கிருத்துவ சமயமும் இசுலாமிய சமயமும் அவைகளின் புனிதநூல்களை மக்கள் அனைவருக்கும் பொதுவாக வைத்து இருக்கும் பொழுது, இந்து சமயம் மட்டும் அது புனித நூல்கள் என்றுக் கூறுவனவற்றை மக்களில் ஒரு சாராருக்கு மட்டுமே உரிய ஒன்றாக வைத்து விட்டு மற்ற மக்களை அந்நூல்களில் இருந்து விலக்கி வைத்து இருக்கின்றது. அதாவது அந்த மக்கள் அந்த சமயத்தினைச் சார்ந்தவர்கள் தானாம்...அதே கடவுளரைத் தான் வணங்குவராம்...அதே பண்பாடு நாகரீகத்தினை உடையவர்கள் தானாம்...ஆனால் அந்த சமயத்து புனித நூல்களை மட்டும் அவர்கள் படிக்கவும் கூடாதாம்...அதனைப் பற்றிக் கேட்கவும் கூடாதாம். வித்தியாசமான சட்டங்களாகத் தான் இருக்கின்றன. ஆனால் இந்த வித்தியாசங்கள் இத்தோடு முற்றுப்பெறவில்லை. இன்னும் பல வடிவங்களில் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு,

௧) கோவில் கருவறையில் நுழையவும் பூசை செய்யவும் ஒரு சாரார் மக்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கின்றது.

இதனை எதிர்த்து தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தினைக் கொண்டு வந்து அனைத்து சாதியினரில் இருந்தும் மக்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு அர்ச்சகராக பயிற்சி அளித்து கோவிலில் அர்ச்சனை செய்வதற்கு எதாக தயார் செய்து வைத்து இருக்கின்றது. ஆனால் "மற்ற சாதிக்காரன் கோவிலில் பூசை செய்வதா" என்று ஆவேசப்பட்ட ஏற்கனவே கோவிலில் பூசை செய்துக் கொண்டு இருக்கும் சாரார் அச்சட்டத்துக்கு மறுப்பு ஆணையை உச்ச நீதி மன்றத்தில் பெற்று இருக்கின்றனர். உச்ச நீதி மன்றமும் "மக்கள் அனைவரும் சமம்..எந்த தொழிலையும் எவர் வேண்டும் என்றாலும் செய்யலாம்" என்று தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக "அனைத்து சாதியினரும் எவ்வாறு அர்ச்சகராகலாம்...அவ்வாறு ஆகா முடியாது" என்றேக் கூறி தமிழக அரசின் ஆணையை கிடப்பில் போட்டு விட்டது. அதாவது 'யாருங்க சாதிய இப்ப எல்லாம் பார்குறா' என்ற இக்காலத்திலும் ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் தான் கோவிலில் பூசை செய்ய முடியுமாம்...இந்திய உச்ச நீதி மன்றம் சொல்லுகின்றது. எவ்வாறு இருக்கின்றது நீதி...மன்னிக்கவும்...மனு நீதி!!!

௨) கோவிலில் உள்ளே நுழையவே பல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கின்றது.

இது தான் இருப்பதிலே உச்சகட்டம்...ஒரு சமயத்தினைச் சார்ந்தவன் அவனது சமயத்து புனித இடமான கோவில்களுக்குள் நுழைய கூடாதாம். நுழைந்தால் தீட்டாம். மற்ற சமயங்கள் எல்லாம் "ஐயா நீர் பாவம் செய்து இருக்கின்றீர்...எங்கள் இறைவனை உண்மையிலேயே நம்பினீர்கள் என்றால் இறைவன் நிச்சயம் உங்கள் பாவங்களை போக்கி அருள்வார்" என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, இந்து சமயம் பல மக்களை அவன் பாவம் செய்தவன் ....அவனைக் கண்டாலே தீட்டு என்றுக் கூறி விலக்கி வைத்து இருக்கின்றது. அதுவும் அந்த மக்கள் எதனால் பாவம் செய்தவர்களாக அறியப்படுகின்றர்கள் என்றால் விடையாக நமக்கு கிட்டும் பதில் அவர்கள் பிறப்பிலேயே பாவம் செய்தவர்களாம்...அவர்கள் பிறப்பே பாவமாம். நல்ல கதை அல்லவா. ஒருவன் ஒரு செயலின் மூலம் பாவம் செய்து விட்டான் என்றால் அதற்கு ஏதாவது தண்டனையைப் பெற்றுக் கொண்டு மனம் வருந்தி அந்த பாவத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளலாம். ஆனால் அவன் பிறப்பே பாவம் என்றுக் கூறிவிட்டால், அவன் என்ன செய்வான்?...என்ன தான் செய்ய முடியும்...?

அத்தகைய மக்களை தொட்டாலே தீட்டாகுமாம்... சிலர் பத்து அடி தொலைவுக்குள் வந்தாலே தீட்டாகுமாம்...இன்னும் கொடுமை என்னவென்றால் சிலரை கண்டுவிட்டாலே தீட்டாகுமாம். என்ன கொடுமைங்க இது. ஒரே சமயத்தினைச் சேர்ந்த மக்களை இந்து சமயம் பிரித்து வைத்து இருக்கும் நிலையைக் கண்டீர்களா?

இது தான் இந்து சமயம் கூறும் நியதி. நீ பிறப்பால் தாழ்ந்தவன். நான் பிறப்பால் உயர்ந்தவன். இதனைக் கூறியது இறைவன். இதுவே சட்டம். முடிந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லை.நிற்க.

இந்து சமயத்தின் நூல்களை அச்சமயத்தில் உள்ள மக்கள் பலர் படிக்க முடியாது. உள்ளம் உருகி இறைவனுக்கு பூசை செய்ய முடியாது...ஏன் கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாது...இறைவனையும் காண முடியாது. இந்நிலையில் அம்மக்கள் எவ்வாறு இந்து சமயத்தினைச் சார்ந்தவர்கள் என்றுக் கூற முடியும்?

அவர்களைத் தாழ்த்துவதை விட இந்துச் சமயம் எதையுமே அவர்களுக்கு செய்து விடவில்லையே அந்நிலையில் மற்ற சமயங்கள் "ஐயா...நீங்கள் எங்கள் சமயத்தில் சேர்ந்தீர்கள் என்றால் எங்களின் கோவில்களுக்குள் நீங்கள் வர முடியும்...நீங்களும் நாங்களும் ஒன்றுதான்...நம்மில் எவ்வித ஏற்றத் தாழ்வும் கிடையாது...இதோ இறைவன் அவ்வாறே கூறி இருக்கின்றார்...இதோ எங்கள் புனித நூலில் குறிக்கப்பட்டு இருக்கின்றது பாருங்கள்...பொறுமையாய் படியுங்கள்...படித்து உங்கள் முடிவினைக் கூறுங்கள்..நம்முடைய கடவுள் நம்மை காப்பாற்றுவார்" என்றே அந்த மக்களை அணுகும் போது அம்மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு சமயம் நீ மனிதனாக இருக்க தகுதி இல்லாதவன் என்றுக் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு சமயம் நாம் அனைவரும் ஒன்று தான் என்று கூறி வருகின்றது... இந்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்? மனிதனாக இருப்பீரா இல்லை அடிமையாகவே இருப்பீர்களா?

இந்நிலையில் தான் மக்கள் இந்து சமயத்தில் இருந்து மாற ஆரம்பிக்கின்றனர்...எந்த ஒரு மனிதன் தான் அடிமைத்தனத்திலேயே கட்டுப்பட்டுக் கிடக்க எத்தனிப்பான்? இன்றைய இந்தியாவில் மதம் மாறிய மக்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்களே. அவர்களின் உரிமையை ஏன்...அவர்களும் மனிதர்களே என்ற விடயத்தைக் கூட இந்து சமயம் மறுத்தது...பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?...அவர்களை மனிதனாக பாவித்த சமயங்களுக்கு மாறி விட்டனர். மக்களுக்கு என்றுமே அவர்களைப் புரிந்துக் கொண்டு அவர்களுக்கென இருக்கும் இறைவனே தேவைப் படுகின்றது. இந்நிலையில் அத்தகைய மாற்றங்கள் சமுகத்தில் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இங்கே தான் நாம் இந்த மத மாற்றங்கள் குறித்த இந்து அமைப்புகளின் நிலையினை பார்க்க வேண்டி இருக்கின்றது.

அவர்களும் சரி அவர்களின் சமயமும் சரி ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாகக் கூட எண்ண மாட்டார்களாமாம் ஆனால் அம்மக்கள் மட்டும் எவ்வித மாற்றுக் கருத்துக்கள் இன்றி அவர்களின் சமயத்திற்கும் சரி கட்டுப்பாட்டுக்கும் சரி ஒடுங்கியே இருக்க வேண்டுமாம்... வேறு சமயங்களுக்கு மாறக் கூடாதாம்... என்ன நியாயம் இது?

அவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு ஒரு காரணமும் இருக்கின்றது...எளிய காரணம் தான்..."ஆள்வதற்கு மக்கள் இருந்தால் தானே ஆள முடியும்...மாறாக மக்கள் அனைவரும் பக்கத்து நாட்டுக்கு சென்று விட்டார்கள் என்றால் இங்கே ஆட்சி எது...அரசன் எது...?" சரி தானே. இந்த ஒரு காரணத்துக்காகத் தான் இந்து அமைப்புகள் சமய மாற்றத்தினை வன்மையாக எதிர்கின்றன. காரணம் கீழே உள்ள மக்கள் அனைவரும் மதம் மாறி விட்டார்கள் என்றால் இவர்கள் 'நாங்கள் உயர் சாதியினர்' என்று எவரிடம் போய் தங்களின் அதிகாரத்தினை செலுத்துவர்?...அவர்களின் கொள்ளைக் கூடங்களான கோவிலுக்கு எவ்வாறு செல்வம் வந்துச் சேரும்? அவர்களின் பிழைப்பு எவ்வாறு ஓடும்? இதுவே தான் அவர்களின் தலையாயக் கவலை...மாறாக கடவுளரின் கருத்துக்களைப் பற்றி அவர்களுக்கு யாதொறுக் கவலையும் இல்லை.

மக்கள் மாறி விட்டால் இவர்களின் (இந்து அமைப்புகள், பிராமணர்கள்) அதிகாரம் செல்லாக் காசாகி விடும். எனவே தங்களின் அதிகாரத்தினை தக்க வைத்துக் கொள்ளவும், மக்களை ஏமாற்றி சுரண்டிப் பிழைக்கவுமே இவர்கள் மதம் மாறாதீர்கள் என்ற பிரச்சாரத்தினை முன் வைக்கின்றனர். அரசியலே இவர்களின் இலக்காக இருக்கின்றதே அன்றி ஆன்மிகம் துளியும் கிடையாது. இதனை அறிந்தே திருமூலர் அக்காலத்திலேயே

சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே - திருமந்திரம்

என்று கூறி வைத்து விட்டு சென்று விட்டார்.


இந்து சமயம் தங்களுக்கு உரிய உரிமைகளையும் மதிப்பினையும் தரவில்லை என்பதாலேயே தான் மக்கள் மதம் மாறுகின்றனர் (இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கல்வி பெற்று இருக்கின்றனர் என்றால் அதற்கு கிறுத்துவர்களே முக்கிய காரணம்...இந்து சமயம் அவர்களுக்கு கல்வியினையும் தடை செய்து வைத்து இருந்தது). அவ்வாறு மதம் மாறுவதால் தாங்கள் இழந்த பல உரிமைகளை அவர்கள் மீட்டு எடுத்துத் தான் கொள்கின்றனர். ஆனால் கிருத்துவ அமைப்புகளும் அவர்களின் இலாப நோக்கிலேயே மக்களை கணக்கிடுவதினால், இந்தியாவில் மதம் மாறிய பின்னும் சாதியின் கொடுமைகளில் இருந்து வெளிவர இயலாது மக்கள் இருக்கின்றனர். ஒரு தாழ்த்தப்பட்ட இந்து கிருத்துவத்தில் இணைந்தால் அவன் தாழ்த்தப்பட்ட கிருத்துவனாகவே மாற்றப்படுகின்றான். சாதி ஏற்றத்தாழ்வு என்னும் நோய் இங்கே கிருத்துவத்தையும் பிடித்து இருக்கின்றது.

காரணம் இந்து சமயமும் சரி கிருத்துவ சமயமும் சரி மக்களை வெறும் அரசியல் கருவிகளாகவே பார்கின்றன. கிருத்துவத்தில் மக்கள் சேர்ந்தால் கிருத்துவம் பலம் பெரும்...அதன் மூலமாக அரசியல் செல்வாக்கினை அச்சமயம் அடையும். மாறாக இந்து சமயத்தில் மக்கள் இருந்தனர் என்றால் அவர்கள் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள் தொடர்ந்து ஆதாயம் அடைந்துக் கொண்டே இருப்பார்கள்...அவர்களின் அரசியல் செல்வாக்கும் அவ்வாறே இருக்கும். இதற்காகவே தான் இரு சமயங்களும் மக்களைக் கவரப் பார்க்கின்றன. வேறு ஆன்மீக என்னமோ அல்லது மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற என்னமோ இவ்விரண்டு சமயங்களுக்கும் துளியும் கிடையாது என்பதனை நாம் வரலாற்றில் இருந்து அறிந்துக் கொள்கின்றோம்.

இவ்விரண்டு சமயங்களின் அரசியல் காய் நகர்த்தலில் பாவம் மக்களே பகடைக் காய்களாக ஆக்கப்படுகின்றனர். எப்பொழுதும்!!!

18 கருத்துகள்:

எந்த மதத்தில் ஜாதி இல்லை அது இந்துவாக இருக்கட்டும் கிறிஸ்துவாக இருக்கட்டும் எல்லாமே ஜாதியில் முழ்கி இருப்பவையே...

இன்றைய உலகில் அனைத்து மதங்களும் மற்ற மதங்களை குறை கூறியே பிழைப்பு நடத்துகின்றன..

//எந்த மதத்தில் ஜாதி இல்லை அது இந்துவாக இருக்கட்டும் கிறிஸ்துவாக இருக்கட்டும் எல்லாமே ஜாதியில் முழ்கி இருப்பவையே...//

வேறு எந்த மதத்தில் நீங்கள் பிறப்பால் சாதி இருக்கின்றது என்று கூறுனீர்கள் என்றால் அதனைப் பற்றி நான் அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.

//இன்றைய உலகில் அனைத்து மதங்களும் மற்ற மதங்களை குறை கூறியே பிழைப்பு நடத்துகின்றன..//

இன்றைய மத நிறுவனங்கள் அரசியல் நிறுவனங்களே...குறைக் கூறினால் தான் அவைகள் அவற்றின் பிழைப்பை ஓட்ட முடியும்

//இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கல்வி பெற்று இருக்கின்றனர் என்றால் அதற்கு கிறுத்துவர்களே முக்கிய காரணம்...//
அவர்கள் கிறிஸ்துவர்களாக இல்லமலிருந்தாலாவது, அரசின் பல சலுகைகளைப் பெற்றிருக்க முடியும். அரசு தரும் பல சலுகைகளை இழந்ததற்கும் காரணம் கிறிஸ்துவ மதமே என்பதை மறவாதீர். கிறிஸ்துவ மதத்தில் உள்ள சாதிப்பாகுபாடுகளால் மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களே. அதிலும் ஒடுக்கப்பட்டவர்கள், தலித் கிறிஸ்துவ பெண்கள். தலித் ஆண் கிறிஸ்தவர்களின் ஒடுக்குதலுக்கு இவர்கள் இரையாகிறார்கள்.

//அவர்கள் கிறிஸ்துவர்களாக இல்லமலிருந்தாலாவது, அரசின் பல சலுகைகளைப் பெற்றிருக்க முடியும்.//

வணக்கங்கள் அய்யா... தாழ்த்தப்பட்டோர் என்றால் யார் என்றும் ... அவர்கள் என்றில் இருந்து எதனால் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் தாங்கள் முதலில் கூறினால் நலமாக இருக்கும்... மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகைகள் கிட்டி இருக்கும் என்று வேறு கூறுகின்றீர் .. அச்சலுகைகள் அவர்களுக்கு எவ்வாறு வந்தது எதனால் வந்தது என்றும் தாங்கள் கூறினாலும் நன்றாக இருக்கும்.

அதனை எல்லாம் விடுத்து தாழ்த்தப்பட்டவர் என்றால் சலுகை கிடைத்து இருக்கும் அதனால் அவர்கள் இந்து சமயத்திலேயே இருந்து இருக்கலாம் என்றுக் கூற வருவது ஒன்று நாம் வரலாற்றினை நன்றாக அறிந்து இருக்க வில்லை என்று பொருள் அல்லது கண் மூடித் தனமாக இந்து சமயத்தினை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று தங்களிடம் இருந்தாலும் நம்முடைய விவாதத்தால் துளி அளவு பயன் கூட ஏற்பட போவதில்லை. நன்றி.

//அதிலும் ஒடுக்கப்பட்டவர்கள், தலித் கிறிஸ்துவ பெண்கள். தலித் ஆண் கிறிஸ்தவர்களின் ஒடுக்குதலுக்கு இவர்கள் இரையாகிறார்கள்.//

பெண்களும், சூத்திரர்களும் பொய், புரட்டு, பேராசை போன்ற குணங்களுக்கு சொந்தக்காரர்கள். (அத் 2 சு 1)

மேன்மைக்குரியவர்கள் தன் தாய், மகள், சகோதரி உள்ளிட்டவர்களோடு தனிமையில் அமர மாட்டார்கள். (அத் 2 சு 215)

தன்னைவிட தாழ்ந்த சாதி ஆணோடு புணர்ச்சியில் ஈடுபடும் பெண்ணை தண்டித்து தனிமைப்படுத்துதல் வேண்டும். (அத்.8 சு.364)

ஆண்களை தன்வயப்படுத்துவது பெண்களின் இயல்பு; அந்த காரணத்தினால் அறிவிற்சிறந்தோர் பெண்களோடு தனித்திருப்பதில்லை. (அத்.2 சு.213)

தன்னை குறித்த பெருமையோ அல்லது தம் உறவினர்கள் குறித்த பெருமையையோ தன் உள்ளத்தில் கொண்டுள்ள பெண்ணை, அந்நாட்டின் அரசன் நாய்களின் மூன் வீசி எரிய வேண்டும். (அத்.8 சு.370)

தன் கணவனோடு சேர்ந்து பிள்ளை பெற முடியாத பெண், தன் கொழுநனோடோ அல்லது மாமனாரோடோ இணைந்தாவது குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். (அத்.9 சு.58)

இவை சில பகுதிகளே... ஆகையினால் பெண் அடிமைத்தனம் என்பதனை ஒரு சமயத்துடன் மட்டுமே முடிச்சினைப் போட்டு பேசுவது என்பது அரசியலே ஆகும்... அனைத்துச் சமயங்களும் பெண்ணை இன்று அடிமையாகத் தான் வைத்து இருக்கின்றன.

ஒன்றைத் தெளிவாகக் கூறிக் கொள்ள விழைகிறேன்...நான் எந்த சமயத்திற்கும் சார்ந்தவனில்லை... அனைத்துச் சமயங்களுமே இன்று அரசியல் நிறுவனங்களாகவே இருக்கின்றன...!!!

தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்துவ மதத்தில் மாறினால் அவர்களை பிற்படுத்தப்பட்டோர்(B.C) பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாத ஐயா? பிறகு எவ்வாறு தாழ்த்தப்பட்டோருக்கு கொடுக்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கும். எனக்கு தெரிந்து பல பாதிரியார்கள்(தாழ்த்தப்பட்டோர்) தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் இன்றும் கூட தங்களுடைய மதம் இந்து மதம் என்றரே பதிவு செய்துள்ளனர் என்பதை நான் அறிவேன். நான் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது நடந்த உண்மை சம்பவத்தை கூறுகிறேன், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு அக்கா தன்னுடைய மதம் கிறிஸ்துவம் என்று பதிவு செய்ததால் அவரை பிற்படுத்தப்பட்டோர்(B.C) பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதனால் அவருக்கு பள்ளியில் மதிய சாப்பாடு கிடையாது இதை விட பெரிய உதாரணம் உங்களுக்கு என்னால் சொல்ல முடியாது. இன்னும் பல சலுகைகள் அவருக்கு கிடையாது அவருடைய மதம் கிறிஸ்துவம் என்று பதிவு செய்ததால்... இன்னும் நிறைய சலுகைகள் பறிக்கப்படுகிறது அதை நீங்கள் இணையதளத்தில் தேடினாலே கிடைக்கும்...

இந்த ஜாதி ஜல்லி அடித்தே எவ்வளவு நாள் காலம் ஓட்டுவீர்கள், சரி நீங்கள் சொல்லுவது போல ஜாதி அடிப்படையில் பாதிக்கப்பட்டோர் எல்லாம் கிறித்தவத்துக்கு வந்த பின்பு ஜாதியை துறந்து வாழ்கிறார்கள் என்கிறீர்களா?

இவ்வளவு பேசுகிறீர்களே எந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிறித்தவ குடும்பத்திலாவது உயர்சாதி கிறித்தவர்கள் சம்பந்தம் போட்டதுண்டா? அவ்வளவு ஏன் கிறித்தவ மதத்தினுள் உள்ள அந்தந்த ஜாதி பிரிவினில்தான் பெண் கொடுக்கிறார்கள் எடுக்கிறார்கள்.

தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற பாவச்செயல் அதனை சுயநலத்திற்கு ஆரம்பித்த வகுப்பினர் கண்டனத்துக்கு உரியவர்தாம். ஆனால் அவை அக்காலத்திலிருந்தே ராமானுஜர், காந்தி, பாரதி மற்றும் பல பெரியோர்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்க்கப்பட்டு கட்டுபடுத்தபட்டுள்ளது. சிவவாக்கியரின் 40 வது பாடலும் ஜாதி பேதத்தை கண்டிக்கிறது.
சைவ வைணவ பெரியோர் எல்லாம் எல்லா வருனங்களிலும் இருந்தும் வந்தவர்கள் தான். கேரளாவில் சிரியன், குரியன் என்றெல்லாம் உயர்ஜாதி கிறித்தவர்கள் உண்டு அவர்களை பொறுத்தவரை மற்ற எல்லா கிறித்தவர்களும் அவர்களை விட குறைவு என்ற மனபோக்குள்ளவர்கள். இங்கேயே ஏழாம் நாள், எட்டாம் நாள், பெந்தகொஸ்தே, டிஸ்கோதே,ரோமன் கத்தோலிக், சிரியன் கத்தோலிக் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டு கொண்டுதான் உள்ளனர். ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

பெண்களை பற்றி வேதத்தில் குறிப்பிட்டதை கூறிய நீங்கள் ஏன் பைபிளில் உள்ளதையும் குறிப்பிடவில்லை? அதை மறைக்க காரணம் என்னவென்று கூறினால் நலமாக இருக்கும். நான் கூறுகிறேன் ஐயா,
எசயா. 13:16 அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.

எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள். இன்னும் நிறைய வசனங்கள் உள்ளன ஐயா... அதை கூறி உங்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை

//ஒன்றைத் தெளிவாகக் கூறிக் கொள்ள விழைகிறேன்...நான் எந்த சமயத்திற்கும் சார்ந்தவனில்லை... அனைத்துச் சமயங்களுமே இன்று அரசியல் நிறுவனங்களாகவே இருக்கின்றன...!!!//

:) ஏன் இப்படி திடீரென்று இப்படி பல்டி அடிக்கிறீர்... உங்களுடைய பதிவுகளை படித்தாலே தெரியும் நீங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவரா இல்லை சாராதவரா என்று...

//பெண்களை பற்றி வேதத்தில் குறிப்பிட்டதை கூறிய நீங்கள் ஏன் பைபிளில் உள்ளதையும் குறிப்பிடவில்லை? அதை மறைக்க காரணம் என்னவென்று கூறினால் நலமாக இருக்கும்.//



பொறுமை பொறுமை.... அடுத்த பதிவு அதப் பத்திதான வரப் போகுது :) .... அதுக்குள்ள நீங்களே சொல்லிடீங்கனா எப்படித் தல... நேரம் கிட்டும் பொழுது தானே எழுத முடியும்...



தங்களைப் பற்றிய என்னுடைய கருத்து 'நீங்கள் வேதங்களை நம்புகின்றவர்' என்று இருந்ததினால் அதில் இருந்து கூறினேன்... பழைய ஏற்பாட்டினை அடுத்த பதிவிற்கென்று வைத்து இருந்தேன்!!! :)

//ஏன் இப்படி திடீரென்று இப்படி பல்டி அடிக்கிறீர்...//

பல்டியா... :) ... என்னுடைய பதிவுகளை முழுமையா படிசீங்கனா உண்மை புரிந்திருக்கும்... அவ்வாறு இல்லாது சமய சார்புக் கண்ணாடியினை அணிந்துக் கொண்டு கண்டால் என்ன தெரிந்து இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.


//உங்களுடைய பதிவுகளை படித்தாலே தெரியும் நீங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவரா இல்லை சாராதவரா என்று...//

அப்படியா!!! நான் சமயத்தினைச் சார்ந்து இருக்கின்றவனா இல்லையா? சமயத்தினைச் சார்ந்தவன் என்றால் என்ன சமயம் என்று தாங்கள் எண்ணுகின்றீர்கள்!!!

//கேரளாவில் சிரியன், குரியன் என்றெல்லாம் உயர்ஜாதி கிறித்தவர்கள் உண்டு அவர்களை பொறுத்தவரை மற்ற எல்லா கிறித்தவர்களும் அவர்களை விட குறைவு என்ற மனபோக்குள்ளவர்கள்.//



இவர்கள் வெளி நாட்டில் இருந்து வந்த கிருத்துவர்கள்... இவர்கள் எவ்வாறு எக்காலத்தில் உயர் சாதியினராக ஆனார்கள் என்று தங்களால் கூற முடியுமா? நான் கூறுகின்றேன்...

இந்தியாவில் ஆரிய வர்த்தம் என்ற ஒன்றை நிறுவி வெளி நாட்டவர்கள் (சகர்கள், ஹுன்னேர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள்) அனைவரும் ஒன்றினைகின்றனர்...அவர்கள் தாம் அவர்கள் உயர் சாதியினர் என்றும் மற்ற இந்திய மக்கள் தாழ்ந்த சாதியினர் என்றும் பிரிவினைக் கொண்டு வருகின்றனர். இவற்றைப் பற்றி சுருக்கமாக பதிவினை எழுதி இருக்கின்றேன். (ஆரியர்கள் யார்)



அவர்களுடன் கூட்டு சேர்ந்த மற்றொரு வெளிநாட்டவர்களான சிரியன் கிருத்துவர்களும் அதனால் தான் உயர் சாதியினராக அறியப்படுகின்றனர். கூட்டுச் சதி!!!



//இங்கேயே ஏழாம் நாள், எட்டாம் நாள், பெந்தகொஸ்தே, டிஸ்கோதே,ரோமன் கத்தோலிக், சிரியன் கத்தோலிக் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டு கொண்டுதான் உள்ளனர். ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?//



ஏன் என்றால் இவர்கள் அரசியல் செய்பவர்கள்... இவர்கள் இறைவனை அறிவதும் இல்லை அவனை அறிய முயல்வதும் இல்லை. எல்லாமே அரசியல் வியாதிகள்...!!!

//இந்த ஜாதி ஜல்லி அடித்தே எவ்வளவு நாள் காலம் ஓட்டுவீர்கள்//

யாருங்க காலத்த ஓட்டுறது...சங்கர மடமா...இல்லை நானா... எல்லா சாதிகளும் ஒன்று தான்... மக்கள் அனைவரும் சமம் தான் என்று கூறி அடுத்த மடாதிபதியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர வைக்க வேண்டியது தான?



சாதியினை வைத்துத் தான் இன்றைய இந்துத்துவா கொள்ளை(கை)க் காரர்களே இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்பதே அவர்களின் தாரக மந்திரம்.



கிருத்துவர்கள் என்ற பெயரில் பல கொள்ளைகாரர்கள் உலகினை கொள்ளை இட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் அதையே சாதியின் வழியாக பிராமணக் கூட்டம் செய்துக் கொண்டு இருக்கின்றது.

//தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற பாவச்செயல் அதனை சுயநலத்திற்கு ஆரம்பித்த வகுப்பினர் கண்டனத்துக்கு உரியவர்தாம். ஆனால் அவை அக்காலத்திலிருந்தே ராமானுஜர், காந்தி, பாரதி மற்றும் பல பெரியோர்களால் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்க்கப்பட்டு கட்டுபடுத்தபட்டுள்ளது. சிவவாக்கியரின் 40 வது பாடலும் ஜாதி பேதத்தை கண்டிக்கிறது.
சைவ வைணவ பெரியோர் எல்லாம் எல்லா வருனங்களிலும் இருந்தும் வந்தவர்கள் தான்.//



முதலில் ஒன்றினை புரிந்துக் கொள்ளுங்கள் வருணங்கள் என்பது ஆரியர்களோடது...இந்தியர்களுக்கும் சரி சைவ வைணவ சமயங்களுக்கும் சரி வருணங்களோடு யாதொரு தொடர்பும் கிடையாது. எனவே வருணம் என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் 'நீங்கள் வருண பாகுபாட்டினை' ஆதரிப்பவர் என்ற எண்ணம் என்னில் பதிய வாய்ப்பு இருக்கின்றது. காரணம் தங்களின் கோட்பாட்டினை தாங்கள் இன்னும் கூறவே இல்லை.

மற்றொன்று, சாதி ஏற்றத்தாழ்வு என்பது இந்தியாவில் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட தொரு சதி...அதனை அவரால் இன்றும் வளர்த்து வருகின்றனர். அதனை மெய்யான ஆன்மீகத் தமிழர்களான சித்தர்கள் எதிர்த்தனர்...அதனால் அவர்கள் அரசியல் செல்வாக்கால் கொல்லப்பட்டனர்... சைவ வைணவ சமயத்திற்கும் சாதி ஏற்றத் தாழ்விற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

அத்தகைய ஏற்றத்தாழ்வினை சூழ்ச்சியாக உருவாக்கியது இன்றைக்கு பிராமணர்கள் கொண்டாடும் ஆதி சங்கரரே!!! இது வரலாறு!!!

//தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்துவ மதத்தில் மாறினால் அவர்களை பிற்படுத்தப்பட்டோர்(B.C) பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாத ஐயா?//



அது எனக்குத் தெரியும் நண்பரே...!!! நான் கேட்டது சலுகைகள் பற்றியே? தாழ்த்தப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்? எதனால் ஆனார்கள்? அவர்களுக்கு சலுகைகள் எதனால் கிடைக்கின்றன? எதனால் கிடைக்கின்றன? எப்பொழுதில் இருந்து கிடைகின்றன?



இக்கேள்விகளுக்கு விடை தெரியுமா?



இன்று ஈழத்திலே தமிழ் மக்களுக்கு சிங்கள அரசு சாப்பாடு வழங்குகின்றது...ஆனால் அகதிகளாக வந்தவர்களுக்கு அது வழங்கும் சாப்பாடு கிடைக்கப் பெறாது... எனவே ஈழத்தில் வாழும் தமிழர்களே நன்றாக இருக்கின்றனர் அவர்களை இலங்கை அரசு நன்றாக கவனிக்கின்றது என்பதைப் போன்று தான் உங்கள் கூற்று இருக்கின்றது.



ஏன் சிங்கள அரசு உணவு வழங்க வேண்டும்... உணவிற்கு வழி இன்றி ஈழத்தில் ஆட்சி புரிந்த தமிழர்கள் தாழ்த்தப்பட்டது எப்பொழுது? அவர்கள் ஏன் அவ்வாறு ஆனார்கள் என்பதே எனதுக் கேள்வி?

//ஆறு வகை சமயங்கள் இல்லை ஐயாயிரம் சமயங்கள் உருவானாலும் பாவம் செய்தால் நரகம் புண்ணியம் செய்தால் சொர்க்கம் அவ்வளவு தான் இது அவர்களுக்கு புனித நூலை படிக்காமலே அறிந்திருக்கும், மனதில் பதிந்திருக்கும் இறைவனின் ஒரு பொதுவான கருத்து என்று தானே நான் சொன்னேன்...//



அப்படி என்றால் இன்று நான் கூட ஒரு சமயத்தினை ஆரம்பிக்கலாம் என்னை இறைவனாக வைத்தே... வேறு கருத்துகள் தான் சமயத்தில் இருப்பதில்லையே... சரியா?

//என்னுடைய பார்வையில் பார்த்தால் இந்து மதம் என்பது வாழ்க்கை முறை (ஜாதி என்ற தீண்டாமையை தவிர்த்து) அவ்வளவு தான்...//



இது நாத்திக பிராமணக் கொள்கை... சுருக்கமாக இந்துத்துவா கொள்கை. இதற்கும் சைவ வைணவ சமயத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

//ஆனால் கிறிஸ்துவ மதம் அப்படியா சொல்லுங்கள்? மற்ற மதத்தவரை மதிப்பது கூட கிடையாது. அட அத விடுங்க மற்ற மதத்தை மதிக்காமல் போனால் போகட்டும் கிறிஸ்துவ மதத்தில் இருப்பது சில பிரிவுகள் தான் ஆனால் பாருங்கள் கிறிஸ்துவ மதத்தில் மற்ற பிரிவுகளில் இருப்பவர்களையே மதிக்க மாட்டார்கள் கேலி, கிண்டல் செய்வார்கள். இருப்பதே சில பிரிவுகள் அதற்குள் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?ஒற்றுமை என்பது காணப்படவில்லையே ஏன்? இந்து மதத்தை குறை கூறாத கிறிஸ்துவ தேவாலயத்தை பார்க்கவே முடியாது ஏனென்றால் அது தான் அவர்கள் தொழில் அப்படி குறை கூறாவிட்டால் கூட்டம் சேர்க்க முடியாது, பிழைக்க முடியாது. அதே போல தான் பிராமிணர்களும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி விட்டால் அவர்களால் பிழைக்க முடியாது அவ்வளவு தான்... ஜாதி ஏற்றத்தாழ்வு கடவுளால் உருவாக்கப்படவில்லை மனிதனால் உருவாக்கப்பட்டவையே... பிழைக்க முடியாத கூட்டத்தால் உருவாக்கப்பட்டவையே...//


இதைத் தானே நண்பரே நானும் கூறி இருக்கின்றேன்... இன்று சமயங்கள் தொழில் நிறுவனங்களாகி விட்டன... ஆன்மீகத்தினை தவிர அங்கே அரசியலே நடக்கின்றது... இதைத் தானே நானும் கூறுகின்றேன். எந்த சமயமும் யோக்கியமான சமயம் என்று இன்று மார் தட்டிக் கொண்டு முன்னே வர முடியாது. அத்தனையையும் கிழித்துப் போட முடியும்.



எனது இலக்கு சமயங்கள் அல்ல... கருத்துகளே ஆகும்...இதனைத் தான் நான் பல பதிவுகளில் பதிவிட்டுக் கொண்டு வருகின்றேன்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/02/blog-post_4645.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/02/blog-post_1889.html

எனவே இக்கருத்துகளைக் குறித்த உமது கருத்துக்களை வைத்தால் அது நலமாக இருக்கும். இல்லை நீங்கள் சமயக் கருத்துக்களை விடுத்து சமயங்களை பற்றி மட்டுமே பேச எண்ணினீர்கள் என்றால் அதற்கு வேறு பலர் இருப்பர் தங்களது சமயம் தான் உயர்ந்தது என்றுக் கூறிக் கொண்டு.



இங்கே கருத்துகளே விவாதிக்கப் படுகின்றன!!! நன்றி!!!

//பொறுமை பொறுமை.... அடுத்த பதிவு அதப் பத்திதான வரப் போகுது :) .... அதுக்குள்ள நீங்களே சொல்லிடீங்கனா எப்படித் தல... நேரம் கிட்டும் பொழுது தானே எழுத முடியும்...//
வணக்கம் ஐயா நலமாக உள்ளீர்களா? இதுவரை நீங்கள் எழுதிய அனைத்து பதிவுகளும் இந்து மதத்தை எதிர்த்தே உள்ளன. கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து ஒரு பதிவும் இல்லை ஆனால் பாருங்கள் இயேசுவின் வரலாறு அல்லது பைபிளின் வரலாறு என்று இணையத்தில் தேடினாலே அனைத்தும் கிறிஸ்துவத்திற்கும் பைபிளுக்கும் எதிரான பக்கங்களே அதிகமாக உள்ளன ஆனால் நீங்கள் ஒரு பதிவும் கிறிஸ்துவத்தையும் பைபிளையும் எதிர்த்து இதுவரை எழுதவில்லை என்பது உண்மை... இந்து மதமும் அதன் வேதங்களையும் எதிர்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் ஆனால் கிறிஸ்துவத்தை எதிர்த்து எழுத நேரம் கிட்டவில்லை அப்படி தானே ஐயா...:)

//பல்டியா... :) ... என்னுடைய பதிவுகளை முழுமையா படிசீங்கனா உண்மை புரிந்திருக்கும்... அவ்வாறு இல்லாது சமய சார்புக் கண்ணாடியினை அணிந்துக் கொண்டு கண்டால் என்ன தெரிந்து இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.//
என்ன உண்மை ஐயா கிறிஸ்துவின் கருத்துக்களே இன்று அனைத்து மதங்களிலும் உள்ளது என்பது தானே... கிறிஸ்துவின் கருத்துக்கள் எங்கிருந்து உருவானது என்பது தாங்கள் அறியவில்லையா ஐயா... அதையும் அறிந்துவிட்டு வாருங்கள் நீங்கள் சமய சார்புக் கண்ணாடியினை அணிந்துக் கொண்டு இருக்குறீர்கள இல்லை நான் சமய சார்புக் கண்ணாடியினை அணிந்துக் கொண்டு இருக்கிறேனா என்று தெரியும்...

//யாருங்க காலத்த ஓட்டுறது...சங்கர மடமா...இல்லை நானா... எல்லா சாதிகளும் ஒன்று தான்... மக்கள் அனைவரும் சமம் தான் என்று கூறி அடுத்த மடாதிபதியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர வைக்க வேண்டியது தான?//
என்னை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டீரே ஐயா... சரி நீங்கள் கேட்டது உண்மையான ஒரு கேள்வி அது நடவாத காரியமும் கூட நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரு கறுப்பினத்தவர் போப்பாண்டவராக வர முடியுமா? இப்படி நான் கேள்வி கேட்டால் உங்களிடமிருந்து ஒற்றை வரியில் பதில் வரும் அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று சரியா... அது அரசியல் என்றால் இதுவும் அரசியலே சரி தானே ஐயா... அங்கு நிறவெறி இங்கு மதவெறி அவ்வளவு தான் வேறுபாடு...

//முதலில் ஒன்றினை புரிந்துக் கொள்ளுங்கள் வருணங்கள் என்பது ஆரியர்களோடது...இந்தியர்களுக்கும் சரி சைவ வைணவ சமயங்களுக்கும் சரி வருணங்களோடு யாதொரு தொடர்பும் கிடையாது. எனவே வருணம் என்று கூறினீர்கள் என்றால் 'நீங்கள் வருண பாகுபாட்டினை' ஆதரிப்பவர் என்ற எண்ணம் என்னில் பதிய வாய்ப்பு இருக்கின்றது. காரணம் தங்களின் கோட்பாட்டினை தாங்கள் இன்னும் கூறவே இல்லை.//
நான் வருண பாகுபாட்டினை எப்பொழுதும் எதிர்ப்பவனே. இந்த வருண பாகுபாடு இன்றோ நேற்றோ முளைத்தது கிடையாது உலகில் மனிதன் தோன்றியது முதல் உருவானது தான். இதை குறித்து விவரங்களை சேகரித்து வருகிறேன் விரைவில் என்னுடைய தளத்தில் பதிவிடுவேன்.
//அது எனக்குத் தெரியும் நண்பரே...!!! நான் கேட்டது சலுகைகள் பற்றியே? தாழ்த்தப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்? எதனால் ஆனார்கள்? அவர்களுக்கு சலுகைகள் எதனால் கிடைக்கின்றன? எதனால் கிடைக்கின்றன? எப்பொழுதில் இருந்து கிடைகின்றன?//
இதை குறித்து விவரங்களை சேகரித்து வருகிறேன் விரைவில் என்னுடைய தளத்தில் பதிவிடுவேன்.

//அப்படி என்றால் இன்று நான் கூட ஒரு சமயத்தினை ஆரம்பிக்கலாம் என்னை இறைவனாக வைத்தே... வேறு கருத்துகள் தான் சமயத்தில் இருப்பதில்லையே... சரியா?//
தாராளமாக தொடங்குங்கள், விளம்பரம் செய்யுங்கள் கல்லாவை நிரப்புங்கள். அப்படித்தானே இன்று இந்து மதமும் கிறிஸ்துவ மதமும் உள்ளது. உங்களுக்கு தெரியாத ஐயா. இந்து மதத்தில் புதுப்புது சாமியார்கள் உருவாகி வருகிறார்கள், ஆனால் கிறிஸ்துவ மதத்தில் புதுப்புது பிரிவுகள் உருவாகிக்கொண்டே வருகின்றன (http://idhuthanunmai.blogspot.in/2008/01/to-z.html) அவ்வளவு தான் வித்தியாசம்.

//எனது இலக்கு சமயங்கள் அல்ல... கருத்துகளே ஆகும்...இதனைத் தான் நான் பல பதிவுகளில் பதிவிட்டுக் கொண்டு வருகின்றேன்.//
நீங்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் கிறிஸ்துவத்திற்கு முன்பே உள்ளது ஐயா, நீங்கள் அதை மறைத்துவிட்டு கிறிஸ்துவ கருத்துக்களே அனைத்து மதங்களிலும் பரவியுள்ளது என்று கூறுகிறீர்களே... ஹோரஸ் பிறந்தது டிசெம்பர் 25 கன்னி பெண்ணுக்கு பிறந்தார் 12 பேருடன் பயணித்தார் கிழக்கில் நட்சத்திரம் 3 ராஜாக்கள் பார்த்தார்கள் பல சாகசங்கள் செய்தார் வெளிச்சத்தின் கடவுள் 3 நாட்கள் இறந்திருந்தார் உயிர்த்தெழுந்தார் ஆனால் இது அப்படியே தொடர்கிறது... அட்டிஸ்(கிரேக்கம் ) (கி .மு 1200 ) டயநோசிஸ் (கிரேக்கம் 500 கி மு) ,மித்ரா பெர்சிய (கி .மு 1200 ) முக்கியமாக ஞாயிற்று கிழமை வழிபாட்டின் ஆரம்பம். இதையெல்லாம் ஏன் மறைக்கிறீர் ஐயா...

//இங்கே கருத்துகளே விவாதிக்கப் படுகின்றன!!!//
இந்த கருத்துக்களால் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று தாங்கள் கூறினாலும் நலமாக இருக்கும், ஜாதி ஒழிந்ததா, வன்முறைகள் ஒழிந்ததா, பிரச்சனைகள் ஒழிந்ததா வேறு ஏதாவது ஒழிந்ததா நீங்கள் கூறும் கருத்துக்களால் மனித சமுதாயத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினாலும் நலமாக இருக்கும், நன்றி!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு