இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது.
                                       2                                          
"மனிதா, ஒரு குழந்தையைப் போல் பணிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க நீ ஆரம்பிக்கும் வரை, உன்னை முழுதாய் சூழ்ந்து இருக்கும் குழப்பங்களால் சிதறடிக்கப்பட்டு உன்னை நீயே அறிந்துக் கொள்ள முடியாமல் உனக்கே நீ ஒரு முடியாப் புதிராய் இருப்பாய். எப்பொழுது ஒரு குழந்தையைப் போல் மாறுகின்றாயோ அப்பொழுது  நீ என்னை அறிந்து கொள்வாய். உன்னுள் இருக்கின்ற அந்த மாபெரும் உலகத்தை நீ அறிந்து கொண்ட பின் உனக்கு வெளியே இருக்கும் இந்தச் சிறிய உலகங்களைப் பார்க்கும் பொழுது, காலத்தோடும் உன்னோடும் அனைத்தும் நன்றாக இருப்பதை உணர்ந்து உலகத்தில் உள்ள அனைத்தையும் நீ வாழ்த்துவாய்!" - கிருசுனர்

என்னுடைய எண்ணங்களை உங்களுக்கு இன்னும் தெளிவாக விளக்க நான் சற்று காலத்தில் பின்னோக்கிப் போக வேண்டி இருக்கின்றது. பல லட்சக் கணக்கான வருடங்களுக்கு முன்னரோ அல்லது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரோ மனிதன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதைப் பற்றி நமக்கு தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் காலங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இயலுமா என்பதும் சந்தேகமே. ஆனால், மனிதகுலத்தின் வரலாற்றைப் பற்றி நமது அறிவுக்கு எட்டிய வரை பார்த்தோமானால் ஒரு விசயம் நமக்கு நிச்சயமாக புலப்படுகிறது. எக்காலத்திலேயும் மனிதர்கள் ஒரு குடும்பமாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ அல்லது ஒரு தேசமாகவோ தான் சேர்ந்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர். அவ்வாறு சேர்ந்து வாழ்ந்த மக்களுள் பெரும்பான்மையானவர்கள் ஒரு சில சிறுபான்மையினரின் ஆட்சிக்கு அவர்கள் விரும்பியே கட்டுப்பட்டு வாழ்ந்து வந்து இருக்கின்றனர். அப்படி கட்டுப்பட்டு தான் வாழ்கை இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்பியும் இருந்து இருக்கின்றனர். சூழ்நிலைகளும் மனித இயல்புகளும் இனத்திற்கு இனம் வேறுபட்டப் போதும் கூட பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் ஆளும் அந்த முறை மாறாது அனைத்து இன மக்களிடமும் ஒன்று போல் இருந்து வந்து இருக்கின்றது. இது நமக்கு தெரிந்த பல்வேறு இன மக்களின் வரலாற்றைப் பார்த்தாலே நமக்கு நன்கு விளங்கும். மக்கள் அனைவரும் அமைதியாக இணைந்து வாழ்வதற்கு இந்த அமைப்பு முறை நிச்சயம் தேவை என்றே அந்த மக்களும் அவர்களை ஆண்டவர்களும் கருதி இருக்கின்றனர் என்பது நாம் மேலும் வரலாற்றின் பக்கங்களுள் நுழைய நமக்கு தெரிய வருகின்றது.

எனவே இந்த முறை எல்லா இடங்களிலும் இருந்து இருக்கின்றது, ஏன் இன்னும் கூட இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இந்த வகையான வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக இருந்திருந்தாலும், அடக்குமுறையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த வாழ்க்கை முறையின் மத்தியில் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எல்லா நாடுகளிலேயும் ஒன்றுப் போல ஒருக் கருத்து எழ ஆரம்பித்தது.

 "உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் உயிர் கொடுத்து இயங்க வைக்கும் ஒரு புனித சக்தி அனைத்து மனிதனுக்குள்ளேயும் இருக்கின்றது. அந்த சக்தி, அன்பின் மூலமாக அதன் இயல்பை ஒத்து இருக்கும் எல்லாவற்றினுடையும் ஒருங்கிணைய முயல்கின்றது" என்பதே அந்தக் கருத்தாகும். இந்தக் கருத்து மாறுப்பட்ட தெளிவும் மாறுப்பட்ட முழுமையுடனும், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தோன்றி இருக்கின்றது. இந்தக் கருத்து, பிராமணீயம் (Brahmanism), யூத சமயம், சோரோஆசுடரின் (Zoroaster) கருத்துக்களான மாசுடாயிசம் (Mazdaism), பௌதம், தாவோயிசம் (Taoism), கன்புசியாநிசம் (Confusianism), ரோம மற்றும் கிரேக்க துறவிகளின் எழுத்துக்கள், கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றால் ஒரு வடிவம் பெற்றது.

இந்தக் கருத்து இயல்பிலேயே மனிதனுள் இருக்கின்ற ஒன்று என்பதும் இந்தக் கருத்தில் உண்மை இருக்கின்றது என்பதும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் இதே கருத்து மாறாது எழுந்து இருக்கின்றது என்ற விசயமே நமக்கு புலப்படுத்துகின்றது.

ஆனால் மக்கள் சமுதாயம் ஒன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு சிலர் மற்றவர்களை அடக்கி ஆள்வதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் இந்தக் கருத்து வெளிவந்ததினால் அப்போது நடைமுறையில் இருந்த சமுதாயத்திற்கு அது ஒவ்வாதது போல காட்சியளித்தது. அதுவும் இந்தக் கருத்து முதலில் முழுமையாக வெளிவராது பகுதிப் பகுதியாக தெளிவில்லாமல் வெளிவந்ததால் அந்தக் கருத்தில் உள்ள உண்மையை ஒப்புக் கொண்ட மக்களால் அதேக் கருத்தை அவர்களின் நடத்தைக்கு வழிகாட்டும் ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
கூடுதலாக, அடக்குமுறையை அடிப்படையாக கொண்டு இருக்கும் சமுதாயத்தில் ஒரு உண்மைக் கருத்தைப் பரப்பும் செயலுக்கு எப்பொழுதுமே ஏதாவது ஒரு வகையில் தடைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்கள், இந்த உண்மைக் கருத்தை மக்கள் உணர்ந்து கொண்டார்களானால் தங்களது ஆளும் நிலை மாறி விடும் என்பதனை உணர்ந்துக் கொண்டு அந்தக் கருத்தைத் தடுக்க அறிந்தோ அல்லது அறியாமலோ அந்த உண்மைக் கருத்துடன் ஒவ்வாத சில வேற்றுக் கருத்துக்களையும் அர்த்தங்களையும் கலந்தனர். மேலும் சில நேரங்களில் வெளிப்படையான வன்முறையின் மூலமும் அந்தக் கருத்தினை அவர்கள் எதிர்த்தனர்.

மனிதனின் வாழ்கையின் அடிப்படையாக அவனுக்குள் இயல்பாகவே அன்பு வடிவத்தில் இருக்கும் அந்த புனித சக்தியின் வழிக்காட்டுதலின் படியே மனிதன் வாழ வேண்டும் என்பதே அன்றும் சரி...இன்றும் சரி...உண்மையான ஒன்றாகும். ஆனால் இந்த உண்மையை ஒரு மனிதன் முழுமையாக உணர்ந்து கொள்வதற்காக அந்த உண்மை, அது வெளிப்பட்டு இருக்கும் அந்த தெளிவில்லாத வடிவினை எதிர்த்தும், அதனுடன் அறிந்தோ அறியாமலோ கலக்கப்பட்ட வேற்றுக் கருத்துக்களை எதிர்த்தும் பலப் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்ததுடன் அனைத்திற்கும் மேலாக வெளிப்படையாக அதன் மேல் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையுடனும் அது போராட வேண்டி இருந்தது. அந்த வன்முறைகள், தண்டனைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் வாயிலாக உண்மைக்கு புறம்பானதும், ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டதும் ஆன மதச் சட்டங்களுக்கு மனிதர்களை வலுக்கட்டாயமாக ஒப்புக் கொள்ள வைத்தன.

முழுமையான வடிவத்தை இன்னும் அடையாது இருந்த உண்மையை, தவறாக பரப்புவதும்...அந்த உண்மை வெளிப்பட தடையினை உருவாக்குவதும் எல்லா இடங்களிலும் நடந்து இருக்கின்றது. கன்புசியானிசத்தில் (Confusianism), தாவோயிசத்தில் (Taoism), புத்த மதத்தில், கிருத்துவத்தில், இசுலாம் மதத்தில்... ஏன் உங்கள் பிராமணியத்தில் கூட இது நடந்து இருக்கின்றது.

தொடரும்.... 

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு