கனவுலகத்தை தேடி: (Finding Neverland)

சிறு வயதில் கனவுகள் கண்டு இருக்கின்றீர்களா?....

பூக்கள் சூழ்ந்தப் பாதைகள்...அவற்றில் கவலைகள் சிறிதும் இன்றி தொலை தூரப் பயணங்கள்... வழித்துணையாய் சிறு நீரோடை... கதைகள் பேசக் குருவிகள்... தூரத்தில் புல்வெளிகளின் மத்தியில் சிறிய வீடு...பாசமுள்ள அம்மா... நேசமுள்ள சகோதரர்கள்... புன்னகையுடன் அப்பா...!!! இப்படி அந்தக் கனவுகளில் உங்கள் உலகத்தை நீங்கள் செதுக்கிப் பார்த்து இருக்கின்றீர்களா?...

இல்லை என்று சொல்பவர்களை நிச்சயம் விரல் விட்டு எண்ணிவிடலாம். கண்டிப்பாக நாம் சிறுவர்களாக இருந்த பொழுது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனி உலகம் இருந்து இருக்கும். அது நம் உலகம். நம்முடைய ரகசிய உலகம்...!!!

ஆனால், காலங்கள் நகர நகர நாமும் அந்த உலகங்களில் இருந்து விலகி நகர்ந்து விடுகின்றோம். வெளிஉலகத்தில் நாம் சந்திக்கும் சோதனைகள் நம்முள் இருக்கும் நம்முடைய கற்பனை உலகத்தை சிறிது சிறிதாக மறக்கடித்து விடுகின்றன. ஒரு காலத்தில், நம்முடைய ஆழ்மனம் அந்த உலகத்தையே நாடினாலும் நாம் நம்முடைய கற்பனை உலகத்தை தெரிந்தே இழந்து விடுகின்றோம். அந்த உலகத்தோடு நம்முள் இருக்கும் சிறுவனையும்!!!

ஆனால் அனைவரும் அந்த உலகத்தை இழப்பதில்லை. ஒரு சிலர் அந்த உலகத்திலேயே வாழ்ந்து அங்கேயே அவர்களைத் தேடிக் கொள்கின்றனர். அந்தக் கற்பனை உலகத்தில் அவர்கள் கண்டெடுத்த செல்வங்கள் வாயிலாகவே அவர்கள் அவர்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

அவர்கள் எழுத்தாளர்கள்... படைப்பாளிகள்!!! அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனை அடிப்படையாக வைத்தே இந்தக் கதை நகர்கின்றது.

தன்னுடைய கற்பனை உலகத்தினுள் தன்னையேத் தேடிக்கொண்டு இருக்கும்  ஒரு எழுத்தாளனும் தங்களது கற்பனை உலகத்தை முற்றிலுமாக தொலைத்த ஒருக் குடும்பமும் காலத்தின் ஒரு புள்ளியில் ஒன்றாகச் சந்திக்க நேருகின்றது. உண்மையின் ரணத்தையே கண்டு இருந்த அந்தக் குடும்பத்திற்கு மீண்டும் அவர்கள் தொலைத்த கற்பனை உலகத்திற்கு உரிய வழியினை காட்ட அவன் முயல்கிறான். அவனது முயற்சி என்ன ஆயிற்று?... உண்மையின் ரணத்தை  கற்பனை உலகம் மாற்றுமா? என்றக் கேள்விகளுக்கான பதிலே இந்தத் திரைப்படம்.

பரந்து விரிந்த தனது கற்பனை உலகத்தில் தன்னுடைய கனவுகளை அடைய ஒரு வழியினைத் தேடிக் கொண்டு இருக்கும் ஒரு எழுத்தாளன்.... தந்தையை இழந்த சோகத்தில் தங்களது கற்பனை உலகத்தை தொலைத்த மூன்று சிறுவர்கள்... சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து தனது குழந்தைகளுக்காகவே வாழும் அவர்களது அன்னை. இவர்கள் தான் இந்தக் கதையின் மாந்தர்கள்.

லண்டன் 1903...

தோல்விகள் பாரிக்கு (J.M.Barrie) புதிதல்ல. அவன் ஒரு படைப்பாளி. நிச்சயம் அவனது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு அடுத்த முறை இன்னும் சிறந்தப் படைப்பை அவனால் உருவாக்க முடியும். அதுவும் கூடுதலாக அவனது நாடகங்களை மேடையேற்ற எப்பொழுதும் தயாராகவே இருந்தது அவனது நண்பர் சார்லசுவின் (Charles) திரையரங்கம். இருந்தும் ஏதோ ஒன்று அவனை வாட்டிக் கொண்டு இருந்தது. அவனுக்கு தேவை ஒரு மாற்றம். அவனது உலகத்தினைப் புரிந்துக் கொள்ளாத மனைவியும், தங்களது இதயங்களுக்கு சமுக மதிப்பு என்றப் பெயரில் முகமூடிப் போட்டுக் கொண்டு அலையும் மனிதர்களும் சிறிது சிறிதாக சிதைத்துவிட்டிருந்த அவனது கற்பனை உலகத்தை அவன் மீட்டு எடுக்க அவனுக்கு நிச்சயம் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தைத் தான் பாரி லண்டன் மாநகரில் தேடிக் கொண்டிருந்தான்.

அந்த சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவன் தற்செயலாக பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டு இருக்கும் 4 சிறுவர்களை சந்திக்க நேருகின்றது.  அருமையான சிறுவர்கள் தான்... பாரிக்கு அதில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் ஒன்று தான் அவனுக்கு புரியவில்லை. ஏன் இந்த சிறுவர்களும் தங்களது இதயத்தினை முகமூடிப் போட்டு பூட்டி வைத்து இருக்கின்றனர்? ஏன் அவனது கற்பனைக் கதைகளை அவர்கள் நம்ப மறுக்கின்றனர்... எங்கே சென்றது அவர்களின் கற்பனை உலகம்?... இவ்வாறு அவன் வியந்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த சிறுவர்களின் தாயார் சில்வியாவின் (Sylvia) மூலம், அந்த சிறுவர்கள் அவர்களது தந்தையினை இழந்தக் காரணத்தினால் அவர்கள் எதையுமே நம்புவதில்லை என்ற உண்மையினை  அவன் அறிய வருகின்றான்.


தங்களது தந்தை எப்படியும் பிழைத்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்த அந்தச் சிறுவர்கள் அவர்களின் தந்தையின் மரணத்தினோடு எதையும் நம்புவதையே விட்டுவிட்டனர். அதோடு அவர்களின் கற்பனை உலகங்களையும். இதனை உணர்ந்த பாரி அவர்களுக்கு உதவி புரிய ஆரம்பிக்கின்றான். எல்லா நாட்களும் அவர்களுடன் பூங்காவினில் விளையாடுவதும், அவனது கற்பனை உலகத்தினைப் பற்றி அவர்களுக்கு கதையினை சொல்வதும் என்று அவன் தன்னுடைய காலத்தை போக்க ஆரம்பிக்கின்றான். அவனுடன் பழகும் தருணங்களில் தன்னுடைய குழந்தைகள் மீண்டும் மகிழ்ச்சியாய் இருப்பதை உணர்ந்த சில்வியா பாரியை எப்பொழுது வேண்டும் என்றாலும் அவர்களது இல்லத்திற்கு சென்று சந்திக்கலாம் என்றும் சொல்கின்றாள்.

சமூகத்தினால் வாடிக் கொண்டு இருந்த அவனது கற்பனை உலகத்தில் அந்த சிறுவர்களின் வருகையால் புதுப் பூக்கள் பூத்துக் குலுங்குவதை உணர்ந்த அவன் சில்வியாவின் வேண்டுக்கோளுக்கு சம்மதிக்கின்றான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிறுவர்களின்றி தனது வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றே அவன் எண்ணத் தொடங்குகின்றான். அந்தச் சிறுவர்களை அடிப்படையாக வைத்தே  ஒரு புதுக் கதையையும் அவன் எழுதத் தொடங்குகின்றான். அந்தச் சிறுவர்களும் பாரியுடன் சேர்ந்து தங்களது தொலைந்த கற்பனை உலகத்தை தேடத் தொடங்குகின்றனர்.

ஆனால் அனைத்தும் நன்றாகப் போய்க் கொண்டு இருக்கும் பொழுது பாரியும் சில்வியாவும் நட்பாய் பழகுவது பாரியின் மனைவிக்கும், சில்வியாவின் அன்னையான எம்மாவிற்கும் (Emma) பிடிக்காது போய் விடுகின்றது. ஒரு விதவை பெண்ணின் வீட்டிற்க்கு ஒரு ஆடவன் அடிக்கடி வந்து செல்வது சமுகத்தில் நல்ல செயலாக தெரியாது என்றுக் கூறி எம்மா பாரி சில்வியாவின் வீட்டிற்க்கு வருவதற்கு தடைப் போடுகிறார்.

ஆனால், அந்த சிறுவர்களின் மத்தியில் தனது புதிய உலகத்தை கண்ட பாரி அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, அவனது மனைவி அவனிடம் இருந்து பிரிந்து சென்று விடுகின்றாள். இருந்தும் அதைப் பொருட்படுத்தாது அவனது புதிய கதையையும், அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியையுமே தனது கருத்தில் கொண்டு பாரி அந்தச் சிறுவர்களுடன் பழகுவதைத் தொடருகின்றான். அவனது கதையும் ஒரு முற்றுப் பெற்று அதை  நாடகமாய்  மேடையில் அரங்கேற்றும் நேரமும் வருகின்றது.

இந்த நிலையில் தான் சில்வியாவிற்கு இனம் புரியாத ஒரு நோய் இருப்பது பாரிக்கும் அவளது குழந்தைகளுக்கும் தெரிய வருகின்றது. நாளுக்கு நாள் உடல் நலம் குன்றிக்கொண்டே இருக்கும் தங்களது தாயினைப் பார்த்து அந்த சிறுவர்கள் மீண்டும் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கின்றனர்.


சில்வியா பிழைத்தாளா?... அந்த குழந்தைகள் மீண்டும் அவர்களது கனவுலகத்தின் மேல் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனரா?.. பாரியின் நாடகம் வெற்றிப் பெற்றதா... அவர்கள் அனைவரின் வாழ்கையும் என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.

ஒரு புல்வெளியில் தனியாக அமர்ந்து இருக்கும் பொழுது, காற்றில் வரும் ஒரு புல்லாங்குழலின் இசை நம்மை எவ்வாறு ஒரு தனி உலகத்திற்கு அழைத்து செல்லுமோ அதேப் போல் இந்த படமும் நம்மை ஒரு தனி உலகத்திற்கு  ஆர்ப்பாட்டம் இல்லாது தனியே அழைத்துச் செல்கின்றது.

படத்திற்கு பெரும் பலம் நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் (சானி டெப் (Johnny Depp) கட்டே வின்சுலேடு (Kate Winslet) - நடிப்பைக் கேட்கவா வேண்டும், அதுவும் சில்வியாவின் கடைசிப் பையனாக நடித்து இருக்கும் சிறுவனின் நடிப்பு மிகவும் சிறப்பு) அவர்களுடனே வாழ்ந்து இருக்கும் இசையும் தான். (இசைக்கு ஆசுசார் விருது). இவை இரண்டுமே படத்தின் அனைத்துக் காட்சிகளையுமே தூக்கிப் பிடித்து நிறுத்தி இருக்கின்றன.

நம்முடைய மனதின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் நம்முடைய கற்பனை உலகத்தை நாம் மீண்டும் உணர நிச்சயம் நாம் காண வேண்டிய ஒருப் படம் இது ... காண்போம்... கற்பனை உலகத்தின் மேல் நம்பிக்கையுடன்!!!   

பி.கு:

இது  ஒரு உண்மைக் கதை பேதுரு பேன் (Peter Pan) என்ற ஒரு புகழ்மிக்க கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் பாரியின் கதையே இதுவாகும். அந்தக் கதாபாத்திரத்தை அவர் உருவாக்குவதற்கு ஏதாக அமைந்த நிகழ்வுகளையே படமாக்கி இருக்கின்றார்கள்.

3 கருத்துகள்:

Gonna watch this sooooooon!!

நல்ல பதிவு! உங்களுடன் தொடர்புகொள்ள மின் அஞ்சல் முகவரி தர முடியுமா?

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றித் தோழரே.. எனது மின்னஞ்சல் முகவரி... jeffmanojhardy@gmail.com (சற்று புதிராகத் தான் இருக்கும்.. பொறுத்துக் கொள்ளுங்கள் :))

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு