அன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love): 


என்றாவது ஒரு நாள் பொழுது போகாமல் தற்செயலாய் காண ஆரம்பித்த ஒரு படம், அதன் முடிவில் நீங்கள் உங்கள் வாழ்வில் கண்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உருமாறி இருப்பதை உணர்ந்து இருக்கின்றீர்களா?. நான் அப்படி உணர்ந்த ஒரு படம் தான் இது.

கட்டுப்பாடுகளற்ற ஒரு பள்ளி. சமுகத்தால் ஒதுக்கப்பட்ட மாணவர்கள். காலத்தால் தற்காலியமாக அந்த மாணவர்களுக்கு ஆசிரியராகும் ஒரு கருப்பின இளைஞர். மாணவர்களுக்கு நல்ல வழி காட்ட அவர் எடுக்கும் முயற்சிகள். அவருக்கு பாடம் கற்பிக்க மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள். இடையில் கொஞ்சம் நிறவெறி... நிறைய அன்பு. முடிவில் ஆசிரியர் வென்றாரா அல்லது மாணவர்கள் தோற்றார்களா( நல் வழி காணாத மாணவர்கள் தோற்றவர்கள் தானே!!) என்பதே கதை.

1967ஆம் ஆண்டு  லண்டனின் அருகில் உள்ள ஒரு சேரியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியைக் கதைக்களமாகக் கொண்டு ஆரம்பிகின்றது இந்தப் படம். சேரிப் பகுதியிலுள்ள மாணவர்களுக்காக இயங்கும் அரசாங்கப் பள்ளி என்பதினால் அதிக நிதி உதவியும் இல்லாது , வசதியும் இல்லாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி மாணவர்களுக்கோ அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சேரியில் இருந்து வருபவர்கள். அவர்கள் என்ன தான் படித்தாலும் இந்த உலகம் அவர்களை மதிக்காது. அப்படி இருக்க அவர்கள் எதற்காக தேவை இல்லாது படித்து நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்க வேண்டும். எனவே அவர்கள் சற்றும் பொறுப்பில்லாது புகைப் பிடிக்கவும், மது அருந்தவும், வகுப்பில் ஆசிரியரை கிண்டல் அடிக்கவும் என்று படிப்பதைத் தவிர மற்ற விசயங்களில் கவனத்தை அதிகம் செலுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்களை நல்வழிப் படுத்த வேண்டிய ஆசிரியர்களில் சிலரோ அந்த மாணவர்களை மாற்ற முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவ முயற்சிச் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். வேறு சில ஆசிரியர்களோ "ஆள விட்டாப் போதும்டா சாமி" என்றாவாறே வேறு பள்ளிகளுக்கு பணிமாற்றம் வாங்கிக் கொண்டு செல்ல முயன்று கொண்டு இருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் தான் அந்த பள்ளிக்கு ஆசிரியராய் பணி உத்தரவு பெற்றுக் கொண்டு வருகின்றார் மார்க் தாக்ரே.

மார்க் தாக்ரே, ஒரு திறமையான பொறியாளர். ஆனால் அவருக்கு தகுதி இருந்தும் வேலை தர மறுத்து விடுகின்றன இங்கிலாந்தின் பெரிய பொறியியல் நிறுவனங்கள். காரணம் அவர் ஒரு கருப்பர். வேலை இல்லாது திண்டாடும் தாக்ரேக்கு இந்த சூழ்நிலையில் தான் காலத்தின் பதிலாய் கிடைகிறது அந்த ஆசிரியர் பணி.

ஆவலுடன் பணிக்கு வரும் அவரை அதிர்ச்சியடைய செய்கின்றது அந்த பள்ளியின் கோலம்.  புகைப் பிடித்துக் கொண்டே ஆசிரியரை வரவேற்கும் மாணவன், மாணவர்களைப் பற்றி சிறிதும் கவலைப் படாத சில ஆசிரியர்கள், யாருக்கும் அடங்காது வகுப்பறையில் சத்தம போட்டுக் கொண்டு இருக்கும் மாணவர்கள்... அதிர்ந்து தான் போகிறார் தாக்ரே...அவர் எதிர்பார்த்த பள்ளிச் சூழல் நிச்சயம் அது அல்ல. இருந்தும் சில ஆசிரியர்கள் "அந்த மாணவர்கள் பாவம். உண்மையில் அவர்கள் நல்லவர்கள் தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நம்முடைய உதவி கண்டிப்பாக அவர்களுக்கு தேவை" என்று கூறி தாக்ரேவிற்கு உதவியாக இருப்பதினால் பள்ளியில் இருக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக தனது ஆசிரியப் பணியைத் தொடங்குகிறார் தாக்ரே. அப்படியே ஒரு ஓரமாய் தனது கனவுப் பணியான பொறியியல் வேலைக்கும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றார்.

மாணவர்களை வகுப்பை கவனிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு பொறுப்பை புகட்ட வேண்டும் என்ற அவரது முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர் டென்ஹம்(denham), பார்பரா, பமீலா மற்றும் பாட்டர் என்ற அந்த வகுப்பு மாணவர்களில் சிலர். கோபமே படக் கூடாது என்று முடிவு எடுத்து இருந்த தாக்கரேவை அந்த பட்டாளம் எளிதும் கோபப்படுத்தி விட அதிகாரத்தினால் மாணவர்களை மாற்றி விட முடியாது என்பதை உணருகின்றார் தாக்ரே.

அவருக்கு தேவை ஒரு உபாயம். அந்த மாணவர்களை மாற்றும் ஒரு வழி. அவர்கள் சிறுவர்கள் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும், அவர்கள் கற்க வேண்டியது புத்தகங்களை அல்ல வாழ்க்கையை என்று முடிவு கொண்டு தனது வகுப்பின் போக்கை மாற்றுகிறார் தாக்ரே. புத்தகங்கள் முதலில் வேண்டாம். முதலில் விவாதிப்போம்... எதைப் பற்றி வேண்டும் என்றாலும்... அரசியல், கல்யாணம், கலாச்சாரம்... முதலில் வாழ்க்கையை கற்போம். மற்ற பாடங்களை அது கற்றுக் கொடுத்து விடும் என்ற தாக்கரேவின் இந்த கொள்கை பெண்களிடம் முதலில் நல்ல மாற்றத்தை கொண்டு வர ஆரம்பிகின்றது. அப்படியே நாளடைவில் ஆண்களும் மாற ஆரம்பிகின்றனர். இந்த காலக் கட்டத்தில் பமீலாவிற்கு தாக்ரேவின் மீது காதல் வருகின்றது. அவர் வகுப்பை திருத்த எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அவள் துணை நிற்கின்றாள். தாகேரேயும் ஒரு ஆசிரியராய் அவளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்றார். கிட்டத்தட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரும் தாக்ரேவை மதிக்க ஆரம்பிகின்றனர். அவரை அவர்களுள் ஒருவராகவே பார்க்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் டென்ஹம் மட்டும் மாறாது பழைய படியே இருக்கின்றான்.

எல்லாம் தாக்ரே எதிர் பார்த்த மாதிரியே போய்க் கொண்டு இருக்க, அவர் எதிர்பார்க்காத இரண்டு சம்பவங்களால் மாணவர்கள் மத்தியில் அவர் உருவாக்கிய அந்த மாற்றம் சிதறுகின்றது. ஒரு ஆசிரியர் செய்த தவறுக்காக பாட்டர் அந்த ஆசிரியரை அடிக்க போக, அதைத் தடுத்து பாட்டரை "தவறுக்கு தவறு தீர்வாகாது" என்று கூறி அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க சொல்கின்றார் தாக்ரே. இது மாணவர்களிடம் அவருக்கு இருந்த நற்பெயரை "ஆசிரியர்கள் ஆசிரியருக்கு தான் உதவுவார்கள்" என்று கெடுக்கின்றது. அந்த நிலையிலும் பமீலா தாக்ரேவின் பக்கம் தான் நிற்கின்றாள். ஆனால் பமீலாவும் தாகேரேவின் மீது கோபம் கொள்ளும் ஒரு சம்பவம் நடக்கின்றது.  அவளும் தாக்ரேவை விட்டு மற்ற மாணவர்களிடம் மீண்டும் சேருகின்றாள்.

தான் அன்பினைக் காட்டி செதுக்கிய மாணவர்கள் அனைவரும் இப்பொழுது தனக்கு எதிராய் நிற்பதைக் காணுகின்றார் தாக்ரே. என்ன செய்வதென்று அவர் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சூழ்நிலையில் அவர் மிகவும் எதிர்ப்பார்த்த பொறியியல் வேலைக்கு அவரை சேர வரச் சொல்லி கடிதமும் வந்து சேருகின்றது.

தாக்ரே வேறு பணிக்கு சென்றாரா?. மாணவர்கள் தாக்ரேவை உணர்ந்து திருந்தினார்களா?. டென்ஹம் என்ன ஆனான்?. பமீலாவின் காதல் என்ன ஆனது? என்பது தான் மீதிக் கதை.

அருமையான கதை, இயல்பான திரைக்கதை மற்றும் இன்னும் பலப்பல விசயங்களுக்காக இந்த படத்தைப் புகழலாம். ஆனால் அவை அனைத்துக்கும் மேலாக படம் முழுவதும் ஒரு மனிதர் தாக்ரேவாக நிற்கின்றார். அவரைப் பற்றி நிச்சயம் விரிவாய் சொல்லியே ஆக வேண்டும்.
 
சிட்னி போய்தியர் (sidney poitier )- மார்க் தாக்ரேவாக இவரது நடிப்பை பார்த்து எனக்கு தோன்றிய முதல் எண்ணம். நிச்சயம் பல ஆஸ்கார் விருதுகளை இந்த மனிதன் வாங்கி இருக்க வேண்டும் என்பதே. அப்படி ஒரு நடிப்பு. படத்தில் இவர் வரும் ஒவ்வொரு இடத்திலும் இவர் தான் தெரிகின்றார். இவருக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம்.

இந்த படம் நிச்சயம் ஆசிரியர்களுக்கான ஒரு சிறந்தப் படம். மாணவர்களின் சிறப்பையும் அவர்களை செதுக்கும் ஆசிரியர்களின் சிறப்பையும் ஒரு சேர எடுத்துக் காட்டும் இந்த படம் நிச்சயம் ஒரு அழியாக் காவியம் தான்.

ஆசிரியராக கனவுக் காணும் அனைவரும் நிச்சயம் காண வேண்டிய ஒரு படம். அதே போல் தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய ஆசிரியர்களை நினைவுக்கோரும் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களும் காண வேண்டிய ஒரு படம்.

சில உபரி செய்திகள்:
இந்த கதை உண்மையில் நடந்த ஒரு கதை. பிறைத்வைடே (braithwaite ) என்ற ஒருவரின் சுய சரிதையை தழுவியே இந்த படம் எடுக்கப் பட்டு உள்ளது.

சிட்னி போய்தியர் - இவர் தான் ஆஸ்கார் விருதினைப் பெற்ற முதல் கருப்பின நடிகர்.

6 கருத்துகள்:

நல்ல பதிவு! சிட்னி போய்டியர் படத்தின் இயக்குநரா நடிகரா? இல்லை இருவருமா? நீங்கள் வெளியிட்டிருக்கும் படத்தில் அவருடைய பெயர் இருக்கிறது. நீங்கள் அவரை நடிகர் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..

மிகச்சிறப்பாக இருக்கிறது இப்பதிவு. இப்படத்தைப் பார்க்கும் அனைவரும் தங்களுக்குப் பிடித்த ஆரிசியரை நினைவு கூறுவார்கள்.

தங்கள் பின்னோடத்திற்கு நன்றி நண்பர்களே...

@தோழர் பகுத்தறிவு

"சிட்னி போய்டியர் படத்தின் இயக்குநரா நடிகரா?"

அவர் அந்த படத்தின் நடிகர் மட்டும் தான் தோழரே. அவர் இந்த படம் நடிக்கும் முன்னரே நல்ல நடிகர் என்று பெயர் பெற்று இருந்ததினால் விளம்பரத்துக்காக அவரின் பெயரை போட்டு இருக்கின்றார்கள்.

தோழரே,
மிக அருமையான பதிவு, உங்கள் கதை சொல்லும் முறை எனக்கு மிகவும் பிடித்துயிருக்கிறது, நீங்கள் நிறைய சிறுகதைகள் முயற்சிக்க வேன்டும் என்பது என் அன்பு வேண்டுகோள், இந்த தொடர் பதிவை தொடர்ந்து எழுதுங்கள்,

என்றும் தோழமையுடன்,
மோகன்

மிக நல்ல படத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி....
இந்த படத்தை பார்க்கும் என்னத்தி தூண்டிவிட்டிருக்கின்றீர்கள்......

உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி தோழர் கருணாகரசு அவர்களே... தங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு