இந்த உலகத்தில் அதிசயங்கள் பல நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, ஒவ்வொருவர் வாழ்விலும். அதிசயங்களில் நம்புகிறவர்கள் அவற்றை அதிசயம் என அறிந்து கொள்கின்றனர். நம்பாதவர்களோ அவற்றை எதேச்சையாக நடந்தது என்று எண்ணிக்கொள்கின்றார்கள். நம்புகிறோமோ இல்லையோ நம் வாழ்வில் ஒரு சில விஷயங்களுக்கு நம்மால் விளக்கம் கூற முடியாது. அவ்வாறு என் வாழ்வில் நடந்த ஒரு சில விஷயங்களை பற்றியே இந்த பதிவு...
அது ஒரு வெள்ளிக்கிழமை.
நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய ஊருக்கு விடுமுறைக்கு சென்று இருந்தேன். காதலியுடன் செலவழிக்கும் நேரம் எவ்வாறு விரைவில் கரைந்து விடுமோ அவ்வாறு என்னுடைய ஒரு வார விடுமுறை விரைவாக கரைந்து இறுதி இரு நாட்களாக சுருங்கி நின்றிருந்தது. வழக்கமாக இருக்கும் வீட்டை விட்டு போகும் சோகத்தோடு இப்பொழுது ஒரு புது சோகம் சேர்ந்து இருந்தது. இன்னும் சரி ஆகவில்லை என்னுடைய கால் வலி.
ஒரு நாள் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது திடீர் என்று வலிக்க ஆரம்பித்த இடது முட்டியை முதலில் பெரிதாய் எண்ணவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் வலி போகாது இருந்த போது அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. போதாக்குறைக்கு 'பார்த்துடா! எழும்புறிக்கி(Bone Cancer) நோயாய் இருக்க போகுது' என்ற உயிர் நண்பனின் பயமுறுத்தல் வேறு. ஊருக்கு போய் மருத்துவரிடம் காட்டிக் கொள்ளலாம் என்று இருந்த என்னுடைய லட்சியத்தை கொஞ்சம் தளர்த்தி விட்டு அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம் சென்றேன்.
"எத்தனை நாட்களாய் கால் வலிக்கின்றது" என்றார்.
"இரண்டு வாரங்களாய்!" என்றேன்.
சரி என்று சொல்லி அவர் சில சோதனைகள் செய்தார். அப்புறம்,
"அநேகமாக பயப்பட ஒண்ணும் இல்லை, ஆனால் சில சமயம் இது வேற நோயாக இருக்கலாம். முதலில் இந்த மருந்துகளை அருந்திப்பாருங்கள். அதற்கு அப்புறமும் வலி இருந்தது என்றால் இன்னும் சில சோதனைகள் செய்ய வேண்டி இருக்கும்" என்று புதிதாய் ஒரு வியாதியின் பெயரையும் சேர்த்து சில மாத்திரைகளை கொடுத்தார்.
சரி என்று சொல்லி அந்த மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்டும் வலி தீர்ந்தப்பாடில்லை.
சரி, அடுத்த வாரம் தான் நம் ஊருக்கு போகிறோமே அங்கே போய் நம் மருத்துவரிடமே காட்டிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.
அதே போல் ஊருக்கு சென்றதும் மருத்துவரை அணுகினேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு பயப்பட ஒன்றும் இல்லை காலில் எழும்புகளுக்கிடையில் தசை மாட்டிக் கொண்டு உள்ளது. கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள் அப்படியே இந்த மாத்திரைகளையும் சாப்பிடுங்கள் என்று சில மாத்திரைகளையும் கொடுத்தார்.
பயம் சற்று தணிந்தது. அனால் வலி இன்னும் தொடர்ந்ததால் முற்றிலுமாக பயம் நீங்கவில்லை. ஊரை விட்டு கிளம்பும் நாளும் அருகில் வந்து கொண்டே இருந்தது. அப்பொழுது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.
அது ஒரு வெள்ளிகிழமை.
ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி அந்த ரெய்கி தியான மையத்திற்கு சென்று வந்திருப்பா என்ற அம்மாவின் வார்த்தையை கேட்டு அந்த தியான மையத்திற்கு கிளம்பினேன்.இதற்கு முன்னாடியும் ரெய்கி தியான நிலையத்திற்கு சென்று இருக்கின்றேன். மனஅமைதியும் சற்று நிம்மதியையும் அந்த தியான முறை தருவதை உணர்ந்து இருக்கின்றேன். அதை எதிர்பார்த்தே இம்முறையும் சென்றேன்.
"அம்மா நல்லா இருக்காங்களாப்பா" என்று அன்புடன் விசாரித்தார் அந்த தியான மையத்தில் சிகிச்சை அளிக்கும் அக்கா.
"நல்லா இருக்கங்கக்கா" என்றேன்.
"சரி ரெய்கி வாங்கிறதுக்கா வந்துருக்க" என்றார்.
"ஆமாம் அக்கா" என்றேன்.
"சரி போய் அந்த மேஜையில் படுத்துக்கோ" என்றார்.
நானும் வழக்கம் போல் அந்த மேஜையில் படுத்துக் கொண்டு தியானம் செய்வதற்கு ஏற்ப கண்களை மூடி கொண்டு கைகளை கால்களின் அருகில் வைத்துக்கொண்டேன்.
ரெய்கி சகிச்சை முறை நம் உடலை சுற்றி இருக்கும் சக்தி வளையத்தை பிரபஞ்ச சக்தியை கொண்டு வலிமை படுத்தும் ஒரு முறை ஆகும் (இந்த முறையை பற்றி நாம் மற்றொரு பதிவில் பார்ப்போம்).
இரு வினாடிகள் அவர்கள் என் உடலை சுற்றி இருக்கும் சக்தி அலைகளை சரி செய்வதை உணர்தேன். அந்த உணர்ச்சியை என்னால் சரியாய் விளக்க முடியவில்லை. மனம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்தேன். சிகிச்சை இரண்டு நிமிடங்கள் கழித்து முடிந்த போது,
"அக்கா! ரெய்கியால் நோய்கள் தீருமாமே" என்றேன்.
சிரித்தார்.
"ஆம்!"
"அப்படினா என் கால்ல..." என்று தொடங்கினேன்.
"உன் இடது கால் முட்டி வலிச்சிகிட்டு இருந்துச்சி தான. அது ஒன்னும் இல்லை, ரெண்டு எலும்புகளுக்கு நடுவுல தசை மாட்டிகிட்டு இருந்துச்சி. சரி பண்ணிட்டேன். இனிமே வலிக்காது" என்றார்.
அதிர்ந்து போனேன்.
என் கால் வலி தெரிந்தால் அம்மா வருந்துவார்களே என்று அவர்களிடம் கூட என் கால் வலியைப் பற்றி நான் சொல்லி இருக்கவில்லை. என்னையும் அந்த மருத்துவரையும் தவிர என் ஊரில் அதைப் பற்றி யாருக்கும் தெரியாது. இருந்தும் இவர் சரியாக கூறுகிறாரே. அதுவும் என் காலை தொட்டு கூட பார்க்காமல்!!!
"அக்கா!!! என்ன சொல்றீங்க...!" என்றேன்.
"ஆமாம்பா! சரி பண்ணிட்டேன்.. இனிமே வலிக்காது" என்றார்
காலை வேகமாய் நீட்டிப் பார்த்தேன் 3 நிமிடங்களுக்கு முன்னால் இருந்த வலி இப்பொழுது மாயமாய் மறைந்து இருந்தது.
"எப்படி...!!!" என்றேன்.
"உலகம் எங்கும் கடவுளின் சக்தி நிறைந்து இருக்கின்றது. நமக்குள்ளேயும் தான். அந்த சக்தி நம் உடலில் குறையும் போது பிரச்சனைகள் வருகின்றது. ரெய்கியின் மூலம் பிரபஞ்ச சக்தியை நம் உடலுக்குள் செலுத்தி நம் உடலில் குறைந்த சக்தியை சரி செய்து நம் உடலை சீராக வைத்துக்கொள்கிறோம்" என்றார்.
"ஆனால் எப்படி என் காலில் வலி இருந்தது என்பதை நீங்கள் அறிந்தீர்கள்" என்றேன்.
"அந்த சக்தி உன் உடலின் வழியாக பயணிக்கும் பொழுது அதுவே பிரச்சனைகளை அறிந்து கொண்டு குணப்படுத்தும். அந்த சக்தியை அளிப்பவர்களுக்கு அது என்ன பிரச்னை என்பதை அது காட்டும்." என்றார்.
"எப்படி எந்த சக்தியை செலுத்துகிறீர்கள்?" என்றேன்.
"அன்பினால்!!!" என்றார்.
"அப்படினா யார் வேணும்னாலும் அந்த சக்தியை பயன்படுத்த முடியுமா?" தொடர்ந்தேன்.
"ஆம்! அதுக்கு கொஞ்சம் நம்மளை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். சில பயிற்சிகள் முறையாக எடுக்க வேண்டும். ஆனால் மிக முக்கியமான விஷயம் அன்பு தான். அது இருந்தால் தான் அந்த பிரபஞ்ச சக்தி நமக்குள் முதலில் புகும். அப்புறம் தான் அதை நாம் செலுத்த முடியும். அதே போல் இந்த சிகிச்சை பெறுபவர் மனதிலும் அன்பு நிறைந்து இருந்தால் இன்னும் எளிதாக குணமாகும். அன்பு தான் முக்கியம்!" என்று முடித்தார்.
"ரெய்கியால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியுமா?" என்றேன்.
"எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவும். ஆனால் மருத்துவத்திற்கு மாற்றாய் இதை கருத கூடாது. மருத்துவத்திற்கு இது பெரிதும் உதவும்." என்றார்
"அப்படினா இதை தனியாக பயன்படுத்த முடியாதா?"
புன்னகைத்தார்.
"பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் மிகவும் வலிமையானது. ஆனால் அதை நாம் பெற்றுக்கொள்வதும் செலுத்துவதும் நம்முடைய மனத் தூய்மையை பொறுத்தே இருக்கின்றது. எனவே அனைவராலும் இதை சரியாக செலுத்த முடியுமா என்பது அவர் அவர் மனதை பொருத்து அமைகின்றது. அந்த நிலையில் இதை மருத்துவத்திற்கு மாற்றாய் கருதுவது சரி ஆகாது!! அந்த நிலையில் பொதுவாக, அவர் அவர் மனதையும் நம்பிக்கையும் பொருத்து ரெய்கியை மருத்துவதுடனோ அல்லது மருத்துவத்தை ரெய்கி உடனோ பயன் படுத்தலாம் என்று சொல்வதே சரி என்று நினைக்கிறேன்" என்றார்.
நானும் சரி என்று கூறிக் கிளம்பினேன்.
இன்று வரை அந்த கால் வலி மீண்டும் வரவில்லை.