சென்ற பதிவினில் உடல் தனக்குரிய ஓய்வினை தூக்கத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளுகின்றது என்று கண்டோம். அதே நேரம் உடலின் சக்தியினை மீறக்கூடிய வண்ணம் மனம் என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்கின்றது என்றும் கண்டோம். இப்பொழுது அந்த மனதினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மனம் என்றால் என்ன? அது நமது உடலில் எங்கே இருக்கின்றது? எளிதானதாக தோன்றக் கூடிய இந்தக் கேள்விகளுக்கு விடைகள் எளிதாக கிடைப்பதில்லை தான். இங்கே அறிவியலானது மனதிற்கு தர முயன்றுக் கொண்டிருக்கும் விளக்கங்களை நாம் காண வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே மனதினை நம்முடைய பார்வையில் இருந்தே நாம் காண முற்படலாம். அதற்கு நாம் ஒரு எடுத்துக்காட்டினை எடுத்துக் கொள்வது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். அதுவும் என்னுடைய கனவுகளின் மூலமாக விளக்க முற்படுவது இன்னும் எளிதாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

நான் சிறுவனாக இருந்த பொழுது பேய்களுக்கு அஞ்சுவேன். நிச்சயமாக வேறு யார் சொல்லியோ அல்லது பேய்களைப் பற்றிய படம் ஏதோ ஒன்றினை கண்டதினால் தான் பேய்கள் என்ற ஒன்றினைப் பற்றிய எண்ணமானது என்னுடைய மனதினில் பதிந்து இருக்க வேண்டும். அப்பொழுது ஒரு சில கனவுகளும் வரும்…நான் வசித்து வந்த வீதியில் பேய்கள் மறைந்து இருக்கும்…அவை என்னையும் எனது குடும்பத்தினரையும் துரத்தும்…நான் அஞ்சி ஓடுவேன்…தொலைவில் ஒரு சந்து இருக்கும்…அதனில் சென்று விட்டால் பேய்களிடம் இருந்து தப்பி விடலாம் என்றே நான் அக்கனவினில் நம்பிக் கொண்டிருப்பேன்…அவ்வாறே நான் அந்த சந்தினில் நுழைந்தவுடன் நான் தப்பிக்கவும் செய்வேன். அத்துடன் அந்த கனவும் முற்றுப் பெறும்.

இங்கே நாம் காண வேண்டிய விடயம் என்னவென்றால், அக்கனவினில் நிகழ்ந்த நிகழ்வுகளை நான் எங்கேயும் கண்டு இருந்து இருக்க வாய்ப்பே இல்லை. அவற்றினை நான் சிந்தித்து இருக்கவும் முடியாது. அப்படி இருக்க அந்த நிகழ்வுகள் என்னுடைய மூளையினில் பதிந்து இருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் என்னுடைய கனவினில் நான் அந்நிகழ்வுகளைக் கண்டேன்…கண்டேன் என்று சொல்வதனை விட அந்த நிகழ்வுகளில் நான் இருந்துக் கொண்டு இருந்தேன்…அக்கனவினில் நான் பேய்களைக் கண்டேன்…அவற்றை நம்பினேன்…அவற்றிடம் இருந்து ஓடினேன்…எனது இதயமானது துடித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்…அவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டும் இருந்தேன்… அனைத்தையும் நான் செய்துக் கொண்டிருந்தேன். அதாவது ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வொன்றினை, ஒரு திரைப்படத்தினை மீண்டும் கான்பதனைப் போன்று நான் கண்டு கொண்டிருக்கவில்லை…மாறாக நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வினில் நானே வாழ்ந்துக் கொண்டிருந்தேன். இது எதனால் சாத்தியமாயிற்று?

மூளையினாலா? விழித்து இருக்கும் பொழுது தானே ஒரு மனிதனால் எதனையும் செய்யவோ அல்லது அறியவோ முடியும். அந்நிலையில் நான் உறங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது என்னால் எப்படி என்னுடைய மூளையினை பயன்படுத்தி இருக்க முடியும்? அல்லது என்னுடைய மூளையானது என்னுடைய உதவி இல்லாமலேயே இயங்கிக் கொள்ளும் தன்மையினைப் பெற்று இருக்கின்றதா? சரி என்னுடைய உதவி இல்லாமலேயே மூளையானது சிந்தித்து கனவினை உருவாக்குகின்றது என்றால், அந்த கனவினில் பயந்து ஓடிக் கொண்டே எவ்வாறு தப்பிப்பது என்று மூளையினை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த சிறுவன் யார்? அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மூளை எந்த மூளை? பின்னர் விழித்து எழுந்தவுடன் நடந்தவை அனைத்தும் கனவு தான் என்று உறுதிப்படுத்துவது எந்த மூளை?

இந்த கேள்விகளுக்கு எவ்வாறு நாம் விடையினை கூறுவது? செல்களால் ஆன மூளை ஒன்று, தானாக ஒரு கனவினை உருவாக்குகின்றது. பின்னர் அக்கனவினை உண்மை என்றே அது நம்பவும் செய்து தப்பிக்க சிந்திக்கவும் செய்கின்றது. பின்னர் விழித்து எழுந்த பின்னர் நடந்தது உண்மை அல்ல ஒரு கனவு என்றே அது அறிந்து கொள்ளுகின்றது. இதில் அர்த்தம் ஏதேனும் இருக்கின்றதா?

உடலானது உறங்கும் பொழுது மூளையானது உறங்குவதில்லை. அந்நிலையில் உறங்குவதும் விழித்து எழுவதும் மூளைக்கு தொடர்பில்லாத ஒன்று. உறங்கும் பொழுதும் விழித்து இருக்கும் பொழுதும் எப்படி இதயமானது துடித்துக் கொண்டே இருக்கின்றதோ அப்படியே தான் மூளையும் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. அந்நிலையில் தூங்கும் பொழுது கனவினை உண்மை என்று நம்பியது என்றும் எழுந்தவுடன் அது பொய் என்று அறிந்தது என்றும் நாம் மூளையினைப் பற்றி கூறினோம் என்றால் அது பொருத்தமில்லாத ஒன்றாகத் தான் இருக்கும்.

இந்நிலையில் தான் நாம் அக்கேள்விகளுக்கு வேறு ஏதேனும் பொருத்தமான விடைகள் இருக்கின்றனவா என்றே காண வேண்டி இருக்கின்றது. அதாவது நான் உறங்கிக் கொண்டு இருக்கின்றேன்…ஆனால் அதே நேரம் நான் கனவிலும் உலாவிக் கொண்டு சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன்…இந்நிலையில் உறங்கிக் கொண்டிருப்பது  நானா அல்லது கனவினில் உலாவிக் கொண்டிருப்பது யார்? நான் யார்? என்ற அந்த கேள்விக்கே விடையினை நாம் தேட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் வேறு ஒரு கனவினைக் பற்றி காண்பது உதவியாக இருக்கும்…!!! பொதுவெளிகளில் கருத்துக்களைக் கூறும் பொழுது, சுய அனுபவங்களின் வாயிலாக அல்லாது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் விடயங்களின் அடிப்படையிலேயே விளக்கங்களை அளிப்பது தான் பொதுவாக எப்பொழுதும் சரியானதொன்றாக இருக்கும்…ஆயினும் சில நேரங்களில் வேறு வழி இல்லாது போய் விடத் தான் செய்கின்றது. காரணம் மற்ற அனைத்தையும் விட அனுபவங்களே மிகுந்த திறமை வாய்ந்த ஆசான்களாக இருக்கின்றன. சரி..இப்பொழுது நாம் மற்றுமொரு கனவினையே காண வேண்டி இருக்கின்றது. இதுவும் என்னுடைய ஒரு அனுபவம் தான்.

அது 2010 ஆம் வருடம். நான் ஹைதராபாதில் பணி செய்து வந்துக் கொண்டிருந்த காலம். மேலும் கால்பந்து உலகக்கோப்பை நடந்துக் கொண்டிருந்த காலம் வேறு…எனக்கு கால்பந்தில் சிறிது ஆர்வம் அதிகம்…ஆனால் கால்பந்து போட்டிகளை காண முடியாதொரு சூழ்நிலை…காரணம் அனைத்துப் போட்டிகளும் நள்ளிரவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன…மேலும் எனது அறையில் இருந்த தொலைகாட்சியில் அந்த போட்டிகள் தெரியவும் செய்யாது. அந்நிலையில் பிரேசில் அணிக்கும் வடகொரியா அணிக்கும் இடையில் போட்டி நடைபெறவிருந்த இரவில் நான் ஒரு கனவு கண்டேன்…கொஞ்சம் விசித்திரமான கனவு தான். அந்த கனவினை விவரிக்க என்னால் முடியவில்லை ஆகையால் கீழே இருக்கும் படத்தினைக் காணவும்.


அதில் வழக்கமாக இருக்கும் கோல்போஸ்டினைப் போல் இல்லாது ஒரு பக்கம் இருக்கும் கோல்போஸ்ட் வேறு மாதிரி இருந்தது. அப்படி இருக்கும் கோல்போஸ்டினில் ஒருவன் கோல் போடுவதைப் போல் அந்த கனவு இருந்தது. காலையில் எழுந்த பொழுது அந்த கனவானது தெளிவாக நினைவில் இருந்தது…கூடவே 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது என்ற எண்ணமும் தான். எவ்வாறு அந்த கோல் கணக்கும் செய்தியும் என் நினைவிற்கு வந்தது என்று எனக்குத் தெரியாது. எழுந்தவுடன் மீண்டும் கனவு கண்ட அந்த கோலினைப் பற்றி சிந்தித்துப் பார்க்கின்றேன்…சிரிப்பு தான் வந்தது…’கனவே டே…அது எப்படி ஒரு கோல் போஸ்ட் அப்படி திரும்பி இருக்கும்…அதுல எப்படி ஒருத்தன் கோல் போடுறான்…நல்ல கனவு’ என்று எண்ணிக் கொண்டே, போட்டியின் விவரங்களை அறிந்துக் கொள்வதற்காக தொலைக்காட்சியை போடுகின்றேன். செய்தி தொலைகாட்சியினில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ‘என்னடா…எப்படி’ என்று எண்ணிக் கொண்டிருப்பதற்குள், அவர்கள் காண்பித்த ஒரு கோல் என்னை மிரளத் தான் வைத்தது. நான் கனவு கண்டிருந்ததைப் போன்றே ஒருவன் (மைகான்) ஒரு கோலினைப் போட்டிருந்தான் (அதனைக் காண ‘maicon goal vs north korea 2010 world cup’ என்று யூடுப் அல்லது கூகிளில் தேடவும்) . எனது கனவிற்கும் அந்த கோலிற்கும் இருந்த ஒரே வித்தியாசம் அந்த கோல் போஸ்ட் மைதானத்தில் சரியாக இருந்தது மட்டும் தான்.என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை…எப்படி இது சாத்தியமாயிற்று…ஏன் சாத்தியமாயிற்று? தெரியவில்லை. இருந்தும் அது அத்தகைய முதல் நிகழ்வும் இல்லை…இறுதி நிகழ்வும் இல்லை. மேலும் பலருக்கும் இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பட்டு தான் இருக்கின்றது. இங்கே தான் அறிவியல் பதிலளிக்க முடியாமல் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு மனிதனால் தன்னுடைய ஐம்புலன்களைக் கொண்டு எவற்றை அறிய முடியுமோ அதனை மட்டும் தான் அவனால் அறிய முடியும்…அனைத்தும் அவனது மூளையினைச் சார்ந்தே இருக்கின்றது என்றுக் கூறும் அறிவியலால், இதனை எவ்வாறு விளக்க முடியும்?
முடியாது..நிச்சயம் முடியாது.

ஆகையால் வெறும் செல்களின் சேர்க்கை தான் மனிதன் என்றும், செல்கள் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ள முடியாது செயல் இழக்கின்ற நிலை தான் மரணம் என்றும் அறிவியல் கூறும் கூற்றுக்களை நாம் மறுக்க வேண்டி இருக்கின்றது.

ஆனால் மறுத்தல் மட்டுமே இங்கு போதாது…மாறாக மேலே நாம் கண்ட நிகழ்வுகளுக்கு விளக்கமும் அளிக்க/தேட வேண்டிய கடமை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. ஏனென்றால் வெறும் செல்களின் கூட்டு அல்லவே நாம்…எனவே தேடலாம்…!!!

தொடரும்…!!!

பி.கு:

மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி