இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது.

                                           3      
என்னுடைய கை எல்லா இடங்களிலும் அன்பினை விதைத்து இருக்கின்றது. அந்த அன்பினைப் பெறுவதற்கு எவரெல்லாம் தயாராக இருக்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் என்னுடைய கை தவறாது அன்பினைக் கொடுத்தும் இருக்கின்றது. என்னுடைய எல்லாக் குழந்தைகளுக்கும் என்னுடைய ஆசிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அறியாமையினால் அந்த ஆசிகளை அவர்கள் காணாது பல முறை தோற்று விடுகின்றார்கள்.தங்களின் காலின் அடியில் கொட்டிக்கிடக்கும் பரிசுகளைக் கண்டுக்கொள்ளும் மனிதர்கள் உலகில் எவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் அந்தப் பரிசுகளை காணாதவாறு தங்கள் கண்களை விருப்பப்பட்டே கீழ்ப்படியாது திருப்பிக் கொண்டு, பின்னர் நான் அவர்களுக்காக தந்தப் பரிசுகள் அவர்களுக்குக் கிடைக்க வில்லை என்று அழுதும் குறைகூறியும் திரியும் மனிதர்கள் தான் எத்தனை அதிகம். அவர்களுள் பலர் கீழ்ப்படியாது என்னுடைய பரிசுகளை மறுப்பதுடன் இந்த உலகத்தில் உள்ள அனைத்து வாழ்த்துக்களுக்கும் மூலமும், அவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமுமான என்னையே மறுக்கின்றனர். - கிருசுனர்

இந்த உலகினைச் சூழ்ந்து இருக்கும் பிரச்சனைகளையும் மோதல்களையும் விட்டு நான் விலகியே இருக்கின்றேன். உங்களது வாழ்வினை அன்பினாலும் மகிழ்ச்சியினாலும் நான் அழகாக்குவேன். ஏனெனில் ஆத்மாவின் ஒளி அன்பே ஆகும். அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே அமைதியும் நிம்மதியும் இருக்கும். நிம்மதியும் அமைதியும் எங்கே இருக்கின்றதோ, அந்த இடத்தில அவைகளின் மத்தியில் நானும் வீற்று இருப்பேன். - கிருசுனர்

பிறரின் உணர்ச்சிகளை மதிக்காது இருந்தால் தனக்குப் பெரும் செல்வம் வந்து சேரும் என்ற சூழ்நிலையிலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காது நடப்பதே குற்றமற்றவரின் செயல் ஆகும். தனக்கு தீங்கு விளைவித்தவற்கு கூட தீங்கு விளைவிக்காததே குற்றமற்றவரின் தன்மை ஆகும். தன்னை எந்தக் காரணமும் இன்றி வெறுக்கும் ஒருவருக்கு கூட, ஒருவன் துன்பத்தை ஏற்படுத்தி விட்டான் என்றால் அவனால் மீள முடியாத சோகத்தை அவனே அவன் செயலின் மூலம் ஏற்படுத்திக் கொள்வான். நமக்குத் தீங்கு செய்தவருக்கு சரியானத் தண்டனை என்பது அவர்கள் அவர்களை எண்ணியே வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு நன்மை செய்வதே ஆகும். தன்னைச் சுற்றி இருப்பவரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கருதி அந்த துன்பத்தை நீக்குவதற்கு ஒருவன் முயலவில்லை என்றால் அவன் கற்று அறிந்த அந்த மாபெரும் அறிவினால் என்ன பயன்?. காலையில் ஒரு மனிதன் மற்றொருவனுக்கு தீங்கு செய்ய எண்ணினான் என்றால் மாலையில் அந்த தீங்கு அவனிடமே திரும்பி வந்து சேரும். - இந்துக் குறள்( திருக்குறள்)


மனிதனுக்குள் இயல்பாகவே அன்பு வடிவத்தில் இருக்கும் ஒருப் புனித சக்தியின் வழிக்காட்டுதலின் படியே மனிதன் வாழ வேண்டும் என்ற உண்மையை அடக்கும் முயற்சி, வன்முறையின் மூலமும் அதனுடன் ஒவ்வாதக் கருத்துக்களைச் சேர்ப்பதன் மூலமும் உலகம் முழுவதிலும் நடைப்பெற்றது. அன்பே உலகில் உயர்ந்த தர்மமாகும் என்ற கருத்து எங்கேயும் மறுக்கப்படவும் இல்லை எதிர்க்கப்படவும் இல்லை. ஆனால் இந்தக் கருத்தோடு உலகம் முழுவதிலும் இணைந்துப் புனையப்பட்ட பல்வேறுத் தவறான கருத்துக்களால் இறுதியில் இந்த உண்மை வெறும் வார்த்தைகளாகவே நின்றுவிட்டது. மேலும், இந்த உயர்ந்த தர்மமானது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு, அதாவது ஒருவரது இல்லத்து வாழ்விற்கு மட்டுமே பொருந்தும் என்றும் பொது வாழ்கை என்று வரும் போது பெரும்பான்மையினரான மக்களை சிறும்பான்மையினரின் தீமைச் செயல்களில் இருந்து காப்பாற்ற வன்முறை வழிகளான யுத்தங்கள், சிறை மற்றும் மரண தண்டனைகள் போன்றவை நிச்சயம் தேவை என்றே போதிக்கப்பட்டது. அன்பின் வழிகளுக்கு அந்த வன்முறை வழிகள் முற்றிலும் எதிர்மறையாக இருந்தப் போதும் மக்களுக்கு அந்த இரண்டு முறைகளுமே தேவை என்றே போதிக்கப்பட்டது.

மேலும் எப்பொழுது ஒரு சில மனிதர்கள், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் எவரை வன்முறையால் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையைத் தாங்கள் பெற்று இருப்பதாக எண்ணிக் கொண்டு ஒரு சிலரைத் தண்டிகின்றார்களோ, அந்தத் தண்டனையைப் பெற்றவர்களும், தங்களின் நன்மைக்காக, அவர்களைத் தண்டித்த நபர்களுக்கு மேல் வன்முறையை பயன்படுத்தும் உரிமையைத் தாங்கள் பெற்று இருப்பதாக முடிவு செய்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது என்பதை நமது சுய அறிவே நமக்கு புலப்படுத்துகின்றது.

அன்பின் விதியானது இவ்வாறு திரிக்கப்படும் என்று முன்கூட்டியே உணர்ந்த இந்து மதம், பௌத்தம் மற்றும் கிருத்துவத்தை சார்ந்த ஆன்மீக ஞானிகள், மக்களின் கவனத்திற்கு 'வன்முறையைப் பொறுத்துக் கொள்வதும், தீமையை தீமையைக் கொண்டே எதிர்காததும், அவ்வழிகளின் மூலமாய் அன்பை வளர்ப்பதுமே அன்பின் மாறாத உண்மைத் தன்மையாகும்' என்ற கருத்தை தொடர்ந்து கொண்டு சேர்த்துக் கொண்டு இருந்தனர். இருந்தும், தங்களை மேம்படுத்தக் கூடியக் கருத்துக்களைப் பொருட்படுத்தாது, அன்பின் பெருமையையும் வன்முறையின் மூலம் தீமையை ஒடுக்குவதும் ஆகிய முற்றிலும் முரண்பட்ட இரண்டுக் கருத்துக்களை ஒன்றிணைக்க மக்கள் தொடர்ந்து முயன்று கொண்டு இருந்தனர். அடிப்படையே முரணாக இருந்தப் போதும் அந்தப் போதனை மக்களின் மத்தியில் மிகவும் பலமாக வேர் ஊன்றியது. அதனால், அன்பினை ஒரு சிறந்தத் தன்மையாக உணர்ந்து ஏற்றுக் கொண்ட மக்கள் அதே நேரத்தில் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையைச் சட்டம் என ஏற்றுக்கொண்டு மனிதனை மனிதன் கொல்லவும் கொடுமைப் படுத்தவும் அனுமதித்தனர்.

வெகு காலத்திற்கு மக்கள் அந்த போதனையின் முரண்பாட்டினைக் கவனிக்காமலேயே வாழ்ந்து வந்தனர்.ஆனால் பல்வேறு நாடுகளில் இருந்த சிந்தனையாளர்களின் கவனத்திற்கு இந்த முரண்பாடு தெளிவாகப் புலப்பட ஆரம்பித்தக் காலமும் வந்தது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக் கொள்வதும் நேசித்துக் கொள்வதும் தான் மனிதனின் இயல்பான குணமே தவிர மற்றவரை துன்புறுத்துவதும் கொலை செய்வதும் இல்லை என்ற அந்த எளிமையான பழைய உண்மை மக்களுக்கு இன்னும் தெளிவாயிற்று. இதனால் உண்மை என்று ஒரு சிலரால் திணிக்கப்பட்ட அந்த போலிக் கருத்தினை நம்பி ஏற்றுக் கொண்ட மக்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.

பழைய காலங்களில், வன்முறையை பயன்படுத்துவதும் அதன் மூலம் அன்பின் விதியை மீறுவதும் அரசர்களுக்கு, அதாவது சார் மன்னர்கள் (Czar), சுல்தான்கள் (sultan), ராசாக்கள் மற்றும் சாக்கள் (Shah) போன்றவர்களுக்கு மக்களை ஆள இறைவன் அளித்த புனித உரிமை என்ற கோட்பாட்டின் மூலமே நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் மனித இனம் வளர வளர அந்தக் கோட்பாட்டின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அந்த நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒரே விதமாக கிருத்துவம், இந்து, பௌதம் மற்றும் கன்புசிய உலகங்களில் நிலைகுலைய ஆரம்பித்தது. சமீப காலங்களில் அந்த நம்பிக்கை ஒரு மனிதனின் பகுத்தறிவிற்கும் உண்மையான ஆன்மீக எண்ணங்களுக்கும் முன்னால் நிற்க முடியாமல் மறைந்து விட்டது. மக்கள் மிகவும் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தனர். தங்களின் விருப்பங்களுக்கும் நேர்மையான எண்ணங்களுக்கும் முற்றிலும் மாறான செயல்களைத் தங்களைப் போலவே இருக்கும் வேறு சிலருக்குக் கட்டுப்பட்டு செய்வதின் முட்டாள்தனத்தை அவர்கள் உணர்ந்தனர்.அரசர்களின் தெய்வீக உரிமை என்னும் மதக் கோட்பாட்டில் நம்பிக்கை இழந்த மக்கள் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைப் பெற முயல்வார்கள் என்றே அந்த நிலையில் ஒருவர் கருதுவார்.

ஆனால் 'அரசர்கள் இறைவனின் பிரதிநிதிகள்' என்றுக் கூறி மக்களை அடக்கி ஆண்டதில் பயன் பெற்றவர்கள் எதிர்பாராவிதமாக அந்த அரசர்கள் மட்டுமே அல்ல. அந்தப் போலி இறைப் பிரதிநிதிகள் மக்களை ஆண்ட காலங்களில், அரசாள உதவி செய்கின்றோம் என்ற பெயரில் மிகப் பெரிய மக்கள் கூட்டங்கள் அந்த அரசர்களை சூழ்ந்துக் கொண்டு மக்கள் அடங்கி இருப்பதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்.

எனவே எப்பொழுது அரசன் என்பவன் கடவுளின் பிரதிநிதி என்றப் பழைய ஏமாற்றுக் கருத்து மக்களிடையே சரிய ஆரம்பித்ததோ, அப்பொழுது அரசாண்ட அந்த மனிதர்களுக்கு, மக்களைத் தங்களுக்கு கீழே கட்டுப்படுத்தி வைத்து இருப்பதற்கு ஏதுவாக ஒரு புதிய ஏமாற்றுக் கருத்தை உருவாக்குவதே லட்சியமாய் ஆனது. 

தொடரும்... 

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு