சமசுகிருதம்....ஒரு அருமையான மொழி!!!

"அட என்னங்க 'தமிழ் தமிழ்' என்றுக் கூறிக் கொண்டு தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் போராடுபவர்கள் எல்லாம் சமசுகிருதத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்க சமசுகிருதம் அருமையான மொழி அப்படின்னு சொல்றீங்களே...கட்சி மாறிடீங்களா!!!" என்று நண்பர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். சமசுகிருதம் உண்மையிலையே அருமையான மொழி தான். அதில் ஆய்வாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்களே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு காலத்தில் சமசுகிருதம் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் திடீர் என்றோ அல்லது காரணம் ஏதும் இன்றியோ தோன்றிவிடவில்லை மாறாக இந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒரு மாபெரும் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலினைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஆனால் இப்பொழுது ஏன் சமசுகிருதத்தினை தமிழர்கள் அன்று வளர்த்தனர்...ஏன் பின்னர் எதிர்கின்றனர்...என்ற இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் சமசுகிருததினைக் காண வேண்டி இருக்கின்றது. காண்போம்...

நாம் ஏற்கனவே சமசுகிருதத்தின் காலம் என்ற பதிவில் சமசுகிருதத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்றுக் கண்டு இருந்தோம். நண்பர்கள் பலர் இக்கருத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் காலம்காலமாக சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்றே நாம் நம்பிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...அவ்வாறு தான் நம்மிடையே கருத்துக்களும் பரப்பப்பட்டு இருக்கின்றன. சரி பிரச்சனை இல்லை...இப்பொழுது நாம் சமசுகிருதத்தினைப் பற்றி சற்று உன்னிப்பாகக் காணலாம். அதற்கு முதலில் நாம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் காண வேண்டி இருக்கின்றது.

கி.பி காலத்தில் இந்தியாவில் எந்த எந்த மக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதனை நாம் முன்னர் கண்ட பதிவுகளில் கண்டு இருக்கின்றோம்.
இதற்கு முன்னர் அந்தப் பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை முதலில் படித்து விட்டால் நலமாக இருக்கும். (ஆரியர் யார், ஆரியர் யார் - 2)

சரி படிச்சிட்டீங்களா...அருமை.

கி.பி முதல் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கின்றனர் என்று அந்தப் பதிவுகள் வாயிலாக நாம் அறிந்து இருக்கின்றோம். பெர்சியர்கள் இருக்கின்றனர், கிரேக்கர் இருக்கின்றனர்...ரோமர் இருக்கின்றனர்...பார்தியர்கள் இருக்கின்றனர்...குசானர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மக்கள் இனத்தவர் இங்கே இருக்கின்றனர். பல்வேறு மக்கள் இனத்தவர் இருக்கின்றனர் என்றால் பல்வேறு மொழிகளும் இருக்க வேண்டும் தான் அல்லவா...


அவ்வாறே தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன...தமிழ்,பாலி,அரமேயம்,பாரசீகம்(பெர்சியர்களின் மொழி),கிரேக்கம், இலத்தின், அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.இப்பொழுது ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் மேலே நாம் கண்ட அந்த அனைத்து மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தினில் நம்மால் காண முடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருவாளர் சார் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் சமசுகிருதமே உலகின் முதல் மொழியாக இருந்து இருக்கலாம் என்ற கருத்தை கூறுகின்றார். அன்று ஆரம்பித்தது தான் சமசுகிருதம் உலகின் முதல் மொழி என்றக் கோட்பாடு.

ஆனால் இந்தக் கருத்தினை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் எளிதானதொரு காரணம் தான். சமசுகிருத எழுத்துக்கள் கிடைக்கப் பெரும் முன்னரே மேலே கூறிய அந்த மற்ற மொழிகளுக்கான எழுத்துக்களும் சரி அவை பயன்பாட்டில் இந்த இன மக்களிடம் இருந்தன என்ற சான்றுகளும் சரி மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் சமசுகிருதத்தின் சான்றுகளோ பிற்காலத்திலேயே தான் கிட்டப் பெறுகின்றன. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட ஒரு மொழி என்றே பொருள் தருகின்றது. எனவே மேலே உள்ள அந்த மொழிகளை எல்லாம் இணைத்து ஏன் சமசுகிருதத்தினை மக்கள் உருவாக்கினர் என்று நாம் கருதக் கூடாது...? அந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து செம்மையாக தோன்றிய ஒரு புதிய மொழியாக ஏன் சமசுகிருதம் இருக்க கூடாது? இருக்கலாம் தானே.

அதாவது பல மொழிகள் இருக்கின்றன. அவை முன்னரே இருந்து இருப்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. திடீர் என்று ஒரு புதிய மொழி தென்படுகின்றது...அந்த மொழியில் முன்பு இருந்த மொழியின் எழுத்துக்கள் எல்லாம் தென்படுகின்றன. எனவே முன்பிருந்த மொழிகளை எல்லாம் தொகுத்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் கருத முடிகின்றது தானே. அதுவும் அந்த புதிய மொழியின் அர்த்தமே செம்மையாக செய்யப்பட்டு இருக்கின்றது என்று இருக்கும் பொழுது நம்முடைய கருத்து வலுபெறத்தானே செய்கின்றது. ஆனால் சான்றுகள் இன்றி நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மேலே உள்ள ஆய்வாளர்களின் கூற்றுக்கு அவர்கள் தரும் சான்றுகள் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வேதங்களையும் வேதாந்தங்களையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. மேலும் சென்றப் பதிவுகளில் அவைகளுக்கும் விவிலியத்தில் இருக்கும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் மேலும் எந்த புதிய விடயத்தினையும் காணும் முன்னர் சில பழைய விடயங்களை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது...

௧) ஒரு கிருத்துவக் கொள்கை -

அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.
 

௨) விவிலியத்தைத் தொகுத்ததில் உள்ள ஒரு கொள்கை -
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது – எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது – எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக – கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது – கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.

௩) வேதங்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௪) வேதாந்தங்களுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

௫) வேதத்தில் இறைவன் பலியாவது போன்று வரும் செய்திகள். நிற்க.
என்ன அனைத்து விடயங்களையும் ஒரு முறை நியாபகப்படுத்திக் கொண்டு விட்டீர்களா? நன்று. இனி நாம் சுத்தி வளைக்காது நேரே நம்முடைய கருத்துக்கு செல்லலாம்.

மேலே நாம் கண்ட கிருத்துவக் கொள்கையின் மூலம், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் அவைகளின் மூலமாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றே நாம் அறிகின்றோம்(இன்று அரசியல் காரணமாக அனைத்து சமயங்களின் கொள்கைகளுமே மாறி விட்டன) அதன் அடிப்படையிலேயே யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தினைப் பற்றிய தொகுதியான பழைய ஏற்பாட்டினை எபிரேய மொழியில் தொகுக்கின்றனர். பின்னர் அந்த நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கிருத்துவின் கருத்துக்களைக் கூற அங்கே பரவலாகக் காணப்பட்ட கிரேக்க மொழியிலே தொகுக்கின்றனர்.

ஆனால் யூதர்களும் கிரேக்கர்களும் மட்டுமே அன்று உலகில் வாழ்ந்த மக்கள் அல்லவே...மற்ற இனத்தவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே. அவர்களுக்கென்று தனி மொழி இருக்குமே. எபிரேயத்தில் யூதர்களுக்கு சொல்லியாயிற்று...யூதர்களுக்கும் சரி கிரேக்கர்களுக்கும் கிரேக்கத்தின் வாயிலாகவே சொல்லியாயிற்று...அந்த நூல்களில் யூதர்களின் பழக்க வழக்கங்களும் சரி கிரேக்கர்களின் வரலாறும் சரி இருக்கின்றன... எனவே அந்த மக்கள் அந்த நூல்களின் உள்ள கருத்துக்களை அவர்களின் வாழ்வோடு இணைத்துக் கொள்வர். ஆனால் மற்ற மக்களுக்கு? அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துக் கொண்டு அவற்றின் வாயிலாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் தானே...அது தானே முறையாக இருக்கும். நிற்க.

இந்நிலையில் தான் நாம் இந்தியாவினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்வேறு மொழிகள் இருக்கின்றது. பல்வேறு மக்கள் பல்வேறு வரலாற்றோடு இருக்கின்றனர். பலி இடும் பழக்கம் அனைவரின் மத்தியிலும் ஒன்றினைப் போலவே இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களைச் எவ்வாறுச் சொல்வது? எந்த மொழியினில் சொல்வது?

நியாயமான கேள்வி தானே. இக்கேள்விக்கு இரண்டு விதமாக தீர்வினைக் காண முடியும்.

ஒன்று - அனைத்து மொழிகளிலும் கருத்துக்களைப் படைத்து அனைவரிடமும் பரப்பலாம்.

இரண்டு - அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினைப் படைத்து அதன் மூலமாக கருத்துக்களைப் பரப்பலாம்.

இந்த இரண்டு தீர்வுகளில் அக்காலத்தில் இருந்த அறிஞர்கள் இரண்டாவது தீர்வினைத் தேர்ந்து எடுத்ததே இன்று சமசுகிருதம் என்ற மொழி நம்மிடையே இருப்பதற்கு காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆம்...அவர்களின் கூற்றின் படி அக்காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தினைப் பரப்ப அன்று நிலைவிய மொழிகளான தமிழ்,பாலி,அர்த்தமாகதி,அரமேயம்,கிரேக்கம்,இலத்தின் போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி தான் சமசுகிருதம். அவ்வாறு அது உருவாக்கப்பட்டமையால் தான் அது 'செம்மையாகச் செய்யப்பட்டது' என்று பொருள் தருவதோடு அம்மொழி யாராலும் பேசப்பட்டதாக வரலாறும் கிட்டப்பெறாமல் இருக்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு மொழியினைக் கொண்டு இந்தியாவில் அன்று இருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனது கருத்துக்களைப் பரப்ப அன்று இருந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் தான் வேதங்களும் வேதாந்தங்களும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அன்று இந்தியாவில் இருந்த மக்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரிடமும் பல கடவுளர் வழிபாடும் பலி வழிபாடும் ஒன்றினைப் போலவே இருந்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்களாகட்டும் அல்லது பெர்சியர்களாகட்டும் பலி இருந்து தான் இருக்கின்றது. அப்படி இருக்கையில், "இறைவனுக்கு பலியிட்டு நாம் வணங்கிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...ஆனால் இறைவன் நமக்காக பலியாகி விட்டார்... எனவே நாம் பலியிடத் தேவை இல்லை...மாறாக நமக்காக பலியான இறைவனை வேண்டி அன்பினையே போதிப்போம்" என்ற கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் பரப்பத் தான் வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி தொகுக்கப்படுகின்றன.

அதனால் தான் வேதங்களில் பல கடவுளர் இருக்கின்றனர்...பலி இருக்கின்றது...முடிவில் இறைவன் பலியாவதைப் போல் வருகின்றது. வேதாந்தத்தில் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையும் பலி தேவை இல்லை என்ற கொள்கையும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் அன்று இருந்த அனைத்து மக்களுக்கும் பொதுவாக வேதங்களைத் தொகுத்தக் காரணத்தினால் தான் வேதங்களில் பெர்சியர்களின் கொள்கைகள், வரலாறு மற்றும் கிரேக்கர்களின் கொள்கைகள் மற்றும் இன்னும் பல கொள்கைகளும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,

"வேதங்களுள் வழிப்படப்பட்ட இயற்கைப் பொருள்களுள் பழமையானது வானம். இதனுடைய பழம் பெயர் 'தியுஸ்' என்பது. இது கிரேக்க சுஸ் என்பதையும் இலத்தீனில் உள்ள ஜுபிட்டர்ஐயும் ஒத்ததாய் இருக்கின்றது. 'தியுஸ்' என்பது பிதர், தந்தை என்றும், படைப்பவர், ஆற்றல் மிக்கவர் என்றும் கூறப்படுகின்றன. 'தியுஸ் பிதர்' என்னும் வான் தந்தை அல்லது ஒளியின் தந்தை என்பது விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்பதையும் ஒளியின் தந்தையே என்பதையும் நினைவுறுத்துகின்றன" என்றே கூறுகின்றார் மாரிஸ் பிலிப்ஸ் என்னும் ஆய்வாளர் தனது 'The Teaching of the vedas' என்னும் நூலில்.

“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).

மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது ‘ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley – The Myth of the Aryan Invasion of India)’ என்ற தனது புத்தகத்திலே ‘ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய – ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனவே இந்தியாவில் அன்று இருந்த பல்வேறு இனங்களுக்குரிய வரலாறு, பாடல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினைத் அவர்களுக்காகத் தொகுத்து அவர்களின் இறைவன் அவர்களுக்காக பலியானான் என்ற செய்தியை தெரிவித்து பின்னர் இறைவன் ஒருவன் தான் அவன் மக்களுக்காகவே இருப்பவன் என்ற கருத்தினைத் தெரிவிக்கவே வேதங்களும் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்றக் கொள்கைக்கு ஏதாக அம்மக்கள் அவர்களுள் கொண்டு இருந்த இறைப் பெயர்களைக் கொண்டே அம்மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். அதனால் தான் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படவில்லை.

காரணம் இறைவனின் பெயர் முக்கியமில்லை கருத்துக்களே முக்கியம் என்ற நிலையில் தான் அன்றைய அறிஞர்கள் கருத்துக்களைத் தொகுக்கின்றனர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிலும் முதலில் இருக்கு வேதமே தொகுக்கப்பட்டது என்றும் பின்னரே மற்ற வேதங்கள் தொகுக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சரி இருக்கட்டும்…!!!
 
இறைவன் உலகிற்கு வந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தியினைப் பரப்பவே வேதங்களும் பின்னர் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன, அந்தப் பணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழி தான் சமசுகிருதம் என்ற இந்த கருத்தை நிச்சயம் ஏற்பது கடினமாகத் தான் இருக்கும். இந்நிலையில் இக்கருத்துக்களை வலுப்படுத்துமாறு வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
 
மேலும் பலி இல்லாத வழிபாட்டு முறைக்கு புத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் தாக்கங்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா என்றக் கேள்வியும் இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றது அல்லவா…எனவே நாம் அவற்றையும் காணத் தான் வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் இப்பொழுது அந்த சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது…
 
காண்போம்…!!!
 
பின்குறிப்பு:
 
இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவை தமிழர்களால் இறைவன் பலியானதை தெரிவிக்க தொகுக்கப்பட்ட நூல்கள் என்று கூறுகின்றீர்களே அப்படி என்றால் அதில் வரும் நான்கு பிரிவுகள் எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருந்தது என்றால், வேதங்களில் இறைவன் மனிதன் நான்கு வர்ணமாக படைத்தான் என்று வரும் பகுதி இடைச் செருகல் என்றே அம்பேத்கர், மாக்ஸ் முல்லேர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்து இருக்கின்றன என்று. அக்காலம் தொடங்கி இந்திய நூல்களில் பல மாற்றங்களும் பல இடைச் செருகல்களும் நிகழ்ந்து இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு