கனவுகள்….இப்பொழுது இவற்றைப் பற்றியே தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் ஒன்றினைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இப்பதிவுகள் சிந்திக்கத் தூண்டுவதற்கும், கருத்துக்களை அறிந்துக் கொள்வதற்கும், அனுபவங்கள் மூலமாக பெற்ற விடயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதனையும் மட்டுமே தங்களுடைய இலக்காக கொண்டு இருக்கின்றன. மாறாக கண் மூடித் தனமாக நான் சொல்வது மட்டும் தான் உண்மை என்று பிறரை நம்பச் செய்யும் நோக்கம் இங்கே கிடையாது. நானும் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றேன்…எனவே கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. சரி இருக்கட்டும் இப்பொழுது கனவுகளைப் பற்றியே நாம் காண்போம்.

கனவுகள் சற்று விசித்திரமானவை தான். சில கனவுகள் மிகவும் துல்லியமாக விவரங்களைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் வேறு சில கனவுகளோ நம்ப முடியாத விடயங்கள் பலவற்றைக் கொண்டு அமைந்திருக்கும். சில கனவுகள் நாம் தூங்கி எழுந்தாலும் கூட நம்முடைய நினைவினில் இருந்துக் கொண்டே இருக்கும்…வேறு கனவுகளோ நாம் விழித்து எழுந்தவுடன் முற்றிலுமாக மறந்து போய் இருக்கும்…மேலும் ஒரு சில கனவுகளில் ஒரு கனவுக்குள்ளேயே நாம் மற்றொரு கனவினைக் காண்பதாக கனவு கண்டுக் கொண்டிருப்போம். இவ்வாறு பல வகையான கனவுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதனை நம்மில் பலரும் பல நேரங்களில் அறிந்து/உணர்ந்து இருப்போம். அதில் நமக்கு எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆனால் ஏன் கனவுகள் இருக்கின்றன? அவற்றின் பயன் என்ன? என்கின்ற கேள்விகளில் தான் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. சரி, நமக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அறிவியலானது அச்சந்தேகங்களுக்கு என்ன விடையினை அளிக்கின்றது என்பதனை காண்பதுதானே முறையாக இருக்கும்.

கனவுகளைப் பற்றி அறிவியலால் தெளிவாக விளக்க முடியாத ஒரு நிலை தான் இன்று வரை நிலவிக் கொண்டிருக்கின்றது. ‘அனைத்தும் மூளையினைச் சார்ந்தே இருக்கின்றது’ என்பதே அறிவியல் பொதுவாக கொடுக்கும் விடையாக இருக்கின்றது. அதாவது ஒரு மனிதனானவன் உறங்கும் பொழுது அவனுடைய உடல் உறுப்புக்கள் உறங்குவதில்லை…அவை எப்பொழுதும் போல் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றன. அந்நிலையில் அவன் உறக்கத்தில் இருக்கும் பொழுது அவனுடைய மூளையானது தொடர்ந்து இயங்கிய வண்ணம், அவன் அதுவரை கண்டிருந்த காட்சிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எப்படியோ கனவுகளை உருவாக்குகின்றது. இது தான் அறிவியலின் பொதுவான கூற்றாக இருக்கின்றது. மேலும், கனவுகள் ஏன் வருகின்றன…அவற்றுக்கு ஏதேனும் காரணம்/பலன் இருக்கின்றதா? என்பனவற்றைப் பற்றிய சந்தேகங்கள் ஐரோப்பிய அறிவியலுக்கும் இருக்கத்தான் செய்கின்றது. துல்லியமான ஒரு பதிலினை அதனால் இன்று வரை தர முடியவில்லை. ஐரோப்பிய அறிவியலினை குறை கூற வேண்டும் என்பதற்காக இதனை நான் கூறவில்லை. மாறாக அது தான் உண்மையான நிலையாக இருக்கின்றது. சரி இருக்கட்டும்…இப்பொழுது அச்சந்தேகங்களுக்கு விடையென்று ஏதேனும் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

கனவென்றால் என்ன? உறக்கத்தில் வருகின்ற சிந்தனைகள் என்று நாம் கனவினை விளக்கலாம் அல்லவா. இந்நிலையில் கனவினைப் பற்றி நாம் காண வேண்டும் என்றால் முதலில் நாம் உறக்கத்தினைப் பற்றியும் சிந்தனைகளைப் பற்றியுமே காண வேண்டி இருக்கின்றது. முதலில் உறக்கத்தினைப் பற்றியே காணலாம்.

உறக்கம் என்பது உடலின் ஒரு செயல்பாடு. நம்முடைய வாழ்வினில் நாம் இரண்டு வகையான வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. ஒன்று உடல் ரீதியான வேலைகள்…மற்றொன்று மன ரீதியான வேலைகள். இந்த இரண்டு வகையான வேலைகளைச் செய்வதற்கான ஆற்றல் நம்மிடமே இருக்கின்றது. உடல் ரீதியான வேலையினை அதிகம் செய்பவர்களுக்கு உடல் ரீதியான ஆற்றல் அதிகமாக செலவாகின்றது. அதனைப் போன்றே மன ரீதியான வேலையினை அதிகம் செய்பவர்களுக்கு மன ரீதியான ஆற்றல் அதிகமாக செலவாகின்றது.

ஆனால் ஒரு உடலால் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு தேவையான ஆற்றலினை தடையில்லாது வழங்கிக் கொண்டிருக்க முடியாது. அதற்கும் ஓய்வு வேண்டும். அந்த ஓய்வு தான் உறக்கம். உறக்கத்தின் பொழுது, ஒரு உடலானது, முக்கியமான சில செயல்பாடுகளைத் தவிர மற்ற பல செயல்பாடுகளுக்காக செலுத்தப்படும் ஆற்றலினைக் குறைத்துக் கொண்டு தனக்குத் தேவையான ஓய்வினையும் ஆற்றலினையும் சேமித்துக் கொள்ளுகின்றது. அதாவது தன்னைத்தானே அது சீர் செய்துக் கொள்ளுகின்றது. அதனால் தான் நாம் நன்றாக தூங்கி எழுந்தவுடன் புத்துணர்ச்சியினை உணருகின்றோம். அதனால் தான் இன்றைய மருத்துவர்களும் கூட இரத்தப் பரிசோதனைக்கு ஒருவரை அதிகாலையில் தூங்கி எழுந்தவுடன் வரச் சொல்லுகின்றனர். ஏனென்றால் அப்பொழுது தான் உடலானது அதன் உண்மையானத் தன்மையுடன் இருக்கும். எனவே உறக்கம் என்பது ஒரு உடலானது தனக்குத் தானே எடுத்துக் கொள்ளும் ஒரு ஓய்வு ஆகும். ஒருவருக்கு அடிக்கடி உறக்கம் வருகின்றது என்றாலோ அல்லது ஒருவிதமான தளர்ச்சியினை உணர்ந்தாலோ அவருடைய உடலுக்கு போதுமான ஆற்றல் கிட்டவில்லை என்றே அர்த்தமாகும். சரி இருக்கட்டும்…உறக்கம் என்பது உடலுக்குரிய ஓய்வு என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

ஆனால் உடல்ரீதியான உழைப்பினை மட்டுமே ஒருவன் கொண்டிருப்பதில்லை. மன ரீதியான உழைப்பினையும் ஒருவன் கொண்டு தான் இருக்கின்றான். உடல் ரீதியான உழைப்பிற்கு உறக்கத்தின் மூலமாக நம்முடைய உடலானது ஓய்வு எடுத்துக் கொள்ளுகின்றது. ஆனால் மன ரீதியான உழைப்பிற்கு/குழப்பத்திற்கு எதன் மூலமாக ஓய்வு எடுத்துக் கொள்ளுவது?

நமக்கே தெரியும்….நாம் அதிகமாக அலைந்திருந்தாலோ அல்லது உடல் வேலையினைச் செய்திருந்தாலோ நாம் விரைவில் உறங்கி விடுவோம். ‘அடிச்சிச் போட்டாப்ல தூங்குறான்’ என்றே கூறவும் செய்வர். ஆனால் அதே சமயம் உடல் உழைப்பு கம்மியாக இருந்து மன உளைச்சல் அல்லது மன ரீதியான சிந்தனைகள்/வேலைகள் அதிகமாக இருந்தது என்றால் நம்மால் உறங்க முடியாது. அதனால் தான் மன ரீதியான குழப்பங்கள் உடையவர்களுக்கு தூக்க மாத்திரைகள் தேவைப்படுகின்றன. மேலும் தூக்க மாத்திரைகள் அனைத்து மக்களுக்கும் வேலை செய்கின்றனவா என்றால், இல்லை என்று தான் பதில் வரும். காரணம் மனமானது உடலினை விட மிகுந்த வலிமையினைப் பெற்று இருக்கின்றது. அதனால் தான் உடலினை உறங்க வைக்கக் கொடுத்திருக்கும் மருந்தினை மீறியும் மனமானது சில நேரங்களில் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. அத்தகைய மனதினைப் பற்றித் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்!!!

பி.கு:
 
மிகவும் மேலோட்டமாகவே நாம் இங்கே கருத்துக்களை கண்டு வந்து கொண்டிருக்கின்றோம். மேலும் குறிப்பாக அறிந்துக் கொள்வதற்கும் சிந்திப்பதற்குமே நாம் இவற்றைக் காணுகின்றோம்…எனவே மாற்றுக் கருத்துக்களும்…கூறியுள்ள விடயங்களில் எவையேனும் தவறென்று உங்களுக்கு தோணிற்று என்றால் அத்தவறினை சுட்டிக் காட்டுதலும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு