் அதில் புத்தம் மாறி இருக்கின்றது...புத்தர் மாறி இருக்கின்றார். அது ஏன் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.


நமது பயணத்தில் நாம் 'மூ ஒருமைக் கோட்பாட்டினைப்' பற்றி பல முறை கண்டு விட்டோம். ஆனால் இப்பொழுது அதனை நாம் மீண்டும் காண வேண்டி இருக்கின்றது. காரணம் மகாயான புத்தமும் மூ ஒருமைக் கோட்பாட்டினைப் பற்றி ஏதோ கூறுகின்றது... திரிகாயா (Trikaya) என்றப் பெயரில்.


திரிகாயா - புத்தரின் நிலையை விளக்கும் ஒரு கோட்பாடு. இதன் படி புத்தர் ஒருவரே ஆனால் மூன்று நிலையில் திகழ்கின்றார் என்றே பொருள்படுகின்றது. அந்த மூன்று நிலையானது என்னவெனில்,

தர்ம காயா (Dharma kaya) - அறத் திருமேனி
சம்போக காயா (Sambhoga kaya) - இன்பத் திருமேனி
நிர்மாண காயா (Nirmana Kaya) - படைக்கப்பட்ட திருமேனி

இவையே திரிகாயா கோட்பாட்டின் வடிவங்களாகும். ஆச்சர்யமாக இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாட்டினை ஒத்தே இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது,
தர்ம காயா - தந்தையாகிய கடவுளையும்
சம்போக காயா - பரிசுத்த ஆவியையும்
நிர்மாண காயா - மனித உரு எடுத்து வந்த மைந்தனையும் குறிப்பதாகவே இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஈனயான புத்தத்தில் மனிதனாக அறியப்பட்ட புத்தர், கடவுளாக மகாயான புத்தத்தில் அறியப்படுகின்றார்.

"நானே அனைத்திற்கும் மேலான கடவுளாக இருக்கின்றேன். இவ்வுலகினை மீட்கும் படியாகத் தோன்றினேன்" என்று புத்தர் கூறுவதாக மகாயான நூல்கள் கூறுகின்றன என்றே சுசுமிதா பாண்டே (Sushmita Pande) அவர்கள் அவரது 'Birth Of Bhakthi in Indian Religions and art' நூலில் குறிப்பிடுகின்றார்.

மேலும் நாம் இப்பொழுது மகாயானம் கூறும் புத்தரின் கதையையும் கண்டு விடுவது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

அக்கதையின் படி,

"புத்தரின் தாயார் ஆன மாயா அவர்கள் நீண்ட நாட்கள் குழந்தை இன்றி வாடிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு கனவுக் காணுகின்றார். அக்கனவில் விண்ணில் இருந்து ஒரு வெள்ளை யானை அவரது இடுப்பின் வழியாக வயிற்றினுள் செல்வதாக உணருகின்றார். அவர்கள் நாட்டில் வெள்ளை யானை தெய்வத் தன்மை பொருந்தியதாக அறியப்படுவதால் ஏதோ ஒரு செய்தி அவளுக்கு சொல்லப்பட்டு இருப்பதை அவள் அறிகின்றாள். சிறிது நாளில் அவள் கருவும் உருகின்றாள். ஒரு நாள் குழந்தை பிறக்கும் காலம் நெருங்கியவுடன் அவரது தாய் வீட்டிற்கு மாயா பயணிக்கும் பொழுது வழியில் ரதம் ஒரு அழகிய தோட்டத்தில் நிற்கின்றது. அங்கேயே மாயா புத்தரையும் ஈன்று எடுக்கின்றார் (புத்தர் மாயாவின் இடுப்பின் வழியாகவே பிறந்தார் என்பது மகாயான நூல்களின் மூலம் நாம் அறியப்பெறும் ஒன்றாகும்). அவ்வாறு குழந்தை பிறந்த பொழுது வானில் பல அதிசயங்கள் தோன்றுகின்றன. பல அறிஞர்கள் வந்து 'உலகின் ரட்சகன்' மண்ணில் வந்து விட்டார் என்று வந்து வாழ்த்துகின்றனர்." நிற்க. எங்கேயோ கேள்விப்பட்ட கதைப் போன்றே இருக்கின்றது அல்லவா....சற்றே சிந்தித்துப் பார்த்தோம் என்றால் இக்கதை கிருத்துவின் கதையினை ஒத்தே இருப்பதனை அறிந்துக் கொள்ளலாம்.

கிருத்துவும் இயற்கைக்கு மீறிய பிறப்பினை உடையவராக அறியப்பெறுகின்றார்.

புத்தரும் இயற்கைக்கு மீறிய பிறப்பினை உடையவராக அறியப்பெறுகின்றார்.

மேலும் மகாயான புத்தத்தின் காலம் கிருத்துவின் காலத்திற்கு பிந்தைய காலமாக இருப்பதினால் கிருத்துவினைப் பற்றிய கருத்துக்களே புத்தரின் வாயிலாக கூறப்பட்டு உள்ளன என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. அதுவும் நாம் ஏற்கனவே இயேசுவின் இரண்டாம் வருகையினைப் பற்றியும் மைத்ரேய புத்தனைப் பற்றியும் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

"ஆதி புத்தர் மன்னுயிர்களின் பொருட்டு அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் இக்கொள்கை கிருத்துவக் கொள்கையை ஒத்தே உருவாகியுள்ளது" என்றே ஆய்வாளர் ஜெப்ரி பரிந்தர் (Jefferey Parrinder) அவர்கள் அவருடைய 'Avatar and Incarnation' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். நிற்க.

இப்பொழுது ஏன் இந்த ஒற்றுமைகள் என்று பார்த்தோம் என்றால் விடை தோமா என்றே கிடைக்கின்றது. கி.பி முதல் நூற்றாண்டில் கிருத்துவின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு இந்தியா வந்ததாக அறியப்படும் தோமா அன்று இந்தியாவில் பரவி இருந்த சமண புத்த சமயங்களின் சாலைகளையும் சென்று சந்தித்து கருத்துக்களை பகிர்ந்தார். அதன் விளைவே அதுவரை ஈனயான பௌத்தமாக மட்டுமே இருந்த பௌத்தம் கிருத்துவின் கருத்துக்களைப் பெற்று மகாயான பௌத்தமாக மாறுகின்றது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

"ஈனயானத்தினரோடு அயல் நாட்டினரின் தொடர்பு ஏற்பட்டதினால் மகாயானம் உருவாயிற்று" என்று ஆய்வாளர் கே.ரா.சுப்ரமணியன் (K.R.Subramanian) அவர்கள் அவரது 'The Origin of Saivism and its History in the Tamil Land' என்னும் நூலில் கூறுகின்றார்.

மேலும் ஈனயான புத்த நூல்கள் அனைத்தும் பாலி மொழியினிலேயே இருக்கின்றன. ஆனால் மகாயான புத்த நூல்களோ சமசுகிருதத்திலேயே இருக்கின்றன. அதாவது கிருத்துவ கருத்துக்களைச் சுமந்து நிற்கும் புத்தத்தின் நூல்கள் யாவும் சமசுகிருதத்திலேயே இருக்கின்றன. இது நாம் சென்ற பதிவில் கண்ட கருத்தினை வலுபெறச் செய்கின்றது அல்லவா. அதாவது சமசுகிருத மொழி என்ற மொழி இறைவன் மக்களுக்காக உயிர் நீத்தார் என்ற செய்தியினைப் பரப்ப அதாவது கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கப்பட்ட ஒரு மொழி என்பது மகாயான புத்த நூல்கள் அனைத்தும் சமசுகிருதத்தில் இருப்பதன் மூலமும் வலு பெறத்தானே செய்கின்றது.

"பாலி மொழியில் உள்ள புத்த வேத நூல்களின் கருத்துக்களுக்குப் புதியதாய், வேறானதாய் மகாயான வேத நூல்கள் உள்ளன" என்று ஆய்வாளர் ஜெப்ரி பரிந்தர் அவர்கள் அவருடைய 'Avatar and Incarnation' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

நாம் இதுவரைக் கண்ட தகவல்கள் மூலமாக கி.பி முதல் நூற்றாண்டில் புத்தமும் மாறி இருக்கின்றது. கிருத்துவின் கருத்துக்கள் அதனில் காணப்படுகின்றது. இந்நிலையில் அந்தச் சமயங்களின் தாக்கத்தினால் சைவ வைணவ சமயங்களில் பலி வழிபாடு பழியற்ற வழிபாடாக மாறி இருக்கின்றது என்றக் கருத்தினை நாம் மறு ஆய்வு செய்யத் தான் வேண்டி இருக்கின்றது. காரணம் அந்தச் சமயங்களே மாறி இருக்கின்றன.

மேலும் கிருத்துவத்தின் உண்மையான கொள்கையான "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்பதன் படியே புத்தர்களுக்கு புத்தனாகவே இயேசுவின் கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளமையால் மகாயான புத்தத்தில் இயேசுவின் பெயர் காணப்பெறவில்லை ஆனால் கருத்துக்கள் காணப்பெறுகின்றன.

கடவுளுக்கு என்றுமே பெயர் முக்கியமான ஒன்றல்ல... முக்கியம் கருத்துக்கள் தானே!!! அந்நிலையில் அக்காலத்தில் இந்தியாவில் பரவி இருந்த பல்வேறு மக்களின் நம்பிக்கைகளுக்கு ஏற்றார்ப் போல் புதிய கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளன. நிற்க.

இவ்வாறே சமண சமயமும் கி.பி முதல் நூற்றாண்டில் இரு பிரிவுகளாக மாறி உள்ளது.(திகம்பரச் சமணம் (Digambara) - கிருத்துவுக்கு முற்பட்ட காலத்தது...சுவேதாம்பரச் சமணம் (Svetambara) - கிருத்துவுக்கு பிற்பட்ட கால சமணம்) இவற்றைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஏனெனில் இப்பொழுது நமக்காக திருவள்ளுவரும், முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களும் தமிழகத்தின் ஒரு பகுதியான தொண்டை நாட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் வளர்த்த அப்பெருமக்களை நாம் காக்க வைக்கலாமோ? அது தகுமோ? இல்லை தானே. எனவே இப்பொழுதே நாம் அவர்களைச் சென்றுக் காண வேண்டிய கடமை இருக்கின்றது.

காண்போம்...

பி.கு:
1)தொண்டை நாடு என்றால் என்ன என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்காக ஒரு 'சரியாகப் பொருத்துக'.(தமிழ் தேர்வுகளில் இரு மதிப்பெண்களுக்கு உரிய கேள்வி என்றே எண்ணிக் கொள்ளுங்கள்)

                                                                                  ஆ                                                                     
 
1) பாண்டிய நாடு                                     i) வேழம் உடைத்து
2) சோழ நாடு                                            ii) சான்றோர் உடைத்து
3) சேர நாடு                                               iii) சோறுடைத்து
4) தொண்டை நாடு                                iv) முத்துடைத்து

2) புத்தர் போதி மரத்தின் அடியில் ஞானம் அடைந்தார் என்றே நாம் அறிவோம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அறியாத விடயம் என்னவென்றால் போதி மரம் என்பது நமது அரச மரமே அன்றி வேறு மரம் அன்று. அரச மரத்தின் அடியில் புத்தர் ஞானம் அடைந்ததால் அந்த மரம் ஞான மரம் அல்லது போதி மரம் என்று வழங்கப்படலாயிற்று. எனவே அரச மரத்தின் அடியில் புத்தர் வீற்று இருப்பது போன்று படங்களும் சரி சிலைகளும் சரி அமைக்கப்பெற்றன. சரி இப்பொழுது ஒரு கேள்வி...

நம்மிடையே இன்று புகழோடு இருக்கும் கடவுள் ஒருவரும் அரசமரத்தின் அடியிலேயே இருக்கின்றார். யார் அவர்?

(விடையினை சரியாக அறிந்தால் நீங்களும் 'எங்கெங்கு காணினும் ஒற்றுமையடா...எங்கெங்கு காணினும் ஒற்றுமையடா' என்றுக் கூறுவீர்கள் என்றே எண்ணுகின்றேன்).

5 கருத்துகள்:

பிள்ளையார்.....

பைபிள் ல நிறைய முரண்பாடான வசனங்கள் இருக்கு நீங்க அதை எப்படி ஆதரம வச்சி பேசலாம், கி.பி. பிறகு பலி இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனா இப்போவும் அம்மன் கோயில்களில் கோழி ஆடு பலி இருக்கே அதுக்கு பதில் சொல்லுங்க சார்...

@Venkat Raja,

விவிலியம் என்பது தொகுக்கப்பட்ட ஒரு நூலே...அதனைப் பற்றி ஏற்கனவே முந்தைய பதிவுகளில் கூறி இருக்கின்றேன் நண்பரே...!!!

//கி.பி. பிறகு பலி இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனா இப்போவும் அம்மன் கோயில்களில் கோழி ஆடு பலி இருக்கே அதுக்கு பதில் சொல்லுங்க சார்//

நாம் பேசுவது சைவ வைணவ சமயங்களைப் பற்றி.... சைவ வைணவ சமயங்களில் பலி இருக்கின்றதா? சங்க காலத்தில் முருகனுக்கும் சரி, சிவலிங்கத்திற்கும்(அப்பொழுது அது கந்து என்று அழைக்கப்பட்டது) பலி இருந்தது... ஆனால் இப்பொழுது பலி கிடையாது... அந்த மாற்றத்தினைப் பற்றித் தான் நாம் ஆராய்கின்றோம்.

சரி, ஆனால் எந்த காலத்திலும் (கி.மு - கி.பி) புத்த மதத்தில் பலி என்பதே கிடையாதே அது குறித்து உங்கள் கருத்து...

//சரி, ஆனால் எந்த காலத்திலும் (கி.மு - கி.பி) புத்த மதத்தில் பலி என்பதே கிடையாதே அது குறித்து உங்கள் கருத்து...//

நண்பரே புத்த சமயம் பலி மறுப்புச் சமயம் அவ்வளவே!!!...முதலில் அதில் கடவுளைப் பற்றியக் கொள்கைகள் எதுவுமே காணப்படவில்லை...ஆனால் திடீர் என்று அதனில் கடவுள் கொள்கைக் காணப்படுகின்றது. கடவுள் நம்பிக்கை இல்லாத புத்தம் ஈனயான புத்தமாக விளங்குகின்றது...கடவுள் கொள்கையுடைய புத்தம் மகாயான புத்தமாக விளங்குகின்றது. அது ஏன் என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது...அதனைப் பற்றித் தான் இந்தப் பதிவில் நான் எழுதி இருக்கின்றேன் நண்பரே...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு