"முன்னொரு காலத்தில்" என்று ஆரம்பிக்கும் கதைகளைக் கேட்காமல் நம் நாட்டில் எந்த ஒரு குழந்தையும் வளர்ந்து இருக்கவே முடியாது. ஏன்!!! இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. குழந்தைகளுக்கு என்று எழுதப்பட்டு இன்று சாகா வரம் பெற்று விளங்கும் நாடோடிக் கதைகளும் தேவதைக் கதைகளும் உலகத்தில் ஏராளம். அப்படி உலகம் எங்கும் கூறப்படும் கதைகளை 'பிற நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் நம் மொழியில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும்" என்ற கூற்றின் படி பலப் பதிப்பகங்கள் மொழிப்பெயர்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த பதிப்பகங்கள் வாயிலாக வெளிநாட்டு காவியங்களும் , கதை மாந்தர்களும் இனிய தமிழ் மொழி பேசிக் கொண்டு நம்முள் உலாவிக் கொண்டு இருக்கின்றனர்.
எல்லாம் அப்படி இருக்க எனக்குள் திடீர் என்று ஒரு எண்ணம் 'நாமும் ஏன் நாம் படித்தக் கதைகளை மொழிபெயர்த்துப் பார்க்கக் கூடாது. நாம் ரசித்த கதைகளை பிறரும் அறியும் வண்ணம் நாம் ஏன் எழுதிப் பார்க்க கூடாது?' என்று!. அந்த எண்ணத்தின் விளைவாகவே இந்தப் பதிவு.
பன்னிரு மாதங்களும் மரிசாவும் - ஒரு செக் நாட்டு நாடோடிக் கதை!
முன்னொரு காலத்தில் மரிசா என்னும் பெண் தன்னுடைய கொடுமைக்காரச் சித்தியுடனும் தங்கை ஒலினாவுடனும் கானகத்திற்கு அருகே ஒரு மர வீட்டினில் வசித்து வந்தாள். மரிசா இயல்பிலேயே மற்ற உயிர்களிடத்து அன்பான பெண். எனவே ஊரில் உள்ள அனைவருக்கும் மரிசாவை மிகவும் பிடிக்கும். ஆனால் ஒலினாவோ அவள் அன்னையைப் போலவே செருக்கானவள். பிறரை சிறிதும் மதிக்க மாட்டாள். எனவே ஊரில் ஒலினாவை யாருக்கும் பிடிக்காது.
இது ஒலினாவின் தாயாரை கோபம் கொள்ளச் செய்தது. "என்ன ... என்னுடைய மகளை யாரும் பாராட்ட மாட்டேன்கின்றார்கள் ஆனால் இந்த மரிசாவை மட்டும் இப்படி தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றார்களே... அறிவில்லா மக்கள்!" என்று எண்ணிக் கொண்டு அவள் கோபத்தை எல்லாம் மரிசாவின் மேல் காட்ட ஆரம்பித்தாள்.
காலை தொடங்கி மாலை வரைக்கும் உள்ள வீட்டு வேலை எல்லாம் மரிசாவே தனியாய் செய்ய வேண்டியதாய் ஆயிற்று. மரிசா கடினப்பட்டு தோட்டத்திலும் முற்றத்திலும் வேலைச் செய்து கொண்டு இருப்பாள் ஆனால் ஒலினாவோ வேலை எதுவும் செய்யாது நேரத்தை சோம்பேறித்தனமாக கழித்துக் கொண்டு இருப்பாள். இவ்வளவு கடினப் பட்டும் மரிசா அவள் சித்தியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளுக்கு வேலை செய்வது பிடித்து இருந்தது. அது அவளுக்கு கடினமாய் படவில்லை. ஆனால் அவள் எதிர்பார்த்த அன்பும் பாசமும் அவள் சித்தியிடமும் தங்கையிடமும் கிடைக்காதது மட்டுமே அவளுக்கு மிகவும் மன வருத்தம் தருவதாய் இருந்தது. தன்னுடைய சோகத்தை பகிர்ந்து கொள்வதற்கு வேறு யாரும் இல்லாததினால் அவள் தான் வளர்த்த ரோசா செடிகளிடம் மட்டும் தன்னுடைய கதையையும் சோகத்தையும் சொல்லி காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தாள்.
இவ்வாறே காலங்கள் வேகமாய் நகர்ந்தன.
மரிசா மிக அழகான பெண்ணாய் வளர்ந்து இருந்தாள். ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மரிசாவை மணம் முடிக்க தயாராய் இருந்தனர். ஆனால் ஒலினாவை மணக்கவோ யாரும் முன் வரவில்லை. இது மரிசாவின் சித்தியை மேலும் கோபமும் பொறாமையும் கொள்ளச் செய்தது. "இந்த மரிசா இருக்கும் வரை நம்முடைய மகளை யாரும் மணக்க முன் வரப் போவதில்லை. எனவே இந்த மரிசாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும்" என்று எண்ணிக் கொண்டு மரிசாவை துரத்த வழிகளை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள்.
அவள் காத்து இருந்த அந்த நாளும் வந்தது. அது ஒரு பனிக்காலம். வெளியில் பனி பயங்கரமாக பெய்துவிட்டு அடங்கி இருந்தது.
திடீர் என்று ஒலினாவிர்க்கு செவ்வூதா(violet) பூக்களை சூடிக் கொண்டு தன்னை அழகுப் பார்க்க வேண்டும் என்று எண்ணம் வந்தது. உடனே அவள் மரிசாவை நோக்கி,
"ஏய் மரிசா! எனக்கு செவ்வூதாப் பூக்களை சூட வேண்டும் போல் இருக்கின்றது. நீ காட்டுக்குள் போய் எனக்காக அவற்றைத் தேடிப் பறித்துக் கொண்டு வா." என்றாள்.
மரிசா அதிர்ந்து போனாள். மார்ச்சு மாசம் பூக்கும் செவ்வூதாப் பூக்களை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த பூக்கள் பூக்கும் காலம் இது அல்லவே. அந்த பூக்களுக்கு நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"அம்மா ... மரிசாவைப் பாருங்கள். நான் சொன்ன வேலையைச் செய்ய முடியாது என்கின்றாள்" என்று தன்னுடைய துணைக்கு அவளின் அன்னையையும் அழைத்துக் கொண்டாள்.
ஒலினாவின் அன்னையும் இது தான் மரிசாவை வீட்டை விட்டு துரத்தி விட அருமையான சந்தர்ப்பம் என்று முடிவு செய்து கொண்டு
" என்ன மரிசா. ஒலினா சொன்ன வேலையை செய்ய முடியாது என்றாயாமே... ஏன்?" என்றார் கோபமாய்.
"இல்லை சித்தி .. இந்த காலத்தில் அந்த பூக்கள் பூக்காது... அவற்றைப் நான் எங்கே போய் பறிப்பது. மார்ச்சு மாதத்தில் நானே தங்கைக்கு அந்த பூக்களை வேண்டிய அளவிற்கு கொண்டு வந்து தருகின்றேன்" என்றாள் மரிசா.
"அது எல்லாம் எனக்கு தெரியாது. அவள் ஆசைப்படுவதை இப்பொழுதே நீ கொண்டு வந்து தர வேண்டும். இல்லாவிடில் இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை. போ போய் அந்த பூக்களைக் கொண்டு வா!" என்றார் மரிசாவின் சித்தி.
"ஐயோ சித்தி..." என்று ஆரம்பித்த மரிசாவை வீட்டை விட்டு வெளியே பனியில் தள்ளிவிட்டு கதவை அடைத்தனர் மரிசாவின் சித்தியும் ஒலினாவும்.
மரிசா அழுதுக் கொண்டே காட்டினுள் செவ்வூதாப் பூக்களைத் தேடி நடக்க ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம் நடந்து இருப்பாள் என்று தெரியாது ஆனால் அவள் நடந்துக் கொண்டே இருந்தாள். பூக்கள் இல்லாமல் அவள் வீட்டிற்க்கும் செல்ல முடியாது, வேறு எங்கு செல்வது என்றும் அவளுக்கு தெரியவில்லை. எனவே கால் போன போக்கிலே அவள் நடந்துச் சென்றாள். விரைவில் இருட்ட ஆரம்பித்தது. பனி வேறு தூற ஆரம்பித்தது.
பயங்கரமான காட்டில் இது வரை தனியாக போய் பழக்கப்படாத மரிசா பயப்பட ஆரம்பித்தாள்.
"கடவுளே ... எனக்கு மட்டும் ஏன் இப்படி" என்று அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது தூரத்தில் யாரோ நெருப்பை மூட்டி இருப்பதை கண்டாள். சிறிது நம்பிக்கை அவளுக்கு பிறந்தது. இங்கு வேறு யாரோ இருகின்றார்கள். நமக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்று அவள் எண்ணிக் கொண்டு அந்த நெருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போகும் வழியில் சிறிது பயமும் ஆவலுடன் தொற்றிக் கொண்டது. இந்த பனியில் மனிதர்கள் யாரும் காட்டினுள் வர மாட்டார்களே. ஒரு வேலை அங்கு இருப்பது திருடர்களாக இருக்குமோ என்று அஞ்சியவாறே அவள் நெருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அந்த நெருப்பை நோக்கி நெருங்க நெருங்க அங்கு இருந்தவர்கள் அவளுக்கு நன்றாக தெரிய ஆரம்பித்தனர். அவர்கள் மொத்தம் 12 பேர் இருந்தனர். 3 பேர் வயதானவர்களாகவும், 3 பேர் நடுத்தர வயதினராகவும், 3 பேர் இளைஞர்களாகவும் மற்ற மூன்று பேர் சிறு வயதினராகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அந்த நெருப்பை சுற்றி அமர்ந்து இருந்தனர். அவர்களுள் 11 பேர் நிலத்தில் அமர்ந்து இருக்க ஒரு சிறு வயது நபர் மட்டும் ஓர் அரியணையில் அமர்ந்து இருந்தார். மரிசா அவர்களை நோக்கி ஆச்சர்யத்துடனும் பயத்துடனும் நெருங்கினாள்.
நெருங்கிய பொழுதே மரிசா உணர்ந்து கொண்டாள், அந்த நெருப்பை சுற்றி அமர்ந்து இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள் தான் பன்னிரு மாதங்கள் என்று.
மரிசா அவர்களை நெருங்கி "பெரியவர்களே வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்று ஆரம்பித்தாள்.
மரிசாவை கண்ட அவர்கள் அதிர்ச்சி உற்றனர். இந்த பனியில் அவர்கள் யாரையும் அந்த காட்டினுள் எதிர்பார்க்கவில்லை.
"உனக்கும் வந்தனங்கள் சிறுமியே... கண்டிப்பாக நீயும் எங்களுடன் சேர்ந்து குளிர் காயலாம். ஆனால் இந்த பனியில் இவளவு தூரம் எதற்காக வந்து இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளலாமா ? உன்னை உன் வீட்டில் தேட மாட்டார்களா?" என்றார் அரியணையில் அமர்ந்து இருந்த சனவரி.
"இல்லை ஐயா!! என்னை தேட மாட்டார்கள். என்னை செவ்வூதாப் பூக்கள் பறித்துக் கொண்டு வர அனுப்பியதே அவர்கள் தான். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா?. இந்த கானகத்துள் இப்பொழுது அந்த பூக்களை நான் எங்கு பார்க்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மரிசா.
"செவ்வூதா பூக்களா... அதுவும் இந்த காலத்திலா" என்றார் சனவரி அதிர்ச்சியாய் " அவை இந்த பனியில் பூக்காது என்று உன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாதா?".
"தெரியும்... இருந்தாலும்..." என்று ஆரம்பித்த மரிசாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. அதைக் கண்ட சனவரி,
"அழாதே பெண்ணே!!! உனக்கு இப்பொழுது செவ்வூதாப் பூக்கள் தானே வேண்டும்.. ஒரு கணம் பொறு" என்று கூறி விட்டு அங்கு கூடி இருந்தவர்களுள் கொஞ்சம் இளமையானவரை நோக்கித் திரும்பினார்.
"சகோதரா மார்ச்சு... இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை மார்ச்சுவிடம் கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
மார்ச்சு அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,
"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
இவளை வாட்டுகின்றது இவள் சொந்தம்...
வாட்டாதே நீயும்.. வழிவிடு வரட்டும் சிறிது வசந்தம்!!!" என்றார்.
நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகி பச்சைப்பசேல் புல் வெளிகள் தென்படலாயிற்று. அவற்றின் நடுவே கொடிகள் எங்கும் பூத்துக் குலுங்கின செவ்வூதாப் பூக்கள்.
மரிசா சிரித்தாள்.
"போ பெண்ணே!!! போய் உனக்கு வேண்டிய மட்டும் மலர்களை பறித்துக் கொள்." என்று கூறினார் மார்ச்சு.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று மலர்களை வேண்டிய மட்டும் பறித்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே பூக்களை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி பூக்களை கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த பூக்களை வாங்கிக் கொண்டாள். "இந்த பூக்களை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் பூக்களை சுடி தன்னை அழகுப் பார்க்க ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த பூக்கள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. மரிசாவின் சித்திக்கு தான் ஐயோ நாம் மரிசாவை வீட்டை விட்டு துரத்த போட்ட திட்டம் தோற்று விட்டதே என்று கோபம் தலைக்கு ஏறியது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.
அவளின் யோசனைக்கு ஏற்றார்ப்போல் அடுத்த நாள் ஒலினாவிற்கு செம்புற்றுப்பழம் (strawberry) சாப்பிட வேண்டும் என்பது போல் ஆசை வந்தது. உடனே அவள் மரிசாவை அழைத்தாள்.
"மரிசா. எனக்கு செம்புற்றுப்பழம் சாப்பிட வேண்டும் என்பது போல ஆசையாக உள்ளது. நீ காட்டினுள் போய் எனக்கு அந்த பழங்களைப் பறித்து வா" என்றாள்.
மரிசா மீண்டும் அதிர்ந்து போனாள். சூன் மாசம் கனிக்கும் செம்புற்றுப் பழத்தை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த கனிகள் வரும் காலம் இது அல்லவே. அந்த கனிகளுக்கு இந்த பனியில் நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"எனக்கு அது எல்லாம் தெரியாது. அந்த கனிகள் இல்லாது நீ வீட்டினுள் வர முடியாது" என்று கூறிவிட்டு மரிசாவை வெளியே தள்ளி கதவை பூட்டினர்.
மரிசா மீண்டும் சோகத்துடன் காட்டினுள் நடக்க ஆரம்பித்தாள். விரைவில் முந்தைய இரவு அவள் மாதங்களை சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
"பெரியவர்களே மீண்டும் வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்றாள்.
அவளை மீண்டும் கண்டு அதிர்ச்சியுற்ற சனவரி
"நிச்சயமாக எங்களுடன் நீ இணைந்துக் கொள்ளலாம்! ஆனால் ஏன் பெண்ணே மீண்டும் இந்த பனியில் காட்டினுள் வந்து இருக்கின்றாய் என்று நாங்கள் அறிந்துக் கொள்ளலாமா?. என்ன பிரச்சனை?" என்றார்.
"என்னுடைய தங்கைக்கு இம்முறை செம்புற்றுப்பழம் வேண்டுமாம். அதை பெறாது நான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர்" என்றாள் மரிசா.
"செம்புற்றுப்பழமா!!! இந்த பனிக் காலத்திலா... நீ ஒன்றும் கவலைப் படாதே பெண்ணே" என்றுக் கூறிக் கூட்டத்தில் இருந்த சற்று நடுத்தர வயதை சேர்ந்த ஒருவரை பார்த்து திரும்பினார்.
"சகோதரா சூன் .. இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை சூன்இடத்து கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
சூன் அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,
"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
செடிகளை விழுங்கி நின்றதுப் போதும் பனியே...
சற்று விலகிடு கனியட்டும் இவள் விரும்பிய கனியே!!! என்றார்.
நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகி பச்சைப்பசேல் புல் வெளிகளும் பழம் கனிக்கும் செடிகளும் தென்படலாயிற்று.
"போ பெண்ணே!!! போய் உனக்கு வேண்டிய மட்டும் கனிகளைப் பறித்துக் கொள்." என்று கூறினார் சூன்.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று கனிகளை வேண்டிய மட்டும் பறித்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே கனிகளை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி கனிகளைக் கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த கனிகளை வாங்கிக் கொண்டாள். "இந்த கனிகளை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் கனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த கனிகள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. மரிசா மிகத் தொலைவு அலைந்து வந்து இருந்தமையால் பசியுடனே உறங்கப் போனாள்.
மீண்டும் மறுநாள் ஒலினாவிற்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல் ஆசை வந்தது. உடனே அவள் மரிசாவை அழைத்தாள்.
"மரிசா. எனக்கு ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்பது போல ஆசையாக உள்ளது. நீ காட்டினுள் போய் எனக்கு அந்த பழங்களைப் பறித்து வா" என்றாள்.
மரிசா மீண்டும் அதிர்ந்து போனாள். செப்டம்பர் மாசம் கனிக்கும் ஆப்பிள் பழங்களை அவள் எப்படி இந்த சனவரி மாதப் பனியில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எனவே அவள்
"ஐயோ ஒலினா... அந்த கனிகள் வரும் காலம் இது அல்லவே. அந்த கனிகளுக்கு இந்த பனியில் நான் எங்கு போவேன்.." என்றாள் சோகமாய்.
ஒலினாவிற்கு மீண்டும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"எனக்கு அது எல்லாம் தெரியாது. அந்த கனிகள் இல்லாது நீ வீட்டினுள் வர முடியாது" என்று கூறிவிட்டு மரிசாவை வெளியே தள்ளி கதவை பூட்டினர்.
மரிசா மீண்டும் சோகத்துடன் காட்டினுள் நடக்க ஆரம்பித்தாள். விரைவில் முந்தைய இரவு அவள் மாதங்களை சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தாள்.
"பெரியவர்களே மீண்டும் வணக்கம்!... பனி என்னை வாட்டுகின்றது. நானும் உங்களுடன் இந்த நெருப்பில் குளிர் காய அனுமதிப்பீர்களா?" என்றாள்.
அவளை மீண்டும் கண்டு அதிர்ச்சியுற்ற சனவரி
"நிச்சயமாக எங்களுடன் நீ இணைந்துக் கொள்ளலாம்! ஆனால் ஏன் பெண்ணே மீண்டும் இந்த பனியில் காட்டினுள் வந்து இருக்கின்றாய் என்று நாங்கள் அறிந்துக் கொள்ளலாமா?. என்ன பிரச்சனை?" என்றார்.
"என்னுடைய தங்கைக்கு இம்முறை ஆப்பிள் பழம் வேண்டுமாம். அதை பெறாது நான் வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி என்னை அனுப்பி விட்டனர்" என்றாள் மரிசா.
"ஆப்பிள் பழமா!!! இந்த பனிக் காலத்திலா... நீ ஒன்றும் கவலைப் படாதே பெண்ணே" என்றுக் கூறிக் கூட்டத்தில் இருந்த சற்று வயது முதிர்ந்த ஒருவரை பார்த்து திரும்பினார்.
"சகோதரா செப்டம்பர் .. இதோ சற்று நேரம் நீ காலத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு இந்த பெண்ணின் தேவைகளை நிறைவேற்று" என்றுக் கூறி தான் கையில் இருந்த செங்கோலை செப்டம்பர் இடம் கொடுத்துவிட்டு அரியணையில் அமர்ந்து கொண்டார்.
செப்டம்பர் அந்த செங்கோலை வாங்கிக் கொண்டு ,
"ஒ நிலத்தை மூடி நிற்கும் பனியே...
கண்டேன் கலங்கிய இவள் கண்மணியை...!!!
மரங்களை மறைத்து நின்றதுப் போதும் பனியே...
சற்று விலகிடு கனியட்டும் இவள் விரும்பிய கனியே!!! என்றார்.
நிலத்தினையும் மரங்களையும் மூடிக் கொண்டு இருந்த பனி விலகியது. வானம் வரை உயர்ந்து நின்ற ஒரு மரத்தில் இருந்து மட்டும் இரு பூக்கள் பூத்து உடனே ஆப்பிள் பழங்களாய் கனிந்து மண் மேலே விழுந்தன.
"போ பெண்ணே!!! போய் அந்த இரண்டு ஆப்பிள் கனிகளைப் எடுத்துக் கொண்டு உன்னுடைய வீட்டிற்க்கு போ." என்று கூறினார் செப்டம்பர்.
மரிசா மகிழ்ச்சியுடன் சென்று அந்த இரண்டு கனிகளை எடுத்துக் கொண்டு "நன்றி மதிப்பிற்குரிய மாதங்களே" என்று கூறி விட்டு புன்னகையுடன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வீட்டை அடைந்த மரிசா புன்னகையுடன் "இதோ தங்கையே நீ கேட்டவாறே கனிகளை நான் கொண்டு வந்து இருக்கின்றேன்." என்றுக் கூறி கனிகளைக் கொடுத்தாள்.
ஒலினா ஆச்சர்யத்துடன் அந்த இருக் கனிகளை வாங்கிக் கொண்டாள். "இந்த கனிகளை நீ எங்கே பறித்தாய்" என்றாள்.
"மலை பகுதியில் இருக்கும் மரங்களின் அடியில் இருந்து ஒலினா" என்றாள் மரிசா.
ஒலினா அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் கனிகளை சாப்பிட ஆரம்பித்தாள். பேச்சிற்கும் கூட ஒலினாவோ அல்லது அவள் அன்னையோ மரிசாவிற்கு அந்த கனிகள் வேண்டுமோ என்று கேட்கவில்லை. அந்த பழங்கள் மிகவும் இனிமையாய் இருக்கவே ஒலினா மரிசாவை நோக்கி
"இந்த பழங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. இரு பழங்களை மட்டுமே கொண்டு வந்து தந்து விட்டு மீதிப் பழங்களை எல்லாம் தின்று விட்டாயா?" என்றாள் கோபமாய்.
"ஐயோ! இல்லை ஒலினா... அந்த மரத்தில் இந்த இரு கனிகள் மட்டும் தான் இருந்தன. என்னை நம்பு. நான் பொய் சொல்லவில்லை" என்றாள் மரிசா.
"உன்னை நம்புவதா... நீ அந்த பழங்களை சாப்பிட்டு இருந்தாலும் சாப்பிட்டு இருப்பாய். நானே போய் அந்த பழங்களை பறித்துக் கொள்கிறேன்." என்று கூறி விட்டு தன்னுடைய அங்கியை அணிந்துக் கொண்டு பனியில் தனது அன்னை எவ்வளவு தடுத்தும் வெளியே செல்ல ஆரம்பித்தாள்.
விரைவில் அவளும் அந்த பன்னிரு மாதங்கள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். குளிர் அவளை பயங்கரமாக வாட்டவே அவள் அவர்களின் அனுமதி இன்றியே அவர்கள் மூட்டி இருந்த நெருப்பில் குளிர் காய ஆரம்பித்தாள்.
இதைக் கண்டு கடுப்புற்ற சனவரி
"சொல் பெண்ணே... நீ யார்!. இந்த பனியில் இந்த நேரத்தில் காட்டுக்குள் என்ன செய்துக் கொண்டு இருக்கின்றாய்?" என்றார்.
இது வரை யாரிடமும் பதிலோ இல்லை காரணமோ சொல்லிப் பழக்கமில்லாத ஒலினா அதைக் கேட்டு கோபமுற்று,
"என்னுடைய வேலையை நான் எதற்காக கிழவா உன்னிடம் சொல்ல வேண்டும். உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போ!" என்றாள்.
அதைக் கேட்டு மிகவும் கோபம் அடைந்த சனவரி தன் கையில் இருந்த செங்கோலை அசைக்க, வானம் மிகவும் இருட்டிக் கொண்டு வந்து மிகவும் பெரிய பனி அந்த இடத்தில பெய்ய ஆரம்பித்தது. அந்த பனியில் மாட்டி வழித் தவறி ஒலினா காட்டினுள் தொலைந்து போனாள்.
மிக நேரம் ஆகியும் தன்னுடைய மகள் திரும்பாததால், "அவள் ஆப்பிள் பழங்களை தின்றுக் கொண்டே அவளை மறந்து காட்டினுள் அமர்ந்து இருக்க கூடும்" என்று எண்ணி, வீட்டை மரிசாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மரிசாவின் சித்தியும் காட்டினுள் ஒலினாவைத் தேடி செல்ல ஆரம்பித்தார்.
மிக விரைவில் மரிசாவின் சித்தியும் பனியில் மாட்டிக் கொண்டு காட்டினுள் தொலைந்து போனார்.
நீண்ட நேரம் ஆகியும் தன் சித்தியும் திரும்பவில்லை, தங்கையும் திரும்பவில்லை என்பதை கண்டு கவலை உற்று அவர்கள் திரும்ப மரிசா இறைவனிடம் வேண்டினாள். அப்படியே அவர்களின் வருகைக்காக காத்து இருந்தாள். ஆனால் நாட்கள் பல ஓடியும் அவர்கள் வராததால் அவள் தன்னுடைய வீட்டினுள் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தாள்.
பின் ஒரு நாள், அவளுக்கு ஏற்ற ஒருவனை மணம் முடித்துக் கொண்டு அவள் தன் வாழ்நாள் முழுவதும் மாதங்களின் ஆசியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள்.
முற்றும்.