ஒருக் கேள்வி...!!!
உயிர் இன்றி உடல் தனித்து இயங்குமா?

"என்னங்க கேள்வி இது... அது எப்படி உயிர் இல்லாம உடல் மட்டும் தனித்து இயங்கும். சின்னப் புள்ளைய கேட்டாக் கூட உயிர் இல்லாம உடல் இருக்காதுன்னு தெளிவா சொல்லிடுமே" என்று நீங்கள் கூறலாம்.

உண்மையும் அதுதான். உயிர் இன்றி உடல் இயங்காது என்பது அறிவியல் உண்மை. இது பலருக்கும் தெரியும்.

ஆனால் இதே உண்மையை நமது மொழி மௌனமாய் பறைசாற்றிக் கொண்டு இருப்பதை நாம் அறிந்தும் அறியாமல் இருக்கின்றோம். நம் மொழி எவ்வாறு அந்த உண்மையைத் தன்னுள் அடிப்படையாகக் கொண்டு உள்ளது என்றுப் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்கள் இரு வகைப்படும்.

௧) முதல் எழுத்துக்கள் - அ , ஆ என்று ஆரம்பிக்கும் 12 உயிர் எழுத்துக்களே முதல் எழுத்துக்கள் ஆகும்.

௨) சார்பு எழுத்துக்கள் - க், ங், என்று ஆரம்பிக்கும் 18 மெய் எழுத்துக்களே சார்பு எழுத்துக்கள் ஆகும்.

மெய் எழுத்துக்களால் தனித்து இயங்க முடியாது. அவை முதல் எழுத்துக்களான உயிர் எழுத்துக்களைச் சார்ந்தே இயங்குவன. எனவே தான் அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.

இப்பொழுது அந்த 'மெய்' என்னும் சொல்லை நாம் சற்று கூர்ந்துப் பார்ப்போம்.

தமிழில் 'மெய்' என்னும் சொல்லுக்கு 'உடல்' என்னும் அர்த்தமும் உண்டு.

மெய் = உடல்.

எனவே, மெய் எழுத்துக்களில் 'மெய்' என்பதற்கு பதிலாக 'உடல்' என்று வைத்துப் பார்த்தோமானால், உயிரைச் சார்ந்தே உடல் இருக்கும் என்பதே தமிழ் கூறும் எழுத்துக்களின் விதி என்று நாம் அறியலாம்.

இவ்வாறு மெய் எழுத்துக்களை உயிர் எழுத்துக்களைச் சார்ந்து இருக்கும் எழுத்துக்கள் என்றும் அவை தனித்து இயங்கும் தன்மையை பெற்றவை அல்ல என்றும் தனது அடிப்படை எழுத்துப் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருக்கும் தமிழ் , அதன் மூலம் 'உயிர் இன்றி மெய் (உடம்பு) இல்லை' என்ற அறிவியல் கருத்தினை அமைதியாக உரைத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

மேலும் இந்த உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேருவதன் மூலம் நமக்கு உயிர்மெய் எழுத்துக்கள் என்னும் 216 எழுத்துக்கள் கிடைக்கின்றன.

இந்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் உணர்ச்சிகள் என்று வைத்துப் பார்த்தோம் என்றால் இன்னொரு உண்மை நமக்கு விளங்கும்.

உயிரும் உடலும் இணைந்து இருந்தால் தானே உணர்ச்சிகள் தோன்றும், அதேப் போல் தான் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் சேர்ந்து உணர்ச்சியான உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உயிரோ அல்லது மெய்யோ இல்லாது போனால் உயிர்மெய் எழுத்துக்கள் இருக்காது... அதேப்போல் உணர்ச்சியும் இருக்காது!!!

இதுவே நம் தமிழ் கூறும் உண்மை!!! அறிவியல் ஆராய்ந்துக் கூறும் ஒன்றை நம் மொழி அதன் ஆதாரமாகவே வைத்து இருக்கின்றது.

நினைக்கவே சிலிர்க்கின்றது....!!!

தமிழுள் பயணிப்போம்...!!!

தொடரும்....

(நன்றி: தமிழ் எழுத்துக்களைப் பற்றிய இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலின் ஆசிரியர் மாத்தளை சோமுவிற்கு எனது நன்றிகள்).

2 கருத்துகள்:

தமிழின் சிறப்புகளை தொடர்ந்து விளக்குங்கள்..

ம்ம்ம்..

தமிழில் ஏன் ட,ற, ர,ல,ழ,ள, ஞ,ங,ன,ண, வில் சொற்கள் தொடங்குவது இல்லை?

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழர் மனோவி அவர்களே!!


தமிழில் ஏன் ட,ற, ர,ல,ழ,ள, ஞ,ங,ன,ண, வில் சொற்கள் தொடங்குவது இல்லை? என்பது ஒரு நல்ல கேள்வி.


நான் அறிந்த வரை தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இலக்கணத்தின் அடிப்படையிலேயே, அந்த எழுத்துக்களில் சொற்கள் தமிழில் தொடங்குவது கிடையாது.


நான் இதனைப் பற்றி விரிவாக ஆராய்ந்து தங்களுக்கு விரைவில் பதில் கூற முயற்சிக்கிறேன்.


நன்றி!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு